
நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ள பாஜக அரசு
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
அறிமுகம்
“நாடு பெரும் நெருக்கடியில் உள்ளது. நகைநட்டு வாங்காதீங்க. விமான பயணங்களை குறைச்சுக்கங்க. காருல போகாதீங்க. பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துங்க.” என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு “அறிவுரை” வழங்கியுள்ளார். இந்திய நாட்டில் விமானத்தில் பறப்பதும் சொகுசு காரில் வலம் வருவதும், தங்க, வைர நகைகள் பெருமளவில் வாங்குவதும், மொத்த மக்கள் தொகையில் எவ்வளவு சதவிகிதம் என்ற கணக்கு மோடி அவர்களுக்கு தெரியாதது அல்ல. மேலும், மோடி சொல்வதெல்லாம் நாட்டின் மக்கள் தொகையில் நூற்றுக்கு ஒருவர் அல்லது இருவருக்கு பொருந்தலாம். ஆனால் மிகப்பெரும்பான்மை மக்களுக்கு இவை எந்த வகையிலும் பொருந்தாது. இது மோடிக்கும் தெரியும். ஆனால் நாட்டை ஒரு மாமாங்கத்திற்கு (மாமாங்கம் என்றால் 12 ஆண்டுகள் என்பது கணக்கு. இப்பொழுதும் ஒன்றிய அரசை நடத்திவரும் பாஜக 2014 ஆம் ஆண்டில் இருந்து ஒன்றிய அரசை தன்வசம் வைத்துள்ளது.) ஆட்சி செய்துவரும் ஆர்எஸ்எஸ்-பாஜக அரசு பொருளாதார பிரச்சினைகளை தக்கவகையில் எதிர்கொண்டு மக்கள் வாழ்வை மேம்படுத்துவதற்குப் பதில் தனது கொள்கைகள் மூலமாக மக்களின் வாழ்வில் பெரும் துயரங்களை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இந்த மோசமான வரலாற்றை சுருக்கமாக விவரித்துவிட்டு இன்றைய நெருக்கடிக்கு வருவோம்.
நவதாராளமயம் 1991-2014
இந்தியாவில் தாராளமய கொள்கைகள் 1991இல் இருந்து ஏறத்தாழ 35 ஆண்டுகளாக அமலில் உள்ளன. இதில் பாஜக ஆட்சியின் 12 ஆண்டுகளில் அதிதீவிர நவ தாராளமய கொள்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இக்கொள்கைகளுக்கு மூன்று முக்கிய அம்சங்கள் உண்டு. ஒன்று தாராளமயம். இதன்படி தனியார் பெருமுதலாளி நிறுவனங்களுக்கு அரசால் விதிக்கப்பட்டிருந்த பல நெறிமுறைகளும் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன. இதனால், லாபம் மட்டுமே இலக்கு என்று செயல்படும் அன்னிய, இந்திய பெருநிறுவனங்களின் லாபம் குவிக்கும் வேட்டைக்காடாக இந்தியா ஆக்கப்பட்டது. இரண்டாவது அம்சம், தனியார்மயம். இதன்படி நீண்ட காலமாக நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துவரும் பொதுத்துறை நிறுவனங்கள் கூட தனியார் துறை பெரு முதலாளிகளுக்கு குறைந்த விலையில் விற்கப்பட்டன. தனியார்மயம் என்பதன் இன்னொரு முக்கிய அம்சம் அரசின் பொறுப்பு என்று கருதப்பட்டுவந்த கல்வி, ஆரோக்கியம், கட்டமைப்பு உருவாக்கம் உட்பட பல துறைகளில் தனியார் நிறுவனங்கள் லாப நோக்க அடிப்படையில் தங்கு தடையின்றி செயல்பட அனுமதிக்கப்பட்டன. இத்துறைகளில் அரசின் பொறுப்பும் பங்களிப்பும் பெருமளவு குறைந்துள்ளன. மூன்றாவது அம்சம் “உலகமயம்” என்பதாகும். இதன் ஒரு அம்சம் சரக்கு மற்றும் சேவைகளின் ஏற்றுமதி – இறக்குமதி பற்றியது. இதன்படி, “சுதந்திர வர்த்தகம்” என்ற பெயரில் சரக்குகள் மற்றும் சேவைகள் விற்பனை மீதான இறக்குமதி – ஏற்றுமதி கட்டுப்பாடுகள் பெருமளவிற்கு நீக்கப்பட்டன. இதனால் நமது சரக்கு ஏற்றுமதி மதிப்பைவிட மிக அதிகமான அளவிற்கு வெளிநாட்டு சரக்குகள் இறக்குமதி செய்யப்பட்டன. இதனால் இந்தியாவின் அந்நியச் செலாவணி பற்றாக்குறை கூடியது. மிக முக்கியமாக, தாராளமய காலத்திற்கு முன்பு மூலதன ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை இந்திய அரசு கட்டுப்படுத்தி வந்தது. ஆனால் தாராளமயத்தின் உலகமயம் என்ற அம்சத்தின்கீழ் நிதி மூலதனம் தங்கு தடையின்றி இந்தியாவிற்குள் நுழையவும் வெளியேறவும் அனுமதிக்கப்பட்டது. இதனால் சிலநேரங்களில் மூலதனம் ஊக வணிகத்தில் லாபம் தேடி இந்தியாவிற்குள் வருவதும், பின்னர் அதிக அளவில் வெளியேறுவதும் நடைமுறை ஆகியது. இந்த மூலதன வர்த்தக சூதாட்டத்தில் இந்திய செல்வந்தர்களும் பங்கேற்றனர். அண்மை ஆண்டுகளில் இந்திய பெரும் கம்பெனிகளும் இந்தியாவிற்குப் பதிலாக பிற பன்னாட்டு சந்தைகளில் தங்கள் நிதிகளை உற்பத்தியிலும் ஊக வணிகத்திலும் ஈடுபடுத்தி வருகின்றனர். இதனால் இந்தியாவின் அந்நியச் செலாவணி நிலமை மேலும் மேலும் சிக்கலாகி வருகிறது..
நெறிமுறைநீக்கல் என்ற தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயம் ஆகிய மேலே விவரிக்கப்பட்டுள்ள கொள்கைகள் அரசின் கட்டுப்பாடுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த இந்தியப் பொருளாதாரத்தை விடுவிக்கும்; பாய்ச்சல் வேகத்தில் இந்தியா வளரும்; ஜிடிபி என்று அழைக்கப்படும் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு உச்சத்தை எட்டும் என்ற கதையாடல் அரசாலும் பெருமுதலாளிகளின் ஊடகங்கள் வாயிலாகவும் பெருமளவிற்கு பரப்பப்பட்டது. இக்கொள்கைகளின் அடிப்படையில் இந்திய அந்நிய முதலாளிகள் “ஊக்கம்” பெற அவர்கள் மீதான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. அவர்களுக்கு மானியங்கள் வாரி வழங்கப்பட்டன. இதனால் அரசுக்கு ஏற்படும் வரி வருமான இழப்பை ஈடு கட்ட வேளாண்மையும், சிறுகுறுதொழில்களும் இதர உழைக்கும் மக்களும் பெற்றுவந்த சலுகைகளும் மானியங்களும் வெட்டப்பட்டன. தாராளமய கொள்கைகள் லட்சக்கணக்கான இந்திய விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளியது. 2004-2008 என்ற நான்கு ஆண்டுகளில் மட்டும் காங்கிரஸ் தலைமையிலான ஒன்றுபட்ட முற்போக்கு கூட்டணி ஒன்றிய அரசு இடதுசாரி கட்சிகள் ஆதரவு இன்றி ஆட்சியில் தொடர முடியாது என்ற நிலையை எதிர்கொண்ட பொழுது அரசிடமிருந்து விவசாயிகளுக்கும் சிறுகுறு தொழில்முனைவோருக்கும் இதர உழைப்பாளி மக்களுக்கும் சில சலுகைகளையும் நிவாரணங்களையும் போராடிப் பெற முடிந்தது. இது தவிர 1991-2014 காலத்தில் தாராளமய கொள்கைகளின் முழு தாக்குதலையும் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இடதுசாரிக்கட்சிகளின், குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியின், இடைவிடாத வர்க்க வெகுஜன போராட்டங்களாலும், அவர்கள் தலைமையிலான மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா மாநில அரசுகளாலும், இக்காலகட்டத்தில் ஓரளவிற்கு இது சாத்தியமும் ஆயிற்று. எனினும் ஒட்டுமொத்த கணக்கில் 1991-2014 காலத்தில் ஆட்சியில் இருந்த பல்வேறு ஒன்றிய முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசுகள் – நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த 1991-96 காங்கிரஸ் அரசு, 1996-98 ஐக்கிய முன்னணி அரசுகள், 1998-99 மற்றும் 1999-2004 காலத்தில் வாஜ்பாய் பிரதமராக இருந்த பாஜக தலைமையிலான என்டிஏ அரசு, பின்னர் 2004-2014 ஆட்சி செய்த இரு யுபிஏ அரசுகள் – இவை எல்லாம் பின்பற்றிய தாராளமய கொள்கைகளால் இந்தியாவின் அந்நியச்சார்பு அதிகரித்ததோடு இந்திய உழைக்கும் மக்கள் பெரும் துயரங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதில் ஐயமில்லை.
2014 ஆட்சி மாற்றம்
2014 தேர்தலில் ஆர்எஸ்எஸ்-பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று மோடி தலைமையில் ஒன்றிய அரசு அமைக்கப்பட்டது. இது ஒரு சாதாரண ஆட்சி மாற்றம் அல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆர்எஸ்எஸ் என்ற பாசிச தன்மை கொண்ட அமைப்பின் தலைமையிலும் வழிகாட்டலிலும் இந்த அரசு கடந்த 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அரசு தொடர்ந்து மிகத்தீவிரமான தாராளமய கொள்கைகளை பின்பற்றி வருகிறது. 2014-16இல் பன்னாட்டு சந்தைகளில் பெட்ரோலியம் கச்சா எண்ணய் விலை கணிசமாக குறைந்த பொழுது மக்களுக்கும் மாநில அரசுகளுக்கும் எந்த நிவாரணமும் அளிக்காமல் இவ்விலை குறைவால் கிடைத்த பணம் முழுவதையும் மோடி அரசு தன்வசம் வைத்துக்கொண்டது. 2016இல் நவம்பர் மாதம் மோடி அரசு எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, விவசாயிகள், சிறுகுறு தொழில்முனைவோர், அனைத்து முறைசாரா துறையினர், நகர்ப்புற, கிராமப்புற தொழிலாளர்கள் ஆகியோர் அனைவருக்கும் பெரும் பாதிப்பையும் சொல்லொணா துயரையும் ஏற்படுத்தியதை நாடு அறியும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் இந்த நடவடிக்கை கடுமையாக பாதித்தது. இதனை தொடர்ந்து 2017 ஜூன் 30 நள்ளிரவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜீஎஸ்டி) சட்டம் இயற்றப்பட்டது அடுத்த பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. மாநிலங்களின் வரிவிதிக்கும் உரிமையை மோடி அரசு பறித்துக்கொண்டது. ஜிஎஸ்டி ஒரு கொடிய மறைமுக வரி. அதன் பெரும் சுமை ஏழை மக்களின் மீதே விழுகிறது. மேலும் ஜிஎஸ்டி சட்டம் மாநிலங்களின் நிதி தன்னாட்சியை பெருமளவிற்கு அழித்தது.
செல்வந்தர்களுக்கும் இந்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கும் வரிச்சலுகைகளை வாரி வழங்கி வரும் மோடி அரசு, ஏழை மக்களின் மீது கூடுதல் சுமைகளை தொடர்ந்து ஏற்றி வந்துள்ளது. ஒவ்வொரு ஒன்றிய வரவு-செலவு அறிக்கையிலும், அதற்கு அப்பாற்பட்டும் செல்வந்தர்களுக்கு வரிச்சலுகைகள் அளிப்பதும் உழைக்கும் மக்கள் மீது வரிச்சுமைகளை அதிகரிப்பதும் மக்களுக்கு அத்தியாவசியமான மானியங்களை வெட்டுவதும் மோடி ஆட்சியின் இலக்கணங்களாக அமைந்துள்ளன.
சுய சார்பு அழிப்பு
கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தின் சுய சார்பு அம்சங்களை படிப்படியாக மோடி அரசு அழித்துவருகிறது. நாட்டின் சுயசார்பின் அச்சாணியே பொதுத்துறைதான். நாட்டின் சுயசார்புக்கு ஆகப்பெரிய பங்களிப்பை பொதுத்துறை செய்துவந்துள்ளது. ஆனால் மோடி அரசின் தொழிற்கொள்கைகள் இந்திய தொழில்துறையை மட்டுமின்றி, நாட்டின் அறிவியல்-தொழில்நுட்ப சுய சார்பு முயற்சிகளையும் கிடப்பில் போட்டுள்ளது. கேந்திரமான துறைகளில் விரிவாக்கத்திற்கும் நவீனமயமாக்கலுக்கும் தொழில்நுட்ப சுயசார்புக்குமான முதலீடுகள் செய்ய அரசு தவறியுள்ளது. சுயசார்பை குறிக்கும் இந்தி மொழி சொல் “ஆத்மநிர்பார்” என்பதை விளம்பர சொல்லாடலாக மட்டுமே மோடி அரசு பயன்படுத்துகிறது. பன்னாட்டு நிலைமைகளில் அண்மை மாதங்களில் ஏற்பட்டுள்ள சிக்கலான மாற்றங்கள் இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன என்பது உண்மை என்றாலும், இத்தகைய நிலைமைகளை எதிர்கொள்ளும் வலிமையை பெரிதும் குறைத்தது மோடி அரசின் அதிதீவிர தாராளமய கொள்கைகளும் பொதுத்துறை மற்றும் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் அவசியத்தை புறந்தள்ளிய அணுகுமுறையும் என்பதை நாம் உணர வேண்டும்.
சமகால நெருக்கடி
டொனால்ட் ட்ரம்ப் 2024இல் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் இருந்தே அமெரிக்க ஏகாதிபத்தியம் பன்னாட்டு சூழலை பதற்றமாக ஆக்கியுள்ளது. பன்னாட்டு வர்த்தகத்தை சீர்குலைக்கும் வகையிலும் அமெரிக்க முதலாளிகளின் நலனை முன்நிறுத்தியும் ட்ரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதர ஏகாதிபத்திய நாடுகளின் தலைவர்கள் அவ்வப்பொழுது சில பிரச்சினைகளில் முணுமுணுத்தாலும், அமெரிக்க வல்லரசின் மோசமான நடவடிக்கைகளை கண்டிக்க முன்வரவில்லை. மோடி அவர்கள் ட்ரம்ப் தனது நெருங்கிய நண்பர் என்று பிரகடனப்படுத்திக்கொண்டாலும் இந்திய அமெரிக்க வர்த்தக பேச்சு வார்த்தைகளில் திட்டவட்டமான முன்னேற்றம் எதுவும் இன்றுவரை நிகழவில்லை. பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை செய்துவரும் இஸ்ரேல் அரசும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் 2026 பிப்ரவரி 28இல் இருந்து ஈரான் நாட்டின் மீது பெரும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரான், இந்தியா இரண்டும் BRICS உறுப்பினர்கள். இவ்விரு நாடுகளுக்கிடையே நீண்டகால உறவு இருந்து வந்துள்ளது. ஆனாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையோ இஸ்ரேல் அரசையோ கண்டிக்க இந்திய அரசு முன்வரவில்லை. மறுபுறம் இந்தியா யாரிடம் இருந்து கச்சா எண்ணய் வாங்கலாம் அல்லது வாங்க கூடாது என்று ட்ரம்ப் உத்தரவு போடுகிறார். இந்தியாவின் இறையாண்மையை உரக்கச் சொல்லி ட்ரம்ப் உத்தரவை வெளிப்படையாக மறுக்க இந்திய அரசு தயாராக இல்லை. ஐக்கிய நாடுகள் அவையிலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து பேச இந்திய அரசு முன்வரவில்லை.
சரியும் ரூபாய், வெளியேறும் மூலதனம்
பல பத்தாண்டுகளாக தொடரும் தாராளமய கொள்கைகளாலும் மோடி அரசின் தீவிர தாராளமய கொள்கைகள், பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல பொருளாதார நடவடிக்கைகளாலும் இந்தியாவின் சுய சார்பும் இறையாண்மையும் மேலும் பலவீனமடைந்துள்ளன. இவற்றோடு இன்னொரு விஷயத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமது நாடு 1947 இல் விடுதலை பெற்ற பிறகு 1966 ஜூன் ஐந்தாம் தேதி முடிய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக மாறாமல் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் நிதி மூலதனம் நம் நாட்டின் எல்லைகளை கடந்து லாபம் தேடி கட்டுப்பாடின்றி பயணிக்கும் வாய்ப்பு கிடையாது. மூலதன ஊக வணிகம் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தாராளமய கொள்கைகளை 1991 இல் துவங்கி அமலாக்கிவரும் கடந்த பல பத்தாண்டுகளில் படிப்படியாக கட்டுப்பாடுகளை அடுத்தடுத்து வந்த ஒன்றிய அரசுகள் தளர்த்தியுள்ளன. இதனால் இந்தியா பன்னாட்டு சரக்கு வர்த்தகத்தில் ஏற்றுமதி செய்யும் மதிப்பை விட இறக்குமதி செய்யும் அளவு மிக அதிகம். சேவை ஏற்றுமதி (பிரதானமாக தகவல் தொழில்நுட்பத்துறை) இறக்குமதியை விட அதிகமாக இருப்பதால் சரக்கு வர்த்தகத்தில் ஏற்படும் பள்ளத்தை ஓரளவு ஈடு கட்ட முடிகிறது. வெளிநாடுகளில் வாழும் இந்திய உழைப்பாளி மக்கள் இந்தியாவில் வசிக்கும் தமது குடும்பங்களுக்கு அனுப்பும் பணம் நமது நாட்டுக்கு கிடைக்கும் முக்கிய அந்நிய செலாவணி. இதுவும் நமது நாட்டின் அந்நியச் செலாவணி கணக்கை சமன் செய்ய உதவுகிறது. ஆனால் இதன் பின்பும் பல நேரங்களில் அந்நிய செலாவணி கணக்கில் பள்ளம் விழும். இத்தகைய பின்புலத்தில் இந்தியா உள்ளிட்ட பல வளரும் நாடுகள் அந்நிய நிதி மூலதனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றனர். பன்னாட்டு அரங்கில் பதற்றமான சூழல் ஏற்பட்டால் அந்நிய மூலதனம் வளரும் நாடுகளில் இருந்து பணக்கார நாடுகளுக்கு பாய்ந்துவிடும்.
கடந்த ஓராண்டு காலமாக இந்தியாவில் இருந்து அந்நிய மூலதனம் கணிசமான அளவில் வெளியேறியுள்ளது. இதற்கு பதற்றமான பன்னாட்டு சூழலும் ஒரு காரணம். ரிசர்வ் வங்கி கையில் கணிசமான அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளதாக சொல்லப்பட்டாலும் (ஒரு கணக்கின்படி 10 மாதங்களின் இறக்குமதிக்கு சமமான அந்நிய செலாவணி கையிருப்பு ரிசர்வ் வங்கியிடம் உள்ளதாம்) இப்போதுள்ள பதற்ற நிலையும் ஏற்றுமதி-இறக்குமதி இடைவெளி தொடர்வதும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பை தொடர்ந்து மேலும் சரிவுக்கு இட்டுச்செல்லும். கடந்த பல மாதங்களாக அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வேகமாக சரிந்து வருகிறது. அண்மையில் ஒரு அமெரிக்க டாலருக்கு ரூபாய் 96 என்ற நிலை ஒருநாள் இருந்தது. ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக சரிவது என்பது விலை உயர்வுக்கு இட்டுச் செல்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் டீசல் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் பலமுறை இந்தியா அரசால் உயர்த்தப்பட்டுள்ளன. பொதுத்துறை பெட்ரோலியம் கம்பனிகள் பெரும் நட்டத்தை சந்திப்பதாக அரசு அலறுகிறது. உண்மையில் எரிபொருட்களின் விலைகளில் பெரும்பங்கு வகிப்பது ஒன்றிய அரசு வசூலிக்கும் வரிகள் தான். ஒவ்வொரு முறை பன்னாட்டு சந்தையில் பெட்ரோல் கச்சா எண்ணய் மற்றும் இதர பெட்ரோலிய பொருட்கள் விலைகள் உயரும் பொழுதும் விலைகளை உயர்த்தி மக்களை தாக்குவது அரசின் கொள்கையாக உள்ளது.
தாராளமயமாக்கல் தீர்வல்ல
பன்னாட்டு பொருளாதாரத்தில் ஏகாதிபத்தியம் ஆற்றிவரும் பங்கை காண மறுக்கும் தாராளவாத பொருளாதார வல்லுனர்கள் சிலர், இந்தியா இன்று எதிர்கொண்டு வரும் ரூபாய் மதிப்பு சரிவு, அந்நியச்செலாவணி நெருக்கடிக்கு சரியான தீர்வு எப்படியாவது பன்னாட்டு பெருமுதலீட்டாளர்களுக்கு மேலும் சலுகைகள் அளித்து அவர்களை இந்தியாவிற்குள் ஈர்ப்பதுதான் என்று வாதிடுகின்றனர். இது முற்றிலும் தவறான நிலைபாடு. பல பத்தாண்டுகளாக இத்தகைய நிதி தாராளமயகொள்கைகளை பின்பற்றியது இன்று நாடு சந்திக்கும் நெருக்கடிக்கு முக்கிய காரணம். நெருக்கடியின் சுமைகளை இந்தியாவின் உழைக்கும் மக்களின் மீது திணித்து, பன்னாட்டு ஊக மூலதனத்திற்கு மேலும் சலுகைகளை வாரி வழங்கி, வேலையின்மை, தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் மறுப்பு, வேளாண் நெருக்கடி, வறுமை, பணவீக்கம் உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளை புறந்தள்ளி பயணிக்கச் சொல்லும் நிபுணர்கள் அறிவுரைகளை நிராகரிப்போம்.
அண்மைக்கால பன்னாட்டு நிகழ்வுகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகளும் இந்திய பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளன. ஆனால் அவை மட்டுமே நெருக்கடிக்கு காரணமல்ல. இந்திய விடுதலைக்குப்பின் இந்தியப் பெருமுதலாளிகளின் தலைமையில் முதலாளித்துவ – நிலப்பரபுத்துவ அரசு அமலாக்கிவரும் முதலாளித்துவ வளர்ச்சிப்பாதை நெருக்கடிகளை மீண்டும் மீண்டும் உருவாக்கும். இந்தியா முப்பத்தைந்து ஆண்டுகளாக பின்பற்றிவரும் தாராளமய கொள்கைகள், கடந்த 12 ஆண்டுகளின் அதி தீவிர தாராளமயம் என்ற பாதை நிராகரிக்கப்படவேண்டும். உலகெங்கும் தாராளமய கொள்கைகள் நெருக்கடிகளை தீவிரப்படுத்தி வேலையின்மையை பூதாகாரமாக வளர்த்து கிராக்கியை சரிய வைத்து பல நாடுகளில் மக்களால் நிராகரிக்கப்பட்டு வருகின்றன. பல மேலை நாடுகளிலும் வேலையின்மையும் வாழ்க்கைத்தர சரிவும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. தற்சமயம் மாறிவரும் பன்னாட்டு வர்த்தக நெறிமுறைகள் உலகமயப் பாதையுடன் முரண்படுகின்றன. இது அமெரிக்க அரசின் இன்றைய கொள்கைகளை மட்டும் சார்ந்த விஷயம் அல்ல. 2008ஆம் ஆண்டில் இருந்தே உலக முதலாளித்துவத்தின் பொருளாதார சிக்கல்கள் தீவிரமாகி வந்துள்ளன. பன்னாட்டு வர்த்தகமும் பொருளாதார உறவுகளும் ஏகாதிபத்திய முகாமின் முரண்பாடுகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றன. அடுத்தடுத்து வரும் மேலைநாட்டு தேர்தல் முடிவுகள் ஏகாதிபத்திய முகாம் நாடுகளிலும் பிற முதலாளித்துவ நாடுகளிலும் நிலவும் நெருக்கடியை உணர்த்துகின்றன. இத்தகைய சூழலில் பன்னாட்டு பெரு நிதி மூலதனத்திடம் நாட்டை ஒப்படைப்பது என்பது தற்கொலைக்கு ஒப்பாகும். மாறாக, உலகமய கொள்கைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இதன் பொருள் நவீன வளர்ச்சியை நிராகரிப்பதல்ல. நாட்டின் இறையாண்மை, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தல், அனைத்து மக்களுக்கும் அடிப்படை தேவைகளை நிறைவு செய்தல், உழைப்பாளர்களின் ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றிற்கு முதன்மை முன்னுரிமை தரப்படவேண்டும். இவை பொதுத்துறையை வலுப்படுத்துதல், இறக்குமதி/ஏற்றுமதி உறவுகளை நாட்டின் சுயசார்பு என்ற இலக்கிற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்தல், கட்டற்ற, நாடுகளின் எல்லை கடந்த நிதி மூலதன நகர்வுகளை முடிவுக்கு கொண்டுவந்து, தக்க நெறிமுறைகளுக்கு உள்ளாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமே சாத்தியம்.
இப்பாதையை நோக்கிச் செல்ல பெரும் வர்க்க வெகுஜன இயக்கங்களும் போராட்டங்களும் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் தொழிலாளி-விவசாயி கூட்டணி அடிப்படையில் நிகழ்வதே இதன் துவக்கமாக இருக்க முடியும். இந்திய விவசாயிகளும் தொழிலாளி வர்க்கமும் இப்பாதையில் தீவிரமாக களம் இறங்கியுள்ள எழுச்சிமிக்க சூழலில் இப்பாதையில் பயணிப்பதே தீர்வாகும்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply