
இரட்டை அதிகார நிலை நோக்கி எழுச்சி பெறும் புதிய பாட்டாளி வர்க்கம்!
சுதிப் தத்தா
மே தினக் கொண்டாட்டங்களின் இந்த நேரத்தில், அவநம்பிக்கை மூடிய திரைகளைக் கிழித்துக் கொண்டு, இந்தியப் பாட்டாளி வர்க்கம் வீரியத்துடன் எழுச்சி பெறுகிறது. இந்த எழுச்சி, முதுகெலும்பற்ற முதலாளித்துவத்தின் முதுகுத்தண்டில் நடுக்கத்தையும், இதயமற்ற அரசின் உள்ளத்தில் ஆழ்ந்த அச்சத்தையும் விதைக்கிறது. இப்படியான எழுச்சிகள் அலையலையாக, ஒன்றன்பின் ஒன்றாக வடக்கு, மத்திய இந்தியா முழுவதும் பரவி வருகின்றன. கடும் வேதனையிலும், வலியிலும் உள்ள தொழிலாளர்கள் இவ்வாறு தங்கள் இருப்பை உறுதிப்படுத்துகின்றனர்.
இப்படியான போராட்டங்கள் பற்றி தொழிற்சங்கங்களிலும் பொதுச் சமூகத்திலும் பல்வேறு விவாதங்கள் நடக்கின்றன. சிலருக்கு இவை லுடைட் இயக்கம் பற்றிய நினைவுகளை மீட்டெடுக்கின்றன; தன்னெழுச்சி போராட்டமும், அமைப்பாக ஒழுங்கமைந்த இயக்கமும் பற்றிய விவாதங்களை அவை மீண்டும் தூண்டுகின்றன. கோடிக்கணக்கான ஆலைத் தொழிலாளர்களின் வேலைநாளை, மனிதத் தன்மையற்று, தாங்கொணா வகையில் நீட்டிப்பதை மையமாகக் கொண்டு எழுச்சியுற்ற இந்த போராட்ட இயக்கங்களுக்கும், மே தினத்திற்கும் ஒரு தெளிவான தொடர்பு உள்ளது.
போராட்டக் களத்தில் எழுச்சியுடன் போராடும் அந்த வீரம் செறிந்த தொழிலாளர்களோடு, இந்தியத் தொழிலாளர் வர்க்கம் ஒருமைப்பாட்டு உணர்வோடு நிற்கிறது. இந்த எழுச்சியின் மையத்தைப் புரிந்துகொள்ள அதற்கு ஆவலும் உள்ளது; இந்த போராட்டங்களை மென்மேலும் தீவிரமாகவும், நீடித்த அடிப்படையிலும் முன்னெடுக்க உறுதியும் கொண்டுள்ளது.
போராட்டங்களின் பின்னணி
இப்போராட்டங்களின் முதல் கட்டம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எஃகு ஆலைகள் உள்ளிட்ட பொதுத்துறை திட்டங்களில் உருவானது. இந்தத் திட்டங்களுக்கான புதிய உற்பத்தி அலகுகளை அமைக்கும் ஒப்பந்தங்களை பெற்ற பெருநிறுவனங்களில் பணிபுரிந்த கட்டுமானத் தொழிலாளர்களிடையே இது ஆரம்பமானது. பின்னர், இரண்டாம் கட்டம் உருவானது. இது மானேசர், குருகிராம், நொய்டா, ஃபரிதாபாத், நீம்ரானா போன்ற தொழில் மையங்களில் உள்ள தனியார் உற்பத்தி நிலையங்களில் வெடித்தது. அங்கு பணிபுரியும் பெரும்பாலும் நிரந்தரமற்ற தொழிலாளர்களே இதில் முக்கிய பங்காற்றினர்.
இந்தப் போராட்டங்களுக்கான உடனடி காரணங்கள் பலவாக உள்ளன. வாழ்வாதார மட்டத்திற்குக் கீழ் உள்ள ரூ. 9,000–11,000 வரையிலான குறைந்தபட்ச ஊதியம் முக்கிய காரணமாகும்.
அதோடு, நீடித்த வேலை நேரம், சட்டப்படி வழங்கப்பட வேண்டிய ஓவர்டைம் கூலி இல்லாமை, ஓய்வு நேரம் மற்றும் விடுப்பு மறுக்கப்படுதல் ஆகியவை பிரச்சினைகளை தீவிரப்படுத்தின. மேலும், பிற சட்டப்பூர்வ நலன்கள் மறுக்கப்படுதல் மற்றும் ஒப்பந்ததாரர்களின் அத்துமீறல்களும் இதற்கு காரணமானவை.
சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG) நெருக்கடி இந்தப் போராட்டங்களுக்கு உடனடி தூண்டுதலாக அமைந்தது. எரிவாயு சிலிண்டரின் விலை பல மடங்கு உயர்ந்ததால், இந்த தொழிலாளர்கள் நடைமுறையில் வறுமைக்குள் தள்ளப்பட்டனர்.
இந்தப் பின்னணியில், இப்போராட்டங்கள் தன்னெழுச்சியாக உருவாயின (spontaneity). பின்னர் அவை தன்னாட்சித் தன்மை பெற்றதாக வளர்ந்தன.
(autonomy) தன்மை கொண்டதாகின. அவற்றின் முக்கிய அம்சங்களை இக்கட்டுரை பகுப்பாய்வு செய்ய முயற்சிக்கிறது.
போராடும் பகுதியினர், இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தில் ஒரு முக்கியமான பிரிவாக உள்ளனர். இவர்கள் கடும் சுரண்டலை எதிர்கொள்வதுடன், முன்னேறிய தன்மையையும் கொண்டுள்ளனர். தங்களின் இருப்பைத் தக்கவைக்க போராடும் இவர்கள், இன்னும் முழுமையாக பயன்படுத்தப்படாத பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளனர். அந்த ஆற்றலை வெளிக்கொணர உதவும் வழிமுறைகளை இந்த ஆய்வு சுட்டிக்காட்டக்கூடும்.
ஊதியமே கோபத்தின் மையம்
இந்தப் போராட்டங்களின் மையமாக அமைந்தது ஊதியப் பிரச்சனைதான். குறைந்தபட்ச ஊதியம் என்பது தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்புச் சக்தியை மீண்டும் உற்பத்தி செய்யத் தேவையான குறைந்தபட்ச அல்லது வாழ்வாதார மட்ட வருமானத்தை குறிக்கிறது. இந்தியாவில் முறைசாரா தொழிலாளர் அமைப்பின் (informal labour regime) பரவலான தன்மையை கருத்தில் கொண்டால், சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதியத்தின் வரம்பிற்குள் வரும் தொழிலாளர்களே மிகவும் குறைவுதான்.
அந்த குறைந்தபட்ச ஊதியத்தை கணக்கீடு செய்கிற வழிமுறையிலும் ஒரு தீவிரமான பிரச்சனை உள்ளது. சில வழிகாட்டும் கோட்பாடுகளைத் தவிர, குறைந்தபட்ச ஊதியத்தை கட்டாயமாக நிர்ணயிக்கும் சட்ட அமைப்பு எதுவும் இல்லை. இதன் விளைவாக, குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் முத்தரப்பு அமைப்புகள் (tripartite bodies) பெரும்பாலும் முதலாளித்துவத்தையும், ஆளும் வர்க்கத்தையும் சார்ந்த நிலைப்பாடுகளை எடுப்பதைப் பார்க்கலாம்.
இதனோடு, பிராந்திய அடிப்படையிலான ஏற்றத்தாழ்வும் குறிப்பிடத்தக்கது ஆகும். உதாரணமாக, நொய்டாவிலும், குருகிராமிலும் உள்ள குறைந்தபட்ச ஊதியத்தைச் சொல்லலாம். அண்டை மாநிலமான டெல்லியிலும் இப்பகுதிகளிலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஒரே மாதிரியாக இருந்தாலும், ஊதியம் டெல்லியை விட இங்கே சுமார் 50% குறைவாக உள்ளது.
இப்போது ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது: இத்தகைய நிலைமைகளில் தொழிலாளர் வர்க்கம் தன்னை எவ்வாறு மறு உற்பத்தி செய்கிறது (reproduce itself)?
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கூடுதல் வேலை நேரம் உழைப்பது , குடும்ப உறுப்பினர்கள் பலர் உழைப்பது ஆகிய வழிகளிலேயே வருமானத்தை அதிகரித்து, குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை அது எட்டுகிறது.
உண்மை ஊதியம் (Real Wage) குறைதல்
மாறும் பஞ்சப்படி (Variable Dearness Allowance) என்ற கூறை வழக்கமாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஊதியத்தில் சேர்ப்பதன் மூலம், குறைந்தபட்ச ஊதியத்தின் உண்மை மதிப்பு பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் இது தாமதமாகவோ போதாமையாகவோ நடைமுறைக்கு வருகிறது. இதனால் காலப்போக்கில் உண்மையான ஊதியம் (real wages) குறைகிறது.
சமூக முன்னேற்றத்துக்கும் வளர்ந்து வரும் தேவைகளுக்கும் ஏற்ப, நுகர்வுத் தேவைகளை மேம்படுத்தும் வகையில் குறைந்தபட்ச ஊதியத்தில் காலமுறை திருத்தம் செய்யப்பட வேண்டும். ஆனால் இந்தியாவின் பல மாநிலங்களில், குறிப்பாக வட மாநிலங்களில், இத்தகைய திருத்தங்கள் பத்தாண்டு அல்லது அதற்கு மேலாக நிலுவையில் உள்ளன. இதனால் தொழிலாளர்களுடைய நுகர்வுத்திறன் மேலும் குறைகிறது.
இவையெல்லாம் தொழிலாளர் வர்க்கத்தின் சமூக மறு உற்பத்திச் செயல்முறையில் (social reproduction) கடுமையான அழுத்தத்தை உருவாக்கியுள்ளன. இதன் காரணமாக, வெளிப்புற அதிர்ச்சிகளால் அவர்கள் மிகவும் பாதிப்படையக்கூடிய நிலை உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட கூட்டம் கூட்டமான இடம்பெயர்வு (mass exodus) இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். தொழிலாளர்களின் பெரும்பகுதி வறுமையின் விளிம்பில் வாழ்வதை அது வெளிப்படுத்தியது.
மறு உற்பத்தி நெருக்கடி
சமையல் எரிவாயு (LPG) நெருக்கடிக்கு முன், எரிபொருள் செலவு சுமார் ரூ. 1,000 ஆக இருந்தது; அது சராசரி வருமானத்தின் பத்தில் ஒரு பங்காக இருந்தது. பின்னர், நெருக்கடியின் காரணமாக சில்லறை சந்தையில் சமையல் எரிவாயு விலை ரூ. 3,000–4,000 ஆக உயர்ந்து, வருமானத்தின் கிட்டத்தட்ட 40% ஆகியது; உணவகங்களில் வாங்கி உண்ணப்படும் சமைத்த உணவின் விலையும் இரட்டிப்பானது.
தற்போதைய நுகர்வுச் செலவின் நிலைமையையும் அதன் அமைப்பையும், அத்தியாவசிய மறு உற்பத்திக்கான சமூகச் செலவுகளையும் கருத்தில் கொண்டால், இப்போது ஏற்பட்ட மைய (core) பணவீக்கத்தை சரி செய்திட, உடனடி ஊதிய உயர்வு தரப்பட்டு – நிலைமை சமநிலைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் ஆளும் வர்க்கம் ஊதியத்தை மாற்றியமைக்கவில்லை.
தெளிவாகச் சொன்னால், அவசிய உழைப்பினை (necessary labour) முழுமையாக ஈடுசெய்யவில்லை; மேலும், நாம் மேலே குறிப்பிட்ட மைய பணவீக்கச் சூழலில், ஊதிய உயர்வும் இல்லாதபோது, உபரிச் சுரண்டலின் விகிதம் (rate of surplus extraction) அதிகரிக்கிறது. இதனால் நெருக்கடிக்கு நடுவிலும் உபரிச் சுரண்டலின் விகிதம் உயர்ந்தது. ஆனால், வேலை நேரத்திலும், உற்பத்தித் திறனிலும், உழைப்பின் கடுமையிலும் எந்த மாற்றமும் இல்லை.
இதன் விளைவாகவே, மறு உற்பத்தி நெருக்கடி உருவாகிறது. அதே சமயம் இந்த நிலைமை முதலாளித்துவத்திற்கோ உபரியின் அதிகரிப்பாக மாறுகிறது. தொழிலாளர்கள் ஒரு வர்க்கமாக தங்களை மறு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் தொழிலாளியின் ஆயுள் குறைந்து, வேலை செய்யும் வாழ்வுக் காலம் குறைவதில் போய் முடிகிறது.
இதையே மற்றொரு வகையில் சொன்னால், முதலாளிகளுக்கு கிடைக்கும் கூடுதல் உபரி என்பது, தொழிலாளியின் எதிர்கால ஆயுளில் இருந்து உறிஞ்சப்படுகிறது — இதுவே அடிப்படையில் சமூக மறு உற்பத்தி நெருக்கடி (crisis of social reproduction) ஆகும்.
இத்தகைய சூழலில் தொழிலாளர் வர்க்கத்திற்கு முன் இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன — வெகுஜன எழுச்சி அல்லது வெகுஜன வெளியேற்றம். டெல்லி NCR, சூரத் தொழில் வளையங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களின் வெளியேற்றத்தை இதற்கான தெளிவான எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
வர்க்கம் ஒரு சமூகமாக
தொழிலாளர்களுக்கான முறையான அமைப்புகள் இல்லாமலே, தொழிலாளர் எழுச்சிகள் எப்படி நிகழ முடிகிறது என்பது முக்கியக் கேள்வியாகும். அதற்கான பதிலை இப்போது காணலாம்.
தொழிலாளர் அமைப்புகள், குறிப்பாக தொழிற்சங்கங்களின் நோக்கம் என்ன?. தொழிலாளர் வர்க்கம் உருவாக்கும் உபரியிலிருந்து, தம்முடைய பங்கை அதிகமாக மீட்பது, தொழிலாளி வர்க்கத்தின் கூட்டு நடவடிக்கைகளால் சாத்தியம் என்ற உணர்வை வளர்ப்பதுதான் அந்த நோக்கம்.
கொள்கையளவில் பார்த்தால், முதலாளித்துவ அமைப்பின் தர்க்கத்திற்குளேயே, தொழிலாளர் வர்க்கத்தின் மறு உற்பத்திச் செயல்பாடும், நிலைத்து நடக்கக் கூடியதாகும். ஆனாலும், கட்டுப்பாடற்ற லாப வெறியின் காரணமாக அந்த தர்க்கம் சிதைக்கப்படும்போது, தொழிலாளி வர்க்கம் – சாத்தியமான கூட்டுப் போராட்டங்களின் மூலம் முழுமையாக உருப்பெற்றிடாத போதிலும் – ஒரு சமூகமாக தன் இருப்புக்கே அச்சுறுத்தலை எதிர்கொள்கிற ஒரு சமூகக் குழுவாக, சமூகமாக தம்மை அடையாளம் காணத் தொடங்குகிறது.
அந்தச் சமூகம் பெரும்பாலும் குறைவான ஊதியம் பெறுகிற, நெருக்கடியால் பாதிப்புக்குள்ளான, பெரும்பாலும் புலம் பெயர்ந்த, நிரந்தரமற்ற தொழிலாளர்களால் நிரம்பியதாகும்.
உற்பத்திச் செயல்முறையில் ஈடுபடுகிற – முதலாளித்துவத்தின் தாக்குதலை எதிர்கொண்டு பிழைத்து வாழ வேண்டும் என்ற உள்ளுணர்வினால் (instinct to survive) உருவான ஒரு வர்க்கமாக இது உள்ளது; அதே சமயம், தமக்கான தகவல் தொடர்பு சமூக வலைப்பின்னல்கள், கூட்டு நினைவுகள், நம்பிக்கை ஆகியவற்றை பயன்படுத்தி ஒரு சமூகமாகவும் (community) தன்னை அமைத்துக்கொள்கிறது.
இவ்வாறாக, எழும் ஒவ்வொரு கனலும் சமூக ஊடகங்கள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, நெருப்பாகப் பரவி வடக்கு, மத்திய இந்தியா முழுவதையும் ஆட்கொண்டுள்ளது. அவையே தன்னெழுச்சிப் போராட்டங்களாக வெடித்துள்ளன.
சமூக ஊடகங்கள், “கூட்டுத் தொழிலாளர்” (collective worker) என்ற கற்பனையை நனவாக்குவதற்கான உள்கட்டமைப்பு அடித்தளத்தை வழங்கியுள்ளன; அதன் இருப்பு இந்த இரக்கமற்ற தொழிற்சூழலின் திட்டவட்டமான பொருளியல் நிலைமைகளில் ஆழமாகப் பதிந்துள்ளது. அதே நேரத்தில், இந்த நவீனப் பாட்டாளி வர்க்கம், சமூக ஊடகங்களின் தனிநபர் மைய நோக்குநிலையை (individualistic orientation) தலைகீழாக மாற்றி, அவற்றை வெகுஜன எழுச்சிக்கான கருவியாக ஆக்கின.
சவக்குழி தோண்டப்படுகிறது
கம்யூனிஸ்ட் அறிக்கையில் கார்ல் மார்க்சும், எங்கெல்சும் வெளிப்படுத்திய தொலைநோக்கினை இது மேலும் உறுதிப்படுத்துகிறது : “முதலாளித்துவ வர்க்கம் அனைத்துக்கும் மேலாகத் தனக்குச் சவக்குழி தோண்டுவோரையே உற்பத்தி செய்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தின் வீழ்ச்சியும், பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் சம அளவில் தவிர்க்கவியலாதவை ஆகும்”
நிரந்தரமற்ற பணியாளர்களை பெருமளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்க உருவாக்கத்தை திறம்பட தடுத்து ஒடுக்கியதன் வழியாக, தொழில்துறை தொழிலாளர்களின் போராட்டச் சாத்தியத்தை (militant action) முற்றிலுமாகக் கட்டுப்படுத்தலாம் என்றுதான் ஆளும் வர்க்கம் நம்பியது. ஆனால் மெய்யாக, அது நவீன இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் மிக வலிமையான பிரிவையே உருவாக்கியுள்ளது — உண்மையிலேயே உடைமையற்றவர்களை (real have-nots), நாட்டின் அனைத்து முக்கிய, மூலோபாய மற்றும் அதிக லாபமீட்டும் உற்பத்தி ஆலைகளின் உள்ளேயே செயல்படும் ஒரு சக்தியாக ஆக்கியுள்ளது. இவர்களே 21ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் உண்மையான பாட்டாளி வர்க்கம் ஆவர் — இவர்களே தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர இழப்பதற்கு எதுவுமில்லாதவர்கள்; முழு உலகத்தையும் வெல்ல வேண்டியவர்கள்.
முதலாளித்துவம் உற்பத்திச் செயல்முறையை துண்டாடியுள்ளது. உற்பத்தியை மதிப்புச் சங்கிலிகள் முழுவதும் பரப்பியுள்ளது; தங்களுக்குச் சாதகமான தொழிலாளர் விரோதக் கொள்கைகளை அமலாக்கச் செய்யும் வகையில், மாநிலங்களிடம் பேரம் பேசுவதற்காகவும், ஒருங்கிணைந்த பணித்தள (shop-floor) அமைப்பின் வாய்ப்பை குறைப்பதற்காகவும், ஒரே பிராண்டின் உற்பத்தியை பல அலகுகளில் சிதறடித்துள்ளது. இதற்கு எதிர்வினையாற்றும் வகையில், தொழிலாளர்கள் மதிப்புச் சங்கிலிகள் முழுவதும் / பிராண்ட் அடிப்படையிலும் தம் எழுச்சிப் போராட்டங்களை ஒருங்கமைத்துள்ளனர் — ஒரே நிறுவனத்தின் பல உற்பத்தி அலகுகளில் அணிதிரண்டு போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம், உற்பத்தியை ஒரு அலகிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றும் முதலாளித்துவத்தின் திறனை கட்டுப்படுத்துகின்றனர். இது ஒரு வகையில் மூலோபாய எதிர்ப்பு நடவடிக்கையாகும் — முதலாளித்துவ சமூகத்தின் மிகவும் மேம்பட்ட பிரிவுகளிலிருந்து வெளிப்படும் விழிப்புணர்வும் (consciousness), உள்ளுணர்வும் (instinct) இணைந்த ஒரு செயல்பாடாகும்.
முதலாளித்துவ எதிர்வினை
வேறு வழியில்லாத நிலையில், முதலாளித்துவம் இந்த எழுச்சிக்கு பதிலளித்தது. ஹரியானா, உத்தரப் பிரதேச மாநில அரசுகள் தொழிலாளர்களின் ஊதியத்தை சுமார் ₹2,000–3,000 வரை உயர்த்தின. சமையல் எரிவாயு நெருக்கடியால் வருமானத்திற்கும் வாழ்வாதாரத் தேவைகளுக்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளிக்கு ஏறத்தாழ சமமான உயர்வாக இது இருப்பது குறிப்பிடத்தக்கது.
தன்னெழுச்சிப் போராட்டங்களின் காரணமாக – தொழிலாளர் வர்க்கம் தங்கள் தற்காலிக வாழ்வாதாரத்தின் ஒரு பகுதியையாவது பாதுகாத்துக்கொள்வதை சாத்தியமாக்கி, வெற்றியடைந்ததாக பார்க்கலாம்.
இருப்பினும், இந்த முடிவுகள் இன்னும் பெரும்பாலும் நடைமுறைக்கு வரவில்லை. இதற்கிடையில் ஆலைகளின் நிர்வாகம் தனது அழுத்தத்தின் மூலம் பணிச்சுமையை உயர்த்தியதன் மூலம் உழைப்பை மேலும் கடுமையாக்குகிறது. ஒப்பீட்டு உபரி பிரித்தெடுக்கும் (relative surplus extraction) திறனை, ஆளும் வர்க்கம் மேம்படுத்துவதன் மூலம் – ஊதியத்தில் ஏற்பட்ட இந்த திடீர்/ கட்டாய உயர்வை ஈடுசெய்ய முயற்சிக்கிறது.
இதனுடன், போராடும் தொழிலாளர்கள், செயற்பாட்டாளர்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அரசு ஒடுக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் அவர்கள் இருக்கும் இடம் பற்றிய எந்த தகவலும் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இனியும், எந்தவொரு கிளர்ச்சியும் கொடூரமாக நசுக்கப்படும் என்றும், இந்தப் பகுதியில் முதலாளித்துவ அதிகாரத்தின் முழுமையான மேலாதிக்கம் மீண்டும் நிறுவப்படும் என்றும் முதலாளித்துவத்திற்கு ஒரு வலுவான சமிக்கையை அனுப்பிட அரசு முயல்கிறது. இந்த தாக்குதலை தொழிலாளர் வர்க்கம் தனது முழு வலிமையோடும் எதிர்கொள்கிறது.
பொது வேலைநிறுத்தங்களுக்கு உள்ள தொடர்பு
2026 பிப்ரவரி 12 அன்று நடைபெற்ற பொது வேலைநிறுத்தம் குறித்து நாம் இன்னும் விவாதிக்கவில்லை. பரவலான பிரச்சாரமும் வெகுஜன அணிதிரட்டலும் இணைந்த இந்த வேலைநிறுத்தம், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் (Labour Codes) அமலாக்கத்திற்கும் எதிராக இந்தியத் தொழிலாளர் வர்க்கம் நடத்திய மிக வலுவான, வெற்றிகரமான முயற்சியாகும். இந்த பொது வேலைநிறுத்தத்தைச் சுற்றியும் அதன் பின்னணியிலும், அதன் பிந்தைய தொடர்ச்சியாகவுமே போராட்ட எழுச்சிகள் பரவத் தொடங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.
வேலைநிறுத்தங்களைப் பொறுத்தவரை, கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு தனித்துவமான போக்கு காணப்படுகிறது. அறிக்கைகளை ஆய்வு செய்யும்போது, நிறுவனம் சார்ந்த பொருளாதார வேலைநிறுத்தங்களின் (establishment-specific economic strikes) எண்ணிக்கை, இந்த காலகட்டத்தில் கடுமையாகக் குறைந்ததை காண்கிறோம். அதே சமயம், பொது வேலைநிறுத்தங்கள் மேலும் தொடர்ச்சியானவையாகவும், பரவலான பங்கேற்போடும், கூடுதல் போராட்ட குணத்தோடும் மாறியுள்ளன.
முதல் பார்வைக்கு, இது தொழில்துறை வேலைநிறுத்தங்களுக்கும் பொது (பொருளாதார மற்றும் அரசியல்) வேலைநிறுத்தங்களுக்கும் இடையிலான பாரம்பரிய உறவு பற்றிய புரிதலிலிருந்து ஒரு விலகலாகத் தோன்றுகிறது. ஏனெனில், அரசியல் பொது வேலைநிறுத்தங்கள் ஏராளமான பொருளாதார வேலைநிறுத்தங்களின் அடிப்படையிலேயே உருவாகும் என்பது பொதுவான புரிதலாகும்.
ஆனால், மிகவும் துண்டிக்கப்பட்ட நிலைமையில் உள்ள மதிப்புச் சங்கிலிகளில், சிறு உற்பத்தி அலகுகளில் ஈடுபட்டிருக்கும் நிரந்தரமற்ற தொழிலாளர்களின் பரந்த தொகுதியின் காரணமாக, கூட்டு பேரம் அடிப்படையிலான ஒப்பந்தத்தை (collective agreement) அடைவதற்கான திட்டமிட்ட பொருளாதார வேலைநிறுத்தங்கள் பெரும்பாலான சூழல்களில் நடைமுறைச் சாத்தியமற்றதாகிறது.
இந்த நிலையில், ஒரு பொது வேலைநிறுத்தம் “கூட்டுத் தொழிலாளர்” (collective worker) எனப்படும் இந்த பல்வகை கூறுகளுக்கு தங்களது அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது; இது அவர்கள் வாழ்க்கை அனுபவத்தின் (lived reality) சீரற்ற, ஆனால் சக்திவாய்ந்த வெளிப்பாடாகும்.
இவ்வாறு, பொது வேலைநிறுத்தங்களை அரசியல் வேலைநிறுத்தங்களாக மாற்றுவதற்கான தளம் உருவாகி வந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.
முதலாளித்துவம் தன்னை பரந்த, நன்கு பிணைந்த அமைப்பாக நிறுவியுள்ளது; அதன் அனைத்து முனைப் புள்ளிகளிலும் உயிருள்ள உழைப்பு பதிந்துள்ளது. மிகச் சீரற்ற அல்லது பலவீனமான இணைப்பில் கூட நிகழும் ஒரு வேலைநிறுத்தம் பனிச்சரிவைப் போன்றதொரு விளைவை ஏற்படுத்தக்கூடும்.
இருப்பினும், இந்த பொது வேலைநிறுத்தங்களின் தன்மை பெரும்பாலும் தற்காப்பு நோக்கிலேயே இருந்து வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்; அவை இன்னும் முதலாளித்துவ அரசுக்கு நேரடிச் சவாலாக மாறவில்லை; அல்லது சமூக மாற்றத்திற்கான கற்பனையை போதிய அளவில் தூண்டவும் அவற்றால் முடியவில்லை.
இரட்டை அதிகார நிலையை நோக்கி
பொது வேலைநிறுத்தத்தின் பின்னணியிலேயே, இப்போது ஒன்றன்பின் ஒன்றாக நாம் கண்டுவரும் வேலைநிறுத்தங்கள் தோன்றின. அவை அனைத்தும் பொருளாதார வேலைநிறுத்தங்கள் என்பது முதன்மையாக கவனிக்க வேண்டியது ஆகும். அவை ஊதியம், வேலைநேரம், பாதுகாப்பான பணி நிலைமைகள், பணியிடத்தில் கண்ணியம் ஆகிய கோரிக்கைகளை மையமாகக் கொண்டவை. மேலும், அந்த போராட்டங்கள் நிறுவனம் சார்ந்து நடப்பவையாகவும், பெரும்பாலும் நிரந்தரமற்ற தொழிலாளர்களால் வழிநடத்தப்பட்டவையாகவும் அமைந்தன.
மேலும், நிறுவப்பட்ட தொழிற்சங்கங்களின் திட்டமிட்ட அல்லது ஒருங்கிணைந்த முயற்சிகள் இல்லாமல் இவை நடந்தன.
அரசின் வழக்கமான கட்டமைப்பை மீறி அதை நிலைகுலையச் செய்தன. ஒடுக்குமுறையின் மூலம் அரசு மேற்கொண்ட எதிர்வினை, இத்தகைய தொழில்துறை நடவடிக்கைகளுக்கு அது தயாரற்று இருப்பதையே வெளிக்காட்டுகிறது. இதன் விளைவாக, இந்த வேலைநிறுத்தங்கள் முதலாளித்துவ நியாயங்களுக்கு சவாலாக அமைந்தன.
இவ்வகையில் நாம் ஒரு இயக்கவியல் போக்கின் மத்தியில் உள்ளோம். ஒருபக்கம், பொது வேலைநிறுத்தங்கள், அனைவருக்குமானவையாக மாறி, முழு வர்க்கத்தின் பொருளாதாரக் கோரிக்கைகளை வெளிப்படுத்துகின்றன. மறுபக்கம், தொழிற்சாலைகளில் நடக்கும் வேலைநிறுத்தங்கள் பொருளாதாரத் தன்மையிலிருந்து மாறி கூடுதலான அரசியல் தன்மையைப் பெறுகின்றன. இந்த இரு போக்குகளின் இயக்கவியல் உறவு (dialectical relation), தற்போதைய காலகட்டத்தில் வேலைநிறுத்தங்களைச் சுற்றியும், அதற்குள்ளும் இரட்டை அதிகார நிலை (dual power) உருவாக்கும் திசையில் நகர்கிறது.
[லெனின் வரையறுப்பின்படி, இரட்டை அதிகார நிலை என்பது ஒரே சமுதாயத்தில் ஒரே நேரத்தில் இரண்டு வேறுபட்ட அதிகார மையங்கள் உருவாகும் நிலையாகும்.
ஒருபுறம் பழைய அரசியல் அதிகாரம்—அதாவது முதலாளித்துவ அரசு—தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. மறுபுறம், தொழிலாளர்களும், வெகுமக்களும் தங்களது நேரடி செயல்பாட்டின் மூலம் உருவாக்கும் புதிய அதிகார வடிவம் தோன்றுகிறது.
இந்த புதிய அதிகாரம் மையப்படுத்தப்பட்ட அரசின் சட்டங்களின் அடிப்படையில் அமைந்ததல்ல. மாறாக, அது கீழ்மட்ட மக்களின் நேரடி முனைப்பில் இருந்து உருவாகிறது. இது பழைய அரசியல் அமைப்பிற்கு வெளியே இருந்து செயல்படுவதோடு, அதற்கு நேரடியான சவாலாகவும் அமைகிறது.
இவ்வாறான இரட்டை அதிகார நிலை நீண்ட காலம் நீடிக்க முடியாது. இறுதியில், எந்த அதிகாரம் மேலோங்கும் என்பது வர்க்கப் போராட்டத்தின் மூலம் தீர்மானிக்கப்படும்].
தொழிலாளர்களின் தன்னாட்சிக்கும், அமைப்பாகத் திரள்வதற்கும் இடையில் நிலவும் இயக்கவியல் உறவுதான், இரட்டை அதிகார நிலையின் கருவைப் பாதுகாத்து முன்னெடுக்கும் முக்கிய திறவுகோல் ஆகும். தொழிற்சங்கங்களின் அரசியல் அமைப்புகள், இப்போராட்டங்களில் வெளிப்படும் ஜனநாயக உணர்வையும் தன்னாட்சி ஆற்றலையும் அடக்கி விடாமல், அவற்றைச் செயல்படுத்தி முன்னேற்ற வேண்டும்; அதே நேரத்தில், தொழிலாளர் வர்க்கத்தின் வெகுஜனத் திரளுக்குள் மாற்றத்திற்கான அரசியலை விதைக்கவும் வேண்டும். வடிவத்தின் நெகிழ்வுத்தன்மையும், கருத்தியலின் உறுதியும் இயக்கவியல் அடிப்படையில் ஒன்றோடொன்று பின்னிப் பிணையும்போது, அது மாற்றத்தை நோக்கியதாக, நிலவும் முதலாளித்துவ அரசுக்கு சவால் விடுக்கக்கூடிய ஆற்றலை உருவாக்குவதுடன், தொழிலாளர் வர்க்கத்தின் பல தன்னாட்சி அமைப்புகளையும் உருவாக்கி வளர்ப்பதற்கான சாத்தியங்களைத் திறக்கின்றன.
மேதின வரலாற்றின் பாடம்
வரலாறு முழுமையாக மீண்டும் நிகழாது; ஆனால் அது எப்போதும் பாடங்களை வழங்குகிறது. மே தினத்தின் வரலாறு நிகழ்காலத்துடன் ஒரு குறிப்பிடத்தக்க தொடர்பைக் கொண்டுள்ளது; அன்றைய போராட்டம் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மந்தநிலையின் ஒரு காலகட்டத்தில் உருவானது. 1881, 1884க்கு இடையில், அமெரிக்காவில் ஆண்டுதோறும் 500க்கும் குறைவான வேலை நிறுத்தங்களும், பணிமுடக்கங்களும் நிகழ்ந்தன. சுமார் 1,50,000 தொழிலாளர்கள் இப்போராட்டங்களில் ஈடுபட்டனர். 1885இல், எண்ணிக்கை சுமார் 700 ஆக உயர்ந்தது. 2,50,000 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். 1886ஆம் ஆண்டில், வேலைநிறுத்தங்கள் இரண்டு மடங்காக அதிகரித்து 1,572 ஆக உயர்ந்தது. கிட்டத்தட்ட 6,00,000 தொழிலாளர்களை ஈர்த்தது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 2,467 இலிருந்து 11,562 ஆக கூர்மையாக அதிகரித்தது.
மே முதல் நாளில் நடந்த வேலைநிறுத்தம் சிகாகோவில் மிகவும் தீவிரமாக இருந்தது. அப்போது சிகாகோ நகரம், போராட்ட குணமுள்ள தொழிலாளர்களின் மையமாக இருந்தது. இப்போராட்டங்கள் முழுமையாக அரசியல் ரீதியாக வளர்ச்சியடையவில்லை என்றாலும், அந்த இயக்கம் போராட்ட வீரியத்தோடு இருந்தது, வேலை நிலைமைகளில் உடனடி முன்னேற்றங்களைச் சாதிப்பதோடு மட்டுமல்லாமல் முதலாளித்துவ அமைப்பிற்கே சவால் விடுப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
புரட்சிகர தொழிலாளர் குழுக்களின் ஆதரவுடன், வேலைநிறுத்தம் கணிசமாக விரிவடைந்தது. முன்கூட்டியே ஒரு எட்டு மணி நேரச் சங்கம் உருவாக்கப்பட்டது; அந்தச் சங்கத்தை மத்திய தொழிலாளர் ஒன்றியமும், தொழிலாளர் அமைப்புகளின் பரந்த ஐக்கிய முன்னணியும் ஆதரித்தன. சாராம்சத்தில் இது, வேலைநிறுத்தப் போராட்டத்திற்குள்ளேயே ஒரு இரட்டை அதிகார வடிவம் உருவாகத் தொடங்கியதைக் குறிக்கிறது. அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்கு வெளியே இருந்தபடி, அதற்கு சவால் விடுக்கும் தொழிலாளர்களின் தன்னாட்சி அமைப்பு. அந்த திசை அங்கேயே நிர்ணயிக்கப்பட்டது.
இந்த மே தினத்தில், இந்தியத் தொழிலாளர்கள், அத்தகைய இரட்டை அதிகார நிலையை கட்டியெழுப்ப உறுதியெடுத்துள்ளனர். புதிய உத்திகளும் தந்திரோபாயங்களும் கொண்டு, இரக்கமற்ற முதலாளித்துவ அமைப்பின் நியாயங்களுக்கு சவால் விடுத்து, அதை மாற்றியமைக்கவும் — வெறும் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக மட்டுமல்லாது, முழுமையான வாழ்க்கைக்காகப் போராட உறுதியேற்கின்றனர்.
இந்தப் போராட்டங்கள், தடைகளை உடைத்து, தொழிலாளர் இயக்கத்தின் புதிய வடிவத்திற்குத் திசைகாட்டட்டும்.
தமிழில்: இரா. சிந்தன்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply