
தோழர் பி. ஆர். பரமேஸ்வரன் அவர்கள் அர்ப்பணிப்பு அளவிட இயலாதது!
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
தமிழ்நாட்டு பொதுவுடைமை இயக்கத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றிய தோழர்களில் ஒருவர்தான் தோழர் பி ஆர் பி (PRP) என்று கட்சித் தோழர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட தோழர் பி. ஆர். பரமேஸ்வரன். அவரது அர்ப்பணிப்பு மிகுந்த கம்யூனிஸ்ட் வாழ்வின் ஒரு முக்கிய அம்சம் நம் அனைவருக்கும் மிகுந்த உத்வேகம் அளிக்கும் படிப்பினையாக திகழ்கிறது. ஏழை குடும்பம் ஒன்றில் கேரளாவில் பிறந்தவர் பிஆர்பி. குடும்ப ஏழ்மை காரணமாக நான்காம் வகுப்பை தாண்டி அவரால் பள்ளியில் படிக்க இயலவில்லை. அவர் தமிழ்நாட்டுக்கு வந்து கட்சிப்பணிகளில் பங்கேற்க துவங்கிய காலத்தில் அவரால் மலயாள மொழியில் கூட சரளமாக எழுதவோ படிக்கவோ இயலாது. தனது இளம் வயதிலேயே தையல் தொழிலாளியாக கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இத்தகைய சூழலிலும் விடாப்பிடியாக முயற்சி செய்து தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் அவர் நன்கு தேர்ச்சி பெற்றார். அவர் பல முக்கிய இயக்க நூல்களை மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகளில் இருந்து தமிழில் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார் என்பது அண்மைக்காலங்களில் நமது இயக்கத்திற்குள் வந்துள்ள பல தோழர்களுக்கு தெரியாமலிருக்கலாம். சுய முயற்சியின் இலக்கணமாக அவர் திகழ்ந்தார்.
1970, 1980களில் இடது அதிதீவிர வாதத்திற்கும் வலது திருத்தல்வாதத்திற்கும் எதிராக சமரசமற்ற தத்துவார்த்தப் போர் நடத்தி,ஏராளமான தோழர்களை கட்சிக்கு கொண்டு வந்ததுடன், இத்தகைய தவறான போக்குகளை எதிர்த்து போராடும் வலுவான கட்சி அமைப்பை தமிழகத்தில் கட்டியதில் அவரது பங்கு முக்கியமானது.
கட்சியின் இன்றைய மூன்று சென்னை மாவட்டங்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய,அன்றைய பரந்துபட்ட சென்னை மாவட்டத்தின் கட்சி செயலாளராக,பெரும் சவால்களை எதிர்கொண்டு,கட்சியையும்,வர்க்க, வெகுஜன அமைப்புகளையும் வளர்ப்பதிலும் வலுப்படுத்தியதிலும் அவரது பங்கு சிறப்பானது.
PRP அவர்களின் பங்களிப்பு கட்சிக் கல்வியில் மிகவும் முக்கியமானது. சிறந்த வகுப்பாசிரியராக அவர் திகழ்ந்தார். மார்க்சீய சித்தாந்தம், இந்திய தத்துவ மரபுகள் பற்றிய விமர்சன பார்வை, ஆர்எஸ்எஸ் அமைப்பின் எதிர்ப்புரட்சி தன்மையும் பேராபத்தும், அரசியல் பொருளாதாரம் உள்ளிட்டு பல தலைப்புகளில் வகுப்பு எடுப்பதுடன்,ஏராளமான குறிப்புகளையும் கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். கட்சி உறுப்பினாராக தொடங்கி தமிழ்நாடு மாநிலக்குழு, மாநில செயற்குழு, கட்சியின் மத்தியக்குழு ஆகியவற்றில் சிறப்புற செயல்பட்டவர் PRP. கட்சியின் ஏடான தமிழ் மார்க்சிஸ்ட் இதழின் ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றியவர். வாழ்க தோழர் PRPஅவர்களின் மகத்தான புரட்சிகர பங்களிப்பு!
You may also like
1 comment
Leave a ReplyCancel reply
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

சரித்திர சக்கரங்கள் பின்னோக்கி சுழலாது. அத்தகைய முயற்சிகள் அதை அதிவேகமாக முன்னோக்கி சுழற்றும் -பிஆர்பி