
இன்றைய இந்திய பொருளாதாரம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
அறிமுகம்
தற்சமயம் உலகம் முழுவதும் பதற்றமான அரசியல் மற்றும் பொருளாதார சூழல் நிலவுகிறது. அமெரிக்க பொருளாதாரம் சந்தித்துவரும் மந்தநிலையும் அதனை எதிர்கொள்ள டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு எடுத்துவரும் பொருளாதார மற்றும் ராணுவ நடவடிக்கைகளும் உலகெங்கும் பொருளாதார பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. அமெரிக்க அரசின் பன்னாட்டு வர்த்தக கொள்கைகளும் நடவடிக்கைகளும் ராணுவத் தலையீடுகளும் வளரும் நாடுகளுக்கு பல புதிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன. ஏற்கெனவே நெருக்கடியில் இருந்த இந்தியப் பொருளாதாரம் இதற்கு விதிவிலக்கல்ல. இப் பின்புலத்தில் இந்திய பொருளாதாரம் பற்றிய சில அம்சங்களை இக்கட்டுரை விளக்குகிறது.
அயல் வணிக நெருக்கடி
இந்தியாவின் அயல்வணிகத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது அமெரிக்க சந்தை. தற்சமயம், அமெரிக்க அரசு பொதுவாகவே இறக்குமதியை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் சரக்குகளின் மீதான வரிவிகிதங்கள் கணிசமான அளவில் உயர்த்தப்பட்டுள்ளன. இது, அமெரிக்க சந்தைக்கான இந்தியாவின் ஏற்றுமதியை பாதிக்கிறது. மேலும், ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோலியம் (கச்சா) எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கூடுதல் இறக்குமதி வரிகளை அமெரிக்கா விதிக்கிறது. இதுவும் இந்திய அயல்வணிகத்தையும் அந்நியச்செலாவணி வரவையும் பாதிக்கிறது. அமெரிக்க அரசின் இந்த அராஜகமான, ஜனநாயகவிரோத அயல்வணிக நடவடிக்கைகளை எதிர்க்க மோடி அரசு தயாராக இல்லை. கண்டனக் குரல் கூட எழுப்பவில்லை. மக்கள் சீனத்துடன் இவ்வாறு அமெரிக்க அரசு மோதியபொழுது, சீனா வலுவான பதில் அடி கொடுத்தது. அமெரிக்கா பின்வாங்க நேர்ந்தது. அண்மையில் தில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில்தான் அமெரிக்க அரசின் அராஜக செயல்பாடுகளை கூட்டாக எதிர்கொள்வது பற்றிய விவாதங்களில் இந்தியாவும் கலந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் மோடி அரசுக்கு ஏற்பட்டது. எனினும், அமெரிக்க வல்லரசையோ ஏகாதிபத்திய முகாமையோ எதிர்கொள்ள மோடி அரசு தயாராக இல்லை. அதன் இளைய கூட்டாளியாகவே தொடர விரும்புகிறது.
இந்தியாவில் தாராளமய அமலாக்கம்
தாராளமயக் கொள்கைகள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசுகளால் அமலாக்கப்படுவதால் பன்னாட்டு நிகழ்வுகள் நமது பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது உண்மை. அதேநேரத்தில், மோடி தலைமையிலான கார்ப்பரேட்-இந்துத்துவா கூட்டணி ஒன்றிய அரசு பின்பற்றிவரும் அதிதீவிர நவதாராளமய கொள்கைகள் மிக அதிக அளவில் மக்களின் வாழ்க்கையை நாசப்படுத்தி வருகின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் தனியார்மயத்தை மிகத் தீவிரமாக பாஜக அரசுகள் – வாஜ்பாய் தலைமையில் செயல்பட்ட அரசும், 2014 முதல் இன்றுவரை தொடரும் மோடி அரசும் – பின்பற்றி வந்துள்ளன. இவ்விரு அரசுகளின் காலத்தில்தான் தனியார்மயம் மிகத் தீவிரமாக அமலாக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பன்னாட்டு பெருமுதலாளிகளின் லாப வேட்டைக்களமாக ஆக்கியுள்ள உலகமயக் கொள்கைகளை முன்பின் முரணின்றி பின்பற்றும் அரசுகளாகவே இவை செயல்பட்டுள்ளன.
1991இல் நரசிம்ம ராவ் தலைமையில் அமைந்த காங்கிரஸ் அரசு தாராளமயக் கொள்கைகளை முன்னெடுத்தது. துவக்கத்தில் ஒன்றிய அரசு அன்று எதிர்கொண்ட கடன் நெருக்கடியின் பின்புலத்தில் இது பன்னாட்டு நிதியம் மற்றும் உலகவங்கி நிர்ப்பந்தத்தால்தான் வேறுவழியின்றி அமலாக்கப்படுவதாக ஆட்சியாளர்கள் கூறினர். இக்கூற்று உண்மையல்ல என்று வாதிட்ட இடதுசாரி இயக்கங்களை சார்ந்த பொருளாதார அறிஞர்கள் தெளிவான மாற்றுக்கொள்கைகளை முன்வைத்தனர். இதனை ஒன்றிய காங்கிரஸ் அரசு ஏற்கவில்லை. பின்னர், காங்கிரஸ் ஆட்சியாளர்கள் கடன் நெருக்கடி விளைவாக, உலகவங்கி மற்றும் பன்னாட்டு நிதியத்தின் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் தாராளமயக் கொள்கைகளை பின்பற்ற வேண்டியுள்ளது என்ற நிலைபாட்டை கைவிட்டு, இவைதான் சரியான கொள்கைகள் என்று வாதிட்டனர். எனினும், பல தீவிர தாராளமயக் கொள்கைகளை 1991-96 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு அமல்படுத்த முனைந்தாலும், அன்றைய வர்க்க சக்திகளின் சமன்பாடு அதற்கு முழு இடம் அளிக்கவில்லை. பின்னர் வந்த இரண்டு ஆண்டு (1996-98) ஐக்கிய முன்னணி அரசு காலத்தில் இடதுசாரிகளின் போராட்டங்கள் தாராளமயத்தின் அதிவேக அமலாக்கத்திற்கு ஓரளவு தடைபோட முடிந்தது. ஆனால் அடுத்து வந்த வாஜ்பாய் தலைமையிலான பாஜக-தேசீய ஜனநாயக முன்னணி அரசு காலத்தில் (1998-2004) பொதுத்துறையை பின்னுக்குத் தள்ளி தீவிர தனியார்மயம் முன்னெடுக்கப்பட்டது. 2004இல் நடந்த மக்களவை தேர்தலில் “இந்தியா ஒளிர்கிறது” என்று பாஜக முன்வைத்த முழக்கம் முற்றிலும் நிராகரிக்கப்பட்டு, இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையில் “ஐக்கிய முற்போக்கு கூட்டணி” ஆட்சி அமைந்தது. ஆட்சியில் நீடிக்க இடதுசாரிகளின் ஆதரவு தேவையாக இருந்ததால், லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயம் செய்யக்கூடாது என்ற நிலைபாடு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் இடம் பெற்றது. ஆனால் 2014இல் மோடி தலைமையில் அமைந்த பாஜக அரசு, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர தனியார்மயத்தை அமலாக்கி வருகிறது. எனினும் பொதுத்துறையை முற்றிலுமாக அழிக்க முடியவில்லை. தற்காலத்தில் பாஜக அரசின் தனியார்மய முனைவுகளுக்கு எதிராக இடதுசாரி இயக்கங்கள் போராடி வருகின்றன என்றாலும் பொதுத்துறை சொத்துக்கள் தொடர்ந்து தனியாருக்கு தாரை வார்க்கப்படுகின்றன.
வளர்ச்சி பற்றிய ஒன்றிய அரசின் பொய்யும் புரட்டும்
நவ தாராளமயக் கொள்கைகள் இந்திய பொருளாதாரத்தை பலவீனப்படுத்தியுள்ளன. நாட்டின் தற்சார்பு கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. பன்னாட்டு – இந்நாட்டு பெருமுதலாளிகளின் ஆட்சியாகவே பாஜகவின் பன்னிரண்டு ஆண்டுக்கால ஆட்சி அமைந்துள்ளது. இதன் கார்ப்பரேட் – இந்துத்துவா கொள்கைகள் நாட்டை நாசப்படுத்தி, மக்களின் வாழ்வாதாரங்களை பறித்து வருகின்றன. தொழிலாளி வர்க்கத்திற்கு பெரும் இன்னல்களை தந்துள்ளன. விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தையும் சீரழித்துள்ளன. வேலை வாய்ப்புகளை பறித்து, வேலையில்லா திண்டாட்டத்தை பல மடங்கு தீவிரப்படுத்தியுள்ளன. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முற்றிலும் தவறிவிட்டன. மோடி அரசின் 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை பெரும்பகுதி மக்களுக்கு வருமான இழப்பையும் வேலைவாய்ப்பு அழிப்பையும் ஏற்படுத்தி, இந்தியாவின் முறைசாராத் துறைகளை சார்ந்துவாழும் மக்களை பெரிதும் பலவீனப்படுத்தியுள்ளது. 2017இல் கொண்டுவரப்பட்ட ஜீஎஸ்டி, சிறுகுறு தொழில்களையும் மாநில அரசுகளையும் வலுவிழக்க செய்துள்ளது. பெரும் மறைமுக வரிச்சுமையை மக்கள் மீது திணித்துள்ளது. உழைப்பாளி மக்கள் நலனை புறக்கணிக்கும் பாஜக அரசு, கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு மேலும் மேலும் வருமானவரிச் சலுகைகளை வழங்கி வருகிறது. 2019இல் கார்ப்பரேட் வருமானவரி விகிதத்தை 30%இல் இருந்து 22%ஆக குறைத்தது. புதிய தொழில் துறை முதலீடுகளுக்கு வருமானவரி 15% என்றாக்கப்பட்டது. ஒன்றிய அரசின் வரி வருமானத்தில் பெரும்பகுதி, உழைக்கும் மக்களிடம் இருந்தே ஜீஎஸ்டி, கட்டண உயர்வுகள், மானிய வெட்டு உள்ளிட்ட பல வழிகளில் அரசுக்கு கிடைக்கின்றன. தேசீய மயமாக்கப்பட்ட வங்கிகள் உட்பட வங்கி அமைப்பு மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் பெரும் தனியார் கம்பெனிகளுக்கு கடனாக வழங்கப்பட்டு பின்னர் ஏறத்தாழ முழுஅளவில் தள்ளுபடி செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, அண்மையில் ஜீ தொலைக்காட்சி மற்றும் எஸ்ஸெல் குழுமத்தின் உடமையாளர் பெருமுதலாளி சுபாஷ் சந்திரா தரவேண்டிய ரூ 22,006.57 கோடிக் கடனுக்கு அவர் ரூ 6.25 கோடி கொடுத்தால் போதும் என்று தேசீய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் (NCLT) தீர்ப்பளித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் மோடி அரசு இவ்வாறு பெருமுதலாளிகள் திருப்பித்தர வேண்டிய கடன்களில் ரூ பத்து லட்சத்திற்கும் அதிகமான தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மறுபுறம், விவசாயிகள் கடும் நெருக்கடியில் இருந்தபோதும், அவர்களுக்கு கடன் நிவாரணம் அரசால் மறுக்கப்படுகிறது. பெருமுதலாளி சுபாஷ் சந்திராவிற்கு சாதகமான தீர்ப்பு, வங்கிகளிலும் இதர நிறுவனங்களிடமிருந்தும் பெரும் கடன் வாங்கி அவற்றை திருப்பி செலுத்தாமல், திவால் அறிவிப்பு கொடுத்து தப்பிக்க முயல்வோரை தடுக்கும் சட்டமாக தாராளமய ஆதரவாளர்களால் விளம்பரப்படுத்தப்பட்ட திவால் சட்டத்தின் (Insolvency and Bankruptcy Code) கீழ் தரப்பட்டுள்ளது என்பது, தாராளமய ஆட்சியில் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக சட்டம் எப்படியெல்லாம் வளைக்கப்படும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. 2016இல் இச்சட்டம் அமலுக்கு வந்தது முதல் இதுவரை 1419 தீர்ப்புகள் மூலம் திருப்ப வேண்டிய கடன் தொகை 14.14 லட்சம் கோடி ரூபாய், ஆனால் தேசீய தீர்ப்பாயத்தின் தீர்ப்புகள் மூலம் கிடைத்தது 4 லட்சம் கோடி மட்டுமே. இது தவிர, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்படி 2015-16 முதல் 2025-26 வரையிலான காலத்தில் வங்கிகள் ரூ 18,75,593 கோடி ரூபாய் மதிப்புக்கு வாராக்கடன் என்று அறிவித்துள்ளனர். மக்களின் உழைப்பால் உருவாகும் செல்வத்தை அப்பட்டமாக கார்ப்பரேட் கம்பனிகள் கொள்ளை அடிப்பது பாஜக ஆட்சியில் சட்டபூர்வமாக ஆக்கப்பட்டுள்ளது. திவாலாகும் நிறுவனங்களின் சொத்துக்களை மிக மலிவான விலையில் அதானி, அம்பானி போன்ற மெகா முதலாளிகள் கையகப்படுத்திக்கொள்ளவும், பாஜக அரசு பாதை போட்டு கொடுத்துள்ளது. இவை தவிர, டாடா உள்ளிட்ட ஒரு சில பகாசுர பெருமுதலாளி கம்பெனிகளுக்கு பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு தாரை வார்த்துள்ளது.
சுயச்சார்பு பற்றிய பாஜக அரசின் கதையாடலும் இதனை வெளிப்படுத்துகிறது. “ஆத்ம நிர்பார்” என்ற பெயரில் வலம் வரும் இக்கதையாடல், இந்தியாவின் சுயச்சார்பை குழிதோண்டிப் புதைக்கும் நடைமுறையை மறைக்க பயன்படுத்தப்படுகிறது. பன்னாட்டு கம்பெனிகளுக்கும் இந்திய பெருமுதலாளிகளுக்கும் இந்தியாவின் இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் எளிதில் கையகப்படுத்த பாதை போடும் நடவடிக்கைகள் இதில் அடங்கும். இவை, இந்தியாவின் பழங்குடி மக்களை, அவர்கள் காலங்காலமாய் வாழ்ந்துவரும் வனப்பகுதிகளில் இருந்து அகற்றி, அங்குள்ள இயற்கை மற்றும் கனிம வளங்களை சுருட்டிக் கொள்ள ஏகபோகங்களுக்கு உதவுகின்றன. உயர் கல்வியையும் ஆராய்ச்சி நிறுவனங்களையும் பலவீனப்படுத்தி, அவற்றை ஆர் எஸ் எஸ் கூடாரங்களாக மாற்றுவதும் அறிவியல் அடிப்படையிலான சுயச்சார்பு முயற்சிகளுக்கு நேர் எதிரானது.
வேலையின்மை, பணவீக்கம்
நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் மொத்த உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதம் 6 – 6.5 சதவிகிதமாக இருக்கும் என்றும், இது பெரும் சாதனை என்றும் ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால் இது மிகையான மதிப்பீடு என்பதே உண்மை. மேலும் இந்த வளர்ச்சியின் தன்மை என்ன? வேலையின்மை அதிகரித்துள்ளது. 15 முதல் 29 வயதுவரை உள்ள இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் 15%க்கு மேல் உள்ளது. உழைப்பவர்களில் பெரும் பகுதியினர் முறை சாரா பணிகளில் உள்ளனர். மிகக் குறைந்த கூலி, நீண்ட பணி நேரங்கள், பணி உத்தரவாதம் இல்லாத நிலை என்பது கிக் (gig) தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி அநேகமாக அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தும் என்ற நிலைமை உள்ளது. சுருங்கச்சொன்னால், இந்தியப் பொருளாதாரத்தில் பெருமுதலாளிகளின் லாபங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. மக்களின் வாங்கும் சக்தி பலவீனமாக உள்ளது. மக்களின் உழைப்பு ஒருபுறம் கொள்ளை லாபம் ஈட்ட சுரண்டப்படுகிறது. மறுபுறம் வேலை வாய்ப்பின்றி வீணடிக்கப்படுகிறது. முதலாளிகளும் இதர செல்வந்தர்களும் பெறும் கொள்ளை லாபத்தில் கணிசமான பகுதி வெளிநாடுகளில் முதலீடு செய்யப்படுகிறது. பங்கு சந்தைகளிலும் இதர நிதிச் சந்தைகளிலும் ஊக வணிக நடவடிக்கைகளில் வீணடிக்கப்படுகிறது. இந்தியாவில் இந்திய உழைப்பாளி மக்களால் உருவாக்கப்படும் உபரிகள் இந்திய மக்களின் வளர்ச்சிக்கு மிகக் குறைந்த அளவிற்கே பயன்படுகின்றன.
நாட்டின் உற்பத்தியை சாத்தியமாக்கும் உழைப்பாளிகளின் வருமானம் உயரவில்லை. வரிச்சுமையின் பெரும்பகுதியை அவர்கள்தான் சுமக்கிறார்கள். பண அளவில், கூலியும், சுயதொழில் மற்றும் விவசாய வருமானமும் சிறிது கூடினாலும், விலைவாசி உயர்வினால் அவை அரிக்கப்படுகின்றன.
இந்திய மக்கள் சந்திக்கின்ற பொருளாதாரப்பிரச்சினைகளில் முக்கியமானது பணவீக்கம். தாராளமய கொள்கைகளின் “சிக்கன நடவடிக்கைகள்” ஒருபுறம் வளர்ச்சியை மட்டுப்படுத்தி, கிராக்கியை குறைத்து வேலையின்மைக்கு காரணமாக அமைகின்றன. இதன் பகுதியாக அரசு மூலம் உழைக்கும் மக்களுக்கு கிடைக்கும் மானியங்கள் தொடர்ந்து வெட்டப்படுகின்றன. உணவு, உரம், எரிபொருள் ஆகிய மூன்று முக்கிய மானியங்களின் அளவை தேச வருமானத்தின் சதவிகிதமாக கணக்கிட்டால், அவை குறைந்துகொண்டு வருவதை காண முடியும். அரசின் வரவு-செலவு பற்றாக்குறைக்கு முக்கிய காரணம், சுரண்டும் வர்க்கங்களுக்குத் தொடர்ந்து அளிக்கப்படும் வரிச் சலுகைகள். அரசின் முக்கிய செலவுகளில் ஒன்று வாங்கிய கடன்களுக்கு அரசு செலுத்தும் வட்டி. இந்த வட்டி பெரும்பாலும் செல்வந்தர்களுக்கே சென்று சேருகிறது. அதை கட்டுவதற்காக அரசின் இதர செலவுகள் வெட்டப்படுகின்றன. இவற்றின் மொத்த விளைவு, செல்வங்கள் சுரண்டும் வர்க்கத்தினரிடம் குவிவதும், உழைப்பாளி மக்கள் விலைஉயர்வாலும் வேலைஇன்மையாலும் குறைந்த வருமானத்தாலும் பாதிக்கப்படுவதுதான். இதுதான் மோடி ஆட்சியில் தீவிரமாக நடக்கிறது. இன்றைய உலக நெருக்கடி சூழலில், குறிப்பாக மேற்கு ஆசிய போர் பின்னணியில், இது மேலும் கடுமையாக விலைவாசி உயர்வுக்கு இட்டுச்செலகிறது. கடந்த பல மாதங்களாக அமெரிக்க டாலர் மதிப்பு பொதுவாக சரிந்துவந்தாலும், இந்தியா ரூபாய்க்கு எதிராக அதன் மதிப்பு கூடிவருகிறது. இதுவும் பணவீக்கத்திற்கு காரணமாக அமைகிறது. தற்சமயம் இந்திய மக்கள் கடும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகரித்துவரும் ஏற்றத்தாழ்வுகள்
பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் முதலாளித்துவ அமைப்பில் தீவிரமாக அதிகரிக்கும் என்பது மார்க்சீய பால பாடம். மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் முதலாளித்துவ வளர்ச்சியின் பொதுவிதி, துருவத்தின் ஒரு முனையில் செல்வங்கள் குவிவதும், மறுமுனையில் துயரங்கள் குவிவதுமே என்று ரத்தின சுருக்கமாக கூறியுள்ளார். இந்தியாவில் இது கண்கூடு. ஒரு ஆய்வின்படி 2022-23இல் செல்வத்தின் உச்சாணிக்கொம்பில் அமர்ந்திருக்கும் 1% செல்வந்தர்கள் நாட்டின் மொத்த வருமானத்தில் 23%ஐயும் மேல்மட்ட 10% செல்வந்தர்கள் நாட்டின் மொத்த வருமானத்தில் 58%ஐயும் பெற்றனர். மறுபுறம் நாட்டின் சரிபாதிமக்கள் மொத்த வருமானத்தில் 15%தான் பெற்றனர். அதை ஆண்டில் சரிபாதி மக்களின் ஆண்டு வருமானம் ரூ 71000 ஆகவும், மேல்மட்ட 1% மக்களின் ஆண்டு வருமானம் ரூ 53 லட்சத்திற்கு அதிகமாகவும், மேல்மட்ட 10% மக்களின் வருமானம் ரூ 13 லட்சத்திற்கு அதிகமாகவும் இருந்தது.
மொத்த செல்வக்குவிப்பு பற்றி ஆய்வு தரும் தரவுகள் வருமாறு: நாட்டின் சரிபாதி மக்களிடம் மொத்த சொத்தில் 6.4% மட்டுமே இருந்தது. மேல்மட்ட 1 சதவிகிதத்தினர் கைகளில் நாட்டின் மொத்த சொத்தில் 40% இருந்தது. மேல்மட்ட 10 சதவிகிதத்தினர் கைகளில் 60% இருந்தது. இதுதான் பாஜகவின் நவ தாராளமய ஆட்சியில் இந்தியாவின் நிலை.
நிறைவாக
உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பறித்தும், அவர்களை கடுமையாக சுரண்டியும், செல்வந்தர்களின் செல்வக்குவிப்பை ஊக்குவித்தும் சாத்தியமாக்கியும் ஆட்சி செய்யும் பாஜக நவதாராளமய அரசை மக்கள் போராட்டங்கள் மூலமாக அகற்றுவோம். ஜனநாயக இந்தியாவை நோக்கிப் பயணிப்போம்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply