
உபரி மதிப்பு என்றால் என்ன?
சொல்லகராதி
முதலாளித்துவ உற்பத்தி அமைப்பை ஒட்டுமொத்தமாகப் பரிசீலித்தால், நமக்கு ஒரு விஷயம் நன்கு விளங்கும். உழைப்பாளி மக்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்களது உழைப்பால் உருவாகும் உற்பத்தியில் ஒரு பகுதி மட்டுமே அவர்களுக்குக் கூலியாகவும், சம்பளமாகவும் கிடைக்கிறது. கூலி, சம்பளம், இடுபொருள் செலவுகள், இயந்திர தேய்மானம் உள்ளிட்ட செலவுகள் போக, கணிசமான பகுதி உபரியாக உடைமையாளர்கள் கையில் சேருகிறது. இந்த யதார்த்தமான உண்மையை தத்துவரீதியாக கார்ல் மார்க்ஸ் நமக்கு விளக்கித் தெளிவுபடுத்துகிறார்.
சரக்குகளின் பரிவர்த்தனை மதிப்புக்குப் பின்புலமாக இருப்பது, அதனுள் ஒளிந்திருப்பது, தன்மை ரீதியாகப் பார்த்தால், அவற்றில் மனித உழைப்பு அடங்கியிருப்பதுதான். உற்பத்தியில் நிகழ்வது என்ன? இயற்கை வளங்கள், உற்பத்தி கருவிகள், மானுட உழைப்பு உருவாக்கியுள்ள அறிவியல்-தொழில்நுட்ப அறிவு, அதன் செயல்முறைகள் ஆகிய அனைத்தையும் பயன்படுத்தி, தொழிலாளியின் நேரடி உழைப்பு, உற்பத்தி ஆலையில் புதிய சரக்குகளை உருவாக்குகிறது என்பதுதான் மிக முக்கியமானது. உயிருள்ள மனித உழைப்பு இல்லையென்றால், புதிய சரக்கு உருவாகாது! சமூகத்தில் நாம் காணும் ஏராளமான வேறுபாடுகள் கொண்ட எண்ணற்ற சரக்குகளுக்கும் விதிவிலக்கின்றி பொதுவான அம்சமாக அமைவது இவை ஒவ்வொன்றிலும் சமூகத்தின் ஒட்டுமொத்த உழைப்பின் ஒருபகுதி உறைந்துள்ளது என்பதாகும்.
மார்க்ஸ் அளிக்கும் வெளிச்சம்
பொதுவாக, வரலாற்றுப் பார்வையில் காண்கையில், முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு உருவாக பாதை அமைத்துக் கொடுத்தது, ஏராளமான சுயேச்சையான உற்பத்தியாளர்கள் தமது உழைப்பைச் செலுத்தி உற்பத்தி செய்த சரக்குகளை பரிவர்த்தனை செய்து கொண்ட “சுய (சிறு) உற்பத்தி அமைப்பு” ஆகும். இத்தகைய அமைப்பில் இயந்திரம், தொழில்நுட்பங்களின் பயன்பாடு ஒரு குறுகிய எல்லைக்கு உட்பட்டு இருந்தது, பண்டங்களின் பரிவர்த்தனை இயல்பாகவே அவற்றில் அடங்கியிருந்த (சராசரி) உழைப்பு நேரத்தையொட்டியே அமைந்தது.
மார்க்ஸ் தனது உபரி மதிப்பு தத்துவத்தை இந்த உண்மையிலிருந்து தொடங்குகிறார். இந்த வரலாற்றுப் பின்னணியில் முதலாளித்துவ உற்பத்தி உருவாகி விரிவடையும்போது, சரக்குகளின் பரிவர்த்தனை, அளவு ரீதியாக அவற்றில் அடங்கிய உழைப்பு நேரங்களின் விகிதங்களையொட்டி அமையும் என்பது மார்க்சின் கருதுகோள் (hypothesis). இந்தப் புரிதலை ஏற்று, நாம் உற்பத்தி மூலதனச் சுற்றை இப்பொழுது பரிசீலிக்கலாம். முதலாளி முதலில் பணம் போட்டு, மூலப்பொருள், தொழிற்சாலை, மின்சாரம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள், தேவைப்படும் இயந்திரங்கள் போன்றவற்றை வாங்குவதோடு, கூலி மற்றும் சம்பளம் என்று தர வேண்டிய தொகையையும் முதலீட்டின் ஒரு பகுதியாக செலவிடுகிறார்,
இதில் உற்பத்திக் கருவிகளும் சாதனங்களும் உயிரற்ற ஜடப்பொருட்கள். அவற்றிற்கு உயிரூட்டி வடிவம் மாற்றுவது மனித உழைப்பு. மூலப் பொருட்களோ, உற்பத்தி சாதனங்களோ, உயிரற்ற ஜடப் பொருட்கள் என்ற வகையில் புதிதாக மதிப்பை உருவாக்க இயலாதவை.
முதலாளி என்ன செய்கிறார்? இயந்திரங்களையும், கச்சாப் பொருட்களையும் அவற்றில் அடங்கியுள்ள மதிப்பைக் கொடுத்தே வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். இவற்றுடன் ‘உழைப்பு சக்தி’ என்ற சரக்கையும் அவர் வாங்குகிறார். இதை விற்பது தொழிலாளி. இங்கேதான் அடங்கியுள்ளது உபரி மதிப்பு (அல்லது இலாபம்) என்பதன் இரகசியம்.
உபரி மதிப்பின் ரகசியம்
உழைப்பு சக்தியின் மதிப்பு என்ன? உழைப்பு சக்தி என்ற சரக்கை உற்பத்தி செய்ய எவ்வளவு மணி நேர உழைப்பு சராசரியாகத் தேவைப்படுகிறதோ, அதுவே அதன் மதிப்பு. காலையில் ஆலைக்குள் சுறுசுறுப்பாகச் செல்லும் தொழிலாளி மாலையில் ஆய்ந்து, ஓய்ந்து வெளியே வருகிறார். அவரது உடல் மற்றும் செயல்பாட்டில் உள்ள சக்தியை முதலாளி முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு விட்டார். எடுத்துக்காட்டாக, கரும்பு அரவை செய்யும் இயந்திரத்துக்குள் செல்லும் முழுக்கரும்பு பின்னர் ஒரு பக்கம் சாறு, மறுபுறம் சக்கை என்று ஆவது போல், இனிக்கும் கரும்பாய் காலையில் வேலைக்குச் சென்ற தொழிலாளி, சக்கையாக மாலையில் வெளியே வருகிறார். ஆனால் ஒரு அடிப்படை வேறுபாடு உண்டு. கரும்புச் சக்கையை பழையபடி முழுக் கரும்பாக மாற்ற முடியாது. ஆனால் களைத்துப் போன தொழிலாளிக்கு ஓய்வும், உணவும் அளித்து மறுநாள் ஆலைக்குள் அனுப்பிவிட முடியும். ஒருநாள் உழைப்பில் அவர் இழந்த சக்தியை மீண்டும் உணவு, ஓய்வு, உடை, உறைவிடம், குடும்பப் பராமரிப்பு ஆகியவை மூலம் அவருக்குள் செலுத்தி விட்டால், அவரது உழைப்பு சக்தியை மறு உற்பத்தி செய்துவிட முடியும். அடுத்த நாளும் முதலாளி அதனை பயன்படுத்திக்கொள்ள இயலும்.
ஆக, முதலாளி, தொழிலாளியிடமிருந்து தான் வாங்கும் சரக்கான உழைப்பு சக்திக்கு, அதன் மதிப்பை- அதனை மறு உற்பத்தி செய்ய தேவைப்படும் அளவு கூலியை – கொடுத்து விட்டாலே போதும். மறுநாள் தொழிலாளி வேலைக்கு வந்து விடலாம். நடைமுறையில், கூலி இதை விட சற்றுக் கூடக் குறைய இருக்கலாம். ஆனால், சராசரியாக, உழைப்பு சக்தி என்ற சரக்கின் மதிப்பையொட்டி கூலி அமைகிறது.
முதலாளித்துவ உற்பத்தி அமைப்பில் நிலவும் அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சி நிலையில், ஒரு உழைப்பாளிக்கு உயிர் வாழத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய ஒருநாள் உழைப்பு தேவையில்லை. சராசரி உற்பத்தித் திறனைப் பொறுத்து மூன்று, நான்கு அல்லது ஐந்து மணி நேர உழைப்பு போதும். ஆக, ஒரு முழுநாள் தொழிலாளியின் உழைப்பு நேரம் முதலாளிக்குக் கிடைக்கிறது. அதில் ஒரு பகுதி நேரத்திலேயே கொடுத்த கூலிக்கு சமமான மதிப்பு முதலாளிக்குக் கிடைத்து விடுகிறது. மீதி நேரத்தில் அவர் வழங்கும் உழைப்பு முதலாளிக்கு உபரி உற்பத்தியை தருகிறது.
ஒருநாள் உழைப்பு நேரம் ஒன்பது மணி நேரம் என்று வைத்துக் கொள்வோம். இதில் நான்கு மணி நேர உழைப்பிலேயே தொழிலாளி அவருக்கு தரப்படும் கூலிக்கு சமமான உற்பத்தியை முதலாளி கையில் கொடுக்க இயலும். இதன்பொருள், முதலாளி இல்லாத நிலையிலும் தன்னை மறு உற்பத்தி செய்துகொள்ள தொழிலாளி நான்கு மணி நேரம் வேலை செய்தாக வேண்டும் என்பதாகும். எனவே இந்த உழைப்பை அவசிய உழைப்பு எனலாம். ஆனாலும் வேலைநேரம் முடியும்வரை, அதாவது மொத்தம் ஒன்பது மணி நேரம், தொழிலாளி உழைக்க வேண்டும். இவ்வாறு, அவசிய உழைப்பு நேரம் முடிந்த பின்பும், ஐந்து மணி நேரம் தொழிலாளி உழைத்தாக வேண்டும்.
இதுதான் முதலாளித்துவ சுரண்டலின் மர்மம்! வேறு வகையில் சொன்னால், உழைப்பு சக்தி என்ற சரக்கின் சிறப்புத்தன்மை என்னவென்றால், அச்சரக்கை உற்பத்தி செய்ய தேவைப்படும் உழைப்பு நேரத்தை விட பல மணிநேரம் கூடுதலாக அச்சரக்கு உழைப்பில் ஈடுபட்டு முதலாளிக்கு உபரி மதிப்பை ஈட்டித் தரும். உழைப்பு சந்தையில் கூலி இத்தகைய குறைவான மட்டத்தில் இருப்பதை, வேலையின்மையை உருவாக்குவதன் மூலமும் இயந்திரமயமாக்கல் மூலமும் முதலாளித்துவ அமைப்பு உறுதி செய்கிறது!
தொழிலாளி முட்டாளா?
தொழிலாளிக்கு இது புரியவில்லையா? அவர் முட்டாளா என்ன? நிச்சயமாக இல்லை. உற்பத்திக் கருவிகளனைத்தும் முதலாளி வர்க்கத்தின் உடைமையாக உள்ள நிலையில், கூலிக்கோ, சம்பளத்திற்கோ, முதலாளியிடம் வேலை செய்தாக வேண்டும் என்ற அவசியம் உழைப்பாளி மக்களுக்கு உள்ளது. உற்பத்திக் கருவிகள் சமூக உடைமையாக்கப்பட்டால்தான் முதலாளித்துவ சுரண்டலுக்கு முடிவு கட்ட முடியும்.
உபரி மதிப்பு
இன்னும் எளிதாக சொல்வதானால், ஒரு நாள் முழுதும் தொழிலாளி முதலாளிக்கு செலுத்தும் உழைப்பு நேரத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாளிக்கு வேலை செய்யாத நிலையிலும் தன்னை பாராமரித்துக்கொள்ள தொழிலாளி குறிப்பிட்ட அளவு உழைப்பு செலுத்தியாக வேண்டும். இது அவசிய உழைப்பு நேரம். அதற்குப்பின் வேலை நேரம் முடியும் வரை தொழிலாளி முதலாளிக்கு தனது உழைப்பை தர வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. காரணம் அவர் கையில் உற்பத்தி கருவிகள் இல்லை! இதனை உபரி உழைப்பு நேரம் என்று அழைக்கிறோம். உபரி மதிப்பு என்றும் அழைக்கலாம். உழைப்பு சக்தி என்ற அற்புதமான மனித சக்திதான் முதலாளி வர்க்கத்திற்கு லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply