
கம்யூனிசக் கோட்பாடுகள்
ஃபிரடெரிக் எங்கெல்ஸ்
கே 12: தொழில் புரட்சியின் இதற்கும் மேலான விளைவுகள் எவை?
தொழில்துறை உற்பத்தியை முடிவில்லாமல் விரிவுபடுத்தவும், வேகப்படுத்தவும், உற்பத்திச் செலவைக் குறைக்கவும் பயன்படும் சாதனங்களை நீராவி எஞ்சின், இன்னபிற எந்திரங்களின் உருவிலே பெருவீதத் தொழில்துறை உருவாக்கியது. இவ்வாறு வாய்ப்பு வசதிபெற்ற உற்பத்தியோடு, பெருவீதத் தொழில்துறையிலிருந்து பிரிக்க முடியாத நிச்சய விளைவான கட்டற்ற போட்டி மிகவும் தீவிர வடிவங்களை எடுத்தது. பெருந்தொகையான முதலாளிகள் தொழில்துறையில் படையெடுத்தனர். மிகக் குறுகிய காலத்திலேயே தேவைக்கும் அதிகமான அளவுக்கு உற்பத்தி பெருகியது.
இதன் விளைவாக, உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகளை விற்பனை செய்ய இயலவில்லை. வணிக நெருக்கடி என்று சொல்லப்படும் பிரச்சினை வெடித்தது. ஆலைகளை மூட வேண்டியதாயிற்று. அவற்றின் உரிமையாளர்கள் திவாலாயினர். தொழிலாளர்கள் சோற்றுக்கு வழியின்றிப் பட்டினி கிடந்தனர். எங்கெங்கும் சொல்லொணாத் துயரம் கோலோச்சியது.
சில காலத்துக்குப் பின் தேங்கிக் கிடந்த பொருள்கள் விற்பனை ஆயின. ஆலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. கூலிகள் உயர்ந்தன. படிப்படியாக வணிகம் முன் எப்போதையும்விடச் செழித்தோங்கியது.
ஆனால், மீண்டும் குறுகிய காலத்துக்குள்ளேயே அளவுக்கு அதிகமான சரக்குகள் உற்பத்தி செய்யப்பட்டன. ஒரு புதிய நெருக்கடி வெடித்தது. முந்தைய நெருக்கடியின் போக்கிலேயே இதுவும் சென்றது.
இந்த (19-ஆம்) நூற்றாண்டு தொடங்கிய காலந்தொட்டே தொழில்துறையின் நிலைமை, செழிப்பான காலகட்டங்களுக்கும் நெருக்கடியான காலகட்டங்களுக்கும் இடையே தொடர்ந்து ஊசலாடிக் கொண்டேதான் இருந்தது. ஏறத்தாழ ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு புதிய நெருக்கடி இடைமறித்தது. இந்த நெருக்கடிகள் தொழிலாளர்களுக்கு எப்போதும் கடுந்துயரைக் கொடுப்பதாகவே இருந்தன. அதுமட்டுமின்றி, அவை எப்போதும் பொதுவான புரட்சிகர எழுச்சியுணர்வுகளையும், நிலவிவரும் சமுதாயக் கட்டமைப்பு முழுமைக்குமான நேரடி அபாயத்தையும் தம்முடன் சேர்த்தே கொண்டு வந்தன.
கே 13: குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நிகழும் இத்தகைய வணிக நெருக்கடிகளில் இருந்து பெறக்கூடிய முடிவுகள் எவை?
முதலாவது: பெருவீதத் தொழில்துறை தன் வளர்ச்சியின் மிகமிகத் தொடக்கக் காலகட்டத்தில் கட்டற்ற போட்டியை உருவாக்கிய போதிலும், அது [பெருவீதத் தொழில்துறை] இப்போது கட்டற்ற போட்டியையும் விஞ்சி நிற்கிறது.
இந்தப் போட்டி, பொதுவாகத் தனித்துவமான உற்பத்தி அமைப்பு ஆகியவை பெருவீதத் தொழில்துறைக்கு ஒரு தளையாகி விட்டன. இந்தத் தளையை அது கட்டாயம் தகர்க்க வேண்டும், தகர்க்கும்.
பெருவீதத் தொழில்துறை இப்போதுள்ள அடிப்படையில் தொடர்ந்து இருந்துவரும் காலம்வரை, ஒவ்வோர் ஏழாண்டுகளிலும் [தொழில்துறை நெருக்கடி வடிவில்] நிகழுகின்ற பொதுக் குழப்படிக்கான விலையைத் தந்துதான் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளமுடியும். அத்தகைய நெருக்கடி நிகழும் ஒவ்வொரு முறையும் ஒட்டுமொத்த நாகரிகச் சமுதாயத்தையே அச்சுறுத்துகின்றது. மேலும், பாட்டாளிகளைத் துயரத்தில் ஆழ்த்துவதோடு மட்டுமின்றி, முதலாளித்துவ வர்க்கத்தின் பெரும்பகுதியையும் சீரழிக்கின்றது.
எனவே, பெருவீதத் தொழில்துறையையே கைவிட வேண்டும். இது முற்றிலும் சாத்தியமற்ற ஒன்றாகும். இதற்கு மாற்றாக, இச்சூழ்நிலை முற்றிலும் ஒரு புதிய சமுதாயக் கட்டமைப்பைத் தவிர்க்கவியலா அவசியம் ஆக்குகிறது. இப்புதிய சமுதாய அமைப்பில், பரஸ்பரம் போட்டியிடும் தனிப்பட்ட தொழிலதிபர்கள் உற்பத்தியை நெறிப்படுத்த மாட்டார்கள். பதிலாக, ஒரு வரையறுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், அனைவரின் தேவைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒட்டுமொத்தச் சமுதாயமே உற்பத்தியை முறைப்படுத்தும்.
இரண்டாவது: பெருவீதத் தொழில்துறையும் அதனால் சாத்தியமாக்கப்பட்ட உற்பத்தியின் எல்லையிலா விரிவாக்கமும், ஒரு புதிய சமூக அமைப்புமுறையைக் கைக்கெட்டும் தொலைவில் கொண்டுவந்துள்ளது. அப்புதிய அமைப்புமுறையில் சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் தனது சகல சக்திகளையும் ஆற்றல்களையும் பரிபூரண சுதந்திரத்துடன் பயன்படுத்தவும் மேம்படுத்தவுமான ஒரு நிலையில் இருப்பார். அந்த அளவுக்கு அதிகமான உற்பத்தி அங்கு இருக்கும்.
இவ்வாறு, நமது இன்றைய கால சமுதாயத்தில் துன்பங்களையும் நெருக்கடிகளையும் விளைவிக்கின்ற பெருவீதத் தொழில்துறையின் அதே பண்புகள்தாம் வேறுபட்ட வடிவிலான ஒரு சமுதாய அமைப்பின்கீழ் இந்தத் துன்பங்களையும் பேரிடரான துயரங்களையும் அழித்தொழிக்கும் என்பது புலனாகிறது.
தெள்ளத்தெளிவாக நாம் காண்பதாவது:
(1) மேற்கண்ட கேடுகளுக்கெல்லாம் காரணம், இன்றைய எதார்த்த நிலைமையின் தேவைப்பாடுகளுக்கு இனிமேலும் ஒவ்வாதென ஆகிப்போன, இந்தச் சமூக அமைப்புமுறை மட்டுமே என இப்போது முதற்கொண்டு [அதன்மீது] சாற்றிக் கூற முடியும்; மேலும்,
(2) ஒரு புதிய சமூக அமைப்புமுறை மூலமாக இந்தக் கேடுகளை முழுமையாக ஒழித்துக் கட்டுவது சாத்தியமாகும்.
தமிழில்: மு. சிவலிங்கம்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply