
தொழிலாளர் நலனுடன் இணைந்ததே தொழில் வளர்ச்சி!
எஸ். கண்ணன்
தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்பதை ஆரவார முழக்கமாக ஆட்சியாளர்கள் முன் வைக்கின்றனர். வேலைவாய்ப்பிற்காகவே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதாகவும் கூறுகின்றனர். தொழில்மயமாகுதல் என்பதை இரு வகைகளில் பார்க்க வேண்டும். ஒன்று, வேலைவாய்ப்பிற்கானது. மற்றொன்று, உற்பத்தி வளர்ச்சி, வேலைத்தன்மையை எளிமையாக்குதல், சமூக வளர்ச்சி ஆகியவற்றை உள்ளிட்டதாகும்.
நம் நாட்டின் ஆட்சியாளர்கள் பேசுகின்ற தொழில் வளர்ச்சி, பெரும்பாலும் முதல் பகுதியான வேலைவாய்ப்புடன் நின்று விடுகிறது. அதுவும் முழுமையாக இல்லை. வேலை பெற்றவர்களுக்கும் நிரந்தர தன்மையுடன் கூடிய, அனைத்து சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைவாய்ப்பாக, இவர்கள் கூறும் வேலைவாய்ப்பு அமைவது இல்லை.
கார்ல் மார்க்ஸ் இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடுகிறபோது, சுயதேவையை பூர்த்தி செய்து கொள்ளும் கிராமங்களைக் கொண்ட நாடு, எனக் கூறுகிறார். கிராமத்தில் அனைத்து விதமான கொடுக்கல், வாங்கல் பரிமாற்றங்களும் இருந்தது. அவர்களுக்கு யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மான்செஸ்ட்டருடன் இணைக்கப்பட்டபோதுதான், அவர்களின் உற்பத்திக்கும் வாழ்வாதாரத்திற்கும் ஏற்பட்ட பாதிப்புகளை புரிந்து கொண்டனர். பருத்தியை ஏற்றுமதி செய்து, நூலையும், துணியையும் இறக்குமதி செய்தபோது முழுமையாக உணர்ந்தனர். அதேநேரம், மான்செஸ்ட்டரில் உற்பத்தி செய்த துணிகளை, இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் நிலை ஏற்பட்டபோது, தொழிலாளர்களாக மாறினர். இந்திய நூற்பாலையில், வேலைவாய்ப்பு கிடைத்தது. மற்றொரு புறம், பிரிட்டிஷாருக்கு கொள்ளை லாபம் கிடைத்தது.
இந்த அனுபவம் இன்றும் தொடர்கிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மூலதனம், புதிய தொழில்நுட்பத்தை வழங்கவில்லை. அவர்களின் உற்பத்திக்கான சந்தையாக இந்தியாவைப் பார்க்கின்றனர். பல லட்சம் கோடி முதலீடுகள் சில்லறை வர்த்தகத்தில் செய்யப்பட்டுள்ளது. அமேசான் 30 பில்லியன் டாலர் (2,70,000 கோடி ரூபாய்), பிளிப்கார்ட் 16 பில்லியன் டாலர் (1,44,000 கோடி ரூபாய்), டி மார்ட் (இந்திய நிறுவனம்) ஒரு லட்சம் கோடி முதலீடு செய்துள்ளனர். இது, இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தை, சுய தொழிலை பெரும் அளவில் அழித்துள்ளது. அந்நிய முதலீட்டை சில்லறை வர்த்தகத்தில் அனுமதிக்க கூடாது; சில்லறை வர்த்தகம் உள்ளிட்டவற்றை அழிக்கும் என கம்யூனிஸ்டுகள் முதலில் கூறியபோது, எவரும் பொருட்படுத்தவில்லை. இன்று அனுபவம் கம்யூனிஸ்டுகள் சொன்னதை நிரூபிக்கிறது.
பெருகும் தொழில் முதலீடுகள்
தற்போது இந்தியாவில் தொழில் முதலீடுகள் செய்திட பன்னாட்டு, இந்நாட்டு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. அரசுகள் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்கின்றன. 2014 முதல் 2024 வரை 667 பில்லியன் டாலர் (சுமார் 60 லட்சத்து 3ஆயிரம் கோடி ரூபாய்) இந்தியாவில் தொழில் முதலீடுகள் வந்துள்ளன. இது 17 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியதாக கூறுகின்றனர். தமிழ்நாட்டில் 2021க்கு பின் 9.74 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் புதிதாக வந்துள்ளதாகவும், அதன் மூலம் 18.7 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு செய்தி கூறுகிறது.
தொழில் முதலீடுகள் பரவலான வளர்ச்சியை உருவாக்கியதா? எனக் கேள்வி கேட்டால், இல்லை எனத் தெளிவாகக் கூற முடியும். ஏற்கனவே தொழில் வளமும், திறனுள்ள மனித வளமும், உள்கட்டமைப்புகளும் கொண்டிருக்கும் பகுதிகளில் மட்டுமே மேலும் மேலும் முதலீடுகள் வந்து குவிகின்றன. அதுவே முதலீட்டாளர்களின் லாபத்தையும், புதிய மூலதனத்தையும் உறுதி செய்வதாக இருப்பதால், அதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். குறிப்பாக, தமிழ்நாடு, மகராஷ்ட்ரா, குஜராத், உத்தர்காண்ட், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகியவை கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஆட்சியாளர்கள் கூறும் வேலைவாய்ப்புகள், நிரந்தரத் தன்மையற்று இருப்பதால், பொருளாதாரத்தில் பாய்ச்சல் வேக முன்னேற்றத்தைக் காண முடியவில்லை. தொழில் மூலதனத்தின் வருகை, இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியை, முதலாளித்துவ வல்லுநர்கள் விவாதிக்கும் வளர்ச்சிக் குறியீட்டை வெளிப்படுத்தவில்லை. 2014இல் 7.3 சதமாக ஜி.டி.பி இருந்துள்ளது. ஆனால் 2025இல் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 6.5 சதம்தான். மோடி தலைமையிலான பாஜக ஆட்சி 60 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தொழில் மூலதனத்தை ஈர்த்திருந்தாலும், அது வளர்ச்சி விகிதத்தில் பிரதிபலிக்கவில்லை.
முதலீடுகளுக்காக அரசு வழங்கிய சலுகைகள்
ஒன்றிய அரசும் சரி, தாராளமய கொள்கைகளால் ஆளப்படுகின்ற மாநில அரசுகளும் சரி, ஏராளமான சலுகைகளை, முதலீடுகளுக்காக வழங்கி உள்ளன. மோடி அரசு இரட்டை எஞ்சின் தன்மையுடன் செயல்பட்டு, முதலீட்டாளர்களுக்கு இரட்டை லாபத்தை ஈட்டித் தருகிற அரசாக உள்ளது. ஒன்று, தொழில் முதலீடு காரணமாக தொழிலாளர்கள் ஈட்டித்தரும் மூலதனம், இரண்டு, அரசுகள் வழங்கும் சலுகைகள் மூலம், முதலீட்டு செலவை குறைப்பது மூலம் உருவாகும் மூலதனம்.
ஒன்றிய பாஜக அரசு உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை என அறிவித்து உள்ளது. ரூபாய் 1.97 லட்சம் கோடி 14 வகையான தொழில்களில் ஈடுபடுவோருக்கு வழங்கி உள்ளது. ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம், 2025இன் கடைசி கால தகவல்படி 12.6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியதாகக் கூறப்படுகிறது. 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்த்து சலுகை வழங்குவதாக கூறுகின்றனர். வருங்கால வைப்பு நிதிக்காக நிறுவனங்கள் 4 ஆண்டுகள் செலவிட வேண்டியதில்லை. அதை அரசு வழங்கும் ஊக்கத் தொகை மூலம் எடுத்துக் கொள்ள முடியும். சட்டத்தின்படி, வேலைவழங்குவோர் மற்றும் தொழிலாளி ஆகியோரின் கூட்டான பங்களிப்பே வருங்கால வைப்பு நிதி. மேலே குறிப்பிட்ட ஊக்கத் தொகை அறிவிப்பின் மூலம் அரசு பணம் கரைந்து, முதலீட்டாளர் லாபம் பெருமளவிற்கு உயர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
NAPS (National Apprenticeship Promotional Scheme) மற்றும் ஸ்கில் இந்தியா என்ற பெயரில், ஒன்றிய அரசு, தொழிற்சாலைகளின் தேவையை நிறைவு செய்யவும், கல்வி நிலையங்களுக்கு சென்று பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட இளைஞர்களின் திறனை உயர்த்துவதையும், நோக்கமாக கொண்டு செயல்படுவதாகச் சொல்லப்படுகிறது. நிறுவனத்திற்கு ஒரு தொழிலாளிக்காக ரூ 1500 மாதம் ஒன்றிற்கு அதிகபட்சமாக வழங்கப்படுகிறது. கரும்பு தின்னக் கூலியா? என நிறுவனங்கள் அனுபவித்து வருகின்றன. 43.47 லட்சம் இளைஞர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். 2023-24இல் மட்டும் 2.6 லட்சம் இளைஞர்கள் பயிற்சி முடித்துள்ளனர். ஆனால் இவர்களுக்கு வேலை கிடைத்ததா? என்றால் மீண்டும் ஒரு நிறுவனத்தில் பயிற்சி தொழிலாளி அல்லது காண்ட்ராக்ட் தொழிலாளி என்று ஓடிக்கொண்டிருக்கும் நிலையே நீடிக்கிறது.
இந்த முதலீடுகளுக்காக அரசு வரிச்சலுகைகளையும் 5 ஆண்டு முதல் 15 ஆண்டுகளுக்கு வழங்கி வருகிறது. வருமான வரி, இறக்குமதி வரி, ஏற்றுமதி வரி, சேவை வரி ஆகியவைகளில் இருந்து விதிவிலக்கு வழங்கப்பட்டன. சிறப்பு பொருளாதார மண்டலங்களில் கட்டமைக்கப்பட்டு செயல்படும் நிறுவனங்களுக்கு இதுபோன்ற வேறுசில சலுகைகளும் உள்ளன.
இவ்வளவு விலை தர வேண்டுமா?
தொழில்மயமும் அதற்கான வளர்ச்சி திட்டங்களும் அவசியம்தான். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கும் தொழில் மயம், தற்போதைய நவீன தாராளமய கொள்கைகளை ஆதரிக்கும் கட்சிகளில் இருந்து வேறுபட்டது. அந்நிய நேரடி முதலீடு என்பது, இந்தியாவில் இல்லாத புதிய தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்க வேண்டும். வேலைவாய்ப்பை மையமாக கொண்டிருக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறுகிறது.
சீனா எப்படி முன்னேறுகிறது? வியட்நாம் எப்படி முன்னேற்றம் அடைந்துள்ளது? இந்த இரு சோசலிச நாடுகளும் இந்தியாவிற்கு போட்டியாக முன்னிறுத்தப்படுவது ஏன்? இவை முக்கியமான விவாதமாக உள்ளன. 2014 முதல் 2025 வரையிலான நிதியாண்டு காலத்தில் சீனாவிற்கு வருகை தந்துள்ள அந்நிய நேரடி முதலீடு 1076.1 பில்லியன் டாலர் (96,84,900 கோடி ரூபாய்). இது இந்தியாவில் முதலீடு செய்ததை விட 61 சதம் அதிகமாகும். வியட்நாமிலும், இதேகாலத்தில் 60 முதல் 65 சதம் அளவிற்கு அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இங்கு நாம் முன்வைக்கும் வாதம், சீனாவின் ஜி.டி.பி, 2014இல் 7.3 சதம், 2025ஆம் ஆண்டில் அது 5 சதமாக குறைந்துள்ளது. அதேநேரம், ஊதிய விகிதத்தில் சீனா 2014இல் தோராயமாக 36,390 RMB (4,75,253.4 ரூபாய்) என்பதில் இருந்து, 2023இல் 68,340 RMB (8,92,520.4 ரூபாய்) என உயர்ந்துள்ளது. 10 ஆண்டுகளில், 100 சதம் அளவிற்கு ஊதியத்தில் உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற விவரங்கள் தனித்து கிடைக்கவில்லை. மாறாக, விவசாயத்துறை சார்ந்த தொழிலாளர்களுக்கான ஊதியம் 1 சதம் அளவிலும், உற்பத்தி, ரியல் எஸ்டேட் போன்ற துறை ஊழியர்களுக்கு 7 முதல் 9 சதம் அளவிலும் ஊதியம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2014இல், 7.3 சதமாக இருந்தது. 2024இல் 6.5 எனக் குறைந்துள்ளது. சீனாவில் 2 சதத்திற்கும் மேல் வளர்ச்சி விகிதம் குறைந்து இருந்தாலும், 100 சதவீதம் தொழிலாளர்களுக்கான ஊதிய விகிதம் உயர்ந்துள்ளது. ஆனால் இந்தியாவில் 1 சதம் அளவிற்கே வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது ஆனால் ஊதிய விகிதம் உயரவில்லை. எனவே, முதலாளித்துவ புள்ளிவிவரங்கள் ஏமாற்று வித்தையாகவே உள்ளன.
தமிழ்நாடு அரசு, ஜிடிபி வளர்ச்சியில் நாட்டில் முதலிடத்தை அடைந்திருப்பதாக கூறுகிறது. அடுத்து ஒரு லட்சம் டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எனக் கூறியும் வருகிறது. தமிழ்நாட்டின் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 300 – 400, அதேநேரம் கேரளா ரூ 700 – 800, அரியானா ரூ 765, மகராஷ்ட்ரா ரூ 500 – 600 என உள்ளது. தமிழ்நாடு குறைந்தபட்ச ஊதியத்தில் சீரிய உயர்வை ஏற்படுத்தாமல், ஒருலட்சம் கோடி பொருளாதாரம் என்பதை அடைந்தாலும், பொருளாதார முன்னேற்றம் மக்கள் சார்ந்து இருக்காது.
நமது அரசுகள் வழங்கிய சலுகைகள் காரணமாக வளர்ந்துள்ள நிறுவனங்கள், தங்கள் லாபத்தை பெருக்கிய அளவிற்கு தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தும் பணியை செய்யவில்லை. எனவே, கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் எண்ணிக்கையில் வளர்ச்சி பெற்று இருந்தாலும், நம் நாட்டிற்கு கொடுத்ததைவிட எடுத்துச்சென்று இருப்பது பல மடங்கு அதிகம்.
இயற்கை வளங்களையும் இந்தக் காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக பறி கொடுத்துள்ளோம். சுரங்கம் மற்றும் கனிமம் 1957 சட்டம் 2015இல் திருத்தம் செய்யப்பட்டது. இது தொழில் செய்வதை எளிதாக்குவது (Ease of doing Business) என்ற பெயரில், முதலாளிகளுக்கு சாதகமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இதுபோல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், கடல்வளம் குறித்த சட்டம், என பலவும் திருத்தப்பட்டுள்ளன. அண்மையில் ஆரவல்லி மலைத்தொடர் பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்கப்படுவது குறித்த சர்ச்சை இதன் ஒரு பகுதி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே நிறுவனங்கள் வருகை என்பது வேலைவாய்ப்பிலும் முன்னேற்றம் இல்லை. எதிர்காலத்தை பாதுகாக்கும் இயற்கைவளம் சார்ந்த பாதுகாப்பிலும் இல்லை.
தொழில் வளர்ச்சி என்ற நாணயத்தின் மறுபக்கம் தொழிலாளர் வளர்ச்சி
தொழிலாளர் வளர்ச்சி பெறாமல், தொழில்வளர்ச்சி பலன் தராது. ஒருமுறை ஹூண்டாய் நிறுவனத்தின் மனிதவள உயர் அதிகாரி, இந்த ஸ்ரீபெரும்புதூர் பகுதி எவ்வளவு வளர்ச்சியை அடைந்திருக்கிறது. இதற்கு எங்கள் நிறுவனம் உருவாக்கிய பொருளாதார வளர்ச்சி காரணம் இல்லையா? என்றார். வளர்ச்சி என்பதன் மதிப்பீடு அல்லது அளவுகோல் என்ன? முதலாளித்துவ சார்பாளர்கள், பிரம்மாண்டங்களையும், மக்களின் உணவு, உடை, ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் அளவுகோலாகப் பார்க்கின்றனர். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி, தொழிலாளர்களின் சராசரி ஆயுளில் ஏற்பட்டுள்ள உயர்வு, கல்வி, சுகாதாரம், உண்மை வருவாயில் ஏற்பட்டுள்ள உயர்வுகளை அளவுகோலாகக் கொண்டது.
தமிழ்நாடு உள்ளிட்ட தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களில், வேலைநேரம் 8 மணியை விடவும் கூடுதலாக இருக்கிறது. தங்களின் குடும்பத் தேவைக்காக கூடுதல் நேரம் உழைக்க வேண்டும் என்பதை நியாயப்படுத்துகின்றனர். இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, எல்.அண்ட். டி சுப்பிரமணியம் ஆகியோர், வாரம் 70 மணி நேரம் அல்லது 90 மணி நேரம் உழைக்க வேண்டும் எனக் கூறியது இந்த பின்னணியில்தான். மார்க்ஸ் குறிப்பிட்ட உபரி உழைப்பு நேரம் மற்ற வளர்ந்த நாடுகளை விடவும், இந்தியாவில் அதிகம். இது மூலதனப் பெருக்கத்தையும் அதிகரிக்கிறது.
உரிமைப் போராட்டங்கள் தவிர்க்க முடியாதது
இந்தியாவிலேயே சென்னை, ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில்தான் தொழிற்சங்கம் வைப்பதிலும், போராடுவதிலும், உரிமைகளை பெறுவதிலும், முன்னேற்றம் உள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும் கூட இந்த முன்னேற்றத்தை பெற்றுள்ளோம். சிறப்பு பொருளாதார மண்டல தொழிற்சாலைகளில் தொழிற்சங்கம் வைக்க முடியாது, தொழிலாளர் துறையில் பேச்சுவார்த்தை இல்லை, சிறப்பு ஆணையர் தான் நேரடியாக பேசுவார் என்றெல்லாம், வெளிப்படுத்திய கருத்து பிம்பங்கள், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போராட்டங்கள் மூலம் உடைக்கப்பட்டுள்ளன.
நெடிய போராட்டங்களின் அனுபவம், விஸ்டியான், ஹூண்டாய், ஃபாக்ஸ்கான் மற்றும் யமஹா ஆகிய நிறுவனங்கள் மூலம் கிடைத்திருந்தாலும், சாம்சங், தொழிற்சங்கத்தையே பதிவு செய்ய மாட்டோம் என்ற புதிய அனுபவத்தை வெளிப்படுத்தியது. அதிலும் ஒன்றுபட்ட வலிமையான போராட்டமே வென்றது. பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நாடுகளில் தொழிற்சங்கம் வைக்கவும், ஓரளவு நியாயமான கூலி வழங்கவும், கூட்டு பேர உரிமையை மதிக்கவும் செய்கின்றன. ஆனால் இந்தியாவிற்குள் வரும்போது இதுபோன்ற தொழிலாளர் உரிமைகளை மதிப்பதில்லை. போராட்டங்கள் மூலமே நிலைநாட்ட வேண்டியுள்ளது. இந்த மதிக்காத போக்கிற்கு, நவீன தாராளமய கொள்கையும், அதன் விசுவாசத்தை வெளிப்படுத்தும் ஆட்சியாளரும்தான் உடந்தையாக உள்ளனர்.
இந்தியாவில் இடதுசாரிகள் பலவீனமாக உள்ள குஜராத், அரியானா, உத்தர்காண்ட், உ.பி போன்ற மாநிலங்களில் தொழிற்சங்கம் அமைக்கப்படவோ, கோரிக்கைகள் வைக்கப்படவோ இல்லை. எனவே அங்கு சுதந்திரமான சுரண்டலை அரங்கேற்ற முடிகிறது. பாஜகவின் ஆட்சியாளர்கள், தங்களின் தொழிலாளர் விரோத சட்டங்களை மேலே குறிப்பிட்ட மாநிலங்களில்தான் பரிசோதித்து பார்த்தன. செங்கொடி அமைப்புகளின் எதிர்ப்பு இயக்கம் இல்லாத நிலையில், பரிசோதனை ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது.
மேற்படி பரிசோதனையின் நீட்சிதான் தற்போது இந்தியா முழுவதும், 2025 நவம்பர் 21 முதல் அமலாகும் என பாஜக அரசு அறிவித்த நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் ஆகும்.
தொழில்நுட்ப வளர்ச்சி, தொழிலாளர் உரிமைகளை பறிக்கிறது!
முதலாளித்துவ வளர்ச்சியில் நேர்மையான விவாதம் இருப்பதில்லை. தொழில்நுட்பம் மூலமான வளர்ச்சி, வேலைநேரத்தை குறைக்கவும், வேலைப்பளுவை குறைக்கவும் பயன்படுவதில்லை. மாறாக, தொழிலாளர் எண்ணிக்கையை குறைத்து, வேலைப்பளுவை அதிகப்படுத்துகிறது.
பாஜக ஆட்சி அப்பரெண்டிஸ் சட்டத்தை 2014இல் திருத்தியதை இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும். இயந்திரமயமாக்கல் அதிகரிக்கும்போது, மேலே குறிப்பிட்ட NAPS போன்ற அரசு உதவியுடன் கூடிய பயிற்சி தொழிலாளர்களை நிரந்தரமாகவே பயன்படுத்திட வழிவகை செய்துள்ளது.
காண்ட்ராக்ட் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் முறைப்படுத்தல் சட்டம், நிரந்தரப்படுத்துதல் சட்டம் ஆகியவற்றை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் புதிய சட்டத் தொகுப்புகள் அமைந்துள்ளது. அரசு அனுமதி பெறாமல் ஆலையை மூட முடியாது என்பதற்கான வரம்பை, 100 தொழிலாளர் எண்ணிக்கையில் இருந்து 300 ஆக உயர்த்தி உள்ளது. தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய, சம்மந்தபட்ட நிறுவனத்திற்கு முன்கூட்டியே தகவல் அளித்த அடிப்படையில் தான் செல்ல வேண்டும் என்பது, தொழிலாளர் விரோத, பாதுகாப்பு குறைபாடுகளைக் கொண்ட, முதலாளிகளை உஷார் செய்யும் ஏற்பாடு. மொத்தத்தில், தொழிலாளர் உரிமைகளை பறிக்க மட்டும் செய்யவில்லை. அரசின் கட்டுபாடுகள் இல்லாத சூழலை உருவாக்கி உள்ளது.
இந்தச் சூழலில் தொழில்வளர்ச்சியை ஆட்சியாளர்கள் தனித்து பேசுவதையே விரும்புகின்றனர். தொழில் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, தொழிலாளர் வளர்ச்சி, அது ஏற்படுத்தும் சமூக கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவற்றை இணைத்து மொத்தமாகப் பேசப்பட வேண்டியுள்ளது. பேசவைக்கும் பொறுப்பை செங்கொடி இயக்கம் தீவிரமாக முன்னெடுக்க வேண்டியுள்ளது.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply