
‘நெடும்பயணம்’, ஓர் இணையற்ற காவியம்!
இரா. சிந்தன்
1934 அக்டோபர் மாதத்தில், சீன கம்யூனிஸ்ட் கட்சி, தனது வரலாற்றுச் சிறப்புமிக்க நெடும்பயணத்தைத் தொடங்கியது. செம்படையும், புரட்சியின் ஆதரவாகத் திரண்ட விவசாயிகளும் இப்பயணத்தில் இணைந்தார்கள். 18 மலைகள், 24 ஆறுகளைக் கடந்து சுமார் 12,500 கிலோமீட்டர் தொலைவைக் கடந்தது இந்த ‘நெடும்பயணம்’. இதில் பங்கேற்றவர்கள் தினமும் சராசரியாக 37 கி.மீ. நடந்தார்கள்; 72 மணி நேரத்துக்கு ஒருமுறை தாக்குதலை எதிர்கொண்டு முன்னேறினார்கள்.
அமெரிக்கப் பத்திரிகையாளர் எட்கர் ஸ்னோ இதை “நவீன காலத்தில் இணையற்ற ஒரு ஒடிஸி (காவியம்)” என விவரித்தார். ஏனென்றால், நெடும்பயணம் என்பது வெறும் நடை அல்ல. அமைப்பாக ஒருங்கிணைந்த புரட்சிகர செயல்பாட்டை முன்னெடுப்பதற்கும், சோசலிசத்தை நோக்கிய உறுதியான பயணத்தில் அனைத்து அரசியல் சக்திகளையும், வெகுமக்களையும் இணைத்து முன்னேறுவதற்குமான பாடத்தை வழங்கும் வரலாறாக அது அமைந்துள்ளது.
பின்னணி
சோவியத் புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து, புரட்சியின் பெருநெருப்பு உலகெங்கிலும் படர்ந்தது. 1920களின் பிற்பகுதியில், சீனாவில் சிறு எண்ணிக்கையில் இருந்த நகர்ப்புற பாட்டாளிகளின் தலைமையிலான எழுச்சிகள் தொடர் தோல்வியைச் சந்தித்தன. அப்போது, மாவோ தலைமையிலான ஒரு பகுதி கம்யூனிஸ்டுகளும், தொழிலாளர்-விவசாயிகளும் கிராமப்புறங்களை நோக்கிச் சென்றார்கள். ரஷ்ய மாடல் சீனாவிற்கு பொருந்தாது என்பதை மாவோ தலைமையிலான கம்யூனிஸ்டுகள் மிக விரைவில் மதிப்பிட்டனர். ரஷ்யாவை அப்படியே பிரதியெடுப்பதல்ல, சோவியத் அனுபவத்தை உள்வாங்கி சீன வரலாற்று நிலைமைக்கு ஏற்ப மார்க்சிய இயக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை மாவோ உள்ளிட்ட தலைவர்கள் உணர்ந்து செயல்பட்டார்கள். கம்யூனிஸ்ட்கள் ஆளுகைக்குள் வந்த பகுதிகளில் சோவியத் அரசுகள் உருவாக்கப்பட்டன.
இப்பகுதிகளில் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. விவசாயிகள் நிலவுரிமை பெற்றனர். வெவ்வேறு துறைகளில் கூட்டு நிறுவனங்கள் நிறுவப்பட்டன; பொருளாதார முற்றுகைக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியின் வங்கிகள் உருவாக்கப்பட்டன. லெனினின் உருவம் பொறித்த 1-யுவான் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. ஊடகங்கள் உருவாகின. கம்யூனிஸ்ட் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வேலையின்மை, அபின், விபச்சாரம், குழந்தை அடிமைத்தனம், கட்டாயத் திருமணம் ஆகியவை ஒழிக்கப்பட்டன. வெகுமக்கள் கல்வி முன்னெடுக்கப்பட்டு, எழுத்தறிவு அதிகரித்தது.
இவ்வாறுதான் மக்களோடு நிலைநிற்றல் (மாஸ் லைன்) என்ற கொள்கையை சீன கம்யூனிஸ்ட் கட்சி கட்டியெழுப்பியது. புதிய ஆட்சிக்கான வழிமுறைகள் பரிசோதிக்கப்பட்டன.
இதற்கு எதிராக, சியாங் கை-ஷேக்கின் தலைமையிலான முதலாளித்துவ தேசியவாதிகள் தொடர் முற்றுகையை முன்னெடுத்தனர். 1930 முதல் 1933 வரை ஐந்து முற்றுகைகள் நடத்தப்பட்டன. ஐந்தாவது முற்றுகையில் (1933 செப்டம்பர் — 1934 அக்டோபர்), அவர் மத்திய சோவியத் பகுதியை நோக்கி நேரடியாக சுமார் 500,000 படைகளை அனுப்பினார். அவருக்கு நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் உட்பட வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் கிடைத்தன. மறுபக்கம், மத்திய செம்படைப் புரட்சியாளர்கள் வெறும் 86,000 வீரர்கள் மட்டுமே இருந்தனர்.
மிகக் குறைந்த அளவிலான வெடிமருந்துகளையும் ஆயுதங்களையும் கொண்டிருந்தனர். எண்ணிக்கையில் பார்க்கும்போது, விரைவில் கம்யூனிஸ்டுகளின் இறுதி ஊர்வலம் நடக்கப்போவதாக எதிர்பார்க்கப்பட்டது.
செம்படை வீரர்கள் தங்கள் உயிர்களைப் பலியாக்கி, கால அவகாசத்தைப் பெற்றனர். இதைப் பயன்படுத்தி, 1934 அக்டோபர் மாதத்தில், சீன கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றுச் சிறப்புமிக்க நெடும்பயணத்தைத் தொடங்கியது. அக்டோபர் 16–17 இரவுகளில், ஜியாங்சி மாகாணத்தில் யுடு ஆற்றைக் கடந்தார்கள்.
மூன்று முத்தாய்ப்புகள்
1. ஜூன்யி மாநாடும் தலைமை மாற்றமும்:
1935 ஜனவரியில் நடைபெற்ற ஜூன்யி மாநாடு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மற்றும் இராணுவத் தலைமையில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியது. மாவோ சேதுங் கட்சியின் மிகச் செல்வாக்குமிக்க தலைவராக உயர்ந்தார்; இராணுவ உத்தியிலும் அவரது அணுகுமுறை முக்கியத்துவம் பெற்றது. மெல்ல மெல்ல விவசாயிகளை மையமாகக் கொண்ட உத்தியில் புரட்சி ஒருமைப்பட்டது.
2. மக்கள் ஆதரவும் செம்படையின் ஒழுக்கமும்:
ஆளும் வர்க்கங்களின் ஆக்கிரமிப்புப் படைகளையும், அழித்தொழிப்பையும் சந்தித்து வந்த மக்களுக்கு, புரட்சிகர செம்படையின் அணுகுமுறை மாறுபட்டதாக இருந்தது. மக்களிடம் இருந்து ஆதரவைப் பெறும் வகையிலான ஒழுக்கத்தையும் அரசியல் அணுகுமுறையையும் செம்படை முன்னிறுத்தியது. இதனால், சீனாவின் உட்பகுதியில் கட்சி மக்கள் செல்வாக்குப் பெற்றது. பயணம் சென்ற வழிகளிலெல்லாம் இனவழிச் சிறுபான்மையினரின் உரிமைகளை முன்னெடுத்ததுடன், இளைஞர்களை ஈர்க்கும் சக்தியாகவும் அது அமைந்தது. அப்போது செம்படையின் சாதாரண வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் சராசரி வயது 19 மட்டுமே; கட்சித் தலைவர்களின் வயதும் 30–40களில் மட்டுமே இருந்தது.
3. ஜப்பானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத் தலைமை:
ஜப்பானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்குக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையேற்றது. அனைத்து வர்க்கங்களையும், அனைத்து தேசபக்த சக்திகளையும் ஒருங்கிணைக்க முடிவு செய்து, அதில் வெற்றியடைந்தனர். 14 ஆண்டுகள் (1931–1945) நீடித்த கொடூரமான ஆக்கிரமிப்பின்போது ஜப்பானிய பாசிசத்தை எதிர்த்து இறந்த 20 மில்லியன் சீன மக்கள் என்பதோடு ஒப்பிட்டு இதை நோக்க வேண்டும். இந்த மூன்று அம்சங்களும் முத்தாய்ப்பானவை ஆகும். மாவோ சேதுங், சூ என்லாய், ஜு டெ, டெங் சியாவோபிங் ஆகிய புரட்சியாளர்கள் இந்தப் போராட்டங்களில் இருந்தே புடம்போட்டு வளர்ந்தார்கள்.
86,000 வீரர்களோடு தொடங்கிய நெடும்பயணம், அக்டோபர் 1935இல், வெறும் 8,000 செம்படை வீரர்களுடன் வட-மத்திய ஷான்ஸி மாகாணத்தின் யானான் பகுதியை எட்டியது. கம்யூனிஸ்டுகள் தலைமையகத்தை அங்கு உருவாக்கினார்கள். இந்த நெடும்பயணமே 1949ஆம் ஆண்டு சீனப் புரட்சியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு, மாவோ சேதுங் பெய்ஜிங்கில் சீன மக்கள் குடியரசை நிறுவி அறிவித்தார்.
நெடும்பயணம் இராணுவ ரீதியில் ஒரு பின்வாங்கலாகத் தொடங்கியிருந்தாலும், அது தோல்வியின் பின்வாங்கலாக முடிவடையவில்லை; மாறாக புரட்சிகர செயல்முறையின் முக்கியமான கட்டமாக அமைந்தது. ருய்ஜின் முதல் யானான் வரை, யானான் முதல் பெய்ஜிங் வரை சோசலிசப் பரிசோதனையின் தொடர்ச்சியான பாதையை இந்த அனுபவத்திலேயே வகுத்து முன்னேறினார்கள்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply