
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 – சில குறிப்புகள்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
அறிமுகம்
வரும் ஏப்ரல் 23 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஊடகங்களிலும் வீதிகளிலும் வீடுகளிலும் தேர்தல் பற்றிய செய்திப் பகிர்வுகளும் விவாதங்களும் அரசியல் பிரச்சாரங்களும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி, ஆர்எஸ்எஸ் – பாஜக பிடியில் உள்ளது. அதில் இடம்பெறும் கட்சிகளில் அதிமுகதான் வலுவான கட்சி என்றாலும், ஒன்றிய அரசை தலைமை தாங்கி நடத்தும் கட்சியான பாஜகவிற்கு கட்டுப்பட்டே, அதிமுக உள்ளிட்ட இதர என்டிஏ கட்சிகள் செயல்படும் நிலை உள்ளது. 2014இல் இருந்து ஒன்றிய அரசை கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு உத்திகளையும் பயன்படுத்தி தன்வசம் வைத்திருக்கும் ஆர்எஸ்எஸ் – பாஜக ஆட்சி நாடு முழுவதும் மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளதை நாம் அறிவோம். சென்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் தோல்வி அடைந்ததை போலவே, இந்த முறையும் வரவிருக்கும் தேர்தலிலும் அந்த அணியை தோற்கடிக்க வேண்டிய பொறுப்பு, மதசார்பற்ற சக்திகளுக்கு உண்டு. திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல மதசார்பற்ற அரசியல் கட்சிகள், இப்பணியை நிறைவேற்ற களம் இறங்கியுள்ளன. இக்கட்சிகள் வரும் சட்டப்பேரவை தேர்தலில் என்டிஏ கூட்டணியை கடும் தோல்வி அடையச் செய்யும் என்பதில் ஐயமில்லை.
பெரும் துயர் பாஜக ஆட்சி
நரேந்திர மோடியை பிரதமராக கொண்ட பாஜக தலைமையிலான கூட்டணி அரசு ஏறத்தாழ 12 ஆண்டுகளாக பேயாட்சி செய்துவருகிறது. 2014இல் ஒன்றிய ஆட்சி பொறுப்புக்கு வந்த நாள் முதல், ஒருபுறம் மதவெறியை கட்டவிழ்த்து விட்டு, பிற மதத்தினர் மத்தியில், முஸ்லிம் மதச் சிறுபான்மையினர் மீது வெறுப்புணர்வை உருவாக்கியும், தீவிரப்படுத்தியும் வருகிறது. இது பாஜக ஆட்சியின் ஒரு கொள்கை தூண். இதன் இன்னொரு தூண், கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு வரி குறைப்பு, பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி, தொழிலாளர் உரிமைகளை பறித்து முதலாளிகளுக்கு சேவகம் செய்வது, பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு பட்டுக்கம்பளம் விரித்து வெண்சாமரம் வீசுவது, இந்திய விவசாயிகளையும் விவசாயத்தையும் பன்னாட்டு ஏகபோக கம்பெனிகளிடம் ஒப்படைப்பது ஆகியவை உள்ளிட்ட, கள்ளக் கூட்டு முதலாளித்துவ பாதையில் பயணிப்பதாகும். மறுபுறம், சிறு, குறு தொழில்முனைவோர், சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள், ஊரக உடல்உழைப்பு தொழிலாளிகள், கடும் வேலையின்மை பிரச்சினையில் தவிக்கும் இளைஞர்கள், பழங்குடியினர், பட்டியல்இன மக்கள், பெண்கள் மற்றும் இதர விளிம்புநிலை மக்கள், தொழிலாளி வர்க்கத்தினர் என்று நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 90% பேருக்கு அரசின் பொருளாதார கொள்கைகளும் சமூக கொள்கைகளும் பெரும் துயரத்தைத்தான் அளித்து வந்துள்ளன.
2014 முதல் 2016 வரை பன்னாட்டு சந்தைகளில் பெட்ரோலியம் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து பெருமளவு குறைந்தபோதிலும், அதன் பயனை மக்களுக்கு விலைக்குறைப்பு மூலம் தர மறுத்த ஒன்றிய அரசு, கச்சா எண்ணெய்க்கு கூடுதல் கலால் வரி விதித்து மொத்தமாக ஒன்றிய அரசு கணக்கில் எடுத்துக்கொண்டது. கூடுதல் கலால் வரி, சர்சார்ஜ், செஸ் வரி மூலம் கிடைக்கும் வரி வருமானத்தை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் ஒன்றிய அரசே தன்வசம் வைத்துக்கொள்ளலாம்! இதைத்தான் பாஜக ஒன்றிய அரசு செய்தது. பின்னர் 2016 நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இந்த தவறான செயல், நாட்டின் பொருளாதாரத்தை, குறிப்பாக விவசாயம் உள்ளிட்ட முறைசாராத் துறைகளை, பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து, 2017 ஜூன் 30இல் முன்பின் முரணான, மக்கள்மீதான பெரும் தாக்குதலாக ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமைந்தது. ஜிஎஸ்டி, ஜனநாயகத்திற்கும் மாநில உரிமைகளுக்கும் வேட்டு வைத்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் வரிக்கொள்கைகளை செயலற்றதாக ஆக்கி, வரி அதிகாரங்களை பெருமளவிற்கு ஒன்றிய அரசிடம் ஒப்படைத்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் ஜிஎஸ்டி அமலாக்கமும் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் பெரும் சரிவை ஏற்படுத்தியது. அது மட்டுமல்ல. வேலையின்மை பிரச்சினை மேலும் தீவிரமானது. எனினும், தனது பணபலம், அதிகாரக்குவிப்பு, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை மற்றும் ஆர்எஸ்எஸ் முகாமின் மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் உத்திகள், தேர்தல் நெருக்கத்தில் பாஜக அரசு அறிவித்த சலுகைகள் (எடுத்துக்காட்டாக, பிரதமர் கிசான் திட்டம்), 2019 பிப்ரவரியில் காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40 மத்திய காவல்துறை வீரர்கள் பலியான நிகழ்வைப் பயன்படுத்திக் கொண்டு, தேசபக்தி பிரச்சாரத்தைக் கட்டியெழுப்பியது போன்ற பல காரணங்களால் பாஜக 2019 தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தல்வெற்றியை தொடர்ந்து, பாஜக அரசின் தவறான கொள்கைகளின் மக்கள் விரோத விளைவுகள் கடுமையான பொருளாதார மந்தநிலையை 2019 பிற்பகுதியில் ஏற்படுத்தின. அதற்கு அரசின் எதிர்வினை ஒருபுறம் பெரும்பகுதி மக்களை மேலும் நெருக்கடியில் ஆழ்த்தியது; மறுபுறம் கார்ப்பரேட்டுகளுக்கும் பெரும் செல்வந்தர்களுக்கும் ஒன்றிய அரசு வரிச்சலுகைகளை வாரி வழங்கியது. அந்நிய முதலீட்டை ஈர்ப்பது என்ற நோக்கத்துடன் பன்னாட்டு பெரும் கம்பெனிகளுக்கு பல புதிய சலுகைகள் தரப்பட்டன. இவையெல்லாம் வளர்ச்சியில் பெரும் மீட்சியை ஏற்படுத்தவில்லை. அரசின் மற்றொரு முனைவு சிறந்த பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு தனியாரிடம் விற்பது என்ற அழிவுச்செயலாக இருந்தது. வளர்ச்சி விகிதத்தில் மீட்சி ஏற்படவில்லை என்பது மட்டுமல்ல; வேலையின்மை பூதாகரமாக அதிகரித்தது.
கோவிட் காலமும் அதன் பின்பும்
இத்தகைய தருணத்தில் 2020 துவக்கத்தில் கொரோனா தொற்று நாட்டு மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியது. கோடிக்கணக்கில் புலம்பெயர் தொழிலாளிகளை உணவும் தங்கும் வசதியும் போக்குவரத்துக்கான ஏற்பாடும் இன்றி தவிக்க விட்டது. கோவிட் தொற்று பரவாமல் இருக்க பல மாநில அரசுகள் முயற்சி எடுத்தன. ஆனால் ஒன்றிய அரசின் முன்னறிவிப்பற்ற, நாடு தழுவிய நாட்டடங்கு நடவடிக்கை, பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கியது. அனைவருக்கும் தடுப்பூசி போட நிதி உதவியோ மாற்று ஏற்பாடுகளோ செய்ய ஒன்றிய அரசு உடனடியாக முன்வரவில்லை. அத்துயர சூழலில் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, மாநிலங்களுக்கு உரிய ஆதரவு அளிப்பதற்குப் பதில், அதிகாரங்களையும் நிதி வளங்களையும் மேலும் தன்னகத்தே மையப்படுத்தி, மாநிலங்களை ஆதரவற்று நிறுத்தியது. மாநிலங்களுக்கு உதவ மறுத்த ஒன்றிய அரசு, அதிக வட்டி விகிதத்தில் கடன் வாங்கி கோவிட் சவாலை சந்திக்கும் நிலைக்கு, மாநில அரசுகளை தள்ளியது. விவசாயிகளை, பன்னாட்டு – இந்நாட்டு கார்ப்பரேட் கைகளில் ஒப்படைக்கும் தன்மையிலான மூன்று வேளாண் சட்டங்களை, அவசரஅவசரமாக பாராளுமன்ற விதிகளுக்கு புறம்பாகவே, ஒன்றிய அரசு நாட்டின்மீது திணித்தது. கோவிட் காலத்தில் ஒன்றிய அரசு நடவடிக்கைகள் தொற்று உருவாக்கிய சவால்களை எதிர்கொள்ள தவறியது. மாநிலங்களுக்கு உரிய முறையில் உதவவில்லை என்பதோடு ஒன்றிய அரசின் மேலாதிக்கத்தை பலவழிகளில் திணித்தது என்பதை “புதிய கல்வி கொள்கை” திணிப்பில் காணலாம். மாநில ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளை செயல்படவிடாமல் தடுத்த முனைவுகளிலும் பார்க்கலாம்.
2024 தேர்தலில் பாஜக சரிவு
தனது முதல் பத்தாண்டு கால ஆட்சியில் பாஜக ஒன்றிய அரசு எடுத்த பல தவறான நடவடிக்கைகளையும் நாசகர கொள்கைகளையும் நாம் மேலே கண்டோம். இவற்றால் 2024 மக்களவை தேர்தலில் பாஜக செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு சரிந்தது. எனினும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையும், பாஜக அரசின் அதிகார அத்துமீறல்களும், தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஒன்றிய ஆட்சியை கைப்பற்ற வழிவகுத்தன. மூன்றாம் பாஜக அரசு வகுப்புவாத மதவெறி கொள்கைகளை தீவிரமாக அமலாக்கி வருகிறது. பொருளாதார வளர்ச்சி பற்றி பொய்யான புள்ளிவிவரங்களை முன்வைத்து, இந்தியா வேகமாக வளர்ந்துவரும் நாடு என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறது.
இத்தகைய அரசு முனைவுகள் மக்களின் அன்றாட வாழ்க்கை அனுபவங்களுக்கு நேர்மாறாக உள்ளதால், அவற்றின் நம்பகத்தன்மை பெரிதும் சரிந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. மாநிலங்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள் தற்கொலைகள் தொடர்கின்றன. ஒன்றிய அரசு முன்னெடுத்துவரும் தொழிலாளர் விரோத முனைவுகள், ஊரக வேலை உறுதி சட்டத்தை அழித்தொழித்தது, வீரம் செறிந்த ஓராண்டுக்கும் மேலான போராட்டத்தின் (600க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர் தியாகம் செய்த போராட்டத்தின்) மூலம் தூக்கி எறியப்பட்ட ஒன்றிய அரசின் மக்கள் விரோத சட்டங்களை, கொல்லைப்புற வழியாக மீண்டும் கொண்டுவரும் ஒன்றிய அரசின் நரித்தனம், விவசாயிகளுக்கும் இந்தியாவின் சிறு, குறு முதலாளிகளுக்கும் எதிரான கொள்கைகள், குறிப்பாக ஏகாதிபத்திய முகாம் நாடுகளுடன் போடப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள், அமெரிக்காவுடன் போடப்படவுள்ள வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்க வல்லரசின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து அமலாக்கப்படும் எரிபொருள் தொடர்பான கொள்கைகள், உலக வங்கி, பன்னாட்டு நிதியம் பரிந்துரைக்கும் மோசமான, உணவு, உரம் மற்றும் எரிபொருள் மானியங்களை வெட்டுவது, செல்வந்தர்களுக்கும் இந்நாட்டு, பன்னாட்டு பெரு முதலாளிகளுக்கும் வரிச்சலுகைகளை வாரி வழங்குவது உள்ளிட்ட அனைத்தும் இந்தியாவின் இறையாண்மைக்கு விரோதமாக உள்ளன.
இவற்றையொட்டி பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து வரும் இஸ்ரேல் நாட்டுடன் ராணுவ, அரசியல் பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் கொள்கை, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போர் தொடுத்துள்ள சூழலில், அவர்களை கண்டிப்பதற்குப் பதில், வளைகுடா நாடுகளில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவ தளங்கள் மீதான ஈரானின் தாக்குதலை மட்டும் ஒருதலைபட்சமாக கண்டிப்பது போன்ற அப்பட்டமான ஏகாதிபத்திய ஆதரவு கொள்கைகளை பின்பற்றிவரும் பாஜகவையும், அதனுடன் இணைந்து ஓரணியில் நிற்கும் அஇஅதிமுக உள்ளிட்ட கட்சிகளையும், வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தோற்கடிப்பது நம்முன் உள்ள முக்கிய ஜனநாயக கடமையாகும். மாநிலங்களின் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் பாஜகவின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் அஇஅதிமுக எதிர்ப்பதில்லை. பாஜக -அஇஅதிமுக அணியில் உள்ள பிற கட்சிகளும் எதிர்ப்பதில்லை. இந்த அணி தமிழகம் முழுவதும் தோல்வி அடைவதை உறுதிப்படுத்துவது, திமுக மற்றும் அதை ஆதரித்து உடன் களம் காணும் அனைத்து கட்சிகளின் கடமையாகும்.
இடதுசாரிகளின் முக்கியத்துவம்
தமிழகத்தில் ஆட்சி நடத்திவரும் திமுகவுடன் தொகுதி உடன்பாடு கண்டு நாம் இத்தேர்தலில் போட்டியிடுகின்றோம். நமது பிரதான கடமை பாஜக- அஇஅதிமுக கூட்டணியை வலுவாக தோற்கடிப்பதுதான். அதேசமயம், தேர்தல் களம் நமது கொள்கைகளை முடிந்த அளவிற்கு மக்களிடம் நாம் கொண்டு செல்ல பொருத்தமான ஒரு வாய்ப்பாகும். தமிழகத்தில், திமுக அரசு பொதுவாக நவீன தாராளமய பொருளாதார கொள்கைகளை பின்பற்றினாலும், பல நலத்திட்டங்களையும் அமலாக்கி வருகிறது. குறிப்பாக, இத்தகைய முனைவுகள், கல்வி, உடல்நலம் போன்ற துறைகளில் ஓரளவு மக்களுக்கு பயன் அளித்துள்ளன. எனினும் விவசாயிகள், தொழிலாளி வர்க்கம் உள்ளிட்ட உழைப்பாளி மக்கள் நலன் மற்றும் உரிமைகள் என்று வருகின்றபொழுது திமுக அரசின் தாராளமய அணுகுமுறைக்கும் நமது அணுகுமுறைக்கும் சில அடிப்படை வேறுபாடுகள் உள்ளன. உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் மேம்பாட்டுக்காகவும் நாம் முன்பின் முரணின்றி போராடி வருகிறோம். மாநில உரிமைகள் என்பதில் நமது நிலைபாடும் திமுக நிலைபாடும் பெருமளவில் முரண்படுவதில்லை என்றாலும், உள்ளாட்சி ஜனநாயகம் பற்றி நமக்கு சிறப்பான அனுபவமும் சாதனைகளும் உண்டு. நமது தலைமையிலான கேரள மாநில அரசின் பல சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல, மக்களுடனான தேர்தல் கால உரையாடல்களும் கருத்துப் பகிர்வும் உதவும். கேரளத்தின் தீவிர வறுமை ஒழிப்பு சாதனை, உள்ளாட்சி ஜனநாயகம், குடும்பஸ்ரீ அனுபவம், பாலின சமத்துவ கொள்கைகள் போன்றவை தமிழகத்தில் பேசுபொருளாவதற்கும் நமது தேர்தல் பணிகள் உதவக்கூடும்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply