
த வெ க அரசின் தமிழக பட்ஜெட் 2026-27 குறித்து
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
அறிமுகம்
தமிழக வெற்றிக் கழக அரசின் 2026-27க்கான தமிழ்நாடு பட்ஜெட் ஆகஸ்ட் 5, 2026 அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து பலவிதமான கருத்துக்களும் விமர்சனங்களும் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இக்கட்டுரையின் நோக்கம் இவை அனைத்தையும் முன்வைத்து ஆய்வு செய்வதல்ல. மாறாக, பல ஆண்டுகளாக ஒன்றிய, மாநில அரசுகள் பின்பற்றி வரும் வரவு செலவு கொள்கைகள் தீவிர தாராளமய அணுகுமுறையை தொடர்ந்து வெளிப்படுத்துகின்றன என்பதையும், இத்துடன் கூடுதலாகவும் மிக முக்கியமாகவும் 2014 முதல் இன்றுவரை ஆட்சியில் தொடரும் பாஜக ஒன்றிய அரசுதான் இதற்கான முதல் குற்றவாளி என்பதையும் இக்கட்டுரை விளக்குகிறது.
வழக்கமான தாராளமய பட்ஜெட்
பல ஆண்டுகளாக திராவிட கட்சி அரசுகள் சமர்ப்பித்துவரும் மாநில பட்ஜெட்டுகளுக்கும் தவெக அரசின் பட்ஜெட்டுக்கும் அணுகுமுறை மற்றும் உள்ளடக்கத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இல்லை. முந்தைய தமிழக பட்ஜெட்டுகளில் உள்ள நவ தாராளமய அணுகுமுறை தொடர்கிறது. தனியார் துறையுடன் இணைந்து பல திட்டங்கள் அரசால் மேற்கொள்ளப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளது பட்ஜெட்டின் தாராளமய அணுகுமுறையை முன்பை விட அழுத்தமாகவும் வெளிப்படையாகவும் முன்வைக்கிறது. பல்வேறு துறைகளுக்கான அரசின் ஒதுக்கீடுகளை பொருத்தவரையில் மொத்தத்தில் குறிப்பிடத்தக்க பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. சில துறைகளுக்கு கடந்த ஆண்டை விட சற்று கூடுதல், வேறு சிலவற்றிற்கு சற்று குறைவு என்ற வகையில்தான் துறைவாரி ஒதுக்கீட்டு விவரங்கள் உள்ளன. வரவேற்கத்தக்க அம்சங்களும் உள்ளன. காலை உணவு திட்டம் ஆறு முதல் எட்டு வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது ஒரு எடுத்துக்காட்டு. தவெக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை இந்த பட்ஜெட் நிறைவேற்றாது. இதுவும் கடந்த கால நிகழ்வுகளை போலத்தான். பட்ஜெட் உரையில் சாராய துறை மீதான புதிய வரி மூலம் ரூ 1,000 கோடியும், தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி “முகம் காணா வரி மதிப்பீடுகள்” (“faceless assessments”) மற்றும் இதர முயற்சிகள் மூலம் ரூ 15,000 கோடியும் கூடுதலாக வரிவசூல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மை உறுதியல்ல.
தவெக ஆட்சிக்கு வந்தவுடன் வெளியிட்ட தமிழக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை, கடந்த அரசுகள் மாநில அரசின் சுய வரி வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்யவில்லை என்றும், அதிகரித்து வந்த செலவுகளை அதிகமாக கடன் வாங்கியே எதிர்கொண்டதென்றும், இதனால் மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது என்றும் கூறியது. ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய நிதிகளைக்கூட அளிக்காமலும், புதிய செலவு சுமைகளை மாநிலங்கள் மீது சுமத்திவருவதையும், அவ்வறிக்கை வலுவாக பேசவில்லை. அரசுகள் கடன் வாங்குவதே தவறு என்ற முற்றிலும் தவறான, நவ தாராளமய கொள்கை வெளிப்பாடாகவே அந்த வெள்ளை அறிக்கை அமைந்தது. தாராளமய கொள்கைகள் மற்றும் ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையிலான நிதி உறவுகள் பற்றி சரியான பார்வை தமிழக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையில் இல்லை. .
நடப்பு செலவு பற்றாக்குறை ஏன்?
இந்திய அரசியல் சாசனம் வருமான வரி விதிக்கும் உரிமையை ஒன்றிய அரசுக்கு மட்டுமே அளித்துள்ளது. தனி நபர் வருமான வரி, கார்ப்பரேட் வருமான வரி ஆகிய இரண்டு வகை வருமான வரி விதிப்பை ஒன்றிய அரசு மட்டுமே செய்ய முடியும். அதே சமயம், இந்திய அரசியல் சாசனம் மாநிலங்களுக்கு அதிகமான பொறுப்புகளும் பணிகளும் உள்ளன என்பதையும், மாநில அரசுகளின் வரி விதிப்பு உரிமைகள் குறுகிய எல்லைகளுக்கு உட்பட்டு இருப்பதால், மாநில அரசுகளால் நடப்பு வருமானத்திற்குள் நின்று அவை மேற்கொள்ள வேண்டிய செலவுகளை மேற்கொள்ள இயலாது என்பதையும் கணக்கில் கொண்டு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒன்றிய அரசு நிதி ஆணையம் ஒன்றை அமைத்து, அதன் மூலம் மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட மானியங்கள் தர வேண்டும் என்று பணித்துள்ளது. மேலும் ஒன்றிய அரசு பெரும் மொத்த வருமான வரிகள் மற்றும் இதர மறைமுக வரிகள் (சுங்க வரி, கலால் வரி, இதரவை) மூலம் கிடைக்கும் வரி வருமானத்தை ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் பகிர்ந்து கொள்வதற்கான கோட்பாடுகளையும் நிதி ஆணையம் பரிந்துரைக்க வேண்டும் என்றும் அரசியல் சாசனம் பணித்துள்ளது. இதிலேயே கவனிக்க வேண்டிய ஒரு ஜனநாயக பற்றாக்குறை உண்டு. நிதி ஆணையத்தின் உறுப்பினர்களை முடிவு செய்வதும் அதன் பணிக்கான அம்சங்களை (Terms of reference) முடிவு செய்வதும் ஒன்றிய அரசுதான். இதில் மாநில அரசுகளுக்கு எந்தப் பங்கும் இல்லை. இத்தகைய குறைபாடுகள் இருந்தாலும் மாநிலங்களுக்கு குறைந்த நிவாரணத்தை இந்த ஏற்பாடு அளித்துவந்தது. ஆனால் பதினாறாம் நிதி ஆணையம் வருவாய் பற்றாக்குறை மானியங்களை மொத்தமாக நீக்கியுள்ளது. இது கடும் கண்டனத்திற்கு உரியது.
இந்த மேற்கூறிய அம்சங்கள் எதையும் கணக்கில் கொள்ளாமல், தவெக அரசின் வெள்ளை அறிக்கை, மாநிலம் எதிர்கொள்ளும் நிதி பிரச்சினைகளுக்கு, வருவாய் பற்றாக்குறைக்கு, மாநில அரசை மட்டுமே குறை சொல்வது ஏற்கத்தக்கதல்ல. மேலும், மோடி அரசு பன்னிரண்டு வருடங்களாக மேற்கொண்ட பணமதிப்பிழப்பு, மோசமான சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் மற்றும் அதி தீவிர தாராளமய கொள்கைகள் ஆகியவற்றால் நாட்டின் வளர்ச்சியும் மாநிலத்தின் வளர்ச்சியும் கடுமையாக பாதித்துள்ளன. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் செல்வந்தர்களுக்கும் முதலீடுகள் மேற்கொள்ள ஊக்குவிப்பு என்ற கதையாடல் மூலம் தொடர்ந்து வருமான வரி சலுகைகளை ஒன்றிய அரசு பட்ஜெட் வழங்கி வருகிறது. இதனால் மாநிலங்களுக்கு ஒன்றிய-மாநில பகிர்வு அடிப்படையில் கிடைக்க வேண்டிய வரி வருமானமும் (Tax sharing via divisible pool) இழக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் புறந்தள்ளி, மாநில அரசு மட்டுமே அரசு சந்திக்கும் நிதி நெருக்கடிக்கு காரணம் என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல.
தீவிர நவதாராளமயம்
ஒன்றிய அரசிடம் அதிகாரங்களும் நிதிகளும் மையப்படுத்தப்படுவது மாநில அரசுகளின் பட்ஜெட்களை கடுமையாக பாதிக்கின்றன என்பதோடு இன்னொரு அடிப்படை பிரச்சினையும் உள்ளது. ஒன்றிய அரசு தீவிர நவ தாராளமய கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வருவதை நாம் அறிவோம். இதனால் பட்ஜெட்டுகளில் சிக்கன நடவடிக்கை (austerity ) என்ற அணுகுமுறை ஆதிக்கத்தில் உள்ளது. இதற்கு 2003 நிதி ஆண்டில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக/தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சட்டவடிவம் கொடுத்தது. அதுதான் ஃபிஸ்கல் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (FRBM) சட்டம். இதன்படி இந்த சட்டம் அமலுக்கு வந்த நாளில் இருந்து ஐந்து ஆண்டுகள் ஆகும்பொழுது ஒன்றிய அரசின் ஃபிஸ்கல் பற்றாக்குறை தேச உற்பத்தி மதிப்பில் (GDP) 3 % க்கு மிகாமல் இருக்கவேண்டும். ஒன்றிய அரசின் வருவாய் பற்றாக்குறை முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதன் பொருள் என்ன? ஃபிஸ்கல் பற்றாக்குறை என்பது அரசின் மொத்த செலவில் இருந்து கடன் அல்லாத வரவுகளை கழித்தால் கிடைக்கும் தொகை. இதை தேச உற்பத்தி மதிப்பில் 3%க்கு குறைக்கவேண்டும் என்று சொல்கிறது இச்சட்டம். அரசு கடன் வாங்கி வளர்ச்சிக்கான முதலீடுகளை மேற்கொள்ளக் கூடாது என்பதே இதன் பொருள். இந்த நாட்டில் அனைத்து முதலாளிகளும் அரசு உடமையாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து கடன் வாங்கி முதலீடுகள் செய்யலாம், ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கடன் வாங்கினால் அதனை அனுமதிக்க முடியாது என்று சொல்வது எவ்வளவு ஜனநாயக விரோதமானது? இதே வரம்புகள் மாநில அரசுகள் மீதும் திணிக்கப்பட்டுள்ளன. நாம் காண்பது என்ன? தனியார் பெருமுதலாளிகள் ஏராளமான அளவில் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து கடன் வாங்க அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் செலுத்த வேண்டிய கடன் தொகைகளில் பத்து லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுபக்கம், மத்திய, மாநில அரசாங்கங்கள் மக்கள் தேவைக்காக, வளர்ச்சிக்காக முதலீடு செய்வதற்கு FRBM சட்டம் வாயிலாக தடை விதிக்கப்படுகிறது.
அரசு கடன் வாங்கக் கூடாது, அரசு செலவு செய்யக் கூடாது என்ற வாதத்தின் பின்னால் உள்ள தத்துவம் இரண்டு கருதுகோள்களின் பின்புலத்தில் முன்வைக்கப்படுகிறது. ஒன்று, ஒரு முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் எல்லா வளங்களும் பயன்பாட்டில் உள்ளதுதான் மாமூல் நிலை (Assumption of full employment) என்று இந்த வாதம் கருதுகிறது. இரண்டாவதாக, “அரசை விட தனியார்தான் வளங்களை சரியாக முதலீடு செய்ய முடியும்” என்றும் நவ தாராளமய வாதம் கருதுகிறது. உண்மையில், FRBM சட்டம் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய முட்டாள் தனமான சட்டம் ஆகும். இதன் பொருள் “அரசுகள் வரைமுறையின்றி செலவு செய்யலாம், கடன்படுவதை பற்றி கவலை கொள்ள வேண்டாம்” என்பது அல்ல. கள நிலமைகளையும் மக்கள் நலனையும் கணக்கில் கொண்டு வரவு – செலவு கொள்கைகள் அமைய வேண்டும் என்பதுதான். மேலும், செலவை குறைத்து மட்டுமே பற்றாக்குறை எதிர்கொள்ளப்படவேண்டும் என்ற கோட்பாடும் ஏற்புடையதல்ல. பெரும் கம்பெனிகள் மீதும் செல்வந்தர்கள் மீதும் தக்க வரிகள் விதிப்பதும் இயற்கை வளங்களை தனியார் பயன்பாட்டிற்கு அனுமதிக்கும் பொழுது தக்க கட்டணங்கள் விதிக்கப்படவேண்டும் என்பதும் ஏற்புடையதே.
மாநில அரசுகளுக்கு வருமான வரி விதிக்கும் அதிகாரம் இந்தியா அரசியல் சாசனத்தில் தரப்படவில்லை என்பதை ஏற்கனவே குறிப்பிட்டோம். சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் வந்த பிறகு பெட்ரோல், டீசல், புகையிலை மற்றும் சாராயம் ஆகிய நான்கு பொருட்களுக்கு மட்டுமே விற்பனை வரி விதிக்கும் உரிமை மாநில அரசிடம் உள்ளது. இத்தகைய சூழலில் அரசியல் சாசனம் பணித்துள்ளபடி மாநிலங்களுக்கான வருவாய் பற்றாக்குறை மானியங்களை நாம் போராடிப் பெற வேண்டும். ஒன்றிய அரசின் வரிவிதிப்பு கொள்கைகளை எதிர்த்து கார்ப்பரேட் லாப வரி விகிதங்களை உயர்த்த கோர வேண்டும். செல்வந்தர்கள் மீதான வருமான வரி விகிதங்களை உயர்த்துவதன் அவசியத்தை விளக்கி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். பெரும் செல்வந்தர்கள் மீதான செல்வ வரி நீக்கப்பட்டுள்ளதை எதிர்த்து நாடு தழுவிய பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். பதினாறாம் நிதி ஆணையத்தின் மோசமான மக்கள் விரோத பரிந்துரைகளை எதிர்த்து மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.
தற்போது தமிழகத்தின் ஆட்சி பொறுப்பில் உள்ள அரசு நவ தாராளமய கொள்கைகளை எதிர்க்க வேண்டும். ஒன்றிய – மாநில நிதி உறவுகளை ஜனநாயக திசை வழியில் மாற்றிட பிற மாநில அரசுகளுடன் இணைந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மாநில அரசு ஏற்கெனவே முன்வைத்துள்ள தமிழக அரசின் நிதி நிலைமை பற்றிய வெள்ளை அறிக்கை ஏற்புடையது அல்ல.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply