கார்ல் மார்க்ஸ்
தனது பதினேழாம் வயதில் 1835 ஆம் ண்டு எழுதிய தொழில் ஒன்றைத் தேர்வு செய்வதுபற்றி ஒரு இளைஞனின் சிந்தனைகள் என்ற கட்டுரையில் இருந்து:
நமது வாழ்க்கையில் நாம் செய்ய விரும்பும் தொழிலை தேர்வு செய்திட எது நமக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்? (பல அம்சங்கள் இருந்தாலும்) பிரதானமாக நமக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டியது, மானுட இனத்தின் நலனும் நமது ஊனங்களைக் களைந்து, ஒரு மாசற்ற மனிதன் என்ற நிலையை நாம் அடைவதும் தான். இவ்விரண்டு வழிகாட்டிகளும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டவை என்றோ, ஒன்றை மற்றது அழித்துவிடும் என்றோ, நாம் கருதவேண்டியது இல்லை. மாறாக, மனிதனின் இயல்பே எத்தகையது என்றால், தன் சக மனிதர்களின் நன்மைக்காகப் பணி ஆற்றுவதன் மூலம்தான், அவர்களை மேம்படுத்துவதன் மூலம் தான், ஒரு மனிதன் மாசற்றவனாக உயர முடியும்.
ஒரு மனிதன் தனக்காகவே மட்டும் உழைத்தால், ஒருவேளை அவன் புகழ்பெற்ற கல்விமானாக ஆகலாம்; அல்லது ஒரு பேரறிவு பெற்றவனாக ஆகலாம்; அல்லது மிகச்சிறந்த கவிஞனாகலாம். ஆனால் அவன் நிச்சயமாக உண்மையிலேயே மாசற்ற மாமனிதனாக உயர முடியாது.
பொதுநலனுக்காக உழைத்ததன் மூலம் மேன்மை பெற்றவர்களைத்தான் வரலாறு மிகச்சிறந்தவர்கள் என்று அழைக்கிறது. மிக அதிகமான மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தவனைத்தான் மிக மகிழ்ச்சியான மனிதன் என்று அனுபவம் நமக்கு பிரகடனம் செய்கிறது. மதம் நமக்கு கற்றுக் கொடுப்பது என்னவென்றால், மானுடத்திற்காக தன்னையே தியாகம் செய்த லட்சிய மனிதனைத்தான் அனைவரும் பின்பற்ற முயல்கின்றனர் என்பதாகும். இத்தகைய நிர்ணயிப்புகளை எவரும் நிராகரிக்க முடியாது.
நமது வாழ்க்கையில் மானுட இனத்திற்காக மிக அதிகபட்சமாக உழைக்க வாய்ப்பு தரும் வாழ்நிலையை நாம் தேர்வு செய்துவிட்டால், எந்தச் சுமைகளும் நம்மை வீழ்த்திவிடாது. காரணம் அச்சுமைகளை நாம் தாங்குவது அனைத்து மக்களின் நன்மைக்காக. அத்தகைய வாழ்க்கையை நாம் தேர்வு செய்துவிட்டால் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சி சில்லரைத்தனமான, குறுகிய வரம்புக்கு உட்பட்ட, சுயநலத் தன்மைகொண்ட மகிழ்ச்சி அல்ல. மாறாக, நமது மகிழ்ச்சி நமக்கானது மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான மக்களின் மகிழ்ச்சியுமாகும். நாம் செய்யும் பணிகள் அமைதியாக, ஆனால் என்றென்றும் நிலைத்து நிற்கும். நாம் இறந்தபின் நமது சாம்பல் மீது நன்மக்களின் கண்ணீர் விழும்.
இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் தாக்கம் பற்றி மார்க்ஸ்
1. “பிரிட்டிஷாரால் இந்தியா மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கொடுமை என்பது இதுவரை இந்தியா சந்தித்த துன்ப துயரங்களையெல்லாம் விட அடிப்படையில் வேறு பட்டதும் மிகக்கூடுதல் கடுமையானதும் ஆகும்…..…… இந்திய சமூகத்தின் முழு கட்டமைப்பையும் இங்கிலாந்து தகர்த்து விட்டது. கட்டமைப்பின் மறு உருவாக்கத்திற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. பழய உலகம் அழிக்கப்பட்டு எந்த ஒரு புதிய உலகமும் கிடைக்கவில்லை என்ற நிலை இந்திய மக்களுக்கு பெரும் சோகமாய் அமைந்துள்ளது. பிரிட்டனால் ஆளப்படும் இந்தியா தனது பெரும் பழமை வாய்ந்த பாரம்பர்யத்திலிருந்தும் தனது முழு வரலாற்றிலிருந்தும் துண்டிக்கப்பட்டு நிற்கிறது.”
___ இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி பற்றி கார்ல் மார்க்ஸ் 1853 ஆம் ஆண்டு நியூயார்க் ஹெரால்ட் டிரிப்யூன் என்ற அமெரிக்கப் பத்திரிகையின் ஜூன் 25 தேதி இதழில் எழுதிய “ இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி” என்ற கட்டுரையிலிருந்து.
2. “ஆங்கிலேய மில் முதலாளிகள் பருத்தியையும் உற்பத்திக்குத்தேவையான இதர மூலப்பொருட்களையும் மலிவாக எடுத்துசெல்லுவது என்ற ஒரே நோக்கத்திற்காகவே அங்கு இரயில் பாதைகளை அமைக்க உள்ளனர் என்பதை நான் அறிவேன். ஆனால், நிலக்கரியும் இரும்புத்தாதுவும் உள்ள ஒரு நாட்டில் போக்குவரத்துக்கான இயந்திரங்களைப் புகுத்திவிட்டால் அவற்றை வடிவமைக்கும் திறனை அந்நாடு பெறாமல் தடுக்க முடியாது. இத்தகைய விரிந்து பரந்த நாட்டிலே இரயில் போக்குவரத்தை பராமரித்திட அதற்கு உடனடி தேவையான தொழில்சார் செயல்முறைகளை அறிமுகம் செய்யாமல் முடியாது. காலப் போக்கில், இரயில் துறையுடன் தொடர்பில்லாத தொழில் துறைகளிலும் இவ்வியந்திரங்கள் பயன்படுவதை தவிர்க்க முடியாது. ஆகவே இந்தியாவில் இரயில்வே தொழில் நவீன தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக அமையும். இந்தியாவின் வளர்ச்சிக்கும் ஆற்றலுக்கும் தீர்மானகரமான தடையாக உள்ள சாதி அமைப்பிற்கு அடித்தளமாக உள்ள பிறப்புசார் உழைப்பு பிரிவினையை இரயில்வேயின் தொடர்ச்சியாக உருவாகும் நவீன தொழில்வளர்ச்சி (காலப் போக்கில்) கரைத்து விடும்………”.
நியூ யார்க் டெய்லி டிரிப்யூன் என்ற ஆங்கில ஏட்டின் 1853 ஆகஸ்ட் 9 தின இதழில் கார்ல் மார்க்ஸ் எழுதிய இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள் என்ற கட்டுரையிலிருந்து
3. “(தனது வர்க்க நலன் கருதி) பிரிட்டிஷ் முதலாளிவர்க்கம் செய்ய நேரிடும் அனைத்து காரியங்களும் பெரும்பகுதி (இந்திய) மக்களை விடுவிக்காது; அவர்களின் சமூகவாழ் நிலைமையை குறிப்பிடும் அளவிற்கு மேம்படுத்தாது. (ஏனென்றால்) இவை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை மட்டும் சார்ந்தவை அல்ல. எந்த அளவிற்கு இவ்வளர்ச்சி மக்களுக்குப் போய்ச் சேருகிறது என்பதையும் சார்ந்தவை. ஆனால் மக்கள் விடுதலைக்கும் அவர்கள் சமூகவாழ்நிலை மேம்படுவதற்கும் தேவையான பொருள்முதல் அடிப்படையை இக்காரியங்கள் உருவாக்கும். வரலாற்றில் இதைவிட கூடுதலாக எதையும் எப்பொழுதாவது முதலாளி வர்க்கம் செய்துள்ளதா? தனி மனிதர்களையும் மக்களையும் துயரத்திற்கும் தாழ்வுக்கும் உட்படுத்தாமல், அவர்களை சகதியிலும் ரத்த வெள்ளத்திலும் உழல வைக்காமல், அது எப்பொழுதாவது முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதா?”
நியூயார்க் டெய்லி டிரிப்யூன் என்ற ஆங்கில ஏட்டின் 1853 ஆகஸ்ட் 9 தின இதழில் கார்ல் மார்க்ஸ் எழுதிய இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள் என்ற கட்டுரையிலிருந்து
4. “பிரிட்டனில் ஆளும் வர்க்கங்கள் தூக்கி எறியப்பட்டு தொழிலாளி வர்க்கம் ஆட்சிக்கு வந்தாலோ அல்லது இந்திய மக்களே போதுமான வலு பெற்று ஆங்கிலேய அடிமைத்தளைகளை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிகின்ற வரையோ, இந்திய மக்கள் மத்தியில் பிரிட்டிஷ் முதலாளிகளின் ஆட்சியால் ஆங்காங்கு உருவாக்கப்படும் ஒரு புதிய சமூகத்திற்கான அம்சங்களின் கனிகளை (இந்திய மக்கள்) அனுபவிப்பது என்பது சாத்தியம் இல்லை.”
நியூயார்க் டெய்லி டிரிப்யூன் என்ற ஆங்கில ஏட்டின் 1853 ஆகஸ்ட் 9 தின இதழில் கார்ல் மார்க்ஸ் எழுதிய இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள் என்ற கட்டுரையிலிருந்து
மார்க்ஸ் பற்றி எங்கெல்ஸ்
1. கடந்தகால வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறு என்று மார்க்ஸ் நிரூபித்துள்ளார். அனைத்து சிக்கலான பலவகையான அரசியல் போராட்டங்களில் எல்லாம் இருந்த ஒரே பிரச்சினை சமூக வர்க்கங்களின் அரசியல் மற்றும் சமூக ஆட்சி என்பது தான். பழைய வர்க்கங்கள் ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள முயல்வது, புதிதாக எழுந்துவரும் வர்க்கங்கள் ஆதிக்கத்தை வென்றெடுக்க முயல்வது என்பது தான். ஆனால், இந்த வர்க்கங்கள் எவ்வாறு தோன்றின, எவ்வாறு தொடர்கின்றன? இவை ஒரு சமூகம் குறிப்பிட்ட கட்டத்தில் குறிப்பிட்ட பௌதீக நிலமைகளில் தனது வாழ்வாதாரத்திற்கான பொருள்களை உற்பத்தி மற்றும் பரிமாற்றம் செய்கின்ற விதத்தால் தீர்மானிக்கப்படுகின்றன.
2. இயற்கையில் உள்ள உயிரினங்களின் வளர்ச்சி விதிகளை எவ்வாறு டார்வின் கண்டுபிடித்தாரோ, அவ்வாறே, மார்க்ஸ் மானுட வரலாற்று வளர்ச்சியின் விதியைக் கண்டுபிடித்தார்: அரசியல், அறிவியல், கலை,மதம் என்பன போன்றவற்றில் ஈடுபடுவதற்கு முன்பு, முதலாக, மானுடம் உணவு உண்ண வேண்டும், நீர் குடிக்க வேண்டும், உறைவிடம் வேண்டும், ஆடைகள் வேண்டும் என்ற எளிய உண்மை; எனவே, உடனடியான வாழ்வுக்கான பொருள் உற்பத்தியும் ஒரு மக்கள் அல்லது ஒரு சகாப்தம் அடைந்துள்ள பொருளாதார வளர்ச்சி என்பது அடித்தளம். இதன் மீதுதான் ஒரு மக்களின் சட்ட கருத்துருக்களும், கலையும், ஏன், மதம் பற்றிய கருத்துக்களும் கூட உருவாகின்றன. ஆகவே, இக்கருத்துக்கள் பொருள் உற்பத்தி முறையின் அடிப்படையில் விளக்கப்படவேண்டுமே தவிர, அதற்கு நேர்மாறாக இதுவரை செய்துள்ளது போல் அல்ல.
3. மார்க்ஸைப் பொருத்தவரையில், அறிவியல் என்பது ஒரு வேகம் மிக்க, புரட்சிகர சக்தி என்றே கருதினார். ஏதேனும் ஒரு அறிவியல் துறையில் புதிய தத்துவார்த்தக் கண்டுபிடிப்பு ஏற்பட்டால், அதை மகிழ்ச்சியுடன் வரவேற்பார். அதே சமயம், ஒரு கண்டுபிடிப்பு உடனடியாக தொழிற் துறையிலும் பொதுவாக வரலாற்று வளர்ச்சியிலும் புரட்சிகர முன்னேற்றத்தைக் கொண்டுவருமானால், அவரது மகிழ்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும். ஏனெனில், எல்லாவற்றுக்கும் முன்பாக, மார்க்ஸ் ஒரு புரட்சியாளர். அவரது வாழ்வின் நோக்கமே, ஏதாவது ஒரு வழியில் முதலாளித்துவ சமூகத்தையும் அது உருவாக்கியுள்ள அரசு அமைப்புகளையும் தூக்கி எறிவதாகும். மேலும், நவீன தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கு பங்காற்றுவதாகும். தனது சொந்த நிலையையும் தேவைகளையும் அந்த வர்க்கம் உணர்ந்திடவும்,அதன் விடுதலைக்கான நிபந்தனைகளை அது உணர்ந்திடவும் முதல் முதலாகச் செய்தவர் மார்க்ஸ் தான்.
4. தனது காலத்தில் மிகப்பெரிய அளவிற்கு நிந்திக்கப்பட்டவர் மார்க்ஸ். வெறுக்கப்பட்டவர் மார்க்ஸ். சர்வாதிகார அரசுகளும் குடியரசுகளும் ஒருசேர அவரை வெறுத்தனர்; நாடு கடத்தினர். முதலாளி வர்க்கங்கள், அவை பிற்போக்காக இருந்தாலும், அதிதீவிர ஜனநாயகவாதியாக இருந்தாலும், ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு மார்க்ஸ் மீது அவதூறுகளைப் பொழிந்தனர். இவற்றையெல்லாம் அவர் கண்டுகொள்ளவில்லை. தூசுகள் எனக் கருதினார்.மிகவும் அவசியம் எனக் கருதியபொழுது மட்டுமே பதில் அளித்தார். மேலும், அவர் இறக்கும்பொழுது, சைபீரியாவின் சுரங்கங்களிலிருந்து கலிஃபோர்னியா வரை, அனைத்து ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பல பத்து லட்சம் தொழிலாளிகள் அவரை வணங்கினர்; கண்ணீர் சிந்தினர். நான் ஒன்றைச் சொல்லமுடியும். மார்க்ஸை எதிர்த்தவர்கள் பலர் இருந்தனர். ஆனால், அவருக்கு ஒரு நபர் கூட தனிப்பட்ட முறையில் எதிரி இல்லை. அவர் பெயரும் அவர் பணியும் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
மார்க்ஸ் பற்றி லெனின்
மார்க்சீய தத்துவத்துவம் சர்வ வல்லமை கொண்டது. ஏனென்றால், அது உண்மையானது. அது முழுமையானது. முன்பின் முரண் அற்றது. மனிதனுக்கு ஒன்றிணைந்த உலக கண்ணோட்டத்தை தருகிறது. இக்கண்ணோட்டம், முதலாளித்துவ சுரண்டலுக்கான வாதங்களையும் பிற்போக்குத் தனத்தையும் அனைத்து வடிவிலான மூட நம்பிக்கைகளையும் முற்றிலுமாக எதிர்க்கிறது.
லெனின், மார்க்சீயத்தின் மூன்று தோற்றுவாய்களும் அம்சங்களும்
முதலாளித்துவ பொருளியல் அறிஞர்கள் சரக்குகளின் பரிமாற்றத்தில் பொருட்களிடையே உறவுகளைத்தான் கண்டனர். ஆனால், இதில் மனிதர்களுக்கிடையேயான உறவு உள்ளதை மார்க்ஸ் வெளிப்படுத்திக் காட்டினார்.
லெனின், மார்க்சீயத்தின் மூன்று தோற்றுவாய்களும் அம்சங்களும்
————————————————————————————————————————————————
தனது 17ஆவது வயதில் மார்க்ஸ் எழுதினார்:
மானுட முன்னேற்றத்திற்காக நமது வாழ்வை அர்ப்பணிப்பதே மிகச் சிறந்த வாழ்வாகும்.
பின்னர் , தனது வாழ்வில் அவ்வாறு வாழ்ந்து காட்டினார். மர்க்ஸுக்கு அஞ்சலி செலுத்துவோம். அவரது தத்துவ வெளிச்சத்தில் சோசலிசம் நோக்கி நடை போடுவோம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
