
மார்க்சிய சொல்லகராதி: பாட்டாளி வர்க்கம்
ச. லெனின்
மனிதகுல வரலாற்றில், சமூகத்தில் நிலவும் உற்பத்தி முறையும் பரிவர்த்தனை முறையும்தான் அக்காலகட்டத்தின் சமூக அமைப்பு முறையை வரையறுக்கிறது. ‘எழுதப்பட்ட வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்’. சுரண்டும் வர்க்கங்களுக்கும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கும் இடையிலான போராட்டங்களே மனிதகுல வரலாற்றின் பரிணாமங்களாக உள்ளது. அதுவே அடிமை சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகமாக வளர்ந்து, தற்போது முதலாளித்துவ சமூகமாக வளர்ச்சி பெற்று நிற்கிறது. இச்சமூகத்தில், முதலாளி-தொழிலாளி எனும் இரண்டு வர்க்கங்கள் உள்ளன.
1888-ஆம் ஆண்டு வெளியான கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஆங்கிலப் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய குறிப்பில், முதலாளித்துவ வர்க்கம் (Bourgeoisie) என்பது நவீன முதலாளிகளின் வர்க்கத்தைக் குறிக்கிறது. இந்த வர்க்கத்தினர் சமூக உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர்கள், கூலி உழைப்பாளிகளை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறவர்கள். பாட்டாளி வர்க்கம் (Proletariat) என்பது, நவீனக் கூலித் தொழிலாளர்களின் வர்க்கத்தைக் குறிக்கிறது. இந்த வர்க்கத்தினர் தமக்கெனச் சொந்தமாக உற்பத்திச் சாதனங்கள் ஏதும் இல்லாதவர்கள்; வாழ்க்கையை நடத்துவதற்காகத் தம் உழைப்புச் சக்தியை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பவர்கள்’ என்று இவ்வர்க்கங்களை வரையறுக்கிறார்.
முதலாளித்துவ வர்க்கச் சகாப்தம், வர்க்கப் பகைமைகளை எளிமைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த சமுதாயமும், இருபெரும் பகை முகாம்களாக, ஒன்றையொன்று நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் வர்க்கங்களாக, முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்னும் இருபெரும் வர்க்கங்களாக மேலும் மேலும் பிளவுபட்டு வருகிறது.
முதலாளித்துவ வர்க்கம் மேலாதிக்கம் பெற்ற எல்லா நிலையிலும், அது பழைய நிலப்பிரபுத்துவ உறவுகளையும் பழமை வாதங்களையும் முடிவுக்கு கொண்டு வந்தது. இவ்வாறாக, வரலாற்று ரீதியான இயக்கம் முழுமையும் முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளில் குவிந்தன. தொழில்துறையின் வளர்ச்சியை தொழிலாளி வர்க்கத்தின் எண்ணிக்கையை அதிகமாக வளர்த்தது. அது அதன் வலிமையை வளர்கிறது: அந்த வலிமையை அது அதிகம் உணரவும் செய்கிறது.
அந்த வகையில் ‘முதலாளித்துவத்தோடு போரிடுவதற்கான ஆயுதங்களை பாட்டாளி வர்க்கத்திற்கு முதலாளித்துவமே வழங்குகிறது.’ ‘முதலாளித்துவ வர்க்கம் அனைத்துக்கும் மேலாகத் தனக்குச் சவக்குழி தோண்டுவோரையே உற்பத்தி செய்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தின் வீழ்ச்சியும், பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் சம அளவில் தவிர்க்கவியலாதவை ஆகும்.’ ‘பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்துடனான தன் போராட்டத்தின்போது, சூழ்நிலைமைகளின் உந்துதலால், தன்னைத்தானே ஒரு வர்க்கமாக ஒழுங்கமைத்துக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுமாயின், ஒரு புரட்சியின் மூலம் தன்னைத்தானே ஆளும் வர்க்கமாய் ஆக்கிக்கொண்டு, அந்தத் தகுதியில், பழைய உற்பத்தி உறவுகளைப் பலவந்தமாகத் துடைத்தெறியுமாயின், அந்த உற்பத்தி உறவுகளுடன்கூடவே, வர்க்கப் பகைமைகள் நிலவுதற்குரிய – பொதுவாக வர்க்கங்கள் நிலவுதற்குரிய நிலைமைகளையும் துடைத்தெறிந்ததாய் ஆகிறது. அதன்மூலம் ஒரு வர்க்கம் என்ற முறையில் தன் சொந்த மேலாதிக்கத்தையும் ஒழித்திட்டதாய் ஆகிறது. வர்க்கங்களையும் வர்க்கப் பகைமைகளையும் கொண்ட பழைய முதலாளித்துவ சமுதாயத்துக்குப் பதிலாக, ஒவ்வொருவரின் சுதந்திரமான வளர்ச்சியையே அனைவரின் சுதந்திரமான வளர்ச்சிக்கு நிபந்தனையாகக் கொண்ட ஒரு கூட்டமைப்பை நாம் நிச்சயம் பெறுவோம்.’ என்கிறது கம்யூனிஸ்ட் அறிக்கை.
இதையே ‘சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளி வர்க்கம்) தன்னோடு கூடவே சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும். வர்க்கப் போராட்டங்களிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்காமல் சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) ஒருபோதும் தன்னை விடுவித்துக்கொள்ள இயலாது’ என்றார் மார்க்ஸ்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply