
சீனாவின் ஐந்தாண்டு திட்டம் சாதிப்பது எப்படி?
அபிநவ் சூர்யா
மக்கள் சீன குடியரசு 2025-இல் தனது 14-வது ஐந்தாண்டு திட்டத்தை நிறைவு செய்து, 15-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் அடியெடுத்து வைக்கிறது. 2026-30 காலத்திற்கான துல்லியமான திட்ட குறிக்கோள்கள் மார்ச் மாதத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளால் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்பாக, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது மத்தியக் குழுவின் நான்காவது ப்ளீனம் கூட்டம் நடத்தப்பட்டு, 15-வது ஐந்தாண்டு திட்டத்திற்கான பிரதான பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இதற்கு முன்பாக, மக்கள் மத்தியில் பரவலான விவாதங்கள் நடத்தப்பட்டு, கருத்துக்கள் கேட்கப்பட்டது. சுமார் 31 லட்சம் பரிந்துரைகள் மக்களால் சமர்ப்பிக்கப்பட்டு, சீன குடியரசின் தலைவர் ஷி ஜின்பிங் அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படும் பல்வேறு துறைகளும் இவற்றை பரிசீலித்தன. இது சீனாவில் நிலவும் மக்கள் ஜனநாயகத்தின் வலிமையை உணர்த்துகிறது.
ஏற்கனவே சீனா “சோசலிச நவீனத்துவம்” என்ற இலக்கை 2035ஆம் ஆண்டுக்குள் எட்டவேண்டும் என்றும், 2049-க்குள் “நவீன சோசலிச சமூகத்தில்” அடியெடுத்து வைக்க வேண்டும் என்றும் இலக்குகள் நிர்ணயித்துக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த இலக்குகளை எட்டுவதற்கு சில ஆண்டுகளே மீதமுள்ள நிலையில், சீனாவின் 15-வது ஐந்தாண்டு திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் மட்டுமே தேசத்தின் வளங்களை திறம்பட கையாண்டு, மக்கள் நலவாழ்வையும் நீண்ட கால இலக்குகளையும் அடைய முடியும் என்பதில் மக்கள் சீனம் உறுதியாக உள்ளது. 14-வது ஐந்தாண்டு திட்டத்தின் பிரதான முனைப்பானது “உயர்தர வளர்ச்சி” என்பதாக இருந்தது. இதற்காக முன்மொழியப்பட்ட 250 இலக்குகளில், 86% முழுமையாக எட்டப்பட்டுள்ளது. அடுத்து வருகின்ற ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய இலக்கு “நவீன தரத்திலான உற்பத்தி சக்திகளை வளர்ப்பது” ஆகும்.
சீனாவின் தனித்துவம் என்ன?
அனைத்து நாடுகளும் தான் “நவீன வளர்ச்சி அடைய வேண்டும்”, “ஏஐ (செயற்கை நுண்ணறிவு)” வளர்ச்சியும்-பரவலான பயன்பாடும் அடைய வேண்டும் எனக் கூறுகின்றன. ஆனால் சீனா போன்ற சோசலிச திட்டமிடல் பின்பற்றப்படும் நாடுகளில்தான் அதை அடையும் ஆற்றலும் இருக்கும் என்பதுதான் அதன் தனித்துவம்.
“சமரசமின்றி பொதுத்துறைகளை வளர்த்தெடுப்பது. பொதுத்துறை அல்லாத துறைகளுக்கு ஆதரவும் வழிகாட்டுதலும் அளிப்பது” – இதுவே சீனாவின் திட்டமிட்ட வளர்ச்சிப் பாதையின் மையக்கருத்து ஆகும். இதுவே அங்கு சட்டமாகவும் இயற்றப்பட்டுள்ளது.
சீனாவில் நுகர்வோர் பண்டங்கள்/சேவை சார்ந்த துறைகளில்தான் தனியார் நிறுவனங்கள் அநேகம். ஆனால் கேந்திரமான துறைகளில் பெரும்பான்மை பொதுத்துறை கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மொத்த மூலதனத்தில் 55% பொதுத்துறை நிறுவனங்களிடம் உள்ளன. இங்கே “இலாபக் குவிப்பு” ஆதிக்கம் செலுத்திட முடியாது. மக்கள் வளர்ச்சி மற்றும் நாட்டின் சுயசார்பை கணக்கில் கொண்ட அரசின் வழிகாட்டுதலுக்கு இணங்கத்தான் தனியார் துறை செயல்பட இயலும். இதனால்தான், “ஏஐ பரவலாக்கத்தை அடைய வேண்டும்” என்ற முடிவை, செயல்படுத்தும் ஆற்றலை சோசலிசம் வழங்குகிறது என்கிறோம்.
அதேசமயம், சீனாவின் ஐந்தாண்டு திட்டங்களுடைய சாதனைகளுக்கு காரணம், இவ்வாறான பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே என்று சுருக்கிவிட முடியாது. சோசலிசத்தை நோக்கி பயணிக்கும் ஒரு நாட்டில், பல்வேறு அம்சங்கள் ஒன்றிணைந்துதான் திட்டமிட்ட வளர்ச்சியை சாத்தியமாக்குகின்றன. அதில் மூன்று முக்கியமான அம்சங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம். அவை, 1) அதிகார பரவலாக்கல், 2) அரசு கட்டுப்பாட்டில் நிதித்துறை, 3) கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை. இவற்றின் மூலமே சோசலிச திட்டமிடல் சீனாவை உயரத்திப்பிடிக்கின்றது.
- அதிகாரப் பரவலாக்கல்
சீன நாட்டின் பரந்துபட்ட நிலப்பரப்பில், 56 தேசிய இனங்கள் ஒன்றாக வாழ்கின்றன. எனவே இங்கு அதிகார பரவலாக்கல் மிகுந்த முக்கியத்துவம் பெருகிறது. சீன நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 3 “மத்திய அரசின் ஒன்றுபட்ட தலைமையின் கீழ், பிராந்திய-உள்ளாட்சி அரசாங்கங்களின் முயற்சிகளும் செயல்பாடுகளும் முழுமையாக ஊக்குவிக்கப்படும்” எனக் குறிப்பிடப்படுகிறது.
முடிவுகள் எப்போதுமே இயன்றளவு கீழ்மட்ட அளவில் எடுக்கப்படுவதும், பிராந்திய-உள்ளூர் கிளைகளின் உத்வேகம் மேலோங்கி இருப்பதும் முக்கியம் என்பதை 1956 ஆம் ஆண்டிலேயே மாவோ குறிப்பிட்டார்.
சீனாவில் பிராந்திய-உள்ளூர் அரசாங்கங்கள் மக்கள் நல்வாழ்வுக்கான பண்டங்கள்-சேவைகள் வழங்குவதோடு, பொருளாதார உற்பத்தியில் நேரடியாக செயல்படும் மிகப்பெரும் அதிகாரங்கள் கொண்டவையாக உள்ளன. தேசிய பாதுகாப்பு, ராணுவம், மற்றும் வெளியுறவு ஆகிய துறைகளை தவிர்த்து, மற்ற அனைத்துத் துறைகளிலும் முடிவுகள் மேற்கொள்ளும் அதிகாரம் பிராந்திய-உள்ளூர் அரசாங்கங்களிடம் உள்ளன. இதனால், தேசிய அளவில் உருவாக்கப்படும் ஐந்தாண்டு திட்டங்கள் நிறைவேறுவது பிராந்திய-உள்ளூர் அரசாங்கங்கள் கையில்தான் உள்ளது.
குறிப்பாக, பிராந்திய அரசாங்கங்களுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களும், பொதுத்துறை வங்கிகளும், முதலீட்டு நிறுவனங்களும் அந்த பகுதியில் தனியார் முதலீடுகளை தீர்மானிக்கின்றன. மேலும் நகர்ப்புற நிலம் முழுவதும் பிராந்திய அரசாங்கங்களுக்கே சொந்தம் என்பதால், உருவாகும் ஆலை/நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் உறைவிடம், நல்வாழ்வு அனைத்திற்கும் இந்த பிராந்திய அரசாங்கங்களே பொறுப்பேற்கின்றன.
மேலும் முக்கியமாக, நவதாராளமய கொள்கைகள் சொல்வதற்கு நேர்மாறான விதத்தில், பிராந்திய அரசாங்கங்களே கடன் பெறுவதன் மூலம், தங்கள் பட்ஜெட் வரவு செலவுக்கு வெளியிருந்து நிதி சேகரித்து, அதன் மூலம் தங்கள் வளர்ச்சிக் குறிக்கோள்களை அடையும் முழு அதிகாரத்துடன் உள்ளனர். (இதையே பல நவதாராளமய ஆதரவு விமர்சகர்கள் சீனாவின் பிராந்திய அரசாங்கங்களின் கடன் பற்றிய விமர்சனத்தை பூதாகரமாக ஊதிப் பெரிதாக்கி முன்வைக்கிறார்கள்)
சீன சோசலிச கட்டுமானத்தின் முக்கிய அம்சமாக அமைந்த இந்த அதிகாரப் பரவலாக்கல், “திட்டமிட்ட வளர்ச்சியின்” தனித்துவமான அம்சமாகும். ஒட்டுமொத்த நாட்டின் நிலைமையையும், உலக நிலைமைகளையும் கணக்கில் கொண்டு திட்டமிடும் மத்திய அரசு தேசிய அளவிலான ஐந்தாண்டு திட்டத்தை உருவாக்குகிறது. பிராந்திய-உள்ளூர் அரசாங்கங்கள் அதனை வழிகாட்டியாக வைத்து, தங்கள் பகுதிக்கேற்ப பல நவீனத்துவத்தை கொண்டு வருகின்றன. அவ்வாறு கிடைக்கும் வெற்றிகளை அடுத்த ஐந்தாண்டு திட்டம் நாட்டுக்கு முன் மாதிரியாக வைக்கிறது. இவ்வாறாக உள்ளூர் ஞானத்தை முன்னுக்கு கொண்டு வரும் பிராந்திய அரசாங்கங்களின் திறனும், இந்த ஞானம் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் மத்திய அரசாங்கத்தின் திறனும் ஒன்றோடொன்று பிணைந்து செயல்படுகின்றன.
- அரசின் கட்டுப்பாட்டில் நிதித்துறை
சீனா “சோசலிச சந்தை பொருளாதாரம்” என்ற உத்தியை 1978 முதல் கடைப்பிடிக்க துவங்கியது. அதன் பிறகு நாட்டின்-மக்களின் நலனிற்கேற்ப தனியார் மூலதனம் செயல்படும்படி உறுதி செய்வதில், அரசின் நிதித்துறை மீதான கட்டுப்பாடு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. சீனாவின் வங்கித்துறையில், ஐந்து மிகப்பெரும் அரசுடைமை தேசிய வங்கிகளும், பல்வேறு பிராந்திய அரசுகளின் வங்கிகளும் மாபெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன (தனியார் வங்கிகள் மிக சொற்ப அளவே உள்ளன). நாட்டிலுள்ள உற்பத்தி-சேவை நிறுவனங்கள் அனைத்தும் தங்களின் முதலீட்டிற்கு 60% இந்த வங்கிகளையே சார்ந்திருக்கின்றன.
இந்த பொதுத்துறை வங்கிகள், அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கின்றன. இந்த பொதுத்துறை கூட்டு என்பது சந்தையில் மக்கள் தேவையை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமால், கிராக்கியை நிலைநாட்டவும், நீண்ட கால நோக்கிலான கட்டுமானம் மற்றும் நவீன தொழிற்நுட்பங்களில் முதலீடு செய்து, புதிய பண்டங்களுக்கான சந்தையை உருவாக்கவும் செய்கின்றன.
மேலும் வங்கிகளிடமிருந்து பெறப்படும் கடனுக்கான வட்டி விகிதம் பொதுத்துறை நிறுவனங்களை விட தனியார் நிறுவங்கங்களுக்கு அதிகம் ஆகும்! தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் மொத்த கடனிலும் கூட, பாதிக்கும் மேலான கடன்கள் சிறு-குறு நிறுவனங்களுக்குத்தான் செல்கின்றன. வங்கிகளிடம் கடன் வாங்காமல், தனியார் பெருநிறுவனங்கள் பங்குச் சந்தையில் பாண்டு பத்திரம் விற்று கடன் வாங்கலாம் என நினைத்தால், அங்கும் பொதுத்துறை நிறுவனங்களை விட அதிக வட்டி கொடுக்க வேண்டும் என்ற நிலைமையை பராமரிக்கிறார்கள்.
இதைத் தவிர, அரசாங்க நிதி நிறுவனத்திடம் கடன் வாங்க முனையும் தனியார் நிறுவனங்களில், பல நேரங்களில் தேசிய-பிராந்திய அரசாங்கங்களே பங்குதாரராகவும் மாறுகின்றன. 2019 வரையில், தனியார் துறையில் உள்ள 50% மூலதனத்தில், ஏதோ ஒரு வகையில் அரசு நேரடியாக முதலீடு செய்துள்ளது.
ஒரு சோசலிச சமுதாயத்தில், அரசின் செயல்பாடு “தேசிய பொருளாதாரத்தின் திட்டமிட்ட வளர்ச்சிக்கான வள ஒதுக்கீடு” சார்ந்து இருப்பதாக ரஷ்ய சோசலிச குடியரசின் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார். சீனா அரசு கொண்டுள்ள “நிதி மூலதன” கட்டுப்பாடு இதை சாத்தியமாக்குகிறது. தனியார் நிறுவனங்களே கூட இறுதியாக, “திட்டமிட்ட வளர்ச்சிக்” குறிக்கோள்களின் அடிப்படையில் தமது முதலீட்டை எப்படி செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நிலையில் சீன அரசு உள்ளது.
இதன் காரணமாக, சோசலிச சந்தை பொருளாதாரத்தில் “பரிமாற்ற மதிப்பு” (இலாபம்) ஆதிக்கம் செலுத்தாமல், “பயன் மதிப்பு” (நாடு-மக்களின் தேவை) தான் ஆதிக்கம் செலுத்துகிறது.
- கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை
சீனாவில் அரசாங்கத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் கட்சி முக்கிய பங்கு வகிப்பது பற்றியும், பிரத்யேகமாக கள அளவில் நாட்டின் வளர்ச்சிக் குறிக்கோள்களை நோக்கி மக்களை திரட்டுவதிலும், குறிப்பாக அண்மைக் காலங்களில் ஊரகப் பகுதிகளின் மறுமலர்ச்சியிலும், அதீத வறுமை ஒழிப்பிலும் சீன கம்யூனிஸ்ட் கட்சி வகித்த மையமான பாத்திரம் பற்றி மார்க்சிஸ்ட் இதழில் ஏற்கனவே விரிவாக விவாதித்துள்ளோம்.
இதைத் தாண்டி, சோசலிச சந்தை பொருளாதாரத்திலும் கட்சிக்கு முக்கிய பாத்திரம் உண்டு – அந்த குறிக்கோளில்தான் தனியார் நிறுவனங்களுக்குள் கட்சி கிளைகளின் விரிவாக்கம் நடக்கிறது. 2012-இல் தோழர் ஷி ஜின்பிங் தனியார் துறையில் கட்சியின் வலு குறைவாக இருப்பதை குறிப்பிட்டார். அன்று முதல் தனியார் துறையில் கட்சிக் கிளைகளை விரிவாக்குவதில் சீனா முனைப்பு காட்டி வருகிறது. 2018-இல், சீனாவின் பங்குச்சந்தை கண்காணிப்பு ஆணையம், அனைத்து நிறுவனங்களும் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் உருவாவதை ஊக்குவிக்க வேண்டும் என ஆணையிட்டது. 2021-இல் நாட்டின் பிரதான 500 தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் பல கட்சிக் கிளைகள் உருவாகிவிட்டன. இந்த கட்சிக் கிளைகளின் உறுப்பினர்கள் தனியார் நிறுவனங்களின் தலைமை நிர்வாகக் குழுக்களிலும் கூட இடம்பெற்றுள்ளனர். இது கார்ப்பரேட் துறையிலும் கூட, கட்சியின் பொருத்தமான தலையீட்டை நிலைநாட்டுகிறது.
உதாரணமாக, கட்சிக் கிளைகள் வலுவாக உள்ள தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து அதிக கான்ட்ராக்ட்டுகள் பெறுவதோடு, பெரும் பொதுத்துறை நிறுவனங்களுடன் கூட்டு உற்பத்தியும் மேற்கொள்ள முடிகிறது. கட்சிக் கிளைகள் வலுவாக உள்ள நிறுவனங்கள் அதிக அளவில் நவீன ஆராய்ச்சிகளுக்காக செலவிடுவதாகவும், இந்த நிறுவனங்களில் உயர்மட்ட அதிகாரிகள் / சராசரி தொழிலாளர் இடையேயான ஊதிய பாகுபாடு குறைவதாகவும் ஆய்வுகள் காட்டுகின்றன.
இவ்வாறாக, சோசலிச சந்தை பொருளாதாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பாத்திரம், கார்ப்பரேட் நிறுவனங்களின் முடிவுகள் அரசின் திட்டமிட்ட வளர்ச்சிக் குறிக்கோள்களை ஒட்டி இருப்பதை உறுதி செய்கிறது.
இதுவரை சீனாவில் ஐந்தாண்டு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த உதவும் பிரதான அமைப்புசார் அம்சங்களைப் பற்றி அறிந்தோம். அடுத்ததாக, சீனா செயல்படுத்தவுள்ள 2026-30 ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களைக் காணலாம்.
சோசலிச திட்டமிடலும் மக்கள் நலனும்
மக்கள் சீனத்தின் ஐந்தாண்டு திட்டங்கள், மக்கள் நல்வாழ்வை உறுதி செய்வதில் மாபெரும் பங்காற்றியுள்ளன. 7-வது திட்டத்திற்குள் அனைவருக்கும் உணவும் உடையும் உறுதி செய்தல் என்பதிலிருந்து, 13-வது திட்டத்திற்குள் வறுமையை முற்றிலுமாக ஒழித்து, 14-வது திட்டத்தில் அனைவருக்கும் முதுமைக்கால காப்பீட்டை உறுதி செய்துள்ளது மக்கள் சீனம்.
15-வது திட்ட காலத்தில், நவீன வளர்ச்சியின் பலன், முழுமையாக உள்நாட்டு மக்கள் நுகர்வாக மாற்றுவதே பிரதான குறிக்கோள் ஆகும். குறிப்பாக, கல்வி மற்றும் சுகாதார பொது சேவைகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களைவதும், பொருளாதாரத்தில் உள்நாட்டு நுகர்வின் பங்கை உயர்த்துவதும், உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாக்குவதும் கவனம் பெறுகின்றன. ஏஐ போன்ற நவீன தொழிற்நுட்பங்கள் முதியவர் பராமரிப்பு பண்டங்களிலும், இளையோர் ஆரோக்கியம் கூட்டும் பண்டங்களிலும் அதிவேகமாக இணைக்க முன்னெடுப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
2006-லிருந்தே சீனாவில் பொருளாதாரத்தில் ஏற்றுமதியின் பங்கு குறைந்து, உள்நாட்டு நுகர்வு அதிகரிக்கத் துவங்கியது. 14-வது திட்டத்தில் (பொருளாதாரத்தில்) “இருவகை சுழற்சி”, அதாவது ஏற்றுமதிகளோடு சேர்ந்து, உள்நாட்டு முதலீடுகளிலும் கவனம் செலுத்துவது என்பது கொள்கையாக இருந்தது.
இப்போது அமெரிக்கா வர்த்தக வரிகளை ஏகாதிபத்திய ஆயுதமாக்கியுள்ள நிலையில், 15-வது திட்டத்தில் உள்நாட்டு நுகர்வு மையப்புள்ளியாக நகரவுள்ளது. குறிப்பாக, சமீப காலமாக, சீனாவின் ஊரகப் பகுதிகளின் வளர்ச்சி மற்றும் ஊரக நுகர்வை உயர்த்துதல் கவனம் பெறுகிறது. 14-வது திட்ட காலத்தில், ஊரக-நகர்ப்புற நுகர்வு ஏற்றத்தாழ்வு 10% குறைந்தது. ஊரக பொருளாதாரத்தை நவீனத்துவப்படுத்தும் முயற்சியில், வேளாண்மையில் 75% பயிர் வளர்ப்பு மற்றும் அறுவடை எந்திரமயமாக்கப்பட்டுள்ளன. 90% கிராமங்கள் வரை 5-ஜி இணைப்பை சீனா அடைந்து, மற்றும் பின் தங்கிய வட கிழக்கு பகுதிகளிலும் நவீன உற்பத்தி துறைகளை புதுப்பித்துள்ளது. 15-வது திட்ட காலத்தில் இது கூடுதல் கவனம் பெறும்.
சோசலிச திட்டமிடலும் சுயச்சார்பும்
சோசலிச திட்டமிடுதலின் பிரதான குறிக்கோள்களில் ஒன்று “சுயசார்பு” ஆகும். கடந்த இருபதாண்டுகளாக சுயசார்பை நோக்கி தீவிரமாக பயணிக்கும் சீனா, தொழிற்நுட்ப வளர்ச்சி மற்றும் சுயசார்பில் எவ்வளவு சாதனைகளை படைத்துள்ளது என்பதை அவ்வப்போது கேள்விப்படுகிறோம். ஆனால் நவீன தொழிற்நுட்பங்களை கண்டுபிடித்தால் மட்டும் போதாது, அது பொருளாதாரத்தில் ஊடுருவி, பொருளாதார சுயசார்பை நிலைநாட்ட, திட்டமிட்ட வளர்ச்சி தேவை என்பதை சீனா நன்கு அறிந்துள்ளது. ஏஐ தொழிற்நுட்பம் அதிவிரைவாக வளர்ந்து வரும் இந்த காலத்தில், 15-வது திட்ட காலத்திற்குள் ஏஐ என்பது மின்சாரம் போல பரவலாக பிரயோகிக்கப்படும் தொழிற்நுட்பமாக மாற்றப்படுவதே குறிக்கோள்.
2023-இல் சீனாவில் “எவர்கிராண்டே” ரியல் எஸ்டேட் நெருக்கடி ஏற்பட்ட பின்பு, “நிஜ பொருளாதாரம்” (அதாவது நிதி/ரியல் எஸ்டேட் போன்ற ஊக வணிக பொருளாதாரம் அல்லாத துறைகள்) மேலோங்கி இருப்பதன் சிக்கல் மிகத் தீவிரமாக அனைத்து மட்டங்களிலும் உணரப்பட்டது. இதன் பின்னர் குறிப்பாக உற்பத்தி துறையின் பங்கு வீழ்ச்சி அடைவது சுயசார்பிற்கு ஆபத்தானது என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது (சீனாவில் பொருளாதாரத்தில் உற்பத்தி துறையின் பங்கு 2010இல் 30%-க்கும் அதிகமாக இருந்தது, இன்று 25%-ஆக உள்ளது; இந்தியா 15%-த்தை தாண்ட திணறுகிறது).
எனவே ஏஐ போன்ற தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி, உற்பத்தி துறையை, குறிப்பாக 80% பங்குள்ள பாரம்பரிய உற்பத்தி துறையை (“பாரம்பரிய” உற்பத்தி என்றால் கைத்தறி நெசவு போல அல்ல. எந்திரங்கள் கொண்டு உற்பத்தி செய்யப்படும் ஜவுளி உற்பத்தியும் பாரம்பரிய உற்பத்தி துறை தான்) நவீனத்துவமாக்குவதே 15-வது திட்டத்தின் நோக்கம்.
மேலும் சூழலுக்கு பாதுகாப்பான “பசுமை” தொழிற்நுட்பங்களிலும் சீனா முன்னோடியாக இருப்பதை நாம் அறிவோம். ஏற்கனவே உலகில் “பசுமை” தொழிற்நுட்பங்கள் மூலம் அதிகபட்ச மின்சார உற்பத்தி செய்வது சீனா தான். பருவ நிலை மாற்றத்தின் தாக்கத்தை கையாள்வதில் உலகில் பெரும்பங்கு ஆற்றுவது சீனா தான். அந்த பாதையில் முன்னேறி, “பசுமை” தொழிற்நுட்பங்களை ஆலை உற்பத்தி துறையில் முழுமையாக இணைப்பதும், 2030-க்குள் புதிதாக எழும் மின்சார தேவையில் பெரும்பாலானவற்றை “புதுப்பிக்கவல்ல” ஆற்றல்கள் (காற்று, சூரிய சக்தி போல) மூலம் பூர்த்தி செய்வதும் இந்த ஐந்தாண்டு திட்டத்தின் குறிக்கோள்கள்.
தொழிற்நுட்ப சுயசார்பில் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறி வந்தாலும், அடைய வேண்டிய முன்னேற்றங்கள் அநேகம் என சீனா நன்கு அறியும். உதாரணமாக, சர்வதேச கண்டுபிடிப்புகள் குறியீட்டில் 2025-இல் தான் சீனா முதல் 10 இடங்களில் வந்துள்ளது. பொருளாதாரத்தில் தீவிர ஆராய்ச்சிகள் சார்ந்த துறைகளின் (தகவல் & தொலைத்தொடர்பு தொழிற்நுட்பம், மருந்து உற்பத்தி போன்ற துறைகள்) பங்கு சீனாவில் 13% — இது ஐரோப்பாவில் 17%-ஆகவும், அமெரிக்காவில் 24%-ஆகவும் உள்ளன. சீனா கடக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது. எனவே தான் “நவீன தர உற்பத்தி சக்திகள்” என்ற குடையின் கீழ், தொழிற்நுட்ப மற்றும் நிஜப் பொருளாதார சுயசார்பு மற்றும் நவீனத்துவம் 15-வது திட்ட காலத்தில் மையக் கருப்புள்ளியாக உருவெடுத்துள்ளது.
சோசலிச திட்டமிடலும் ஏகாதிபத்திய எதிர்ப்பும்
ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த்து நிற்கும் ஆற்றலையும் சீனாவிற்கு அளிப்பது அதன் திட்டமிட்ட வளர்ச்சியே. இதற்கு சில எடுத்துக்காட்டுகளே போதுமானது. “ஜெனரேட்டிவ் ஏஐ” துறையில் சேட் ஜிபிடி, கூகிள் ஜெமினி ஏ. போன்ற மேற்கத்திய நிறுவனங்களின் ஏகபோகத்தை உடைத்த டீப் சீக் எனப்படும் பொதுத்துறை பல்கலைக்கழகத்திலிருந்து வந்த ஏ.ஐ. நிறுவனமாகட்டும். ஏஐ தொழிற்நுட்பத்திற்கு அவசியமான “சிப்”-களையும், அதை உற்பத்தி செய்ய தேவையான “லித்தோகிரஃபி” எந்திரங்களையும் மேற்கத்திய நாடுகள் சீனாவிற்கு அளிக்க மறுத்த போது, சொந்த நாட்டிலேயே “சிப்”-களை உருவாக்கியது மட்டுமல்லாமல், “லித்தோகிரஃபி” எந்திர தயாரிப்பிலும் சுயசார்பை எட்டுவதை சீனா நெருங்கியுள்ளது ஆகட்டும், இவை அனைத்துமே சோசலிச திட்டமிடல் மற்றும் வழிகாட்டுதல் மூலமே சாத்தியமானது.
இந்த திட்டமிட்ட வளர்ச்சி அளித்த ஆற்றலின் காரணமாகத் தான், இன்று வர்த்தக வரிகளை கொண்டு மிரட்டும் அமெரிக்காவையும், ராணுவ மிரட்டல்கள் விடும் ஜப்பானையும் திறம்பட கையாண்டு, வளரும் நாடுகளுக்கு தலைமை தாங்கும் நிலையில் சீனா உள்ளது. சீனாவின் ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடிநாதத்தில் உள்ளது “ஐந்தாண்டு திட்டம்” என்றால் மிகையாகாது.
இந்தியா என்ன செய்கிறது?
மேம்போக்கான பார்வையில் பார்த்தால், சீனாவும், இந்தியாவும் ஏறத்தாழ ஒரே சமயத்தில் “திட்டமிட்ட வளர்ச்சி”யை கையிலெடுத்தன. ஆனால் இந்தியாவில் ஐந்தாண்டு திட்டங்கள் இருந்த வரையிலும் கூட அவை மக்கள் நல குறிக்கோள்களை எட்ட முடியவில்லை. இந்திய ஆளும் வர்க்கத்திற்கும், முதலாளித்துவ வளர்ச்சிக்கும் தேவையான வளங்களை திரட்டும் நோக்கிலேயே “திட்டமிட்ட வளர்ச்சி” முழக்கங்கள் பயன்படுத்தப்பட்டன. உற்பத்தி உறவுகளை புரட்சிகரமாக மாற்றி அமைக்கும் திட்டம் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு இல்லை.
முதலாளித்துவ பாதையை ஏற்றுக்கொண்ட இந்தியாவில், ‘திட்டமிடல்’ என்பது தனியார் பெருமுதலாளிகளின் லாப நோக்கத்தோடு இயைந்ததாக அமைந்தது. அதே சமயம், தொடக்க ஆண்டுகளில் பொதுத்துறை உருவாக்கம், உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற பல அம்சங்களில் ஐந்தாண்டு திட்டங்கள் தாக்கம் செலுத்தின. ஆனால், அந்த கொஞ்ச நஞ்ச நோக்கங்களும் நவதாராளமய காலத்தில் கைவிடப்பட்டன. மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அதனை முற்றாக கைவிட்டுவிட்டது.
சுதந்திர போராட்டத் காலத்திலிருந்தே “திட்டமிடலை” எதிர்த்த ஆர்.எஸ்.எஸ்., அதை “தீய சோசலிசம்” என வசை பாடியது. இப்போது, ஆட்சி அதிகாரத்தில் தமக்குள்ள பிடியை பயன்படுத்தி முற்போக்கு மரபுகளை அழித்துக் கட்டி, இந்து ராஷ்டிர கனவை நனவாக்கும் நோக்கத்தில் வேகமெடுக்கிறது. அதனால்தான் அது திட்ட ஆணையத்தை ஒழித்தது. கேரள இடது ஜனநாயக அரசாங்கம் திட்டமிடலின் நல்ல அம்சங்களை பாதுகாத்து முன்னெடுக்க முயற்சித்தால் அதுவும் தடுக்கப்படுகின்றது. உதாரணமாக, கேரள அரசாங்கம் மக்கள் நல மற்றும் கட்டுமான செலவீனங்களுக்காக “கிஃப்பி” (KIIFB) என்ற அமைப்பை துவங்கி, பட்ஜெட் வரவு செலவிற்கு வெளியிருந்து நிதி திரட்டியபோது, அதையும் தடுத்து நிறுத்தியது மோடி அரசு.
சர்வதேச நிதி மூலதனத்தின் தலைமையிலான, நவதாராளமயத்தின் நல்ல சேவகனாகவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய கூட்டாளியாகவும் இருப்பதுதான் இவர்களின் விருப்பமாகும். அதனாலேயே, அமெரிக்காவின் வர்த்தக வரி விதிப்பிற்கு எதிர்ப்புச் சொல்லாமல், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, இந்திய உழைக்கும் மக்களின் நலனை சமரசம் செய்துள்ளனர். சுயச்சார்பு நோக்கிலும் எந்த முன்னெடுப்பும் இல்லை.
இப்படியான போக்கிலிருந்து ஒரே மாற்று, சோசலிசம் தான். முதலாளித்துவச் சுரண்டலுக்கு முடிவுகட்டி, அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியை சாதிக்க விரும்பும் சக்திகளுக்கு, சோசலிச மாற்றே ஒரே மாமருந்து.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply