
சீத்தாராம் யெச்சூரி : நம் காலத்தின் சிறந்த மார்க்சிய-லெனினியவாதி!
செப்டெம்பர் 12 நினைவுதினம்
இரா. சிந்தன்
திட்டவட்டமான சூழ்நிலைகளை, திட்டவட்டமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற லெனினின் மேற்கோளை நமது நெஞ்சங்களில் பதித்த பெருமைக்குரிய தலைவர் சீத்தாராம் யெச்சூரி. ஒன்றுபட்ட மதராஸ் மாகாணத்தின் மதராஸ் நகரில் பிறந்து, ஹைதராபாத்தில் படிப்பை முடித்த அவர், சிறந்த மாணவராக இருந்தார். தில்லியில், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, ஒரு மாணவர் தலைவராக அரசியலில் அவர் நுழைந்தபோது, அவசரநிலைச் சூழல் அவரை வரவேற்றது. அந்தச் சூழ்நிலை ஒரு கடுமையான எதிர்காலத்திற்கான உறுதியும், தெளிவும் கொண்ட பல தலைவர்களை புடம்போட்டு வார்த்தெடுத்தது.
நவீன காலம் என்பது புதிய சவால்களின், புதிய நம்பிக்கைகளின் காலம். கடும் போராட்டங்களின் வழியாகவே அந்த நம்பிக்கைத் திசையில் நாம் பயணிக்க வேண்டியுள்ளது. அதற்கான உறுதியை நமக்கு அளிக்கக் கூடிய வாழ்க்கை சீத்தாராம் யெச்சூரியுடையது.
உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் புயற்காற்று வீசி வந்த அந்தக் காலத்தில், சி.பி.ஐ.(எம்) தனது சுயேச்சையான நிலைப்பாட்டை மார்க்சிய-லெனினிய வெளிச்சத்தில் மேற்கொண்டது. அதில் அடியொற்றி நின்ற தலைவர் சீத்தாராம் யெச்சூரி. அந்தக் காலகட்டத்தின் முக்கியமான விவாதங்களில் அவரின் பங்களிப்பு போற்றத்தக்கது.
சோவியத் ஒன்றியத்திலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிசத்தை கட்டுவதில் ஏற்பட்ட தவறுகளின் பின்னணியில் – 1992 ஆம் ஆண்டில் சி.பி.ஐ.(எம்) நிறைவேற்றிய தீர்மானத்திலும், அதன் பின்னர் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவைச் சரியாகப் புரிந்துகொண்டு, தத்துவார்த்தப் பார்வையை மேலும் வலுப்படுத்தி முன்னேறுவதிலும் சீத்தாராம் அளப்பரிய பங்களிப்பைச் செய்தார்.
இந்தியாவில், பாசிச வகைப்பட்ட இந்துத்துவ சித்தாந்தம் பரவி வந்த சூழலில், சி.பி.ஐ.(எம்) இந்த எதிர்வரும் ஆபத்தைக் கச்சிதமாகக் கணித்து அடையாளம் காட்டியது. அதற்கான சித்தாந்த விவாதங்களிலும் தோழர் சீத்தாராமின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.
இந்தக் காலகட்டத்தில், இந்தியா நவதாராளமயப் பாதையை வலுவாகப் பின்பற்றியது; இந்திய ஆளும் வர்க்கத்திற்கு பாசிச வகைப்பட்ட ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தோடு கொஞ்சிக் குலாவுவதில் தயக்கமில்லை. இப்படியான பின்னணியில், உழைக்கும் மக்களின் நலன்களைக் காப்பாற்றி முன்னேறுவதற்காக கட்சி தனது திட்டத்தை மேம்படுத்தியது. இதற்காக நடைபெற்ற விவாதங்களில் அரசியல் தலைமைக் குழுவிலும், மத்தியக் குழுவிலும் சீத்தாராம் ஆற்றிய பங்களிப்புகளை, அவரின் சகாவான தோழர் பிரகாஷ் காரத்தும் உடனிருந்து மேற்கொண்டதைப் பதிவு செய்துள்ளார்.
சீத்தாராம் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்வான சமயத்தில், இந்திய அரசியலில் ஏற்பட்ட வலதுசாரித் திருப்பம் ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியிருந்தது. இடதுசாரி இயக்கமோ மிகவும் சவாலான நிலைமையில் போராடி வந்தது. இப்படியான சூழலில், முன்னுக்கு வந்த புதிய அரசியல் சவால்களையும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எழுந்த அச்சுறுத்தல்களையும் சரியாக அடையாளம் கண்டு, அரசியல் உத்திகளை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தவராக சீத்தாராம் இருந்தார். இப்போதும், அவரின் பங்களிப்போடு உருவான காலப்படுத்தப்பட்ட கட்சித் திட்டமும், இடது ஜனநாயக அணியைக் கட்டமைக்கும் அவசியத்தை வலியுறுத்தும் அரசியல் நடைமுறை உத்திக்கான ஆவணமும், இந்துத்துவ-கார்ப்பரேட் கூட்டை எதிர்கொள்வதற்கு அவசியமான பரந்த ஒற்றுமையை, போராட்ட அணியைக் கட்டமைப்பதற்கான அழைப்பும், நம்மை வழிகாட்டி முன்னேற்றிச் செல்கின்றன.
தோழர் சீத்தாராம் யெச்சூரி, உடல்நலக் குறைவினால் காலமான பின்னணியில், அவரின் அரசியல் பங்களிப்பு பற்றிய உரைகளும், கட்டுரைகளும் குவிந்தன. அதில் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் பலரும் இடம்பெற்றிருந்தார்கள். மார்க்சிஸ்ட் கட்சி உருவாக்கிய மகத்தான தலைவர்களில் ஒருவராக சீத்தாராமைப் புகழ்ந்துரைத்த அவர்கள், அந்த இடம் இப்போது வெற்றிடமாக இருப்பதாக வருந்தினார்கள். உறுதியான சித்தாந்தப் பார்வையை வளர்த்துக்கொண்டு, உழைக்கும் மக்களின் நலனைக் காக்கும் உறுதியான செயல்பாட்டின் மூலமே, பரந்துபட்ட ஆதரவு சக்திகளின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும். அதற்கான உறுதியை ஏற்போம்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply