
பாஜகவைத் தோற்கடிப்பது நம் பிரதான கடமை : ஐந்து மாநில தேர்தல்கள் 2026
உ. வாசுகி
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுவை யூனியன் பிரதேசத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்தானே, நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அல்லவே என்று இதனை நாம் பார்க்க முடியாது. ஆர்.எஸ்.எஸ் பரிவாரம், தமது அரசியல் செயல்திட்டத்தை துரிதப்படுத்தி, பலமுனைகளிலும் முயற்சியை வேகப்படுத்தியுள்ள சூழலில், அனைத்து முனைகளிலும் அதனை எதிர்த்து முன்னணியில் போராட வேண்டும்; தேர்தல் களத்திலும், அந்தப் போராட்டத்தை முன்னெடுத்து பாஜகவைத் தோற்கடிப்பது பிரதான கடமையாகும்.
மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானம், பாஜகவைத் தனிமைப்படுத்தி தோற்கடிப்பதை மீண்டும் பிரதான கடமையாக முன்னிறுத்தியது. தேர்தல் வரும்போது, பாஜக எதிர்ப்பு வாக்குகளை ஒருமுகப்படுத்துவதும், அதிகரிப்பதும் தேவை என்பதற்கு அழுத்தம் கொடுத்தது. அந்த அடிப்படையில், இப்போது நடக்கவுள்ள 5 மாநில தேர்தல்களிலும் பாஜகவையும், அது அங்கமாகவுள்ள கூட்டணியையும் முறியடிப்பது தேர்தல் உத்தியின் முக்கிய அம்சம் ஆகும். மத்தியில் பாஜக ஆட்சி நீடித்து வரும் சூழலில், மாநில ஆட்சியையும் அது கைப்பற்றுவது பேரபாயம் என்பதை மீண்டும் மீண்டும் கூற வேண்டியுள்ளது.
வலிமையான மாநிலங்களின் ஒன்றியமாக இந்தியா தொடர்வதும், மாநில ஆட்சிகளை பாஜக அல்லாத கட்சிகள் வழிநடத்துவதும் கார்ப்பரேட்-இந்துத்துவா செயல்திட்டத்திற்கு வேகத்தடையாக அமைகிறது. அதனால்தான் ஒன்றிய பாஜக ஆட்சி மாநில உரிமைகளை நசுக்குகிறது. அதேசமயம் மாநில அரசாங்கங்களை கூட்டணியாகவோ, தனியாகவோ கைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது. ‘இரட்டை எஞ்சின்’ என்று கவர்ச்சியாக முன்வைக்க முயற்சிக்கிறது.
இப்போது தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களில், அசாம் மற்றும் புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கின்றது. கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் உள்ளது. தமிழ்நாட்டில் திமுகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஆட்சி நடத்துகின்றன. தம் வசம் இல்லாத 3 மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பலமுனை உத்திகளை வகுத்து பாஜக/ஆர்.எஸ்.எஸ் பரிவாரம் செயல்பட்டு வருகிறது. அவர்களின் கார்ப்பரேட் ஆதரவு – இந்து ராஷ்ட்டிர செயல் திட்டத்திற்கு பாதையை எளிதாக்க செயல்படுகின்றனர். இதனைத் தடுக்க வேண்டியது மிக அவசியமாகும்.
காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு
ஆர்.எஸ்.எஸ்/பாஜக செயல்திட்டத்துக்கு எதிரான அணி சேர்க்கையில் காங்கிரஸ் ஒரு முக்கிய சக்தியாக பார்க்கப்பட்டாலும், இந்துத்துவ செயல்திட்டத்தை எதிர்ப்பதில் காங்கிரஸ் கட்சியின் ஊசலாட்டத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். பாஜக எதிர்ப்பு வாக்குகளை ஒருமுகப்படுத்தவும், மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதிலும் காங்கிரஸ் முயற்சிகள் போதுமானதாக இல்லை.
கேரள மாநிலத்தில், எல்.டி.எப் ஆட்சியை வீழ்த்த யு.டி.எப் நினைக்கிறது. அதற்காக மார்க்சிஸ்ட் கட்சியும் பாஜகவும் ஒன்றுதான் என சமப்படுத்தி விமர்சிக்கும் எல்லைக்குச் சென்றுள்ளார் ராகுல் காந்தி. முதலமைச்சர் பினராயி விஜயனை பாஜக அரசு கைது செய்திருக்க வேண்டும் என்றும் பேசுகிறார். தில்லியில் காங்கிரஸ் முன்னெடுத்த அத்தகைய பிரச்சாரத்தைப் பயன்படுத்தி, ஆம் ஆத்மி முதலமைச்சர் கைது செய்யப்பட்டதும், அதைத் தொடர்ந்து அந்த மாநில ஆட்சியே பாஜக வசம் சென்றதும் அண்மைக்கால அனுபவம்.
கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ். தாக்குதல்களை எதிர்கொண்டு, மதவெறி அரசியலைத் எதிர்த்து, பல களப்பலிகளையும், தியாகங்களையும் செய்த வரலாறு மார்க்சிஸ்ட் கட்சிக்குத்தான் உண்டு. எனவே, காங்கிரசின் பிரச்சாரத்தை எல்.டி.எப். தவிடுபொடியாக்கும். மேற்குவங்க மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி இடது முன்னணியை நோக்கி தனது விமர்சனத்தைக் கூர்மைப்படுத்தியுள்ளது. அந்த மாநில தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்திற்கு உள்ளும், மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் கட்சி போதிய முயற்சிகள் எடுப்பதில்லை. இந்தியா கூட்டணியை செயல்படுத்துவதிலும் பெரிதாக ஆர்வமில்லை. நிலைமை இவ்வாறு இருந்தாலும், கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானம், பத்தி 2.76, காங்கிரஸ் கட்சி குறித்து முன்வைக்கும் வரையறுப்பின்படி, பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகளின் பரந்த ஒற்றுமையைக் கட்டுவதில் காங்கிரஸ் கட்சியின் தேவையை கணக்கில் எடுத்து, மார்க்சிஸ்ட் கட்சி, அதற்கேற்ப தமது அணுகுமுறையை வகுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. மேற்சொன்ன அடிப்படையில், தேர்தலை சந்திக்கவுள்ள மாநிலங்களின் சூழலை இக்கட்டுரையில் காண்போம்.
கேரளம் – மீண்டும் எல்.டி.எப்!
கேரள மாநிலத்தில், சி.பி.ஐ(எம்) தலைமையிலான எல்.டி.எப் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆர்.எஸ்.எஸ் / பாஜக பரிவாரத்திற்கு எதிராக அனைத்து தளங்களிலும் சமரசமின்றி இயங்கிவரும் கம்யூனிஸ்ட் தளம் என்ற முறையில், இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தைப் பாதுகாப்பது அவசியமாகும். மூன்றாவது முறையும் எல்.டி.எப் அரசாங்கம் என்ற அடிப்படையில் நமது பிரச்சாரம் அமைந்துள்ளது.
இந்தியாவிற்கான மாற்றுப் பாதையை முன்வைக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் எல்.டி.எப் ஆட்சி நீடிப்பது, முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கங்களுக்கு சவாலாகவே இருந்து வருகிறது. எனவே இந்த ஆட்சியை எப்பாடுபட்டாவது வீழ்த்துவது என்ற புள்ளியில் அனைவரும் ஒன்றிணைந்து விடுவார்கள்.
அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் இந்தக் காட்சியை நாம் கண்டோம். பாஜக – காங்கிரஸ் இடையிலான மறைமுக ஒத்துழைப்பு, சிறுபான்மை மதவாத சக்திகள் காங்கிரசுடன் கைகோர்ப்பு, மாநில முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு மோசடியான விதத்தில் அமலாக்கத்துறை நோட்டீஸ், அவதூறு பரப்புரைகள், ஒன்றிய அரசு நிதி கொடுக்க மறுத்து நெருக்கடியை உருவாக்கியது, இத்துடன் ஊடகங்களை பயன்படுத்தி இடது ஜனநாயக அரசுக்கு எதிரான தொடர் பிரச்சாரம் என வானவில் கூட்டணி உருவானது. சிறந்த கொள்கைகளும் மக்களுக்கான நடவடிக்கைகளும் இருந்தால் மட்டுமே போதும், தேர்தலில் வென்று விடலாம் என்கிற நிலைமை இல்லை. மேற்கூறிய சவால்களை எதிர்கொண்டுதான் தேர்தலில் வெற்றி பெற முடியும். உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அனுபவமும் இதுதான்.
ஆர்.எஸ்.எஸ் / பாஜகவின் நச்சுக் கருத்துக்கள் அரசியலில் மட்டுமல்லாமல், சமூகத்திலும் ஊடுருவி, அதனால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அங்குலம் அங்குலமாக போராடிப் பெற்ற உரிமைகளும், சமூக சீர்திருத்தங்களும், முன்னேற்றங்களும், சமூகத்தில் நிலவும் பகுத்தறிவு, சமத்துவ சிந்தனை, அறிவியல் பார்வை, அனைவருக்குமான வளர்ச்சி என்ற முழக்கம் என அனைத்தையும் அது பாதிக்கும், பலவீனமாக்கப்படும். கேள்வி கேட்க முடியாத, மாற்றத்தை அனுமதிக்காத, ஏற்கனவே உள்ள சமூக அவலங்களைத் தீவிரமாக்கும் சக்திகளை வளர்த்தெடுக்கும். இத்தகைய பின்னோக்கிய நிலை ஏற்பட்டால் அது யாருக்கு சாதகமாகும்? கேரள மாநிலத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட சக்திகள் இந்த அம்சத்தைக் கணக்கில் கொள்வதில் பலவீனம் உள்ளது.
இப்படியான நிலைமையில் கேரள மாநிலத்தின் சில அறிவுஜீவிகள் அங்கு ஆட்சி மாற்றம் தேவை என்று முன்மொழிந்துள்ளார்கள். எல்.டி.எப் ஆட்சி மாறிவிட்டால் அங்கே யார் வருவார்கள்? காங்கிரஸ் கட்சியால் என்ன விதமான மாற்றத்தைத் தர முடியும்?. பாஜக ஆட்சிக்கு வந்தால் அதையும் மாற்றம் என்று பார்ப்பார்களா என்ற கேள்விகளை அவர்கள் சிந்திக்க வேண்டும்.
மாநிலங்களை சீரழிக்கும் பாஜகவின் கொள்கையும், திட்டமிட்ட நிதி மறுப்பும் இருக்கும்போதிலும் கேரள மாநிலம் தீவிர வறுமை நிலைமையை முற்றாக ஒழித்துள்ளது. பொதுக்கல்வியை பலப்படுத்தி அரசு பள்ளிகளை நவீனப்படுத்தியுள்ளது. உள்கட்டமைப்பு பலப்பட்டுள்ளது. பொதுத்துறைகள் லாபகரமாக இயக்கப்பட்டு, பொதுத்துறையாகவே பாதுகாக்கப்பட்டுள்ளன. மனித வளக் குறியீடுகளில் பல உலக நாடுகளை விஞ்சியுள்ளது. விவசாய உற்பத்தி திறன் அதிகரிப்பு, தொழிலாளர் நலனைப் பாதுகாக்கும் தொழில்துறை கொள்கை, தொழில்துறை விரிவாக்கம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த சாதனைகளைத் தொடர்வது காங்கிரஸ் கடைப்பிடிக்கும் பொருளாதாரப் பாதையால் சாத்தியமா என்பதையும் அந்த அறிவுஜீவிகள் சிந்திக்க வேண்டும். ஆட்சி மாற்றம் வந்தால்தான் இடதுசாரி சித்தாந்தம் பாதுகாக்கப்படும் என்ற அவர்களின் வாதத்தில் சாரம் இல்லை. கேரள மாநிலத்தில் இடது ஜனநாயக ஆட்சியை பாதுகாப்பதும், அதன் முன்மாதிரியான சாதனைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதும் இந்திய அரசியலில் மிக முக்கியமான தேவையாகும். இந்தியாவின் பிற பகுதிகளில் ஒரு சாத்தியமான மாற்றை நோக்கிய நம்பிக்கையை அதுதான் உயிர்ப்புடன் பாதுகாக்கும்.
எஸ்.ஐ.ஆர் சதியில் மேற்குவங்கம்!
மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது ஆட்சியில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சர்வாதிகாரப் போக்கில் செயல்பட்டு வருகிறது. ஏழைகளுக்கும், பெண்களுக்கும் எதிரான அரசாக உள்ளது. ரவுடிகளும், சமூக விரோத சக்திகளும் செல்வாக்கு செலுத்துகிறார்கள். தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக, மத அடிப்படையில் மக்களைக் கூறுபோடும் அணுகுமுறையைத்தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடைப்பிடிக்கிறது. மறுபுறம், பாஜக தனது வகுப்புவாத செயல்திட்டத்துடன் மதவெறி நச்சுக் கருத்துக்களை பரப்புவதுடன், பிளவுகளை உருவாக்கும் எல்லாம் வழிமுறைகளையும் முயற்சித்து வருகிறது. வரவிருக்கும் ராமநவமியை மையப்படுத்தி கலவர செயல்திட்டத்துடன் இயங்குவதும் தெரிகிறது. இந்த இரண்டு சக்திகளையும் எதிர்கொண்டு இடதுசாரி சக்திகள் முன்னேற வேண்டும் என்பதுதான் நாம் கடைப்பிடிக்கும் தேர்தல் உத்தியாகும்.
மேற்கு வங்கத்தில் நடக்கும் இன்னொரு முக்கியமான போக்கு SIR செயல்திட்டம் ஆகும். “அந்நிய நாட்டவர்கள் அல்லது ஊடுருவல்காரர்கள்” என்ற சந்தேகத்துடன் தேர்தல் ஆணையம் இந்த செயல்திட்டத்தை முன்னெடுத்தது. எலியை பிடிக்க வீட்டைக் கொளுத்துவதுபோல அமைந்த இந்த நடவடிக்கையில் இதுவரை ஒருவரைக் கூட தேர்தல் ஆணையம் அவ்வாறு அடையாளப்படுத்தவில்லை. ஆனால், 63.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், 60.06 லட்சம் வாக்காளர்கள் விசாரணை பட்டியலில் என ஆக மொத்தத்தில் 1.23 கோடி வாக்காளர்களின் வாக்குரிமை நிச்சயமற்ற நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசிக்கும் மாவட்டங்களில் வாக்காளர் நீக்கமும், வாக்காளர் விசாரணை பட்டியலும் மிக அதிகமாக உள்ளது. எனவேதான் இந்த எஸ்.ஐ.ஆர் செயல்திட்டமே அரசியல் நோக்கம் கொண்ட சதி என மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் மறுபக்கம் திரிணமூல் காங்கிரஸ், பாஜக தலைவர்கள் மோசடி வாக்காளர்களை முக்கியமான தொகுதிகளில் சேர்த்துக்கொண்டே வருகிறார்கள். அதனால்தான் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக மிகப்பெரும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி அங்கு முன்னெடுத்துள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் எதிர் பாஜக என்ற வகையில் இரு துருவ அரசியலைக் கட்டமைக்க ஊடகங்கள் முயற்சிக்கின்றன. இந்த இரு கட்சிகளும் முன்னெடுக்கும் போட்டாபோட்டி வகுப்புவாதஅரசியல் மூடி மறைக்கப்படுகிறது. இடதுசாரிகளின் முன்னேற்றம் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. இதற்குத் தகுந்தாற் போல கதையாடல்கள் உருவாக்கப்படுகின்றன.
ஒன்றிய பாஜக ஆட்சியை எதிர்ப்பதாக கூறி பலவகையான முஸ்லீம் அடிப்படைவாத அமைப்புகளும், பிளவுவாத அமைப்புகளும் ஓரணியில் திரள ஒரு முயற்சி நடக்கிறது. இவ்வகையில் மத அடிப்படையில் சிறுபான்மையினர் திரள்வதும் இந்து வாக்குவங்கியை உருவாக்கும் பாஜக முயற்சிக்கு உதவி செய்வதுடன், ஜனநாயக மதச்சார்பற்ற அரசியல் நீரோட்டத்தை பலவீனமாக்கும் என்ற நிலைமை உள்ளது.
இப்படியான சூழலில்தான், மேற்கு வங்கத்தின் முற்போக்கு பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன், சட்டமன்றத்தில் மக்கள் குரலாக ஒலிக்கவும், ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் பிரச்சனைகளை முன்னெடுக்கவும், இடதுசாரிகள் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இடது முன்னணி போராடுகிறது. சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஓர் உறுப்பினர் கூட இல்லை என்கிற நிலைமையை மாற்றி, இடது முன்னணியை வலிமைப்படுத்த வேண்டும்.
அசாம்: மதவெறித் தீயை அணைப்போம் !
அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் வெறியாட்டங்கள் தீவிரமாகின்றன. நச்சுப் பிரச்சாரங்கள் வெளிப்படையாக நடக்கின்றன. அவர்களின் செயல்திட்டத்திற்கு அரசு அதிகாரம் கருவியாகியுள்ளது.
மறுபக்கம் வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் அதானி, அம்பானி, பாபா ராம்தேவ் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களுக்கு சுமார் 25,000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை அப்புறப்படுத்தி நடத்தப்பட்ட ‘கார்ப்பரேட் முதன்மை’ என்ற இந்த அணுகுமுறை உள்ளிட்டு மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சனைகள், உச்சகட்டத்தில் தொடரும் வேலையின்மை பிரச்சனை, இயற்கை பேரிடர் பாதிப்புகள், பொருளாதார நெருக்கடிகள் போன்றவை பலத்த எதிர்ப்பையும் அதிருப்தியையும் அங்கே உருவாக்கியுள்ளன. ஆனால், மக்களின் கவனத்தை மடைமாற்றும் வகையில் பாஜகவின் ஹிமாந்த பிஸ்வ சர்மா அரசு, மத வெறுப்பு அரசியலைத் திட்டமிட்டு கிளப்பி வருகிறது. அண்மையில் இஸ்லாமியர்களை துப்பாக்கியால் குறிவைத்து முதலமைச்சர் சுடுவது போன்ற வீடியோ மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வீடியோவாக வெளியிடப்படும் எல்லைக்கும் அவர்கள் சென்றார்கள். இந்த வீடியோ பலத்த எதிர்ப்புக்குப் பிறகு நீக்கப்பட்டது. அது இஸ்லாமிய மக்களைக் கொல்லத் தூண்டும் சமிக்ஞை மட்டுமல்ல; மதவெறியை தேர்தல் பிரச்சாரம் ஆக்கும் உத்தியுமாகும்.
அசாமிலும், SIR மூலம் மதவழி சிறுபான்மை வாக்காளர்கள் குறி வைத்து நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளும், குடிமைச் சமூக செயல்பாட்டாளர்களும் புகார்கள் தெரிவித்துள்ளனர். படிவம் 7 பெருமளவில் மோசடியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாம் நபர் ஆட்சேபணையை பயன்படுத்தி பெயர்களை நீக்குகிறார்கள். அவ்வாறு ஆட்சேபணை தெரிவித்தவர்களுடைய வாக்காளர் அடையாள அட்டை, மொபைல் எண்கள் உட்பட சர்ச்சைக்குரியதாக உள்ளன. ஒரு சில மாவட்டங்களில் சில தனிநபர்கள் நூற்றுக்கணக்கான ஆட்சேபணைகளை முன்வைத்து பல பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வங்காள மொழி பேசும் இஸ்லாமிய வாக்காளர்களை, அண்டை நாடான வங்க தேசத்தவர் எனக் குறிவைத்து, வாக்குச்சாவடி அளவிலான தேர்தல் அதிகாரிகளை நிர்பந்தப்படுத்தியும் நீக்கல்கள் நடந்துள்ளன. சிறுபான்மை மக்கள் இரண்டாம் நிலை குடிமக்களாகவே கருதப்பட வேண்டும் என்கிற இந்துத்துவ சித்தாந்தம் இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
வெறுப்பு அரசியலோடு சேர்த்து, எதிர்க்கட்சியினரை நோக்கி தேசப் பாதுகாப்புக்கு எதிரானவர்கள் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டு வீசப்படுகிறது. ஊழல் குற்றச்சாட்டுகளையும் பாஜக முன்வைக்கிறது. பாஜகவின் எதேச்சாதிகார, நவ பாசிச குணாம்சம் அசாமில் தொடர்ந்து வெளிப்படுகிறது. இதை, அவர்கள் தம் வலிமையின் அடையாளமாக முன்வைத்தாலும், தோல்வியடைவோம் என்ற பதட்டத்தின் அடையாளமே இதுவென்று பார்க்க வேண்டும்.
இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகளின் உத்தி கூர்மையாக இருக்க வேண்டும். ஒட்டுமொத்த சூழலையும், மக்களின் பரந்த நலனையும் கணக்கில் கொண்டு, பாஜக எதிர்ப்பு வாக்குகளை சிதறாமல் பாதுகாத்து, பாஜகவைத் தோற்கடிக்கும் பொறுப்பு உள்ளது. காங்கிரஸ் கட்சியே பிரதான எதிர்க் கட்சியாக உள்ள சூழலில், மார்க்சிஸ்ட் கட்சியும் மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைப்பதில் தமது பங்கினை செலுத்தி வருகிறது. 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
புதுச்சேரி – என்ன செய்தது இரட்டை எஞ்சின்?
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி (இரட்டை எஞ்சின்) அமைந்துவிட்டால் தாராளமாக நிதி கிடைக்கும்; வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று பா.ஜ.க. – என்.ஆர். காங்கிரஸ் அணி கூறிவந்தது. ஆனால் புதுச்சேரியில் 2023-2024ஆம் ஆண்டிலிருந்துதான் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கூடுதல் நிதி தருவதற்கு மாறாக, வெளிக்கடன் வாங்குவதற்கு மட்டுமே ஒன்றிய அரசு அனுமதித்தது.
கடந்த தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், சட்டமன்ற அறிவிப்புகளில் பெரும்பாலானவற்றை செயல்படுத்த முயற்சிக்கவே இல்லை. ஒருபுறம் ஜி.எஸ்.டி. காரணமாக வருவாய் இழப்பு, மறுபுறம் ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வில் நீடிக்கும் பாரபட்சம் – அத்துடன் ஆண்டுக்கு சுமார் ரூ. 2000 கோடி கடனைத் திருப்பி செலுத்த வேண்டிய நிலைமையும் சேர்ந்து அரசின் நடைமுறைத் திட்டங்களே முடங்கின. ரேஷனில் இலவச அரிசித் திட்டத்தை செயல்படுத்துவதில் பிரச்சனை, 2022-23 முதல் மாணவர்களுக்குக் கல்வி உதவி தொகை, குடும்பத் தலைவிக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்குவதில் சிக்கல், அரசு சார்ந்த நிறுவன ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. நீதிமன்ற இடைக்கால உத்தரவு பெற்று, சம்பளம் மறுக்கும் நிலை தொடர்கிறது.
பெருவாரியான மக்கள் சார்ந்திருக்கும் வேளாண்மை, மீன்பிடி, கால்நடை துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. மாறாக, சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில், ரெஸ்ட்ரோ பப் (மது விடுதி) அனுமதிகள் தாராளமாக தரப்பட்டுள்ளன. ஒன்றிய பா.ஜ.க. அரசின் தனியார்மயக் கொள்கை, இந்துத்துவா கொள்கைகள் தடையில்லாமல் செயல்படுத்தப்படுகின்றன. மின்சாரம் தனியார்மயம், அரசின் சொத்துக்கள் தனியாருக்குக் கைமாறுவது, இந்தி மொழி திணிப்பு, தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம், கடலோரங்களில் கார்ப்பரேட்டுகளுக்கு தொழில் தொடங்க அனுமதி, தனியார்மயம் வேகமெடுத்து துப்புரவு, குடிநீர் வினியோகம், சுற்றுலா ஆகியவை தாரைவார்க்கப்படுகின்றன.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியையும், அதிமுகவையும் விழுங்கி, பாஜகவே ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற திசையில் நகர்ந்து வருவதையும் கண்கூடாக பார்க்க முடிகிறது. மார்க்சிஸ்ட் கட்சி தன்னுடைய பலத்திற்கு ஏற்ப சில தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. காங்கிரஸ் – திமுக தலைமையிலான அணியில் தேர்தலை எதிர்கொள்கிறது.
தமிழ்நாட்டு தேர்தல் களம்
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பாஜக அதிமுக அணியைத் தோற்கடிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் பாஜகவின் நகர்வுகள் அதிமுகவின் மீது திட்டமிட்ட கட்டுப்பாட்டை செலுத்தும் வகையில் உள்ளன. புதிதாக நடிகர் விஜய் உருவாக்கியுள்ள தவெக மூன்றாவது சக்தியாக தேர்தலில் பங்கேற்கிறது. இந்த நேரத்தில், தமிழ்நாட்டின் நலனை பாதுகாப்பது அவசியம் என்ற வகையிலேயே நம்முடைய தேர்தல் உத்தி அமைந்துள்ளது. கூடுதலான தொகுதிகளில் போட்டியிட நாம் கடுமையாக போராடிய போதிலும், அணியின் ஒற்றுமையை, நமது அரசியல் நோக்கத்தை முன்னிறுத்தி நாம் 5 தொகுதிகளை ஏற்று உடன்பாட்டை மேற்கொண்டுள்ளோம்.
ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகள், நடவடிக்கைகள், பட்ஜெட் ஒதுக்கீடுகள் என அனைத்துமே தமிழ்நாட்டின் உரிமைகளையும், மக்கள் நலனையும் வெகுவாக பாதித்துவரும் நிலையில் – ஒன்றுபட்ட எதிர்ப்பை மேலும் வலுப்படுத்துவது முக்கியம். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும், சமூகத் தளத்திலும் நாம் அதை மேற்கொள்கிறோம். நாடுதழுவிய அளவில் எதிர்க் கட்சிகளின் ஒற்றுமைக்கு தமிழ்நாட்டில் அமைந்துள்ள அணிசேர்க்கை ஒரு ஊக்கமாக உள்ளது. எனவேதான் இதன் ஒற்றுமை முக்கியம் என்ற நிலைப்பாட்டை நாம் எடுத்துள்ளோம்.
பாஜகவை வீழ்த்துவதற்கான சில முக்கியமான காரணங்களை நாம் அறிவோம் என்றாலும் கூட, இங்கு பட்டியல் இடுவோம்..
பாஜக, பாசிசத் தன்மை கொண்ட ஆர் எஸ் எஸ்-ன் அரசியல் அங்கம். எனவே அவர்களை வீழ்த்துவது அந்த செயல்திட்டத்தை தடுக்க மிக முக்கியமாகும்.
பெருமுதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் முதன்மை பிரதிநிதியாக அது உருவாகியிருக்கிறது. பெருமுதலாளிகளின் ஆதரவைத் தமக்கு சாதகமாக உறுதிப்படுத்தி இருக்கிறது.
இந்திய தேசியத்தைப் பின்தள்ளி, மத அடிப்படையிலான தேசிய வெறியை முன்னிறுத்துகிறது.
இந்துத்துவ சித்தாந்தத்தின் செல்வாக்கின் மூலமாக வலதுசாரி சக்திகளை ஒருங்கிணைத்துள்ளது. சமூகத்தில் வலதுசாரி சிந்தனைகளை ஊடுருவ செய்துள்ளது.
பெண்கள், தலித்துகள், பழங்குடி மக்கள், மத வழி சிறுபான்மையினர் மீதான வன்முறை வெறியாட்டங்கள் இடைநில்லாது தொடர்கின்றன
அபரிமித பணபலம், ஊடக பலத்தைத் தம் அராஜக செயல்களுக்கு பயன்படுத்துகிறது
பெரும்பான்மை வகுப்புவாதத்தை (majority communalism) முன்னெடுக்கிறது, ஜனநாயகத்திற்கு மாற்றாக பெரும்பான்மை வாதத்தை (majoritarianism) முன்வைக்கிறது
கார்ப்பரேட் ஆதரவு நவீன தாராளமய கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இது மிகப்பெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நாட்டில் ஏற்படுத்தி உள்ளது. பொருளாதார நெருக்கடியின் விளைவாக உருவாகும் அனைத்து சுமைகளும் தொழிலாளிகள் விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் மீது ஏற்றி வைக்கப்படுகின்றன
முழு வீச்சிலான எதேச்சாதிகார பாதையைப் பின்பற்றுவதுடன், நவ பாசிச போக்குகளையும் வெளிப்படுத்தி வருகிறது.
தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் பல திருத்தங்களைக் கொண்டு வந்து ஒரு கண்காணிப்பு அரசு (surveillance state) என்ற பாதையில் செல்கிறது
அதிகார குவிப்பு நடவடிக்கைகளும் சட்டங்களும் மாநில உரிமைகளைப் பறிக்கின்றன.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கேந்திரக் கூட்டாளி என்கிற முறையில் ஏகாதிபத்திய சாய்மானத்துடன் கூடிய வெளியுறவு கொள்கையை கடைப்பிடித்து, இந்தியாவின் நலன்களை சமரசம் செய்து வருகிறது.
ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாட்டை நிதிப்பங்கீட்டில் பழிவாங்குவது, ஆளுநர்களை ஒன்றிய அரசின் முகவர்களாகப் பயன்படுத்தி, மாநில அரசின் செயல்பாட்டை முடக்குவது, பொதுப்பட்டியலில் கல்வி இருந்தாலும் மத்திய அதிகாரத்தை வைத்து வளைக்க முயற்சித்தல், நிதியை மறுத்தல், மொழி திணிப்பு,, விவசாய விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகும் விலை மறுத்தல், விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைப் புறக்கணித்தல், ஊரக வேலை உறுதி சட்டத்தை சிதைத்தல், விதை சட்டம், தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பு, மின்சார திருத்த சட்ட மசோதா உள்ளிட்ட நடவடிக்கைகள், கடும் விலை உயர்வு, கால் நூற்றாண்டு காணாத வேலையின்மை போன்ற அனைத்தும் எதிர்க்கப்பட வேண்டியவை. ஐரோப்பிய ஒன்றியத்தோடும், அமெரிக்காவுடனும் மோடி அரசு கையெழுத்திட்டுள்ள வர்த்தக உடன்படிக்கையின் பிரிவுகளும், மிக மோசமான வெளியுறவு அணுகுமுறையும் நமது விவசாயத்தையும், தொழிலையும் பாதிக்கின்றன.
இவையல்லாமல், மதவெறி அரசியலை முன்னெடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழகத்தில் பாஜக செய்து வருகிறது. திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவதற்கான முயற்சிகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்டம் மைக்கேல் பட்டியில் மாணவியின் மரணத்திற்கு கிறித்துவ பள்ளி செய்த மதமாற்றம் தான் காரணம் என அன்றைய பாஜக தலைவர் அண்ணாமலையும், சங் பரிவாரமும் செய்த பிரச்சாரம் தற்போது சிபிஐ குற்ற பத்திரிக்கைக்கு பின்னரே முறியடிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அரசியல் ஆதாய வாக்கு வங்கி நடவடிக்கைகளுக்கு, உள்ளூர் மக்கள் பெரிதாகத் துணை போகவில்லை என்ற நிலையில் – நாம் அந்த சூழலை பாதுகாக்க சமூகத் தளத்திலும் உழைக்க வேண்டும்.
“விதைக்காமல் அறுவடை செய்ய நினைக்கக் கூடாது” என 1920இல் ஒரு குறிப்பிட்ட சூழலில் இத்தாலிய பிரதிநிதிகளிடம் தோழர் லெனின் கூறியதாக, பேராசிரியர் அய்ஜாஸ் அகமது ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இன்று தமிழகச் சூழலில் இடதுசாரிகள் விதைக்க வேண்டிய பல அம்சங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது உள்ளூர் மட்டத்தில் மதநல்லிணக்க சூழலை பாதுகாத்து, மதச்சார்பற்ற அரசியலை ஆழ விதைப்பது. அப்போதுதான் சங்பரிவாரத்தின் மதவெறி நடவடிக்கைகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கத்தை அறுவடை செய்திட முடியும்.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, கூட்டணி தர்மம் என்கிற பெயரில் பாஜகவின் மேற்கூறிய படுமோசமான மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்க்க மறுத்து மௌனம் காக்கிறது அல்லது ஆதரிக்கிறது. சிலவற்றுக்கே, அதுவும் பெயரளவில், மாற்றுக் கருத்தை முன்வைக்கிறது. எஸ் ஐ ஆர், தொழிலாளர் விரோத தொகுப்பு சட்டங்கள், 3 வேளாண் சட்டங்கள், விதை சட்டம், வி பி கிராம் ஜி சட்டம் போன்ற கொடூர நடவடிக்கைகளை அதிமுக ஆதரித்தது, நியாயப்படுத்தியது. மாநில உரிமைகள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்கிறது. குறுகிய நோக்கத்துடன் ஆதரிக்கவும் செய்கிறது. மதவெறி வெறுப்பு அரசியல் தமிழகத்தில் ஊடாட இடமளிக்கிறது. இக்கால கட்டத்தில் பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவதில் படுதோல்வி அடைந்திருக்கிறது. அடிப்படை கொள்கைகளை நீர்த்துப் போக வைத்திருக்கிறது.
இப்படியான சூழலில், எல்லோருமே மோசம் என்ற வகையில் அனைத்து கட்சிகளையும் விமர்சிப்பது, திமுக அணியை கூர்மையாக எதிர்ப்பது என்ற அணுகுமுறையுடன் நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகள் ஈடுபடுவதைக் காண்கிறோம். இதனை மேலோட்டமாகப் பார்க்க முடியாது. தமிழகம் தனித்த தீவு அல்ல, ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளாலும், சங் பரிவார செயல்திட்டத்தாலும் பாதிப்புகள் கடுமையாகும்போது அந்தக் காரணங்களை விமர்சிக்காமல் மவுனம் காப்பது நடுநிலை அல்ல, தவறுக்கு உடந்தையாக நிற்கும் அணுகுமுறைதான்.
நவீன தாராளமய கொள்கைகளை மென்மேலும் தீவிரமாக்கி, அதன் பாதிப்புகளுக்கு எதிரான குரலை ஒடுக்கவும், மடைமாற்றவும் பின்பற்றப்படும் நவ பாசிச அணுகுமுறைகளை மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே தெளிவாக உணர்ந்து முன்வைக்கிறது. அதிலிருந்துதான் நமது தேர்தல் அணுகுமுறையும் வருகிறது. இவ்வாறான தெளிவான தேர்தல் உத்திகளின் மூலம், பாஜக/ஆர்.எஸ்.எஸ் சக்திகளை பலவீனப்படுத்துவதுடன், களப் போராட்டங்களைத் தேர்தல் போராட்டத்தோடும், சட்டமன்ற நாடாளுமன்றங்களில் நடக்கும் போராட்டங்களோடும் இணைக்கும் சாத்தியமுள்ள ஒரு வலிமையான இடது ஜனநாயக முன்னணியை உருவாக்கும் நம்முடைய நடைமுறை உத்தியை அமல்படுத்துவதில் கவனம் தேவைப்படுகிறது.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply