
நவஜவான் பாரத் சபாவும் புரட்சியாளர்களின் தத்துவார்த்த வளர்ச்சியும்
ச. லெனின்
உலக வரலாற்றில் இளைஞர்களுடைய எழுச்சியின் விளைவாகவே ஆதிக்கத்திற்கு எதிரான போர்க்குரல்கள் வலிமைபெற்றன. இளம் இத்தாலியர்கள், இளம் ஐரிஷ், இளம் துருக்யர்கள் என இளைஞர்களின் எழுச்சி உலகெங்கும் வளர்ந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அதன் தாக்கம் இந்தியாவிலும் வெளிப்பட்டது. இதனை முன்மாதிரியாகக் கொண்டு இளம் இந்தியர்கள் என்கிற பெயரில் அமைப்பை உருவாக்க பஞ்சாபைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் திட்டமிட்டனர். அதில் சிலர், அமைப்பின் பெயரை ஆங்கிலத்தில் அல்லாமல் இந்துஸ்தானியில் வைக்கவேண்டும் என்று கூறினர். இந்துஸ்தானி மற்றும் ஆங்கிலம் என இரண்டிலும் அதற்கு பெயர் வைக்கலாம் என்கிற அடிப்படையில் ‘நவஜவான் பாரத் சபா‘ என்று இந்துஸ்தானியிலும் இளம் இந்தியர்கள் கழகம் (Young Indian Association) என ஆங்கிலத்திலும் பெயர் வைக்கப்பட்டது.
1924 ஆம் ஆண்டு நோயுற்ற தனது பாட்டியை பார்ப்பதற்காக பகத்சிங் லாகூர் வந்தார். அதையடுத்து அங்கேயே தங்கி கல்லூரி செல்ல ஆரம்பித்தார். தேசிய கல்லூரியில் அவர் படித்துவந்த காலத்தில் அங்கிருந்த போராசிரியர்கள் இளைஞர்கள் மத்தியில் கல்வி அறிவை மேம்படுத்துவதோடு தேசிய உணர்வை ஊட்டும் எண்ணத்தோடு ஒரு அமைப்பை துவக்கினர். அதுவே நவஜவான் பாரத் சபா என்று அக்கல்லூரியின் அப்போதைய முதல்வரும் அந்த இளைஞர் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவருமான சப்லி தாஸ் கூறியதாக ஆய்வாளர் சம்மன் லால் தெரிவித்துள்ளார். பேராசிரியர்கள் ராம் சந்தர், பகத் சிங், பகவதி சரண் வோரா உள்ளிட்டோர் இதன் தொடக்க காலத்தில் தீவிரமாக பணியாற்றினர். ராம் சந்திராவும் 1924இல்தான் நவஜவான் பாரத் சபா தொடங்கப்பட்டதாக கூறுகிறார் என்கிறார் சம்மன் லால். மேலும், 1925இல் அமைப்பிற்கான திட்டமும் இறுதிப்படுத்தப்பட்டுவிட்டதாக கூறுகிறார். இவையெல்லாம் இருந்தபோதும், அமைப்பின் உண்மையான செயல்பாடு 1926இல் தான் தொடங்கியது. அதைத்தான் பகத்சிங்கின் சக தோழர் சிவவர்மா, 1926 இல்தான் நவஜவான் பாரத் சபா தொடங்கப்பட்டதாக பதிவு செய்துள்ளார்.
தெளிந்த பார்வை
நவஜவான பாரத் சபாவின் முதல் செயலாளராக பகத்சிங், தலைவராக குருதத் வித்யார்த்தி, பிரச்சார செயலர் மற்றும் பொருளாளராக பகவதி சரண் வோராவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். குருதத் வித்யார்த்தியின் செயல்பாட்டின்மையின் காரணமாக அவர் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு ராம் சந்திரா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1926 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பல்வேறு இடங்களில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டதின் விளைவாக அமைப்பின் கிளைகள் பல்வேறு நகரங்களில் தொடங்கப்பட்டன.
சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் அதன் அடிப்படையிலான செயல்பாட்டுக்களையும் அமைப்பு முன்னெடுத்தது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் என அனைவருக்கும் சமபந்தி உணவு பரிமாறுதல் நடந்தப்பட்டுள்ளது. சைவம் மற்றும் அசைவம் என இரண்டு உணவுகளும் தனித்தனியே தயாரிக்கப்பட்டு யாருக்கு எது வேண்டுமோ அவர்களுக்கு அது பரிமாறப்பட்டுள்ளது. உணவு என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். யாரும் யார் மீதும் உணவு கட்டுப்பாடு அல்லது உணவு திணிப்பை மேற்கொள்ளக்கூடாது என்பதை அமைப்பு இதன்மூலம் வலியுறுத்தியது. நூறு ஆண்டுகளுக்கு முன்னதாக செயலால் உணர்த்தப்பட்ட இச்செய்தி இன்றைய மதவாத ஆட்சியாளர்களுக்கு உணர்த்தப்பட வேண்டியுள்ளது.
மத நம்பிக்கை என்பது ஒருவரது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது என்று தனது அமைப்பின் திட்டத்திலேயே மிகத்தெளிவாக நவஜவான் பாரத் சபா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த தெளிந்த பார்வை இன்றைக்கும் நமக்கு வழி காட்டுகிறது. நவஜவான் பாரத் சபாவின் மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் அதன் தெளிந்த பார்வையை எடுத்துரைத்தன. அரசியலிலிருந்து மதத்தை விலக்கி வைக்க வேண்டும்; மதம் என்பது ஒருவரது தனிப்பட்ட விஷயம்; மதவாத அமைப்புகளுடன் உள்ளவர்கள் நவஜவான பாரத் சபாவில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள்; தீண்டாமைக்கு எதிரான சட்டம் வேண்டும் என்பன போன்றவை தீர்மானங்களின் முக்கிய அம்சங்களாகும்.
சித்தாந்த அடித்தளம்
கத்தார் கட்சியின் கதாநாயகனாக விளங்கிய கர்த்தார் சிங் சாராபாயின் புகைப்படத்தை நவஜவான் பாரத் சபா முழுமையாக தனது அமைப்பின் செயல்பாடுகளில் பயன்படுத்தியது. கர்த்தார் சிங்கின் புகைப்படத்தை தனது இறுதிநாள்வரை பகத்சிங் தன்னுடன் வைத்திருந்தார். நவஜவான் பாரத் சபாவிற்கு முந்தைய புரட்சிக் குழுக்கள் எல்லாம் தேச விடுதலை என்கிற உணர்வு வயப்பட்ட நிலையிலிருந்து மட்டும் செயல்பட்டபோது தனிநபர் சாகசங்களைக் கடந்து சிந்தாந்த அடித்தளத்தோடு நவஜவான் பாரத் சபா செயல்பட்டது.
சிந்தாந்த அடித்தளமும் வெகுமக்கள் தளத்தில் பிரச்சாரமும் அதன் வலுவை அதிகப்படுத்தின. இந்த குணாம்ச ரீதியான மாற்றத்திற்கு பகத்சிங்கின் பங்களிப்பு கூடுதலாக இருந்தது என்பதை சிவவர்மா பதிவு செய்துள்ளார். லாலா ஹர்தியால் எழுதிய ‘தேசங்களின் செல்வ வளம்’, ஏக்னஸ் எழுதிய இந்தியாவும் அடுத்தக்கட்ட போரும், சப்லி தாஸ் எழுதிய ‘பாரத மாதாவின் தரிசனம்’ எனும் மூன்று நூல்களை பிரச்சார கையேடாக உருது மொழியில் நவஜவான பாரத் சபா வெளியிட்டதை ‘பகத்சிங்கும் அவரது தத்துவமும்’ எனும் நூலில் எஸ். ஆர். பக்ஷீ தெரிவித்துள்ளார். மேலும், மே 10, 1857இல் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியை அந்த ஆண்டு கொண்டாடுவதென முடிவு செய்து செயலாற்றினர்.
நவஜவான் பாரத் சபாவிற்குள் இரண்டு கருத்தாக்கங்கள் இருந்ததாக சப்லி தாஸ் பதிவு செய்துள்ளார். உடனடி தாக்குதலை முன்வைத்த ஐரிஷ் கருத்தாக்கமும், சித்தாந்த அடித்தளத்துடன் ஒருமுகப்படுத்தப்பட்ட சோசலிசத்தை முன்வைத்த ரஷ்ய கருத்தாக்கமும் இருந்துள்ளது. பகத்சிங் துவக்கத்தில ஐரிஷ் கருத்தோடு நின்றதாகவும் பின்னர் ரஷ்ய கருத்தாக்கத்தோடு நிலைபெற்றதாகவும் சப்லி தாசின் பதிவு கூறுகிறது. 1927இல் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி எஸ்.ஏ. டாங்கே, பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் பிலிப் ஸ்ப்ராட் மற்றும் வங்க புரட்சியாளர் பூபேந்திர நாத் தத்தா (விவேகானந்தரின் தம்பி) ஆகியோரும் நவஜவான் பாரத் சபாவின் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றியுள்ளனர். நவஜவான் பாரத் சபா, இளைஞர்களின் களமாக அமைந்தது. விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரையும் செயல்படத் துண்டும் மையமாக நவஜவான் பாரத் சபா திகழ்ந்தது. பகத்சிங்கை ஒரு பேச்சாளராக, எழுத்தாளராக, அமைப்பாளராக, போராளியாக வளர்த்தெடுக்கும் பணியை நவஜவான் பாரத் சபா செய்தது. தனது வேலைத் திட்டத்தை விரிவுபடுத்திக்கொண்ட பகத்சிங், 1928 செப்டம்பர் முதல் தனது பணியை இந்துஸ்தான் சோசலிச குடியரசுக் கழகத்தில் செலுத்தத் தொடங்கினார்.
சோசலிச சிந்தனைக்கு
பகத்சிங்கின் சக தோழர் சிவவர்மா தொகுத்துள்ள ‘விடுதலைப் பாதையில் பகத்சிங்’ எனும் நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள சுர்ஜித், பகத்சிங் எவ்வாறு தனிநபர் பயங்கரவாத (சாகசங்களை) நடைமுறைகளிலிருந்து விலகி வெகுமக்கள் இயக்கத்தை கட்டுவது குறித்தும், தேசியவாதம் மற்றும் நாட்டுப்பற்று ஆகியவற்றிலிருந்து சோசலிச சிந்தனைகள் மற்றும் கம்யூனிசத்தின் இறுதி வெற்றியை நோக்கி பரிணமித்தது என்பதை நூல் எடுத்துரைப்பதாக கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், தனது 14வது வயதில் (1930இல்) நவஜவான் பாரத் சபாவில் தன்னை இணைத்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அக்கால நிலவரம் குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘அக்காலத்தில் கம்யூனிஸ்ட் இலக்கியங்கள் மிகவும் குறைவாகவே கிடைத்தன. மார்க்ஸ் தேர்வு நூல்கள் சிலவற்றின் பிரதிகளைத் தவிர, கம்யூனிச சித்தாந்தம் குறித்த மங்கலான தெளிவற்ற சில வெளியீடுகளே வெளிவந்திருந்த காலம் அது.
இன்றுள்ள தோழர்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய அளவிற்கு அபரிமிதமான அளவில் கம்யூனிச இலக்கியங்கள் கிடைக்காத அந்தக் காலத்தில், பகத்சிங்கும் அவரது தோழர்களும் இப்போதுள்ள கம்யூனிஸ்டுகள் அளவிற்கு மார்க்சிச, லெனினிச, அறிவியல் மற்றும் சித்தாந்தம் குறித்த ஞானம் பெற்றிருப்பார்கள் என்று ஒருவர் எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது. ஆயினும் அவர்களுக்குக் கிடைத்த குறைந்த அளவிலான இலக்கியங்களைக் கற்றே அவர்கள், தாங்கள் செல்ல வேண்டிய பாதையை மிகத் தெளிவாக, அஞ்சாநெஞ்சுடனும் அளப்பரிய அர்ப்பணிப்பு உணர்வுடனும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள். இதுதான் மற்ற புரட்சியாளர்களிலிருந்து பகத்சிங் மற்றும் அவரது தோழர்களைத் தனியே நிறுத்தி வைக்கிறது. அதனால்தான் நாம் அவர்களது நினைவுகளை இன்றும் போற்றிப் பாராட்டுகிறோம்.
அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சமயத்தில், நாடு முழுதும் மிகப் பிரம்மாண்டமான வகையில் வெடித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அவர்களுக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை வெளிப்படுத்தின. அவர்களது வீரமரணமும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆற்றிய வீரஞ்செறிந்த பிரசாரமும் சுதந்திரப் போராட்டம் மற்றும் சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியாக மாறின.
பகத்சிங் எழுத்துகளை நுணுகி ஆராயும்போது, பகத்சிங் புரட்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்த பின், தனக்குக் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில், நாட்டில் தன் முன்னிருந்த யதார்த்த நிலைமைகளைப் புரிந்துகொள்ளத் தொடங்கியதையும், அதன் தொடர்ச்சியாக அரசியல் மற்றும் சித்தாந்தத் தெளிவு பெற்று, சோசலிச லட்சியத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்கிற நிலைக்கு வந்தார் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.’ என்கிறார்.
அமைப்பா – தனிநபரா
விடுதலைப் பாதையில் பகத்சிங் எனும் நூலில் சிவவர்மாவுடன் பகத்சிங்கின் உரையாடல், தனிநபர் சாகசங்களை கடந்த அமைப்பின் முக்கியத்துவமும் மக்களை திரட்டுவதன் அவசியமும் குறிப்பிடப்படுகிறது.
பகத்சிங்: “ஒரு நபரின் பெயர் பெரிதா? கட்சியின் வேலைப் பெரிதா?”
சிவவர்மா: “கட்சி வேலைதான் பெரிது”
பகத்சிங்: “கட்சி வேலை தடங்கலின்றி நடந்துகொண்டே இருக்க வேண்டும். சுதந்திரப் போராட்டத்தின் ஒவ்வொரு திருப்பத்திலும் நாம் வெற்றி பெற்றுக்கொண்டே இருப்பதற்கான முதல் நிபந்தனை என்ன தெரியுமோ? வலிமையாகவும், விரிவாகவும் மக்களைத் திரட்டுவதுதான். மக்களைத் திரட்டுவதும், பிரச்சாரமும் முக்கியம். நாம் இதுவரை மக்களைத் திரட்டுவதையும், பிரச்சாரத்தையும் அலட்சியப்படுத்தி ‘ஆக்ஷன்’களுக்கே முக்கியத்துவம் அளித்து வந்தோம். நாமெல்லாரும் படை வீரர்கள். படைவீரர்களுக்கு எல்லாவற்றையும்விட போர்க்களம் தான் விருப்பமானது அதனாலேயே எல்லோருமே ‘ஆக்ஷன்’களுக்குப் போகத் துடிக்கிறார்கள். சாதாரணமாக ‘ஆக்ஷன்’களில் பங்கெடுப்பவர்களையும், தூக்கு மேடை ஏறுபவர்களையும்தான், புகழ் தேடி வருகிறது. அவர்கள் நிலை ஒரு பெரிய மாளிகையின் தலைவாசலில் பதிக்கப்பட்ட வைரம் போன்றது. ஆனால், அஸ்திவாரத்திற்குள் விழுந்து கிடக்கும் ஒரு சாதாரணக் கல்லுக்குள்ள முக்கியத்துவம் அந்த வைரத்திற்கில்லை”
“வைரங்கள் மாளிகையின் எழிலை அதிகரிக்கலாம். பார்ப்பவர்களை வியப்பிலாழ்த்தலாம். ஆனால், அவை மாளிகையில் பார்ப்பவர்களை அஸ்திவாரம் ஆக முடியாது. மாளிகையை நீண்ட காலம் பற்றி நிறுத்தி வைக்க முடியாது. பல நூறாண்டுகள் தமது தோள்கள் மேல் சுமந்திருக்க முடியாது. இதுவரையிலும் நம் இயக்கம் வைரங்களைத் திரட்டியதே தவிர, அஸ்திவாரக் கற்களைச் சேர்த்து வைக்கவே இல்லை, அதனால்தான் நாம் இத்தனை மாபெரும் தியாகங்கள் புரிந்தும் மாளிகையைக் கட்டவும் ஆரம்பிக்கவில்லை. இன்று நமக்கு அஸ்திவாரக் கற்கள்தான் தேவை!”
“தியாகமும் உயிர்ப்பலியும் இரண்டு விதமானவை. ஒன்று, குண்டடிபட்டும், தூக்கிலிடப்பட்டும் மரணத்தைத் தழுவுவது. இதில் கவர்ச்சி அதிகமிருந்தாலும், கஷ்டம் குறைவுதான்? இரண்டாவது, வாழ்க்கை பூராவும் மாளிகையைச் சுமந்துகொண்டிருப்பது. போராட்டம் நடந்துகொண்டிருக்கும்போது, நமக்கு எதிரான சூழ்நிலையில் நமது தோழர்கள் ஒவ்வொருவராக நம்மை விட்டுப் போய்க்கொண்டிருக்கும்போது தட்டுத்தடுமாறாமல் தமது லட்சியப் பாதையை விட்டுச் செல்லாதவர்கள், மாளிகையின் சுமையால் அசைந்து கொடுக்காதவர்கள், பளுவுக்குப் பயந்து தோள்களைக் கீழே இறக்காதவர்கள், ஒளி மங்கிவிடக்கூடாதென்பதற்காகத் தம்மைத் தாமே எரித்துக்கொள்பவர்கள், தன்மையான பாதையிலே இருள் சூழ்ந்துகொள்ளக் கூடாதென்று தம்மைத் தாமே மெழுகு வர்த்தியைப் போல் அரைத்துக்கொள்பவர்கள், உயிர்த் தியாகம் புரிபவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் இல்லையா?”
புரட்சி இயக்கங்களின் தத்துவார்த்த வளர்ச்சியில் பகத்சிங்கின் இந்தப் புரிதல் மிகமிக முக்கியமான ஒன்றாகும். துப்பாக்கிகளால் மட்டும் புரட்சிகளை சாத்தியப்படுத்திவிட முடியாது எனும் புரிதல் அவரை வழிநடத்தியது. பகத்சிங் தலைமறைவாக இருந்த காலத்தில் சிவவர்மா அவருடன் இருந்துள்ளார். புத்தகங்கள் இல்லாமல் பகத்சிங்கை அவர் பார்த்ததே இல்லை என்கிறார். எப்போதும் அவர் புத்தகங்களையும் துப்பாக்கியையும் வைத்திருந்ததை நான் கவனித்தேன் என்கிறார். அதை வாசித்தபோது, “இவனுக்கு (சேவுக்கு) தோழர்களாக இருந்தவை ஒரு துப்பாக்கியும் ஒரு கவிதைப் புத்தகமுமாகும்” என்று மைதிலி சிவராமன் எழுதிய வரியும், கந்தக வாசம் வீசும் துப்பாக்கியையும் புத்தகங்களையும் சுமந்தபடிதான் சேகுவேரா புரட்சிப் போராட்டத்தில் களமாடினார் என்பது நினைவிற்கு வந்தது.
கடவுள் – மதம்
கடவுள் குறித்தும் மதம் குறித்தும் பகத்சிங்கின் கருத்துக்கள் இன்றைய இந்திய நிலவரத்திற்கு கூடுதல் கவனம் பெறுவதாக உள்ளது. அரசியல் சித்தாந்த தெளிவின் அவசியத்தை அவை நமக்கு உணர்த்துகிறது.
“நீங்கள் கடவுள் சர்வ வல்லமை படைத்தவர் என்கிறீர்கள். சர்வ வல்லமையுள்ள அந்தக் கடவுள் அநியாயம். அநீதி, கொடுமை. சுரண்டல், வறுமை ஏற்றத்தாழ்வுகள், நோய்கள் முதலியவற்றை ஏன் ஒழிக்க மாட்டேன் என்கிறார்? இவற்றை ஒழிக்கக்கூடிய சக்தி உடையவராக இருந்தும், அவர் சும்மா இருக்கிறாரென்றால், அவரைக் கடவுள் என்று அழைக்க முடியாது. இவற்றை முடிவுக்குக் கொண்டுவரும் ஆற்றல் அவருக்கில்லை என்றால் அவரை சர்வ வல்லமை படைத்தவர் என்று சொல்ல முடியாது. அவர் தன் லீலைகளைக் காட்டுவதற்கே அப்பாவி மக்களைத் துன்பங்களில் ஆழ்த்தி மகிழ்கிறார் என்றால் அவர் இதயமில்லாக் கொடுமைக்காரர். மாயை, தலையெழுத்து, கடவுள், மதம் இவையெல்லாம் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த சுரண்டல்காரர்கள், சாதாரண மக்களை ஏமாற்றப் பயன்படுத்தும் நச்சுக் கருத்துகளே தவிர, வேறல்ல.
இதுவரை எல்லா மதங்களும் உலக மக்களைப் பிரித்து வைத்தன. அவர்களிடையே கலகங்களைத் தூண்டின. உலகத்தில் மதத் தலைவர்கள் மதங்களின் பேரால் நடத்திய ரத்தக்களறிகள் அளவுக்கு வேறெந்த விஷயத்திலும் நடக்கவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், மதங்கள் மகிழ்ச்சிகரமான இந்த உலகத்தை நாசம் செய்தன. மதம் மனிதர்களைப் பிரித்து வைக்கும், அன்புக்குப் பதிலாக ஒருவரையொருவர் பகைக்கச் செய்யும், மூடநம்பிக்கைகளை ஊக்குவித்து மக்களின் அறிவு வளர்ச்சியைத் தடுக்கும், சிந்தனா சக்தியைக் குறைக்கும். ஒரு கடவுளை மற்றொரு கடவுளுடன் சண்டையிடச் செய்து, இந்த சொர்க்கத்தையே நரகமாக மாற்றும் சக்திகளை ஒழித்து மனிதர்களை ஏற்றத்தாழ்வுகளற்ற சமுதாயம் நோக்கி அழைத்துப் போகும் முயற்சிகள் அனைத்துமே எனது மதங்கள்!
நான் மனிதனின் துணிவையும், வலிமையையும் நம்புகிறேன். அதனால் எதிர்காலத்தில் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். நீங்கள் ஒவ்வொரு விஷயத்திற்கும் கடவுளை நோக்குகிறீர்கள். அதனால் நீங்கள் விதியை நம்புகிறீர்கள்; நீங்கள் நம்பிக்கை வறட்சியாளர்கள். கர்மா எனும் சித்தாந்தம் நம்மை நம் கடமைகளை செய்வதிலிருந்து அப்புறப் படுத்திவிடுகிறது. வலிமையற்றவர்கள், கோழைகள், கடமையை விட்டு ஓடிவிடுபவர்கள் ஆகியோரின் புகலிடம் அது.”
புரட்சியாளர்களை பயங்கரவாதிகள் என்பதா?
புரட்சியாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதை சிவவர்மா தனது எழுத்துக்களில் கண்டித்தார். மேலும், புரட்சியாளர்களின் நோக்கமும் செயலும் எத்தகைய உத்தமமான உள்ளடக்கத்தை கொண்டது என்பதையும் பகத்சிங்கை கொண்டே விளக்கினார்.
‘லாலா லஜபதிராய் தன் கடைசிக் காலத்தில் புரட்சியாளர்களை வெறுக்க ஆரம்பித்தார். காங்கிரஸிலும் மோதிலால் நேருவுடன் கருத்து வேற்றுமை கொண்டிருந்தார். அவர் காங்கிரஸின் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு மாறாக மதவெறிக்கும் ஊக்கம் தரத் தொடங்கியிருந்தார். ஆனால் இவை எல்லாம் நமக்குள் உள்ள பிரச்சினைகள். வெளிநாடுகளில் லாலா லஜபதிராயை நாட்டின் முக்கியத் தலைவர்களிலே ஒருவராகவே மதித்தனர். ஆகவே அவர் மீதான தடியடிப் பிரயோகம் நம் நாட்டின் மீதான தடியடிப் பிரயோகமே. அது நமது வீரத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாகும். அந்த சவாலை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். அவர் மீது தாக்குதல் நடத்திய சாண்டர்ஸை கொல்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டது.
நாட்டிற்கு இழைக்கப்பட்ட அவமானத்திற்குப் பழி தீர்த்துக்கொள்ள சாண்டர்ஸைக் கொலை செய்ய வேண்டுமென்னும் யோசனையைத் தெரிவித்தவரே பகத்சிங்தான். எனினும் சாண்டர்ஸைக் கொலை செய்த பிறகு பல நாட்கள் வரை துயரத்தில் ஆழ்ந்திருந்தார். அவர் புரட்சியாளரானாலும் ரத்தவெறி பிடித்தலைபவரல்ல. மனிதர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்வதே அவரது வாழ்க்கை லட்சியம். அதனால் எல்லோருடைய உயிரையும் நேசிப்பது அவருடைய இயற்கையான சுபாவமாகும். புரட்சியாளர்கள் கொலைகாரர்கள் அல்ல; அவர்கள் மானிடத்தை ஆராதிப்பவர்கள். ஆகவே மனித உயிர்களைப் பறிக்கும்போது அவர்கள் மிகவும் துயர் அடைகின்றனர். இதே கருத்து டெல்லி பாராளுமன்றத்தில் வீசப்பட்ட நோட்டீஸ்களிலும் கீழ்கண்டவாறு வெளியிடப்பட்டது.
“நாங்கள் மனித வாழ்வைப் புனிதமானதாகக் கருதுகிறோம். அனைவருக்கும் மகிழ்ச்சியும், அமைதியும், சுதந்திரமும் நல்கக் கூடிய எதிர்காலத்தில் எங்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. தவிர்க்க முடியாதபோது நாங்கள் மனித உதிரத்தைச் சிந்தவைக்கிறோம். இதற்காக நாங்கள் எவ்வளவோ வருந்துகிறோம். என்றாலும் புரட்சியின் மூலம் அனைவருக்கும் சுதந்திரம் வழங்கவும், மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பை ஒழிக்கவும் புரட்சியிலே கொஞ்சம் ரத்தம் சிந்துவதும் தவிர்க்க முடியாததுதான்”
பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட பிறகு பகத்சிங்கும் தத்தும் கைது செய்யப்பட்ட பிறகு நீதிமன்றத்திலே அவர்கள் அளித்த அறிக்கையிலும் புரட்சியாளர்களின் இந்தக் கருத்தையே வெளியிட்டார்கள். “மானுடத்தை நேசிப்பதிலே நாங்கள் யாருக்கும் குறைந்தவர்களல்ல. எங்களுக்கு யாரிடத்திலும் தனிப்பட்ட முறையில் பகைமை இல்லை. நாங்கள் எல்லோரையுமே எப்போதுமே அன்போடுதான் நேசித்து வந்தோம்.”
“புரட்சி என்றால் கண்டிப்பாக ரத்தம் சிந்தப்பட வேண்டும் என்று பொருளல்ல. அது வெடிகுண்டு, துப்பாக்கிக் கலாச்சாரமல்ல. சில இயக்கங்களில் அவை முக்கிய பாத்திரம் வகிக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அந்தக் காரணத்தினாலேயே அவையே ஓர் இயக்கமாக ஆகிவிடுவதில்லை. கலகம் என்பது புரட்சியல்ல. இறுதியில் அது புரட்சிக்கு இட்டுச் செல்லலாம்.”
தடைகளை கடந்த செயல்பாடுகள்
இவ்வாறு புரட்சி இயக்கத்திற்கு ஒரு தத்துவார்த்த வடிவத்தை வழங்குவதில் பகத்சிங் முக்கியமான பங்காற்றினார். நவஜவான் பாரத் சபாவிலிருந்து அவர் இந்துஸ்தான் சோசலிச குடியரசு கழகத்திற்கு பயணித்த பிறகு தன்வந்திரி, பகத்சிங்கின் இடத்தை நிரப்பினார். 1928 இல் பிரிட்டிஷ் காலனிய அரசு நவஜவான் பாரத் சபாவின் தலைவர்களை வேட்டையாடியது. அடுத்தடுத்த ஆண்டுகளில் புதிய தலைமை தேர்தெடுக்கப்பட்டு செயல்பட்டுவந்தது. இக்காலத்தில் பகத்சிங் உள்ளிட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டதும், அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதும் நெருக்கடிகளை அதிகரித்தன. அதேநேரம், வெகுமக்கள் செல்வாக்குடன் நவஜவான் பாரத் சபா செயல்பட்டத் துவங்கியது. 1929இல் நடைபெற்ற நவஜவான் பாரத் சபாவின் மாநாட்டில் 5000 பேர் வரை பங்கேற்றனர். இதில் ஜவஹர்லால் நேரு பங்கேற்று உரையாற்றினார்.
1930ஆம் ஆண்டு நவஜவான் பாரத் சபாவை காலனிய அரசு தடை செய்தது. எனவே ‘இந்த் நவஜவான் சபா’ எனும் பெயரில் இயங்கினர். இவர்களை அரசு கைது செய்தது. ஆனால், இந்த அமைப்பு தடைசெய்யப்படவில்லை என நீதிமன்றம் அவர்களை விடுவித்தது. பகத்சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக பஞ்சாபில் 1931 பிப்ரவரி 17 அன்று 15,000க்கும் அதிகமான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்ற போராட்டத்தை நவஜவான் பாரத் சபா நடத்தியது. காந்தி – இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1931 மார்ச் 21 அன்று நவஜவான் பாரத் சபா மீதான தடை விலக்கப்பட்டது.
1931 மார்ச் 23 அன்று பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் 2,000 பெண்கள் உள்ளிட்டு 15,000 பேர் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதில் பங்கேற்றனர். பகத்சிங் தூக்கிலிடப்பட்ட பிறகு நவஜவான் பாரத் சபா மீதான காலனிய காவல் துறையின் அடக்குமுறை கட்டுக்கடங்காமல் போனது. ஒடுக்குமுறைகளுக்கும் கைதுகளையும் எதிர்கொண்டு புதிய தலைமை உருவாக்கப்பட்டது. 1934இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நவஜவான் பாரத் சபா உள்ளிட்டு இடதுசாரி அமைப்புகளை பிரிட்டிஷ் அரசு தடை செய்தது. அதன் பிறகு நவஜவான் பாரத் சபா மீண்டும் செயல்பாட்டிற்கு வரவில்லை. அதில் இருந்த பலர் இடதுசாரி இயக்கங்களில் தங்களை இணைத்துக்கொண்டு செயலாற்றினர்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply