
கம்யூனிசக் கோட்பாடுகள்
ஃப்ரடெரிக் எங்கெல்ஸ்
கே 14: இந்தப் புதிய சமூக அமைப்புமுறை எந்த வகைப்பட்டதாக இருக்கும்?
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் புதிய சமூக அமைப்புமுறை, பரஸ்பரம் போட்டியிட்டுக் கொள்கின்ற தனிநபர்களின் கைகளிலிருந்து, தொழில்துறையின் கட்டுப்பாட்டையும், உற்பத்தியின் அனைத்துப் பிரிவுகளையும் எடுத்துக் கொள்ளும். பதிலாக, பொருளுற்பத்தியின் இந்தப் பிரிவுகள் அனைத்தையும், ஒட்டுமொத்த சமுதாயமே நிர்வகிக்கும் ஓர் அமைப்புமுறையினை, சமுதாயம் முழுமைக்காகவும், ஒரு பொதுத் திட்டத்தின்படியும், சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரின் பங்கேற்புடனும் நிறுவும்.
வேறு வகையில் கூறுவதெனில், அது போட்டியை ஒழித்து அதனிடத்தில் ஒத்துழைப்பை நிலைநாட்டும்.
மேலும், தொழில்துறையின் நிர்வாகம், தனிநபர்கள் கையில் இருப்பது, தவிர்க்க முடியாதபடி தனியார் சொத்துடைமைக்கு இட்டுச் செல்கிறது. போட்டி என்பது நடைமுறையில் வெறுமனே, தனியார் சொத்துடைமையாளர்களின் கட்டுப்பாட்டில் தொழில்துறை இருப்பதன் தன்மையும் வடிவமுமே ஆகும். ஆக, போட்டியிலிருந்தும், தொழில்துறையின் தனிநபர் மேலாண்மையிலிருந்தும், தனியார் சொத்துடைமையைப் பிரிக்க முடியாது என்பது இதிலிருந்து புலனாகும். எனவே, தனியார் சொத்துடைமையை ஒழிக்க வேண்டும். அதற்குப் பதிலாக, உற்பத்திக் கருவிகள் அனைத்தையும் பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். உற்பத்திப் பொருட்கள் அனைத்தையும் பொது உடன்பாட்டின்படி வினியோகிக்க வேண்டும். சுருக்கமாக இது, “உற்பத்திப் பொருட்களின் மீதான கூட்டு உடைமை” என்று அழைக்கப்படுகிறது.
உண்மையில், தனியார் சொத்துடைமை ஒழிப்பு என்பது, ஐயத்துக்கு இடமின்றி, ஒட்டுமொத்தச் சமூக அமைப்புமுறையில் ஏற்படும் புரட்சியை விவரிக்க, மிகச் சுருக்கமான, மிகவும் குறிப்பிடத் தக்கதொரு வழிமுறை ஆகும். தொழில்துறையின் வளர்ச்சியினால் இந்தப் புரட்சி தவிர்க்க முடியாததாய் ஆக்கப்பட்டுள்ளது. இந்தக் காரணத்தால்தான், மிகச்சரியாகவே, கம்யூனிஸ்டுகள் தங்களின் முதன்மையான கோரிக்கையாக தனியார் சொத்துடைமை ஒழிப்பை முன்வைக்கின்றனர்.
கே 15: தனியார் சொத்துடைமை ஒழிப்பு முந்தைய காலகட்டத்தில் சாத்தியமானதாய் இருக்கவில்லையா?
இருக்கவில்லை. சமூக அமைப்புமுறையில் ஒவ்வொரு மாற்றமும், சொத்துடைமை உறவுகளில் ஏற்படும் ஒவ்வொரு புரட்சியும், புதிய உற்பத்திச் சக்திகளின் உருவாக்கத்தினால் ஏற்படும் கட்டாய விளைவே ஆகும். புதிய உற்பத்திச் சக்திகள் பழைய சொத்துடைமை உறவுகளுடன் இனிமேலும் ஒத்துப் போகா.
தனியார் சொத்துடைமை என்றென்றும் நிலவியிருக்கவில்லை.
மத்திய காலப்பகுதியின் இறுதியில், ஒரு புதிய உற்பத்தி முறை, அதாவது, பட்டறை உற்பத்தி முறை, புகுத்தப்பட்டது. பழைய சொத்துடைமை உறவுகளையும் விஞ்சி அது வளர்ச்சி பெற்றது. அன்று நிலவிவந்த நிலப்பிரபுத்துவ, கைவினைக் குழும வடிவிலான சொத்துடைமை அமைப்பின்கீழ் அதனை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில், அது தனியார் சொத்துடைமை என்னும் ஒரு புதிய சொத்துடைமை வடிவத்தைப் படைத்தது. பட்டறைத் தொழில் அமைப்பிலும், பெருவீதத் தொழில்துறை வளர்ச்சியின் மிகத் தொடக்கக் கட்டத்திலும், தனியார் சொத்துடைமை மட்டுமே சாத்தியமான சொத்துடைமை வடிவமாய் இருந்தது; தனியார் சொத்துடைமையை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்புமுறை மட்டுமே, சாத்தியமான சமூக அமைப்புமுறையாய் இருந்தது.
அனைவருக்கும் போதுமான அளவுக்குக் கிடைத்தது போக, சமூக மூலதனத்தை விரிவாக்கவும், உற்பத்திச் சக்திகளைப் பெருக்கவும், பெருஞ்செல்வம் மீந்திடும் அளவுக்கு இதுநாள் வரையில் உற்பத்தி செய்ய முடிந்ததில்லை. அந்த அளவுக்கு உற்பத்தி செய்ய முடியாத காலம்வரை, சமுதாயத்தினுடைய உற்பத்திச் சக்திகளின் பயன்பாட்டை நெறிப்படுத்தும் ஓர் ஆளும் வர்க்கமும், ஏழ்மையான ஓர் ஒடுக்கப்பட்ட வர்க்கமும் இருந்தே தீரும். இந்த வர்க்கங்கள் எவ்வாறு அமைகின்றன என்பது உற்பத்தியின் வளர்ச்சிக் கட்டத்தைப் பொறுத்ததாகும்.
விவசாயத்தைச் சார்ந்துநின்ற மத்திய காலப்பகுதி நமக்கு நிலப்பிரபுவையும் பண்ணை அடிமையையும் வழங்கியது. மத்திய காலகட்டத்தின் பிந்தைய பகுதி கைவினைக் குழும எஜமானனையும், கைவினைப் பயிற்சியாளனையும், நாள்கூலித் தொழிலாளியையும் நமக்குக் காட்டியது. பதினேழாம் நூற்றாண்டு, பட்டறை அதிபர்களையும் பட்டறைத் தொழிலாளர்களையும் கொண்டிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டோ பெரிய தொழிற்சாலை உடைமையாளர்களையும் பாட்டாளிகளையும் கொண்டுள்ளது.
இதுநாள்வரையில் உற்பத்திச் சக்திகள், அனைவருக்கும் போதுமான அளவுக்கு உற்பத்தி செய்யும் நிலைக்கு ஒருபோதும் வளர்ச்சி அடையவில்லை என்பது கண்கூடு. தனியார் சொத்துடைமையானது, உற்பத்தி சக்திகள் மேலும் வளர்ச்சி பெறுவதற்கு ஒரு தளையாகவும் தடைக்கல்லாகவும் ஆகிவிட்டது.
ஆயினும், இப்போது, பெருவீதத் தொழில்துறையின் வளர்ச்சியானது, ஒரு புதிய காலகட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. மூலதனமும் உற்பத்திச் சக்திகளும் முன்னெப்போதும் கண்டிராத அளவுக்கு விரிவாக்கப்பட்டுள்ளன. அண்மைக் காலத்துக்குள் அவற்றை வரம்பிலா அளவுக்குப் பெருக்கிட உற்பத்திச் சாதனங்கள் கைவசம் உள்ளன. அதுமட்டுமின்றி, உற்பத்திச் சக்திகள் மிகச்சில முதலாளிகளின் கைகளில் குவிந்துள்ள அதே வேளையில், மாபெரும் திரளான மக்கள், மேலும் மேலும் பாட்டாளி வர்க்கத்துக்குள் தள்ளப்பட்டு வருகின்றனர். முதலாளிகளின் செல்வச் செழிப்பு அதிகரித்துவரும் அதே வேகத்தில் பாட்டாளி மக்களின் நிலைமை மென்மேலும் அவலம் மிகுந்ததாகவும், தாங்கவொண்ணாததாகவும் ஆகிவருகிறது. முடிவாக, எளிதில் விரிவாக்கத் தக்கதும் வலிமை மிக்கதுமான இந்த உற்பத்திச் சக்திகள், தற்போதைக்குத் தனியார் சொத்துடைமையையும் முதலாளித்துவ வர்க்கத்தையும் விஞ்சி வளர்ந்துள்ளன. அவை, எந்த நேரத்திலும், சமூக அமைப்புமுறையையே குலைக்கும் கொடூரமான குழப்பங்களைக் கட்டவிழ்த்துவிடக் காத்துக் கொண்டுள்ளன. இந்த நிலைமைகளில், தனியார் சொத்துடைமையை ஒழிப்பது இப்போது சாத்தியமாகிவிட்டது மட்டுமின்றி, முற்றிலும் அவசியமும் ஆகிவிட்டது.
தமிழில்: மு. சிவலிங்கம்
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply