
நாடாளுமன்றவாதம் என்றால் என்ன? அதை எவ்வாறு எதிர்கொள்வது?
பிரகாஷ் காரத்
சமூகத்தில் புரட்சிகர மாற்றம் ஏற்படுத்த வேண்டும். சோசலிசத்தை கட்டமைக்கும் பாதையில், அதற்கு முன்னோடியாக தற்போதுள்ள முதலாளித்துவ-நிலவுடைமை அமைப்பை மாற்றி, மக்கள் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கங்களைக் கொண்ட கட்சியே சி.பி.ஐ(எம்).
வர்க்க, வெகுமக்கள் போராட்டங்களை வளர்த்தெடுப்பதிலும், வெகுமக்கள் இயக்கங்களை கட்டியெழுப்புவதிலும் கட்சி ஈடுபட்டுள்ளது. கட்சிக்குள்ள வெகுமக்கள் செல்வாக்கை மேலும் வளர்ப்பதற்காக அது நாடாளுமன்ற பணிகளையும், அதற்கு அப்பாற்பட்ட பணிகளையும் ஒருங்கிணைத்து முன்னெடுக்கிறது.
இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு ஆழமாக வேரூன்றியுள்ளது. அரசியல் அமைப்பின் அடிப்படை அம்சமாக அது மாறியுள்ளது. ஏற்கனவே புரட்சிகளை சாதித்த நாடுகளான ரஷ்யாவிலும், சீனாவிலும் புரட்சி நடப்பதற்கு முன் எதேச்சாதிகார, நிலப்பிரபுத்துவ ஆட்சிகள் இருந்தன. அந்த நிலைமை இந்தியாவில் இல்லை.
நாடாளுமன்ற அரங்கில் வேலை செய்வதன் மூலமும், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நடக்கும் பணிகளை ஒருங்கிணைத்து முன்னெடுப்பதன் மூலமும் கட்சி முன்னேற முடியும். எனவே, நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும், தேர்தல் பணிகளிலும் பங்கேற்பது நமது கட்சியின் அரசியல் பணியிலும், போராட்டத்திலும் ஒரு அங்கமாகும்.
நாம் நாடாளுமன்றவாதம் என்று சொல்லும்போது – மேற்சொன்ன பணிகளை குறிக்கவில்லை. நாடாளுமன்றவாதம் என்பது ஒரு சீர்திருத்தவாத கண்ணோட்டமாகும். ஒரு விலகல் போக்காகும். இது கட்சியின் தொலைநோக்கு உத்தியையும், அரசியல் நடைமுறை உத்தியையும் மோசமாக பாதிக்கிறது.
1996ஆம் ஆண்டில், கட்சியின் மத்தியக்குழு நிறைவேற்றிய திருத்த ஆவணம் நாடாளுமன்றவாதம் பற்றி இவ்வாறு வரையறுக்கிறது: “நாடாளுமன்றவாதப் போக்கினால் ஏற்படும் தடையினை, தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளையும், அதிகாரத்தையும் வகிப்பதற்காக தனிப்பட்ட தலைவர்கள் அல்லது ஊழியர்களிடம் காணப்படும் விலகல் போக்காக மட்டுமே புரிந்துகொள்ளக் கூடாது. இது முற்றிலுமான சீர்திருத்தவாத கண்ணோட்டமாகும். இது கட்சியின் நடவடிக்கைகளை தேர்தல் வேலைகளோடு மட்டுப்படுத்தவும், தேர்தல் போட்டிகளில் ஈடுபடுவதன் மூலம் மட்டுமே கட்சியின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த முடியும் என்ற மாயையை ஏற்படுத்தவும் செய்கிறது.”
2015ஆம் ஆண்டில், கொல்கத்தா ப்ளீனத்தில், வளர்ந்துவரும் நாடாளுமன்றப் போக்கு சுட்டிக் காட்டப்பட்டது. கட்சி கட்டும் வேலை, வெகுமக்களிடம் பணியாற்றுதல், கருத்தியல் போராட்டம், ஸ்தாபன வேலைகளை முன்னெடுத்தல் ஆகிய அனைத்தையும் இந்தப் போக்கு மிக மோசமாக பாதிப்பதை சுட்டிக் காட்டியது. இந்த ப்ளீனத்தில் நாடாளுமன்றவாதம் பற்றி பின்வருமாறு வரையறுக்கப்பட்டது: “கட்சியின் நடவடிக்கைகளை தேர்தல் வேலைகளோடு மட்டுப்படுத்தி, தேர்தல்களில் போட்டியிடுவதை முக்கியமானதாக முன்னெடுப்பதன் மூலம் கட்சியின் முன்னேற்றத்தை உறுதி செய்ய முடியும் என்ற மாயையை வளர்க்கும் ஒரு சீர்திருத்தவாத கண்ணோட்டமே நாடாளுமன்றவாதம் ஆகும். இது வெகுமக்கள் இயக்கங்களை ஒழுங்கமைத்தல், கட்சியைக் கட்டியெழுப்புதல் மற்றும் கருத்தியல் போராட்டத்தை நடத்துதல் ஆகியவற்றை புறக்கணிப்பதற்கு வழிவகுக்கிறது.”
வெகுமக்கள் இயக்கங்களை கட்டியெழுப்புவதும், போராட்டங்களை முன்னெடுப்பதும், கட்சியை கட்டுவதுமான வேலைகளை புறக்கணிப்பதுதான் நாடாளுமன்ற கண்ணோட்டத்தின் விளைவு ஆகும். வர்க்கப் போராட்டத்தில் ஈடுபடுவது, வெகுமக்கள் இயக்கங்களில் பங்கேற்பது ஆகியவற்றின் மூலமே கட்சி உறுப்பினர்களும், உழைக்கும் மக்களும் அரசியல் உணர்வை வளர்த்தெடுக்கின்றனர். லெனினிய வரையறையின்படி, அரசியல் உணர்வு என்பது, முதலாளித்துவ சுரண்டல் அமைப்புக்கு எதிரான போராட்டத்தை பாட்டாளி வர்க்கம் நடத்தவேண்டும் என்ற உணர்விலிருந்து வளர்த்தெடுக்கப்படுகிற உணர்வாகும்.
தேர்தல் நடவடிக்கைகளில் மட்டும் பங்கேற்பதன் மூலமும், பிற அரசியல் கட்சிகளுக்கு எதிராகப் போட்டியிடுவதன் மூலமும் அத்தகைய வர்க்க உணர்வை வளர்த்துக்கொள்ள முடியாது. கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், நாடாளுமன்ற அவைகளைப் பயன்படுத்துவது, நாடாளுமன்றத்திற்கு வெளியில் வளரும் போராட்டங்களுக்கும், வெகுமக்கள் இயக்கங்களுக்கும் உதவக்கூடிய வகையிலும், மாற்றுக் கொள்கைகளுக்கான போராட்டங்களுக்கு உதவி செய்யும் வகையிலும் இருக்க வேண்டும். நாடாளுமன்றத்திற்கு வெளியிலும், உள்ளேயும் நடக்கும் போராட்டங்களை இணைப்பதன் மூலமே கட்சியால் அரசியல் அடித்தளத்தை வளர்த்துக் கொள்ளவும், மக்களின் உணர்வை உயர்ந்த நிலைக்கு உயர்த்தவும் முடியும்.
எப்படியாயினும், நமது வேலைகளில் கிடைத்த அனுபவமும், கட்சி ஸ்தாபன நடவடிக்கைகளில் செய்யப்பட்ட பரிசீலனையும், கட்சிக்குள் பல்வேறு மட்டங்களிலும் நாடாளுமன்றவாதப் போக்கு நிலவிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. பல்வேறு கமிட்டிகளில் இடம்பெற்றுள்ள தோழர்கள், கட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்கான எந்த அடிப்படையும் இல்லாத நிலையிலும் கூட, தேர்தல்களில் போட்டியிடும் விருப்பத்தை வெளிப்படுத்துவது இந்த போக்கின் ஒரு அப்பட்டமான வெளிப்பாடு ஆகும். மற்றொரு விலகல் என்னவென்றால், தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட விரும்பும் தோழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளில் நீடித்து, அதன் சலுகைகளுக்கு பழக்கப்படுகிறார்கள்.
எந்தக் காரணத்திற்காகவும் சில தோழர்களை தேர்தலில் போட்டியிட கட்சி அனுமதிக்காதபோது, அத்தகைய தோழர்கள் கட்சியின் முடிவுக்கு எதிராக கிளர்ச்சி செய்து, தேர்தலில் போட்டியிட்டு அதனால் அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்த சம்பவங்கள் உள்ளன. தேர்தல் போட்டி பற்றிய கட்சி முடிவை மீறியதற்காக பல்வேறு மாநில குழுக்களின் உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பல சம்பவங்கள் உள்ளன.
ஆனால் தேர்தல்களில் போட்டியிட வேண்டும் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளைப் பெற வேண்டும் என்ற தனிநபரின் விருப்பம் மட்டும் நாடாளுமன்றவாத அடிப்படையிலான ஒரே விலகல் போக்கல்ல. நாடாளுமன்றவாதம் என்பது ஒரு சீர்திருத்தவாத அணுகுமுறையாகும், இது கட்சியின் புரட்சிகரத் தன்மைக்கு எதிரானது. நாடாளுமன்றவாதம் என்பதே சீர்திருத்தவாதம் ஆகும், ஏனெனில் அந்தப் பார்வையானது தம் முழு கவனத்தையும் ஆற்றலையும் அவ்வப்போது வரும் தேர்தல்களில் போட்டியிடுவதில் குவிக்கிறது, அத்துடன் வர்க்கப் போராட்டங்கள், வெகுமக்கள் இயக்கங்களின் வளர்ப்பதையும், கட்சி ஸ்தாபனத்தைக் கட்டியெழுப்புவதையும் புறக்கணிக்கிறது அல்லது தவிர்க்கிறது. கடந்த இரண்டு கட்சி மாநாடுகளில், உள்ளூர் போராட்டங்களை வளர்த்தெடுப்பதில் கட்சிக்குள்ள ஸ்தாபன பலவீனத்தின் மீது நாம் கவனம் செலுத்தியுள்ளோம். அந்த உள்ளூர் போராட்டங்கள் அடிப்படை வர்க்கங்களுக்கானதாகவோ, சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களாகவோ இருக்கலாம் அல்லது சில அழுத்தமான வெகுமக்கள் பிரச்சினையாக இருக்கலாம்.
கிராமப்புற ஏழைகளின் உள்ளூர் போராட்டங்களை நடத்த நாம் தவறியதற்கான காரணங்களில் ஒன்று, ஒரு கட்சிக்கிளை, தேர்தலில் தமது வாய்ப்புகளை பாதிக்கும் என்ற சிந்தனையோடு உள்ளூர் தன்நலக் குழுக்கள் அல்லது ஆதிக்க வர்க்கங்களின் நலன்களை பகைத்துக் கொள்ள அஞ்சுவது ஆகும். இந்த விலகல் போக்கின் மற்றொரு அம்சம், உள்ளாட்சித் தேர்தல்களில் பிராந்தியக் கட்சியுடன் கூட்டணி வைக்கும் பார்வை உள்ளது. அந்தக் கட்சி உள்ளூர் ஆதிக்க வர்க்கங்கள் அல்லது சாதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே, இந்த சக்திகளுக்கு எதிரான போராட்டங்களை மேற்கொள்வதில் தயக்கம் ஏற்படுகிறது.
இந்த ஆதிக்கப்பிரிவினரே ஒடுக்குமுறையாளர்களாகவும், சமூக பழக்க வழக்கங்களை பாதுகாக்கும் சக்திகளாகவும் உள்ளனர். சாதிய ஒடுக்குமுறை உள்ளிட்ட சமூகத் தீமைகளை எதிர்ப்பதில் உள்ள தயக்கத்திற்கும் இது பொருந்தும். எனவே, நாடாளுமன்றவாத பார்வை, நம் கட்சியின் புரட்சிகரத் தன்மை என்ற சாரத்தை குறைத்து மதிப்பிடச் செய்கிறது. நாடாளுமன்றவாத பிரச்சனையின் இன்னொரு அம்சம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட தொகுதியில் நாம் தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டபோதிலும் நமக்கு கிடைத்த செல்வாக்கைப் பயன்படுத்தி கட்சியை கட்டி எழுப்புவதற்கான ஸ்தாபன வேலைகளை நாம் முன்னெடுக்கவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நம்மிடம் இருந்தாலும், சில சூழ்நிலைகளில் இரண்டு முறைகளுக்கும் மேல் அந்த தொகுதியில் நாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், கட்சியின் ஸ்தாபன, அரசியல் செல்வாக்கில் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை ஏற்படுத்த முடிவதில்லை என்பதையும் பார்க்கிறோம். இதற்கு காரணம் இரண்டு ஆகும். ஒருபக்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியின் வேலை, கட்சியின் திட்டங்களோடும் நடவடிக்கைகளோடும் தொடர்புடையதாக இல்லை. இதனால் அந்தப் பணிகள் கட்சியின் விரிவாக்கத்திற்கு பயனளிப்பதற்கு மாறாக, தோழர்களின் தனிப்பட்ட தொடர்புகளையும், செல்வாக்கையும் பேணுவதாக உள்ளது. இரண்டாவது, கட்சியின் நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் முன்னெடுப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியின் பணியைப் பயன்படுத்த கட்சி ஸ்தாபனம் தயாராக இல்லை.
நாடாளுமன்றவாதம் காரணமாக எழக்கூடிய மற்றொரு எதிர்மறை அம்சம் கட்சிக்குள் ஏற்படும் குழுவாத வளர்ச்சியாகும். தேர்தலில் போட்டியிட விரும்பும் சில தலைவர்கள் இந்த நோக்கத்திற்காக கட்சிக் கமிட்டிகளில் தமக்கு ஆதரவைத் திரட்ட முயற்சிப்பதை நாம் பார்த்துள்ளோம். தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களால் குழுக்கள் உருவாக்கப்படுகின்றன. கட்சியும் அதன் கூட்டணியும் தேர்தல்களில் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைக்கும் நிலையில் உள்ள மாநிலங்களில், இத்தகைய விலகல் போக்குகள் வலுவாக உள்ளன. இது குழுவாதப் போராட்டங்களுக்கு வழிவகுக்கிறது. இதுபோன்ற குழுவாதப் போக்குகள் இருபதாண்டுகளுக்கு முன்பு கேரளாவில் காணப்பட்டது.
நாடாளுமன்றவாதத்தில் மற்றொரு தீங்கு விளைவிக்கும் அம்சமும் உள்ளது. தேர்தல்களின் போது தேவையான அரசியல், ஸ்தாபன விழிப்புணர்வு இல்லாமல், தேர்தல் ரீதியாக முதலாளித்துவக் கட்சிகளுடன் இணைவதன் காரணமாக நமது கட்சியின் தன்மை அரிக்கப்படுகிறது. முதலாளித்துவக் கட்சிகள் வாக்காளர்களை கவர்ந்திழுக்க பணம், மதுபானம் மற்றும் பிற ஊழல் நடைமுறைகளை பெரிய அளவில் பயன்படுத்துகின்றன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இதுபோன்ற நடைமுறைகள் பெரிய அளவில் உள்ளன. பிராந்திய முதலாளித்துவக் கட்சிகளுடனான கூட்டணிகள் நமது தோழர்கள்/கட்சிக் கிளைகளில் சிலர் அத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு இட்டுச் சென்றுள்ளன. நமது கட்சியின் சித்தாந்தத் தன்மையைப் பாதுகாக்க வேண்டுமானால் இத்தகைய நடைமுறைகள் உறுதியாக நிராகரிக்கப்பட வேண்டும்.
கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா போன்ற மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தமது வெகுமக்கள் ஆதரவுத் தளத்தை வளர்த்துக் கொண்ட அனுபவம் உள்ளது. அங்கு நாம் வர்க்கப் போராட்டங்களையும், வெகுமக்கள் இயக்கங்களையும் வளர்த்துக் கொண்டோம். இயக்கத்தை வலுப்படுத்த நாடாளுமன்ற அவைகளைப் பயன்படுத்தினோம். நாடாளுமன்றத்திற்குள்ளும், அதற்கு அப்பாற்பட்ட தளங்களிலும் நாடாளுமன்ற வடிவங்களை திறமையாகப் பயன்படுத்தியதே கட்சியை விரிவுபடுத்தியது. 1968-69 ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் நிலப்பிரபுக்களின் பினாமி (சட்டவிரோதமாக வைத்திருக்கும் உபரி) நிலத்தை கையகப்படுத்த விவசாயிகள் அணிதிரட்டிய அனுபவம் இதற்கு சிறந்த உதாரணமாக இருந்தது. ஐக்கிய முன்னணி அரசாங்கம் (இதில் சி.பி.ஐ(எம்) ஒரு அங்கமாக இருந்தது) விவசாயிகளை ஒடுக்க போலீஸ் அனுப்பப்பட மாட்டாது என்று அறிவித்தது, ஏனெனில் அவர்கள் சட்டவிரோதமாக வைத்திருக்கப்பட்ட நிலங்களை கையகப்படுத்துகிறார்கள்.
கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை, நாடாளுமன்றம் என்பது போராட்டத்தின் ஒரு களமே தவிர அதுவே நமது அரசியல் வாழ்வின் மையம் அல்ல. நாடாளுமன்றப் பணிகள் மக்கள் இயக்கங்களின் முன்னேற்றத்திற்கு உதவ முடியும், ஆனால் அது வெகுமக்கள் போராட்டங்களுக்கும், வர்க்க அமைப்புக்கும், அரசியல் அணிதிரட்டலுக்கும் மாற்றாக இருக்க முடியாது. இந்த உறவு தலைகீழாக மாறும்போதும், நமது சுயேட்சையான வெகுமக்கள் ஸ்தாபன வேலைகளிலும், போராட்டங்களிலும் தேர்தல் நடவடிக்கைகளே ஆதிக்கம் செலுத்தும் போதும் நாடாளுமன்றவாதம் எழுகிறது.
மக்களிடமிருந்து மக்களுக்கு என்ற மாஸ் லைன் (mass line) கொள்கையை தொடர்ச்சியாக பயன்படுத்துவதும், வர்க்க/வெகுமக்க போராட்டங்களை பலப்படுத்துதல், புரட்சிகர அமைப்பை வளர்த்தெடுத்தல், நாடாளுமன்ற நடவடிக்கைகளை உழைக்கும் மக்களின் புரட்சிகர இயக்கத்தை முன்னெடுக்கும் பரந்த நோக்கத்திற்கு உட்பட்டதாக அமைத்துக் கொள்ளுதல் ஆகியவை நாடாளுமன்றவாதத்திற்கு மாற்று மருந்தாகும். நாடாளுமன்றவாதத்தை எதிர்த்து அவ்வப்போது நெறிப்படுத்துதல் பிரச்சாரங்களை கட்சி ஸ்தாபனத்தில் நடத்த வேண்டும்.
தமிழில்: இரா.சிந்தன்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply