
சிங்காரவேலர்: என்றும் ஜொலிக்கும் சிவப்பு நட்சத்திரம் !
1922-இல் கயாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் அமர்வில், தமிழகத்திலிருந்த ஏ.ஐ.சி.சி. உறுப்பினராகப் பங்கேற்ற சிங்காரவேலு, அந்த அமர்வில் தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று வெளிப்படையாக அறிவித்துக்கொண்டார். அந்த உரை பின்வருமாறு இருந்தது:
“உலகம் முழுவதும் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ள கம்யூனிஸ்ட் இயக்கம் என்ற மாபெரும் அனைத்துலக அமைப்பின் பிரதிநிதியாகவே உங்கள் முன் நிற்கிறேன். உலகத் தொழிலாளர்களுக்குக் கம்யூனிசம் அளிக்கும் மாபெரும் செய்தியை உங்களுக்கும் வழங்குவதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன்…”
மிகச் சிறந்த சிந்தனையாளராக, சீர்திருத்தவாதியாக, புரட்சியாளராக பரிணமித்த சிங்காரவேலர், இந்தியாவிலேயே முதன்முறையாக மே தினம் கொண்டாடிய வரலாற்றை படைத்ததை நாம் அறிவோம்.
அவரின் வழிகாட்டலில்தான் பிரிட்டிஷ் இந்தியாவிலேயே முறையாக செயல்பட்ட முதல் தொழிற்சங்கமும், அதன் வரலாற்று வெற்றியும் மறக்கக் கூடாதவை. தொழிலாளர் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக்கி நீர்த்து போக வைக்கும் முயற்சி நடக்கிற இச்சமயத்தில், அந்த வீரியம் மிக்க வரலாற்றை நினைவில் கொள்வோம்.
மதராஸ் தொழிலாளர் சங்கம் ஏப்ரல் 27, 1918இல் நிறுவப்பட்டது.
பி.அண்ட்.சி. ஆலையிலும், சூளை ஆலையிலும் உள்ள தொழிலாளர்கள் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க பல போராட்டங்களுக்கு மதராஸ் தொழிலாளர் சங்கம் ஆதரவாக இருந்தது. ஆகஸ்ட் 29, 1921 அமைதியாக வேலைநிறுத்தம் செய்த பி.அண்ட்.சி. ஆலைத் தொழிலாளர்கள் மீது மதராஸ் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஏழு தொழிலாளர்கள் உயிர்த் தியாகம் செய்தும், போராட்டம் வீரியமடைந்தது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அந்த தியாக உடல்களை தாங்கியபடி பேரணியாக சென்றார்கள். அந்தப் பேரணியின் முன்னணியில் கம்பீரமாக நின்றார் சிங்காரவேலர்.
1926ஆம் ஆண்டின் தொழிற்சங்கச் சட்டம் கொண்டுவரப்படுவதில் சிங்காரவேலர் தீர்மானகரமான தாக்கத்தை செலுத்தினார். வேலைநிறுத்த போராட்டத்தால் ஏற்பட்ட நட்டத்தை, தொழிற்சங்க தலைவர்களிடம் அபராதம் வசூலிப்பது என ஆலை உரிமையாளர்கள் முடிவு செய்தார்கள். இதற்கு எதிராக சிங்காரவேலர் கிளர்ந்து எழுந்தார். மத்திய சட்டமன்றத்திலும் இந்தப் பிரச்சனை எழுப்பப்பட்டது. அதன் பின்னரே, 1926 தொழிற்சங்கச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்ற அடைமொழியுடன் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்களுக்காகவே குரல் கொடுத்துச் செயல்பட்ட மாவீரர் சிங்காரவேலரின் பிறந்தநாளும் நினைவுநாளும் இதே பிப்ரவரி மாதத்தில் வருகின்றன என்ற நிலையில், அவரது மகத்தான பங்களிப்பினை மார்க்சிஸ்ட் இதழ் இத்தருணத்தில் நினைவு கூர்ந்து போற்றுகிறது.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply