
புதிய அரசியல் யுகத்திற்காக நம் ஸ்தாபனங்களை புத்தாக்கம் செய்வோம்
சுதீப் தத்தா
“அமெரிக்கப் பார்வையிலிருந்து, பொருளாதாரத்தை அரசியலற்றதாக மாற்ற முனைந்த நவதாராளமய முயற்சிகள் தோற்றுவிட்டன.” — ஹார்வர்ட் பிசினஸ் ரிவியூ, 2022
ஆம், இப்போது, எல்லாமே அரசியல்தான்; நவதாராளமய சூழலின் நீண்ட மந்த நிலைமைக்கு பிறகு, இப்போது சமூக உரையாடலின் மைய மேடையை அரசியல் கருத்துக்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளன; கடந்த பத்தாண்டுகளில்தான் இது தொடங்கியது.
உலக அரசியலின் இப்போதைய கட்டத்தில் நாம் புதிய வடிவிலான அரசியல் எழுச்சிகளை பல்வேறு நாடுகளிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அமெரிக்காவின் ‘ஆக்குபை வால் ஸ்ட்ரீட்’ இயக்கமும், அரபு வசந்தமும் தொடங்கி பிரான்சில் நடந்த யெல்லோ யூனிபார்ம் இயக்கம் வரை – இலத்தீன் அமெரிக்காவில் அரசின் செலவுக்குறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்கள், ஹாங்காங்கில் ஜனநாயக சார்பு இயக்கங்கள், ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் உள்ள பல்கலைக்கழங்கள் எங்கிலும் மாணவர்களின் தலைமையில் பாலஸ்தீன மக்களுக்காக அண்மையில் நடந்த ஒன்றுபட்ட இயக்கங்கள் என – இடது, வலது தரப்புகளில் இருந்தும், அவற்றின் பல்வேறு சாயல்களில் இருந்தும் பல லட்சக் கணக்கானோர் அரசியல் நடவடிக்கைகளுக்குள் நுழைந்துள்ளனர். ஆனால், இவை அனைத்துமே பாரம்பரிய அரசியல் அமைப்பு வழிமுறைகளுக்கு அப்பாற்பட்டு நடந்துள்ளன. நவதாராளமய முதலாளித்துவத்தால் மக்களின் விருப்பங்களுக்கு தீர்வு வழங்க முடியாத நிலை அதிகரித்து வருகிறது, எனவே வாழ்க்கைத்தரம் வீழ்கிறது, வேலையின்மை வளர்கிறது, சமத்துவமற்ற நிலைமை உருவாகிறது. இதனால் உருவாகும் அதிருப்தியை இந்த இயக்கங்கள் வெளிப்படுத்துகின்றன. அத்துடன் கூடுதலாக, தற்போதைய அரசியல் ஒழுங்கிற்குள்ள ஏற்புத்தன்மைக்கு வளர்ந்துவரும் நெருக்கடியையும் அவை எடுத்துக் காட்டுகின்றன.
தொடர்ச்சியற்ற எழுச்சிகள்
இருப்பினும், பொதுவான இந்த எழுச்சிகள் உறுதியான வெகுமக்கள் ஸ்தாபனங்களை விடவும், நெகிழ்வான அமைப்பு வடிவங்களுடனே வெளிப்படுகின்றன. அவை, நீண்ட நெருக்கடியில் சிக்கியுள்ள ஒரு அமைப்பிற்குள் தீவிர அரசியல் நடவடிக்கையின் ஒளிக்கீற்றுகளாக வெளிப்படுகின்றன – இந்த எழுச்சித் தருணங்கள் கடந்த பிறகும் அந்த நெருக்கடி தொடர்கிறது. டிஜிட்டல் வலைப்பின்னல்கள், முறைசாரா கூட்டமைப்புகள், மற்றும் தன்னெழுச்சி திரட்டல்கள் மூலம் அரசியலில் பங்கேற்பு விரைவுபட்டுள்ளது. அதே சமயம் அரசியல் மாற்றத்தை கெட்டிப்படுத்துவதற்கு அவசியமான ஸ்தாபனத் தொடர்ச்சியை அவை பெரும்பாலும் கொண்டிருப்பதில்லை.
அவ்வப்போது நிகழும் அணிதிரள்வுகளுக்கும், கூட்டுச் செயல்பாட்டையும் நிலைப்படுத்தி, பொது அரசியல் அடையாளத்தை உருவாக்கி, சமூகத்தில் திறம்பட தலையிடும் வல்லமை கொண்ட ஸ்தாபனங்களுக்கும் இடையில் ஒரு இடைவெளி நிலவுகிறது.
அன்டன் ஜாகர் எழுதிய ‘ஹைப்பர் பாலிடிக்ஸ்-2026’ என்ற நூலில் வாதிடுவது போல, இப்போது அரசியலின் கூர்மையடைந்துள்ள கேள்வி, மக்கள் பங்கேற்பு அதிகரித்துள்ளதா என்பதல்ல; புதிய வகை அரசியல் பங்கேற்புகளை அதிகாரத்தைப் பயன்படுத்தும் திறன் கொண்ட நிலையான ஸ்தாபனங்களாக மாற்ற முடியுமா என்பதுதான்.
அதி வலதும், இடதுசாரிகளும்
முற்போக்குச் சக்திகள் பலரையும் விட, சமகாலத்தின் அதி-வலது சக்திகள் இந்தச் சவாலை நன்றாகப் புரிந்துகொண்டுள்ளனர். அமெரிக்காவில் டிரம்ப் கருத்துக்களுடன் தொடர்புடைய இயக்கங்களும், பிற நாடுகளில் அதனை ஒத்துள்ள வலதுசாரி அமைப்புகளும், தேர்தல் பிரச்சாரங்களையோ, கவர்ச்சிகரமான தலைவர்களையோ மட்டுமே நம்பியிருப்பதில்லை. அரசியல் விசுவாசத்தையும் பங்கேற்பையும் தொடர்ந்து மீட்டுக் கொள்ளும் வகையில் — அடர்த்தியான சமூக வலைப்பின்னல்கள், உள்ளூர் அமைப்புகள், சமூக அமைப்புகள், சமூக-கலாச்சார மற்றும் கருத்தியல் ஸ்தாபனங்கள் என்று அமைந்துள்ள தம் சொந்த கருவிகளிலிருந்து அவர்கள் வலிமையைப் பெறுகிறார்கள். நீடித்து நிலைக்கும் உண்மையான ஸ்தாபன கட்டமைப்புகளில் பதிக்கப்பட்டிருக்கும்போதுதான், அரசியல் எழுச்சிகள் நிலைத்த முக்கியத்துவத்தை பெற முடியும் என்பதை இந்த வலதுசாரிகளின் செல்வாக்கு நிரூபித்துக் காட்டுகிறது.
மறுபக்கத்தில், பாரம்பரிய இடது ஸ்தாபனங்களில் – சமகால சமூகத்தில் தோன்றும் புதிய அரசியல் பங்கேற்பு வடிவங்களோடு போதிய அளவு ஈடுபட முடியாத தன்மையின் மூலம் – முக்கியமான குறைபாடு வெளிப்படுகிறது. ஒப்பீட்டளவில் நிலையான வேலை, நிரந்தர உறுப்பினர்கள், வழக்கமான அணிதிரட்டல் முறைகளைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ள பல இடதுசாரி ஸ்தாபனங்களும் – புதிதாக உருவாகியுள்ள டிஜிட்டல் வழி தகவல் தொடர்பு, நிலையற்ற பணியிடங்கள், விரைவான அணிதிரட்டல், தன்னெழுச்சிகள் மூலம் வடிவமைக்கப்பட்ட அரசியல் சூழலுக்கு தகுந்தபடி மாறிக் கொள்வதில்லை. இதன் விளைவாக, அரசியலில் அதிருப்திகள் வளர்ந்துள்ள நிலையிலும், புதிய இயக்கங்கள் குறிப்பிடத்தக்க வீராவேசத்தையும், படைப்பூக்கத்தையும் மீண்டும், மீண்டும் வெளிப்படுத்தியுள்ள போதிலும், இந்த ஆற்றலின் பெரும்பகுதி சிதறலாகவும், துண்டுதுண்டாகவும், நிலையான அரசியல் அதிகாரமாக மாற்ற முடியாத வகையிலும் உள்ளது.
எனவே, புரட்சிகரமான இடதுசாரி ஸ்தாபனங்கள் தங்களுடைய வேலைகளை மறுசீரமைத்திட வேண்டும். தங்களுடைய கருத்தியல் அடித்தளங்களையோ, ஸ்தாபன நெறிமுறைகளையோ கைவிட்டுவிடாமல், அவை புதிய வகை அரசியல் தலையீட்டு முறைகளையும், இளைஞர்/பெண்கள், ஒடுக்கப்பட்ட பிரிவினர், நிலையற்ற- முறைசாரா மற்றும் கிக் தொழிலாளர்களுடன் ஆழமான ஈடுபாட்டையும், தன்னெழுச்சிப் போராட்டங்களோடு இணைந்துகொள்ளும் திறன் மிகுந்த நெகிழ்வான ஸ்தாபன வடிவங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தனிச் சூழலுக்கு காரணமாக அமைந்த இன்றைய பொருளியல் நிலைமைகளின் நெகிழ்வான தன்மையைக் கைப்பற்றிக் கொள்ளும் திறனுடைய ஸ்தாபன வடிவங்களை வளர்த்தெடுப்பதே அவர்களுக்கு முன் உள்ள வேலையாகும்.
இந்த எழுச்சிகளில் வெறுமனே பங்கேற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல், அவற்றை வடிவமைப்பது, அந்த எழுச்சிகளுக்கு ஒரு தொடர்ச்சியையும், ஒருங்கமைப்பையும், அரசியல் திசையையும், பரந்த திட்டத்தோடு அப்போராட்டங்களுக்கு ஒரு இணைப்பை ஏற்படுத்துவதுமான திறன் மிகுந்ததொரு மாற்றுப் பார்வையை வழங்குவதுதான் அவற்றின் பணியாகும். தன்னெழுச்சியாக நடக்கும் அரசியல் போராட்டங்கள் ஒரு சமூக அமைப்பை உலுக்கக் கூடியவையே என்றாலும் நிலையான ஸ்தாபன அமைப்பால் மட்டுமே சமுதாயத்தை மறுவடிவமைத்திட முடியும். இதுதான் இப்போதைய கட்டத்தில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய மையமான படிப்பினை.
இந்திய அனுபவங்கள்
உலகம் முழுவதும் காணப்படும் இத்தகைய படிப்பினைகளை நாம் இந்தியாவிலும் பார்க்கலாம். மாணவர்களும், இளைஞர்களும் தில்லியில் ஜந்தர் மந்தரில் நடத்திய இயக்கம் சர்வாதிகார மோடி அரசின் திமிர் பிடித்த கோட்டை கொத்தளங்களை உலுக்கிவிட்டது; வெறுப்பின் அரசியலை, அன்பாலும், ஒற்றுமையாலும் மாற்றியமைக்க முயற்சிக்கும் ஒரு புதிய அரசியல் மொழியும், கதையாடலும் இதற்கு அடிப்படையில் நிலவுவது உண்மைதான். இந்த அரசியல் அதன் எதிரிகள் முன்னெடுப்பதைப் போலவே வலுவான, உணர்ச்சிகளின் அரசியல் ஆகும். இதில் பல வர்க்கங்களும் இணைகின்றன. அதிவலது பொய் பிரச்சார அரசியலுக்கு நேர்மாறாக, உண்மையும், நீதியும் தேடும் கூட்டு விருப்பங்களில் இருந்து அது தனது வலிமையையும், தெம்பையும் பெறுகிறது. ஆனால், இதற்கு நிலையான ஸ்தாபன கட்டமைப்பில்லை.
ஆனால், அண்ணா ஹசாரே இயக்கத்தை பாஜக-ஆர்எஸ்எஸ் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டது என்பதைப் பார்க்கும்போது, அதி-வலது சக்திகள் இத்தகைய தன்னெழுச்சி இயக்கங்களுக்குப் பின்னணியிலும், அவற்றுக்குள்ளேயும், அவற்றைச் சுற்றியும் தங்களுடைய சக்திகளை எவ்வளவு திட்டமிட்ட வகையில் நிலைநிறுத்தியிருந்தார்கள் என்பது தெளிவாகிறது. 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாமல் அறிவித்த ஆட்சியின் பேரழிவுகரமான செயல்பாடுகளுக்குப் பிறகும், 2019ஆம் ஆண்டு மோடி அரசு மீண்டும் திரும்பியது. மிகவும் நுட்பமாக முன்னெடுத்து பரப்பப்பட்ட அதி-தேசியவாத, இந்துத்துவ அரசியலே அதற்கான காரணமாகும்; இன்றளவும் அதுவே மேலாதிக்கம் செலுத்தும் அரசியல் சக்தியாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக, அவர்களுடைய அரசியல் பிரச்சாரத்தை மிக இறுக்கமாக திட்டமிட்டு ஒருங்கிணைப்பதிலும், முன்னெடுப்பதிலும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களும், ஊழியர்களும் ஈடுபடுகின்றனர். நிஜ உலகிலும், இணையத்திலும் பரவியிருக்கும் இந்த அமைப்புகள், ஒழுங்கமைந்த கட்டுப்பாட்டு அமைப்பில் செயல்படுகின்றன.
நெருக்கடியின் ஆழம்
அதே சமயம், இது வெறுமனே ஸ்தாபன உத்தியைப் பற்றிய பிரச்சினை மட்டும்தானா? இல்லை. ஆட்சிக்கு எதிராக வெடித்தெழும் இந்த மக்கள் எழுச்சிகள், சமூக அமைப்பிற்குள் கொதித்துக் கொண்டிருக்கும் உண்மையான நெருக்கடியின் வெளிப்பாடுகளாகும். உருவாகி வரும் புதிய அரசியல் வெளியை கைப்பற்றிக் கொண்டு, அதை தமக்கேற்ற வகையில் வடிவமைப்பதற்கு அதிவலது சக்திகளும் சமகாலத்தில் தீவிரமாக முயன்று வருகின்றன; மறுபுறம், இந்தத் தன்னெழுச்சி போராட்டங்கள், தற்போதைய அரசியல்-சமூக ஒழுங்கில் ஆழமடைந்துள்ள விரிசல்களில் வெளிச்சம் பாய்ச்சுகின்றன. உலக அளவிலும், நமது நாட்டிலும் நிலவும் உண்மைச் சூழல் இதுவே.
ஆம், நவதாராளமயத்தின் நெருக்கடியே இன்றைய உண்மைச் சூழல்! முதலாளித்துவத்தின் இப்போதைய கட்டம் நீடித்த பொருளாதார தேக்கத்தாலும், வேலையின்மையாலும், குறை நுகர்வும் மிகை உற்பத்தியும் ஒருங்கே நிலவும் முரண்பாட்டாலும் குறிக்கப்படுகிறது. இவை அனைத்தும் நவதாராளமய உலகமயமாக்கலின் கட்டமைப்பு முரண்பாடுகளில் வேரூன்றியவை. இது மூலதனத்தை பலப்படுத்தி உழைப்பை பலவீனப்படுத்தியுள்ளது; ஏற்றத்தாழ்வை ஆழமாக்கி, கூலிகளைத் குறைத்து, மக்களின் வாங்கும் சக்தியைக் கீழே தள்ளியுள்ளது. இந்த முரண்பாடுகளைத் தீர்க்க முடியாத நிலையில், அரசுகள் மறுபகிர்வு கொள்கைகளை பின்பற்றுவதையும் நவதாராளமய அமைப்பு தடுக்கிறது. இதனால் முதலாளித்துவமானது, கூடுதலான சர்வாதிகாரத்தையும், ஏகபோக மூலதனத்தின் ஆதரவுடன் அதி-வலது, நவ-பாசிச அரசியலின் எழுச்சியையும் நோக்கித் திரும்புகிறது. இவை மக்களின் கோபத்தை அதி-தேசியவாதம், மதவெறி, ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதல்கள் மூலம் திசைதிருப்புகின்றன.
1930களில் கண்ட பாசிசத்தைப் போல, இன்றைய நவ-பாசிசத்தால் பொருளாதாரத் தேக்க நிலையைக் கடக்க முடியாது. நவதாராளமய கொள்கைகளுக்கும், உலக நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்திற்கும் கட்டுப்பட்டதாகவே நவ-பாசிசமும் உள்ளது. எனவே, உலக முதலாளித்துவம் தனது நெருக்கடியை ஏகாதிபத்திய போர்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களில் ஊக முதலீடு, உழைப்பின் சுரண்டலை தீவிரப்படுத்துதல், நெருக்கடியின் சுமையை உழைக்கும் வர்க்கத்தின் மீதும், தெற்குலகின் மீதும் திணித்தல் ஆகியவற்றின் மூலம் நிர்வகிக்க முயல்கிறது. செயற்கை நுண்ணறிவு ஏற்றம், ஊக முதலீடு, பெருநிறுவன லாப குவிப்பு, அதிகரிக்கும் கடன், குறைந்த வேலைவாய்ப்பு, இயற்கை வளங்கள் மீதான அழுத்தம் ஆகியவற்றால் குறிக்கப்படுகிறது. இது முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் ஆழப்படுத்துகிறது.
இந்த உலக சூழலின் பின்னணியில்தான், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது நெருக்கடியின் சுமையை இந்தியா போன்ற நாடுகளின் மீது தள்ளிவிட முயற்சிக்கிறது. மோடி ஆட்சியோ, கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களை பாதுகாத்து, அந்தச் சுமையை மக்களின் மீது சுமத்துகிறது. இந்தியாவில் இந்த போக்குகள் பிரதிபலிக்கின்றன.
இந்தியா பின்பற்றும் நவதாராளமய வளர்ச்சி மாடல் – எரிசக்தி இறக்குமதி, நிலையற்ற உலக நிதிச் சந்தைகள், உள்நாட்டு தேவையை கட்டுப்படுத்தி வைத்திருப்பது ஆகிய அம்சங்களின் மீது கட்டமைப்பு ரீதியான சார்பைக் கொண்டுள்ளது. பலவீனமான தொழில்துறை வளர்ச்சி, வேலைவாய்ப்பில் தேக்கம், உழைப்பு-மைய தொழில்மயமாக்கல் தோல்வி, வாங்கும் சக்தி சரிவு, செல்வத்தின் மையப்படுத்தல், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், நூறுநாள் வேலை திட்டத்தை திரும்பப் பெறுதல், விவசாயிகளை பாதிக்கும் நடவடிக்கைகள் போன்ற கொள்கைகள் அனைத்தும் கூலிகளையும் வாழ்வாதாரத்தையும் கீழ்நோக்கி அழுத்துகின்றன.
போராட்டங்களும், பிளவு அரசியலும்
நெருக்கடி உண்மையானது; அதுபோலவே, அதன் சுமை மக்களின் மீது திணிக்கப்படுவதும் உண்மையானதே. மக்களின் துன்பமும் உண்மையானது. எனவே, கூலி, வேலைவாய்ப்பு, மேம்பட்ட வாழ்க்கை ஆகியவற்றுக்கான போராட்டங்கள், அனைத்து போராட்டங்களின் மையமாக மாறுகின்றன. ஏகாதிபத்தியமும், இந்திய ஆளும் வர்க்கங்களும், இந்த அமைப்புரீதியான நெருக்கடியின் சுமையை மக்களின் மீது திணிக்கும்போது, உற்பத்தி செய்யும் வர்க்கங்கள் முன்னெடுக்கும் ஒவ்வொரு போராட்டமும், ஏற்கனவே பலவீனமாக உள்ள முதலாளித்துவ அமைப்பை மேலும் பலவீனமாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. எனவே, அரசின் சமூக நல செலவினக் குறைப்புக்கு எதிரான போராட்டமும், தனியார்மய எதிர்ப்பு, பொதுச் சொத்து பாதுகாப்பு, பொதுக் கல்வி, சுகாதார பாதுகாப்பு போராட்டங்களும் மத நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களும் ஒன்றிலிருந்து ஒன்று பிரித்துப் பார்க்க முடியாதவையாகும்.
நிச்சயமாக, ஆளும் வர்க்கமும், அதன் நவ-பாசிச அவதாரங்களும், மக்களின் வாழ்வாதார நெருக்கடிகளிலிருந்து திசைதிருப்புவதற்காக மதவாத பிளவை தீவிரப்படுத்த முயல்கின்றன. பரந்து விரிந்த சமூக-கலாச்சார அமைப்புகளின் மூலம் அவர்கள் விரிவான ஸ்தாபன வலிமையை பெற்றுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில்தான், இந்தியச் சமூகத்தின் ஆழத்தில் தேங்கிக்கிடக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தும் மக்கள் எழுச்சிகள் இப்போது உருவாகத் தொடங்கியுள்ளன.
முதல் பார்வையில், தற்போதைய மாணவர் இயக்கம் ஆட்சிமுறைக்கு எதிராக, பொறுப்புக்கோரும் தாராளவாத-ஜனநாயகக் கோரிக்கைகளை மட்டுமே முன்வைப்பது போலத் தோன்றலாம். ஆனால், அதை நெருக்கமாகப் பார்த்தால், அதற்குள் ஒரு தெளிவான வர்க்கக் கண்ணோட்டமும் தென்படுகிறது. இன்றைய சமூக அமைப்பின் மீது ஆழமான விரக்தியும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையிழப்பும் கொண்ட இளைஞர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் தளமாகவே இந்த இயக்கம் உருவெடுத்துள்ளது. இது வெறும் மாணவர் இயக்கமாக மட்டும் இருக்கவில்லை. உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்பே கிடைக்காதவர்களாக இருந்தபோதிலும், இந்த இயக்கத்திற்காக உயிரையும் பணயம் வைக்கத் தயாராக இருந்த இக்காலத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கமாகவும் அது மாறியது. குறிப்பாக, தொழிலாளர் வர்க்க இளைஞர்களும், கிராமப்புற விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களும் இதில் பெருமளவில் பங்கேற்றது மிகவும் முக்கியமானதாகும். ஒட்டுமொத்த சமூக அமைப்பின் மீதும் இந்த வர்க்கங்களுக்கு உருவாகியுள்ள அதிருப்தியையே இது பிரதிபலிக்கிறது.
இந்த Gen-Z தலைமுறையின் எழுச்சிக்கு முன்னதாகவே, அதனுடன் இணைந்த வகையிலும் மற்றொரு Gen-Z எழுச்சி உருவாகியிருந்ததையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த ஆண்டில் தொடக்கத்திலேயே ஆரம்பித்து, இன்றுவரை வட இந்தியாவில் தொடரும் தொழில்துறைத் தொழிலாளர்களின் வீரமிக்க போராட்டம் அது. இதில் பங்கேற்றுள்ள பெரும்பாலான தொழிலாளர்களும் Gen-Z தலைமுறையைச் சேர்ந்தவர்களே. பரந்த மக்கள் சக்தியுடன் இணைந்து தொழிலாளர் வர்க்கமும் எழுச்சி பெற்று வருவதை இது காட்டுகிறது.
வடிவ மாற்றம் மட்டுமல்ல
நிச்சயமாக, மாணவர் இயக்கம் ஒன்றை தெளிவாக்கியுள்ளது, மேல்கட்டுமானத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த அதி-வலது அரசியலை, அதே மேல்கட்டுமானத்தில் கலகக்குரலான ஒரு புதிய அரசியல் மொழியை அது எதிர்கொண்டு வருகிறது. ஆனால், இந்தச் சவாலை வெறுமனே சமூக ஊடகங்களில் புதிய உத்திகளைப் பயன்படுத்துவதாலோ, புதிய மொழியையோ, கலாச்சார வெளிப்பாடுகளையோ ஏற்றுக்கொள்வதாலோ மட்டும் எதிர்கொள்ள முடியாது. தற்போது நடப்பில் உள்ளதும், புதிதாக உருவாகிக் கொண்டிருப்பதுமான சமூக – அரசியல் அமைப்புகளை ஒருங்கிணைத்து, ஏற்கனவே உள்ள வர்க்க/வெகுமக்கள் அமைப்புகளின் செயல்பாடுகள், போராட்டங்களை மக்கள் எழுச்சிகளோடு இணைப்பது இப்போது நமக்கு முன் எழுந்திருக்கும் உண்மையான சவால் ஆகும். அவர்களின் குரல்களை ஒருங்கிணைத்து, கனவுகளைப் பகிர்ந்துகொண்டு, மக்களின் கோபத்தையும் அதிருப்தியையும் நெருக்கடியில் சிக்கியுள்ள முதலாளித்துவ அமைப்புக்கு எதிராகத் திருப்புவதே இன்றைய மையமான அரசியல் பணியாகும்.
அதற்காக, தற்போதுள்ள ஸ்தாபனங்களின் வேலை பாணிகளை மறுசிந்தனைக்குள்ளாக்கும் தேவை எழுகிறது. தற்போதுள்ள ஸ்தாபனங்களைப் புதிய வகையில் கற்பனை செய்து மறுகட்டமைப்பது இந்தப் பணியில் மிகவும் முக்கியமானதாகும். மக்களின் வேலைக்காக கூடும் இடங்களுக்கு அப்பால், அவர்களுடைய அன்றாட வாழ்க்கையோடு நம்மால் தொடர்பு ஏற்படுத்த முடியவில்லை. அவர்களுடைய கனவுகள் உருவாகும் இடங்களிலும், அவர்கள் துன்பங்களைச் சுமந்து வாழும் வாழ்க்கைச் சூழல்களிலும் நம்மால் போதுமான அளவில் சென்று சேர முடியவில்லை. அதேபோல், எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான ஒரு பார்வையை வழங்குவதிலும் நாம் தோல்வியடைந்துள்ளோம். எனவே, நாம் செய்ய வேண்டிய மறுசீரமைப்பு என்பது மாற்றத்திற்கான தெளிவான கருத்தியலை ஒருபுறமும், எதிர்கால சமூகத்தின் கற்பனையைத் தாங்கிச் செல்லக்கூடிய புரட்சிகரமான ஸ்தாபனங்களை மறுகட்டமைப்பதை மறுபுறமும் ஒருசேர கோருகிறது.
பழைய ஸ்தாபனங்களும் புதிய சமூகமும்
உண்மையில், ஸ்தாபனங்கள்தான் ஒரு சமூகத்தின் கூட்டு சிந்தனையையும், கூட்டு உணர்வையும் வடிவமைக்கின்றன. நாடாளுமன்றம், அரசாங்க இயந்திரம், நீதித்துறை, காவல்துறை, இராணுவம், உளவுத்துறைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற ஸ்தாபனங்களின் வழியாக முதலாளித்துவ அரசு தனது மேலாதிக்கத்தைச் செலுத்துகிறது. அதேபோல், தனியார் பெருநிறுவனங்கள், ஊடகங்கள், அரசு சாரா அமைப்புகள், விளம்பர நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் மூலமும் ஆளும் வர்க்கங்கள் செயல்படுகின்றன. இந்த மேலாதிக்க ஸ்தாபனங்கள் அனைத்தும் இணைந்து மக்களின் வாழ்க்கையை, மதிப்பீடுகளை, விருப்பங்களை, வாழ்க்கை இலட்சியங்களை, மனப்போக்குகளை வடிவமைக்கின்றன.
ஆனால், இந்த ஸ்தாபனங்களின் நம்பகத்தன்மை தொடர்ந்து சிதைந்து வருகிறது; அதே நேரத்தில், கீழ்ப்படிய மறுக்கும் அரசியலும் வளர்ந்து வருகிறது. இந்த ஸ்தாபனங்களை சர்வாதிகார, பாசிச சக்திகள் கைப்பற்றியிருப்பதே, ஆளும் வர்க்கத்திடம் அதிகரித்துவரும் பதற்றத்தின் வெளிப்பாடாகும். பழைய ஸ்தாபனங்கள் தங்களுடைய அதிகாரத்தை இழக்கும்போது, அரசியல் மேலும் உயிரோட்டமிக்கதாக மாறுகிறது. அதுவே எதிர்கால சமூகத்தின் விருப்பங்களைத் தாங்கிச் செல்லக்கூடிய புதிய ஸ்தாபனங்களை கற்பனை செய்வதற்கும், கட்டியெழுப்புவதற்குமான வரலாற்று வாய்ப்பை உருவாக்குகிறது.
ஒரு புதிய சமூகத்தை வெறுமனே கற்பனையில் உருவாக்கவும் முடியாது. தற்போதுள்ள சமூக அமைப்பிற்குள்ளேயே, புதிய சமூகத்தின் கருவுருவங்களையும் ஆரம்ப வடிவங்களையும் கட்டியெழுப்ப முயற்சிக்காமல், அதைத் தெளிவாக வடிவமைக்க முடியாது. அவ்வாறே, பல்வேறு சமூக ஸ்தாபனங்களின் வழியாக மக்கள் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக ஆற்றலை ஒருங்கிணைத்து வலுப்படுத்த வேண்டும். தற்போதைய சமூக ஒழுங்கை வெறுமனே அகற்றுவது மட்டுமல்லாமல், அதைவிடச் சிறந்த, திறன்மிக்க, முற்போக்கான, ஜனநாயகபூர்வமான ஒரு புதிய சமூகத்தை உருவாக்கவும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை இந்த ஸ்தாபனங்கள்தான் மக்களுக்கு வழங்கிடும்.
தேவையான மக்கள் அமைப்புக்கள்
குறிப்பாக முறைசாரா மற்றும் கிக் தொழிலாளர்களின் சிதறுண்ட வாழ்க்கை மற்றும் வேலைநிலைகளோடு தொடர்பு ஏற்படுத்தக்கூடிய மக்கள் ஸ்தாபனங்களைக் கட்டியெழுப்ப வேண்டும். கல்வி, சுகாதாரம், சட்ட உதவி, கலாச்சாரச் செயல்பாடுகள், திறன் மேம்பாடு, சமூக சமையலறைகள், குழந்தைகள் பராமரிப்பு மையங்கள், முறைசாரா மற்றும் கிக் தொழிலாளர்களுக்கான ஆதரவு மையங்கள், நூலகங்கள், விளையாட்டு/ இளைஞர் மன்றங்கள், தொழில் வழிகாட்டல் அமைப்பு, அறிவியல் மனப்பான்மை – மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கங்கள், சுற்றுச்சூழல் முயற்சிகள், சமூக ஆவணப்படுத்தல் அமைப்புகள் ஆகியவை அவற்றில் இடம்பெறலாம். பாலினம், சாதி, சமூக மற்றும் மத அடக்குமுறைகளுக்கு எதிராக முழுமையான அணுகுமுறையுடன் செயல்படுவதற்கும், தொழிலாளர் வர்க்கத்தின் முற்போக்கான கலாச்சாரத்தையும் வரலாற்றுப் பாரம்பரியமான நல்லிணக்கத்தையும் முன்னிறுத்தி மதவாத சக்திகளை எதிர்கொள்வதற்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.
இந்த ஸ்தாபனங்கள், குறிப்பாக, வேலையற்ற இளைஞர்களின் படைப்பாற்றலை, பங்கேற்பை, புதுமையை ஊக்குவிக்க வேண்டும். அதே நேரத்தில், பிராந்திய வேறுபாடுகளையும், உள்ளூர் தேவைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். போட்டியையும் இலாபத்தையும் அடிப்படையாகக் கொண்ட சமூக ஒழுங்கிற்கு மாற்றாக, ஒத்துழைப்பு, ஜனநாயகப் பங்கேற்பு, கூட்டு நல்வாழ்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட மாற்று சமூக நெறி சாத்தியமே என்ற நம்பிக்கையை உருவாக்குவதே இவற்றின் நோக்கமாக இருக்க வேண்டும்.
உற்பத்தி நடைபெறும் இடம்தான் தொழிலாளர் வர்க்கத்தின் தோற்றம்; ஆனால், அதுவே அதன் வாழ்வின் எல்லையல்ல. தொழிலாளர் வர்க்கம் தொழிற்சாலையில் மட்டும் வாழ்வதில்லை. குடியிருப்புகள், குடும்பங்கள், சமூகங்கள் ஆகியவற்றிலும் வாழ்கிறது. பொருளாதாரச் சுரண்டலின் மூலமாக மட்டுமல்லாமல், கல்வி, கலாச்சாரம் மற்றும் சமூக வாழ்க்கையின் பல்வேறு ஸ்தாபனங்களின் வழியாகவும் மூலதனம் தனது மேலாதிக்கத்தைச் செலுத்துகிறது. எனவே, தொழிலாளர் வர்க்கத்திற்கான மாற்று சமூக வெளியைக் கட்டியெழுப்புவது என்பது வர்க்கப் போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும். அது சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட தற்போதைய சமூக ஒழுங்கை ஒழித்து, உழைப்பின் கண்ணியத்தையும், சுரண்டப்படுவோரின் ஒற்றுமையையும், உற்பத்தியாளர்களே ஆட்சியாளர்களாக இருக்கும் சமூகத்தின் இலட்சியத்தையும் அடிப்படையாகக் கொண்ட புதிய சமூகத்தை உருவாக்கும் போராட்டமாகும்.
புதிய தலைமுறைக்கான போர்க்குணம்
உலக அளவிலும் இந்தியாவிலும் தொழிலாளர் வர்க்க இயக்கம் எப்போதும் மாற்று ஸ்தாபனங்களைக் கட்டியெழுப்பி வந்துள்ளது. மும்பை நகரில் சாவல்கள், கான்பூர் மற்றும் ஹூக்ளியின் பஸ்திகள், ஜமால்பூர் மற்றும் பெரம்பூரின் இரயில்வே காலனிகள், அசாமின் கூலி குடியிருப்புகள், ஆலப்புழையின் சங்கங்கள், ஜாரியாவின் நிலக்கரி சுரங்கக் குடியிருப்புகள் என எங்கும் தொழிலாளர் வர்க்கம் தமக்கான சொந்த ஸ்தாபனங்களை உருவாக்கியுள்ளது. அவை ஒருங்கமைப்பு, ஒற்றுமை, கூட்டு இலட்சியம் ஆகியவற்றின் கருவிகளாகச் செயல்பட்டுள்ளன.
அதே நேரத்தில், நம்முடைய இயக்கங்கள் போர்க்குணம் மிக்கதாகவும், உறுதியானதாகவும், சமரசமற்றதாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்களின் வேதனையும் கோபமும் இந்தப் போராட்டங்களில் வெளிப்பட வேண்டும். சமகால சமூகத்தின் மொழி, அதன் விருப்பங்கள், அதன் துடிப்பு ஆகியவற்றை நம்முடைய இயக்கங்கள் பிரதிபலிக்க வேண்டும்.
புரட்சிகர அரசியல் ஸ்தாபனங்கள்தான், தற்போதுள்ள சுரண்டல் சமூக அமைப்பைத் தூக்கியெறியும் ஆற்றலையும், அதே நேரத்தில் எதிர்கால சமூகத்தின் கருவுருவத்தை வளர்த்தெடுக்கும் திறனையும் கொண்டுள்ளன. எனவே, நமக்கு முன் உள்ள ஸ்தாபனப் பணி தெளிவானது. வழக்கவாதம், சடங்குத்தனம், தோல்வி மனப்பான்மை ஆகியவற்றின் சங்கிலிகளை உடைத்தெறிந்து, வெல்ல முடியாத ஆற்றலோடு முன்னேற வேண்டும். அதே நேரத்தில், புதிய தலைமுறையின் விருப்பங்களையும், எதிர்கால சமூகத்தின் கற்பனையையும் தாங்கிச் செல்லக்கூடிய மாற்று சமூக-கலாச்சார வெளியை உருவாக்கி, ஸ்தாபனங்களைப் புதிய வகையில் கட்டியெழுப்ப வேண்டும். உருவாகி வரும் புதிய அரசியலை, மாற்றத்தை நோக்கிய கருத்தியல் மையத்துடனும், அதற்கேற்ற ஸ்தாபனக் கட்டமைப்புடனும் இணைப்பதே அவற்றின் பணியாகும். நிச்சயமாக, ஒரு புதிய ஒளி தோன்றியுள்ளது. புதிய விடியலை நோக்கி நாம் அணிவகுத்துச் செல்வோம்.
‘நாம் யதார்த்தவாதிகள்! அசாத்தியங்களை கோருகிறோம்!’ என உரத்து முழங்கிடுவோம்.
தமிழில்: இரா.சிந்தன்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply