
மேற்கு வங்கம் இன்று
அபாஸ் ராய் சவுத்ரி
பதினெட்டாவது சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக, ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாஜக மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த மாற்றம் வெறுமனே ஒரு வலதுசாரிக் கட்சிக்குப் பதிலாக மற்றொரு வலதுசாரி அரசாங்கம் வருவது மட்டுமல்ல. பாஜக ஆட்சியில் இருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, தனது கோட்பாட்டையும், அரசியலையும், அமைப்பையும் விரிவுபடுத்த ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது. மேற்கு வங்கத்தில் ஆர்எஸ்எஸ்-இன் பொது நடவடிக்கைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. அதன் தலைவர் மோகன் பகவத் அடிக்கடி மேற்கு வங்கத்திற்கு வருகை புரிந்து, அங்கு நீண்ட காலம் தங்கி வருகிறார். புதிய அரசாங்கம் மாநிலத்தில் வெறுப்பையும், பிளவுச் சூழலையும் வளர்த்தெடுக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பதினாறாம் நூற்றாண்டில் ஸ்ரீ சைதன்யரின் பக்தி இயக்கத்தின் மூலம் வங்காளத்தில் சமூகச் சீர்திருத்த நடைமுறை தொடங்கியது. இந்து மதத்தின் பெயரால் நடைபெற்ற பிராமணிய ஆதிக்கத்திற்கு எதிராக, சாதி, மதத்தைப் பொருட்படுத்தாமல் மனித அடையாளத்தின் சாரத்தைக் கண்டறிவதே இவ்வியக்கத்தின் மையக் கருத்து ஆகும். இதைத் தொடர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் வங்காள சமூகத்தின் அறிவுசார் விழிப்புணர்வு, வங்காளத்தின் தனித்துவமான மறுமலர்ச்சி ஆகியவற்றுடன் நவீனத்துவத்துடனான அதன் முதல் சந்திப்பு தொடங்கியது. இச் சீர்திருத்த இயக்கங்களின் மூலம், சகிப்புத்தன்மை, தாராளவாதம், நவீனத்துவ பண்புகள் ஆகியவை வங்காள சமூகத்தில் உருப்பெற்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வங்கத்தில் இந்து மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஆங்கிலேய இந்தியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் ஆர் எஸ் எஸ் நிறுவப்படுவதற்கு சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் இந்துத்துவாவின் தொட்டிலாக வங்காளம் விளங்கியது. அக்காலத்தில் சர்வதேச சூழலில் ஏற்பட்ட மாற்றங்களின் பின்னணியில், சுதந்திரப் போராட்டத்தின் இறுதி முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு தீவிரமடைந்தது. சோசலிசம் மீதான ஆர்வம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் சுதந்திர இயக்கங்கள் வழியாகப் பரவியது. இச் சூழலில், ஏகாதிபத்திய எதிர்ப்பு, மதச்சார்பற்ற ஜனநாயகம், இந்தியாவின் பன்மைத்தன்மை ஆகியவை சுதந்திரப் போராட்டத்தின் முதன்மைக் கோட்பாட்டு அடித்தளங்களாக உருவாயின. இதன் விளைவாக, அரசியல் இந்துத்துவா பலவீனமடைந்தது; ஆனால் வீழ்ச்சி அடையவில்லை.
ஆர்எஸ்எஸ்-இன் நூற்றாண்டுக்கு பிறகு, அரசியல் இந்துத்துவா இப்போது இந்தியாவிலும், மேற்கு வங்கத்திலும் சமூக, அரசியல் வாழ்க்கையில் கணிசமான செல்வாக்கைப் பெற்றுள்ளது. மாறிவரும் உலகளாவிய சூழல்களுக்கு எதிர்வினையாக தனது அசல் வர்க்க நிலைப்பாட்டை மாற்றிய ஆர்எஸ்எஸ், இப்போது உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நலன்களுடன் இணைந்துள்ளது. எனவே, இந்துத்துவா–கார்ப்பரேட் இணைப்பு என்ற வெளிப்பாடு இந்தியாவின் சமூக, பொருளாதார, அரசியல் நடவடிக்கைகளில் பரிச்சயமான ஒன்றாகி விட்டது. பதினெட்டாவது சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மேற்கு வங்கத்தின் சமூகம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு ஆகியவை இந்துத்துவா–கார்ப்பரேட் அச்சில் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன.
புதிய பாஜக அரசாங்கத்தின் அமைச்சர்களிடையே இலாகாக்கள் ஒதுக்கீடு, மேற்கு வங்கத்தில் ஆர்எஸ்எஸ்-இன் நோக்கங்களை மிகத் தெளிவாகக் காட்டுகிறது. கல்வித் திட்டங்களையும், கல்வி நிறுவனங்களையும் கைப்பற்ற மாநில அரசாங்கத்தைப் பயன்படுத்த ஆர்எஸ்எஸ் தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் இப்போது மேற்கு வங்கத்தில் ஆட்சியிலுள்ள அரசியல் இந்துத்துவா சக்திகளின் முதன்மை இலக்குகளில் ஒன்றாகிவிட்டது. ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட வரலாறு இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துடன் நேரடியாக இணைந்துள்ளது. இப் பல்கலைக்கழகம் வங்கத்தின் முதன்மையான அறிவுசார் ஆய்வு மையங்களில் ஒன்றாகவும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்விச் சிறப்பு மையங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. ஆசிரியர்களின் நேரடி வழிகாட்டுதலிலும், ஊக்கத்திலும், தலைமுறை தலைமுறையாக மாணவர்கள் சுதந்திரச் சிந்தனையின் சூழலில் வளர்ந்துள்ளனர். ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த எண்ணற்ற சிறந்த மாணவர்களின் படிப்பு மையமாக விளங்குகிறது. மாநில முதலமைச்சர், இந்துத்துவா சக்திகளுடன் தொடர்புடைய வெளிநபர்களை ஒருங்கிணைத்து இந்தச் சுதந்திரச் சிந்தனை நிறுவனத்தின் மீது தாக்குதலை நடத்தியுள்ளார். இது வெட்கக்கேடானது, ஆனால் உண்மை.
சத்யஜித் ரே திரைப்பட, தொலைக்காட்சி நிறுவனங்கள், கொல்கத்தா மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் படைப்பு இயக்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மையமாகும். இத்தகைய நிறுவனங்கள் புனே, கொல்கத்தா ஆகிய இடங்களில் மட்டுமே உள்ளன. சமீபத்தில், அரசியல் இந்துத்துவா சக்திகள் வெளியாட்களை ஒருங்கிணைத்து இந்த வளாகத்தின் மீதும் தாக்குதல் நடத்தின. இந்த நிறுவனத்தின் மாணவர்கள், சமூகத்தின் பரந்துபட்ட கலைஞர்கள், எழுத்தாளர்கள், அறிவுஜீவிகளுடன் இணைந்து தாக்குதலுக்கு எதிராக தெருக்களில் இறங்கிப் போராடி வருகின்றனர். ஆயினும் மாநில காவல்துறை தாக்குதலுக்குப் பொறுப்பான வெளிநபர்களுக்கு எதிராக எந்தச் சட்ட நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக, போராடும் மாணவர்களை அவர்கள் சிறை வைத்துள்ளனர்.
‘சரோத் உத்சவ்’ (துர்கா பூசை) வங்காளத்தின் மிகப்பெரிய சமூக விழாவாகும். வர்க்கம், சாதி, மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மக்கள் இவ்விழாவில் பங்கேற்கின்றனர். அரசியல் இந்துத்துவா சக்திகள் இக் கொண்டாட்டத்தின் போதும் சகிப்பின்மையையும், அச்சம் தரும் சூழலையும் உருவாக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். விழாவுக்கு முன், முதலமைச்சரே சட்டமன்றத்தில், அத்துமீறி ஆக்கிரமிக்கும் சூழலை உருவாக்க ஊக்கமளித்தார். மாநில அரசின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், நீண்ட காலமாக காத்திருந்த சக்திகள் பொது வாழ்க்கையில் வெளிப்பட்டு தாக்குதல்களை முன் நின்று நடத்தினர்.
வங்கத்தில் பல பத்தாண்டுகளாக, துர்கா பூசையிலும், பிற விழாக்களின் போதும், இடதுசாரிகள் மார்க்சிய, முற்போக்கு இலக்கிய இதழ்களை வெளியிட்டு, விற்பனை செய்யும் புத்தகக் கடைகளை நடத்தி வருகின்றனர். இது வங்கத்தின் சமூக விழாக்களின் ஒருங்கிணைந்த பகுதியாகி விட்டது. கொண்டாட்டங்களின் பிற அம்சங்கள் வாழ்வாதாரங்களைத் தக்கவைப்பது போல, விழாவில் இதழ்கள், புத்தகங்களின் வெளியீடும், விற்பனையும் சிறிய அளவிலான பொருளாதாரச் செயல்பாட்டின் மூலம் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுகின்றன. இந்த ஆண்டு, ‘சரோத் உத்சவ்’ நேரத்தில், சங் பரிவாரைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள், மாநில நிர்வாகம், காவல்துறை, அவர்களின் சொந்த காவி உடை தரித்த படையினரைப் பயன்படுத்தி, இடதுசாரிகளின் முற்போக்கு இலக்கிய பரப்புரையைத் தடுக்கும் முயற்சியாக கொல்கத்தாவிலும், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் வெட்கமற்ற தாக்குதல்களைத் தொடங்கினர்.
பாஜக அரசாங்கம் ஜாதவ்பூரில் புத்தகக் கடைகளை இடிக்க புல்டோசர்களைக் கொண்டு வந்தது. அதே தருணத்தில், கொல்கத்தாவில் நெரிசலில் ஏராளமானோர் மடிந்து கொண்டிருந்தனர். ஆயினும் காவல்துறை புத்தகக் கடைகளை நோக்கி புல்டோசர்களை செலுத்துவதில் முனைப்பு காட்டியது. இதுபோன்ற காட்சியை வங்காளம் இதுவரை கண்டதில்லை. உண்மையில், இந்தியாவில் வேறு எங்காவது இதுபோன்ற ஒன்றை யாரேனும் கண்டிருப்பார்களா? அநேகமாக இல்லை.
மக்கள் கைகளில் புத்தகங்களை ஏந்தியபடி புல்டோசர்களுக்கு முன் நின்றனர். இரவு முழுவதும் அவர்கள் தாக்குதல்களை எதிர்த்து நின்றனர். பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக அவர்கள் தெருக்களில் இறங்கினர். ஜனநாயக, மதச்சார்பற்ற, புத்தகப் பிரியர்களான சாதாரண மக்கள் புத்தகக் கடைகளுக்கு வந்து தொடர்ந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். புல்டோசர்களா அல்லது புத்தகங்களா—நீங்கள் எந்தப் பக்கம்? என மக்கள் ஒருவரை ஒருவர் கேட்கத் தொடங்கினர். அவர்கள் இடதுசாரிகளின் போராட்டத்தில் தங்களால் இயன்ற அளவுக்கு பங்கேற்றனர். ஆளும் கட்சியின் இத்தகைய நடத்தை சாதாரண மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது. இது வங்கத்தில் பாசிசத்திற்கு எதிரான மக்கள் ஒற்றுமையின் தொடக்கம். அரசியல் இந்துத்துவா திணித்து வரும் ஆழமடையும் இருளுக்கு நடுவே, இது நம்பிக்கையின் ஒளிக்கீற்று.
ஆர்எஸ்எஸ் தொடக்கத்திலிருந்தே ஐரோப்பிய பாசிசத்துடன் கோட்பாட்டளவில் தனது தொடர்பைப் பராமரித்து வந்தது. பாரம்பரிய பாசிசம் எழுச்சியடைந்த காலத்தில் அதை ஆதரித்த நிதி நலன்களில், நிதி மூலதனத்தின் சில பிரிவுகள் முசோலினியை விட, இட்லரையே தங்களுக்கு மிகவும் பொருத்தமான பிரதிநிதியாகக் கருதின. மார்ச் முதல் அக்டோபர் 1933 வரை, நாஜிக்கள் பெர்லினிலும், ஜெர்மனி முழுவதும் பெரும் புத்தகக் கடைகளை தீக்கிரையாக்கினர். வங்கத்தின் அரசியல் இந்துத்துவா சக்திகள் ஆர்எஸ்எஸ்-இன் அந்தப் பாசிசத் தாக்குதல்களை நினைவுபடுத்தியுள்ளன. மாநில அரசின் ஆதரவைப் பயன்படுத்தி, அவர்கள் புத்தகக் கடைகளை தாக்கத் தொடங்கியுள்ளனர்.
எதிர்காலத்தில், முற்போக்கு இதழ்களையும், புத்தகங்களின் வெளியீட்டையும் அவர்கள் தடுக்க முயற்சிக்கலாம். இந்த ஆண்டு விழாவின் போது, காவி உடை தரித்த காலிகள் முற்போக்கு இலக்கிய பதிப்பகங்களையும் தாக்கினர். பாசிசமும், நாஜிசமும் அறிவொளி இயக்கத்துடன் தொடர்புடைய பகுத்தறிவு வாதத்தை நிராகரிப்பதன் மூலம் தங்கள் பயணத்தைத் தொடங்கின. சிறந்த மார்க்சியவாதியான ஜார்ஜ் லுகாஸ், இட்லரின் எழுச்சியையும், நாஜி ஆட்சியின் முழு காலத்தையும் பற்றிய தனது The Destruction of Reason (பகுத்தறிவின் அழிவு) என்ற படைப்பில் குறிப்பிடத்தக்க பகுப்பாய்வை மேற்கொண்டுள்ளார். ஜெர்மனியிலும், பிற இடங்களிலும், சர்வாதிகார, அடிப்படைவாத சக்திகள் அறிவுத் தேடலையும், நவீனத்துவத்தின் மையமாக உள்ள பகுத்தறிவு வாதத்தையும் கண்டு அஞ்சுகின்றன. அச்சத்தால் உந்தப்பட்டு, அவற்றைத் தாக்கி அழிக்க முயற்சிக்கின்றன என்று குறிப்பிட்டார். அரசியல் இந்துத்துவா இந்தியாவில் பகுத்தறிவின்மையின் மிக சக்திவாய்ந்த வெளிப்பாடுகளில் ஒன்றைக் குறிக்கிறது. உண்மையில், இது வங்க சமூகத்தின் மீதான தங்கள் கோட்பாட்டு மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான அரசியல் இந்துத்துவா சக்திகளின் ஒரு பரிசோதனை ஆகும்.
விழாக்களின் போது தடைகளை உருவாக்குவதோடு மட்டும் அவர்களது பணி நிற்காது. இப்பிரச்சாரத்தை அவர்கள் தொடர்வார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் அறிவொளி இயக்கம் வங்காளத்தின் பல்வேறு சமூக, பண்பாட்டுச் சூழலில் தாராளவாத, சகிப்புத்தன்மையையும், வாழ்க்கை முறைகளையும் வளர்க்க உதவியது. அரசியல் இந்துத்துவா சக்திகளின் நோக்கம் வங்க சமூகத்தின் பன்மைத்தன்மை, நவீனத்துவம், பகுத்தறிவு வாதம் ஆகியவற்றைத் தாக்கி, ஒற்றைத் தன்மையிலான இந்துத்துவா கோட்பாட்டின் ஆதிக்கத்தை நிறுவுவதாகும்.
அதனால்தான் மேற்கு வங்கத்தில் அரசியல் இந்துத்துவா சக்திகளால் முன்னெடுக்கப்படும் வெறுப்பு, பகைமை ஆகியவற்றின் இலக்குகள் மார்க்ஸ், லெனின் அல்லது இந்தியாவின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகள் மட்டுமல்ல; ரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், ராகுல சாங்கிருத்யாயன், பி. ஆர். அம்பேத்கர் உள்ளிட்ட இந்தியக் கட்டுமானத்துக்கான கருத்தியலை நிர்மாணித்த அனைவரும் இலக்குகளாகி விட்டனர். இச் சக்திகள் வங்க சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்தின் மீதும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். அவர்கள் சாதாரண மக்களை அச்சுறுத்த விரும்புகிறார்கள். பாசிசவாதிகள் இவ்வாறுதான் செயல்படுவார்கள்.
ஒவ்வொரு தாக்குதலுக்குப் பிறகும், உயர் மட்ட பொறுப்பில் உள்ள பாஜக தலைவர்கள் வழக்கமாக அலட்சியத்துடனும், வெட்கமற்ற முறையிலும் பதிலளிக்கின்றனர். இந்த வழக்கமான மறுப்பு திட்டமிட்ட, இழிவான ஊக்கத்தை மறைக்கிறது. உண்மையில், ஆர்எஸ்எஸ் தலைமையிலான அரசியல் இந்துத்துவா சக்திகள் எதிர்காலத்தில் மேலும் இலக்கு நோக்கிய, ஆக்கிரமிப்புத் தன்மை வாய்ந்த தாக்குதல்களுக்கான பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கு வங்கத்தின் சமூக, பண்பாட்டில் பல்வேறு பரிசோதனைகளை நடத்தி வருகின்றன.
மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு, அரசியல் இந்துத்துவா சக்திகள் திரிணாமூல் காங்கிரசின் குற்றவியல், ஊழல் நடவடிக்கைகளை தங்கள் சொந்த அதிகார அச்சில் திறம்பட இணைத்துள்ளன. பதினைந்து ஆண்டுகால ஊழல், குற்றவியல் அரசியல் இப்போது வெறுப்பு, பிளவு ஆகிய எதிர்வினைக் கோட்பாட்டுடனும், அரசியலுடனும் பெருமளவில் இணைந்து வருகிறது. இந்த ஒருங்கிணைந்த சக்தியின் முதன்மை இலக்கு இப்போது கம்யூனிஸ்டுகளின் கோட்பாடும், அரசியல் இயக்கங்களும் ஆகும். கம்யூனிஸ்டுகள் மீதான தாக்குதல்கள் குறிப்பிட்ட நோக்கங்களுடன் ஒழுங்கமைக்கப்படுகின்றன. அவை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.
எங்கள் தலைவர்களும், தோழர்களும் போராட்டத்துக்கும், எதிர்ப்புக்கும் எதிராக அர்ப்பணிப்புடன் தெருக்களில் நிற்கின்றனர். உழைக்கும் மக்களின் பங்கேற்பின் மூலம், அவர்களின் வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில், சாதி, மதம், மொழி அல்லது பாலினம் என்பதைப் பொருட்படுத்தாமல், இந்த எதிர்ப்புணர்வு அரசியல் ரீதியாக பெருமளவில் ஒழுங்கமைக்கப்படும். நிச்சயம் அது நடக்கும்.
பதினெட்டாவது சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மேற்கு வங்கத்தில் 27 இலட்சம் குடிமக்கள் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறையின் மூலம் தங்கள் வாக்குரிமையை இழந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையோர் முஸ்லிம்கள், பெண்கள், விளிம்பு நிலை சமூகங்களைச் சேர்ந்தவர்களாவர். வாக்குரிமையை இழந்து, பாதுகாப்பின்மை, அச்சம் ஆகியவற்றின் பின்னணியில், அவர்கள் வாழ்க்கை நெருக்கடியை எதிர்கொண்டு வாழ்கின்றனர். எஸ்ஐஆர் என்பது ஆர்எஸ்எஸ்-ன் மைய நிகழ்ச்சி நிரல். அதன் செயலாக்கத்தின் மூலம், ஆர்எஸ்எஸ் தனது குறுகிய அரசியல் நோக்கங்களை அடைய முயற்சிக்கிறது. தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எஸ்ஐஆர் ஜனநாயகத்திற்கு எதிரான துரோகமாகவும், இந்துத்துவா சக்திகளால் சமூகத்தின் அரசியல் இனப்படுகொலைக்கான கருவியாகவும் மாறியுள்ளது.
வங்காளம் போன்ற பன்மைத்துவம் வாய்ந்த, மதச்சார்பற்ற, ஜனநாயக சமூகத்தில் அரசியல் இந்துத்துவா சக்திகள் இப்போது ஆட்சியில் உள்ளன. இது மாநிலத்தின் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டத்தையும், மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கான போராட்டத்தையும் பெருமளவுக்கு கடினமாக்கியுள்ளது என்பதில் ஐயமில்லை. உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் மீது, குறிப்பாக விளிம்பு நிலை மக்கள் மீது தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. இந்திய ஜனநாயகம், தேர்தலில் வெளிப்படைத்தன்மை, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள், இளைய தலைமுறையினரின் எதிர்காலம், அபிலாசைகள் மீதான தற்போதைய இந்துத்துவா தாக்குதல் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் அல்ல. தீர்க்கவியலாத நெருக்கடியில் சிக்கியுள்ள நவீன தாராளவாதத்துடன் தொடர்புடைய கொள்ளைக்கார, ஆதிக்க அமைப்பைப் பாதுகாக்க, மோடி அரசாங்கம் ஜனநாயகத்தின் முகமூடியைத் தூக்கி எறிந்துள்ளது.
இன்று, இளைய தலைமுறையினரின் இயக்கங்கள் உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வாதாரத்திற்கான போராட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒருபுறம் இந்தியாவில் பாசிச சக்திகளின் ஒருங்கிணைப்புக்கும், மறுபுறம் உழைக்கும் மக்கள், பொதுமக்கள், அனைத்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்புக்கும் இடையிலான மோதல், தற்போதும், எதிர்காலத்திலும் இந்திய அரசியலின் முதன்மை மோதலாக மாறவுள்ளது.
இச் சூழலில், டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டமும், மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் இயக்கமும் நெருக்கமாக ஒன்றோடொன்று இணைந்து வருகின்றன. ஜனநாயகத்தை மீட்டெடுக்க நடைபெற்று வருகிற நாடு தழுவிய இயக்கம், ஆர்எஸ்எஸ், பாஜக-ஆகியவற்றுக்கு எதிரான பரந்த ஒற்றுமைக்கான சாத்தியத்தை உருவாக்கியுள்ளது. கம்யூனிஸ்டுகளும், இடதுசாரிகளும் புதிய அரசியல் சூழ்நிலைகளின் கீழ், நாடு தழுவிய இயக்கத்தை மேற்கு வங்கத்தில் மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கான போராட்டத்துடன் ஒருங்கிணைக்க முயற்சிக்கின்றனர்.
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுக்குக் கிடைக்கும் கோட்பாட்டு ரீதியான, அரசியல் வெளியைக் கட்டுப்படுத்த ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை மிகவும் தீவிரமாக முயற்சிக்கின்றன. வலதுசாரி அரசியல் சக்திகள் இதைத்தான் செய்வார்கள். எனினும், மிகவும் ஆபத்தான வளர்ச்சி என்னவெனில், உழைக்கும் மக்களின் ஒரு பிரிவினரின் உணர்வில் காவிமயத்தின் தாக்கம் வேரூன்றியுள்ளது ஆகும். அரசியல் இந்துத்துவா சக்திகள் சமூகத்திற்குள் கண்மூடித்தனமான பக்தர்களை உருவாக்கத் தவறவில்லை. திசை திருப்பும் பிரச்சாரத்தின் மூலம், கம்யூனிஸ்டுகளை இந்து எதிர்ப்பாளர்களாக சித்தரிக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். காவி உடை தரித்த ஆதரவாளர்கள் இந்தத் திரிபு பிரச்சாரத்தை கண்மூடித்தனமாக உண்மையாக ஏற்றுக்கொள்கின்றனர். இதன் விளைவாக, தங்கள் மதத்தைப் பாதுகாக்கும் பெயரில் கம்யூனிஸ்ட்களையும், இடதுசாரிகளையும் தாக்குவது தாங்கள் செய்ய வேண்டிய கடமை என்று அவர்கள் நம்புகிறார்கள்.
இக் குழுக்கள் முசோலினியின் கருப்புச் சட்டைகள் அல்லது இட்லரின் பழுப்புச் சட்டைகள் போல ஆக வேண்டுமென பெருமளவில் விரும்புகின்றன. அரசியல் வலதுசாரி சக்திகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கம்யூனிஸ்ட்கள், இடதுசாரிகள் மீதான தங்கள் கோட்பாட்டு, அரசியல் தாக்குதல்களைத் தொடருவார்கள்.
வெறும் ஐந்து மாதங்களுக்குள், ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் முகமூடி கழன்று, அதன் உண்மையான முகத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான ஆதரவுடனும், மாநில நிர்வாகத்தைப் பயன்படுத்தியும், பாஜக அரசாங்கம் இந்த இடைத்தேர்தல்களை ஒரு கேலிக்கூத்தாக மாற்றியுள்ளது. ஆளும் அரசியல் இந்துத்துவா சக்திகள் தேர்தல் முறைகேட்டிலும், வாக்கு மோசடியிலும் திரிணாமூல் காங்கிரசின் சாதனையையும் மிஞ்சியுள்ளன.
மக்கள்தொகையில் கணிசமான பிரிவினர் புதிய பாஜக அரசாங்கத்தைப் பற்றிய எதிர்மறையான கருத்தை வளர்த்து வருகின்றனர். எரிச்சலும், வெறுப்பும் அதிகரித்து வருகின்றன. பாஜக 45 விழுக்காடு வாக்குகளுடன் ஆட்சிக்கு வந்தது. ஆயினும் மேற்கு வங்கத்தில் எங்கும் சாதாரண மக்கள் தங்கள் அன்றாட உரையாடல்களில் புதிய அரசாங்கத்தைப் பற்றிய ஆர்வத்தையோ அல்லது பெரும் எதிர்பார்ப்புகளையோ வெளிப்படுத்துவதைக் கேட்க முடியவில்லை.
திரிணாமூல் ஆட்சியிலிருந்து தப்பிக்க மட்டுமே பாஜக-வுக்கு வாக்களித்தவர்களில் சிலர் கூட இப்போது ஏமாற்றமடைந்து புதிய அரசாங்கத்திற்கு எதிரானவர்களாகிவிட்டனர். பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுமா என்று பொதுமக்கள் பெருமளவில் சந்தேகிக்கின்றனர். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் திறன் தனக்கு உள்ளது என்பதை நிரூபிக்கவும், தமது நோக்கங்கள் நேர்மையானவை என்பதைக் காட்டவும், தமது உறுதிமொழிகளுக்குப் பொறுப்பேற்கவும் தேவையான அரசியல் விருப்பத்தை அரசாங்கம் இன்னும் வெளிப்படுத்தவில்லை. மாறாக, அதன் மக்கள் விரோத நடவடிக்கைகள் ஏற்கனவே வெறுப்பை உருவாக்கத் தொடங்கியுள்ளன.
சமீப காலங்களில், தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், குடிசைப் பகுதிகளில் வாழ்வோர், பிற உழைக்கும் மக்களின் ஒருங்கிணைந்த போராட்டங்கள் மேற்கு வங்கம் முழுவதும் வலுவடைந்து விரிவுபட்டு வருகின்றன. ஆகஸ்ட் 10ஆம் தேதி, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜெயில் பரோ (சிறை செல்லும் போராட்டம்) இயக்கத்தில் பங்கேற்றனர். மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் தங்கள் கோரிக்கைகளுடன் பாஜக எதிர்ப்பு இயக்கங்களில் பங்கேற்று வருகின்றனர். புதிய அரசாங்கம் அமைந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு பாஜக எதிர்ப்பு இயக்கத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலானோர் பங்கேற்பது பெருமளவில் ஊக்கமளிக்கும் வளர்ச்சிப் போக்காகும்.
மேற்கு வங்கம் இப்போது ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவற்றுக்கு எதிரான நாடு தழுவிய மக்கள் இயக்கங்களுடன் தெளிவாகவும், நேரடியாகவும் இணைக்கப்பட்டுள்ளது. இதுவே தற்போதைய சூழலின் மிக நேர்மறையான அம்சமாகும். ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நாடு தழுவிய போராட்டத்தை, மதச்சார்பற்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், பொதுமக்களும், உழைக்கும் மக்களும் தங்கள் இருப்பையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கவும் மேற்கு வங்கத்தில் நடைபெறும் இயக்கத்துடன் இணைக்க மார்க்சிஸ்ட் கட்சி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
மேற்கு வங்கத்தில் ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை மேலும் மேலும் ஆக்கிரமிப்பு தன்மை வாய்ந்த கம்யூனிஸ்ட் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன. ஆயினும் அதேநேரத்தில், ஆர்எஸ்எஸ் தலைமையிலான பாஜக அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கும், பரந்த அளவில் அரசியல் இந்துத்துவாவிற்கும் எதிரான போராட்டத்திற்கும் கணிசமான வாய்ப்புகளை வழங்கும் சூழல்கள் உருவாகி வருகின்றன.
பரந்த தேசிய சூழலில், மேற்கு வங்கத்தில் ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம் அனைத்து உழைக்கும் மக்களுக்கும், அனைத்து உண்மையான ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளுக்கும் சவாலான ஒன்றாகும். தற்போதைய சூழலின் தேவைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, மிகப் பரந்த ஒற்றுமையை உருவாக்க மார்க்சிஸ்ட் கட்சி நேர்மையான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. வர்க்க இயக்கங்களும், மக்கள் இயக்கங்களும் இந்த ஒற்றுமை, போராட்டம் ஆகியவற்றின் இயக்கு சக்திகளாகும்.
பாதகமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், உழைக்கும் வர்க்கத்தை ஒருங்கிணைக்கவும், உழைக்கும் மக்களின் நலன்களை ஆதரிக்கும் வலுவான அரசியல் வாய்ப்பை உருவாக்கவும் சாத்தியக்கூறுகள் உருப்பெற்று வருகின்றன. இந்தச் சாத்தியக்கூறுகளை நனவாக்க நாம் சாத்தியமான எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும். வர்க்க அடையாளத்தையும், வர்க்க உணர்வையும் மீண்டும் நிறுவவும், விரிவுபடுத்தவும் சாதாரண உழைக்கும் மக்களை நேரடியாக அணுகி, அவர்களின் வாழ்வாதாரப் போராட்டங்களை முன்னிறுத்தி இயக்கங்களை உருவாக்க வேண்டும்.
உழைக்கும் மக்களிடையே ஆர்எஸ்எஸ் மீது வர்க்க அடிப்படையிலான பகைமையை வளர்த்தெடுக்கும் வகையில் நாம் பணியாற்ற வேண்டும். அரசியல் இந்துத்துவாவிற்கு எதிரான தொடர்ச்சியான கோட்பாட்டு, அரசியல் போராட்டத்திற்கும், இந்துத்துவா–கார்ப்பரேட் கூட்டணியின் ஆதிக்கத்திற்கு எதிராக வேலை, ஊதியம், நிலம், வீடு, கல்வி, சுகாதாரம் தொடர்பான உழைக்கும் மக்களின் போராட்டங்களுக்கும் இடையே ஒரு இயங்கியல் ஒற்றுமையை உருவாக்குவது அவசியம்.
இந்த இரு பக்க போராட்டம் மிகவும் கடினமானது என்பதில் ஐயமில்லை. ஆனால், அது சாத்தியமற்றது அல்ல. அது ஒன்றே மாற்று வழி—தவிர்க்க முடியாத அவசியம் ஆகும்.
தமிழில்: இரா. சிசுபாலன்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply