
ஃபிடல் காஸ்ட்ரோ 100
உண்மையான முன்னேற்றம் எனும் சகாப்தம்
ச. லெனின்
‘இவ்வுலகின் வேறு பகுதிகளில் எனது எளிய சேவையின் அவசியம் இருக்கிறது. அதை என்னால் நிறைவேற்ற முடியும். உங்களுக்கு அந்த சந்தர்ப்பம் இல்லை. ஏனென்றால், உங்கள் முதுகின் மீது இப்போது கியூபாவின் மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது.‘ என்று ஃபிடல் காஸ்ட்ரோவிற்கு தனது பிரியாவிடைக் கடிதத்தில் சே குறிப்பிடுகிறார். அந்த மிகப்பெரிய பொறுப்பை காஸ்ட்ரோ மிகச் சிறப்பாக நிறைவேற்றினார்.
காஸ்ட்ரோவை கொல்ல அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சி.ஐ.ஏ. 633 முறை முயன்றது. 67 ஆண்டு காலமாக பொருளாதாரப் போரை, அச்சுறுத்தும் முற்றுகைத் தாக்குதலை கியூபா மீது அது நடத்தி வருகிறது. எல்லாவற்றையும் எதிர்கொண்டு கியூபா எழுந்து நிற்கிறது என்றால், ஃபிடலின் பொறுப்புணர்வுடன் கூடிய பங்களிப்பு இல்லாமல் அது சாத்தியமில்லை.
ஃபிடல் அதிகம் எழுதியவரில்லை. ஆனால், அதிகம் உரையாடியவர். செயல், அதுவே சிறந்த சொல் என்பதற்கிணங்க அதிகம் செயல்பட்டவர். கியூபப் புரட்சி நடந்தேறிய ஒருவார காலத்தில் மக்களிடம் தொலைக்காட்சியில் அவர் ஆற்றிய உரை ஏழு மணி நேரம் நீண்டது. எல்லோரும் லயித்துப்போய் கேட்கும் அளவிலான வார்த்தைகளோடு, உணர்வு பொங்க உரையாற்றும் வல்லமை கொண்டவர். அவரின் சிறிய உரையாடல்களே இரண்டு மூன்று மணி நேரம் நீடிக்கும் என்கிறார் எழுத்தாளர் கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ்.
ஃபிடல் காஸ்ட்ரோவும், பிரேசிலிய பாதிரியார் ஃப்ரேய் பெட்டோவும் நடத்திய உரையாடல் 400 பக்கங்களுக்கு மேலான நூலாக வடிவம் எடுத்தது. Fidel and Religion என்ற அந்த ஆங்கிலப் புத்தகத்தை, தமிழில் ‘மதம், மக்கள், புரட்சி’ என்கிற தலைப்பில் அலைகள் வெளியீட்டகம் கொண்டு வந்துள்ளது.
இந்த நேர்காணலின் துவக்கத்திலேயே, ‘இங்கு நாம் விவாதிக்கவுள்ள சில பொருட்கூறுகள் குறித்து ஒரு மறு ஆய்வு நடத்தவும் கொஞ்சம் சிந்திக்கவும் சிறிது நேரம் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். எனினும், நம் இருவருக்குமே முக்கியமான பணிகள் இருக்கிற நேரத்தில் இந்த நேர்காணல் நடப்பதால், நடைமுறையில் எந்த முன்னேற்பாடும் இல்லாத நிலையில் இந்தப் பொருள் குறித்துப் பேச நான் ஒப்புக்கொண்டேன். பாடத்தைப் படிக்க நேரமில்லாமல் தேர்வு எழுத உட்காரும் ஒரு மாணவர், தான் பேசப்போகிற பொருள் பற்றிப் பெருமளவுக்குத் தன்னைத் தயார் செய்து கொள்ளவோ, ஆழமாகப் புரிந்து கொள்ளவோ வாய்ப்புக் கிடைக்காமல் உரையாற்ற வேண்டியிருக்கிற ஒரு பேச்சாளர், நடத்தவிருக்கிற பாடத்தைப் புரட்டிப் பார்க்க ஒரே ஒரு நிமிடம் கூட ஒதுக்க முடியாமல் வகுப்பெடுக்க வேண்டியிருக்கிற ஒரு ஆசிரியர் – இவர்கள்தான் என் நினைவுக்கு வருகிறார்கள். இந்தச் சூழலில்தான் நான் இந்த உரையாடலில் இருக்கிறேன்.’ என்று ஃபிடல் பதிவு செய்கிறார். ஆனால், அவரின் பதில்கள் பல ஆழமான உள்ளடக்கத்தை கொண்ட உரையாடலாக அமைந்தது.
கிறிஸ்தவம் – மார்க்சியம் இடையேயான உரையாடலுக்கு இது ஒரு முக்கியமான சான்று. நாத்திகம், பொருள்முதல்வாதம், கம்யூனிசம் மதத்தை ஒடுக்க வேண்டுமா, கிறிஸ்தவர்கள் மார்க்சியர்களின் ஆதரவாளர்களாக இருக்க முடியுமா என்பன போன்ற கேள்விகளை மார்க்சிய பார்வையிலும் கியூப, லத்தீன் அமெரிக்க நிலைமைகளைக் கணக்கில் கொண்டும் அவர் விளக்குகிறார். வெறும் கோட்பாடுகளாக மட்டுமல்லாமல் நடைமுறை சவால்களையும் அமலாக்கத்தையும் விளக்குகிறார்.
விடுதலை இறையியல் (Liberation Theology)
ஏழைகளின் துயரங்களை மையமாகக் கொண்டு கிறிஸ்துவத்தை விளக்குவதும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக உடன் நிற்பதும், சமூக மாற்றத்திற்காக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதையும் ஆதரிக்கும் கருத்துநிலை லத்தீன் அமெரிக்க பாதிரியார்களிடம் 1960-களில் வளர்ந்து வந்தது. கிறிஸ்தவ விடுதலை இறையியல் என்பதாக அது எழுந்தது. அந்த வழியில் வந்தவர்தான் பிரேசிலிய பாதிரியார் ஃப்ரேய் பெட்டோ. அவர், ‘லத்தீன் அமெரிக்கா, கிறித்தவர்களாகவும் கம்யூனிஸ்டுகளாகவும் பிளவுபட்டிருக்கவில்லை. பல கம்யூனிஸ்ட் கட்சிகள், வறட்டுக் கோட்பாட்டு நாத்திகவாதத்தை முன்வைக்கும் தவறைச் செய்தார்கள். அது அவர்களை இறை நம்பிக்கையுள்ள ஏழைகளிடமிருந்து முறித்துக் கொள்ள வைத்தது‘ என்கிறார்.
லியோ டால்ஸ்டாய் கிறிஸ்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். அதனை பின்பற்றுபவர்கள் குறித்து விமர்சனங்களை வெளிப்படுத்தினார். திருச்சபைகளின் தவறான புரிதல்களுக்கான மறுப்பாகவே சுவிசேஷங்களின் சுருக்கம் எனும் தனது நூலை அவர் எழுதினார். ‘கிறித்துவத்தை ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வாகவோ அல்லது தெய்வீகமான வெளிப்பாடாகவோ நான் கருதவில்லை. மாறாக வாழ்வுக்கு அர்த்தத்தினை தரும் ஒரு போதனையாகவே நான் அதனை காண்கிறேன்’ என்கிறார் டால்ஸ்டாய். டால்ஸ்டாய் வெளிப்படுத்திய கருத்துக்களின் மற்றொரு வளர்ச்சிப் போக்காகத்தான் விடுதலை இறையியலை பார்க்க வேண்டியுள்ளது. ‘டால்ஸ்டாய்யின் உலக நோக்கு நமது புரட்சியின் சில பிரத்யேக அம்சங்களைப் பிரதிபலிப்பவை’ என்கிறார் லெனின்.
அடிப்படையில் மார்க்சியம் வறட்டு கோட்பாடுகளுக்கு எதிரானது. ‘உங்கள் இயேசு சொன்னதைத் தானே நாங்கள் செய்கிறோம். நீங்கள் கர்த்தரின் பெயரால் செய்ய நினைப்பதை நாங்கள் புரட்சியின் பெயரால் செய்கிறோம் என்று அனைவரையும் உள்ளடக்கிக் கொண்டார் காஸ்டரோ. மதம் குறித்து மார்க்சிய லெனினிய நோக்கில் அவருக்கு எந்த ஊசலாட்டமும் இல்லை. ஆகவேதான், ‘கிறிஸ்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள ஒரு கத்தோலிக்க ஊழியரும், தமது உறுதியான கொள்கைப்பிடிப்பிற்கு பெயர்பெற்ற ஒரு கம்யூனிஸ்ட் தலைவருக்கும் இடையிலான நீண்ட உரையாடலாக இந்த உரையாடல் அமைந்துள்ளது என்கிறார் கியூப பதிப்பிற்கு முன்னுரை எழுதியுள்ள அர்மாண்டோ.
‘நீங்களும் நாங்களும் இந்த உலகத்தின் ராஜ்ஜியம் குறித்து சிந்திக்க வேண்டும். அடுத்த உலகத்தின் (பரலோக) ராஜ்ஜியம் குறித்து மோதிக் கொள்ளத் தேவையில்லை’ என்கிற வரையறையை முன்வைத்தபடிதான் காஸ்ட்ரோவின் உரையாடல் அமைந்துள்ளது. ’ஏழைகளிடமிருந்து விலகுகிறவன் எவனோ அவன் இயேசுவிடமிருந்து விலகுகிறான்’ என்று காஸ்ட்ரோ ஒருமுறை சொன்னதை குறிப்பிடும் பெட்டோ, அதுதான் விடுதலை இறையியல் என்கிறார்.
மதம், சுரண்டப்படும் மக்களிடம் உளவியல் ரீதியாக சுரண்டலுக்கு தயார் படுத்தும் வேலையை செய்கிறது. அதேநேரம் ஆறுதலுக்கான இடமாகவும் அது கட்டமைக்கப்பட்டு மக்களின் நம்பிக்கையை அடித்தளமாக கொண்டுள்ளது. இதயம் அற்ற உலகத்தின் இதயமாக மதம் உள்ளது என்கிற மார்க்சின் வார்த்தை அர்த்தம் பொதிந்ததாகும். போர், சுரண்டல், பசி, பட்டினி, பணம் இருந்தால்தான் கல்வி, மருத்துவம் என இதயமற்ற உலகமாக இந்த முதலாளித்துவ உலகம் உள்ளது. அதை எல்லோருக்கும் எல்லாம் என்கிற பொதுவுடைமை நிறைந்த இதயமுடைய உலகமாக மாற்றுவதே மதத்தை ஒழிக்கும் வழி அன்றி வறட்டு நாத்திகம் அதற்கான வழியல்ல என்பதை மார்க்சின் வார்த்தைகள் உணர்த்துகின்றன.
’விடுதலை இறையியல் என்பது மிக முக்கியமான நிகழ்ச்சிப் போக்குகளில் ஒன்று என்பதை லத்தீன் அமெரிக்காவின் இடதுசாரிகள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். சுரண்டல்காரர்கள், ஆக்கிரமிப்பு அடக்குமுறையாளர்கள், ஓடுக்குமுறையாளர்கள், மற்ற நாடுகளில் குறுக்கிடுகிறவர்கள், மக்களின் செல்வங்களைக் கொள்ளையடிப்பவர்கள், நம்மை அறியாமையிலும் நோய்நொடியிலும் வறுமையிலும் வைத்திருப்பவர்கள் ஆகியோர் மக்களைக் குழப்புவதற்கும் ஏமாற்றுவதற்கும் அந்நியப்படுத்துவதற்கும் தொடர்ந்து சுரண்டுவதற்கும் பயன்படுத்துகிற (மதம் எனும்) முக்கியமான ஆயுதத்தை இது அவர்களிடமிருந்து தட்டிப் பறிக்கிறது’ என்று காஸ்ட்ரோ குறிப்பிடுகிறார். மத நம்பிக்கை உள்ள மக்களை எதிர்ப்புரட்சி சத்திகள் தங்களுக்கு சாதகமானவர்காளாக மாற்றி புரட்சியை வீழ்த்த பயன்படுத்த முனைகிறது. புரட்சிகர சக்திகள் மதநம்பிக்கை உடையவர்களையும் உள்வாங்கிக்கொள்ளும் வழிவகைகளை உருவாக்கிக்கொண்டு செயலாற்ற வேண்டும் என்பதையே அவர் வலியுறுத்தினார்.
புரட்சி மதத்தை எதிர்க்கவில்லை
புரட்சிக்கு பிறகும் மதம் குறித்தும் தேவலாய செயல்பாடுகள் குறித்தும் ஒரு உரையாடலை காஸ்ட்ரோ நிகழ்த்திக் கொண்டேயிருந்தார். புரட்சி மதத்தை எதிர்க்கவில்லை. ‘ஒரு செல்வந்தன் சுவர்க்கத்துக்குள் நுழைவது ஒரு ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவதை விடக் கடினமானது என இயேசு கிறிஸ்த்து கூறியதை மறந்துவிட்டு, மதம் ஏழைகளுடன் போரிடுவதற்கு ஒரு காரணமாகப் பயன்படுத்தப்படுகிறது.’ என்ற விமர்சனத்தை முன்வைத்ததோடு, ‘மதம் என்பது ஒன்று, அரசியல் என்பது வேறொன்று. இந்தக் கனவான்கள் (கத்தோலிக்க குருமார்கள்) மக்களின் அரசியல்களுக்கு எதிராக இல்லாமலிருந்தால், அவர்களது சமயப் பிரச்சாரங்களைத் தொடரலாம். மத விஷயங்களில் விவாதங்களைத் தொடரலாம். தேவாலயங்கள் திறந்திருக்கலாம். மதம் அங்கு கற்பிக்கப்படலாம். அவர்கள் தமது மதக்கல்வியுடன் மட்டுமே நிறுத்திக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். அமைதியாக இருப்பது இன்னும் நன்றாக இருக்காதா? புரட்சி அரசுக்கும், மக்களுக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்து, உறுதியான வரம்புக்குட்பட்டு அவர்கள் அமைதியாக இருக்கலாம். அவர்கள் சுரண்டல்காரர்களின் சார்பில் மக்கள் மீது போர் தொடுக்க முடியாது. அதற்கும் மதத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை. அது ரத்தம், தங்கம், பொருள் நலனுடன் தொடர்புள்ளது’ என்றும் எச்சரித்தார்.
மதம் என்பது தனிமனிதனின் தனிப்பட்ட விஷயம்; அரசு மதத்துடன் எந்த உறவும் கொள்ளக்கூடாது; மதம் அரசின் விஷயமாக இருக்கக் கூடாது எனும் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் நிலைபாடுகளில் காஸ்ட்ரோ உறுதியாக இருந்தார். அரசு எந்த மதத்தையும் ஆதரிக்கவோ, நிதியுதவி செய்யவோ, அதிகாரப்பூர்வ அந்தஸ்து கொடுக்கவோ கூடாது. கல்வி முறை முழுக்க மதச்சார்பற்றதாகவும் அறிவியல் நோக்குடனும் இருக்க வேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
மதம் தனிப்பட்ட விஷயமாக இருந்தபோதும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதம் தனிப்பட்ட விஷயமல்ல. கட்சி, நாத்திக, பொருள்முதல்வாத உலகப் பார்வையை உள்ளடக்கியதே. ‘கட்சியில் சேருவதற்குத் தங்களது நம்பிக்கைகளை கைவிட வேண்டுமென்று நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், கட்சியில் சேர்ந்துவிட்ட ஒருவர் அனைத்து வகையிலும் கட்சியின் கோட்பாட்டையும் கொள்கையையும் ஏற்றுக் கொண்டவராக இருப்பதை உறுதிப்படுத்தினோம்.’ மத நம்பிக்கை உள்ளவர்கள் கட்சியில் இருக்கலாம். தொழிலாளி வர்க்கத்தில் உள்ள மதநம்பிக்கை கொண்ட பெரும்பகுதி மக்களை புரட்சியிலிருந்து விலக்கி வைக்கக் கூடாது என்பது நடைமுறைக் கொள்கையாகும். அந்த நடைமுறைக் கொள்கையை கியூபாவில் காஸ்டரோ அற்புதமாக கையாண்டார். வெனிசுவேலாவின் சாவேஸ் அதை பின்பற்றினார்.
ஏகாதிபத்தியமும் பாட்டாளி வர்க்க சர்வதேசியமும்
புரட்சிகர கியூபர்களுக்கு, ஏழை மற்றும் சுரண்டப்பட்ட மக்களுடன் ஒத்துழைப்பது எப்போதும் ஒரு அரசியல் கொள்கையாகவும், மனிதகுலத்தின் மீதான கடமையாகவும் இருந்து வந்திருக்கிறது என்கிற பாட்டாளி வர்க்க சர்வதேசிய நோக்கை காஸ்ட்ரோ வெளிப்படுத்துகிறார். மருத்துவத் துறையில் கியூபா அடைந்துள்ள முன்னேற்றம் உலக மக்கள் அனைவருக்குமான பலமாக உள்ளது. இதுவரை ஆறு லட்சத்திற்கு மேற்பட்ட கியூப மருத்துவர்கள் உலகின் 145 நாடுகளுக்குப் பயணித்து 190 கோடி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்திருக்கிறார்கள். 1.5 கோடி அறுவை சிகிச்சைகளை செய்திருக்கிறார்கள். கியூப மருத்துவர்கள் இல்லையென்றால் 63 லட்சம் பேர் இறந்திருப்பார்கள் என்கிறது தரவுகள்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் குறித்தும் கியூபா குறித்தும் ஃபிடல் காஸ்ட்ரோவின் பதிவுகள்:
கியூபா அமெரிக்காவிடமிருந்து பெரிதும் வேறுபட்டது. அமெரிக்கா மற்ற நாடுகளைச் சுரண்டுகிறது. உலக இயற்கை வளங்களின் பெரும்பகுதியைத் தன்வசமாக்கி வைத்துள்ளது. தனது கோடீஸ்வரர்களுக்கு சேவை புரிய உலகின் பல லட்சம் தொழிலாளர்களை உழைக்க வைக்கிறது. கியூபா மற்ற நாடுகளைச் சுரண்டவில்லை; கியூபா மற்ற நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டவும் இல்லை. சுரண்ட முயன்று கொண்டிருக்கவும் இல்லை. கியூபா மற்ற நாடுகளின் தொழிலாளர்களை தனக்கு சேவை செய்ய வைக்க முயலவும் இல்லை. எங்கள் புரட்சியின் மூலம் ஒரு நாடு இன்னொரு நாட்டைச் கரண்டுவதை மட்டுமல்ல; ஒரு மனிதன் இன்னொரு மனிதனைச் சுரண்டுவதையும் நாங்கள் ஒழிக்கிறோம்.
வரலாறு படைக்கும் பொதுச்சபையில் (செப்டம்பர் 1960இல் ஹவானா பிரகடனம்), நாங்கள் மனித சுரண்டலை எதிர்க்கிறோம் எனப் பதிவு செய்துள்ளோம்; நாங்கள் மனிதர்களைச் சுரண்டுவதைக் கண்டனம் செய்துள்ளோம். எமது தாய்நாட்டில் மனிதர்களைச் சுரண்டுவதற்கு முற்றுப்புள்ளி வைப்போம். ஒரு திருடனானவன் கொள்ளையிடவும், அழிக்கவுமே வருகிறான். ஆனால் மேய்ப்பனோ வாழ்வினைத் தருவதற்காகவே வருகின்றான் என்கிறது சுவிசேஷங்கள்.
இஸ்ரேல் என்பது என்ன? அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவி. ஏகாதிபத்தியம் குற்றத்தைத் திட்டமிடுகிறது. அதற்காக தயாரிப்புச் செய்கின்றது. குற்றவாளிகளுக்கு ஆயுதம் அளிக்கிறது. அவர்களுக்கு நிதி வழங்குகிறது. பயிற்சி அளிக்கிறது. ஆனால், நாங்கள் இந்த புரட்சியை கூலிப் படைகளைக் கொண்டு பாதுகாக்கவில்லை. கியூபா மக்களை கொண்டு பாதுகாக்கிறோம். சக தேசபக்தர்களே, தொழிலாளர்களே, விவசாயிகளே, இது எளிமையானவர்களால், எளிமையானவர்களுக்காக நடத்தப்பட்ட ஜனநாயகப் புரட்சி. எளிமையானவர்களால், எளிமையானவர்களுக்காக நடத்தப்பட்ட இந்தப் புரட்சிக்காக நாங்கள் எங்களது உயிரையும் கொடுக்கத் தயாராக உள்ளோம் என்று 1961ஆம் ஆண்டே காஸ்ட்ரோ பிரகடனம் செய்கிறார். இன்றுவரை அது தொடர்கிறது.
கியூபாவின் பிரச்சனை தனிப்பட்ட ஒன்றல்ல. அது கியூபாவைப் பற்றிய பிரச்சனை மட்டுமே என்று நினைப்பது தவறாகிவிடும். கியூபாவின் பிரச்சனை அனைத்துக் குறைந்த வளர்ச்சி பெற்ற நாடுகளின் பிரச்சனை. கியூபா தொடர்பாக நாங்கள் கோடிட்டுக் காட்டிய பிரச்சனைகள் அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் பொருந்தும். லத்தீன் அமெரிக்காவின் பொருளாதார ஆதாரங்களை ஏகபோகங்கள் கட்டுப்படுத்துகின்றன. நேரடியாக அவற்றுக்கு சுரங்கங்கள் சொந்தமாக இல்லாதபோதும் அவற்றை மற்ற வழிகளில் கட்டுப்படுத்துகின்றன.
ஏகபோகங்களின் நலன்கள்
உலகம் ஏகபோகங்களின் நலன்களுக்கிடையே பங்கிடப்பட்டுள்ளது. இந்த வரலாற்று உண்மையை யாராலும் மறுக்க முடியாது. ஏகபோக நலன்கள் மக்களின் வளர்ச்சி பற்றி கவலை கொள்ளாது. அவை விரும்புவதெல்லாம் எங்கள் நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டுவதும் மக்களைச் சுரண்டுவதும்தான். அவை தமது முதலீடுகளை குவிக்கவும் முடிந்த அளவு விரைவாக அவற்றைத் திரும்பப் பெறவும் விரும்புகின்றன.
ஒரு நாட்டை தாக்க வேண்டுமென்று விரும்புகிறபோது காலனியாதிக்கவாதிகளுக்கோ ஏகாதிபத்தியத்திற்கோ காரணங்களை வடிவமைப்பது பெரிய சிக்கல் இல்லை. அதற்கு தேவையான ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து விடுவார்கள். வெறும் நான்கு ஐந்து ஏகபோகக் குழுக்கள் உலகின் செல்வங்களை வைத்துள்ளன. கொள்ளையிடுவது என்ற கோட்பாட்டை முடிவுக்குக் கொண்டு வாருங்கள், போர் என்ற கோட்பாடு முடிவுக்கு வரும். காலனிகள் இருப்பதையும், ஏகபோகங்கள் நாடுகளைச் சுரண்டுவதையும் முடிவுக்குக் கொண்டு வாருங்கள். உண்மையான முன்னேற்றம் என்ற சகாப்தத்தை மனித இனம் பெறும்.
ஏகாதிபத்தியத்தின் கொடூரத்தை புரிந்து கொள்வதற்கு இந்த உண்மைகள் எவ்வளவு உதவுகின்றன. நமது உலகம் என்னவென்று அவர்கள் எவ்வளவு நன்றாகக் காட்டுகிறார்கள் என்பது, நமது மக்களுக்கு கற்பிக்க உண்மையிலேயே உதவுகிறது. இந்த கல்வி அதிக விலை கொடுத்து வருகிறது; அவை வலி மிகுந்தவையாகவும் இரத்தம் சிந்துபவையாகவும் உள்ளன. ஆனால், இவற்றிலிருந்து எவ்வளவு மக்கள் பாடம் பெறுகிறார்கள் என்று வேதனையோடு பதிவு செய்கிறார் காஸ்ட்ரோ.
‘குறிப்பிட்ட பிரச்சனையின் சகல பரிமாணங்களையும் ஆராயும் தன்மை ஃபிடலின் தனித்துவமான குணமாகும். தெலைதூரத்திலிருந்து அதன் தீர்வுகளுக்குப் பயணிப்பார். இந்த குணம் ஏதோ ஆர்வத்தினால் மட்டுமல்ல, தொடர்ந்து யாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தும் தன்மையின் விளவாகும். கணிக்க முடியாத வேகத்தில் தீர்வுகளுக்கு அருகில் ஃபிடல் நிற்பார் என்கிறார். மார்க்வெஸ். அப்படி அயராது உழைத்து தீர்வுகளை நோக்கி ஓடிக்கொண்டே இருந்த ஃபிடலிடம், ‘இந்த உலகில் எதைச் செய்ய உங்களுக்கு மிகுந்த விருப்பம்?’ என்று மார்க்வெஸ் கேட்கிறார். ‘ஏதேனும் ஒரு தெருமுனையில் வேலை அவசரங்கள் ஏதுமின்றி காலாற நடக்க வேண்டும்’ என்கிறார் அவர். தனது மாணவப் பருவத்திலிருந்தே புரட்சிக்காகவும், புரட்சிக்கு பிறகு அதை பாதுகாக்க வேண்டிய பொறுப்போடும் பயணித்த காஸ்ட்ரோவுக்கு காலாற நடக்கத்தான் வாய்க்கவில்லை.
உதவிய நூல்கள்
- ஃபிடல் காஸ்ட்ரோ, மதம், மக்கள், புரட்சி – அலைகள் வெளியீட்டகம், 2024.
- லியோ டால்ஸ்டாய், சுவிசேஷங்களின் சுருக்கம், பாரதி புத்தகாலயம், 2017.
- ஃபிடல் காஸ்ட்ரோ பேருரைகள், பாரதி புத்தகாலயம், 2013.
- கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ், குரலின் வலிமை, வாசல், 2017.
- மைதிலி சிவராமன், கியூபா-காஸ்ட்ரோ-சே, பாரதி புத்தகாலயம், 2023.
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply