
கார்ல் மார்க்சின் ‘மூலதனம்’ : பாட்டாளி வர்க்கத்தின் பேராயுதம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
‘உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்’ என்று அறைகூவியதுடன் நிற்காமல், அந்த ஒற்றுமைக்கான பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டிய மானுடப் பேரறிஞர், மனித குல விடுதலைப் போராளி கார்ல் மார்க்ஸ்,1883 மார்ச் 14 அன்று மறைந்தார். 65 வயதுக்குச் சற்றுக் குறைவாகவே வாழ்ந்த கார்ல் மார்க்சின் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் மானுட விடுதலைக்குப் பொருள் பொதிந்ததாக செலவிடப்பட்டது என்றால் அது மிகையாகாது. 1841இல் 23 வயதிலேயே முனைவர் பட்டம் பெற்ற மார்க்ஸ் அடுத்த பத்து ஆண்டுகளில் மக்கள் போராட்டங்களில் கலந்து கொண்டு, அன்றைய ஆளும் வர்க்கங்களால் தொடர்ந்து நாடுவிட்டு நாடு கடத்தப்பட்டுக் கொண்டேயிருந்தார். இப்போராட்டங்களுக்கிடையே, ஆழமான அரசியல் – பொருளாதார, சமூக, தத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு பல முக்கியப் படைப்புகளையும் உருவாக்கினார். ஜெர்மானிய தத்துவ வரலாற்றை ஆய்வு செய்து, முற்றிலும் புதிய வரலாற்றுப் பொருள் முதல்வாத தத்துவத்தை, ‘ஜெர்மானிய தத்துவம்’ (GERMAN IDEOLOGY) என்ற நூலாக எங்கெல்சுடன் இணைந்து எழுதி உலகிற்கு அறிமுகப்படுத்தினார். மானுட வரலாற்று வளர்ச்சியை மிகக் கச்சிதமாக அளித்து, முதலாளித்துவத்தின் வரலாற்றுப் பாத்திரத்தைத் தெளிவுபடுத்தி, உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் சுரண்டல் அற்ற பொதுவுடைமைச் சமுதாயத்தை அமைப்பதற்கான பாதையைக் காட்டும் மகத்தான படைப்பான ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ என்ற அற்புதமான படைப்பை 1847 இறுதியில் மார்க்சும் எங்கெல்சும் வழங்கினர். 1848 பிப்ரவரி 21 அன்று அது வெளியிடப்பட்டது.
மூலதனம்
1848 முதல் 1852 வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் வெடித்த ஜனநாயகப் புரட்சிகள் தோல்வியடைந்ததன. அதைக் கண்டு மார்க்ஸ் சோர்வடையவில்லை. தத்துவார்த்த தெளிவிலும், அரசியல் பொருளாதார ஞானத்திலும் உள்ள குறைபாடுகளால்தான் பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது என்பதை உணர்ந்தார். மீண்டும் பாட்டாளி வர்க்க இயக்கம் சுதாரித்து எழும்முன், தத்துவ தெளிவையும் அரசியல் பொருளாதார ஞானத்தையும் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் ஆயுதங்களாக ஆக்கிட ஆய்வில் இறங்கினார். அடுத்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தத்துவப் பொருளாதார ஆய்வுப் பணிகளில் தனது நேரத்தை மார்க்ஸ் செலவழித்தார். சொந்த வாழ்க்கையில் கடும் வறுமைக்கும் இன்னல்களுக்குமிடையே கழித்த இப்பத்தாண்டுகளில், தினசரி லண்டன் மியூசியம் நூலகத்தில் பத்துமணி நேரத்திற்கும் அதிகமாகச் செலவிட்டு உழைத்து, மகோன்னதமான ஒரு படைப்பை கார்ல் மார்க்ஸ் வழங்கினார். அதுதான் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் இயக்க விதிகளையும் அதன் அடிப்படை செயல்பாட்டையும், முதலாளித்துவச் சுரண்டலின் ரகசியத்தையும் அற்புதமாக விளக்குகின்ற ‘மூலதனம்’ என்ற நூல். இந்நூலின் படைப்பாக்கத்திற்குப் பின்னால் ஒரு ஆழமான வரலாறு உள்ளது. அதற்குள் நாம் இங்கே போகவில்லை. இந்நூலை நான்கு பாகங்களாக உருவாக்க மார்க்ஸ் திட்டமிட்டிருந்தார். இறுதியில் ‘மூலதனம்’ என்ற நூல் மூன்று பாகங்களுடனும், இதன் நான்காம் பகுதி, மூன்று பாகங்களைக் கொண்ட, ‘உபரி மதிப்பு பற்றிய தத்துவங்கள்’ என்ற தலைப்பில், அரசியல் பொருளாதார தத்துவங்களின் வரலாறு பற்றிய நூலாக வெளிவந்தது.
‘மூலதனம்’ நூலின் முதல் பாகத்தில், மார்க்ஸ் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் உற்பத்தி செயல்முறையை முதலில் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படை இயக்கவிதிகளைத் தெளிவாக விளக்குகிறார். ‘மூலதனம்’ நூலின் இரண்டாம் பாகம் முதலாளித்துவத்தின் சரக்கு மற்றும் மூலதன சுழற்சியை ஆய்வு செய்கிறது. உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகள் சந்தைகளில் விற்கப்பட்டு, அவற்றில் அடங்கியிருந்த உபரி மதிப்பு பணவடிவில் மாற்றப்படுவதில் உள்ள சிக்கல்களை வெளிக்கொணர்கிறது. ‘மூலதனம்’ நூலின் மூன்றாம் பகுதி உற்பத்தி, சுழற்சி ஆகிய இரு துறைகளையும் இணைத்து, ஒட்டுமொத்தமாக முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் செயல்பாட்டை விளக்குகிறது.
இச்சிறு கட்டுரையில் ‘மூலதனம்’ நூலின் மூன்று பகுதிகளையும் அறிமுகப்படுத்துவது சாத்தியம் அல்ல. தோழர்களிடையே ‘மூலதனம்’ படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், அந்நூலின் முதல் பாகம் பற்றிய அறிமுகம் மட்டுமே இங்கு அளிக்கப்படுகிறது.
‘மூலதனம்’ – முதல் பாகம் எட்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பகுதி 1: சரக்குகளும் பணமும்; பகுதி 2: பணம் எவ்வாறு மூலதனமாக மாறுகிறது; பகுதி 3: அறுதி உபரி மதிப்பு (ABSOLUTE SURPLUS) உற்பத்தி; பகுதி 4: ஒப்பீட்டு உபரி மதிப்பு (RELATIVE SURPLUS VALUE) உற்பத்தி; பகுதி 5: அறுதி உபரிமதிப்பின் உற்பத்தியும் ஒப்பீட்டு உபரி மதிப்பு உற்பத்தியும்; பகுதி 6: கூலி; பகுதி 7: மூலதன திரட்டல்; பகுதி 8: ஆதிமுறை மூலதன திரட்டல்
துவக்கப் பகுதி
மூலதனத்தின் மர்மங்களை அறிய விரும்புவோர் இப்பகுதியை ஊன்றிப் படிக்கவேண்டும். சற்று கடினம் என்று தள்ளிவிடக்கூடாது. இதைப்பற்றி ‘மூலதனம்’ நூலின் முதல் ஜெர்மன் மொழி பதிப்புக்கு, தான் எழுதிய முன்னுரையில் மார்க்ஸ் அவர்களே பின்வருமாறு எழுதுகிறார்.
‘எல்லா அறிவியல் துறைகளிலும், துவக்கம் மிகக்கடினமானது. (இந்நூலின்) முதல் அத்தியாயத்தை குறிப்பாக சரக்குகள் பற்றிய ஆய்வைக் கொண்ட பிரிவை – புரிந்துகொள்வதுதான் மிகவும் கடினமானது’.
சுருக்கமாக, இப்பகுதியில் முதலாளித்துவச் சந்தையில் இரு சரக்குகளுக்கிடையேயான பரிவர்த்தனை மதிப்பு எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்பதை விளக்குகிறார். முக்கியமாக, முதலாளித்துவ உற்பத்தி அமைப்பில், கிட்டத்தட்ட அனைத்துமே, சுய பயன்பாட்டுக்காக அல்லாமல், சந்தையிலே விற்பனைக்காகவே உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை தெளிவுபடுத்துகிறார். இதைத்தான் ‘சரக்கு உற்பத்தி’ என்கிறோம். முதலாளித்துவ சரக்கு உற்பத்தியின் நோக்கம் லாபம் ஈட்டுவதே. எங்கிருந்து லாபம் வருகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு முதற்படி ‘சரக்கு’ என்பதன் உட்பொருளை புரிந்து கொள்வதாகும். பொதுவான அம்சம், அவை ஒவ்வொன்றும் மொத்த சமூக உழைப்பின் ஒரு பகுதியை உள்ளே அடக்கியிருக்கின்றன என்பதாகும். இவ்வாறு உள்ளடக்கியிருக்கும் உழைப்பை சரக்கின் ‘மதிப்பு’ என்கிறார். அதே சமயம், ஒவ்வொரு சரக்கிற்கும் பிரத்யேகப் பயன்பாடு உண்டு, இது அதன் இயற்கை வேதியியல், இயற்பியல் தன்மைகளைச் சார்ந்தது.
இதை சரக்கின் ‘பயன் மதிப்பு’ என்கிறார். முதலாளித்துவ உற்பத்தி முறையில் செல்வம் என்பது சரக்குகளின் பெரும் திரட்டலே. அதாவது சரக்கு என்பது அடிப்படைத் திசு (CELL) ஆகும். இத்திசுவின் தன்மையையும், சமூக உற்பத்தி முழுமையும் சரக்கு உற்பத்தியாக மாறுவதில் ‘பணம்’ என்ற சமூக ஏற்பாடு உருவாகி ஆற்றும் பங்கையும், அவற்றின் வரலாற்று வளர்ச்சிப் போக்கோடு இணைத்து மார்க்ஸ் இப்பகுதியில் விவரிக்கிறார்.
ஒரு சரக்கின் மதிப்பு என்பது குணாம்ச ரீதியாக சமூக உழைப்பின் பகுதி என்பதில் அடங்கியுள்ளது என்பதையும், அந்த மதிப்பின் அளவு அதில் அடங்கியுள்ள உழைப்பு நேரம் என்பதையும், சரக்குகள் சந்தையில் ‘பணம்’ என்ற சமூகக்கருவி மூலம் கைமாறும் பொழுது, அவற்றில் அடங்கியுள்ள உழைப்பு நேரம் (மதிப்பு) பரிவர்த்தனை விகிதத்திற்கு அடித்தளமாக உள்ளது என்பதையும் இப்பகுதி நமக்கு உணர்த்துகிறது. உழைப்பு நேரம் என்றால் அதிக நேர உழைப்பு அதிக மதிப்பு என்று ஆகிவிடாது. ஒரு சரக்கை தயாரிக்க அவசியமான குறைந்தபட்ச உழைப்பு நேரமே அதன் மதிப்பாகிறது என்பதை தெளிவாக்குகிறார்.
பணம் மூலதனமாக மாறுதல்
பணமே கடனாக அளிக்கப்பட்டு வட்டி மூலம் குட்டி போடுவது (M-M’ அல்லது லேவா தேவி அல்லது கடன் மூலதனம்) பணம் வியாபாரத்தில் முதலீடு செய்யப்பட்டு வாங்கும் விலைக்கும் விற்கும் விலைக்கும் உள்ள வேறுபாட்டால் லாபம் ஈட்டிப் பெருகுவது (M-C-M அல்லது வணிக மூலதனம்) ஆகிய மூலதன வடிவங்கள் லாபம் எங்கிருந்து வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள உதவாது என்பதை இப்பகுதி விளக்குகிறது. உற்பத்தியில் உருவாக்கப்படும் உபரிதான் தொழில் முதலாளியின் லாபம், வர்த்தகர்களின் லாபம், லேவாதேவிக்காரரின் வட்டி, நில உரிமையாளர் பெறும் வாடகை/குத்தகை அனைத்துக்கும் அடிப்படை என்பதைப் புரிந்துகொள்ள இப்பகுதி முதல்படி. உபரி மதிப்பின் (உபரி உற்பத்தியின்) மூலம் என்பது தொழிலாளி முதலாளிக்கு விற்கும் உழைப்பு சக்தியில் தான் உள்ளது என்பதை இப்பகுதி வெளிக்கொண்டு வருகிறது. நாள் முழுவதும் உழைக்கும் தொழிலாளியை மீண்டும் மீண்டும் உற்பத்தியில் ஈடுபடுத்துவதற்கு முழுநாள் உழைப்பு தேவையில்லை; ஒரு சராசரி தொழிலாளிக் குடும்பத்தைப் பராமரிக்க ஒரு நாளின் பகுதி நேர உழைப்பே போதும் என்பவற்றை இப்பகுதி புரியவைக்கிறது.
பகுதி 3 – உபரி மதிப்பு உற்பத்தி
பகுதி 3இன் முதல் மூன்று அத்தியாயங்கள் (7,8,9) மிக விரிவாகவும் சிறப்பாகவும் உபரி மதிப்பின் ரகசியத்தை, முதலாளித்துவச் சுரண்டலை விளக்குகின்றன. பத்தாவது அத்தியாயம் உண்மையிலேயே அற்புதமானது. ‘உழைப்பு நாள்’ (The Working Day) என்ற தலைப்பின் கீழ், உழைப்பு நேரத்தை அதிகப்படுத்த எப்படியெல்லாம் முதலாளி வர்க்கமும் அதன் தத்துவ அறிஞர்களும் முயன்றனர் என்பதையும், இதை எதிர்த்து தொழிலாளி வர்க்கம் எப்படி போராடியது என்பதையும் மார்க்ஸ் வரலாற்றுச் சான்றுகளுடன் சிறப்பாக விளக்குகிறார்.
பகுதி 4: முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில், வர்க்கப் போராட்டமும் முதலாளிகளுக்கிடையேயான போட்டியும் இயந்திரமாக்கலை ஊக்குவித்து உற்பத்தித் திறனை உயர்த்துகிறது என்பதை விளக்குகிறது. இதனால் ஒரு உழைப்பு நாளில் தொழிலாளியின் கூலிக்குச் சமமான உற்பத்தியைக் குறைந்த நேரத்திலேயே செய்து விட முடிகிறது. ஆகவே, ஒரு உழைப்பு நாளில் பெரும்பகுதி உழைப்பு நேரம் உபரி உழைப்பு நேரமாகவும் ஒரு சிறிய பகுதியே அவசிய உழைப்பு நேரமாகவும் ஆகிவிடுகிறது.
பகுதி 5: 3ஆம் பகுதியையும் 4ஆம் பகுதியையும் இணைத்து உபரி மதிப்பை அதிகப்படுத்த முதலாளி வர்க்கம் மேற்கொள்ளும் பல்வேறு யுக்திகளையும் இது தொடர்பான சூத்திரங்களையும் தத்துவார்த்த அடிப்படையில் விளக்குகிறது.
பகுதி 6: கூலி உழைப்பு சக்தியின் மதிப்பிற்கும் நடைமுறையில் உள்ள கூலிக்கும் இடையேயுள்ள உறவை இப்பகுதி விளக்குகிறது.
பகுதி 7: மூலதனச் சேர்க்கை
23 முதல் 25 வரையிலான மூன்று அத்தியாயங்கள் கொண்ட இப்பகுதிதான் இந்நூலின் மையப்பகுதி எனலாம். முதலாளித்துவ உற்பத்தி அமைப்பில் முதலாளி வர்க்கத்திற்கு உபரி மதிப்பு எவ்வாறு கிடைக்கிறது என்பது முந்தைய பகுதிகளில் விளக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில், முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பைச் சுரண்டி பெரும் உபரி மதிப்பு எவ்வாறு மூலதனமாக ஆக்கப்பட்டு, மூலதனத் திரட்டலுக்கு வழி செய்கிறது என்பதை மார்க்ஸ் விளக்குகிறார். இதையொட்டி மூலதன வளர்ச்சியைப் பற்றிய முதலாளித்துவ சிந்தனையாளர்களின் தவறான கருத்துகளை மார்க்ஸ் விமர்சிக்கிறார்.
மிக முக்கியமாக, அத்தியாயம் 25இல், புகழ்பெற்ற ‘முதலாளித்துவ, (மூலதனம்) வளர்ச்சியின் பொது விதி’ (The General Law of capitalist Accumulation) விளக்கப்படுகிறது. இந்த அத்தியாயத்தில் ஐந்து உட்பிரிவுகள் உள்ளன.
முதல் பிரிவு, உற்பத்தி தொழில்நுட்பம் மாறாத நிலையில் முதலாளித்துவ மூலதனப் பெருக்கம் நிகழ்வதற்குக் கூடுதல் உழைப்பு சக்தி தேவைப்படுகிறது என்பதை விளக்குகிறது. முதலாளிகளுக்கிடையே போட்டி, முதலாளி – தொழிலாளி வர்க்கப் போராட்டம் ஆகியவற்றின் விளைவாக, உற்பத்தித் தொழில்நுட்பங்கள் மேலும் மேலும் இயந்திரமயமாவதால், ஒரு புறம் உழைப்புப் படைக்கான தேவை சுருங்குகிறது. மறுபுறம், போட்டியில் பல முதலாளிகள் மண்ணைக் கவ்வி, வெற்றி பெறும் சில முதலாளிகளிடமே தொழிற் சொத்துக்கள் குவிவதும், பெரிய பெரிய தொழிற்சாலைகள் மேலும் மேலும் ஒரு சில பெரு முதலாளிகளிடம் போய்ச் சேருவதும் நிகழ்கிறது. இதன் பொருள் என்ன? மூலதன வளர்ச்சியில், உற்பத்தி பன்மடங்கு அதிகரித்தாலும் பணியிடங்கள் அதிகரிப்பது இல்லை. பணிப்படையில் இருக்கும் பல லட்சக்கணக்கான தொழிலாளிகள் முதலாளித்துவ வளர்ச்சியில் இயந்திரமயமாக்கலால் வெளியே தூக்கி எறியப்படுகிறார்கள். நிரந்தர வேலை என்பதே இல்லாமல், வேலையே கிடைக்காமல் அலையும் தொழிலாளி வர்க்கப் பகுதி பெருகிக்கொண்டே வருகிறது.
செல்வங்கள் ஒரு பக்கம் (பெருமுதலாளிகளிடம்) குவிவதும், மறுபுறம் எண்ணற்ற உழைப்பாளி மக்களின் வாழ்வு ஸ்திரமற்றதாகவும், வேலையின்மையின் பாதிப்புக்கு உள்ளாவதும் முதலாளித்துவ மூலதன வளர்ச்சியின் பொது விதியாக, நியதியாக அமைகிறது என்பது முடிவாகும். இதையே மூலதன வளர்ச்சியின் பொது விதி என்று அழைக்கிறார் மார்க்ஸ். எந்தக் காரணிகள் மூலதன வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கின்றனவோ, அவையே தொழிலாளி வர்க்கத்திற்கு வேலையின்மையை அதிகப்படுத்துகின்றன.
இந்த அத்தியாயத்தின் கடைசிப்பிரிவு முதலாளித்துவ வளர்ச்சியின் மேற்கூறிய பொது விதிக்கான சான்றுகளை பிரிட்டன் மற்றும் அயர்லாந்து நாட்டின் அனுபவத்திலிருந்து ஏராளமாகத் தொகுத்து அளிக்கிறது.
பகுதி 8 – ஆதிமுறை மூலதனத் திரட்டல்
முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு நிலைநாட்டப்பட்ட பின்பு உபரி மதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்பதையும், அதன் கணிசமான பகுதி மீண்டும் மூலதனமாக மாற்றப்பட்டு மூலதன வளர்ச்சிக்கு வழிசெய்கிறது என்பதையும் முந்தைய பகுதிகளில் மார்க்ஸ் விளக்கியுள்ளதை நாம் குறிப்பிட்டோம்.
முதலாளித்துவம் என்றாலே ஒருபுறம் முதலாளி வர்க்கம், அவர்களது கையில் அனைத்து உற்பத்திக் கருவிகள்; மறுபுறம், உற்பத்தி சாதனங்கள் ஏதும் இல்லாத பெரும் எண்ணிக்கையிலான கூலிப்படை. இந்த நிலை எப்படி உருவாகிறது? வேறுவகையில் கூறுவதானால், வரலாற்று வளர்ச்சியில் எப்படி ஒருபுறம் முதலாளி வர்க்கமும் மறுபுறம் தொழிலாளி வர்க்கமும் உருவாக்கப்பட்டு ஒன்றை ஒன்று எதிர்கொள்கின்றன? இந்த வரலாற்று வளர்ச்சிப் போக்கைத்தான் மார்க்ஸ் ‘ஆதி திரட்டல் முறை’ (Primitive Accumulation of Capital) என்று அழைக்கிறார். பகுதி 8இல் அத்தியாயங்கள் 26 முதல் 31 வரை, ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு பகுதியாக இதனை மார்க்ஸ் விளக்குகிறார். 26ஆம் அத்தியாயம் ஆரம்ப மூலதனச் சேர்க்கையின் ‘ரகசியத்தை’ விளக்குகிறது. அடுத்த அத்தியாயம் (27) நிலத்திலிருந்து வேளாண் மக்கள் எவ்வாறு வெளியேற்றப்படுகிறார்கள் என்பதை விவரிக்கிறது. 28வது அத்தியாயம், இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களுக்கெதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டு, பாராளுமன்றச் சட்டம் மூலமாகவே கூலி குறைக்கப்பட்டது என்பதை வர்ணிக்கிறது. அடுத்த மூன்று அத்தியாயங்கள் தொழில் துறையிலும் வேளாண் துறையிலும் முதலாளிகள் உருவாவது எப்படி என்பதை விளக்குகிறது.
அடுத்து, மிக முக்கியமாக, 32வது அத்தியாயம், முதலாளித்துவ மூலதன வளர்ச்சியின் வரலாற்றுத் திசை வழி என்னவாக இருக்கும் என்பதை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. இங்குதான் கீழ்க்கண்ட வரிகள் இடம் பெறுகின்றன.
“இப்பொழுது கைப்பற்றப்பட வேண்டியது தனக்கென சுயமாக உழைக்கும் தொழிலாளியின் சொத்து அல்ல. மாறாக, பல தொழிலாளிகளைச் சுரண்டும் முதலாளியின் சொத்துதான் கையகப்படுத்தப்பட வேண்டும். உற்பத்திச் சாதனங்கள் சமூகமயப்படுத்தப்படுவதும் உழைப்பு சமூகமயமாக்கப்படுவதும், முதலாளித்துவ அமைப்புக்குள் அவற்றைப் பிணைத்து வைக்க முடியாத அளவிற்கு வளர்ந்து விடுகின்றன. எனவே, இந்தப் பிணைப்பு தகர்க்கப்படுகிறது. (உழைப்போர்) சொத்தைக் கைப்பற்றியவர்களின் சொத்து கைப்பற்றப்படுகிறது.”
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply