
யார் இந்த டி. டி. கோசாம்பி ? (ஜூலை 31)
தொகுப்பு: இரா. சிசுபாலன்
தாமோதர் தர்மானந்த கோசாம்பி 1907ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி பிறந்தார். அவரது தந்தை தர்மானந்த கோசாம்பி புகழ்மிக்க பௌத்த அறிஞர் ஆவார். ஹார்வார்டில் கல்வி பயின்ற இவர், இந்தியாவுக்கு திரும்பி வந்து டாடா ஆய்வு நிறுவனத்தில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றினார். சிறந்த மார்க்சிய வரலாற்று அறிஞரான கோசாம்பி, தொல்லியல், நாணயவியல், கல்வெட்டு ஆய்வு, நாட்டுப்புறவியல், புவியியல் ஆகிய பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவராவார்.
வரலாறு என்றால் என்ன? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், ‘வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் இந்தியாவுக்கு வரலாறு கிடையாது எனக் கூறுகின்றனர். ரோம் அல்லது கிரீஸ் நாட்டைப் போல இந்தியாவின் பண்டைய வரலாற்றை அசைக்கவியலாத தரவுகளுடன் எழுதுவதற்கில்லை. அடுத்தடுத்து வரும் ஆதிக்க வெறி தலைக்கு ஏறிய பித்தர்களின் பெயர்களும், பெரும் போர்களுமே வரலாறு எனில், அத்தகைய வரலாற்றை எழுதுவது கடினமானது. விவசாயம் செய்வதற்கு மக்களிடம் ஏர் இருந்ததா? இல்லையா? என்பது வரலாறு எனில், அத்தகைய வரலாறு இந்தியாவுக்கு உண்டு என்பதில் ஐயமில்லை. ‘உண்மையில் வரலாறு என்பது, உற்பத்திச் சாதன முறைகளிலும், உற்பத்தி உறவுகளிலும் தோன்றி வந்த மாறுதல்களைக் கால வரிசைக் கிரமமாக எடுத்துரைப்பதே’ என்கிறார் (பண்டைய இந்தியா: பண்பாடும், நாகரிகமும்).
இந்திய நிலப்பிரபுத்துவம், ஐரோப்பிய நிலப்பிரபுத்துவத்தைப் போல அல்லாமல், இந்தியாவின் சமூக, பொருளாதார, அரசியல் சூழலுக்கு ஏற்ப தனித்துவமான வளர்ச்சிப் பாதையைக் கொண்டிருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.
‘மேலிருந்து நிலப்பிரபுத்துவம்’, ‘கீழிருந்து நிலப்பிரபுத்துவம்’ என்ற கருதுகோளை அவர் முன் வைத்தார். அரசர்கள் வழங்கிய நிலக்கொடைகள் மூலம் உள்ளூர் அதிகார மையங்கள் உருவாயின. அரசின் அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட்டது, நிலப்பிரபுக்கள் தோன்றினர். இது ‘மேலிருந்து நிலப்பிரபுத்துவம்’. மறுபுறம், கிராமத் தலைவர்கள், உள்ளூர் போர்த் தளபதிகள், பழங்குடித் தலைவர்கள் ஆகியோர் படிப்படியாக அதிகாரமும், நில உரிமையும் பெற்றனர். அவர்கள் உள்ளூர் ஆட்சியாளர்களாக மாறினர். இது கீழிருந்து நிலப்பிரபுத்துவம் என அவர் அழைக்கிறார்.
பண்டைக் காலத்தில் சாதியே வர்க்கமாகத் திகழ்ந்தது எனக் குறிப்பிடும் கோசாம்பி, அது வெறுமனே மத அல்லது பண்பாட்டு நிறுவனம் அல்ல, உற்பத்தி மற்றும் தொழில் பிரிவுகளுடன் தொடர்புடைய சமூக அமைப்பாக அது வளர்ச்சி பெற்றது’ என்கிறார்.
‘இந்திய வரலாற்று ஆய்வுக்கான ஓர் அறிமுகம்’ (1956), ‘வரலாற்றுக் கோணத்தில் பண்டைய இந்தியாவின் பண்பாடும், நாகரிகமும்:(1965) ‘இந்திய பண்பாட்டு உருவாக்கம் குறித்த ஆய்வு: மாயையும், எதார்த்தமும்'(1962), ‘பண்டைய இந்தியாவின் பண்பாடு, நாகரிகம் குறித்த வரலாறு'(1966), ‘இந்திய நாணயவியல்'(1981) ‘இந்தியவியல், பிற படைப்புகளில் ஒருங்கிணைந்த முறைகள்'(2002) ஆகியவை இவரது சிறந்த படைப்புகளாகும். இவற்றுடன் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். கோசாம்பியின் நினைவாக, ‘இந்தியச் சமூகம்: வரலாற்றுத் தேடல்கள்’ என்ற தொகுப்பை ஆர்.எஸ்.சர்மா, விவேகானந்த் ஜா ஆகியோர் 1974ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளனர். இதில் வால்ட்டர் ரூபன், ரொமிலா தாப்பர், இர்ஃபான் ஹபீப், பிபன் சந்திரா, சுவீரா ஜெஸ்வால் உள்ளிட்ட 22 வரலாற்று அறிஞர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
You may also like
1 comment
Leave a ReplyCancel reply
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

மிக முக்கியமான பயனுள்ள கட்டுரை…..