
முதலாளித்துவ நெருக்கடியின் பாரமும், பாட்டாளிகள் திருப்பியடிக்கும் தேவையும்!
சுதீப் தத்தா
‘சில வாரங்களில், பத்தாண்டு கால மாற்றங்கள் நடப்பதுண்டு’ – நிச்சயமாக!; முதலாளித்துவத்தின் கோட்டை கொத்தளங்கள் நெருக்கடியில் நடுங்கிக் கொண்டுள்ளன. அதனால் தனது அட்டூழியங்களை வேகப்படுத்திக் கொண்டுள்ளது அமெரிக்க ஏகாதிபத்தியம். தன்னுடைய உள் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக, நம்முடைய வீடுகளுக்குள் எட்டிக் குதிக்கவும் அமெரிக்கா தயங்குவதில்லை; இறையாண்மை கொண்ட நாட்டில் நுழைந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரைக் கைது செய்துவிட்டு நிர்வாகத்தைக் கைப்பற்றவும் அது முயற்சிக்கிறது. வரி விதிப்பையும் ஒரு ஆயுதமாக்கி, தன்னுடைய நெருக்கடியை மற்ற நாடுகளுக்கு மடைமாற்றுகிறது. பெருநகரங்களின் மையத்தை இந்த நெருக்கடி தாக்கியுள்ளது.
இந்நேரத்தில், இந்தியா தன்னுடைய வெளியுறவுக் கொள்கைகளில் முற்றிலும் தோல்வியுற்றுள்ளது. தனியார் ஏகபோக தன்னலக் குழுக்களின் நலன்களை மட்டுமே ஒரே நோக்கமாக மனதில் வைத்தபடி, பிடிவாதமான வழியில் நிலைமையைச் சமாளித்துவிடலாம் என முயற்சிக்கிறது. இதற்காக முதலில் தாரைவார்க்கப்படுவது இந்திய மக்களின் நலன்களே. உலகளாவிய குழப்பங்களின் பின்னணியில், இந்திய அரசாங்கம் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிரான சட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றுவதில் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டுள்ளது.
மக்கள் தலையில் நெருக்கடிச் சுமை
அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான கூட்டணியில் சமரசங்களை மேற்கொண்டிருக்கும் இந்திய ஏகபோக நிறுவனங்களும், நெருக்கடியின் சுமையை இந்திய மக்களின் தலைக்கு மடைமாற்றுவதில் வேகம் காட்டுகின்றன. இந்தப் பின்னணியில்தான், 2025 நவம்பர் 21 அன்று, ஒன்றிய அரசால் அறிவிப்பு செய்யப்பட்ட தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் நான்கையும் பார்க்க வேண்டும். இந்தச் சட்டங்கள் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுவரப்போவதாகவும், அதனால் உலகிலேயே மேம்படுத்தப்பட்ட வேலை நிலைமையைத் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தவிருப்பதாகவுமே பெரும்பாலும் கூறப்பட்டது.
ஆனால் உண்மையான காரணம் என்ன? தொழிலாளர் வருமானத்தை வெட்டிச் சுருக்கி, லாப விகிதத்தை உயர்த்துவதும், அதன் மூலம் தற்காலிகமாக நெருக்கடியைத் தள்ளிப்போடுவதும்தான். நூறு நாட்கள் ஊரக வேலைவாய்ப்பை உறுதியளிக்கும் சட்டத்தை ரத்து செய்வது, இந்திய தொழிலாளர்களின் ஊதியங்களை வெட்டிச் சுருக்கும் அதே மோசமான செயலின் இன்னொரு அம்சமாகவே பார்க்க வேண்டும்.
கோபமுற்ற தொழிலாளர்களும், விவசாயிகளும், இவற்றிற்கு எதிர்வினையாக நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர். வரும் பிப்ரவரி 12, 2026 அன்று, நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
இந்தத் தொழிலாளர் சட்டத் தொகுப்புக்களின் திணிப்பு நடவடிக்கை, நம் நாட்டில் பாசிசச் சக்திகளின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதும் உண்மைதான். சாதாரண வழிமுறைகளால் தன்னுடைய நெருக்கடிகளைத் தீர்க்கமுடியாத போதெல்லாம், முதலாளித்துவம் தனது அரசியல் கருவியாகப் பாசிசத்தைக் கையிலெடுப்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் பின்னணியாக அமைந்த திட்டவட்டமான வரலாற்று, அரசியல் பொருளாதார அம்சங்களைப் புரிந்துகொள்வது அவசியமாகும்.
வரலாற்றுப் பின்னணி
இந்தியாவில் உள்ள தொழிலாளர் சட்டங்களைத் தொகுப்புகளாக மாற்றும் திட்டம் இரண்டாவது தேசியத் தொழிலாளர் ஆணையத்தில் தொடங்கியதாகும். அதற்கு முன் நடைபெற்ற முதல் தேசியத் தொழிலாளர் ஆணையம் (1966–69), தொழிலாளரிடமிருந்து உபரியை மென்மையான வழிமுறைகளில் எடுத்துக்கொள்வதற்கான ஒழுங்குபடுத்தல்களைச் செய்தது என்றாலும், அதற்கு அடிப்படையாக நலன்புரி அரசாங்கத்தின் அம்சங்கள் அமைந்திருந்தன. புதிதாக விடுதலையடைந்த ஒரு நாட்டில், முதலாளித்துவத்தைக் கட்டமைக்க இந்த நலன்புரி அம்சங்கள் தேவையாக இருந்தன. இதற்கு நேர்மாறாக உருவாக்கப்பட்ட இரண்டாவது தொழிலாளர் ஆணையம் (1999–2002), தொழிலாளர்களை ஒரு முக்கிய பொருளாதார உள்ளீடாக மட்டுமே கருதியது. மேலும் ஒழுங்குபடுத்தும் விதிகளைச் சந்தைச் சீர்குலைப்பு நடவடிக்கையாகக் கருதியது. செயல்திறன் என்ற பெயராலும், வணிகத்தை எளிதாக்குவதன் பெயராலும் பாதுகாப்புச் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்திட முயற்சித்தது; முதலீடுகளைப் பெருக்குவதற்கு வசதிப்படுத்தும் முகமையாக அரசுகளை மறுவரையறை செய்தது. அனைத்துத் தொழிலாளர் சட்டங்களையும் நான்கு அல்லது ஐந்து சட்டத் தொகுப்பு விதிகளாக மாற்றுவதற்கான ஆணையத்தின் முன்மொழிவைத் தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்தன. இது 2003 இல் வெகுஜன எதிர்ப்புப் போராட்டங்களுக்கும், 2004இல் ஆட்சிமாற்றத்திற்கும் வழிவகுத்தது. அத்துடன் தொழிலாளர் சட்டத் தொகுப்பாக்கல் நடவடிக்கைகள் தள்ளிவைக்கப்பட்டன.
அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் துண்டுதுண்டாகச் சீர்திருத்தங்களைத் தொடங்கின. இருப்பினும் நடப்பில் இருந்த சட்டங்களை ஒட்டுமொத்தமாகத் தாக்கவில்லை. மோடி அரசு அதிகாரத்திற்கு வந்த 2014 முதல், தொழிலாளர் சட்டங்களைத் தொகுப்பாக்கும் செயல்முறை மீண்டும் தொடங்கியது; 2019 மற்றும் 2020 இல் நாடாளுமன்றத்தில் சட்டத் தொகுப்புகள் நிறைவேற்றப்பட்டாலும், நாடு முழுவதும் பரவலாக எழுந்த எதிர்ப்புகள், போராட்டங்களின் காரணமாக 2025 கடந்த நவம்பர் மாதம் வரையில் அந்தச் சட்டங்கள் அறிவிப்பு செய்யப்படவில்லை.
தவறான தத்துவ தர்க்கம்
ஆனால், அரசின் தற்போதைய வேகத்திற்கு பின்னுள்ள தவறான தர்க்கத்தைத் திட்டவட்டமாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முதலில் தொழிலாளர் சந்தையில் நெகிழ்வுத்தன்மை என முன்வைக்கப்படும் கருத்தின் அடிப்படையாக அமைந்த தத்துவக் கட்டமைப்பை ஆராய வேண்டும். தொழிலாளர்களுக்கு நிரந்தரமான வேலை வழங்கப்படும்போது அவர்களின் பேர வலிமை கூடுகிறது, ஊதியமும் அதிகமாகிறது. எனவே, வேலைவாய்ப்பில் நிரந்தரத்தன்மையைக் குறைத்தால் தொழிலாளர்களின் திறன் தூண்டப்படுவதாகவும், வேலைவாய்ப்பு உறுதியளிக்காத நிலைமை முதலீட்டை ஈர்க்கும் என்றும், அதனால் வேலை அதிகரிக்கும் என்றும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
பல காரணங்களின் அடிப்படையில் இந்த வாதம் தவறானதாகும்: முதலில், இந்தியாவில் நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டங்கள், மிகச் சிறு எண்ணிக்கையிலான தொழிலாளர்களை மட்டுமே உள்ளடக்கியதாகும். ஏனென்றால் 90 சதவீதத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் அமைப்புசாராத் துறையிலோ, சுயதொழில் துறையிலோ உள்ளனர். எனவே அவர்கள் தொழிலாளர் சட்ட வரம்பின் எல்லைக்கு வெளியில் உள்ளனர். இரண்டாவது, பொதுத்துறையிலும், தனியார் துறையிலும் ஒப்பந்த அடிப்படையிலும், நிரந்தரமற்ற முறையிலும் பெரும்பாலானோர் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இந்த நிலைமையிலும், வரலாற்றில் காணாத அதிக வேலையின்மை நிலைமையை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. எனவே நெகிழ்வுத்தன்மையால் வேலைவாய்ப்பு அதிகரிக்கவில்லை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். 2014 ஆம் ஆண்டிலேயே ராஜஸ்தான் அரசு தொழிலாளர் சட்டங்களை, இப்போதைய தொகுப்புச் சட்டங்களுக்கு ஏற்ற விதத்தில் திருத்தியமைத்தது. இருந்தாலும் கூட அமைப்புசார் வேலைவாய்ப்பில் கணிசமான வளர்ச்சி ஏற்படவில்லை என்பது இங்கு குறிப்பிட்டுக் கூறவேண்டியுள்ளது.
உண்மையில், நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்தும் இந்தக் கோட்பாடு, சேய் என்பவரின் விதிகளின் அடிப்படையில் பரப்பப்பட்ட தவறான கருதுகோளில் இருந்து எழுந்ததாகும். எல்லா லாபமும், எல்லா உபரியும் முதலாளிகளால் உடனடியாக மீண்டும் முதலீடு செய்யப்பட்டுவிடும் என்ற எதிர்பார்ப்பில் அந்த விதி அமைந்திருக்கிறது. தங்களுக்குக் கிடைக்கும் உபரியை வைத்து முதலாளிகள் கூடுதல் முதலீடும், கூடுதல் வேலையையும் ஏற்படுத்துவார்கள் என்று அது நம்புகிறது. ஆனால் உண்மையில் பிற நிதித்துறைகளில் கிடைப்பதை விடவும் கூடுதலான வருவாய் இருந்தால் மட்டுமே முதலாளிகள் உற்பத்தித் துறையில் முதலீடு செய்கிறார்கள். எனவே, முதலீட்டின் ‘விலங்கு உணர்வை’ (animal spirit) அனைத்துத் துறைகளிலும் தொடர்ந்து தூண்ட வேண்டுமானால், மூலதனத்திற்கான வருமானம் எல்லாத் தொழில்களிலும் சமமாக அதிகமாக இருக்க வேண்டும்; அதற்காக, அனைத்துத் துறைகளிலும் ஊதியச் செலவுகள் குறைக்கப்பட வேண்டும். ஆனால், இது மற்றொரு நெருக்கடியை உருவாக்கும் — நுகர்வுக் குறைவு மற்றும் அதிக உற்பத்தியின் நெருக்கடி.
தொடரும் ஆலை மூடல்
அது பற்றிப் பேசுவதற்கு முன், இந்தியாவின் தொழில்துறை பற்றிய உண்மை நிலைகளைப் பார்ப்பது அவசியம். பல ஆண்டுகளாகவே, இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி கடுமையான மந்த நிலையில் இருக்கிறது. தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு எண், 14 மாதங்களில் மிகவும் பலவீனமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த மந்த நிலைக்கு இணையாக, தொழில் நிறுவனங்கள் மூடப்படும் போக்கும் அமைந்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 2.04 லட்சத்துக்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு மூடப்பட்டுள்ள நிறுவனங்களில் பணியாற்றி வேலையிழந்த தொழிலாளர்களை மீட்டெடுப்பதற்கான எந்தத் திட்டமும் அரசிடம் இல்லையென்பது தெளிவு. முதலீட்டில் குறைவு ஏற்படுவதை நியாயப்படுத்த, வருமானத்தில் சரிவு ஏற்படுவதைக் காரணமாகச் சொல்கின்றனர். ஆனால், இந்தியாவின் பெருநிறுவனங்களின் லாபம் 2023-24 நிதியாண்டுக் காலத்தில், கடந்த 15 ஆண்டுகளின் உச்சத்தை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பெருநிறுவனங்களை ஆதரிக்கும் மோடி
உண்மையில், அரசின் பொருளாதாரக் கொள்கைகள் பெருநிறுவனங்களின் லாபத்திற்குச் சாதகமாக இருப்பதைத் தெளிவாகப் பார்க்க முடியும். இது 2025 நிதியாண்டில் மட்டும் ₹58,000 கோடிக்கும் அதிகமான பொது துறை வங்கிக் கடன் தள்ளுபடியானது, 2015-16 நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரை மொத்தம் ₹12.08 லட்சம் கோடி வரை இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது ஆகியவற்றில் பிரதிபலிக்கிறது. பெரிய அளவில் கடன் வாங்கிவிட்டுத் திரும்பச் செலுத்தாதவர்களால் ஏற்படும் மொத்தச் சுமையைப் பொதுமக்கள் மீது மாற்றுவதையே இது காட்டுகிறது. இவ்வாறான நிதிப் பரிமாற்றங்கள் தவிர, வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் என்ற பெயரில் பொதுப் பணத்தைத் தனியார் பெருநிறுவனங்களுக்கு வழங்கிடும் ஊக்கத் திட்டங்களையும் அரசு தொடங்கியுள்ளது. குறிப்பாக, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்திட்டம் (ELI) ₹99,446 கோடி ஒதுக்கீட்டுடன், முதலீடு, தொழில்நுட்ப மேம்பாடு அல்லது வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் மிகச் சிறிய அளவு பொறுப்பை மட்டுமே வழங்கிவிட்டு, பெரிய அளவில் மானியங்களை வழங்குவதாக அமைகிறது.
இப்படியாக விரிவான சலுகைகள் இருந்தபோதிலும், 2022-23 ஆண்டில் உற்பத்தித்திறன் 2.38% குறைந்தது. நிலையான மூலதனத்தின் மொத்த உருவாக்கத்தில் இயந்திரங்களின் பங்கு சுருங்கியுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள் தம்முடைய லாபத்தை நவீனமயமாக்கல் அல்லது தொழில்நுட்பத்தில் மறுமுதலீடு செய்யவில்லை. எனவே, உண்மையான தொழில்துறைப் பொருளாதாரமாக மாற்றுவதற்குப் பதிலாக, ஒரு தொகுப்பு மையமாகவே இந்தியா தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது.
அனைத்து ஊக்க நடவடிக்கைகளும் தொழில்துறை முதலீடாக மாற்றப்படவில்லை என உறுதியாகக் கூற முடியும்; காரணம் மிகவும் தனித்துவமானது — நவ தாராளமய கட்டமைப்பில், மூலதனத்தின் தீவிரமான குவிப்பு நடப்பதே அந்தக் காரணமாகும். வளர்ச்சியின் பலன்கள் கிட்டத்தட்ட முழுவதுமே, உச்சத்தில் உள்ள ஒரு சதவீதம் பேரால் கைப்பற்றப்படுகின்றன. உச்சத்தில் இருக்கும் 500 நிறுவனங்களுக்குள்ளேயே லாபத்தின் செறிவு முழுவதும் சென்று சேர்வது குறிப்பிடத்தக்க எச்சரிக்கையாகும். முதல் 10 நிறுவனங்களே மிக அதிக லாப விகிதத்தை அனுபவிக்கின்றன. அடுத்த 40-50 உயர் லாபத்தைப் பராமரிக்கின்றன. ஆனால் மீதமுள்ள 450 நிறுவனங்கள் போராடுகின்றனர். இந்திய முதலாளித்துவம் இப்போது ஒரு சில பெருநிறுவனக் குழுக்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டதாக உள்ளது. அவற்றின் லாபம், அந்த நிறுவனங்களுடைய மதிப்புச் சங்கிலியைக் கூடுமானவரை நெருக்கிப் பிழிவதைச் சார்ந்துள்ளது.
கட்டமைப்பில் நெருக்கடி
கட்டமைப்பு நெருக்கடி தென்படக்கூடிய இடம் இதுதான். அடுத்த நிலையில் இருக்கும் பெருநிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றுகிற, ஒப்பீட்டளவில் நல்ல ஊதியம் பெறக்கூடிய ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும் பலன்களைக் குறைப்பதன் மூலமாக மட்டுமே தமது லாபத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். ஆனால் இந்த ஊதியப் பகுதியைத் தாக்குவதால், விலைமதிப்பான பொருட்களின் நுகர்வோர் சந்தை சுருங்கிடும். இந்த ஊழியர் பகுதியானது, தாராளமயமாக்கலின் தொடக்க ஆண்டுகளில் அதன் பலன்களைப் பெற்ற பகுதியாகும். ஆனால் 2017க்குப் பிறகு அவர்களின் வருமானம் குறையத் தொடங்கியது; 2024 நிலவரப்படி அந்த வருமான நிலை இன்னும் மீட்கப்படவில்லை. இதனால் ஒரு தெளிவான நுகர்வு நெருக்கடி எழுந்துள்ளது. ஒன்றிய அரசு தீர்மானித்த 2025-26 வருமான வரிவிலக்கு அறிவிப்பின் நோக்கம் இந்த முரண்பாட்டை நிவர்த்தி செய்வதற்கானதே ஆகும்.
எனவே, மேல் அடுக்கில், உயர்ந்த ஊதியம் வழங்கும் நிறுவனங்கள் தப்பிப்பதற்கான இயல்பான ஒரே வழி, அவை சுமக்கும் சுமையை மேலும் கீழ்நோக்கித் தள்ளிவிடுவதாகும். நடுத்தர, சிறு நிறுவனங்கள் அந்த நிறுவனங்களின் மதிப்புச் சங்கிலியில் வழங்குநர்களாகச் செயல்படுவதால், அவ்வாறு கீழே தள்ளிவிடுவது இப்போது சாத்தியமாகும். இந்த நடுத்தர, சிறு நிறுவனங்கள் கடுமையான போட்டியின் காரணமாக தங்கள் உற்பத்திப் பொருட்களின் விலைகளை உயர்த்த முடியாது. மேலும், அமெரிக்கா தனக்கு வரவிருக்கும் நெருக்கடியைக் குறைக்கவும், அதன் சுமையை இந்தியாவுக்கு மாற்றவும், டிரம்ப் நிர்வாகத்தின் மூலம் விதிக்கப்பட்ட 50% வரியும், ஏற்றுமதிச் சந்தை விலைகளில் கூடுதல் அழுத்தத்தை கீழ்நோக்கி உருவாக்குகிறது. எனவே, பெரிய அளவில் வேலைவாய்ப்பு வழங்கி வருகின்ற சிறு, குறுந்தொழில்களை உயிர்ப்பிக்கவும், முதலீடு மேற்கொள்ளவும், நெருக்கடியைக் குறைக்கவுமே மோடி அரசு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளது — தொழிலாளர்களைக் கூடுதலாகச் சுரண்டுவதற்கு அந்த நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குகிறது. தொழிலாளர்களின் மீதான சுரண்டலைத் தீவிரமாக்குவதுடன், அவர்களுக்கான வேலைவாய்ப்புகளைத் தற்காலிகமாக்கி, உரிமைக் குரல்களை அடக்குகின்றனர். இந்தச் சட்டத் தொகுப்புகளின் முழுக் கட்டமைப்பும், இந்திய முதலாளித்துவத்தின் தற்போதைய நெருக்கடியை நடுத்தர, சிறு தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் தலைமேல் சுமத்தும் செயல்முறையென்று நிச்சயமாகச் சொல்லலாம். தொழிலாளர் சட்டத் தொகுப்புகளில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் இதைத் தெளிவாக்குகின்றன.
நீர்த்துப் போன பாதுகாப்பு
நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நுட்பமான மாற்றங்கள், அந்தச் சட்டங்களின் வரம்புக்குள் வரக்கூடிய தொழிலாளர் எண்ணிக்கையை மாற்றியமைக்கின்றன. இதன் மூலம் தொழிலாளர்களின் சட்டப்பாதுகாப்புப் பலவீனப்படுத்தப்படுகிறது. அமைப்புசார் துறையில் ஏற்கனவே இருந்துவரும் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களில் பணியாற்றும் பெரும்பான்மைத் தொழிலாளர்களுக்கான சட்டப் பாதுகாப்பை அது விலக்குகிறது. ஓ.எஸ்.ஹெச். எனப்படும் வேலை நிலைமை பாதுகாப்புத் தொடர்பான சட்டத் தொகுப்பானது தொழிற்சாலை என்பதற்கான வரம்பினை உயர்த்தி நிர்ணயிக்கிறது. மேலும், ஒப்பந்த தொழிலாளர்களை அமர்த்துவதற்கான எண்ணிக்கையை 20 என்பதில் இருந்து 50 என உயர்த்துகிறது. தொழில்துறை உறவுகள் பற்றிய சட்ட விதிகள், பணிநீக்கம் மற்றும் ஆலை மூடலுக்குத் தேவைப்படும் முன் அனுமதி, தொழிற்சாலைகளின் நிலை ஆணைக்கான வரம்புகளை 100 தொழிலாளர்கள் என்பதிலிருந்து 300 என உயர்த்தி நிர்ணயிக்கிறது. இதனால், முதலாளிகள் தங்கள் விருப்பப்படி பணியில் ஒருவரை அமர்த்தவும், துரத்தவும் அனுமதி அளிக்கப்படுகிறது. பணி நிலைமைகளில் பாதுகாப்பும், உடல் நலமும், சேமநலக் கொள்கைகளும் நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளன. முதலாளிகளால் இந்த விதிகளை அமலாக்கும் பாதுகாப்பு அல்லது நலன்புரி அதிகாரிகளை நியமிக்காமல், உணவகங்கள், குழந்தைபராமரிப்பு அல்லது ஆம்புலன்ஸ் சேவைகளை உறுதி செய்யாமல் தவிர்க்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிரந்தரமான வேலைகளுக்கும் நிலையான கால வேலைவாய்ப்பைச் சட்டப்பூர்வமாக்குவதன் மூலம் வேலைநீக்க அபாயத்தை விதிமுறையாக்குகின்றன. பணி மூப்பு மற்றும் பதவி உயர்வு ஆகிய அம்சங்களைக் குறைத்து மதிப்பிடுகின்றன. கூட்டுப் பேரத்தையும் இது பலவீனப்படுத்துகிறது. தொழிற்சங்கப் பதிவை மிகவும் கடினமாக்குவதன் மூலம் அடிப்படைத் தொழிலாளர் உரிமைகள் மேலும் குறைக்கப்படுகின்றன. வேலைநிறுத்தங்களை மெய்யியல்பில் தடைசெய்யும் விதத்தில் சமரச வரம்புகளும், அறிவிப்பிற்கான கட்டாயங்களும், கடுமையான தண்டனைகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இறுதியாக, இந்தச் சட்டத் தொகுப்புகள் 12 மணி நேரம் வரை ஒரு வேலைநாளைப் பரவலாக்க அனுமதிக்கின்றன; மேல்தொழில் பாதுகாப்பை நீர்த்துப்போகச் செய்கின்றன; மேலும் 12 மணி நேர வேலையுடன் நான்கு நாள் வேலைவாரத்தை நியாயப்படுத்துகின்றன. இது தொழிலாளர்களின் உடல் நலத்திற்கும், குடும்ப வாழ்க்கைக்கும் கடும் தீங்கு விளைவிக்கும். ஒவ்வொரு ஆண்டும், நம் நாட்டில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியிடங்களில் ஏற்படும் விபத்துக்களில் சிக்கி மரணமடைகிறார்கள். புதிய தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள், தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு முறையைக் கடுமையாகப் பலவீனப்படுத்தியுள்ளன.
உழைப்பின் டிஜிட்டல் சந்தை
இத்துடன் கூடுதலாகத் தொழிலாளர் சக்தி கொள்கை 2025 வந்துள்ளது. இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கம், நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் சக்தியை ஒற்றை டிஜிட்டல் தரவுத்தளத்தில் இணைத்து, மூலதனத்தின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் அவற்றை வழங்குவதை உறுதி செய்வதாகும். நிரந்தர வேலைகள் அனைத்துமே இதன் மூலம் கிக்-இயல்பு தொழிலாளருக்கு மாற்றப்படும் (உலா ஓட்டுனர் போலவும், உணவு டெலிவரி வேலை போலவும்). இந்த நடவடிக்கை, தொழிலாளர் சக்தியைச் சட்டப் பாதுகாப்புக்கு வெளியே மொத்தமாகத் தள்ளிவிடும் செயல்முறையே ஆகும்.
தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், சங்கம் வைக்கும் உரிமையையும், வேலைநிறுத்த உரிமையையும் தாக்குகின்றன; கூட்டுப் பேர உரிமையைப் பலவீனப்படுத்துகின்றன. இதனால் அமைப்புசார் தொழில்களில் ஊதியங்கள் முக்கியமாகக் கட்டுப்படுத்தப்படும். தொடர்ச்சியான தாக்கம், அமைப்புசாராத துறை மற்றும் முறைசாராத துறைகளிலும் ஊதியத்தைக் குறைக்கும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தைத் திரும்பப் பெற்றிருப்பதால், கிராமப்புறத் தொழிலாளி வர்க்கம் தனது பேர வலிமையை இழக்க நேரிடும்; விவசாயத் தொழிலாளர்களின் ஊதியங்கள் இதனால் கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு நடப்பதால் வேலையின்மை, இடம்பெயர்தல் அதிகமாகும்; இடம்பெயர் தொழிலாளர்களின் ஊதியங்களும் குறையும். ஒட்டுமொத்தமாக, இந்தப் போக்குகள் தொழிலாளர்களின் ஊதியங்களையும், வருமானத்தையும் குறைக்கும் கருவிகளே ஆகும். கட்டுப்பாடற்ற கொள்ளைக்கான இந்த ஏற்பாடுகள், நம் நாட்டின் முதலாளிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை, தொழிலாளர்களின் தலையில் சுமத்தவே செய்யப்படுகின்றன.
தற்காப்பல்ல, தலைகீழ் மாற்று !
புதிய பாசிசப் போக்கு இவ்வாறாக உருவாகியுள்ளது. இந்தச் சக்திகள், தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்புத் திறனைத் திட்டமிட்ட வகையில் அழித்தொழிக்க முயற்சிக்கின்றன. நெருக்கடியின் சுமையை மக்களின் மீது தள்ளிவிடுவதன் மூலம் முதலாளிகளுக்குத் தடையற்ற லாபத்தை அது உறுதி செய்கிறது. முதலாளித்துவம் தன்னுடைய சொந்த முரண்பாடுகளில் தானே மூழ்கத் தொடங்கியுள்ளது. நவ-பாசிசச் சக்திகளின் வளர்ச்சியின் மூலம், தமது முரண்பாடுகளில் இருந்து தாம் தப்பித்துவிட முடியுமா என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்தச் சூழலில் தற்காப்பு மனநிலை மட்டும் போதுமானதல்ல. நம் நாட்டின் அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்கள் இந்த நான்குச் சட்டத் தொகுப்புகளை எதிர்த்துக் கிளர்ந்தெழ வேண்டும். இந்தப் போராட்டம், சட்டத் தொகுப்புகளைத் தோற்கடிப்பதோடு நில்லாமல், முதலாளித்துவ அமைப்பையே மாற்றியமைப்பதாக அமைந்திட வேண்டும். இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, மாபெரும் மக்கள் ஒற்றுமையும், புதிய விழிப்புணர்வும் அவசியம். அதற்கான போராட்ட இயக்கங்கள் எழுச்சியடைய வேண்டும். முதலாளித்துவத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த ஆழமான முரண்பாடுகள், மாற்றுச் சாத்தியங்களை முன்னுக்குக் கொண்டுவருகின்றன. சமூக, பொருளாதார மாற்றுகளை விமர்சன ரீதியாக அடையாளம் காண்பதுடன், சமூக மாற்றத்தை நோக்கிய விழிப்புணர்வை அதிகரிப்பதும் நம் முன் இருக்கும் கடமையாகும்.
தமிழில்: இரா. சிந்தன்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply