
சோவியத் ஒன்றியத்தின் முதல் அமைச்சரவை !
இரா. சிந்தன்
1917 நவம்பர் புரட்சியின் மூலம் பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியதுடன், புதியதொரு அரசாங்க அமைப்பை உருவாக்கியது. இதுவே உலக வரலாற்றில் முதலாளித்துவ ஆட்சிமுறைக்கு மாற்றான புதிய பாதையைத் திறந்தது. இந்த அரசாங்கம் மக்கள் ஆணைக்கு பொறுப்பாளர்கள் சபை (சோவ்னார்கோம்) எனப் பெயரிடப்பட்டது.
1917இல் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, 1923இல் சோவியத் ஒன்றியம் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டத்தை எட்டியது. 1924ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டம் அதன் அதிகார அமைப்பை வரையறுத்தது. இரு கட்டங்களிலும் அதன் அடிப்படையான நோக்கம், அரசாங்கத்தை மக்களின் அதிகாரத்தில் கொண்டுவருவதாக இருந்தது.
பிரிட்டனில் 1915இல் உருவாக்கப்பட்ட அஸ்க்வித் தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில் சுமார் 22 உறுப்பினர்கள் இருந்தனர். 1916 டிசம்பரில் பிரதமரான டேவிட் லாயிட் ஜார்ஜ், ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட சிறிய போர் அமைச்சரவையை உருவாக்கினார். எந்தச் சூழலிலும் அன்றாட நிர்வாகத்தை அதிகாரிகளே மேற்கொண்டனர்.
ஆனால், சோவியத் அரசாங்கம் தனது அதிகாரத்தை மன்னரிடமிருந்தோ, சொத்துடைமையாளர்களின் நாடாளுமன்றத்திடமிருந்தோ பெறவில்லை. தொழிலாளர்கள், சிப்பாய்கள், விவசாயிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட சோவியத் பேரவைகளிலிருந்தே அதிகாரத்தைப் பெற்றது. மக்கள் ஆணையாளர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் அதிகாரமும், திரும்பப் பெறும் உரிமையும் அனைத்து ரஷ்ய சோவியத்துகளின் பேரவைக்கும் அதன் மத்திய செயற்குழுவுக்கும் இருந்தன. இது அன்றைய முதலாளித்துவ அரசாங்க முறையிலிருந்து முக்கியமான வேறுபாடாகும்.
மக்களுடன் இணைந்த நிர்வாகம்
அரசின் வெவ்வேறு துறைகளின் பணிகள் சிறப்பு ஆணையங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இவை ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்கள், சிப்பாய்கள், மாலுமிகள், விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் மக்களுடன் நெருங்கிய ஒத்துழைப்பில் செயல்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. போர் மற்றும் கடற்படை விவகாரங்களைக் கவனிப்பதற்குத் தனி ஆணையரை நியமிக்காமல் மூவரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அமைச்சரவை ஒதுக்கீட்டில் புதுமை
தேசிய இனங்களின் உரிமைகள், பொதுச் சுகாதாரம் போன்றவை தனித்த அமைச்சரவை பொறுப்புகளாக வரையறுக்கப்பட்டன. இவை வெறும் அரசாங்கம் எந்தப் பிரச்சினைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதைக் காட்டின.
தேசிய இனங்களுக்கான மக்கள் ஆணையம் உருவாக்கப்பட்டது. அதற்கு ஜோசப் ஸ்டாலின் தலைமை தாங்கினார். பல மொழிகளையும் பல தேசிய இனங்களையும் கொண்ட நாட்டில், தேசிய இனங்களின் உரிமைகள் மற்றும் சுயநிர்ணய உரிமை தொடர்பான கேள்விகளை அரசாங்கத்தின் நேரடிப் பொறுப்புக்குள் கொண்டுவருவது குறிப்பிடத்தக்க மாற்றமாக இருந்தது.
பெண்களின் உரிமைகள் தொடர்பாகவும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1919இல் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் கீழ் உருவாக்கப்பட்ட பெண்கள் பிரிவு (ஜெனோடெல்), பெண்களின் கல்வி, அரசியல் மற்றும் உரிமைகளுக்காக பணியாற்றியது.
1918 ஜூலையில் ரஷ்ய சோவியத் குடியரசில் பொதுச் சுகாதாரத்துக்கான மக்கள் ஆணையம் நிறுவப்பட்டது. மருத்துவ, சுகாதாரப் பணிகளை ஒருங்கிணைப்பதும், தொற்றுநோய்களை எதிர்கொள்வதும், மருத்துவச் சேவைகளை விரிவுபடுத்துவதும் அதன் நோக்கங்களாக இருந்தன. அதன் பின்னரே, 1919 பிரிட்டனில் சுகாதார அமைச்சு உருவாக்கப்பட்டது.
இவ்வாறு, தேசிய இனங்களின் உரிமைகள், பெண்களின் சமூகப் பங்கேற்பு, பொதுச் சுகாதாரம் ஆகியவை அரசாங்கத்தின் பொறுப்புகளாக முன்னிறுத்தப்பட்டன. அரசாங்கம் யாருக்காகச் செயல்படுகிறது என்பதைக் காட்டும் அம்சங்களாக இவை அமைந்தன.
மேற்குறிப்பிட்ட இந்த தனித்துவ அம்சங்கள், அரசாங்கத்தின் நோக்கம் குறித்த மார்க்சிய அணுகுமுறையிலிருந்து உருவானதாகும். நிலவும் சமூக அமைப்பை நிர்வகிப்பதல்ல; தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தை நிறுவி, சமூக உறவுகளை மாற்ற வேண்டும் என்ற கடமையை சோசலிசம் ஏற்றிருந்தது. இது மக்களாட்சிக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்தது.
குருதியில் மூழ்கடிக்கப்பட்ட பாரிஸ் கம்யூனின் அனுபவத்திற்குப் பின்னர், நவம்பர் புரட்சியே அந்த வரலாற்றை வளர்த்தெடுத்தது. இப்போது சோவியத் ஒன்றியம் இல்லையென்றாலும், அதன் வரலாற்றில் நமக்கான பாடங்கள் உள்ளன.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply