
சொல்லகராதி : புரட்சி
ஆசாத்
பழைய சொத்துடைமை உறவுகளும், வளர்ச்சி பெற்றுவிட்ட புதிய உற்பத்திச் சக்திகளும் இணக்கமற்றுப் போகும் சூழலில், அவை உற்பத்திக்கு கால் விலங்குகளாய் மாறிவிடுகிறது. அந்த விலங்குகளை உடைத்தெறிவதே புரட்சியாகும். ’முதலாளித்துவ உறவுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்குத் தளைகளாகிவிட்டன.’ லாபத்தை மட்டுமே மையமாகக் கொண்ட ‘தேவைக்கு அதிகமான உற்பத்தி எனும் கொள்ளை நோயை’ அது கொண்டுள்ளது. ‘தாம் உற்பத்தி செய்யும் செல்வத்தை தம்முள் இருத்தி வைக்க இடம் போதாத அளவுக்கு முதலாளித்துவ சமுதாய உறவுகள் மிகவும் குறுகலாக இருக்கின்றன.‘
உற்பத்தி உறவுகளில் நிலவும் வர்க்க முரண்பாடுகளும், அதன் விளைவாக எழும் தவிர்க்க முடியாத எழுச்சிகளும், மனித சமூகத்தை ஒரு கட்டத்திலிருந்து அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்நகர்த்துகின்றன. அடிமைச் சமூகத்திலிருந்து நிலப்பிரபுத்துவ சமூகமாகவும், நிலப்பிரபுத்துவ சமூகத்திலிருந்து முதலாளித்துவச் சமூகமாகவும் அது வளர்ச்சி அடைந்துள்ளது. அடிமைகளின் புரட்சி, முதலாளித்துவ புரட்சி என சமூக வளர்ச்சியின் கட்டங்கள் விரிந்தன. அந்த வளர்ச்சியின் போக்குகளையும் பாட்டாளி வர்க்க புரட்சியின் மூலம் முதலாளித்துவச் சமூகம், கம்யூனிச சமூகமாக மாறுவதன் அடிப்படைகளையும் மார்க்ஸ் – எங்கெல்ஸ் எழுதிய ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ எடுத்துரைத்தது.
ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தின் மீது, பலாத்காரத்தைப் பிரயோகிப்பதற்கான ஒழுங்கமைப்பே முதலாளித்துவ சமூக அமைப்பில் ஜனநாயகம் எனப்படுகிறது. ‘ஒடுக்குவோரும் ஒடுக்கப்படுவோரும் ஒருவருக்கொருவர் தீராப்பகை கொண்டோராய், ஒரு நேரம் மறைவாகவும் ஒரு நேரம் பகிரங்கமாகவும், இடையறாப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்தப் போராட்டம் சமுதாயம் முழுவதையும் புரட்சிகரப் புத்தமைப்பிலோ, அல்லது போராடும் வர்க்கங்களது பொது அழிவிலோதான் எப்போதும் முடிவுற்றுள்ளது.’
அடிமைச் சமூகத்திலிருந்து நிலப்பிரபுத்துவ சமூகம் முளைத்தெழுந்ததுபோல், ‘பிரபுத்துவ சமுதாயத்தின் இடிபாடுகளிலிருந்து முளைத்தெழுந்துள்ள தற்கால முதலாளித்துவச் சமுதாயம் வர்க்கப் பகைமைகளுக்கு முடிவு கட்டிவிடவில்லை; பழையவற்றின் இடத்தில் புதிய வர்க்கங்களையும், புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும், புதிய போராட்ட வடிவங்களையுமே அது நிலைநாட்டியுள்ளது. முதலாளித்துவ வர்க்கச் சகாப்தத்தில், வர்க்கப் பகைமைகளை மேலும் மேலும் இரு பெரும் பகை முகாம்களாய், எதிரும் புதிருமான – இரு பெரும் வர்க்கங்களாய்-முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளி வர்க்கமுமாய்’ – கூர்மையடைந்துள்ளது. வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் இதுவும் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மூலம் ஒரு புரட்சிகரப் புத்தமைப்பில்தான் நிறைவடையும்.
சோசலிச புரட்சி என்பது சமூகம் முழுமையாக மாற்றம் காணும் ஒரு நிலையாகும்; பழைய சமூக அமைப்பிற்குப் பதிலாக புதியதொரு சமூக அமைப்பு அங்கு நிறுவப்படும். இது வர்க்கப் பகைமைகளுக்கு முடிவு கட்டி வர்க்கமற்ற, சுரண்டலற்ற சமூகத்தை படைத்திடும் புதிய சமூக அமைப்பாகும்.
கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். என்று கம்யூனிஸ்ட் அறிக்கை கூறியது போல், சுரண்டும் கூட்டத்திற்கு புரட்சி எனும் சொல், இரத்தம் படிந்த பயங்கர உணர்வை அவர்களது மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறது என்று பகத்சிங் குறிப்பிட்டார். மேலும், புரட்சி என்பது இரத்த வெறிகொண்ட மோதலோ, துப்பாக்கிகள் மீதான வழிபாடோ அல்ல. புரட்சிக்கு இட்டுச்செல்லும் வழியாக வேண்டுமெனில் கிளர்ச்சி இருக்கலாமே தவிர, கிளர்ச்சி என்பது புரட்சி அல்ல. மேலான சமூக மாற்றத்திற்கான ஆவலே புரட்சி எனும் வார்த்தையில் பொதிந்துள்ள உணர்வாகும். புரட்சி என்பது உலகத்தின் விதி. அது மனிதகுல முன்னேற்றத்தின் அடிப்படை. மனிதனை மனிதன் (ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை) சுரண்டிக் கொள்ளையடிக்கும் முறையை முடிவுக்குக் கொண்டுவருவதே புரட்சியின் நோக்கம் என்றார் பகத்சிங்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply