
கம்யூனிசக் கோட்பாடுகள்
ஃப்ரடெரிக் எங்கெல்ஸ்
கே 16: தனியார் சொத்துடைமையைச் சமாதான முறையில் ஒழிப்பது சாத்தியமா?
தனியார் சொத்துடைமையைச் சமாதான முறையில் ஒழிப்பது நடைபெறக்கூடும் எனில் அது விரும்பத்தக்கதே. இதைக் கம்யூனிஸ்டுகள் கட்டாயம் எதிர்க்க மாட்டார்கள். சதித்திட்டங்கள் எல்லாம் பயனற்றவை என்பது மட்டுமின்றிக் கேடு விளைவிப்பவை என்பதையும் கம்யூனிஸ்டுகள் நன்றாக அறிவார்கள். புரட்சிகள் திட்டமிட்டோ தன்னிச்சையாகவோ உருவாக்கப்படுவதில்லை என்பதையும், மாறாக அவை எங்கும் எப்போதும், தனிப்பட்ட கட்சிகளின் அல்லது மொத்த வர்க்கங்களின் விருப்பதையும் கட்டளையையும் சாராத, முற்றிலும் சுதந்திரமான, புற நிகழ்வுகளின் இன்றியமையாத விளைவே என்பதையும் அவர்கள் மிக நன்றாகவே அறிவார்கள்.
ஆனால், அதே வேளையில், ஏறத்தாழ எல்லா நாகரிகமடைந்த நாடுகளிலும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி பலவந்தமாய் அடக்கப்படுகிறது என்பதையும், இந்த வகையில் கம்யூனிசத்தின் எதிராளிகள் தங்களின் முழுப் பலத்தோடு ஒரு புரட்சி உருவாவதற்கே பாடுபடுகிறார்கள் என்பதையும் கம்யூனிஸ்டுகள் காண்கிறார்கள். ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் இறுதியில் ஒரு புரட்சியை நோக்கித் தள்ளப்படுமானால், கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், பாட்டாளிகளின் நலன்களைச் சொல்மூலம் பாதுகாத்து வருவதைப்போல் செயல்மூலமும் பாதுகாத்து நிற்போம்.
கே 17: தனியார் சொத்துடைமையை ஒரே அடியில் ஒழித்துக்கட்டுவது சாத்தியமா?
இல்லை. ஒரு பொதுவான கூட்டுச் சமுதாயத்தை உருவாக்கத் தேவையான அளவுக்கு இப்போது நிலவும் உற்பத்திச் சக்திகளை ஒரே அடியில் பெருக்குவது எவ்வாறு சாத்தியமில்லையோ அதுபோலவே இதுவும் சாத்தியமில்லை.
பாட்டாளி வர்க்கப் புரட்சி இன்று நிலவும் சமுதாயத்தைப் படிப்படியாக மாற்றியமைக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், போதுமான அளவில் உற்பத்திச் சாதனங்கள் கைவசம் இருக்கும்போது மட்டுமே அதனால் தனியார் சொத்துடைமையை ஒழித்துக்கட்ட இயலும்.
கே 18: இந்தப் புரட்சியின் திசைவழி எதுவாக இருக்கும்?
எல்லாவற்றுக்கும் மேலாக, அது ஒரு ஜனநாயக அரசமைப்பை நிறுவும். இதன்மூலம் நேரடியாகவோ மறைமுகமாகவோ, பாட்டாளி வர்க்கத்தின் மேலாதிக்கத்தை நிறுவும். பாட்டாளி வர்க்கம் மக்களில் பெரும்பான்மையாய் ஏற்கெனவே இருக்கின்ற இங்கிலாந்தில் நேரடியாகவே இதனை நிறைவேற்றும். பெரும்பான்மை மக்களிடையே பாட்டாளிகள் மட்டுமின்றி, சிறு விவசாயிகளும் குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தினரும் அங்கம் வகிக்கும் ஜெர்மனியிலும் ஃபிரான்சிலும் மறைமுகமாய் இதனை நிறைவேற்றும். அங்கெல்லாம் இந்த வர்க்கத்தினர் மெல்ல மெல்ல பாட்டாளி வர்க்கத்துக்குள் வந்து விழுகின்ற நிலையில் இருக்கின்றனர். தங்களுடைய அரசியல் நலன்கள் அனைத்துக்கும் மென்மேலும் மிகுதியாகப் பாட்டாளி வர்க்கத்தையே சார்ந்து நிற்கின்றனர். எனவே, விரைவில் இவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கைகளுக்கு இணங்கி வருவார்கள். அனேகமாய் இது இரண்டாவது போராட்டத்துக்கு வழிவகுக்கலாம். எனினும், அதன் இறுதி முடிவு பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியாக மட்டுமே இருக்க முடியும்.
தனியார் சொத்துடைமைக்கு எதிராகக் குறிவைக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், பாட்டாளி வர்க்கத்தின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்குமான ஒரு வழிமுறையாக, ஜனநாயகத்தை உடனடியாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையேல், ஜனநாயகம் பாட்டாளி வர்க்கத்துக்கு முற்றிலும் மதிப்பற்றதாகிவிடும். இப்போது நிலவும் உறவுகளின் தவிர்க்கவியலாத பின்விளைவாக வெளிப்படுகின்ற முதன்மையான நடவடிக்கைகள் பின்வருமாறு:
(1) படிப்படியாய் அதிகரிக்கும் வருமான வரிவிதிப்பு, மரபுரிமைச் சொத்து மீது உயர் வரிகள், கிளைவழிவந்தோர் (சகோதரர், சகோதர சகோதரிகளின் புதல்வர்கள் போன்றோர்) மரபுரிமை பெறுவதை ஒழித்தல், கட்டாயக் கடன்கள் போன்ற நடவடிக்கைகளின் மூலம் தனியார் சொத்துடைமையைக் கட்டுப்படுத்தல்.
(2) ஓரளவு அரசுத் தொழில்துறையினால் தோற்றுவிக்கும் போட்டி மூலமும், ஓரளவு நேரடியாகச் சேமிப்புப் பத்திரங்கள் வடிவில் இழப்பீடு வழங்கியும், நில உடைமையாளர்கள், தொழிலதிபர்கள், ரயில் போக்குவரத்துப் பெரும்புள்ளிகள், கப்பல் நிறுவன அதிபர்கள் ஆகியோரைப் படிப்படியாகச் சொத்துடைமையிலிருந்து விடுவித்தல்.
(3) நாட்டைவிட்டு வெளியேறியோர், பெரும்பான்மை மக்களுக்கு எதிரான கலகக்காரர்கள் ஆகியோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்தல்.
(4) மக்களுக்குச் சொந்தமான நிலங்களிலும், தொழிற்சாலைகளிலும், பணிமனைகளிலும் பாட்டாளிகளை வேலைக்கமர்த்தி உழைப்பை ஒழுங்கமைத்தல். இதன்மூலம் தொழிலாளர்களுக்கு இடையேயான போட்டிக்கு முடிவுகட்டுதல். ஒருசில தொழிற்சாலை உடைமையாளர்கள் மீதம் இருப்பின், அரசு கொடுக்கும் அதே அளவு உயர்ந்த கூலியைத் தருவதற்கு அவர்களை ஒப்புக் கொள்ளச் செய்தல்.
(5) தனியார் சொத்துடைமை முற்றிலுமாக ஒழிக்கப்படும்வரை உழைக்க வேண்டும் என்னும் [சமப்] பொறுப்பினைச் சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவர் மீதும் சுமத்துதல். தொழில்துறைப் படையணிகளைக் குறிப்பாக விவசாயத்துக்காக நிறுவுதல்.
(6) அரசு மூலதனத்தைக் கொண்ட ஒரு தேசிய வங்கி மூலம், பணத்தையும் கடன் செலாவணி அமைப்புகளையும் அரசின் கைகளில் மையப்படுத்தல். அனைத்துத் தனியார் வங்கிகளையும் வங்கி அதிபர்களையும் கட்டுப்படுத்தல்.
(7) தேசியத் தொழிற்சாலைகள், பணிமனைகள், ரயில்பாதைகள், கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை அதிகரித்தல்; தரிசு நிலங்களைப் பண்படுத்திச் சாகுபடி செய்தல், ஏற்கெனவே சாகுபடி செய்யப்படும் நிலங்களை மேம்படுத்தல் – இவையனைத்தையும், தேசத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டு மூலதனம், உழைப்புச் சக்தி ஆகியவற்றின் வளர்ச்சிக்கேற்ற விகிதத்தில் மேற்கொள்ளல்.
(8) தாயின் பராமரிப்பில் இருந்து விடுபடக்கூடிய வயதுவந்த எல்லாக் குழந்தைகளுக்கும் தேசியக் கல்வி நிறுவனங்களில், தேசத்தின் செலவில் கல்வி வழங்கல். கல்வியைப் பொருள் உற்பத்தியோடு இணைத்தல்.
(9) தொழில்துறையிலும் விவசாயத்திலும் ஈடுபட்டுள்ள குடிமக்களின் குழுக்களுக்கு, அரசின் பொது நிலங்களில் கூட்டு வசிப்பிடங்களாக மிகப்பெரும் குடியிருப்புகளைக் கட்டுதல். நாட்டுப்புற – நகர்ப்புற நிலைமைகளின் சாதகமான கூறுகளை அவர்களின் வாழ்க்கை முறையில் ஒன்றிணைத்தல். அதே வேளையில் அவையிரண்டின் ஒருசார்புத் தன்மையையும் பாதகமான கூறுகளையும் தவிர்த்தல்.
(10) நகர்ப்புற மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள சுகாதாரமற்ற, தரமற்ற வசிப்பிடங்களை இடித்துத் தகர்த்தல்.
(11) முறையான திருமண வாழ்வில் பிறந்த குழந்தைகளுக்கும், அவ்வாறின்றிப் பிறந்த குழந்தைகளுக்கும் சமமான மரபுவழிச் சொத்துரிமை வழங்குதல்.
(12) அனைத்துப் போக்குவரத்துச் சாதனங்களையும் தேசத்தின் உடைமையாக மையப்படுத்தல்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாகச் செயல்படுத்த முடியாது என்பது உண்மையே. ஆனால், ஒருசெயல் எப்போதும் இன்னொரு செயலுக்கு இட்டுச் செல்லும். தனியார் சொத்துடைமை மீது முதல் தீவிரத் தாக்குதல் தொடுக்கப்பட்டவுடன், பாட்டாளி வர்க்கம் மேலும் முன்னே செல்ல உந்தப்படுவதை உணரும். அனைத்து மூலதனத்தையும், அனைத்து விவசாயத் தொழில்களையும், அனைத்துப் போக்குவரத்துச் சாதனங்களையும், அனைத்து வர்த்தகத்தையும் அரசின் கைகளில் மேலும் மேலும் மையப்படுத்த முனைப்புக் காட்டும். மேற்கூறப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த முடிவினை நோக்கியே நெறிப்படுத்தப்படும். இத்தகைய நடவடிக்கைகள் செயல்படுத்த இயன்றவையாகவும், ஏதுவானவையாகவும் ஆகிவிடும். பாட்டாளி வர்க்கம் தம் உழைப்பின்மூலம் நாட்டின் உற்பத்திச் சக்திகளைப் பன்மடங்காகப் பெருக்கும் அதே அளவுக்குத் துல்லியமாக, அவற்றின் மையப்படுத்தும் ஆற்றலை வெளிக்காட்டும் திறன்கொண்டதாகவும் இருக்கும்.
இறுதியாக, அனைத்து மூலதனத்தையும், அனைத்து உற்பத்தியையும், அனைத்துப் பரிவர்த்தனையையும் ஒன்றாகத் தேசத்தின் கைகளில் ஒருமுகப்படுத்தும்போது, தனியார் சொத்துடைமை தானாகவே மறைந்து போய்விடும். பணம் தேவையற்றதாகிவிடும். சமுதாயம் மிச்சம் மீதியிருக்கும் தன்னுடைய பழைய பொருளாதாரப் பண்புகளை உதறித் தள்ளுவதற்கான திறனைப் பெற்றிருக்கும். உற்பத்தி அந்த அளவுக்கு அதிகரித்திருக்கும். மனிதர்கள் அந்த அளவுக்கு மாற்றம் அடைந்திருப்பார்கள்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply