
ஆட்சி மாற்றம் 2026 : மக்களின் அதிருப்தியும் மாற்றத்திற்கான தேடலும் !
உ.வாசுகி
ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில், கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி தோல்வியடைந்ததும், மேற்கு வங்கத்தில் அறுதி பெரும்பான்மையோடு பாஜக ஆட்சியைப் பிடித்திருப்பதும், அசாம் – பாண்டிச்சேரியில் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றியடைந்திருப்பதும் ஓர் ஆபத்தான போக்கை வெளிப்படுத்துகிறது. இவற்றுக்கான காரணிகளைப் புரிந்து கொண்டு, இந்த ஆபத்தை எதிர் கொள்வது அவசியமாகும்.
இதில் தமிழகத்தின் நிலை சற்று வித்தியாசமானது. ஓர் ஆழமான ஆய்வுக்குத் தகுதியானதும் கூட. ஏனெனில், தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வெற்றி ஓர் அடிப்படை மாற்றத்தைக் குறிக்கிறது என்கிற ரீதியில் அளவு கடந்த புகழ்ச்சி ஒரு புறம்; சினிமா கவர்ச்சி, சமூக ஊடக உத்திகளைக் தவிர வேறெதுவும் இல்லை என்கிற மேலோட்டமான பார்வை மறுபுறம். இந்த இரண்டு விதத்தில் மட்டும் விளக்க முடியாத, எளிதில் கடந்து போய்விட முடியாத அம்சமாக இது உள்ளது.
மாற்று என்பது நபர் சார்ந்தது அல்ல
இது தமிழகத்தில் மட்டும் நடந்த தனித்த விஷயமா என்றால் இல்லை. இந்தியாவில் தொடக்கத்தில் நிலவிய ஒற்றை காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக பிரதேச முதலாளித்துவ கட்சிகள் அந்தந்த மாநில மக்களின் விருப்பங்களை, கனவுகளை உள்ளடக்கிய முழக்கங்களைக் கையில் எடுத்தன. அதில் ஜனநாயக உள்ளடக்கம் இருந்தது. 1967இல் திமுக, அகாலி தளம் உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தன.
அதற்குப் பின்னர் பல கட்டங்களில், அவற்றைத் தோற்கடித்து, வேறு சில பிராந்திய முதலாளித்துவ கட்சிகள் அரசாங்கம் அமைத்த வரலாறும் நடந்துள்ளது. சில சமயம், ஒரு கட்சியில் இருந்து ஒரு பிரிவு தனியாகச் சென்று புதிய முழக்கத்தை அல்லது புதிய முகத்தை முன்னிறுத்தி வெற்றி பெற்றதும் நடந்திருக்கிறது. அஇஅதிமுக இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
இவையெல்லாம் மாற்றங்களே தவிர மாற்று அல்ல. ஏனெனில் எந்தக் கொள்கையை விமர்சித்து ஆட்சியைப் பிடிக்கிறார்களோ, அதே முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கொள்கையைத்தான் ஆட்சிக்கு வந்ததும் புதிய கட்சியும் கடைப்பிடிக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது, அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து விடுவோம் என சொன்னாலும், ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றைத் தீர்க்க முடியாததற்கான காரணம், அடிப்படையில் அதே கொள்கைகள் தொடர்வதுதான். தீர்வை உள்ளடக்கிய மாற்றுக் கொள்கைகள் கடைபிடிக்கப்படுவதில்லை. பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்கிற லட்சியமும் இல்லை.
மாற்று என்பது நபர் மற்றும் கட்சி சார்ந்தது அல்ல. அரசியல் மற்றும் கொள்கை சார்ந்தது. எனவேதான் ஆட்சி மாறினாலும் நிலைமை மாறுவதில்லை.
அப்படியானால், இடதுசாரிகளின் பின்னடைவு ஏன்?
இந்தியாவில் மேற்கு வங்கம், திரிபுரா, கேரளம் ஆகிய மாநிலங்களில் இடதுசாரி அரசாங்கத்திற்குக் கூட, ஏன் மாற்றத்தை மக்கள் தேடுகிறார்கள் என்கிற கேள்வி எழுகிறது. மேற்கு வங்கத்தில் திர்ணாமூல் காங்கிரஸோ, திரிபுராவில் பாஜகவோ, கேரளாவில் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியோ வெற்றி பெற்றாலும், இடதுசாரிகளை விட மேம்பட்ட ஆட்சியை அவர்களால் கொடுக்க இயலவில்லை. ஏனெனில் இடதுசாரி கொள்கைகளை விட மேம்பட்ட கொள்கைகள் அவர்களிடம் இல்லை. எனவே, இடதுசாரிகளின் தோல்விக்குப் பல்வேறு புறக் காரணங்கள், அகக் காரணங்கள் உண்டு. சுரண்டும் வர்க்கங்களின் கூட்டு மற்றும் கூட்டணி, கார்ப்பரேட் ஊடகங்கள், சாதிய – மதவாத அமைப்புகளின் பங்கு, பிற்போக்கு சக்திகளின் ஒருங்கிணைப்பு போன்றவற்றைப் புறக் காரணிகள் என சொல்லலாம். ஒன்றிய அரசு அனைத்து அதிகாரங்களையும் குவித்து வைத்துக் கொண்டு மாநில அரசாங்கங்களின் கைகளைக் கட்டிப்போட்டு விட்டு, மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அவர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள் என்கிற தோற்றம் உருவாக்கப்படுகிறது. குறுகிய அதிகார வரம்புக்குள் மாநில அரசாங்கங்கள் அதிகம் செய்ய முடியாது என்பதும் இதில் உள்ளது.
கட்சி அமைப்பின் பலவீனங்கள், வர்க்க வெகுஜன அமைப்புகளின் லட்சக்கணக்கான உறுப்பினர்களை அரசியல்படுத்துவதில் உள்ள குறைபாடு, கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் நிகழ்த்தப்படும் இடதுசாரி அரசாங்கத்தின் சாதனைகளை அல்லது எடுக்கப்படும் கொள்கை நிலைபாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் போதாமை உள்ளிட்டவற்றை அகக் காரணிகள் என சொல்லலாம்.
நேபாளத்தின் நிலைமை
அண்டை நாடான நேபாளத்தில் முடியாட்சிக்கு முடிவு கட்டி, குடியரசு உருவானதில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது போன்றவை எல்லாம் முன்னேற்றகரமான அம்சங்களே. இருந்தாலும் அங்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் தோற்கடிக்கப்பட்டன? சந்தர்ப்பவாதக் கூட்டணிகளை அமைத்தது, மக்களின் அடிப்படை பிரச்சனைகளான நிலம் மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமாக போதுமான நடவடிக்கைகள் எடுக்காதது, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே கடும் கருத்து வேறுபாடுகள், கட்சிகளுக்குள் சித்தாந்த ஒற்றுமை இல்லாதது போன்றவை மக்களை நம்பிக்கை இழக்க வைத்தன. அதாவது, கம்யூனிச கோட்பாடுகளை அமல்படுத்தியதால் எழுந்த பிரச்சனை அல்ல; மாறாக, அவற்றிலிருந்து வழுவியதால் ஏற்பட்ட பிரச்சினைகள்..
அங்கு ஜென்-சி எனப்படும் புதிய தலைமுறை இளைஞர்கள் இடையே உருவாகிய எதிர்ப்பு மனநிலையின் அடிப்படை, வேலையின்மை சூழலே ஆகும். அண்மையில் நேபாளத்தில் நடந்த தேர்தலில் 40 வயதுக்கும் குறைவான பல வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நெருக்கடி சூழலைப் பயன்படுத்தி, பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்துள்ள ராஷ்ட்ரிய சுதந்திர கட்சி, வந்தவுடனேயே தனது வர்க்க முகத்தைக் காட்டியது. ஆட்சி அமைத்த பின் உடனடியாக சில குறிப்பிட்ட துறைகளில் (பொதுத்துறை, அரசுத்துறை, சிவில் சர்வீஸ், நீர் விநியோகம், மருத்துவ துறை) தொழிற்சங்கங்கள் தடை செய்யப்படுவதாக அவசர சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. இது சர்வதேச தொழிலாளர் நல சட்டங்களுக்கு மட்டுமல்ல; நேபாளத்தின் அரசியல் சட்டத்திற்கே விரோதமானது. இந்தத் தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளை சார்ந்தவை என்கிற காரணம் அரசாங்கத்தால் முன் வைக்கப்படுகிறது. உண்மை என்னவென்றால், இந்தத் துறைகளைத் தனியார் மயமாக்கும்போது அங்கு வலிமையான தொழிற்சங்கங்கள் இருந்தால், அதற்குத் தடை ஏற்படும் என்பதற்காக அவற்றை ஒழித்துக் கட்டும் ஏற்பாடே இது. போராடிப் பெற்ற கூட்டு பேர உரிமையைப் பறிக்கும் முயற்சிதான் இது. முதலில் இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், பின்னர் அரசின் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்து விட்டது.
மேற்கூறிய அவசர சட்டம், அரசியல் கட்சிகளுடன் இணைக்கப்பட்ட மாணவர் அமைப்புகளையும் தடை செய்தது. கல்வி நிலையங்களை அரசியல் கட்சிகளின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக என்கிற காரணம் அரசு தரப்பில் சொல்லப்பட்டாலும், ஏற்கனவே நடந்த இளைஞர்களின் போராட்டம் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டதால், அந்த அமைப்புகள் நீடிப்பது தங்களுடைய ஆட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே அவர்களின் அச்சம். எனவே இதனை மாற்றம் என நேர்மறையாக சொல்ல இயலுமா?
நெருக்கடியும் மாற்றத்திற்கான உந்துதலும்
உலக அளவிலும் இப்படிப்பட்ட மாற்றங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மாற்றம் வேண்டும் என்கிற உந்துதல் ஏன் ஏற்படுகிறது? பல காலம் கடந்தும், கடுமையான வாழ்வாதார நெருக்கடி, அடிப்படை பிரச்சனைகள் கூட தீர்க்கப்படவில்லை என்கிற கோபம், விரக்தி, ஏமாற்றம். குறிப்பாக, அந்தந்த நாடுகளின் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசாங்கங்கள் நவீன தாராளமய பாதையைப் பின்பற்றும்போது, அக்கொள்கைகள் உருவாக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, அச்சுமையை உழைக்கும் மக்கள் மீது தூக்கி வைப்பதும், கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகள் வலுப்படுவதும், சமத்துவமின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வெளிப்படையாக அதிகரிப்பதும் இதற்கான காரணங்களாக அமைகின்றன.
உலக மக்கள் தொகையில் மேல்மட்ட 10% பேர் மீதி 90 சதவீதம் பேரை விட அதிக வருமானத்தை ஈட்டுகின்றனர். ஆனால் உலக மக்கள் தொகையில் கீழ்மட்டத்தில் உள்ள 50 சதவீதம் பேர், உலக வருமானத்தில் 10 சதவீதம் மட்டுமே ஈட்டுகின்றனர். செல்வம், சொத்து எனப் பார்த்தால், மேல் மட்டத்தில் உள்ள 0.001% பேர், கீழ் மட்டத்தில் உள்ள 50 சதவீதம் மக்களின் மொத்த செல்வத்தை விட அதிகம் வைத்துள்ளனர். நாடுகளுக்குள்ளும் இதே போன்ற இடைவெளி அதிகரிக்கிறது.
பொருளாதார இடைவெளியில் பாலின பரிமாணமும் உண்டு. ஆண்களின் வேலை நேரத்தை விட (வாரத்துக்கு 43 மணி நேரம் சராசரியாக) பெண்களின் உழைப்பு நேரம் (வாரத்துக்கு சராசரியாக 53 மணி நேரம்) அதிகம். பெண்களின் வீடு சார் பணிக்கு ஒதுக்கப்படும் நேரம், முதியவர், நோயாளி, குழந்தைகளை பராமரிக்கும் நேரமும் (care work) இந்தக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. ஊதியம் என்று வரும்போது, ஆண்கள் பெறும் ஊதியத்தில் சராசரியாக 61% மட்டுமே பெண்களின் ஊதியமாக வருகிறது. ஊதியமற்ற வீடு சார் பணி, பராமரிப்பு பணி இவற்றையும் கணக்கில் எடுத்தால், ஆண்களுக்கு கிடைக்கும் ஊதியத்தில் 32 சதவீதம் மட்டுமே பெண்களுக்குக் கிடைப்பதாக கணக்கு வருகிறது.
மேலும், கண்ணியமான, நிரந்தரமான வேலைவாய்ப்புகள் சரிந்து கொண்டே வருகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பெருந்திரள் வேலைநீக்கம் (mass lay off) அதிகரித்து வருகிறது. AI (செயற்கை நுண்ணறிவு) பயன்பாடு இதற்கு ஒரு முக்கிய காரணம். இதற்கான தரவுகள் நிறைய உள்ளன.
இளம் தலைமுறையின் தேடல்
இளம் தலைமுறை வாக்காளர்கள், குறிப்பாக இந்த சிக்கல்களில் இருந்து விடுபட வேண்டும் என்ற துடிப்புடன் மாற்றத்தைத் தேடுகின்றனர். நீண்ட காலம் செயல்பட்டு வரும் அரசியல் கட்சிகள் மீது அவநம்பிக்கை ஏற்படுகிறது. புதிய குரலோ, புதிய முகமோ, அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டக் கூடிய விதத்தில் முன்வந்தால் அதனை ஆதரிக்க முனைகிறார்கள்.
இத்தகைய சூழலில்தான் பல்வேறு நாடுகளில் தீவிர வலதுசாரி சக்திகள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுகின்றன. நெருக்கடியின் தீவிரத்தைப் பயன்படுத்தி, மக்களின் கோபத்தையும் ஏமாற்றத்தையும் தமக்கு சாதகமாக மடைமாற்றம் செய்து கொள்கின்றனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் 24வது கட்சி காங்கிரஸின் அரசியல் தீர்மானம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:
“மக்களின் சீரழிந்து வரும் வாழ்க்கை நிலைமைகள் குறித்த உண்மையான கவலைகளைப் பயன்படுத்தி, நவபாசிச சக்திகளும் தீவிர வலதுசாரி கட்சிகளும் சில நாடுகளில் பரவி வருகின்றன. இனவெறி, அன்னிய வெறுப்பு மற்றும் புலம்பெயர் தொழிலாளிகள் குறித்து அச்சம் போன்ற உணர்வுகளை எழுப்புவதன் மூலம் அவை பயனடைந்துள்ளன. ஒரு சாத்தியமான இடதுசாரி அரசியல் மாற்று இல்லாத நிலையில், மக்களின் அதிருப்தி, போராட்டங்களின் போது உருவான ஒற்றுமையைப் பிரிக்க, தீவிர வலதுசாரி சக்திகளால் பயன்படுத்தப்படுகிறது. புதிய-தாராளவாத கொள்கைகளை செயல்படுத்திய, நிறுவப்பட்ட அரசியல் கட்சிகளான (established political parties) சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் பழமைவாதிகள் மீதான கோபமும் மக்களைத் தீவிர வலதுசாரியை நோக்கி மாறவும், தீவிர வலதுசாரி கட்சிகளின் தேர்தல் வெற்றிகளை உறுதிப்படுத்தவும் உதவியது.”
“முற்போக்கு சக்திகள் கொலம்பியா, மெக்சிகோ, பிரேசில், இலங்கை மற்றும் உருகுவே ஆகிய நாடுகளில் தேர்தல்களை வெல்ல முடிந்தது. மக்கள் போராட்டங்களில் இடதுசாரிகள் ஒரு சுறுசுறுப்பான பங்கை வகித்து, நிறுவப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்ட முடிந்த இடங்களில், அவர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெறவும், தங்களின் தேர்தல் வெற்றிகளின் மூலம் தீவிர வலதுசாரியின் முன்னேற்றத்தை நிறுத்தவும் முடிந்தது.”
மாற்று… தானே வராது
இடதுசாரி இயக்கம் என்பதாலேயே, முற்போக்கான கொள்கைகளும் திட்டங்களும் உள்ளவர்கள் என்பதாலேயே, மக்கள் மத்தியில் தானியங்கியாக இடதுசாரி மாற்று என்பது ஏற்புத்தன்மை பெற்று விடாது. இதர கட்சிகளில் இருந்து வேறுபடுத்தி காட்டுவது, சுயேச்சை அடையாளத்தைப் பதிப்பது என்பது மிக முக்கியம். இதைத்தான் மிகச் சரியாக அரசியல் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது. இது நமது நாட்டுக்கும் பொருந்தும். வேறுபடுத்திக் காட்டுவது என்பது இதர கட்சிகளுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்ற நிலைபாடு அல்ல. அந்தந்த நாட்டின் சூழலைப் பொறுத்து, மக்கள் பிரச்சினைகளுக்காக, சமத்துவ விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக, பொது எதிரியை வீழ்த்துவதற்காகக் கூட்டு இயக்கங்கள், தேர்தல் நேர தொகுதி உடன்பாடுகள் அவசியம். ஆனால் இந்த நிகழ்முறையில் வர்க்கப் பார்வையும் சுயேச்சை அடையாளமும் மங்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சமீபத்தில் ஹங்கேரியில் நடந்த தேர்தல் குறித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:
“2026 ஹங்கேரிய தேர்தலில் விக்டர் ஆர்பன் என்கிற தீவிர வலதுசாரி ஆட்சியாளரின் தோல்வி, பொருளாதார சரிவு, அரசியல் விரக்தி, ஊழல்கள், தலைமுறை மாற்றங்கள் போன்றவற்றிற்கு நடுவே ஏற்பட்டது. பெரும்பாலான ஹங்கேரிய மக்கள் அவர்களது வாழ்க்கைத் தரம் சரிந்து கொண்டே வருவதையும், அதற்குக் காரணமாக, கடும் விலைவாசி உயர்வு, வீடுகளின் விலை பெரும் உயர்வு, மின் கட்டண உயர்வு, பெட்ரோல் டீசல் உயர்வு, ஊதிய மட்டத்தில் தேக்கம், பொதுத்துறை பலவீனம் அடைவது போன்றவை இருப்பதை உணர்ந்தனர். இவற்றுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த மக்களின் கோபம், வாக்களிப்பதற்கு பெரும் எண்ணிக்கையில் அவர்கள் வந்ததில் பிரதிபலித்தது. ஹங்கேரிய இளைஞர்கள் ஊழல் மற்றும் முன்னேற்றத்திற்கான குறைந்த வாய்ப்புகள் போன்றவற்றால் விரக்தியில் இருந்தனர். இவையெல்லாம் சேர்ந்துதான் பீட்டர் மேக்யார் என்பவர் வெற்றி பெற முடிந்தது. ஆனால் இதில் முரண் என்னவென்றால் இவர் ஏற்கனவே ஆட்சியில் இருந்தவரை விட இன்னும் மோசமான தீவிர வலதுசாரி”. ஆனால், தான் ஒரு மாற்று என முன்னிறுத்துவதில் அவர் வெற்றி பெற்றார்.
இத்தகைய முயற்சிகளில் ஏகாதிபத்தியத்தின் தலையீடு பல சமயங்களில் இருந்திருக்கிறது. அரசாங்க மாற்றம் (regime change) என்ற பெயரில் நேரடியாகவும், அரசை எதிர்த்து கலகங்களைத் தூண்டி விட்டு, அவர்களுக்கு அனைத்து உதவிகளை செய்து “மாற்றத்தை” கொண்டு வரவும், ஏகாதிபத்தியம் முயற்சித்தே வந்திருக்கிறது. நேபாளத்தில் ஜென்-சி போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பங்கு இருந்தது என்று கூறப்படுகிறது. லத்தீன் அமெரிக்காவில் பல நாடுகளில் இதனைப் பார்க்கிறோம்.
கோபத்தின் பின்னணியில் கரப்பான் பூச்சிகள்
அடுத்தடுத்து வரும் ஒன்றிய அரசாங்கங்கள், நவீன தாராளமய பொருளாதார பாதையில் தீவிரமாக செல்லும்போது, அதனால் ஏற்படும் கடும் சுமைகள் இந்தியாவின் உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்படுகின்றன. இதன் காரணமாக, மிகப்பெரிய அளவு பொருளாதார இடைவெளி மற்றும் சமத்துவமின்மை உருவாகியுள்ளது. ஆக்ஸ்ஃபேம் அறிக்கை உட்பட பல ஆவணங்கள் விரிவான ஆய்வை முன்வைத்துள்ளன. இது மூலதனத்துக்கும் உழைப்புக்குமான முரண்பாட்டின் பிரதிபலிப்பே. உற்பத்தி பலரது கூட்டு உழைப்பால் நடக்கிறது, ஆனால் அதன் பலன் ஒரு சிலர் கையில் குவிகிறது. பெரும் பகுதி, உச்சத்தில் உள்ள ஒரு சதவிகிதத்தினரால் கைப்பற்றப்படுகிறது. பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரம் முடக்கப்படுவதற்கு இது இட்டுச் செல்கிறது.
சமத்துவமின்மை அதிகரிப்பது கொள்கை தவறு அல்ல. மாறாக, முதலாளித்துவ கட்டமைப்பில் தவிர்க்க முடியாத விளைவு என கார்ல் மார்க்ஸ் விளக்குவதுடன், மூலதனக் குவிப்பு ஒருபுறமும், தொழிலாளி வர்க்கத்தின் ஊதியம் மற்றும் வாழ்க்கைத் தரம் சரிவது மறுபுறமும் நடப்பதை சுட்டிக்காட்டுகிறார். சுரண்டலும் உபரி மதிப்பும் இதற்குப் பின்புலமாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்தியாவில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி உருவானதற்குப் பின்புலமாக இளைஞர்கள் மத்தியில் இத்தகைய கோபமும் விரக்தியும் வாழ்நிலை குறித்து ஏற்பட்டதே பிரதான காரணமாகத் தெரிகிறது. இன்ஸ்டாகிராமில் துவங்கினாலும், அத்துடன் நின்று விடாமல், டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் பிரச்சனையை மையப்படுத்தி, கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து, பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். தொடர் வேலைகளையும் திட்டமிட்டுள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தன்னெழுச்சியாக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நடப்பதைப் பார்க்கிறோம். குறிப்பாக, மின் உற்பத்தி, சுரங்கம், கட்டுமானம், கனரக தொழில் துறைகளில் வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன. சுமார் பத்து மாநிலங்களில் 60 மையங்களில் வேலைநிறுத்தங்கள் தன்னெழுச்சியாக நடந்துள்ளன. இதில் பெரும்பாலானவற்றில் வழிகாட்டுவதற்கும் திட்டமிட்டுக் கொடுப்பதற்கும் தொழிற்சங்கங்களே இல்லை. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும் பகுதி முறைசாரா துறையைச் சார்ந்த இளம் ஒப்பந்தத் தொழிலாளிகள், புலம்பெயர் தொழிலாளிகள். இரண்டு மூன்று வருடங்களுக்குள் பணியில் சேர்ந்தவர்கள். முதலில், சமூக ஊடகத்தின் மூலமாக, தங்களின் துன்பங்களையும் பிரச்சனைகளையும் பகிர்ந்து கொண்டார்கள். அதற்குப் பிறகு, அதிலேயே பிரச்சாரம் செய்து வேலைநிறுத்தம் அளவிற்கு சென்றார்கள். தற்காலிக வேலைநீக்கம், சிறை உள்ளிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை, அடக்குமுறைகளை அவர்கள் சந்தித்துக் கொண்டுள்ளனர்.
எது அவர்களை இத்தகைய வீரியமான நடவடிக்கைக்கு தள்ளியது? மனிதத் தன்மையற்ற சுரண்டல், படுமோசமான வேலைத்தள நிலைமை, வாழ்க்கைச் செலவினம் அதிகரிப்பு, பலப் பல ஆண்டுகளாகக் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்படாத சூழல், சில சமயம் ஊதியம் கிடைப்பதிலேயே பிரச்சனை, சமூகப் பாதுகாப்பு சட்டங்கள், திட்டங்கள் இல்லாமை, இதற்கெல்லாம் மேலாக, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வும் தட்டுப்பாடும் உடனடியாக அவர்களை களத்தில் இறக்கியது.
தமிழகத்தின் சூழல் என்ன?
இந்தப் பின்னணியில் தமிழகத்தின் சூழலைப் பரிசீலிக்க வேண்டும். 1967க்குப் பிறகு, தமிழகத்தை பிராந்திய முதலாளித்துவ திராவிட கட்சிகள் தொடர்ந்து ஆட்சி செய்து வருகின்றன. அவர்களின் ஆட்சி குறித்து மதிப்பீடு செய்வது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. அது தனியாக எழுதப்பட வேண்டியது. 1990க்கு பிறகு நவீன தாராளமய கொள்கைகள் தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டன. உலக நாடுகளின் அனுபவங்களைப் போலவே, இந்தியாவின் அனுபவத்தைப் போலவே, தமிழகத்திலும் இக்கொள்கைகளினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பிரதானமாக, ஒன்றிய அரசின் கொள்கைகள் காரணமாக இருந்தாலும், மாநில அரசாங்கங்களும் அதே பாதையில் சென்றது, சுரண்டலை அதிகரித்து நெருக்கடியைத் தீவிரப்படுத்தியது. கடும் விலை உயர்வு, நிரந்தரமான, கண்ணியமான, வேலை வாய்ப்புகள் பறிப்பு, ஒப்பந்தத் தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், வெளிமுகமை ஏற்பாடு அதிகரிப்பு, சமூக பாதுகாப்பு இன்மை, வாழ்க்கை ஊதியம் கிடைக்காதது, குடியிருப்பு பிரச்சனை, வேளாண் நெருக்கடி, ஊரக பிரச்சனைகள் போன்றவை இந்த ஆட்சியில் தீரும்; அடுத்த ஆட்சியில் தீரும் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து மக்கள் காத்திருந்தனர். இவை தீரவில்லை என்பது மட்டுமல்ல; பெண்கள், குழந்தைகள், தலித் மக்களின் மீதான கொடூரமான வன்முறை, மற்றும் போதைப் பழக்க அதிகரிப்பு, கண் முன்னால் நடக்கும் ஊழல்கள் இயல்பானவையாக சித்தரிக்கப்பட்டு கடந்து போகும் விதம் போன்றவை பெரும்பகுதி மக்களை கோபத்திற்கும், ஏமாற்றத்திற்கும், விரக்திக்கும் ஆளாக்கியது.
இங்கும் கணிசமான அளவில் முதல்முறை வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்றனர். ஒரு சிலர் பாய்ச்சல் வேகத்தில் பொருளாதார முன்னேற்றத்தை அடையும்போது பெரும்பாலானவர்கள் அடித்தட்டில் ஏன் இருக்க வேண்டும் என்ற நியாயமான கேள்வி இளைஞர்களுக்கு இருந்தது. காலம் காலமாக இருந்த அரசியல் கட்சிகள், ஆளும் கட்சியாகவோ, எதிர்க்கட்சியாகவோ தங்களுக்கு எதையும் பெரிதாக செய்துவிடவில்லை என்று அதிருப்தி வளர்ந்தது. எனவே மாற்றத்திற்கான தேடல் வலுவடைந்தது. புதிய முகம், புதிய பாணி, புதிய அரசியல் மொழி போன்றவற்றுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தபோது, விஜய் அவர்களும் அவரது கட்சியும் தாங்கள்தான் மாற்று என முன்வைத்தது மக்களிடையே எடுபட்டது. நிச்சயமாக, பிம்ப அரசியலும், சமூக ஊடக திருகல்களும் முக்கிய பங்கு வகித்ததை மறுக்க முடியாது. 2009 முதல் செயல்பட்டு வந்த விஜய் மக்கள் இயக்கம், தமிழக வெற்றிக் கழக ஸ்தாபன கட்டமைப்பிற்கான அடித்தளமாக மாறியது.
5 ஆண்டு கோபம் மட்டுமா?
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடந்த ஐந்து ஆண்டு ஆட்சி மீதான அதிருப்தி (anti incumbency) ஒரு முக்கிய காரணம். ஆனால் தவெக வெற்றியை ஆய்வு செய்யும்போது, மாற்றத்துக்கான தேடலை ஐந்தாண்டு கால பிரச்சனையாக மட்டும் பார்க்க முடியாது, நீண்ட காலமாக கெட்டிப்பட்டு வந்த உணர்வே இது. எனவேதான் திமுக நிறைவேற்றிய நலத்திட்டங்களையும் பொருட்படுத்தாமல், ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் முயற்சித்தனர். மாற்றத்துக்கான இந்த வேகத்தில், பணப்பட்டுவாடா, சாதி, மதம் போன்ற காரணிகளை தாண்டி மக்கள் வாக்களித்துள்ளனர்.
தேர்தல் முடிவுகள் தவெகவுக்கு சாதகமாக இருக்கும் என முன்னுணர்வதில் சிரமம் இருந்தது. சர்வதேசிய, தேசிய நிகழ்ச்சி போக்குகளில் ஏற்பட்ட மாற்றங்களைத் தமிழக நிலைமைக்குப் பொருத்திப் பார்ப்பதில் பலவீனம் இருந்தது. மேலும், அதிமுக – பாஜக அணியைத் தோற்கடிக்க, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற அணியால் முடியும் என்ற சூழலே மேலோங்கி தெரிந்தது. தேர்தல் நேரத்தில் திமுக அரசாங்கத்தின் மீதான அதிருப்தி ஒரு முக்கிய பிரச்சினையாக முன்னுக்கு வந்ததாக உணர முடியவில்லை.
தமிழகத்தில் நீண்ட காலமாக நிலவும் திராவிட கட்சிகளின் இரு துருவ அரசியலை தவெக வெற்றி பின்னுக்குத் தள்ளியது என்பது உண்மைதான். ஆனால், அதன் விளைவுகளைத் தட்டையாக மட்டும் வரையறுக்க முடியாது. விளைவுகளுக்குப் பல பரிமாணங்கள் உண்டு. உதாரணமாக, பொருளாதார பாதையில் திராவிட மாடல், நவீன தாராளமய மாடல் என்றாலும், தமிழகத்தின் வளர்ச்சியில், முன்னேற்றத்தில், துவக்ககால பெண்ணுரிமை, சமூக நீதி, தற்போது வரை மாநில உரிமை, மதச் சார்பின்மை போன்றவை பாதுகாக்கப்பட்டதில் திராவிட சித்தாந்தத்திற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்துத்துவா சித்தாந்தம் தமிழகத்தில் பெரிதும் காலூன்றாமைக்கு இடதுசாரிகளின் பங்களிப்போடு, திராவிட சித்தாந்தத்தின் பங்கு பாத்திரம் முக்கிய காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே வரையறுத்துள்ளது. ஆனால், தற்போதைய சூழலில், திராவிட சிந்தாந்தத்தைக் கடைப்பிடிப்பது நீர்த்துப் போயுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
இருப்பினும் திராவிட கட்சிகள் ஆட்சியில் இல்லை என்பது ஒரு புதிய சூழலை ஏற்படுத்தி உள்ளது. புதிய வாய்ப்புகளை நமக்கு முன்வைக்கிறது.
தவெகவின் கொள்கைகள் என்ன?
ஒரு குறிப்பிட்ட அரசியல் சூழலில், குடியரசுத் தலைவர் ஆட்சியோ, வேறு சில விரும்பத்தகாத ஏற்பாடுகளோ, பாஜகவின் ஆடுகளமாக தமிழகம் மாறுவதையோ, தடுப்பதற்காக, தவெக அரசாங்கம் அமைய வெளியில் இருந்து ஆதரவு என்ற சரியான அரசியல் முடிவை சரியான நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்தது. அமைச்சரவையில் பங்கு வேண்டாம் எனவும் கொள்கை அடிப்படையில் முடிவெடுத்தது. அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு, பிரச்சினைகளின் அடிப்படையில் மார்க்சிஸ்ட் கட்சி தனது அணுகுமுறையை வகுத்து வருகிறது.
தவெகவின் கொள்கைகளும் சித்தாந்தமும் இன்னும் தெளிவாகவில்லை. அவர்களது அரசு எத்தகைய பொருளாதார பாதையில் போகும் என்பதற்கான சில அறிகுறிகள் நிதிநிலை குறித்த வெள்ளையறிக்கையில் இடம் பெற்றிருந்தன. சில தனியார்மய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் முன்வைக்கப் போகும் பட்ஜெட் ஆலோசனைகளையும், இதர பல நடவடிக்கைகளையும் பார்க்க வேண்டி உள்ளது. அதன் பிறகே முறையான மதிப்பீடு செய்ய இயலும். பாஜக குறித்த அணுகுமுறையையும் அவர்கள் வெளிப்படையாகக் கூற வேண்டும்.
தமிழக முதலாளிகளின் சார்பு என்ன என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். போதுமான தரவுகள் தற்போது இல்லையென்றாலும், பிராந்திய முதலாளித்துவக் கட்சிகளின் குணாம்சம் மாறி உள்ளதைப் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது காங்கிரஸ், மத்திய குழுவின் அரசியல் நடைமுறை உத்தி பரிசீலனை அறிக்கை (2005 ஹைதராபாத்), அதைத் தொடர்ந்து 21வது அகில இந்திய மாநாடு அரசியல் தீர்மானம் (விசாகப்பட்டினம், 2005) கூறியதை இந்த ஆய்வுக்கான பின்புலமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
“1960களில் இருந்து பிராந்திய முதலாளித்துவ கட்சிகள் குறித்த மதிப்பீட்டை உருவாக்கினோம். அவை பிராந்திய முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவை. பிராந்திய முதலாளித்துவ சக்திகள் பெருமுதலாளிகளுடன் முரண்பாடு கொண்டவை. எனவே, காங்கிரஸ் எதிர்ப்பில், மாநில உரிமைகள் பாதுகாப்பில், அவர்களைப் பயன்படுத்த முடியும் எனக் கருதினோம். ஆனால், நவீன தாராளமய கொள்கைகள் உருவானபோது, பிராந்திய முதலாளித்துவ கட்சிகளின் பாத்திரம் மாற்றத்துக்கு உள்ளானது. முதலாளித்துவத்தின் வளர்ச்சி மற்றும் விரிவாக்க சூழலில், அந்நிய மூலதனம் குறித்த அவர்களது அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தங்களது சொந்த நலனை மேம்படுத்துவதற்கான வழியாக தாராளமய பாதையை அவர்களின் பார்க்கிறார்கள். பிராந்திய முதலாளிகளில் ஒரு பகுதியினர், பெருமுதலாளிகள் பட்டியலுக்கு சென்று விட்டார்கள். பெருமுதலாளிகளுக்கும் இதர முதலாளிகளுக்கும் இடையே இருந்த முரண்பாடு மட்டுப்பட்டுள்ளது.
இதன் விளைவாக பிராந்திய முதலாளித்துவக் கட்சிகளும் நவீன தாராளமயக் கொள்கைகளை அரவணைத்துக் கொண்டதைப் பார்க்கிறோம்.”
பெருமளவு கார்ப்பரேட் ஆதரவு – பெரு முதலாளிகள் ஆதரவு பாதையில் இரு பெரும் திராவிட கட்சிகளின் அரசாங்கங்களும் போகத் துவங்கிய பின், பிராந்திய முதலாளிகளின் நலனைக் கூடுதலாக பாதுகாப்பதற்கான தேவையில் இருந்து கூட மக்களிடம் ஏற்புத்தன்மை பெற்ற ஒரு புதிய கட்சியின் அவசியம் ஏற்பட்டிருக்கலாம். தவெகவின் தேர்தல் செலவினம், எந்த நிதியிலிருந்து, நன்கொடையிலிருந்து செய்யப்பட்டது என்பது தெரியவில்லை.
லஞ்ச ஊழல் ஒழிக்கப்படும் என்கிற வாக்குறுதி எவ்வளவு தூரம் நடைமுறை சாத்தியம் என்பதும் கேள்விக்குரிய ஒன்றுதான். ஆயினும், இது முதலீட்டாளர்களுக்கான சமிக்ஞையாகவும் இருக்கலாம். பிசினஸை இலகுவாக்குவது (ease of doing business) என்பதற்காகவும் சில அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தை 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் ஆக மாற்றுவோம் என்கிற இந்த அரசாங்கத்தின் அறிவிப்பும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இருக்கக்கூடும். முதலீடுகளை ஈர்க்கும் நிகழ்முறையில் முதலாளிகளுக்கு எப்படிப்பட்ட சலுகைகளை அளிக்கப் போகிறார்கள் எனப் பார்க்க வேண்டும். நிலம் கையகப்படுத்துதலிலும் இவர்களது அணுகுமுறையை கவனிக்க வேண்டும்.
எது உண்மையான மாற்றம்?
கார்ல் மார்க்ஸ், பொதுவாக ஆட்சி மாற்றம் குறித்து, லூயி போனபார்ட்டின் 18வது புரூமேர் நூலில், “முதலாளித்துவத்தின் பல்வேறு பகுதிகள் அரசியல் அதிகாரத்திற்காக ஒருவருக்கொருவர் போட்டியிடுவது, தொழிலாளி வர்க்கத்தை சுரண்டுவதால் கிடைக்கும் பலனைப் பங்கிட்டு கொள்வதற்காகத்தான். ஆட்சி மாற்றத்தின்போது நபர்கள் மாறுவார்களே தவிர, அரசின் வர்க்கத் தன்மை அதேபோல் நீடிக்கும்” என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார். இந்த மாற்றம் ஒரு புரட்டு, தங்களுக்குத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இருப்பதாக மக்கள் நினைப்பது ஒரு மாயை என்றும் விவரிக்கிறார். அவரது விளக்கம் ஒட்டுமொத்த அரசு அதிகாரம் (state power) பற்றியதாக இருந்தாலும், பொதுவாக மாற்றம் என்பதை எப்படிப் பார்க்க வேண்டும் என விளக்குகிறது.
எனவே, உண்மையான மாற்று பாட்டாளிகளின் கைகளுக்கு அரசியல் அதிகாரம் செல்வதுதான். அந்தப் பாதையில், இந்திய சூழலில், இடது ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கும் கடமை நமக்கு முன் உள்ளது. இதற்கு இடதுசாரிகளின் ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் அதிகரிக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியின் சுயேச்சையான பலம் வலுப்பட வேண்டும். இடதுசாரிகளின் மாற்றுக் கொள்கைகள் மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். தமிழகத்தில் இந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
இப்பின்னணியில், இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான அணுகுமுறையை வகுக்க சில நல்ல முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய புதிய சூழலைப் பயன்படுத்தி, ஊரக ஏழைகள் உட்பட, அடிப்படை வர்க்கங்களின் பிரச்னைகளைக் கூடுதலாக கையிலெடுக்க வேண்டும். இளைஞர்களைத் திரட்ட கவனம் செலுத்த வேண்டும். அனைத்து மட்டங்களிலும் மக்கள் பங்கேற்பு இருப்பதை ஜனநாயக ரீதியாக உறுதிப்படுத்துவதும் அவசியம்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு ஒரு தொகுதி மட்டுமே கிடைத்தது என்றாலும் அவர்களது தலையீட்டுத் திறனைக் குறைத்து மதிப்பிட முடியாது. தவெகவுக்கு நிர்ப்பந்தம் அளிக்க பல்வேறு விதங்களில் ஒன்றிய அரசு மற்றும் மத்திய முகமைகள் மூலம் அவர்கள் முயற்சி தொடரும். அவர்களது கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளையும், இந்துத்வா வகுப்புவாத நடவடிக்கைகளையும் எதிர்கொள்ளும் திறனை அதிகரித்திட வேண்டும். அண்மையில் கியூப அதிபர் டியாஸ் கனேல் ஒரு நேர்காணலில், வெல்ல முடியாத சக்தி என்று எதுவும் இல்லை எனக் கூறிய நம்பிக்கையளிக்கும் செய்தியை மனதில் ஏந்துவோம்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply