
அக்டோபர் புரட்சி: மனிதகுல வரலாற்றின் திருப்புமுனை!
உ . வாசுகி
1917ஆம் ஆண்டின் அக்டோபர் புரட்சி நவீன வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்ச்சிப் போக்குகளில் ஒன்றாக நிலை பெற்றிருக்கிறது. நவம்பர் 7 (பழைய நாட்காட்டியில் அக்டோபர் 25) அன்று, போல்ஷிவிக் கட்சியின் தலைமையில், தொழிலாளர்களும் விவசாயிகளும் இதர உழைப்பாளி மக்களும் ஒன்று சேர்ந்து பெட்ரோகிராடில் கெரன்ஸ்கி தலைமையில் அமைந்த தற்காலிக அரசை வீழ்த்தி, உலகின் முதல் சோசலிசப் புரட்சியை முன்னெடுத்து, சோவியத் சோசலிச அரசை நிறுவினர். இதில் தோழர் லெனின் அவர்களின் பங்கு அளவிட முடியாதது. புரட்சியின் மூளையாகவும் இதயமாகவும் அவர் இருந்தார்.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, இந்த வர்க்கப் புரட்சியின் முக்கியத்துவம், அதாவது அதன் தனித்துவம், சோவியத் மக்களுக்குக் கிடைத்த பயன்கள், உலகின் மீதான அதன் தாக்கம், அதை சாத்தியமாக்கிய தொழிலாளி-விவசாயி கூட்டணி, அதன் இன்றைய பொருத்தம் போன்றவை விவாதங்களைத் தூண்டியும், உலகம் முழுவதும் புரட்சிகர இயக்கங்களை ஊக்குவித்தும் வருகிறது.
1917 அக்டோபர் புரட்சியின் தனித்துவம்:
அக்டோபர் புரட்சியின் தனித்துவம், அது வெற்றி பெற்றது என்பது மட்டுமல்ல; அது அரசுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையிலான உறவை அடிப்படையிலேயே மறுசீரமைத்தது. மனித வரலாற்றில் முதல் முறையாக, ஒரு புரட்சி, மார்க்சியத்தின் வெளிப்படையான கொடியின் கீழ் நடத்தப்பட்டு, பாட்டாளி வர்க்கத்தின் கையில் அரசு அதிகாரத்தை அளித்தது. இதன் மூலம் சோசலிசக் கோட்பாடு, வெறும் தத்துவம் மட்டும் அல்ல, நடைமுறைக்கு வர முடியும் என நிரூபிக்கப்பட்டது. புரட்சி வெற்றியடைந்த நாளில், தோழர் லெனின் கூறினார் – “முதலாளி வர்க்கத்தின் எந்தப் பங்கேற்பும் இல்லாமல் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களே அதிகாரத்தை உருவாக்குபவர்களாக மாறியுள்ளனர்”.
1789-இன் பிரெஞ்சுப் புரட்சி துவங்கி பல்வேறு புரட்சிகள் அரசியல் அமைப்புகளை மாற்றியமைத்தன. அதே சமயம் வர்க்கக் கட்டமைப்பைப் பாதுகாத்தன. அதாவது நில உடமை வர்க்கத்தின் கையில் இருந்து ஆட்சி அதிகாரம் முதலாளித்துவ வர்க்கத்தால் கைப்பற்றப்பட்டது. ஆனால் மொத்தத்தில் சுரண்டல் அமைப்பு நீடித்தது. அக்டோபர் புரட்சியோ, மனிதரை மனிதர் சுரண்டுவதை முழுவதுமாக ஒழிக்கும் பங்கினை வகித்தது. மேலோட்ட பூச்சுகளை மட்டும் செய்யாமல், மக்களின் விடுதலைக்கான அடிப்படை மாற்றங்களை சாத்தியமாக்கியது.
1871-இன் பாரிஸ் கம்யூன் ஒரு வீரியமான ஆனால் குறுகிய கால சோதனையாக இருந்தது; ஆனால் 1917 அக்டோபர் புரட்சி அதற்கு மாறாக, நிலைத்திருக்கவும் விரிவடையவும் கூடிய புதிய அதிகார வடிவத்தை நிறுவுவதில் வெற்றி பெற்றது. பழைய அரசு எந்திரம் தகர்க்கப்பட்டு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கான புதிய அரசு எந்திரம் நிர்மாணிக்கப்பட்டது.
அரசு என்பது சமூகத்தின்அனைத்துவர்க்கங்களுக்கும் மேலான நடுநிலையான அமைப்பு என்பதை நிராகரித்து, அரசு அதிகாரம் எந்த வர்க்கத்தின் கையில் இருக்கிறது என்பதே சமூகத்தின் திசையைத் தீர்மானிக்கிறது என்பதை அது நடைமுறையில் வெளிப்படுத்தியது. தொழிலாளர்களும் விவசாயிகளும் தங்களது சொந்த அரசியல் அமைப்புகளான சோவியத்துகள் மூலம் புரட்சிகர அரசை ஏற்படுத்த முடியும் என்பதை அக்டோபர் புரட்சி காட்டியது. மேலும், ஒரு சோசலிச அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதை, முன்பின் அறிமுகமற்ற பாதையில் பயணித்து, உலக சோசலிச இயக்கத்திற்கு விலைமதிப்பற்ற படிப்பினையை சோவியத் புரட்சியே வழங்கியது.
சோவியத் மக்கள் எவ்வாறு பயனடைந்தனர்?
அக்டோபர் புரட்சி, ரஷ்யாவின் உழைக்கும் மக்களுக்கு அளித்த பொருளாதார மற்றும் சமூக பலன்கள் ஆழமானவை. அதிகாரத்தைக் கைப்பற்றிய சில நாட்களுக்குள், புதிய சோவியத் அரசு எட்டு மணி நேர வேலை நாள், ஊதியத்துடன் ஆண்டு விடுப்பு, நோய் மற்றும் வேலையின்மை காப்பீடு ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது; பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம ஊதியம் வழங்கப்பட்டது. 14 வயதுக்குக் கீழ் குழந்தை தொழிலாளர் பயன்பாடு தடை செய்யப்பட்டது. நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கு உறுதி செய்யப்பட்டது. ஜார் மன்னர் ஆட்சியில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத இந்த நடவடிக்கைகள், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் அன்றாட வாழ்வை மாற்றியமைத்தன.
விவசாயிகள் மிக அதிகமாகப் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜார் மன்னராட்சி காலத்தில் நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் பெருமளவில் இருந்தது. கடைசி ஜார் மன்னன் சுமார் 80 லட்சம் ஹெக்டேர் வளமான நிலங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். மேலும் சுமார் 28000 பெருநில உடமையாளர்கள், ஒரு கோடி ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை சொந்தமாக வைத்திருந்தனர்.
புதிய அரசின் முதல் நடவடிக்கைகளில் ஒன்று, நிலம் தொடர்பான ஆணையை நிறைவேற்றியதாகும்; அது நிலப்பிரபுக்கள், தேவாலயங்களின் நில உடைமையை ஒழித்து, இழப்பீடு இல்லாமல் விவசாயிகள் குழுக்களுக்கு நிலத்தை மாற்றியது.
1919-இல் லெனின் குறிப்பிட்டது போல, “மொத்தத்தில் விவசாயிகளே முதலில் பயனடைந்தவர்கள், மிக அதிகமாகப் பயனடைந்தவர்கள், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மூலம் உடனடியாகப் பயனடைந்தவர்கள்.” பல நூற்றாண்டுகளாக நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் தானியத்தை ஒப்படைத்த விவசாயிகள், முதல் முறையாகத் தங்களுக்காகவே உழைத்து, அதன் பலனையும் முழுமையாக அனுபவித்தனர்.
சமூக மாற்றம் பொருளாதார நன்மைகளை விட மிக அதிகமாக விரிந்தது. சோவியத் அரசு மருத்துவமனைகளையும் சுகாதார மையங்களையும் தேசியமயமாக்கி, அனைத்து மக்களுக்கும் இலவச மருத்துவ சேவைகளை வழங்கியது. எழுத்தறிவின்மைக்கு எதிரான மிகப்பெரிய இயக்கம் முன்னெடுக்கப்பட்டது, அனைவருக்கும் கல்வி உறுதி செய்யப்பட்டது. 1931-க்குள் வேலையின்மை முழுவதுமாக ஒழிக்கப்பட்டு, இனி வேலை வாய்ப்பு அலுவலகங்களே தேவையில்லை என்ற நிலை உருவானது. உலகில் இதற்கு முன்னுதாரணம் வேறு எதுவும் இல்லை.
முன்பு மோசமான இடங்களிலும், நிலவறைகளிலும், மரப் பொந்துகளிலும் வாழ்ந்த தொழிலாளர் குடும்பங்கள், நிலப்பிரபுக்களுக்கு முதலாளிகளுக்கு சொந்தமான வசதியான வீடுகளுக்கு மாற்றப்பட்டனர். 1985-க்குள், 1913-ஐ ஒப்பிடும்போது தேசிய வருமானம் எழுபது மடங்கு அதிகரித்தது; தொழிலாளர்களின் உண்மையான வருமானம் பத்து மடங்கும், விவசாயிகளின் வருமானம் பதினான்கு மடங்கும் உயர்ந்தது. கலாச்சார வளர்ச்சி பரவலானது.
பெண்கள் முக்கியமான பல தளைகளில் இருந்து விடுபட்டனர். அனைவருக்கும் வாக்குரிமை குறிப்பாக பெண்களுக்கு வாக்குரிமை என்பது உருவானது. பாலியல் வணிகம் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. சொத்துரிமை, திருமணம் மற்றும் விவாகரத்தில் சமத்துவம், வேலைத்தளத்தில் சம உரிமைகள், குழந்தை பராமரிப்பு மையங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. பாலின சமத்துவ உரிமைகள், சம்பளத்துடன் கூடிய பிரசவ கால விடுப்பு அளிக்கப்பட்டது.
இத்தகைய நடவடிக்கைகள் பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் பல தசாப்தங்களுக்குப் பிறகும் முழுமையாக எட்டப்படவில்லை. முக்கியமாக பெண்களின் தனிப்பட்ட வீடு சார் பணி, அரசாங்கத்தின் பொறுப்பானது. அதனை சமூகமயமாக்கும் நோக்கில் குழந்தை பராமரிப்பு மையங்கள், பொது உணவகங்கள், மலிவு விலை சலவையகங்கள் போன்ற ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டன. இது பல்வேறு துறைகளில் பெண்கள் முத்திரை பதிக்க உதவியது. வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் பெண்கள் வளர்ச்சி அடைவதற்கு எடுத்துக்கொண்ட காலத்தை விட, மிகக் குறைவான காலத்தில் சோவியத் பெண்கள் அபாரமாக முன்னேறினர்.
அரசியல் அதிகார மாற்றம் என்பது வெறும் ஆட்சியாளர்களின் மாற்றம் அல்ல; அது மக்களின் அன்றாட வாழ்க்கை, உரிமைகள் மற்றும் சமூக உறவுகளையே மாற்றக்கூடியது என்பதை உலகம் பார்த்தது.
உலகின் மீதான தாக்கம்
அக்டோபர் புரட்சி, முதலாளித்துவமே மனித சமூகத்தின் இயற்கையான மற்றும் நிரந்தரமான ஒழுங்கு என்ற மாயையை உடைத்தது. முதலாளித்துவத்தை வீழ்த்த முடியும் என்பதை நிரூபித்தது; ஐரோப்பா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் அதற்கு அப்பாலும் மகத்தான அளவில் மாற்றத்துக்கான ஓர் உலகளாவிய உந்துதலை உருவாக்கியது. ஃபிடல் காஸ்ட்ரோ குறிப்பிட்டது போல, “மனிதர்களின் மனங்களிலும், மக்களின் விதியிலும், உலகின் முன்னேற்றத்திலும் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வு வேறெதுவும் இல்லை.”
புரட்சியின் மிகத் தொலைநோக்கான சர்வதேச விளைவு, காலனிய உலகின் மீதான அதன் தாக்கமாகும். அந்தந்த நாடுகள் சார்ந்த விஷயம் என்பதிலிருந்து, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் காலனிகளின் உலகளாவிய இயக்கமாக அது முன்னெழுந்தது. இந்தியா, வியட்நாம், சீனா மற்றும் எண்ணற்ற காலனிய நாடுகளில், அக்டோபர் புரட்சி நம்பிக்கையின் வெளிச்சக் கீற்றாக மாறி, காலனியாதிக்கத்திற்கு எதிரான தேச விடுதலை இயக்கங்களை ஊக்குவித்தது.
புரட்சி, உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் உருவாக்கத்தையும் தூண்டியது. 1919-ல் நிறுவப்பட்ட மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம், உலகளாவிய புரட்சிகரப் போராட்டங்களை ஒருங்கிணைக்க முயன்றது; அதன் மாநாடுகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் கூட்டாளிகள், விவசாய மற்றும் தேசிய, காலனித்துவக் கேள்விகள் உள்ளிட்டவற்றிற்கு கணிசமான கவனம் செலுத்தின. காலனியாதிக்க விடுதலைக்கான கருத்தியல் வெடிமருந்தையும், ஓர் உறுதியான மாடலையும் அது வழங்கியது.
தொழிலாளர் இயக்கத்தின் சர்வதேசியத் தன்மை வலுப்பட்டது. காலனியாதிக்கத்திற்கு எதிரான விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவை வழங்கியது. விடுதலைப் போராட்டங்களையும், முதலாளித்துவ நாடுகளின் தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தியது. ஒரு நாட்டின் உழைக்கும் மக்களின் விடுதலையை, மற்ற நாடுகளின் உழைக்கும் மக்களின் விடுதலையிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது என்ற புரிதலை வலுப்படுத்தியது.
மேம்பட்ட முதலாளித்துவ நாடுகள் உட்பட பல நாடுகளில் அடிப்படை கோரிக்கைகளுக்கான உழைக்கும் மக்களின் இயக்கம் வலுப்பெற்றது. தொழிலாளர்களுக்கு சாதகமான குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களுக்கு சோவியத் ஒன்றியத்தின் இருப்பு, அழுத்தம் கொடுத்தது. பல்வேறு நல நடவடிக்கைகள் எடுப்பதற்கு முதலாளித்துவ நாடுகள் தள்ளப்பட்டன. முதலாளித்துவ உலகின் பல்வேறு சவால்களுக்கு சோவியத் ஒன்றியம் பதிலாக அமைந்தது.
ஏகாதிபத்தியத்தைப் புரிந்துகொள்வதன் அவசியம்
அக்டோபர் புரட்சியின் மற்றொரு முக்கியமான பங்களிப்பு, முதலாளித்துவத்தையும் அதன் ஏகாதிபத்திய கட்டத்தையும் புரிந்துகொள்வதற்கான மார்க்சிய நோக்கை வலுப்படுத்தியதாகும். முதல் உலகப் போர் என்பது, சந்தைகள், மூலப்பொருட்கள், காலனிகள் மற்றும் உலகின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான முதலாளித்துவ சக்திகளின் போட்டியுடன் நெருக்கமாக இணைந்திருந்தது.
முதலாளித்துவ வளர்ச்சியின் விளைவாக உருவாகும் ஏகபோக மூலதனம், நிதி மூலதனம் மற்றும் உலகைப் பங்கிடுவதற்கான போட்டி ஆகியவற்றுடன் இணைந்த ஒரு கட்டமே ஏகாதிபத்தியம் என்பதை லெனின் விளக்கினார். எனவே, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதவை என்பதை அக்டோபர் புரட்சி தெளிவுபடுத்தியது.
ஜார் ஆட்சிக்காலத்தில் ரஷ்ய தேசிய இனத்தால் இதர இனங்கள் கிட்டத்தட்ட சிறை வைக்கப்பட்ட சூழலில் இருந்தன. தோழர் லெனின் தேசிய இனங்களின் சுயநிர்ணயக் கொள்கையை அறிவித்தது ஓர் உத்தி சார்ந்த நடவடிக்கை மட்டுமல்ல; அது ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா முழுவதும் எதிரொலித்த ஓர் உறுதியான அரசியல் உறுதிமொழியாக இருந்தது. போர் நிறுத்தம் மற்றும் அமைதிக்கான பிரகடனம் சோவியத் அரசால் வெளியிடப்பட்டது.
இந்தியாவில்:
இந்தியாவிலும் அக்டோபர் புரட்சியின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. 1918-க்கு முன்னதாக தொழிலாளர் இயக்கம் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே இருந்தது. வேலை நிறுத்தங்கள் எப்போதாவது தான் நடந்தன. அக்டோபர் புரட்சியின் உத்வேகத்தால் தொழிலாளி வர்க்க இயக்கம், சங்கங்கள் இந்தியாவில் வேகமாக வளர்ந்தன. 1919-21 காலகட்டத்தில் ஏராளமான வேலை நிறுத்தங்கள் நடந்தன. பகத்சிங்கும் அவரது சகாக்களும் ரஷ்ய புரட்சி மற்றும் தோழர் லெனினின் பங்களிப்பு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு சோசலிசத்தைத் தழுவுவதற்கு முன் வந்தனர். சுதந்திரப் போராட்டம் மற்றும் சமூக விடுதலைக்கான உத்வேகத்தை ரஷ்ய புரட்சி அளித்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் பல்வேறு உதவிகளை சோவியத் யூனியன் அளித்தது.
தொழிலாளர்-விவசாயி கூட்டணி: வெற்றியின் அடித்தளம்
அக்டோபர் புரட்சியின் வெற்றி, பாட்டாளி வர்க்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையிலான கேந்திர கூட்டணியை முக்கியமாகச் சார்ந்திருந்தது எனலாம். இது லெனின் நுண்ணறிவுடன் மிகத் துல்லியமாக உருவாக்கிய ஓர் உத்தியாகும். இத்தகைய கூட்டணியின் தேவை, 1840களின் புரட்சிகள் மற்றும் பாரிஸ் கம்யூனின் பாடங்களைப் பரிசீலிக்கையில் மார்க்ஸ், எங்கல்ஸ் போன்றவர்கள் சுட்டிக்காட்டியதுதான். ஆனால் அதை போல்ஷெவிக் உத்தியின் மையப் புள்ளியாக மாற்றியது லெனினே. முதலாளித்துவ செல்வாக்கின் பிடியிலிருந்து விவசாயிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் லெனின் உறுதியாக இருந்தார்.
இந்தக் கூட்டணியின் அரசியல் அடித்தளம், இரு வர்க்கங்களும் பொதுவான எதிரிகளை, அதாவது முதலாளித்துவத்தையும் நிலப்பிரபுத்துவத்தையும், கொண்டிருந்தன என்பதும், விவசாய வர்க்கத்தைத் தம் பக்கம் இழுக்க முதலாளித்துவம் செய்த முயற்சிகளை முறியடித்து, இரண்டும் கூட்டணி வைத்து எதிர்கொள்ளும் போது வெற்றி சாத்தியம் என்பதும் தான்.
தொழிலாளி வர்க்கம், குறுகிய நலன்களுக்குள் தங்களை அடைத்துக்கொண்டால், மனிதகுலத்தை விடுவிக்கும் பணியை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்று லெனின் வாதிட்டார். தொழிலாளி வர்க்கம் உண்மையிலேயே புரட்சிகர வர்க்கமாகவும், உண்மையான சோசலிச முறையில் செயல்படுவதாகவும் இருக்க வேண்டுமானால், அது அனைத்து உழைக்கும் மற்றும் சுரண்டப்பட்ட மக்களின் முன்னணி படையாக, சுரண்டும் வர்க்கங்களை வீழ்த்தும் போராட்டத்தில் அவர்களின் தலைவராக செயல்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார். பெரும்பாலும் விவசாய நாட்டில், விவசாயிகளின் ஆதரவு சோசலிசப் புரட்சி வெற்றி பெற தேவை என்பது மட்டுமல்ல, புதிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதிலும் அவர்களின் தீவிர பங்கேற்பு தேவை என்பதை சோவியத் அனுபவம் நிரூபித்தது. இன்றும் உலக அளவில் இந்த உத்தியின் பொருத்தப்பாடு நீடிக்கிறது.
ஜனநாயகம் பற்றிய விரிவான புரிதல்
முதலாளித்துவ சமூகத்தில் ‘ஜனநாயகம்’ என்பது உள்ளீடற்ற மேல் பூச்சாக மாறிவிடுகிறது. தேர்தல் நடத்துவது மட்டுமல்ல ஜனநாயகம்.. அரசு நிர்வாகத்தை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு சேர்ப்பது, தேசிய இனங்களின் மொழி மற்றும் கலாச்சார உரிமைகள், பெண்களுக்கு வாக்குரிமை, சொத்துரிமை, தொழிலாளர் உரிமைகளுக்கான முக்கியத்துவம், வேலை உரிமையை உறுதி செய்தல், பொது மருத்துவ கட்டமைப்பு, அறிவியல் பரவலாக்கம் ஆகிய பல அம்சங்களும் அதில் இடம்பெறலாம். அக்டோபர் புரட்சி ஜனநாயகம் குறித்த புரிதலை மேற்கண்டவாறு விரிவுபடுத்தியது.
பாசிச எதிர்ப்பும் ஐக்கிய முன்னணியும்
ஐக்கிய முன்னணி என்ற அரசியல் அணுகுமுறையின் ஆரம்பக் கூறுகளை, புரட்சியின் போதும், புரட்சி வெற்றிக்குப் பிறகும் சோவியத்துகளில் போல்ஷெவிக்குகள் ஆற்றிய பாத்திரத்தில் இருந்து புரிந்துகொள்ளலாம். உலகத்தை ஹிட்லர் தலைமையிலான பாசிசத்தின் இருள் கவ்வியபோது, சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மற்றொரு முக்கியமான பங்களிப்பாக ஐக்கிய முன்னணி அரசியல் இருந்தது. பாசிசம் ஜனநாயக உரிமைகளையும் தொழிலாளர் இயக்கங்களையும் தேசிய விடுதலைப் போராட்டங்களையும் அச்சுறுத்திய சூழலில், கம்யூனிஸ்டுகள் மட்டுமின்றி சோசலிஸ்டுகள், ஜனநாயகவாதிகள் மற்றும் பாசிச எதிர்ப்பு சக்திகள் உள்ளிட்ட பரந்த மக்களாட்சி சக்திகளை ஒன்றிணைப்பதன் அவசியம் முன்னிறுத்தப்பட்டது. தங்களுக்கிடையிலான அடிப்படை அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், பாசிசத்தை எதிர்க்கும் பொதுவான போராட்டத்தில் ஒன்றுபட முடியும் என்ற நடைமுறை அரசியல் புரிதலை இந்த அனுபவம் வலுப்படுத்தியது.
இருபதாம் நூற்றாண்டு சந்தித்த மிகப் பெரிய கொடுமையான பாசிசத்தை முறியடித்ததில் சோசலிச சோவியத் யூனியனுக்குத் தான் பிரதான பங்குண்டு. இரண்டு கோடி செஞ்சேனை வீரர்கள் உயிர் கொடுத்து உலகத்தை பாசிச அபாயத்திலிருந்து பாதுகாத்தனர்.
படிப்பினை:
புரட்சியைத் தொடர்ந்து இளம் சோவியத் ஒன்றியம் எதிர் புரட்சி சக்திகளால் சுற்றி வளைக்கப்பட்டது, பத்துக்கும் மேற்பட்ட முதலாளித்துவ நாடுகள் அதற்கு உதவியது, இதனால் நடந்த நான்காண்டு கால உள்நாட்டுப் போர், பின்னர் சோசலிச சோவியத் யூனியனில் நடந்த அதிகாரத்துவ மீறல்கள், சோசலிச ஜனநாயகத்தை அமல்படுத்துவதில் போதாமை, இறுதியில் சோவியத் ஒன்றியத்தின் சிதைவு, அதைத்தொடர்ந்து ஏகாதிபத்தியம் தம்மை மேலும் மேலும் வலுப்படுத்திக் கொண்டு முன்னேறுவது போன்றவற்றில் இருந்து நாம் படிப்பினை பெற வேண்டும்.
ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14 ஆவது காங்கிரஸ் 1992 இல் சுட்டிக்காட்டியது போல, சோவியத் ஒன்றியத்தின் சிதைவு சோசலிசத்தைப் பின்பற்றியதன் விளைவல்ல; அதிலிருந்து விலகியதன் விளைவே. மேலும் புரட்சிக்குப் பிறகு சோசலிசத்திற்கு மாறிச் செல்வது ஒரு நேர்க்கோடு, புரட்சி வெற்றி பெற்ற நாடு மீண்டும் முதலாளித்துவத்துக்கு திரும்பாது, ஏகாதிபத்தியத்தின் முடிவு மிக அருகில் உள்ளது போன்ற தவறான மதிப்பீடுகளும் காரணம்.
சோசலிசத்தின் வெற்றிகளையும் குறைபாடுகளையும் விமர்சன ரீதியாக ஆய்வு செய்வது அவசியம். சோசலிசத்தின் வரலாற்றுப் பங்களிப்பையும், அதன் நடைமுறையில் ஏற்பட்ட குறைபாடுகளையும் ஒன்றாக ஆய்வு செய்வதே அக்டோபர் புரட்சியின் படிப்பினையை அறிவியல் ரீதியாகப் புரிந்துகொள்வதற்கான வழியாகும்.
புரட்சியின் பாரம்பரியத்தை ஒற்றை அரசின் பின்னடைவால் மட்டும் மதிப்பிடக்கூடாது; மாறாக, காலனிய சாம்ராஜ்யங்களை முடிவுக்குக் கொண்டுவந்ததிலும், பல்வேறு கண்டங்களில் தேச விடுதலை இயக்கங்களை ஊக்குவித்ததிலும், உலக அரசியலில் புரட்சிகர செல்வாக்கை உருவாக்கியதிலும், தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற முடியும், மற்றொரு உலகம் சாத்தியம் என்பதை நிரூபித்ததிலும், இன்ன பிற விஷயங்களிலும் அதன் பங்கு இன்றும் கொண்டாடப்பட வேண்டும். இருபதாம் நூற்றாண்டு சோசலிச அமலாக்கத்தின் குறைபாடுகளில் இருந்து கற்றுக் கொண்டு, 21 ஆம் நூற்றாண்டு சோசலிசத்துக்கான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.
இன்றைய பொருத்தம்
அரோரா கப்பலின் பீரங்கிகள் ஒரு புதிய யுகத்தை அறிவித்து ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகிய பிறகும், அக்டோபர் புரட்சி இன்றும் ஆழமாகப் பொருத்தமானதாக உள்ளது. 21ஆம் நூற்றாண்டில் சர்வதேச நிதி மூலதனத்தின் பிரம்மாண்ட வளர்ச்சி மற்றும் மூலதன குவிப்பு, பல்வேறு நாடுகளில் அரசாங்கங்கள் பின்பற்றும் நவீன தாராளமய பாதை, அதன் விளைவுகளான செல்வக் குவிப்பு, சுரண்டல், பாகுபாடு, சமத்துவமின்மை இன்றைய உலகில் இன்னும் அதிக வலிமையுடன் உள்ளன. ஏகபோகங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் அபரிமித லாபத்தைக் குவிக்கும்போது, தொழிலாளர்களோ ஊதியங்கள், கூட்டு உரிமைகள், சுதந்திரங்கள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சமத்துவமின்மை உச்சம் நோக்கிப் போகிறது.
அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்தியம் உலகின் மீது தமது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான பல்முனை முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. நவீன தாராளமயத்தின் மூலமாக உருவாகும் பொருளாதார நெருக்கடி உழைப்பாளிகளின் தலையில் சுமத்தப்படுவது முன்னெப்போதையும் விட அதிகரித்து வருகிறது. இந்நிகழ்முறையில் அடையாள அரசியல் மற்றும் நவபாசிச சக்திகளின் செல்வாக்கும் தீவிரமடைந்து வருகிறது. பெண்கள், புலம்பெயர் தொழிலாளிகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கின்றன.
இந்தியாவிலும் இந்துத்வ வலது சாரி சக்திகளின் வளர்ச்சி, அவற்றின் கார்ப்பரேட் ஆதரவு பாதை, தமது நிகழ்ச்சி நிரலுக்குத் தடைகள் வராமல் பாதுகாக்க அவர்கள் பின்பற்றும் நவ பாசிச போக்குகள் போன்றவை முக்கிய சவால்களாக முன்னெழுகின்றன.
இந்த சமயத்தில் அக்டோபர் புரட்சியின் செய்தி, ஒவ்வொரு வேலைத்தளத்திலும், ஒவ்வொரு வேலைநிறுத்தத்திலும், ஒற்றுமையின் ஒவ்வொரு செயலிலும் உயிர்ப்புடன் உள்ளது. முதலாளித்துவக் காட்டுமிராண்டித்தனத்திற்கு மாற்று வழி நம் விருப்பம் மட்டுமல்ல, சாத்தியமானதும் கூட என்பதை அக்டோபர் புரட்சி நிரூபித்தது. சாதாரணமக்கள், ஒழுங்கமைக்கப்பட்டு அரசியல் உறுதியுடன் இருந்தால், தங்கள் சொந்த விதியைத் தாங்களே கட்டுப்படுத்தி, லாபத்தை விட நீதியை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது.
அக்டோபர் புரட்சி வெறும் ரஷ்ய நிகழ்வு அல்ல; அது முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கான மாற்றத்தை நவீன யுகத்தின் மைய அரசியல் கேள்வியாக மாற்றிய ஓர் உலகளாவிய வரலாற்று உடைப்பாகும். சுரண்டல் தவிர்க்க முடியாதது என்றும், உலகின் செல்வம் அதை உருவாக்குபவர்களை விட, ஒரு சிலருக்கே சொந்தமாக வேண்டும் என்றும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் அனைவருக்கும் புரட்சியின் சாரம் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply