
ஹோசிமின்
செப்டெம்பர் 2 நினைவு தினம்
ஆர்.எஸ். செண்பகம்
ஹோசிமின், வியட்நாம் ஆகிய இரு பெயர்களும் பிரிக்க முடியாதவை. உலக வரலாற்றில் ஒடுக்கப்பட்ட ஒரு சிறிய நாடு, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற பெரும் வல்லமை படைத்த ஏகாதிபத்திய வல்லரசுகளை எதிர்த்துப் போராடி விடுதலை பெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க மகத்தான இந்த வெற்றிக்கு அடித்தளமிட்டவர் ஹோசிமின் ஆவார். செப்டம்பர் 2, 1969 வரை வியட்நாமின் புரட்சிமிகு தலைவராக இருந்தவர். 1946 முதல் 1955 வரை வட வியட்நாமின் பிரதமராகவும், அதன் பிறகு 1969 வரை அரசு தலைவராகவும் இருந்தார். வியட்நாமின் தந்தை என அறியப்படுபவர். வியட்நாம் போரை அவரது இறப்பு வரையில் முன்னின்று நடத்தினார். மக்கள் யுத்தத்தை நடத்துவதற்கு ராணுவம், காவல் துறை, கொரில்லாக்கள் என்ற மூன்று வகையான ஆயுதப் பிரிவுகள் அமைக்கப்பட்டன. நிர்வாக அமைப்பின் வெவ்வேறு மட்டங்களில் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் உள்ளடக்கிய பிரதிநிதிகள் உரிய எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டனர். அவரது மறைவிற்குப் பின், ஆறு ஆண்டுகள் கழித்து வட வியட்நாமின் வெற்றியுடன் போர் முடிவுக்கு வந்தது. இரண்டு வியட்நாம்களும் ஒன்றிணைந்தன. தெற்கு வியட்நாமின் தலைநகராக இருந்த சாய்கோன் நகரம் அவரது நினைவாக ஹோசிமின் நகரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
எதிர்காலம் நூலிழையில் தொங்கிக் கொண்டிருந்தபோது அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, “நான் ஒரு படகோட்டி. தந்தையர் நாடு என்ற இந்த படகை, புயல்களுக்கு நடுவில் பத்திரமாக ஓட்டிச் செல்ல வேண்டும். மக்களை மகிழ்ச்சி என்னும் கரையில் சேர்க்க வேண்டும்” எனக் கூறி, ஜனநாயகக் குடியரசின் முதல் கூட்டத்தில் ஆறு அவசரக் கடமைகளை பட்டியலிட்டார். அதன் அடிப்படையில், பஞ்சத்தை ஒழிப்பதற்கு உணவு உற்பத்தியை அதிகரிக்கும் இயக்கம், ஏழைகளுக்கு நிவாரணம் அளிக்க அரிசியை நன்கொடையாக பெறுகின்ற இயக்கம், கல்லாமையை ஒழிக்கும் இயக்கம், வயது வந்த எல்லோருக்கும் வாக்குரிமை அளித்து, அதன் அடிப்படையில் பொதுத் தேர்தல், காலனியாதிக்கத்தினால் ஏற்பட்ட தீய வழக்கங்களைப் போக்குவதற்கு சுறுசுறுப்பு, சிக்கனம், நேர்மை ஆகிய குணங்களை மக்களிடம் வேரூன்றச் செய்தல், தலை வரியை ஒழித்தல், கஞ்சா புகைக்கும் வழக்கத்தைத் தடை செய்தல், கத்தோலிக்க மதம், பௌத்தம் ஆகியவற்றை பின்பற்றுபவர்களுக்கு மத சுதந்திரம் அளித்து அவர்களுக்கிடையில் ஒற்றுமையைப் பேணுதல் ஆகியவற்றை உடனடியாக அமல்படுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
“எதிரியின் பலம் சூரியன் மறைவதைப் போன்றது. அது மறையப் போகிறது. நம்முடைய பலம் பாய்ந்தோடும் நீரோடை, கொழுந்து விட்டு எரியும் நெருப்பைப் போன்றது, அது பின்வாங்காது” என்று கூறி, கட்சியை வலுப்படுத்துவதிலும், வளர்ப்பதிலும் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தினார். கட்சியை மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டருடன் ஒப்பிட்டார். கட்சி வலிமை உள்ளதாக, தூய்மை மிக்கதாக, முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். உறுப்பினர்கள் அனைவரும் கருத்தியல், அமைப்பு நிலை, செயல் முறை ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும். அப்பொழுதுதான் கட்சி தனது தலைமைப் பாத்திரத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற இயலும். புரட்சிகர இலட்சியத்தை அடைவதற்கு அமைப்பு மட்டும் போதுமானதல்ல. ஊழியர்களும், கட்சி உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக அன்பு செலுத்த வேண்டும். கட்சிக்கும், மக்களுக்கும் முழுமனதுடன் சேவையாற்ற வேண்டும்” என்றார் ஹோசிமின்.
அவர் ஒரு சிறந்த கவிஞர். ”மலைகளைத் தகர்ப்பதும், சமுத்திரத்தைக் காலி செய்வதும் இளைஞர்களால் இயலாத காரியம் அல்ல; விடாமுயற்சி வெற்றி தரும்; மன உறுதி வெற்றியை நிலைநாட்டும்” என்று எழுதினார். சில சந்தேகப் பிறவிகள் நமது போராட்டத்தை, “யானையை வெட்டுக்கிளி எதிர்க்கிறது” என்று கூறி எள்ளி நகையாடுகிறார்கள். அவர்கள் இன்றைய நிலையை மட்டும் பார்க்கிறார்கள், தொலைநோக்கு இல்லாதவர்கள், எதிரியிடம் போர் விமானங்களும், சக்தி மிக்க துப்பாக்கிகளும் இருக்கலாம், நாம் கூர்மையான மூங்கில் கோல்களைக் கொண்டு அவர்களை எதிர்க்கலாம், மார்க்சிய, லெனினியத்தைப் பின்பற்றுகின்ற நாம் இன்றைய நிலைமையை மட்டுமல்ல, எதிர்காலத்தையும் முன்வைத்துப் போராடுகிறோம். நமது மக்களுடைய போராட்ட உணர்ச்சியிலும், வல்லமையிலும் நாம் நம்பிக்கை வைக்கிறோம். வெட்டுக்கிளி சிறிய உருவமே; எனினும் விடாமுயற்சியால் யானையின் குடலையே கிழிக்கும். உண்மையில் காலனியாதிக்க யானைகள் அழிந்து கொண்டிருக்கின்றன. நாம் புலிகளைப் போல மேன்மேலும் வளமடைந்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினார். ”வியட்நாம் புரட்சியில் ஒவ்வொரு திருப்புமுனையிலும் அவர் சிறந்த படகோடியாகத் திகழ்ந்தார். புயற்காற்று அடிக்கின்ற பொழுது படகைச் செம்மையாக செலுத்தி பத்திரமாக துறைமுகத்துக்கு கொண்டு வருவார்” என்று வியட்நாம் காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.
வியட்நாம், லியன் இணைப்பு காங்கிரசில் உரையாற்றுகையில், “இந்த ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்று நான் நீண்ட காலமாக போராடினேன். இந்த ஒற்றுமை மரபு மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றி விட்டது. இன்று பழம் பழுத்துத் தொங்குகிறது. அதற்கு நிரந்தர வசந்தம் உண்டு. லாவோஸ், கம்பூச்சியா மக்களிடையில் ஒருமைப்பாடு ஏற்பட்டிருப்பது அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆக வியட்நாம், லாவோஸ், கம்பூச்சியா மூன்று மக்கள் இனங்கள் ஒன்று சேர்ந்துள்ளன. தமது சிந்தனை ஒருமைப்பாட்டின் மூலம் எல்லாவிதமான துன்ப, துயரங்களையும் ஒழித்து வெற்றி அடைவார்கள். தலையீட்டாளர்களையும், ஆக்கிரமிப்பாளர்களையும் முறியடிப்பார்கள். ஒற்றுமை, ஒற்றுமை, பரந்த ஒற்றுமை. வெற்றி, வெற்றி, மாபெரும் வெற்றி” என்ற பிரபலமான முழக்கத்தை முன்வைத்தார்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply