
தமிழ்நாட்டில் இன்று வேலைவாய்ப்பு நிலைமை
அபிநவ் சூர்யா
“வேலைவாய்ப்பு” என்பது இன்று இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் மிக முக்கிய விவாதப்புள்ளியாகியுள்ளது. வேலைவாய்ப்பு கிடைப்பதே பெரும் போராட்டமாக இருப்பதோடு, படிப்பு மற்றும் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு இன்றும் பலருக்குக் கனவாகவே உள்ளது.
ஆனால் பொது விவாதங்களில் பெரும்பாலும் வேலைவாய்ப்பு குறித்தான விவாதம், “வேலையின்மை” என்ற ஒற்றை எண்ணை வைத்து மட்டுமே நடக்கும். இந்த ஒற்றை எண்ணை பற்றிய முனைப்பு ஆட்சியாளர்களுக்கும் கருத்துவெளியில் சமயத்தில் சாதகமாக அமைகிறது. உதாரணமாக, இந்தியாவில் 2018இல் 5.7% ஆக இருந்த வேலையின்மை விகிதம், 2024இல் 3.1% என குறைந்தது. ஆண்/பெண், கிராமப்புற/நகர்ப்புறம், படித்தவர்கள்/படிக்காதவர்கள் என எப்படி பார்த்தாலும் இந்த விகிதம் குறைந்துள்ளது. இதையே மோடி அரசாங்கம் தன் சாதனையாக தம்பட்டம் அடிக்கிறது. ஆனால் இந்த நிலை உண்மை எனில், ஏன் நாடெங்கும் இளைஞர்களும் வெகுமக்களும் கல்வி-வேலைவாய்ப்பு நிலையை ஒட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்?
மார்க்சிய பார்வையில் “வேலைவாய்ப்பு நிலை” என்பதை வெறும் ஒற்றை எண்ணை வைத்து புரிந்து கொள்வது போதாது. முதலில் “வேலை” என்பதே முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் நிகழ்கிறது. ஆக அந்த முதலாளித்துவ பொருளாதாரம் எப்படிப்பட்ட வளர்ச்சி காண்கிறது?, அதற்குள் வேலைவாய்ப்பு எந்த துறையில் மேலோங்கி இருக்கிறது?, வருமானம் என்ன? என அனைத்தையும் ஒரு சேர புரிந்து கொள்வது அவசியம்.
இந்தப் புரிதலின் அடிப்படையில், கோவிட் நெருக்கடிக்கு முன்னும், பின்னும் இந்தியாவில் “வேலை” நிலவரம் எவ்வாறாக மாறியுள்ளது, இந்த சூழலில் தமிழ்நாட்டின் நிலை எந்த வகையில் ஒன்றுபட்டதாகவும், மாறுபட்டதாகவும் உள்ளது என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.
இந்தியாவில் கோவிட் நெருக்கடிக்குப் பின்னான வளர்ச்சி
கோவிட் நெருக்கடிக்கு முன் மந்த நிலையில் மூழ்கி வந்த இந்திய பொருளாதாரம், கோவிட் நெருக்கடியில் மோடி அரசின் கையாலாகாத்தனத்தால் மக்களை சொல்லொணாத் துயரில் ஆழ்த்திய பின்பு, 2021 முதல் ஆண்டுக்கு சுமார் 7% வேகத்தில், உலகிலேயே அதிவிரைவாக இந்திய பொருளாதாரம் வளர்வதாக அரசு தரவுகள் கூறுகின்றன (இந்த தரவுகளின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகி உள்ளன).
ஆனால் இது எப்படிப்பட்ட வளர்ச்சியாக உள்ளது? முறைசாரா தொழில்களின் தரவுகளைப் பார்த்தால், பணமதிப்பிழப்பு (டீமானிடைசேஷன்), ஜி.எஸ்.டி., மற்றும் கொரோனா நெருக்கடி காரணமாக, 2015-2023 இடையே, மொத்த முறைசாரா தொழில்களின் எண்ணிக்கையே குறைந்துள்ளன. பல கோடி மக்கள் பணி புரியும் முறைசாரா தொழில்கள் பல அழிக்கப்பட்டுள்ளன. முறைசார் துறையைப் பார்த்தால் என்ன தெரிகிறது? கார்ப்பரேட் துறை தரவுகள் சொல்வது என்னவென்றால், ரிலையன்ஸ், அதானி, இன்போஸிஸ் போன்ற நாட்டின் 30 மிகப்பெரும் கம்பெனிகளின் சொத்துக்களின் பங்கு, மொத்த கார்ப்பரேட் சொத்து மதிப்பில், 2016-2025 காலத்தில் உயர்ந்துள்ளது. இவர்களின் லாப விகிதம் பன்மடங்கு கூடி உள்ளது.
ஆக, மார்க்சிய பார்வையில் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், 2019-20 வரை நெருக்கடியில் சிக்கிய இந்திய முதலாளித்துவ பொருளாதாரம், சிறு-குறு மூலதனங்களை அழித்தொழித்து, மூலதனக் குவியலை முன்னேற்றிச் சென்று, அதன் மூலம் லாப விகிதத்தைத் தூண்டி, கொரோனாவிற்கு பின்பான பொருளாதார வளர்ச்சியை சாத்தியமாக்குகிறது. இப்படி ஒரு தீவிர நெருக்கடிக்குப் பின்னான வளர்ச்சியை காணும் பொருளாதாரத்தில், வேலையின்மை குறைந்து, வேலைவாய்ப்பு அதிகரிப்பதில் ஆச்சரியம் இல்லை. எனவே வெறும் “வேலையின்மை” என்ற அடிப்படையில் விவாதிப்பது வீண்.
2003-2010 காலத்திலும் இதேபோல நெருக்கடிக்குப் பின்பான அதிவேக வளர்ச்சியை இந்திய முதலாளித்துவம் கண்டது. ஆனால் அன்று இடதுசாரிகளின் வலியுறுத்தலின் காரணமாக, பொருளாதாரத்தில் பொதுத்துறைகள் தலையீடு, கிராமப்புற நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டம் போன்ற நடவடிக்கைகளின் காரணமாக, ஏற்றத்தாழ்வுகள் உயர்ந்தாலும் கூட, வளர்ச்சியின் பலன் சற்றே பெரும்பான்மை மக்களை சென்றடைந்தது. ஆனால் இன்றைய வளர்ச்சியோ, மக்கள் மீதான சுரண்டலை தீவிரப்படுத்துவதால் மட்டுமே சாத்தியமாகும் வளர்ச்சி.
இந்தியா : வேலைவாய்ப்பின் உண்மை நிலவரம்
காலமுறை உழைப்பாளர் படை கணக்கெடுப்பு (PLFS) என்பது தான் இன்று இந்தியாவில் “வேலைவாய்ப்பு” பற்றிய முக்கிய தரவு ஆகும். இந்த தரவுபடி 2018-2024 காலத்தில் சுமார் 15 கோடி புதிய வேலைவாய்ப்பு உருவாகியுள்ளதாக மோடி அரசு பெருமை பேசுகிறது.
ஆனால் உற்று நோக்கினால், இதில் பெரும்பாலான வேலைகள் துயரத்தால் உந்தப்பட்டவை என்பது விளங்கும் (மற்றபடி வீட்டு வேலைகளிலோ, கல்வியிலோ இருப்பவர்கள், மிகுந்த துயர நிலை காரணத்தால் வேறு வழியின்றி உழைப்புச் சந்தைக்குள் வருவதை “துயரத்தால் உந்தப்பட்ட வேலைவாய்ப்பு (distress driven employment) என்போம்). இந்த ~15 கோடி புதிய வேலைவாய்ப்புகளில் 54% கிராமப்புறப் பெண்களுக்கு சென்றுள்ளன. அதில் முக்கால்வாசிக்கு மேல் வேளாண்/கால்நடைத் துறையில் உள்ளன. அதிலும் பாதிக்கு மேலான வேலைகள், பெண்கள் சம்பளம் இல்லாமல், குடும்ப வேளாண்மை/கால்நடை வளர்ப்பில் “உதவியாளர்”களாக வேலை செய்வதே ஆகும். இப்படி சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் பெண்களின் பங்கு உயர்ந்துள்ள அதே வேளையில், தினக்கூலியாக வேலை செய்வோரின் பங்கு குறைந்துள்ளது.
இது உணர்த்துவது என்னவென்றால், கிராமப்புறப் பகுதிகளில் கூலிக்கு ஆட்களை பணியமர்த்தக் கூட முடியாத சிறு-குறு விவசாயிகள் (குறிப்பாக பெண்கள்) தங்கள் சொந்த நிலங்களில் வேலை செய்வதும், சம்பளமில்லா “உதவியாளர்” (பெரும்பாலும் வீட்டுப் பெண்களை) கொண்டு வேலை நடத்துவதும் வெகுவாக உயர்ந்துள்ளது. இதுவே கொரோனாவிற்கு பின்பான “வேலைவாய்ப்பு” அதிகரிப்பின் முக்கிய காரணம்.
பெண்களின் வேலைவாய்ப்பு இவ்வாறு துயர்நிறை வேளாண் துறை வேலைவாய்ப்புகளாக இருக்க, ஆண்கள் பெருமளவில் கட்டடத்தொழில் நோக்கியும், பெட்டிக்கடை போல சிறு-குறு வர்த்தகம் நோக்கியும் செல்கின்றனர்.
ஆனால் மொத்தத்தில் எங்கும் வருமானம் இல்லை! 2018-2024 காலத்தில் நாட்டின் சரசாரி தனிநபர் உள்நாட்டு உற்பத்தி (Per capita GDP) 4% வேகத்தில் வளர்ந்துள்ளது. ஆனால் விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால், மாத சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர்கள் மற்றும் “சுய-தொழிலில்” (சொந்த விவசாயமும் சேர்த்து) வேலை பார்ப்பவர்களின் மாத வருமானம் குறைந்துள்ளது! (இவ்விரண்டு வகையான வேலைகளும்,வேலைவாய்ப்பு சந்தையில் ~80% வேலைகளை உள்ளடக்குகின்றன). தினக்கூலி வேலைகளுக்கு மட்டுமே தினசரி கூலி அளவு சற்றே உயர்ந்துள்ளது.
அதாவது உலகின் ஆறாவது மிகப்பெரும் பொருளாதாரத்தில், சரசாரி உள்நாட்டு உற்பத்தி வளரும் பொழுது, பெரும்பாலான மக்கள் 2018-ஐ விட இன்று மோசமான நிலையில் உள்ளனர்! இது தெளிவாக காட்டுவது, இந்தியாவில் கொரோனாவிற்கு பிந்தைய வளர்ச்சியானது, துயரத்தின் காரணமாக அதிகளவிலான மக்களை வேலைச் சந்தைக்குள் இழுத்து, அவர்களை சொற்ப வருமானத்திற்கு பணியமர்த்தி, அவர்கள் மீதான சுரண்டலை மேலும் தீவிரப்படுத்தி சாத்தியமான வளர்ச்சியாகும்.
இதனால்தான் நாம் வெறும் “வேலையின்மை” பற்றி மட்டும் பேசுவது போதாது! உற்பத்தி முறையுடன் இணைத்து, சுரண்டலைப் பற்றியும் பேச வேண்டும்! இதை புரிந்து கொண்டால், இன்று நடக்கும் மக்கள் எழுச்சிகள் நமக்கு விளங்கும்!
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு
பல இடங்களில் தமிழ்நாட்டை இந்திய சராசரியுடன் ஒப்பிட்டு, தமிழ்நாடு ஈடிணையற்ற மாநிலம் என வாதிடும் போக்கு பல அறிஞர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் இந்திய அளவில் சந்திக்கும் பிரச்சனைகளையும், தீவிரமடையும் சுரண்டலையும், தமிழக மக்களும் சந்திக்கின்றனர். ஆனால் இந்தியாவை விட முதலாளித்துவ வளர்ச்சியில் சற்றே முன்னேறிய நிலையில் உள்ள தமிழ்நாட்டில், இந்த சுரண்டலின் பரிணாமங்கள் வேறு விதங்களில் உள்ளன.
உதாரணமாக, இந்திய சராசரியைப் போலவே, தமிழ்நாட்டிலும் பெருமளவிலான புதிய வேலைவாய்ப்பு கிராமப்புறப் பகுதிகளில் (75%) குறைந்த வருமானம் ஈட்டும் வேலைகளில், குறிப்பாக அதிக அளவிலான பெண்கள் தூயரால் உந்தப்பட்டு வேலைக்கு வந்ததன் காரணமாகத் தான் ஏற்பட்டது (இங்கு நாம் பெண்கள் “வேலைக்கு வந்தார்கள்” எனும் பொழுது, கணக்கெடுப்பில் கணக்கிடப்படும் “உழைப்புச் சந்தை வேலை”யை அது குறிக்கிறது. பெண்கள் எப்போதும் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் (வீட்டு வேலை போல). அதற்கு ஊதியம்தான் கிடைப்பதில்லை).
அப்படி ஏற்பட்ட புதிய கிராமப்புறப்பகுதி வேலைகளில் ஒரு பகுதி, தேசிய நிலையைப் போலவே, சுய வேளாண்மை/கால்நடை வளர்ப்பில் உள்ளது. ஆனால் இந்திய அளவில் பெருமளவு பெண்கள் ஊதியமற்ற “உதவியாளர்”களாக வேலை செய்வதற்குப் பதிலாக, தமிழ்நாட்டில் ஒரு பெரும்பகுதி பெண்கள் தினக்கூலிகளாக – வேளாண்மை மற்றும் கட்டுமானத் தொழிலில் – ஊதியத்துடன் வேலை செய்கின்றனர். குறிப்பாக, கிராமப்புற கட்டுமான வேலையில் பெண்கள் விகிதம் தேசிய அளவில் அவ்வளவு உயரவே இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் அதுவே பெண்களுக்கு புதிய வேலைகளின் முக்கிய காரணியாக அமைந்துள்ளது. மேலும், வேளாண் தினக்கூலி வேலைகளை பெரும்பாலும் இன்று பெண்களே செய்கிறார்கள். கிராமப்புற நூறுநாள் வேலைப் பணியை சார்ந்திருக்கும் பெண்கள் 2018இல் 4.3லட்சத்தில் இருந்து, 2024இல் 10.8 லட்சமாக உயர்ந்துள்ளது.
ஆண்கள் மத்தியிலும் கூட, தேசிய நிலையிலிருந்து சற்றே மாறுபட்டு, சேவைத் துறையில் நிலையற்ற “சுய தொழில்” நோக்கிப் போவதற்கு பதிலாக, நிலையான ஊதியம் ஈட்டும் மாதச் சம்பள வேலை நோக்கிச் செல்கின்றனர். ஆண்களும் கட்டுமான வேலைக்கு செல்வது அதிகரித்துள்ளது. ஆனால் இதர (வர்த்தகம், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து) துறைகளில் தினக்கூலி வேலைகள் குறைந்து சுய தொழில்/சம்பள வேலை அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு : ஆலை உற்பத்தி துறை
ஒரு பொருளாதாரம் வளர வளர, “உணவு” மட்டுமே கவலை என்ற நிலை மாறி, இதர வாழ்க்கை தேவைகளும் உயரும். அதேபோல வேலைவாய்ப்பும் வேளாண் துறையிலிருந்து நகர்ந்து இதர துறைகளுக்குச் செல்லும். குறிப்பாக ஆலை உற்பத்தித் துறைதான் பொருளாதாரத்தில் உற்பத்தித் திறனைக் கூட்ட அதிக வல்லமை படைத்தது. அந்த துறையை நோக்கி வேலைவாய்ப்பு நகர்வது வலுவான வளர்ச்சியைக் குறிக்கும். ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளாகவே இந்தியாவில் வேளாண் துறையிலிருந்து நகரும் வேலைவாய்ப்பு, ஆலை உற்பத்தியை விட சேவைத் துறைகளிலேயே அதிகம் செல்கின்றன (குறிப்பாக வர்த்தகம் & போக்குவரத்து). இதை ஆலை உற்பத்தி நலிவு (de-industrialisation) என்போம்.
இதை விடக் கவலைக்கிடமானது, கொரோனாவிற்கு பின்பான காலத்தில் வேளாண் துறை வேலைகள் சதவீதம் உயர்ந்துள்ளது – அதாவது இதர துறைகளில் வேலைவாய்ப்பு போதிய அளவு உருவாகாததால், தீவிர நெருக்கடியில் உள்ள வேளாண் துறையை நோக்கி உழைப்பாளர்கள் தள்ளப்படும் பின் நோக்கிய வளர்ச்சிப் போக்கு (இது குறுகிய கால நிகழ்வாக இருக்கலாம். முதலாளித்துவ வளர்ச்சிக் காலம் மாறும் பொழுது, மீண்டும் வேளாண் துறை வேலைகள் குறையலாம். ஆனால் இது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது).
தேசிய நிலையைப் போலவே தமிழ்நாட்டிலும் ஆலை உற்பத்தி வேலைவாய்ப்பு சதவீதம் குறைந்து, வேளாண் வேலை சதவீதம் அதிகரித்துள்ளன. ஆனால் இருக்கின்ற ஆலை உற்பத்தி வேலைகளிலும் கூட, ஆண்கள் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து, பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்திற்கு வரும் நவீன வாகன/எலக்ட்ரானிக் உற்பத்தி முதலீடுகளால், பெண்கள் இந்த துறைகளில் பலன் அடைந்திருப்பார்கள் என எண்ணுவோம். ஆனால் அப்படி இல்லை! இந்த வாகன/எலக்ட்ரானிக் துறைகளில் பெரும்பாலும் ஆண்களுக்கே வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது (குறிப்பாக கிராமப்புறப்பகுதி ஆண்கள்). பாரம்பரிய உற்பத்தித் துறைகளான உணவுப் பதப்படுத்தல், துணி உற்பத்தி போன்றவற்றிலிருந்து வெளியேறிய ஆண்களுக்கு பதிலாக பெண்கள் வேலைக்கு வந்துள்ளனர். இதுவும் பெண்களின் புதிய வேலைவாயப்புகளுக்கு முக்கிய காரணம்.
மேலோட்டமாக பார்த்தால், ஆண்கள் சேவைத் துறை வேலைகளைத் தேடிப் போக, பெண்கள் பாரம்பரிய உற்பத்தி வேலைக்கு செல்வது முன்னேற்றம் போலத் தோன்றலாம். ஆனால் பொருளாதாரத்தில் de-industrialisation காலத்தில் நடக்கும் இந்த முன்னேற்றம், மாநிலத்திற்கும், மாநில மக்களுக்கும் நன்மை விளைவிப்பதற்கு மாறாக, நீண்ட கால போக்கில் சுரண்டலைத் தீவிரப்படுத்தும்.
தமிழ்நாடு: இளைஞர் வேலைவாய்ப்பு
இளைஞர் என்பது 15-29 வயதினரைக் குறிக்கும். 2018-2024 காலத்தில், தேசிய அளவில் துயர் நிலை காரணமாக, இளைஞர்கள் உழைப்புச் சந்தை நோக்கி வரும் சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆண்கள் மத்தியில், தேசிய அளவில் இளைஞர்கள் கல்வியில் நீடிக்கும் சதவீதம் குறைந்துள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் இளைஞர்கள் உழைப்புச் சந்தை நோக்கி வரும் சதவீதம் குறைந்துள்ளது. கல்வியில் நீடிக்கும் சதவீதம் உயர்ந்துள்ளது. இது தமிழ்நாட்டில் துயர் நிலை சற்றே குறைவாக இருப்பதைக் காட்டுகிறது. புதிய இளைஞர்கள் வேலைவாய்ப்புகளுக்குள் வருவது பெரும்பாலும் கிராமப்புறப்பகுதி ஆண்கள் மட்டுமே. இவர்கள் ஓரளவு வாகன ஆலை உற்பத்தியிலும், வர்த்தகம் மற்றும் நிதித் துறையில் சம்பள வேலைக்கும் செல்கின்றனர்.
இளைஞர்கள் மத்தியில் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், பெண்களுக்கு பெரும்பாலும் நிலையான சம்பள வேலை கிடைப்பது கடினமாகி உள்ளது. கிராமப்புற இளம் பெண்கள் பெரும்பாலும் சுய வேளாண்/வர்த்தகத் தொழிலில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு முக்கியமான சம்பள வேலைவாய்ப்பான கல்வி & சுகாதாரத் துறையில் (ஆசிரியர், செவிலியர் போல) வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது கவலைக்கிடம்.
நகர்ப்புற இளம் பெண்கள் மத்தியிலும் சம்பள வேலை குறைந்துள்ளது. குறிப்பாக மாநில பொருளாதாரத்தில் முன்னணனித் துறையான தகவல் தொழிற்நுட்பத் துறையில் (IT) இது பிரதிபலிக்கிறது. பொதுவாகவே 2018-2024 காலத்தில் தேசிய அளவில் IT துறையில் புதிய வேலைவாய்ப்பில் நான்கில் ஒன்று பெண்களுக்கு சென்றது. ஆனால் தமிழகத்தில் பத்தில் ஒன்று தான் பெண்களுக்கு சென்றது. தமிழ்நாட்டில் நகர்ப்புற பட்டதாரி இளம் ஆண்களுக்கு உருவான புதிய வேலைவாய்ப்பில் மூன்றில் ஒன்று IT துறையில் இருந்தது. ஆனால் இதே காலத்தில் IT துறையில் பட்டதாரி இளம் பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது! ஆக, பட்டம் பெறும் இளம் பெண்களுக்கு மாநிலத்தின் நவீன துறையில் வேலை கிடைப்பது மிக மிகக் கடினமாகியுள்ளது.
தமிழ்நாடு : சமூக வகுப்புகளிடையே வேறுபாடு
2018-2024 காலத்தில் கிராமப்புறப் பகுதிகளில் வேளாண் துறையில் அதிகரித்த பெண்கள் “சுய தொழில்” வேலை முழுக்க OBC வகுப்பினருக்கு மட்டுமே. SC-ST வகுப்பினரிடையே நிலமில்லா நிலையை இது குறிப்பதோடு, கிராமப்புறப் பகுதிகளில் நிலப்பிரச்சனை இன்றும் பிரதானப் பிரச்சனையாக இருப்பதைக் குறிக்கிறது. அதிகரித்துள்ள பெண்களின் தினக்கூலி வேலையில் OBC வகுப்பினரும் அதிகளவில் இருந்தாலும், SC-ST வகுப்பினர் பங்கு முக்கியத்துவமானது. நகர்ப்புறங்களில் பாரம்பரிய உற்பத்தித் துறைகளில் பெண்கள் வருகையிலும் SC-ST வகுப்பினர் அதிகம்.
பொது வகுப்பினரின் எண்ணிக்கை மொத்த வேலைவாய்ப்பில் குறைந்துள்ளது. ஆனால் IT துறையில் மட்டும் புதிதாக உருவான வேலைவாய்ப்புகளில் நான்கில் ஒரு வேலைவாய்ப்பு பொது வகுப்பினருக்குச் சென்றுள்ளது. IT துறையில் இவர்களின் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரித்ததோடு, SC-ST வகுப்பினர் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. குறிப்பாக SC-ST இளைஞர்கள் தொழிலாளர் எண்ணிக்கை IT துறையில் 60% குறைந்துள்ளது. இது தனியார் துறையில் இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தைக் குறிப்பதோடு,“திராவிட மாடலின்” நவீன வளர்ச்சியின் அடிப்படையில் இருப்பது, ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் பின்தங்கிய நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் நவதாராளமய வளர்ச்சி மாடல் தான் என்பதைக் காட்டுகிறது.
தமிழ்நாடு : வருமானம்
விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால், தமிழ்நாட்டின் தனிநபர் விகித ஒட்டுமொத்த உற்பத்தி (Per capita GDP) 2018-2024 காலத்தில் ஆண்டிற்கு 5.15% வேகத்தில் வளர்ந்துள்ளது. ஆனால் தொழிலாளர் வருமான வளர்ச்சி விகிதமோ மிகக் குறைவு. ஆண்கள் மத்தியில், தேசிய நிலை போல வருமானம் குறையாவிட்டாலும், வளர்ச்சி விகிதம் சம்பள வேலையில் 1.7% மற்றும் சுயதொழில் வேலையில் 1% மட்டுமே. பெண்களுக்கோ இது படுமோசம். சம்பள வேலைகளே கிடைக்காத காரணத்தால், அவர்களுக்கு சம்பள வேலையில் வளர்ச்சி விகிதம் வெறும் 0.5%. ஆனால் சுயதொழில் வேலையில் விலைவாசி கணக்கில் கொண்ட வருமானம் பெண்களுக்கு குறைந்துள்ளது (-2.1%)! தமிழ்நாட்டிலும் கொரோனாவிற்கு பின்பான புதிய வேலைவாய்ப்புகள், குறிப்பாக பெண்களின் வேலைவாய்ப்புகள் எவ்வாறு சுரண்டலைத் தீவிரப்படுத்துமாறு உள்ளது என்பதை இது நிறுவுகிறது. தினக்கூலி ஊதிய அளவு, அருகில் இருக்கும் கேரளாவில் தமிழகத்தை விட 53% அதிகம்.
தமிழ்நாட்டில் பட்டப்படிப்பு மற்றும் பள்ளிப்படிப்பு பெற்றோர் இடையேயான வருமான வித்தியாசம் அதிகரித்துள்ளது – தேசிய அளவில் வித்தியாசம் குறைந்துள்ளது. இதுதான் தமிழக இளைஞர்கள் கல்வியில் நீடிக்கவும், தேசிய அளவில் இளைஞர்கள் வேலைவாய்ப்பை நோக்கி நகரவும் காரணம். ஆனால் பெண்களுக்கு, குறிப்பாக இளம் பெண்களுக்கு, குறிப்பாக கிராமப்புற இளம் பெண்களுக்கு நிலையான சம்பள வேலை கிடைக்காமல் போனதால், சம்பள வேலைகளில், ஊதிய அளவில், கிராமப்புறப் பகுதி பெண்கள் நகரப்புற பெண்களை விட மேலும் பின்தங்கி சென்றுவிட்டனர்!
நிறைவாக
இந்த தரவுகள் மூலம் நமக்கு தெரியவருவது என்னவென்றால், பொது விவாதப் போக்கில் இல்லாமல், மார்க்சிஸ்டுகள் “வேலைவாய்ப்பு”/”வேலையின்மை” ஆகியவற்றை, முதலாளித்துவ உற்பத்தி முறையின் வளர்ச்சி மற்றும் நெருக்கடி/மீட்சி நிலையை புரிந்து கொண்டு விவாதிக்க வேண்டும்.
இதை புரிந்து ஆராயும் பொழுது, இந்தியாவில் கொரோனாவிற்கு பின்பான “வேலைவாய்ப்பு அதிகரிப்பு” என்பது, மக்கள் மீதான சுரண்டலைத் தீவிரப்படுத்தி நெருக்கடிக்குப் பின்பான மீட்சியை முதலாளித்துவம் சாத்தியமாக்கும் காலம் என்பது தெளிவாகிறது. தமிழ்நாட்டிலும் இதே போன்ற சுரண்டலை தீவிரமாக்கும் வளர்ச்சிதான் காணப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டின் முதலாளித்துவ வளர்ச்சி நிலைக்கேற்ப, வேலைவாய்ப்புகள் சற்றே முறைசார் துறைகளிலும், துயரால் உந்தபட்ட உழைப்பு நிலை சற்றே மட்டுப்பட்டும் காணப்படுகிறது.
ஆனால் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையில் பெண்கள் மீதான முதலாளித்துவ சுரண்டல் தீவிரமடைந்துள்ளதோடு, இளம் பெண்களும், SC-ST வகுப்பினரும் மாநிலத்தின் நவீனமயமாக்கல் பாதையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
இந்த அனைத்து முன்னேற்றங்களும் பெரும்பாலும் இன்று கொரோனாவிற்கு பின்பான காலத்தில் முதலாளித்துவ வளர்ச்சிக்கு பிரத்யேகமானது. அடுத்த முதலாளித்துவ நெருக்கடி,தேசிய-சர்வதேச சூழல், தொழிற்நுட்ப வளர்ச்சி, மற்றும் உழைக்கும் மக்கள் இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப இந்த போக்குகள் மாறக்கூடும்.
மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு இரையாவதை நிறுத்த ஒரே வழி இந்த முதலாளித்துவ சுரண்டல் முறையை தூக்கி எறிவது தான். அதை சாத்தியமாக்க, முதலாளித்துவத்தின் தற்கால, நீண்டகால போக்குகளை ஆய்வு செய்து, இடது ஜனநாயக அணியை கட்டமைப்பதற்கான நமது உத்திகளை வகுப்பது அவசியமாகும்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply