
ஏகாதிபத்தியம் என்றால் என்ன?
அன்வர் உசேன்
அ. ஏன் கம்யூனிஸ்டுகள் ஏகாதிபத்தியம் குறித்து புரிந்து கொள்ள வேண்டும்?
- மக்கள் ஜனநாயகப் புரட்சியின் 3 முக்கிய எதிரி வர்க்கங்கள்- பெரு முதலாளித்துவம்/ நிலபிரபுத்துவம்/ ஏகாதிபத்தியம்.
- இந்திய பெரு முதலாளித்துவம்/ நிலபிரபுத்துவத்தைவிட வலிமையான மோசமான எதிரி வர்க்கம் ஏகாதிபத்தியம்.
- எனவே ஏகாதிபத்தியம் குறித்து புரிந்து கொள்வது மிக அவசியம்.
ஏகாதிபத்தியம் எனும் முக்கியமான கோட்பாடை புரிந்து கொள்ள அதனை லெனின் தனது மகத்தான படைப்பான “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்” எனும் நூலில் எவ்வாறு வரையறுக்கிறார் என்பதிலிருந்து தொடங்குவதுதான் மிகச்சிறந்த வழி.
ஆ. லெனின் ஏகாதிபத்தியத்தை எவ்வாறு வரையறுக்கிறார்?
மிகச்சுருக்கமாக ஏகாதிபத்தியத்தை வரையறுக்க வேண்டுமானால் அதனை “முதலாளித்துவத்தின் ஏகபோக கட்டம்” எனக்கூறலாம் என லெனின் கூறுகிறார்.
இ. அப்படியானால் முதலாளித்துவத்தின் ஏகபோகமல்லாத கட்டம் இருந்ததா?
ஆம்! முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் ஏகபோகமல்லாத கட்டம் இருந்தது. முதலாளித்துவம் ஒரு குறிப்பிட்ட தீர்மானகரமான கட்டத்தில்தான் முதலாளித்துவ ஏகபோகமாக உருவானது. போட்டியும் ஏகபோகமும் முரண்பட்ட அம்சங்கள். இப்பொழுது போட்டி முதலாளித்துவம் அதன் எதிர்மறை அம்சமான ஏகபோக முதலாளித்துவமாக மாறியது. (நீர்- ஆவி- மாறுபட்ட குணாம்சங்கள் போல)
எனவே ஏகபோகம் என்பது குணாம்ச ரீதியாக மாறுபட்ட வளர்ச்சி. இது முதலாளித்துவத்துக்கு உள்ளேயே நடந்த வளர்ச்சி என வரையறுக்கிறார் லெனின்.
ஈ. லெனினின் ஆழமான விளக்கங்கள்
ஆனால் லெனின் இந்த சுருக்கமான வரையறையுடன் நிற்கவில்லை. ஏகாதிபத்தியத்தின் முக்கிய குணக்கேடுகளை முன்வைக்கிறார். அவை;
1. உற்பத்தியும் மூலதனமும் மிக உயர்ந்த அளவில் குவியும் பொழுது ஏகபோகம் உருவாகிறது.
2. ஏகாதிபத்தியத்தின் மிக ஆழமான பொருளாதார அடிப்படை ஏகபோகம்.
3. இது முதலாளித்துவ ஏகபோகம். ஏனெனில் முதலாளித்துவத்திலிருந்து வளர்ச்சி அடைந்தது இந்த ஏகபோகம்.
4 இந்த ஏகபோகங்கள் இன்றைய பொருளாதார வாழ்வில் தீர்மானகரமான பங்கை வகிக்கின்றன.
5. வங்கி மூலதனமும் தொழில் மூலதனமும் ஒன்று கலந்து அதன் அடிப்படையில் “நிதி மூலதனம்” உருவாக்கப்பட்டுள்ளது.
6. நிதி மூலதனத்தின் கை ஓங்குகிறது.
7. இந்த நிதி மூலதனம் ஒரு சிறு நிதியாதிக்க கும்பலின் (oligarchy) கைகளில் உள்ளது.
8.உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியிலிருந்து வேறுபட்ட மூலதனத்தின் ஏற்றுமதி மிக உயர்ந்த முக்கியத்துவத்தை பெறுகிறது.
9. உலகை தங்களுக்குள் பிரித்து கொள்ளும் சர்வதேச ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்கள் உருவாகியுள்ளன.
10. பெரிய முதலாளித்துவ தேசங்கள் முழு உலகையும் தமக்குள் கூறு போட்டுக்கொள்வது நிறைவடைந்துவிட்டது.
11. ஏகாதிபத்தியம் என்பது நிதிமூலதனம் மற்றும் ஏகபோகத்தின் சகாப்தம்.
12. அது ஒட்டுண்ணி மற்றும் சிதையும் தன்மையுடையது.
13. அது மரணத்தின் வாயிலில் உள்ள முதலாளித்துவம். – ஆனால் மரணிக்காது; அதன் வளர்ச்சி தடைபடுவது இல்லை.
ஊ. லெனின் காலத்திலிருந்து மாறிய அம்சங்கள்;
- லெனின் காலத்தில் நிதி மூலதனம் தேசம் சார்ந்து இருந்தது. இன்று நிதி மூலதனம் சர்வதேசத் தன்மை அடைந்துள்ளது. சர்வதேச நிதி மூலதனம் என மாறியுள்ளது.
- தொழில் மூலதனம்/ நிதி மூலதனம் இரண்டுமே எவ்வித கட்டுப்பாடும் இன்றி எப்பொழுது வேண்டுமானாலும் எந்த தேசத்துக்குள் வேண்டுமானாலும் உள்ளே புகலாம்; வெளியேறலாம் எனும் சூழல் இப்பொழுது உள்ளது. இது லெனின் காலத்தில் இல்லை.
- லெனின் காலத்தில் காலனியாதிக்கத் தன்மை இருந்தது. இன்று காலனியாதிக்கம் இல்லை. எனினும் ஏகாதிபத்திய தேசங்கள் காலனியாதிக்கம் இல்லாமலேயே தமது செல்வாக்கை நிலைநிறுத்த முடிகிறது.
- பங்குச் சந்தை/ நாணயச் சந்தை/ பரஸ்பர நிதி/ Futuresஎதிர்காலத்தில் பங்குகளை வாங்க விற்க செய்யப்படும் ஒப்பந்தம்) and Options(வாங்குவதற்கோ விற்பதற்கோ உள்ள கட்டாயமல்லாத உரிமை), Derivatives (வேறொரு முதன்மைப் பொருளில் பங்குகள் அல்லது தங்கத்தில் இருந்து பங்குகளின் விலை மாற்றத்தின் மீது செய்யும் வர்த்தகம், காப்பீடு, பென்சன் நிதி, Arbitrage Fund (ஒரே பொருளை ஒரு சந்தையில் குறைந்த விலைக்கு வாங்கி, மற்றொரு சந்தையில் அதிக விலைக்கு விற்று குறைந்த ஆபத்துடன் லாபம் தரும் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் வகை) போன்ற புதிய நிதி மூலதன வடிவங்கள் இன்று தோன்றியுள்ளன. அவை லெனின் காலத்தில் இல்லை.
- லெனின் காலத்தில் உலகப்போர்கள் மூளும் அளவுக்கு வளங்களை கொள்ளையடிக்கவும் காலனிய நாடுகளை கூறு போடவும் ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே முரண்பாடுகள் இருந்தன. இன்று உலகப்போருக்கான வாய்ப்புகள் குறைவு. எனினும் பல இடங்களில் முரண்பாடுகள் உள்ளன.
- பல ஏகபோக நிறுவனங்கள் லாபக்கொள்ளைக்காக வளரும் நாடுகளில் நிறுவனங்களை உருவாக்கி மலிவான உழைப்பை சுரண்டுகின்றனர். இது லெனின் காலத்தில் இல்லை.
- மூலதனத்தின் நகர்வுகளுக்கு தொழில்நுட்பம் இன்று இருக்கும் அளவுக்கு லெனின் காலத்தில் இல்லை.
ஆகவே லெனினின் பல மதிப்பீடுகள் இன்றும் தொடர்கின்றன. அதே சமயத்தில் சில முக்கிய மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. சில முக்கிய அம்சங்களில் மாறாத தொடர்ச்சியும் சில அம்சங்களில் மாற்றமும் இணைந்து உள்ளது எனும் இயக்கவியல் அடிப்படையில் இதனை உள்வாங்குவது அவசியம்.
எ. நிகழ்கால ஏகாதிபத்தியத்தின் 6 ஏகபோக குணாம்சங்கள்:
1. தொழில் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஏகபோகம்- பன்னாட்டு நிறுவனங்கள்.
2. நிதி மூலதனத்தில் ஏகபோகம்.
3. டாலரின் ஏகபோகம்.
4. ராணுவ ஆயுத உற்பத்தியில் ஏகபோகம்.
5. இயற்கை வளங்களை ஆக்கிரமிப்பதில் ஏகபோகம்.
6. தகவல் தொழில்நுட்பத்தில் ஏகபோகம்
ஏ. எனினும் ஏகாதிபத்தியம் தொடர்ந்து பலவீனம் அடைந்து வருகிறது. குறிப்பாக அதன் பொருளாதார பலம் சரிந்து வருகிறது. இதனை ஈடுகட்ட தனது ராணுவ மூர்க்கத்தனத்தை பயன்படுத்துகிறது. உலகம் பல்துருவ அரசியலை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது. மக்களின் வாழ்வாதாரத் துன்பங்களை அகற்ற ஏகாதிபத்தியம் தவறுகின்ற காரணத்தால் அதன் சரிவு தவிர்க்க இயலாத ஒன்று. எங்கெல்லாம் இடதுசாரிகள் வலிமையாக இதனை எதிர்கொள்கின்றனரோ அங்கெல்லாம் ஏகாதிபத்தியம் பின்னடைவை சந்திக்கிறது. எனினும் ஏகாதிபத்தியத்தை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply