
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை
ஆசாத்
இந்திய கம்யூனிஸ்டுகளின் முதல் கிளை 1920 அக்டோபர் 17 அன்று தாஷ்கண்டில் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் செயல்பட்டுவந்த கம்யூனிஸ்ட் குழுக்களுடனான தொடர்புகளை அது விரிவுபடுத்தியது. 1920களுக்குப் பிந்தைய காலத்தில்தான் அப்படியான குழுக்களே இந்தியாவில் தொடங்கப்பட்டிருந்தன. 1921, 1922ஆம் ஆண்டுகளில் இக்குழுக்களின் தலைவர்களாக மும்பையில் இருந்த எஸ்.ஏ.டாங்கே, கொல்கத்தாவில் இருந்த முசாபர் அஹமத், சென்னையில் இருந்த சிங்காரவேலர் ஆகியோருடன் தாஷ்கண்டிலிருந்த கட்சிக் கிளை தொடர்ச்சியான கடிதத் தொடர்பில் இருந்துவந்தது. இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்க வேண்டுமென்று பிரிட்டிஷாரிடம் கேட்டுக்கொண்டிருந்த காங்கிரசின் மாநாட்டில் முதன் முதலாக முழுமையான சுதந்திரம் எனும் முழக்கத்தை 1921ஆம் ஆண்டு அகமதபாத் மாநாட்டில ஹஸ்ரத் மொஹானியும் சுவாமி குமாரனந்தாவும் முன்வைத்தனர். இது தாஷ்கண்ட் கட்சிக் கிளை தயாரித்து முன்னெழுப்பிய கோஷமாகும்.
1925 டிசம்பர் 26 அன்று கான்பூரில் அமைக்கப்பட்ட குழுவையே இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்கமாக ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்திருந்தது. 1964 ஆம் ஆண்டு நடைபெற்ற 7ஆவது கட்சி மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவெடுத்தபோது, அரசியல், சித்தாந்த பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு முடிவாக்கப்பட்டது போல், கட்சி தொடங்கப்பட்டது குறித்தும் விவாதிக்கப்பட்டு இறுதிப்படுத்தப்பட்டது.
தோழர் முசாபர் அஹமத் அவர்கள் கட்சியின் தொடக்கம் குறித்த விவாதத்தை முன்வைத்தார். 1920 ஆம் ஆண்டு நடந்த கூட்டங்கள் குறித்து எம்.என்.ராய் எந்த இடத்திலும் அதன் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவுசெய்யவில்லை. எனவே, கட்சி தொடங்கப்பட்ட சரியான தேதியை இறுதிப்படுத்த முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் தாஷ்கண்டில் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்ட முனைவர் தேவேந்திர கௌஷிக், உஸ்பெகிஸ்தானின் கம்யூனிஸ்ட் கட்சி ஆவணங்களைத் தேடி எடுத்தார். அதில் இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் கூட்டக் குறிப்புகளைக் கண்டெடுத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கம் குறித்த பிரச்சனைக்கு கௌஷிக்கின் ஆய்வு முடிவு கட்டியது. எம்.என்.ராய், எவிலின் ட்ரெண்ட் ராய், அபானி முகர்ஜி, ரோசா ஃபெட்டிங்காஃப், மண்டையம் பிரதிவதி பயங்கரம் திருமலாச்சாரியா எனும் எம்.பி.டி ஆச்சாரியா (இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்), குஷி முகம்மது என்கிற முகமது அலி, சிப்பாஸி முகம்மது ஷாஃபிக் ஆகியேரைக் கொண்ட கட்சிக் கிளை தாஷ்கண்டில் 1920 நவம்பர் 17 அன்று அமைக்கப்பட்து உறுதியானது.
முதல் கட்சிக் கிளையில் இருந்தவர்களில் இரண்டு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் எனும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. மார்க்சியம் என்பது ஒரு சர்வதேசத் தத்துவம். இந்திய கம்யூனிஸ்டுகளை முடக்க பிரிட்டிஷ் அரசு தொடுத்த மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 33 பேரில் இந்திய விடுதலைப் போராட்டத்திற்குப் பங்களித்த பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பென் பிராட்லி, பிலிப் ஸ்ப்ராட் மற்றும் எச்.எல். ஹட்சின்சன் ஆகியோரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1922இல் எம்.என். ராய் பெர்லினுக்கு இடம்பெயர்ந்தார். கட்சிக் கிளையும் பெர்லினிலிருந்து செயல்படத் தொடங்கியது. இக்காலத்தில் வேன்கார்ட் (Vanguard) எனும் பெயரில் பெர்லினில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை வெளிவந்தது. இவ்விதழின் முதலாம் ஆண்டு இதழுக்கு வாழ்த்துச் செய்தி எழுதிய கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைமை, ‘இந்திய விடுதலை நீடுழி வாழ்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீடுழி வாழ்க, வேன்கார்ட் இதழ் நீடுழி வாழ்க’ என்று குறிப்பிட்டிருந்தது.
கிடைக்கப்பெற்ற பல்வேறு சான்றாதாரங்களின் மூலமும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, தாஷ்கண்ட் கட்சிக் கிளை செய்துள்ள அளப்பரிய பங்களிப்பைக் கருத்தில் கொண்டும் 1920 அக்டோபர் 17 அன்று தாஷ்கண்டில் அமைக்கப்பட்ட இக்கிளையையே கட்சியின் தொடக்கமாகக் கொள்வதென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) முடிவுக்கு வந்தது.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply