
பசித்த வயிறுகள் பசித்தப டி இருக்க….
சுபாஷினி அலி
உலகப் பசிப்புள்ளிக் குறியீட்டு (Global Hunger Index – GHI) அறிக்கையில், 25.8 புள்ளிகளுடன் இந்தியா மொத்தமுள்ள 123 நாடுகளில் 102வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் பொருள் இந்தியா வில் பசித்தவர்களின் எண்ணிக்கை கடுமையான அளவிற்கு அதிகரித்து இந்தியாவை தீவிர சிகிச்சைப் பிரிவிற்குத் தள்ளியுள்ளது என்பது தான்.
இந்தப் பசிக் குறியீடு சில முக்கிய புள்ளிகளை மையமாக வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது. அவற்றுள் முக்கியமானவை….
ஊட்டச்சத்துக் குறைபாடு (Global Hunger Index – GHI) : மக்கள் தொகையில் 12,0 சதவீதம் பேர் ஊட்டச்சத்துக் குறைபாடுடையவர்களாக உள்ளனர்.
குழந்தைகளின் வளர்ச்சி குன்றி குள்ளமாதல் (Child Stunting): ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 32.9 சதவீதம் பேர் நீண்டகாலமாக ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகளின் உடல் எடை குறைந்து உடல் மெலிவுறுதல் (Child Wasting): ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 18.7 சதவீதம் பேர் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இது அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ள புள்ளிகளில் இரண்டாவது அதிகபட்ச விகிதமாகும்.
குழந்தை இறப்பு (Child Mortality): ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது.
இந்தப் புள்ளிவிவரங்கள் உண்மையில் நமக்கு சுட்டிக்க்காட்டுவது என்னவென்றால், ஊட்டச்சத்துக் குறைபாட்டின் காரணமாக ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்.
உண்மையை மறைக்கச் செய்யப்படும் தகிடுதத்தங்கள்
மத்தியப் பிரதேசத்தின் பாலாகாட் மாவட்டத்தில், ஆதிவாசி – பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இரண்டு வட்டாரங்களில் மட்டும் கடந்த மூன்று மாதங்களில் குறைந்தது 42 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். டஜன் கணக்கான குழந்தைகள் நோய்வாய்ப்பட்டுள்ளனர். அங்கன்வாடி பணியாளர்கள் நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தும், பல மரணங்கள் – குழந்தைகளின் உயிரிழப்புகள் இன்னும் பதிவு செய்யப்படவே இல்லை. அடோரி பஞ்சாயத்தின் சர்பஞ்ச் பரசுராம் துர்வே கூறுகையில், “எனது பஞ்சாயத்தில் மட்டும் 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களை நம்ப முடியாது” என்கிறார். மத்திய அரசின் ஒரு குழு அந்தப் பகுதியில் மொத்தம் 32,433 பேரை பரிசோதனை செய்தது. அவர்களில் 7,711 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. 13,406 குழந்தைகள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டிருந்தனர்; மேலும் 274 குழந்தைகளுக்கு கடுமையான நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது. பெரும்பாலான இந்தப் பாதிப்புகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடே பொதுவான காரணியாகக் கண்டிறியப்பட்டுள்ளது என்று 2026 செப்டம்பர் 10 அன்று வெளியான தினிக் பாஸ்கர் ஆங்கிலப் பதிப்பின் செய்தி கூறுகிறது. ஆனால், GHI அறிக்கையை இந்திய அரசு தவறானது, பாரபட்சமானது என்று கூறி அந்த அறிக்கையை நிராகரித்தது. அதே நேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் பழங்குடியினக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்கள் குறித்து அரசின் சொந்த முகைமை அமைப்புகளே பதிவு செய்து ஆவணப்படுத்தியுள்ள அறிக்கைகள் உள்ளன.
வாக்குறுதி அளிக்கப்பட்ட உணவுத் தானியங்களும் சுகாதார நடவடிக்கைகளும் அவை மிகவும் தேவைப்படும் மக்களைச் சென்றடையாத ஒரு துயரமான நிலையையே இந்த அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. இந்தத் துயர நிலையானது, குடிமக்களின் நலனில் அக்கறையுள்ள எந்தவொரு அரசாங்கத்தையும் இந்தத் தோல்விகளைச் சரிசெய்வதில் கவனம் செலுத்துவதற்குத் தூண்டியிருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக, பாஜக அரசாங்கம் இதற்கு முற்றிலும் எதிர்மாறான நடவடிக்கையையே மேற்கொண்டுள்ளது. ஒருபுறம், GHI சுட்டிக்காட்டியுள்ள கொடூரமான உண்மை நிலையை மறைப்பதற்காக அது திசைதிருப்பும் தந்திர நடவடிக்கைகளையும் பொய்யான தகவல்களையும் பயன்படுத்துகிறது. மறுபுறம், வெளியுறவு மற்றும் உள்நாட்டுக் கொள்கைகளின் தோல்விகளால் ஏழை மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும் நடவடிக்கைகளை மேலும் அது தீவிரப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக அன்றாடத் தேவைகள் மற்றும் எரிபொருள் மட்டுமின்றி, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற பொதுச் சேவைகளுக்காக மக்கள் செய்யும் செலவுகளும் உயர்ந்து வருகின்றன. வழக்கமாக மேலும் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வரும் அரசின் கடுமையான நவதாராளவாத, பெருநிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளுடன் இந்த நடவடிக்கைகள் முற்றிலும் ஒத்துப்போகிறது.
விலை உயர்விற்கான முக்கியக் காரணி
பொருளாதார நிபுணர்களின் மொழியில் கூறுவதானால், ஆகஸ்ட் மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) அடிப்படையிலான பணவீக்கம் 4.82 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், இந்திய ரிசர்வ் வங்கியின் 4.0 சதவீத இலக்கு இடைநிலைப்புள்ளியைக் காட்டிலும் தொடர்ந்து மூன்றாவது மாதமாக பணவீக்கம் அதிகமாகப் பதிவாகியுள்ளது. சில்லறை பணவீக்கம் மே மாதத்தில் 3.93 சதவீதமாக இருந்ததிலிருந்து தொடர்ந்து மேல் நோக்கி உயர்ந்து வருகிறது. மொத்த விலைக் குறியீடு (WPI) அடிப்படையிலான பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 9.92 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்தப் பரவலான விலை அழுத்தத்திற்கு எரிபொருள் பணவீக்கமே முக்கிய காரணமாக இருந்தது; அது 22.93 சதவீதமாக இருந்தது. இது உணவுப் பொருட்கள் மீது 7.05 சதவீதமும், உற்பத்திப் பொருட்கள் மீது 8.37 சதவீதமும், முதன்மைப் பொருட்கள் மீது 7.76 சதவீதமும் தாக்கத்தை ஏற்படுத்தி விலை உயர்விற்குக் காரணமாகியது.
உயரப் போகும் பணவீக்கமும் ஜோடிக்கப்படும் புள்ளி விவரங்களும் மொத்த விலைக் குறியீடு அடிப்படையிலான பணவீக்க சுழற்சியின் தொடர்ச்சியான தாக்கங்கள், எல்-நினோ காரணமாக ஏற்படும் உணவு விநியோகத் தடைகள் மற்றும் உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் விலைகள் (ஒரு பீப்பாய்க்கு 90–110 அமெரிக்க டாலர் வரையிலான விலை) ஆகியவற்றின் காரணமாக, சில்லறை CPI பணவீக்கம் 2027 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், அதாவது 2026-ன் இறுதியில், 6 சதவீதத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலைமையில் எந்த முன்னேற்றமும் ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கவில்லை. இருப்பினும், ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள முறையிலேயே அரசாங்கம் பதிலளித்துள்ளது. வெளிநாட்டுக் கொள்கையிலும் உள்நாட்டுக் கொள்கையிலும் ஒவ்வொரு துறையிலும் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளதாக அது தொடர்ந்து கூறி வருகிறது. தனது கூற்றுகளை வலுப்படுத்துவதற்காக திருத்தி ஜோடிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை வெளியிடுவதையும், முக்கியமான தகவல்களை வெளியிட மறுப்பதையும் அது பயன்படுத்துகிறது. GDP புள்ளிவிவரங்களைத் தவறாகக் காட்டுகிறது என்பது குறித்து ஏற்கனவே நிறைய எழுதப்பட்டுள்ளது. ஆனால், கோடிக்கணக்கான இந்தியக் குடிமக்கள் மோசமான பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
இதற்கு ஒரு உதாரணம், சமீபத்திய NFHS தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்ட விதமாகும். பெண்களிடையே ஆய்வு நடத்தப்படும் போது இரத்தசோகை அளவு, தூய்மையான எரிபொருள் அதாவது சமையல் எரிவாயு பயன்படுத்துவது தொடர்பான கேள்விகள் கேள்வித்தாளில் இருந்து வேண்டுமென்றே நீக்கப்பட்டன. இதன் பொருள், முந்தைய கணக்கெடுப்புகளில் பதிவு செய்யப்பட்டிருந்த, ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருந்த இரத்த சோகையின் அளவைவிட, பெண்களின் பெரும் பகுதியினரிடையே இரத்தசோகையின் அளவு அதிகரித்துள்ளது என்பதாகும்.
மேலும், பாரம்பரிய எரிபொருட்களைப் பயன்படுத்தி சமையல் செய்வதால் பெண்கள் எதிர்கொள்ளும் கடுமையான சுகாதாரப் பாதிப்புகளை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவருவதாக பிரதமரே அளித்த வாக்குறுதிகளும், இலவசமாகவும் மானிய விலையிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதாகக் கூறிய வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என்ற உண்மை நிலை பகிரங்கமாகத் தெரிவிக்கப்படுவதுகூட ஆபத்தாகிவிடும் என்பதால் நீக்கப்பட்டது என்பது தான்.
அதே நேரத்தில், மத்திய அரசாங்கம் மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் கொள்கைகளைத் தொடர்ந்து உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இங்கு குறிப்பிட வேண்டியது என்னவென்றால், பாஜக தலைமையிலான மாநில அரசாங்கங்கள் இதே பாதையை உற்சாகமாகப் பின்பற்றுகின்றன. எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில அரசாங்கங்கள் தங்கள் மக்களுக்கான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்கும் தேவையான நிதி ஆதாரங்கள் தொடர்ந்து மத்திய அரசாங்கத்தால் மறுக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில அரசாங்கங்களுக்கு நலத்திட்டங்களைத் தொடங்கவும் செயல்படுத்தவும் தேவையான நிதி மற்றும் வளங்களையும் மத்திய அரசாங்கம் மறுத்து வருகிறது. இதன் விளைவாக, இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக அவை மேலும் மேலும் பாதிக்கப்படக்கூடிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன. மத்திய அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கடுமையான நிதிக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், ஒரு எதிர்க்கட்சி ஆளும் மாநிலமான கேரளத்தில், LDF தலைமையிலான அரசு, மக்கள்தொகையின் பெரும் பகுதியினருக்கு மானிய விலையில் போதுமான உணவுப் பொருட்களையும், அனைவருக்கும் இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவைகளையும் எப்படியோ வழங்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
காரணகர்த்தா யார்? எது?
மத்திய அரசாங்கத்தின் பேரழிவை ஏற்படுத்தும் கொள்கைகளின் விளைவாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சர்க்கரை மற்றும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மிகப் பெரிய அளவில் உயர்ந்துள்ளன. ஈரான் மீதான போரும், அதன் விளைவாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதும் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், முழு உண்மை இதிலிருந்து வேறுபட்டது. முதலில், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே நமது பிரதமர் இஸ்ரேலை தனது வெளிநாட்டு விஜயத்திற்குத் தேர்ந்தெடுத்தார். அப்போது அவர் இஸ்ரேலை தனது “தந்தை நாடு” என்று குறிப்பிட்டார். இதற்கு முன்பே அவர் இஸ்ரேலுக்கு வலுவான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.
இதன் விளைவாக, போரின் ஆரம்ப மாதங்களில் ஈரான் தனது ஆதரவாளர்களுக்கு சலுகை விலையில் எண்ணெய் விற்றபோது, இந்தியா இயல்பாகவே அந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெறவில்லை. காஷ்மீர் பிரச்சினையாக இருந்தாலும், இந்தியாவுக்கு சலுகை விலையில் எண்ணெய் வழங்குவதாக இருந்தாலும், இந்திய ரூபாயில் பணம் செலுத்த அனுமதிப்பதாக இருந்தாலும் ஈரான் கடந்த காலங்களில் எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாகவே இருந்து வந்தது. ஆனால் நமது பிரதமர் இஸ்ரேலுடன் காட்டிய யோசனையற்ற மற்றும் முற்றிலும் நெறியற்ற நெருக்கத்தின் காரணமாக, போரின் ஆரம்ப மாதங்களில் ஈரானின் உதவியை நாம் இழந்தோம். ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டபோது, ஈரானிடமிருந்து நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய எண்ணெயையும் பெற முடியாத நிலை ஏற்பட்டது. இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு இயல்பாகவே ரஷ்யாவைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை தீவிரமடைந்தது.
பெருமுதலாளிகள் ஆதாயச் சுருட்டிகள் – பெரும்பான்மை மக்கள் அன்றாடங்காய்ச்சிகள்
குறிப்பிடப்பட்ட இந்த எல்லா சூழ்நிலைகளுக்கும் மத்தியிலும், அமெரிக்காவின் மற்றும் டிரம்ப்பின் மிரட்டல்களுக்கு எதிராக நிற்பதற்குப் பதிலாக, அனைத்து எதிர்ப்புகளையும் மீறி அமெரிக்காவையும் டிரம்பையும் திருப்திப்படுத்தி அவர்களின் ஆதரவைப் பெற முயற்சிக்கும் நமது மத்திய அரசாங்கத்தின் பிடிவாதத்தால், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்காவின் அனுமதியைச் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கியது. இந்த அனுமதி சில நேரங்களில் மறுக்கப்பட்டது; சில நேரங்களில் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டது. அமெரிக்கா தற்போது அச்சுறுத்துவது போல் கடுமையான சுங்க வரிகளை விதிக்க முடிவு செய்தால், வரும் நாட்களில் இந்த நிலைமை மேலும் ஆபத்தானதாக மாறக்கூடும்.
கடந்த ஒரு பத்தாண்டுகளுக்கும் மேலாக, சர்வதேச எண்ணெய் விலை பெரும்பாலான காலங்களில் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்ததன் மூலம் மோடி அரசு பெரிதும் பயனடைந்தது என்ற ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில் கொள்வது அவசியம். .
ஆனால், இதனால் கிடைத்த பயன் இந்திய நுகர்வோருக்கு வழங்கப்படவில்லை. வழங்கப்பட்டிருந்தால், அது மக்களுக்கு நிவாரணமாக மட்டுமல்லாமல், அனைத்துப் பொருட்களையும் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவைக் குறைப்பதாகவும் இருந்திருக்கும். இந்திய அரசுக்குப் பெருமளவில் கிடைத்த இந்தத் திடீர் எதிர்பாராத லாபம் சுமார் ரூ.40–45 லட்சம் கோடியாகும். அதில் பெரும் பகுதி அம்பானிகளின் பாக்கெட்டுளுக்குச் சென்றது. சீனா உட்பட பல நாடுகள் செய்தது போல், நெருக்கடியான காலத்தில் பயன்படுத்துவதற்காக எண்ணெய் கையிருப்பை உருவாக்குவதற்கும் அரசாங்கம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை.
இன்று ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் நிலையில், எரிபொருள் விலை உண்மையாகவே உயர்வதுடன், சமையல் எண்ணெய் மற்றும் பிற இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் மேலும் அதிகரித்து வருகின்றன. எரிபொருள் விலையின் உண்மை உயர்வால் போக்குவரத்து செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒழுங்கற்ற எண்ணெய் விநியோகம் மற்றும் அதிக விலைகள், வானிலையின் மாறுபாடுகளும் சேர்ந்து, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளில் பெரும் உயர்வை ஏற்படுத்தியுள்ளன.
பண்டிகைக் காலம் தொடங்கியுள்ள நேரத்திலேயே சர்க்கரை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மிகவும் ஏழ்மையான குடும்பங்கள்கூட குறைந்தபட்சம் சிறிதளவு சர்க்கரையாவது வாங்க வேண்டிய கட்டாயத்தின் தவிப்பில் உள்ள நிலையில் இதற்கு மீண்டும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.
மோசமான வானிலை காரணமாக கரும்புப் பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டு, சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், அரசாங்கம் அதிக அளவு சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதித்தது. அது மட்டுமல்லாமல், 28 லட்சம் மெட்ரிக் டன் (LMT) சர்க்கரையை எத்தனால் உற்பத்திக்குத் திருப்பிவிடும், பொருத்தமான நேரமற்ற மற்றும் திட்டமிடப்படாத முடிவை எடுத்து அதனைச் செயல்படுத்தியது. விலைகள் உயர்ந்தவுடன், மிகக் குறுகிய காலத்திலேயே தனது முடிவை மாற்றிக்கொண்டு சர்க்கரை ஏற்றுமதியை நிறுத்தியது. சர்க்கரையை இறக்குமதி செய்யவும் தொடங்கியது. ஆனால் சர்க்கரையை எத்தனால் உற்பத்திக்குத் தொடர்ந்து திருப்பிவிடுவதை நிறுத்தவில்லை.
எத்தனாலும் எத்தர்களும்
கோடிக்கணக்கான மக்கள் உயிர்வாழத் தேவையான உணவுத் தானியங்களையே வாங்க முடியாத நிலையில் இருக்கும்போது, அரசாங்கம் பல மில்லியன் டன் கணக்கிலான கரும்பு, சர்க்கரை, உணவுத் தானியங்கள், மக்காச்சோளம், கோழித் தீவனம் போன்றவற்றையும் வேறு பயன்பாடுகளுக்குத் திருப்பிவிடுகிறது. ஆரம்பத்தில், உயிரி எரிபொருளுக்கான இந்த மாற்றம் 2030-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று திட்டமிடப்பட்டது. இதற்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளும் வகையில் போதுமான கால அவகாசம் கிடைக்கும் என்பதே இதன் நோக்கமாக இருந்தது.
ஆனால், எந்தவிதமான விவாதமும் எச்சரிக்கையும் இன்றி இது 2025-ஆம் ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டது. இது அவசரமாக யோசனையற்ற முறையில் முன்னெடுக்கப்பட்டு திணிக்கப்பட்ட விதமானது, நுகர்வோரின் நலனைக் காட்டிலும் கட்கரி குடும்பத்தின் வணிக நலனில் அதிக அக்கறை உள்ளதாலேயே எனத் தோன்றுகிறது. அவரது மகன்களுக்கு எத்தனால் உற்பத்தி நிறுவனங்கள் சொந்தமாக உள்ளன என்று கூறப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசலில் எத்தனால் கலக்கப்பட்டால் எரிபொருள் விலை பெருமளவில் குறையும் என்று நுகர்வோருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. பல வாக்குறுதிகளைப் போலவே இந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படாத ஒன்றாகிவிட்டது.
பல மில்லியன் டன் சர்க்கரை, உணவுத் தானியங்கள் போன்றவை வேறு பயன்பாடுகளுக்குத் திருப்பிவிடப்படுவது, விலைகளில் தொடர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எத்தனால் கலந்த எரிபொருளின் செயல்திறன் 10–12 சதவீதம் குறைவாக இருப்பதால், அதே தூரத்தைக் கடப்பதற்கு நுகர்வோர் அடிக்கடி எரிபொருள் வாங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. எரிபொருள் தொட்டிக்குள் சிறிதளவு தண்ணீர் நுழைந்து விட்டால்கூட இயந்திரம் செயலிழந்து பழதடைந்து, வாகனத்தை பழுதுபார்க்கும் மையத்திற்கு அனுப்பப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு வாகன உரிமையாளருக்குக் கூடுதல் செலவினை ஏற்படுத்துகிறது என்றும் சேவை மையங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், சில முக்கிய நகரங்களில் உள்ள சில பெட்ரோல் நிலையங்களுக்கு எத்தனால் கலக்கப்படாத பெட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. அதன் விலை லிட்டருக்கு ரூ.165! இதன் ஒட்டு மொத்த விளைவுகளும் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியான Business Standard நாளிதழின் ஒரு கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் குடும்பங்கள் பல்வேறு உணவுப் பொருட்களை ஒருங்கிணைத்து உண்ணும் பாரம்பரிய உணவுத் தட்டான “தாலி”யில் தற்போது என்ன நடக்கிறது என்பதை அந்தக் கட்டுரை எடுத்துக்கூறுகிறது. உணவின் அளவுகள் குறைந்து வருகின்றன; பல உணவுப் பொருட்கள் தட்டிலிருந்து மறைந்து வருகின்றன என்பது வெளிப்படையாகத் தெளிவாகத் தெரிகிறது கிராமப்புறக் குடும்பங்கள் தங்களது மாதாந்திரச் செலவு அல்லது வருமானத்தில் பாதியை உணவுக்காகச் செலவிடுகின்றன. நகர்ப்புறக் குடும்பங்கள் 40 சதவீதத்தை உணவுக்காகச் செலவிடுகின்றன. கடந்த ஓராண்டில் வெங்காயத்தின் விலை கிட்டத்தட்ட 50 சதவீதமும், இஞ்சியின் விலை 70 சதவீதமும் உயர்ந்துள்ளன. காய்கறிகள் வாங்குவதுகூட ஆடம்பரமாகிவிட்டது. சமையல் எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளது.
தாங்க முடியா சுமையும் காரணிகளும்
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற நாட்டின் சில பகுதிகளில் பருவமழை குறைவதற்கான அறிகுறிகள் தென்படுவதால், உணவுத் தானியங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்று தெரிய வருகிறது. கோழித் தீவனத்தை உயிரி எரிபொருளுக்குத் திருப்பிவிடுவதால், கோழி இறைச்சி, பிற இறைச்சி மற்றும் பால் பொருட்களின் விலைகளையும் பாதித்து, அவற்றின் விலைகளும் வேகமாக உயர்ந்துள்ளன.
எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் விவசாய விளைபொருட்களுக்குக் கவர்ச்சிகரமான விலையை விவசாயிகளுக்கு வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்து வருகிறது. இது இயல்பாகவே நுகர்வோருக்கான இந்த உணவுப் பொருட்களின் விலையை மேலும் அதிகரிக்கும். சமையல் எரிவாயுவின் விலை மிகப் பெரிய அளவில் உயர்ந்துள்ளதால் சமையல் செய்வதற்கான செலவும் அதிகரித்துள்ளது. இது விறகு மற்றும் கரி ஆகியவற்றின் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மண்ணெண்ணெய் இப்போது எளிதில் கிடைப்பதில்லை. அதன் விலையும் அதிகமாக உள்ளது. துரதிருஷ்டவசமாக, பெரும்பாலான இந்தியர்களுக்கு இந்த விலைவாசி உயர்வின் சுமையை தாங்க முடியாததற்கு வேறு பல காரணிகளும் உள்ளன.
வேலையின்மை அதிகரித்து வருகிறது. நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் உண்மை ஊதியம் தேக்கமடைந்துள்ளது அல்லது குறைந்து வருகிறது. மேலும், அத்தியாவசிய சேவைகளின் விலைகளும் அதிகரித்துள்ளன. ரயில்கள், பேருந்துகள், மெட்ரோ உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்துச் சேவைகளிலும் தொடர்ந்து கட்டண உயர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. தனியார்மயமாக்கல் கொள்கைகள் தொடக்கக் கல்வியையும் அத்தியாவசிய சுகாதார சேவைகளையும் கூட எட்ட முடியாத அளவுக்கு விலையுயர்ந்ததாக மாற்றி வருகின்றன. கோடிக்கணக்கான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதா அல்லது அவர்களுக்கு உணவு வழங்குவதா என்று இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதன் விளைவாகக் குழந்தைகளின் கல்விச் சேர்க்கை குறைந்து வருகிறது. கடுமையான கடன்சுமையும் இதன் மற்றொரு விளைவாகும்.
சமீபத்தில் AIDWA குடும்ப வருமானம் ரூ. 10,000க்கும் குறைவாக உள்ள குடும்பங்களைக் கொண்ட ஒப்புக் கொள்ளக் கூடிய அளவிலான ஒரு சிறிய அளவிலான மாதிரியைத் தேர்ந்தெடுத்து, 20 மாநிலங்களில் நடத்திய ஒரு கணக்கெடுப்பில், ஆய்வு செய்யப்பட்ட பெண்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் கடனில் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மிக அதிக வட்டி விகிதத்தில் கடன் செலுத்துவதுடன், துன்புறுத்தலுக்கும், அவமானப்படுத்தப்படுதலுக்கும், உடல் ரீதியான வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
மிகவும் அதிர்ச்சியூட்டும் வகையில், அலட்சியத்துடன், இலவச அல்லது மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் அளவைக் குறைக்கும் வகையில் அரசாங்கம் சட்டம் இயற்றியுள்ளது. ஏற்கனவே கடந்த ஐந்து ஆண்டுகளில் 2.5 கோடிக்கும் அதிகமான ரேஷன் அட்டைகளை ரத்து செய்துள்ளதாக மத்திய அரசாங்கம் மக்களவையில் தெரிவித்துள்ள நிலையில் இது நடந்துள்ளது. இதன் காரணமாக திறந்த வெளிச் சந்தையில் உணவுப் பொருட்களின் விலை இயல்பாகவே மேலும் அதிகரிக்கும். இதற்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில், இன்னும் சில நாட்களில் அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் வரி விதிக்கப்படும் என்று இந்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கான செலவையும் இறுதியில் நுகர்வோரே ஏற்க வேண்டியிருக்கும்.
மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தின் மீது குறிவைத்து நடத்தப்படும் இந்த மிகப்பெரிய கொடூரமான தாக்குதல் தணிவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இதனை நாடு தழுவிய ஒருங்கிணைந்த போராட்டங்களின் மூலம் எதிர்க்க வேண்டும்.
தமிழில்: ஆர். எஸ். செண்பகம்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply