
உலக சோஷலிசத்திற்கு பிரடெரிக் எங்கெல்ஸ் ஆற்றிய பங்கு
பேரா. ஆர். சந்திரா
“சோஷலிசம் என்பது தத்துவஞானிகளின் கற்பனையான கனவு அல்ல. அது முதலாளித்துவத்திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையே நடக்கும் வரலாற்று போராட்டத்தின் தவிர்க்க முடியாத விளைவு” என்று பிரடெரிக் எங்கெல்ஸ், கற்பனாவாத சோசலிஸமும் அறிவியல்பூர்வ சோசலிஸமும் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
சோஷலிசம் என்பது உற்பத்தி சாதனங்கள் மற்றும் சொத்துக்கள் தனியாரின் உடைமையாக இருப்பதற்கு பதிலாக, சமூகம் மற்றும் அரசின் உடைமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு அரசியல் மற்றும் பொருளாதார தத்துவம் ஆகும். இதன் முக்கிய நோக்கம் தனி நபர் லாபத்தை தாண்டி, சமூகத்தில் உள்ள அனைவருக்கும் சமமான வாய்ப்பகள் மற்றும் அடிப்படை தேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதாகும். இதன் மூலம் நிலம் , தொழிற்சாலைகள் போன்ற உற்பத்தி சாதனங்கள் தனியாருக்கு சொந்தமாக இல்லாமல், அரசாங்கம் மற்றும் மக்களின் கூட்டு பொறுப்பில் இருக்கும். அவரவரின் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படும். இதனால் செல்வம் ஒரு சிலரிடம் குவிவது தடுக்கப்படும். இத்தகைய ஒரு சமுதாயத்தை படைப்பத்தில் எங்கெல்ஸ் மிகப் பெரிய பங்கை செலுத்தி இருக்கிறார்.
எங்கெல்ஸ் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒரு சிறந்த தத்துவ மேதை மட்டுமல்ல. அவர் ஒரு அரசியல் பொருளாதார ஆய்வாளர், சோஷலிச சிந்தனையாளர், புரட்சியாளர். உலக வரலாற்றை மாற்றி அமைத்த பல முக்கிய நூல்களை எழுதியவர். அவர் காலத்தில் ஐரோப்பாவில் நிகழ்ந்த பல புரட்சிகர போராட்டங்களில் அவரும் மாமேதை கார்ல் மார்க்சும் இணைந்து பங்கேற்றனர். இவ்விருவரும் கம்யூனிச உலகின் இரட்டையர்கள் என்றே கருதப்படுபவர்கள். மார்க்ஸ் உருவாக்கிய பல முக்கிய தத்துவங்களில் எங்கெல்சுக்கும் பங்கு உண்டு. மார்க்சும் எங்கெல்சும் இணைந்து படைத்த கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்ற அற்புதமான அறைகூவலை 1848இல் முன்வைத்தது. மார்க்சும் எங்கெல்சும் இணைந்து பல்வேறு நூல்களை எழுதியுள்ளனர். இவற்றில் பலவும் உலகெங்கும் கடந்த 178 ஆண்டுகளில் எண்ணற்ற புரட்சியாளர்களுக்கு அறிவியல் வெளிச்சமும் புரட்சிகர உத்வேகமும் அளித்து வந்துள்ளன.
எங்கெல்ஸ் 1820ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி, அன்றைய ஜெர்மனியின் பார்மென் நகரில் வசதியான முதலாளித்துவ குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை பருத்தி ஆலை அதிபர். இளம் வயதிலேயே, எங்கெல்சுக்கு மத நம்பிக்கைகள், சடங்குகள் மீது நிறைய கேள்விகள் இருந்தன. அவற்றின் மீது நம்பிக்கை இல்லை. பொருள் முதல்வாதத்தின் மீது அவருக்கு பெரும் ஈடுபாடு இருந்தது. பெர்லின் பல்கலைகழகத்தில் படித்தபொழுது, உலகறிந்த ஜெர்மானிய தத்துவ அறிஞரான ஹெகலின் தத்துவங்கள் அவரை கவர்ந்தன. அங்கு இருந்த சில இளம் ஹேகலியர்களுடன் சேர்ந்து, அவர்கள் அமைத்திருந்த குழுவில் தீவிரமாக பங்கேற்றார். ஜெர்மானிய ராணுவத்திலும் பணியாற்றினார். ராணுவம் பற்றிய நல்ல புரிதல் பெற்றார். பின்னர் இப்புரிதலை தனது ஆய்வுகளில் பயன்படுத்தியுள்ளார். ராணுவம் மற்றும் போர் பற்றியும் நிறைய எழுதி இருக்கிறார்.
திருப்புமுனை
எங்கெல்சின் தந்தை 1842இல் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் பருத்தி ஆலையில் பணி புரிய அவரை அனுப்பி வைத்தார். அந்த ஆலையில் அவரது குடும்பத்திற்கு பங்கு இருந்தது. அந்த ஆலையில் பணியாற்றிய பொழுது அவருக்கு கிடைத்த அனுபவங்கள் அவரது வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அங்குதான், மேரி பர்ன்ஸ் என்ற ஐரிஷ் தொழிலாளியை சந்தித்தார். இருவருக்கும் திருமணத்தில் நம்பிக்கை இல்லை . இருபது ஆண்டுகள் எங்கெல்ஸ் மேரியுடன் இணைந்து வாழ்ந்தார். உழைக்கும் வர்க்கத்தின் துயரமான வாழ் நிலைமைகளை புரிந்துகொள்ள மேரியுடன் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு சென்று அவர்களுடன் உரையாடுவார். உழைக்கும் மக்கள் மீது அவருக்கு பெரும் நேசமும் மரியாதையும் இருந்தது. இங்கிலாந்து தொழிலாளர்கள் பற்றி விரிவான ஆய்வை மேற்கொண்டார். 1845 ல் தனது ஆய்வை ஒரு நூலாக வெளியிட்டார். இந்த புத்தகத்தின் பெயர் இங்கிலாந்தில் உழைக்கும் வர்க்கத்தின் வாழ்நிலமைகள் [Conditions of the Working Class in England] என்பதாகும். அந்த புத்தகம் அன்று இங்கிலாந்தில் நிலவிய முதலாளித்துவ வளர்ச்சி மற்றும் அதன் பிடியில் தொழிலாளர்களின் மிக மோசமான வாழக்கை நிலையை படம் பிடித்து காட்டியது. உழைக்கும் வர்க்கம் படும் தூயரங்களை வெளிப்படுத்தியதோடு, உற்பத்தி சக்திகள், அவற்றின் கட்டமைப்பு, அரசியல் தத்துவம் என பல தளங்களில் தொழிலாளி வர்க்கம் மற்றும் அதன் எதிர்காலம் பற்றியுமான கம்யூனிஸ்ட் கோட்பாடுகளை உள்ளடக்கிய நூல் எனலாம்.
எங்கெல்ஸ்-மார்க்ஸ் சந்திப்பு
1844ஆம் ஆண்டு பொது உடமை வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டு, அந்த ஆண்டுதான் எங்கெல்ஸ் அவர்கள் கார்ல் மார்க்ஸை சந்தித்து, அவருடன் இணைந்து பணியாற்ற தொடங்கினார். அவர்கள் இருவரும் ஒரே மாதிரி சிந்தித்தனர். அவர்களிடையே பெரும் கருத்தொற்றுமை இருந்தது. அது மேலும் வளர்ந்தது. மார்க்ஸ் குடும்பத்தின் ஒரு முக்கிய அங்கத்தினராக எங்கெல்ஸ் மாறினார். மார்க்ஸின் குழந்தைகள் அவரை ‘ஜெனரல்’ என்றும் ‘ஏஞ்சல்’ [தேவதை] அங்கிள் என்றும் அழைப்பார்கள். மார்க்ஸ் குடும்பம் வறுமையில் வாடிய பொழுது, அவரது குடும்பத்திற்கு பேராதரவாக விளங்கியவர் எங்கெல்ஸ். மார்க்ஸ் – எங்கெல்ஸ் உறவு என்பது நட்பிற்கு இலக்கணமாக திகழ்கிறது. அவர்கள் இருவரும் இணைந்து சமூகத்தை அறிந்துகொள்ள மானுடத்திற்கே வழிகாட்டும் இயக்கவியல் பொருள் முதல்வாதம் என்ற அறிவியல் அணுகுமுறையை உருவாக்கினர். அவர்கள் கம்யூனிஸ்ட் லீகில் தீவிரமாக பணி புரிந்தார்கள். 1848ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மார்க்சும் எங்கெல்சும் இணைந்து உருவாக்கி உலகிற்கு அளித்த காலத்தில்தான் பல ஐரோப்பிய நாடுகளில் ஜனநாயக புரட்சிகள் வெடித்தன. புரட்சிகர நடவடிக்கைகளில் பங்கேற்றதால் எங்கெல்ஸ் இங்கிலாந்திற்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு அவர் தந்தைக்கு சொந்தமான கம்பனியில் வேலை செய்து, மார்க்ஸ் குடும்பத்திருக்கு நிறைய நிதி உதவி செய்தார். 1848இல் மார்க்சும் எங்கெல்சும் சேர்ந்து எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (Communist Manifesto) என்ற சிறு பிரசுரம் உலகையே புரட்டிப் போட்ட நூல் என்றால் மிகையில்லை. இந்த சிறிய புத்தகம் மானுட வரலாற்றில் வர்க்கப் போராட்டம் ஆற்றிய முக்கிய பங்கு பற்றி அற்புதமாகவும் சுருக்கமாகவும் விளக்கியது. முதலாளித்துவம் வெல்ல முடியாதது அல்லை என்றும், சோசலிச புரட்சி மூலம் தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவத்தை தூக்கி எறிய இயலும் என்பதையும் எடுத்துரைத்தது. உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்த நூல் அது என்று கூறலாம்.
1878இல் எங்கெல்ஸ்’ டூரிங்கிற்கு மறுப்பு’ என்ற நூலை எழுதினார். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உலக நடப்புகளை மார்சீய கண்ணோட்டத்தில் எப்படி அணுகுவது என்பதை விளக்கும் இந்த நூல் தத்துவம், அரசியல் பொருளாதாரம், சோஷலிசம் ஆகியவற்றை பற்றி ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்தும். இது எங்கெல்சின் மிக சிறந்த பங்களிப்பாகும். அதே போல, 1880 ல் கற்பனாவாத சோஷலிசம் மற்றும் அறிவியல்பூர்வ சோஷலிசம் என்ற முக்கியமான நூலை எங்கெல்ஸ் எழுதினார். சோஷலிசம் என்பது கற்பனை அல்ல. நடைமுறையில் சோஷலிச சமுதாயத்தை படைக்க முடியும் என்பதை விளக்கும் இந்த நூல் அவரின் ஒரு சிறந்த பங்களிப்பு ஆகும் . 1883இல் எங்கெல்ஸ் இயற்கையின் இயங்கியல் [“Dialectics of Nature – an Unfinished Collection of Essays”] என்ற நூலில் இயற்கை அறிவியலில் இயக்கவியலை எப்படி பயன்படுத்துவது உள்ளிட்ட பல முக்கிய தத்துவார்த்த கூறுகளை விளக்குகிறார். இதுவும் அவருடைய சிறந்த பங்களிப்புகளில் ஒன்றாகும்.
1884இல் எங்கெல்ஸ் எழுதிய “ குடும்பம், தனிசொத்து மற்றும் அரசின் தோற்றம் “ எனும் மிகவும் புகழ் பெற்ற நூல் இன்றும் மார்க்சீய வட்டத்திற்கு வெளியே இருப்பவர்களாலும் பெரிதும் பேசப்படும் நூலாகும். மானுடவியலாளர்களால் முக்கியமான நூலாக கருதப்படும் இந்த நூல், மனித குலம் தோன்றியது முதல் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏற்பட்ட மனித குலத்தின் பரிணாம வளர்ச்சி, குடும்ப அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள், தனி சொத்து உருவாகிய விதம், உற்பத்தி சக்திகளில் ஏற்பட்ட மாற்றங்கள், வர்க்க முரண்பாடுகள், இவற்றில் அரசின் பங்கு ஆகியவை பற்றிய விரிவான விளக்கங்களை கொண்டது. மாரக்சியத்தை கற்பதற்கான அடிப்படை நூல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. வரலாற்று பொருள் முதல்வாதம் பற்றிய தெளிவான புரிதலை இந்த நூல் கொடுக்கிறது. பெண் எப்படி அடிமையானாள் என்பதை விளக்குவதுடன், சோஷலிச சமுதாயம் பாலின சமத்துவத்திற்கு எப்படி வழிவகுக்கும் என்பதையும் இந்நூலில் எங்கெல்ஸ் விளக்குகிறார். பெண்ணியம் பற்றிய ஆய்வை மேற்கொள்வோருக்கு மிகவும் உதவியாக இருக்கும் இந்த நூல், மார்க்சிய அடிப்படையில், பெண்ணியத்தை புரிந்து கொள்ள உதவும் மிக சிறந்த படைப்பகும்.
1844இல் அரசியல் பொருளாதாரம் பற்றி எங்கெல்ஸ் எழுதிய ‘அரசியல் பொருளாதாரம் குறித்த விமர்சனம்’ [“Outlines of a Critique of Political Economy”] மார்க்ஸ் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கூறப்படுகிறது. மார்க்சிய கோட்பாடுகளுக்கு அடித்தளம் என்று கருதப்படும் இந்த கட்டுரை அரசியல் பொருளாதாரத்தை அணுக வேண்டிய முறையை விளக்குகிறது.
எங்கெல்ஸ், பிரெடெரிக் ஆஸ்வால்ட் என்ற புனைபெயரிலும் நிறைய எழுதி இருக்கிறார். அவரது கருத்துக்கள் சர்ச்சைக்குரியவை என அவரது குடும்பத்தினர் கருத்தியதால், அவர்களுக்கு தெரிய வேண்டாமென்ற நோக்கத்துடன் அவர் புனை பெயரில் எழுதினார்.1839இல் அவர் எழுதிய “Letters from Wuppertal” என்ற அவரது படைப்பு அன்று நிலவிய சமூக கொடுமைகளை படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்தது. குழந்தை உழைப்பு சுரண்டல், மது போதை பழக்கங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு புகை, அதன் விளைவுகள், போன்ற விஷயங்களை தொழிற்சாலை முதலாளிகளின் மத போதனைகள், இரட்டை வேஷங்களுடன் இணைத்து சமூக அவலங்களை அம்பலப்படுத்தினார். இந்த கால கட்டத்தில், கிறித்துவத்தின் அடிப்படை கோட்பாடுகளை கேள்விக்கு உட்படுத்தினார். இதனால், அவருக்கும் அவரது பெற்றோர், குடும்பத்தினர் ஆகியோருக்கும் கடும் முரண்பாடு ஏற்பட்டது. குடும்பத்திலிருந்து பிரிந்து சென்று விட்டார். இறுதிவரை, எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், தனது கொள்கையில் உறுதியாக நின்று விட்டார் .
மார்க்ஸ் இறந்த பின்பும் தொடர்ந்த எங்கெல்ஸின் மகத்தான பணிகள்
1883இல் மார்க்ஸ் மறையும் பொழுது அவரது ஆகச் சிறந்த படைப்பான மூலதனம் நூல் முழுவதும் உடனடியாக பிரசுரிக்கும் நிலையில் இல்லை. அதன் பாகம் 1 ஒன்று மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது. அடுத்த இரு பாகங்களும் முழுமையான வாதங்களை கொண்டதாக இருந்தாலும் குறிப்புகள் என்ற தன்மையில் அவற்றின் பகுதிகள் இருந்தன. இக்குறிப்புகளை மிகுந்த கவனத்துடன், மார்க்ஸின் கருத்துக்களை இம்மி அளவும் மாற்றாமல் இரு பாகங்களாக கோர்வையாக தொகுத்து பிரசுரிக்க முக்கிய காரணமாக இருந்தவர் எங்கெல்ஸ். இவற்றோடு, ‘உபரி மதிப்பு பற்றிய தத்துவங்கள்’ (Theories of Surplus Value) என்ற நூலுக்காக மார்க்ஸ் தயார் செய்திருந்த குறிப்புகளையும் புத்தக வடிவில் மூன்று பாகங்களில் பிரசுரமாக கொண்டு வந்ததும் எங்கெல்சின் மிகச்சிறந்த பங்களிப்பாக்கும்.
படைப்பாளி மட்டுமல்ல எங்கெல்ஸ், அவர் ஒரு மாமனிதர்
முதலாளித்துவத்திற்கு மாற்று இல்லை என வாதிப்போர் மத்தியில், சோஷலிசம் ஒரு நல்ல மாற்று என்பதை தனது படைப்புகள் வாயிலாக அழுத்தமாக எங்கெல்ஸ் பதிவு செய்துள்ளார். சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இல்லாத, சுரண்டல் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க இயலும் என்பதையும், அத்தகைய சமுதாயத்தை கட்டமைக்க செய்ய வேண்டியவை யாவை என்பதையும் தனது படைப்புகளில் தெளிவாக விளக்கி உள்ளார். மார்க்சியம் கற்போர் அனைவரும் எங்கெல்சின் படைப்புகளை கற்பதன் மூலம் சமூகம், அரசியல் பொருளாதாரம் பற்றிய அறிவியல் பூர்வமான அணுகுமுறையை கற்றுக்கொள்ள முடியும். பெண்விடுதலைக்கு வித்திட்டவராக, நட்பிற்கு இலக்கணமாக திகழ்ந்தவராக, சிறந்த ஆய்வாளராக, எழுத்தாளராக சோஷலிசத்திற்கு அளப்பரிய பங்கை செலுத்திய எங்கெல்சின் படைப்புகளை மீண்டும் கற்போம். கற்பிப்போம்.
1895ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் நாள் தனது இறுதி மூச்சை நிறுத்தும்வரை, தன்னைச் சிறிதும் முன்நிறுத்திக் கொள்ளாமல், ஏராளமான படைப்பு பணிகளுடன், ஜெர்மானிய, இதர ஐரோப்பிய சோசலிச இயக்கங்களுடன் தொடர்பில் இருந்து, வழிகாட்டிய பெரும் புரட்சியாளராக எங்கெல்ஸ் விளங்கினார்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply