
அரசியலைமைப்பும், வர்க்கப் பார்வையும் ஒழிக்கப்பட்ட வேலை உறுதிச் சட்டமும் !
பிருந்தா காரத்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்திற்கு (MGNREGA) பதிலாக ஜி-ராம்-ஜி என்ற சட்டம் இயற்றப்பட்டிருப்பது அனைவரும் நன்கு அறிந்ததே. இதுவரை நூறு நாட்கள் இருந்த வேலை உத்தரவாதத்தை 125 நாட்களாக உயர்த்துவதற்கான ஒரு ஆக்கபூர்வ நடவடிக்கையாக, மோடி அரசாங்கம் தனது பிரச்சாரங்களின் மூலம் இதை முன்னிறுத்தி வருகிறது. ஆனால், இந்த வாதம் பொய்யான, போலியான ஒன்று. வேலை நாட்களை உயர்த்திட, ஏற்கனவே உள்ள சட்டத்தில் ‘100 நாட்கள் வேலை’ என்ற சொற்களை திருத்தி ‘125 நாட்கள் வேலை’ என்று எழுதும், ஒரு எளிய திருத்தம் செய்தாலே போதுமானது என்கிறபோது, முழுச் சட்டத்தையும் மாற்ற அவசியமே இல்லை. எனவே, இந்த மாற்றத்தின் உண்மையான காரணம் வேறு.
முந்தைய வேலை உறுதிச் சட்டமும், முழுமையானதல்ல என்ற விமர்சனத்தை நாம் வைத்து வந்திருக்கிறோம். அது பல பகுதிகள் வலுவாக இருந்திருக்கலாம் என்று கடந்த 20 ஆண்டுகால அனுபவங்கள் காட்டுகின்றன. ஆனால், அந்த சட்டத்தை ரத்து செய்துவிட்டு, மோடி அரசாங்கம் இயற்றியுள்ள விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டத்தை (கிராமப்புறம்) (ஜி ராம் ஜி) நாம் கண்டிக்கிறோம். அதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.
முதலாவதாக, அரசியலமைப்பு அம்சங்களின் அடிப்படை. இரண்டாவதாக, அதன் நவதாராளமயக் கொள்கை அடிப்படை. மூன்றாவதாக, அதன் ஜனநாயக விரோத தன்மை. இக்கட்டுரை, இரு சட்டங்களையும் பற்றியான விரிவான ஆய்வாக அல்லாமல், இந்த மூன்று அம்சங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறது.
அரசியலமைப்பு அம்சம்
இந்திய அரசியலமைப்பின் 41வது அட்டவணை இவ்வாறு கூறுகிறது: “அரசு, தனது பொருளாதாரத் திறனுக்கும், வளர்ச்சியின் வரம்புக்கும் உட்பட்டு, வேலை செய்வதற்கான உரிமையை உறுதி செய்ய, திறம்பட்ட விதிகளை உருவாக்க வேண்டும்”. ஆனால், மோடி அரசாங்கம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (MGNREGA) ரத்து செய்ததன் மூலம், வேலை செய்யும் உரிமைக்கான மிகச் சிறு அங்கீகாரத்தைக் கூட நீக்கியுள்ளது. இந்த சமயத்தில், நாம் வேலை செய்யும் உரிமையை பற்றியும், அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட வரலாற்றுப் பின்னணியை அலசுவது பயன்படும்.
அரசியலமைப்பு அவையில் இந்தப் பிரச்சினை விவாதிக்கப்பட்டபோது, உறுப்பினர்களிடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்தன. இவை, அக்காலத்தில் நிலவிய வர்க்க/சமூக நலன்களின் முரண்பாடுகளைப் பிரதிபலித்தன. அந்த அரசியலமைப்பு அவைக்கான உறுப்பினர்கள், 1946-இல் மாகாண சபை உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட ஒரு மறைமுகத் தேர்தலின் மூலம் தீர்மானிக்கப்பட்டனர். அந்தத் தேர்தல்கள், வயதுவந்தோர் மக்கள் தொகையில் சுமார் பத்து சதவிகிதம் பேர் மட்டுமே கொண்ட மிகக் குறைந்த வாக்காளர் தொகுதியை அடிப்படையாகக் கொண்டிருந்தன. சொத்து வைத்திருந்தவர்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட அளவிலான கல்வித் தகுதி பெற்றிருந்தவர்கள் மட்டுமே இந்த தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தை இயற்றும் செயல்முறையிலிருந்து, உழைப்பாளி மக்களின் ஆகப்பெரும் திரள் விலக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக, அரசியலமைப்பு அவையின் சமூகக் கட்டமைப்பானது, பெரும்பாலும் சொத்துடைமை வர்க்கத்தினரையே கொண்டிருந்தது. அரசியல் ரீதியாக, 80 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சோசலிச சிந்தனைக்கு ஆழமான செல்வாக்கு இருந்தது. ரஷ்யாவில் நடைபெற்ற நவம்பர் புரட்சியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும் இந்த தாக்கம் நிலவியது. கம்யூனிஸ்டுகள் தலைமையேற்று நடத்திய போராட்டங்களில் உழைக்கும் மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்களின் மாபெரும் பங்கேற்பினால் இது மேலும் வலுப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்திய அரசியலமைப்பின் குறிப்பிட்ட பிரிவுகள் விவாதிக்கப்பட்டபோது, சோசலிச மனப்பான்மை கொண்ட உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை உரத்த முறையில் வெளிப்படுத்தினர்.
இப்படி நடைபெற்ற விவாதத்தின் ஆரம்பத்திலேயே வர்க்க நலன்களுக்கு இடையிலான முரண்பாட்டின் அறிகுறி தெளிவாக வெளிப்பட்டது. அரசியலமைப்பின் வெவ்வேறு பிரிவுகளுக்கான உறுதியான விவரங்களை வகுப்பதற்காக பல துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த குழுக்களில் அடிப்படை உரிமைகள் குழுவும் ஒன்றாகும். முதலாளித்துவ ஆதரவுக் கருத்துக்களில் தீவிரமாக இருந்தவரான வல்லபாய் படேல், இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். 1947ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி, அவர் தனது குழுவின் இடைக்கால அறிக்கையை அரசியலமைப்பு அவையில் முன்வைத்தார். அவருடைய முதல் கருத்து இதுதான்: “இது ஒரு முன்னுரை அறிக்கை அல்லது இடைக்கால அறிக்கை. ஏனெனில், அடிப்படை உரிமைகளை நிர்ணயிப்பது மற்றும் அவற்றை அரசியலமைப்பில் இணைப்பது குறித்த பிரச்சனையை பரிசீலிக்க கூடியபோது, முதலில், அடிப்படை உரிமைகளைப் பல பகுதிகளாகப் பிரிக்க முடிவு செய்தது. முதல் பகுதி நீதிமன்றத்தால் செயல்படுத்தக்கூடியது (justiciable), மற்ற பகுதி நீதிமன்றத்தால் செயல்படுத்த முடியாதது (non-justiciable). முதல் பகுதியைப் பரிசீலிக்கும்போதே, அரசியலமைப்பில் எந்த அடிப்படை உரிமைகளை இணைக்க வேண்டும் என்பது குறித்து எங்களால் ஒரு இறுதி முடிவுக்கு வர முடியவில்லை என்ற தீர்மானத்திற்கு அது வந்தது” என்றார்.
இவ்வாறு சொல்வதன் மூலம் பொருளாதார நீதியுடன் (economic justice) தொடர்புடைய அடிப்படை உரிமைகளை நீர்த்துப்போகச் செய்வதற்கோ, துரோகம் செய்யவோ, களம் அமைக்கப்பட்டது, ஏனெனில் அவற்றை நீதிமன்றத்தால் செயல்படுத்த முடியாதவையாக ஆக்குவது என்பது அந்த உரிமைகளைச் செயல்படுத்துவதற்கான சட்டப்பூர்வ வழியை மறுப்பதாகும்.
கே.டி.ஷாஹ், பிரமதா ரஞ்சன் தாக்கூர் மற்றும் வங்காளத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்டான சோம்நாத் லஹிரி போன்ற சில உறுப்பினர்கள் இவ்வாறு பிரிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வேலை செய்வதற்கான உரிமையை உதாரணமாகக் காட்டி லஹிரி கூறினார்: “நீங்கள் அதை நமது அடிப்படை உரிமைகளை விதியாக மாற்றினால், இயல்பாகவே அது நீதி விசாரணைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். நீதி விசாரணைக்கு உட்பட்ட உரிமைகள் எவை; பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் எவை என்பதற்கு இடையே நுணுக்கமான வேறுபாட்டை உருவாக்குவது தன்னிச்சையானதே ஆகும்…”
அடிப்படை உரிமைகளின் நீதிமன்ற தலையீட்டுக்கு உட்படாத ஒரு பகுதியைச் சேர்ப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்த அந்த “இடைக்கால அறிக்கை” ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடிப்படை உரிமைகளின் நீதிமன்ற விசாரணைக்கு உட்படாத பிரிவு, அரசியலமைப்பின் நான்காம் அத்தியாயத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் (Directive Principles) என்ற பெயரில் சேர்க்கப்பட்டது. இது ஒரு செயற்கையான பிரிவினையை உருவாக்கியது, அது இன்றும் நம்மைத் தொடர்கிறது.
இருப்பினும், இதில் மற்றொரு அம்சமும் உள்ளது. அரசமைப்பு அவையில் நடந்த விவாதத்தின் போது, உறுப்பினர்களில் ஒருவர் வழிகாட்டு நெறிமுறைகளை “உணர்வுகளின் உண்மையான குப்பைத்தொட்டி” என்று வர்ணித்தபோது, டாக்டர் அம்பேத்கர் வழிகாட்டு நெறிமுறைகளின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்பதை விளக்கிச் சொன்னார். அப்போது நீதிமன்ற செயலாக்கத்திற்கு அப்பாற்பட்டிருந்தாலும், அவை அரசாங்கங்களுக்கான “வழிகாட்டுதல்களின் கருவி” என்றும், “சமூக, பொருளாதார ஜனநாயகத்திற்கு இன்றியமையாதவை” என்றும் கூறினார். வழிகாட்டு நெறிமுறைகளின் பயன்பாடு தொடர்பான அரசியலமைப்பின் 37வது பிரிவில், அத்தியாயம் 4-இல் உள்ள விதிகள் “எந்த நீதிமன்றத்தாலும் அமலாக்க முடியாதவை என்றாலும், இதில் வகுக்கப்பட்ட நெறிமுறைகள் நாட்டின் நிர்வாகத்திற்கு அடிப்படையானவை; மேலும் சட்டங்களை இயற்றும்போது இந்த நெறிமுறைகளைப் பின்பற்றுவது அரசின் கடமையாகும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் இருந்துதான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (MGNREGA) பார்க்க வேண்டும்.
உழைக்கும் மக்களின் ஐம்பத்தைந்து ஆண்டுகாலப் போராட்டங்களும், வியத்தகு அரசியல் நிகழ்வுகளும் சேர்ந்து வளர்ச்சித் திட்டங்களுக்கும், குறிப்பாக, வேலை செய்யும் உரிமைக்கும் ஓரளவு நெருக்கமான ஒரு கொள்கை மாற்றத்தை உறுதி செய்ய வழிவகுத்தது. 2004 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியால் பெரும்பான்மை பெற முடியாமல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிடம் தோல்வியுற்றது. இதனால், முதன்முறையாக மத்திய அரசு இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவைச் சார்ந்திருக்கும் ஒரு சூழலுக்கு வழிவகுத்தது. முக்கியமாக, சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரிக் கட்சிகள் தம் சொந்தத் திட்டங்களின் அடிப்படையிலும், பலத்தின் அடிப்படையிலும் சுதந்திரமாகத் தேர்தலை எதிர்கொண்டன. இந்த அரசியல் கட்டமைப்பின் காரணமாகவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் சாத்தியமாகியது. 2005-இல் நாடாளுமன்றத்தால் ஒருமனதாக ஏற்று இறுதி செய்யப்பட்ட சட்டத்தை வடிவமைப்பதில் இடதுசாரிக் கட்சிகள் முக்கியப் பங்காற்றின.
அந்த சட்டத்தின்படி வேலை உறுதிச் சட்டம் மக்களின் தேவைக்கு ஏற்ப அமலாக்கப்பட்டதுடன், எல்லோருக்குமானதாக இருந்தது. இதனால் அந்த சட்டம் வேலை செய்யும் உரிமைக்கான ஒரு அங்கீகாரமாக அமைந்தது. அந்த சட்டத்தின்படி, வேலை 100 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டாலும் கூட, அது வேலைக்கான உத்திரவாதமாக அமைந்தது. தேவைக்கேற்ப வேலையை வழங்குவது அரசின் பொறுப்பு என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விதி வகுத்திருந்தது இன்னும் வலிமை சேர்த்தது. மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் உட்பட யார் வேண்டுமானாலும் வேலை உறுதிக்கான அட்டைகளைப் பெறலாம் – அதில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை; மேலும் பெண்களுக்குக் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு வேலை உறுதி செய்யப்பட்டது. முதலாளித்துவ உலகில் இது போன்ற சட்டத்திற்கு இதுவே முன்னோடியாக குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனால், இவை அனைத்தும் இப்போது மோடி அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளன. புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள ஜிராம்ஜி, தேவைக்கேற்ப அமலாக்கப்படுவதில்லை. மத்திய அரசு தனது மதிப்பீட்டின் அடிப்படையில், ஒரு நெறிமுறைக்குட்பட்ட ஒதுக்கீட்டின் மூலம், இதற்கான நிதியை தீர்மானிக்கிறது; அதைச் செயல்படுத்தக்கூடிய பகுதிகளும் மத்திய அரசாலேயே அறிவிக்கப்படும். எனவே, அவ்வாறு அறிவிக்கப்படாத பகுதியில் வசிக்கும் ஒரு தொழிலாளி வேலை கோரினால், வேலை வழங்கப்படாது; விவசாயத்தின் உச்ச பருவநிலையாகிய 60 நாட்களுக்கு, வேலைக்கான தேவை இருந்தாலும் ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் எந்த வேலையும் வழங்கப்படாது.
இதனால், கிராமப்புறத் தொழிலாளர்கள் தங்கள் விருப்பத்தின்படி வேலையை தேர்வு செய்யும் உரிமையை இழந்து, கிராமப்புற மேட்டுக்குடியினரால் நிர்ணயிக்கப்பட்ட கூலிக்கு, மேட்டுக்குடியினரின் தேவைக்கு வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதன் விளைவாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தால் (MGNREGA) கிடைத்து வந்த பேர வலிமையை அவர்கள் இழக்கிறார்கள். இவ்வாறு நிலவுடைமையாளர்களுக்கு ஆதரவாகத் தொழிலாளிக்கு எதிரான பாகுபாடு, அரசமைப்பின்படி அனைவருக்குமான சமத்துவ உரிமையை மீறுகிறது.
இது தவிர, தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி உள்ளிட்ட செலவுகள் அனைத்தையும் மத்திய அரசே ஏற்கும் என்றும், அதற்கான நிதியை மாநில அரசுகளோடு கலந்தாலோசித்து, அந்தந்த மாநில அரசாங்கங்களின் தொழிலாளர் பட்ஜெட் ஒதுக்கீட்டின்படி தேவையான நிதியை ஆண்டுதோறும் ஒதுக்க வேண்டுமென்ற நிலைமையை இப்போது மாற்றியுள்ளனர். இந்திய அரசமைப்பின் கூட்டாட்சிக் கோட்பாட்டை புதிய சட்டம் தலைகீழாக மாற்றியுள்ளது. இந்த திட்டத்திற்கான செலவுகளில் 60 சதவீதத்தை மட்டுமே மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள செலவினத்தை மாநில அரசுகளே ஏற்க வேண்டும்.
இவ்வகையில் புதிய சட்டமானது, இந்திய அரசமைப்பின் வழிகாட்டும் நெறிமுறைகளுக்கும், கூட்டாட்சி கோட்பாட்டுக்கும் எதிரான தாக்குதலாக அமைகிறது.
இடதுசாரிகள், இந்திய அரசமைப்புச் சட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் இடம்பெற்றுள்ள பொருளாதார நீதிக்கான பிரிவுகளை, நீதிமன்ற செயலாக்கத்திற்கு உட்பட்டதாகவும், அடிப்படை உரிமைகளில் ஒன்றாகவும் ஆக்குவதற்கான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். இன்றைய நிலைமை அதற்கான எடுத்துக்காட்டே ஆகும். முதலாளித்துவ வளர்ச்சியின் போக்கில், குறிப்பாக நவதாராளமய கொள்கைகளின் காலத்தில், அரசியலைமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டும் நேரடி விமர்சனம் அந்தப் பிரச்சாரத்தில் இடம்பெற வேண்டும்.
நவதாராளமய கொள்கைகளும், வளங்களின் மீதான உரிமையும்
முதலாளித்துவ சமூகங்களில் வாழும் உழைக்கும் மக்கள், தேச வளங்களில் தங்கள் நியாயமான பங்கை பெறுவதற்காக நடத்தும் போராட்டம், வர்க்கப் போராட்டத்தின் ஒரு முக்கியப் பரிமாணமாகும். உழைக்கும் வர்க்கங்களே தங்கள் உழைப்பின் வழியாக செல்வத்தை உருவாக்குகின்றன. மார்க்ஸ் தனது உபரி மதிப்பு கோட்பாட்டில் நிரூபித்தபடி, உழைப்பால் உருவாக்கப்பட்ட உபரியை மூலதனம் அபகரிப்பதுதான் முதலாளித்துவத்தின் லாபத்திற்கு அடிப்படை – தொழிலாளர்கள் உற்பத்தி செய்கிற மதிப்பில், அவர்களுடைய பராமரிப்புக்கும், உழைப்பு சக்தியின் மறுவுற்பத்திக்கும் தேவைப்படுவதைக் காட்டிலும் கூடுதலாக உற்பத்தி செய்வதே உபரியாகும். இந்த உபரியை பிரித்தெடுத்துக் குவிப்பதே முதலாளித்துவ அமைப்பிற்கும் அதன் சுரண்டலுக்கும் அடித்தளமாக விளங்குகிறது.
எனவே இந்த முதலாளித்துவ அமைப்புக்குள்ளேயே, சமூக உபரியின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மறுபகிர்வு செய்வதற்கான கட்டாயத்தை தொழிலாளர்கள் போராட்டத்தின் மூலம் முதலாளித்துவ அரசுகளுக்கு ஏற்படுத்துகிறார்கள். ‘மக்கள் நல அரசுகள்’ என்று அழைக்கப்படும் அமைப்புகளில், பெருநிறுவனங்களின் லாபங்களும் உயர்ந்த வருமானமுள்ளவர்கள் மீது விதிக்கப்படும் வரிகள் உள்ளிட்ட பல்வேறு வரிவிதிப்புகள் மூலம் திரட்டப்படும் நிதியை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பொதுச் செலவினங்கள் வழியாக, சமூக உபரியின் ஒரு பகுதி மக்கள் நல நடவடிக்கைகளுக்காக தரப்படுகிறது.
பல முதலாளித்துவ நாடுகளில் பொதுக் கல்வி, சுகாதாரச் சேவைகள், சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியங்களின் விரிவாக்கம் என்பது அரசாங்கங்களின் கருணையின் வெளிப்பாடு அல்ல. தொடர்ச்சியான தொழிலாளர் போராட்டங்களின் விளைவே அது. மேலும், சோசலிச அமைப்பின் இருப்பு காரணமாகவே, முதலாளித்துவ அமைப்புக்கு ஏற்படுகின்ற அழுத்தமும் இதுபோன்ற திட்டங்களுக்கான காரணியாக அமைந்தது. சோசலிச சமுதாயங்கள் வேலையின்மை நிலைமையையே ஆகப்பெரும்பாலும் இல்லாமல் ஆக்கிவிட்டன. வேலை செய்வதற்கான உரிமையை, சமுதாயத்தின் அடிப்படை உத்திரவாதமாக அங்கீகரித்தது சோசலிச சமூகங்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்று.
சோவியத் யூனியனும், சோசலிச முகாமும் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து முதலாளித்துவ கொள்கைகள் உக்கிரமாக உலகை ஆட்கொண்டது, அதிலிருந்து நவதாராளவாதக் கொள்கைகளின காலம் தொடங்கியது. முதலாளித்துவ உலகில் பெரும் போராட்டங்களின் மூலம் கிடைத்த சமூக நன்மைகளை மாற்றியமைத்து சிக்கன நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தனியார்மயம், தாராளமயம் (ஒழுங்குமுறைகளை நீக்குதல், வரிச் சலுகைகள்) ஆகியவை வேலையின்மைக்கும், பிற ஏற்றத்தாழ்வுகளும் கடுமைக்கும் வழிவகுத்தன. தொழிலாளர்களை ஒப்பந்த முறையில் பணியில் அமர்த்தும் முறை உருவானது. வேலையின்மைக்கான உதவித்தொகைகளையும் (unemployment allowances) பாதித்துள்ளது.
இணையதள தகவல்களின்படி, பிரிக்ஸ் (BRICS) நாடுகள் உட்பட பெரும்பாலான முக்கியப் பொருளாதார நாடுகள், அதிகாரப்பூர்வ முகமைகளில் பதிவுசெய்யும் வேலையற்றவர்களுக்கு ஏதாவது ஒரு வகையான உதவியை வழங்குகின்றன. இருப்பினும், இந்த முதலாளித்துவ நாடுகளில் இவ்வுதவிகளுக்காக தகுதி பெறுவதற்கான பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. முறைசாரா துறையை நோக்கி தள்ளப்படும் தொழிலாளர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் வேலையற்றவர்களில் 20 சதவீதத்திற்கும் குறைவானவர்களே உதவி பெறுகின்றனர். இந்தியாவில், இந்த உதவியும் கூட மறுக்கப்படுகிறது. உண்மையில், வேலையற்றவர்களுக்கான எந்தவொரு உதவித் திட்டமும் இல்லாத ஒரே முக்கியப் பொருளாதாரமாக இந்தியா மட்டுமே உள்ளது. வேலைவாய்ப்பை வழங்குவதில் அரசாங்கம் முழுமையாக தோல்வி அடைந்துள்ளது பற்றி எவ்வித பொறுப்பேற்றலும் இல்லை.
வேலை செய்வதற்கான உரிமை குறித்த பிரச்சனையும் வளங்களை அணுகும் சாத்தியம் பற்றிய பிரச்சனையும் பிரித்துப் பார்க்க முடியாதவை. சமூக, இயற்கை வளங்களை – நிலம், வனம், நீர், பொது முதலீடும், பொது உள்கட்டமைப்பும் – கொண்டே வேலை உருவாக்கப்படுகிறது. இந்த வளங்கள் சமூக கூட்டு உடைமையின், கூட்டு உற்பத்தியின் ஒரு பகுதி ஆகும்.
இந்த வளங்கள் அதிகமாக தனியாரிடம் குவிவது அல்லது மூலதன நலன்களையே முதன்மையாகக் கொண்டு திருப்பப்படும்போது – அரசால் வேலை உருவாக்கும் உத்திரவாதமோ, வாழ்வாதார உத்திரவாதமோ வழங்கும் திறன் பலவீனமாகிறது. இந்த நிலைக்கு மாறாக, சமூக உள்கட்டமைப்பை விரிவாக்கவும், உற்பத்திச் சொத்துக்களை உருவாக்கவும் பொதுவளங்கள் திரட்டப்படுமானால், அதுவே வேலை உருவாக்கத்திற்கும் வாழ்வாதாரப் பாதுகாப்பிற்கும் அடிப்படையாக அமையக்கூடும். இவ்வாறு வேலைவாய்ப்பை உருவாக்கிட, பொதுச்சொத்துக்களை உருவாக்க தேசிய வளங்களின் ஒரு பகுதியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தியதற்கான ஒரு சிறந்த உதாரணமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) இருந்தது.
ஆனால் மோடி ஆட்சிக் காலத்தில், 100 நாட்கள் உத்தரவாதமான வேலைக்கான இந்தச் சட்டத்திற்கான நிதி திட்டமிட்ட வகையில் பற்றாக்குறையாக்கப்பட்டது. சில ஆண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 சதவீதத்திற்கும் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டது. இதன் விளைவாக, அகில இந்திய சராசரி வேலை நாட்கள் 100 நாட்களுக்குப் பதிலாக வெறும் 45 முதல் 50 நாட்களாகவே இருந்தன. தேவை அதிகரித்த போதிலும், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்பட்டது.
2026-இல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, மொத்தம் 15.5 கோடி வேலை அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. அரசின் கூற்றுப்படி, அவற்றில் 8.63 கோடி அட்டைகள் செயல்பாட்டில் இருந்தன.
2025–2026 காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட சராசரி ஊதியம், மாநில அளவிலான வேறுபாடுகளுடன் 370 ரூபாயாக இருந்தது. ஆனால், இது பகுதி-ஊதிய (piece-rated) அடிப்படையிலான வேலை என்பதாலும், உற்பத்தித்திறன் விதிமுறைகள் மிக உயர்வாக இருந்ததாலும், தொழிலாளர்கள் — குறிப்பாகப் பெண் தொழிலாளர்கள் — முழு ஊதியத்தை அரிதாகவே பெற்றனர். பிப்ரவரி 2026 நிலவரப்படி, 2025–26 நிதியாண்டிற்கான தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தேசிய சராசரி ஊதியம், ஒருவருக்கு ஒரு நாளுக்கு வெறும் ₹244.78 மட்டுமே என்று அதிகாரப்பூர்வ தரவுகள் காட்டுகின்றன. ஒரு எளிய கணக்கீட்டின்படி, செயல்பாட்டில் உள்ள வேலை அட்டைதாரர்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்க சுமார் ₹2.8 லட்சம் கோடி தேவைப்படும். ஆனால், கோடிக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை விட, மோடி அரசின் பெருநிறுவன ஆதரவு நவதாராளவாதக் கொள்கைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.
வரி விதிப்புக் கொள்கைகளை எடுத்துக்காட்டாகப் பார்ப்போம். 2019-இல், மோடி அரசு பெருநிறுவன வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகக் குறைத்தது; இதனால் ஆண்டுக்கு சுமார் ₹1.28 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு கிடைத்த பதில்களின் அடிப்படையில் பெரு நிறுவனங்களுக்கு வரிச் சலுகையாகக் கொடுத்து இழந்த வருவாய் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சம் கோடி ரூபாய் ஆகும். 2020 முதல் இதன் ஒட்டுமொத்தத் தொகை ரூ. 6 லட்சம் கோடிக்கு அதிகமாகிறது. “பெரிய தொழில்கள் மற்றும் சேவைத் துறைகளுக்கான” வங்கிக் கடன் தள்ளுபடிகளை சேர்த்துக் கொண்டால், அதே காலகட்டத்தில் மேலும் ₹5.39 லட்சம் கோடி ரூபாய் அளவிலான இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில துறைகளுக்கான வரி விலக்குகள், நிலம் வழங்குவதற்கான மானியங்கள் உள்ளிட்ட பிற அனைத்து மானியங்களும் இந்தக் கணக்கீட்டில் சேர்க்கப்படவில்லை. கடந்த பத்தாண்டுகளாக, பெருநிறுவன வரிகளில் ₹14 லட்சம் கோடி மதிப்பிலான பெரிய நிலுவைத் தொகையும் உள்ளது.
மேலும், மிக முக்கியமாக, செல்வ வரி அல்லது வாரிசுரிமை வரி இல்லாத சில முதலாளித்துவ நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். சமீபத்திய மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் மொத்த தனியார் செல்வம் சுமார் ₹1,400–1,500 லட்சம் கோடியாக மதிப்பிடப்படுகிறது. உலக சமத்துவமின்மை ஆய்வகத்தால் தயாரிக்கப்பட்ட உலக சமத்துவமின்மை அறிக்கை 2026 (World Inequality Report) மற்றும் கிரெடிட் சூயிஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Credit Suisse Research Institute) உலகளாவிய செல்வ அறிக்கை ஆகியவற்றில் வெளிப்பட்டுள்ள ஒட்டுமொத்த செல்வ மதிப்பீடுகளின்படி, இந்தச் செல்வத்தில் சுமார் 40–41 சதவீதம் — அதாவது தோராயமாக ₹580–600 லட்சம் கோடி (சுமார் $7 டிரில்லியன்) — முதல் 1 சதவீதத்தினரிடம் குவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவினர்மீது மட்டும் ஆண்டுக்கு 2 சதவீத மிதமான செல்வ வரி விதித்தால்கூட, ஆண்டுக்கு சுமார் ₹11–12 லட்சம் கோடி (சுமார் $135–145 பில்லியன்) வருவாய் ஈட்ட முடியும். மேலும், இந்தச் செல்வத்தில் சுமார் 5 சதவீதம் ஆண்டுதோறும் வாரிசுரிமை மூலம் கைமாறுகிறது எனக் கொண்டால், அந்தப் பரிமாற்றங்கள் மீது மூன்றில் ஒரு பங்கு வாரிசுரிமை வரி விதிப்பதன் மூலம் கூடுதலாக ₹9–10 லட்சம் கோடி வருவாய் ஈட்ட முடியும்.
அமெரிக்கா உட்பட அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் 30 முதல் 50 சதவீதம் வரையிலான வாரிசுரிமை வரி உள்ளது; ஆனால் “புதிய இந்தியாவில்” அவ்வாறு இல்லை. செல்வந்தர்களான முதல் 1 சதவீதத்தினருக்கு மட்டும் விதிக்கப்படும் இந்த இரண்டு வரிகளும் இணைத்து கணக்கிட்டால் ஆண்டுதோறும் சுமார் ₹20–22 லட்சம் கோடியை திரட்ட முடியும். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 6–7 சதவீதத்திற்குச் சமமாகும். இதன் மூலம் பொது முதலீட்டின் மூலம், சமூகப் பாதுகாப்பான உத்திரவாதமான வேலையை உருவாக்க போதிய வளங்கள் கிடைக்கக் கூடும்.
கடுமையான விவசாய நெருக்கடியும் மாற்று வேலைவாய்ப்புகளுக்கான பற்றாக்குறையும் நிலவும் இக்காலகட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (MGNREGA) வேலைக்கான தேவை அதிகரித்து வருகிறது; மேலும் அது இன்னும் அதிகரிக்கும் என்பதையும் இந்திய அரசு நன்கு அறிந்துள்ளது. இதன் காரணமாகவே மோடி அரசு அந்த சட்டத்தை ரத்துச் செய்தது. ஏனெனில், விவசாயிகளில் ஒரு பிரிவினர் உட்பட கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு இதுவே ஒரே உயிர்நாடியாக உள்ளது. இவ்வாறு அதிகரிக்கும் செலவுகளை ஏற்க வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருந்தும், மோடி அரசு அதை ஏற்க விரும்பவில்லை.
பணக்காரர்கள் மீது வரிபோட்டு வருவாய் ஈட்டுவதா, ஏழைகளின் வாழ்வாதாரத்தில் ஒரு முக்கிய வழியை ரத்துச் செய்வதா என்ற கேள்விக்கு மோடி அரசு இரண்டாவது வழியை தேர்ந்தெடுத்துள்ளது.
நூறு நாள் வேலை திட்டத்தை நீக்கியதற்கான காரணம் எளிமையானதும் தெளிவானதும் ஆகும்: இது பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக ஆளப்படும் ஒரு அரசாங்கம்; தேசிய வளங்களை தனியார் லாபத்திற்காக ஒப்படைக்கும் ஒரு அரசாங்கம்.
ஒரு சிறந்த, வலிமையான ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான போராட்டம் என்பது, தேசிய வளங்களில் தமக்கான நியாயமான பங்கிற்கான போராட்டமாகும்; இது வர்க்கப் போராட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.
ஜனநாயகத்திற்கானப் போராட்டம்
டிசம்பர் 16 முதல் 21 வரையிலான ஐந்தே நாட்களில் மோடி அரசாங்கம் அவசர அவசரமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை ரத்துச் செய்தது. இவ்வாறு ரத்துச் செய்வது குறித்து கிராமப்புற ஏழைகளிடமோ, பெண்களிடமோ, பழங்குடியினரிடமோ, தலித் மக்களிடமோ விவாதிக்கவும் இல்லை. முன்கூட்டியே அறிவிக்கவும் இல்லை. பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்கள், பொதுவாக கருத்துக் கேட்புக்கும், ஆலோசனைக்கும் உட்படுத்துவது நாடாளுமன்ற நெறியாகும். இதற்காகவே, மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்படுகின்றன. நிலைக்குழு என்பது ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் சேர்ந்த பிரதிநிதிகளைக் கொண்டதாகும். அது பாதிக்கப்படுவோரின் கருத்துக்களை நேரில் கேட்கலாம். ஜி ராம் ஜி மசோதாவின் விவகாரத்தில், கிராமப்புறத் தொழிலாளர்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அவர்களது குரலும், அவர்களது பிரதிநிதிகளின் குரலும் கேட்கப்பட்டிருக்க வேண்டும். அதற்காக இந்த மசோதாவை ஊரக வளர்ச்சி நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை மோடி அரசு மீறியது. தனது கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதாவை நிறைவேற்றியது. ஒரு நாளுக்குள் குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் வழங்கியதன் மூலம், டிசம்பர் 21 அன்று ‘ஜி-ராம்-ஜி’ சட்டமாகியது.
இவ்வாறு, இந்தச் சட்டமே சர்வாதிகாரத்தின் தொட்டிலில் பிறந்ததாகும்; சட்டத்தை அவசரமாக நிறைவேற்றும் முனைப்பில், கிராமப்புற ஏழைகளின் குரல் கேட்கப்பட வேண்டிய அவர்களது உரிமையை புறக்கணித்ததன் மூலம், மோடி அரசு மக்களை அவமதித்துள்ளது. இக்கட்டுரையின் முந்தைய பகுதியில், விவசாயப் பருவத்தில் சட்டத்தின் கீழ் வேலை வழங்குவதைத் தடைசெய்யும் கிராம் ஜி சட்டத்தில் உள்ள விதி குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் மிகவும் ஜனநாயக விரோதமானது; ஏனெனில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGA) ஒரு தொழிலாளிக்கு தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்கியது. விவசாயப் பணிகளில் இயந்திரமயமாக்கல் காரணமாக வேலை நாட்கள் பெருமளவில் குறைந்துவிட்டன. இந்நிலையில், நூறு நாள் வேலை திட்டம் ஒரு மாற்று வாய்ப்பாக இருந்தது. இப்போது விவசாயப் பருவத்தில், நில உரிமையாளர்கள் விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தில் 60 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்று உறுதிசெய்யும் ஏதேனும் சட்டம் உள்ளதா? இல்லை — அத்தகைய எந்தச் சட்டமும் இல்லை. ஒரு நில உரிமையாளருக்கு எத்தனை நாட்கள், எந்தத் தொழிலாளிக்கு வேலை வழங்குவது என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது. ஆனால் தொழிலாளிக்கு அத்தகைய தேர்வு செய்யும் வாய்ப்பு இல்லை. எனவே, கிராமப்புற மேட்டுக்குடியினருக்கு ஜனநாயகம்; கிராமப்புறத் தொழிலாளிக்கு அடிமைத்தனம்.
மற்றொரு கண்டிக்கத்தாக்க அம்சம் என்னவென்றால், புதிய சட்டம் மேலிருந்து கீழ்நோக்கிய கட்டமைப்பாகவும், மிகவும் மையப்படுத்தப்பட்டதாகவும் உள்ளது. இது ‘விக்சித் பாரத்’ எனப்படும் திட்டத்தின் கட்டமைப்பிற்குப் பொருந்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சிக்கான தங்களின் முன்னுரிமைகளைத் தீர்மானிப்பதில் கிராமமும் அதன் கிராம சபையும் கொண்டிருந்த உரிமை முற்றிலுமாக புதைக்கப்பட்டுள்ளது. நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் (MGNREGA), கிராம சபைக்கு ஒரு பங்கும், பஞ்சாயத்துகளுக்கு முடிவெடுக்கும் பொறுப்பும் இருந்தன. இவை அனைத்தும் இப்போது முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டன.
இடதுசாரி ஜனநாயக முன்னணியின் (LDF) கீழ் இருந்த கேரளாதான் மக்கள் பங்கேற்பு திட்டமிடல் என்ற கருத்தாக்கத்திற்கு முன்னோடியாக இருந்தது. நூறு நாள் திட்டத்தில் அதன் ஒரு பகுதியாவது உட்படுத்தப்பட்டிருந்தது. இப்போது, பஞ்சாயத்தும் கிராம சபையும் டெல்லியின் கட்டளைகளால் மாற்றப்பட்டுள்ளன.
நாம் நடத்தும் எதிர்ப்புப் போராட்டங்கள் வெறும் ஒரு சட்டத்தைப் பற்றியவை மட்டுமல்ல; இது அரசியலமைப்பின் முக்கிய அம்சங்களுடனும், பொருளாதார நீதிக்கான போராட்டத்துடனும், ஜனநாயகக் கோட்பாடுகளை பாதுகாப்பதோடும் ஆழமாகப் பிணைக்கப்பட்டவை.
தமிழில் : ஸ்ருதி தேவ பிரகாஷ்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply