
பேரா. கே. என். பணிக்கர்: வகுப்புவாதத்திற்கு எதிரான வலுவான போராளி
வீ. பா. கணேசன்
இந்திய வரலாற்றியல் ஆய்வுகளில் தனித்துவமான பங்களிப்பை அளித்தவர்களில் ஒருவர் பேராசிரியர் கே. என். பணிக்கர். வகுப்புவாத அபாயத்தை முன்னறிவித்து, அதை எதிர்த்துப் போராடுவதற்கான வழியை முன்வைத்தவர். பேரா. பணிக்கர் கடந்த மார்ச் 9 அன்று திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் உயிர்நீத்தார். அத்தருணத்தில் அவருக்கு வயது 89. தன்னுடன் பயின்ற உஷா பர்கவாவை காதலித்து மணம் செய்த அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
1936ஆம் ஆண்டு குருவாயூரில் கிருஷ்ணன் நாயர் – இச்சிகுட்டியம்மா ஆகியோரின் 9வது குழந்தையாகப் பிறந்த கண்டியூர் நாராயண பணிக்கர் கைக்குழந்தையாக இருக்கும்போதே தந்தையை இழந்தார். எனினும் அவரது தாயின் மன உறுதியும் அன்பும் நிரம்பிய கவனிப்பால் அவரால் வளமான கல்வியைப் பெற முடிந்தது. பாலக்காடு விக்டோரியா அரசுக் கல்லூரியில் பட்டம் பெற்ற அவர், ஜெய்ப்பூர் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித்து, நவீன இந்தியாவின் அறிவார்ந்த வரலாறு என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
தில்லி பல்கலைக்கழகத்தில் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் தன் ஆசிரியர் பணியைத் தொடங்கிய அவர், பின்னர் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜே.என்.யூ) வரலாற்றுத் துறையில் சேர்ந்தார். பேராசிரியர் பிபன் சந்திராவும் மற்ற அறிஞர்களும் அப்போது மேற்கொண்டு வந்த இந்திய விடுதலைப் போராட்டம் குறித்த விரிவான வரலாற்றைத் தொகுக்கும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
இந்தச் செயல்முறையில் கிடைத்த அனுபவத்தின் விளைவாகவே, பின்னாளில் அவர் 1921ஆம் ஆண்டில் இன்றைய கேரளப் பகுதியில் நடைபெற்ற மலபார் கிளர்ச்சி (மாப்பிளா கலகம் என்றும் இது குறிப்பிடப்படுவது உண்டு) குறித்த வரலாற்றை விரிவாக எழுதும் பணியை மேற்கொண்டார். நவீன இந்தியாவில் காலனிய ஆட்சிக்கும் மேலாதிக்க வர்க்கங்களுக்கும் எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டங்களில் இந்த மலபார் கிளர்ச்சி தனித்துவம் பெற்ற ஒரு வரலாற்று நிகழ்வு என்பதை அவர் தன் ஆய்வின் மூலம் நிறுவினார். நிலவும் சமூகத்திற்கு எதிராக மக்களின் எழுச்சியைத் தூண்டுவதில் அறிவார்ந்த சமூகத்தினரின் பங்கினை வலியுறுத்திய அண்டோனியோ கிராம்சியின் கருத்தாக்கத்தை அவர் இந்த ஆய்வில் அறிமுகம் செய்தார். அவ்வகையில், அன்றைய சமஸ்தான ஆட்சிக்கும் காலனிய ஆட்சிக்கும் எதிரான கருத்துக்களை உழைக்கும் மக்களிடையே பரப்பிய முஸ்லீம் மவுல்விகளின் பங்கினை அவர் குறிப்பாக விரித்துரைத்திருந்தார்.
1978-79 காலப்பகுதியில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் இந்துத்துவா பிரச்சாரத்திற்கு சவால் விடும் வகையில் அமைந்த வரலாற்று ஆய்வுரைகளை எழுதிய பேராசிரியர்கள் பிபன் சந்திரா, ஆர்.எஸ். சர்மா, அர்ஜுன் தேவ் போன்றோரின் எழுத்துக்களை உள்ளடக்கிய தேசிய பாடநூல் நிறுவனத்தின் (என்சிஇஆர்டி) பாடநூல்களை திரும்பப் பெற வேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ்.ஸின் பிரதிநிதியாக, அப்போதிருந்த ஜனதா கட்சி ஆட்சியில் அங்கம் வகித்த ஜனசங்கம் எடுத்த முயற்சிகளை எதிர்த்து நடைபெற்ற கடும் பிரச்சாரத்தில் பேரா. பணிக்கர் முக்கிய பங்கு வகித்தார். இத்தகைய ஆசிரியர்கள், மாணவர்களின் தொடர்ச்சியான கண்டன ஆர்ப்பாட்டங்களின் விளைவாக ஜனதா அரசு பாடநூல்களைத் திரும்பப் பெறும் முயற்சியிலிருந்து பின்வாங்க நேர்ந்தது.
1984ஆம் ஆண்டிலிருந்து ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஓர் அங்கமான விஸ்வ இந்து பரிஷத், அயோத்தியாவில் பாப்ரி மஸ்ஜித், வாரணாசியில் ஞானவாபி மசூதி, மதுராவில் ஷாஹி இத்கா மசூதி ஆகியவை இந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதிலும் வகுப்புவாதப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து மக்களை பிளவுபடுத்தத் தொடங்கியது. போலியான அகழாய்வு சான்றுகள், தனது வாதத்திற்குச் சாதகமான சில காலனிய காலத்து ஆவணங்கள் ஆகியவற்றை முன்வைத்து, இந்த இடங்களில் இந்துக் கோயில்கள் முன்பு இருந்தன என்ற வாதத்தை அது மக்களிடையே பரப்பியது.
அத்தருணத்தில், அதுவரையில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று ஆய்வுகள் அனைத்தையும் சிதைக்கும்படியான இந்த முயற்சியை எதிர்த்து, பேராசிரியர்கள் இர்ஃபான் ஹபீப், ரொமிலா தாப்பர், கே.என். பணிக்கர், ஷெரீன் ரத்நகர், சுராஜ் பான் போன்ற வரலாற்றாசிரியர்கள் திரண்டெழுந்தனர். இத்தகைய கோரிக்கை, இந்திய மக்களை வெளிப்படையாகப் பிளவுபடுத்தி, அவர்களை வகுப்புவாத மயமாக்கும் முயற்சியைத் தவிர வேறல்ல என்று அவர்கள் உரக்கக் குரலெழுப்பினர். இதற்கெதிராக, ஜே.என்.யூ. பேராசிரியர்கள் ‘தேசவிரோதிகள்’ என்ற அவதூறுப் பிரச்சாரத்தையும் ஆர்.எஸ்.எஸ். மேற்கொண்டது. இதிலும் கூட, பணிக்கர் குறிவைத்துத் தாக்கப்பட்டார்.
இத்தருவாயில்தான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் மக்கள்விரோதத் தத்துவத்தைத் தோலுரிக்கும் வகையில் கட்டுரைகளையும் பிரசுரங்களையும் பணிக்கர் தொடர்ந்து எழுதி வந்ததோடு, ‘வகுப்புவாதம் குறித்துக் கவலையுறும் குடிமகனுக்கான ஒரு கையேடு’ என்ற நூலையும் எழுதினார். இந்துத்துவ வாதங்களைப் பொடிப்பொடியாக்கும் வகையில் களப் போராளிகளுக்கு ஓர் ஆயுதமாக இன்றளவும் திகழும் நூல் அது.
ஜே.என்.யூவிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கேரளாவிற்குத் திரும்பிய பேரா. பணிக்கர் நாடு முழுவதும் தனது வலையை ஆழமாக வீசி வரும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் வகுப்புவாதத்தை வலுவாக எதிர்க்கும் வகையில் ஒரு மாற்று இயக்கத்தை முன்னெடுக்கும் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். இந்த விஷயத்தில் கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் அமைப்பிற்கு அவர் தொடர்ந்து வழிகாட்டி வந்தார். இக்காலப் பகுதியில் அவர் எழுதிய பல கட்டுரைகளும் தமிழில் வெளியானதோடு, அப்போது நடைபெற்று வந்த அறிவொளி இயக்கத்தின் ஒரு பகுதியாக மக்களிடையே கொண்டு செல்லப்பட்டன. இந்திய சமூகத்தின் கலாச்சாரத் தளங்களில் ஆழமாக வேரூன்றி, ஒரு கலாச்சார தேசியத்தை நிறுவ முயற்சித்து வந்த இந்துத்துவ வகுப்புவாதத்தின் மேலாதிக்கத்தை அகற்றும் வகையில், மதசார்பற்ற, ஜனநாயகபூர்வமான ஒரு தேசிய மக்கள் கலாச்சார மேடையை உருவாக்குவதே நம் உடனடிக் கடமை என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
அதைப் போன்றே கல்வித் தளத்திலும் ஆர்.எஸ்.எஸ். தனது ஆதிக்கத்தை படிப்படியாக இறுக்கிக் கொண்டே வருவதைக் கண்டும் அவர் பெரிதும் கவலையுற்றார். இந்துத்துவா அமைப்புகள் தங்களது பிற்போக்கு கருத்தாக்கங்களை பரப்ப தற்போதுள்ள கல்வி அமைப்பில் நிலவும் பலவீனங்களை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு வந்தது. இதற்கெதிரான இயக்கத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளிலும் கேரள மாநில உயர்கல்வி ஆணையத்தின் தலைவர் என்ற வகையில் பேரா. பணிக்கர் முன்முயற்சி எடுத்து வந்தார்.
வரலாறு மட்டுமின்றி, பண்பாட்டுத் தளத்திலும் ஆழமான சிந்தனைகளை பரப்பும் வகையில் எண்ணற்ற நூல்களை எழுதியுள்ள பேரா. பணிக்கர் சமூக மாற்றத்திற்கான முயற்சிகளில் அறிவார்ந்த உலகத்தினரின் பணியின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து அவர்களிடையே எழுப்பி வந்தவரும் ஆவார்.
வகுப்புவாதம் என்பது வெறும் அரசியல் அம்சம் கொண்டது மட்டுமல்ல; அதன் வரலாற்று வேர்களை, அதன் தத்துவார்த்தக் கட்டமைப்புகளை, அதை நிலைநிறுத்த முயற்சிக்கும் சமூக சக்திகளை அடையாளம் காட்டும் வகையில் அவரது ஆய்வுகள் அமைந்திருந்தன.
அவ்வகையில் நாட்டிலுள்ள இடதுசாரி, ஜனநாயக சக்திகளுடன் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்ட பேரா. பணிக்கர், இடதுசாரி இயக்கத்தை வலுப்படுத்துவதே வகுப்புவாதத்தை முறியடிப்பதற்கான, ஒழிப்பதற்கான ஒரே முன் நிபந்தனை என்றும் ஆழமாக நம்பினார். இந்திய இடதுசாரி இயக்கத்தில் ‘விமர்சனபூர்வமான ஓர் உறுப்பினர்’ என்றே தன்னை விவரித்துக் கொண்ட பேரா. பணிக்கர் இந்திய இடதுசாரி இயக்கத்தின் சிந்தனை, செயல்முறை ஆகிய இரண்டு தளங்களுக்குமே வாழ்நாள் முழுவதும் பங்களிப்பு செய்தவராகவும் திகழ்ந்தார் என்பதே அவரது பெருமையை உணர்த்துவதாக இருக்கும்.
இந்திய துணைக்கண்டத்தின் மூலை முடுக்கெங்கும் தன் அக்டோபஸ் கரங்களை வீசி மக்களின் கழுத்தை நெறித்துவரும் பேரழிவு இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.ஸின் உள்ளார்ந்த நச்சுத்தன்மையை உள்வாங்கி, அதை மக்கள் மத்தியிலிருந்து வேரோடு அழிக்கும் கடமையில் மேலும் தீவிரமாக ஈடுபடுவதே பேரா. பணிக்கருக்கு நாம் செலுத்தும் வீர வணக்கமாகவும் நெஞ்சார்ந்த அஞ்சலியாகவும் அமையும்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply