
நவதாராளமய ஆட்சியில் கிராமப்புற முரண்பாடுகளும்,வர்க்கப் போராட்டமும்!
விஜூ கிருஷ்ணன்
நவதாராளமய பொருளாதாரக் கொள்கைகள் அமலாக்கப்பட்டு வரும் கடந்த 35 ஆண்டுகள், கிராமப்புறங்களில் நீடித்த மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. அதிகப் பெரும்பான்மையான எண்ணிக்கையில் நிலமற்றவர்கள் வாழும் கிராமப்புறத்தில் அவர்களின் வாழ்வாதாரங்களில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விவசாயத் தொழிலாளர்கள், ஏழைகள், நடுத்தரப் பிரிவினர், குத்தகை விவசாயிகள், கைவினைஞர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்களாக உள்ள நிலமற்றவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பணக்கார விவசாயிகளில் ஒரு பகுதியினர் மீதும் இக்கொள்கைகளின் தாக்கம் உள்ளது. இந்தக் காலப்பகுதியில் உண்மை வருமானம் வீழ்ச்சியடைந்திருப்பதுடன், விவசாயச் செலவுகளும், வாழ்வாதாரச் செலவுகளும் அதிகமாகியுள்ளன. கிராமங்களில் கடன் அதிகமாகியுள்ளது; உடைமைகள் இழப்பும், நெருக்கடியின் காரணமாக இடம்பெயர்வதும் ஏற்பட்டுள்ளது.
நெருக்கடியின் தீவிரம்
விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்திருப்பது கடந்த 35 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் மிக மோசமான வெளிப்பாடாகும். நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் பதினொரு ஆண்டுகளில், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தற்கொலைகளோடு இந்த நிகழ்வுப் போக்கு மிகவும் தீவிரமாகியுள்ளது (NCRB தரவுகள்). இதற்கு முந்தைய 24 ஆண்டுகளில் நடைபெற்ற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்களின் தற்கொலைகளை விடவும் இந்த எண்ணிக்கை கூடுதலாகும். 2023ஆம் ஆண்டில் மட்டும், விவசாயத்தில் ஈடுபட்டு வந்த மொத்தம் 10,786 பேர் (4,690 விவசாயிகள் மற்றும் 6,096 விவசாயத் தொழிலாளர்கள் உட்பட) தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தினக்கூலித் தொழிலாளர்களின் தற்கொலைகள் அதிகரித்துள்ளன (2023 ஆம் ஆண்டில் 47,160 தற்கொலைகள்). 2014ஆம் ஆண்டில், தினக்கூலித் தொழிலாளர்களின் தற்கொலை, ஒட்டுமொத்தத்தில் 12 சதவீதமாக இருந்தன; இது 2023ஆம் ஆண்டில், இது 27.5 சதவீதமாக உயர்ந்தது. 2018 மற்றும் 2023க்கு இடையில் தினக்கூலித் தொழிலாளர்களின் தற்கொலைகள் 45 சதவீதம் அதிகரித்துள்ளன. பீகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட பன்னிரண்டு மாநிலங்கள் அதிகாரப்பூர்வமாக ஒரு விவசாயி தற்கொலை கூட பதிவு செய்யவில்லை என்பதைக் கருத்தில் கொள்ளும்போது நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
கிராமப்புற முரண்பாடுகள்
இந்தக் காலப்பகுதியில் (1991-2025) கிராமப்புற முரண்பாடுகள் மேலும் தீவிரமாகியுள்ளன. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடைவெளி கூடுதலாகியுள்ளது; ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சுரண்டல் கட்டமைப்பின் காரணமாக சுமைகள் மேலும் அதிகமாகின்றன; வருமானம் குறைகிறது; வேலைவாய்ப்புகளும் குறைகின்றன. இதனால் மக்களிடம் வறுமையும், பட்டினியும் அதிகரிக்கின்றன. ஊட்டச்சத்துக் குறைகிறது. நிலமும், சொத்துக்களும், விவசாய வருமானமும், விவசாயமல்லாத வருமானமும் ஓரிடத்தில் குவிதல் தீவிரமடைந்துள்ளது. முதலாளித்துவத்தின் வளர்ச்சியும், விரிவாக்கமும், தீவிரமும் வறுமையை அதிகரித்து, உடமைகளை இழக்கச் செய்து, விவசாயிகளைப் பாட்டாளி வர்க்கமாதலுக்கு இட்டுச் சென்றுள்ளன. ஏழை விவசாயிகளும், நடுத்தர விவசாயிகளும் கொண்ட பரந்தப் பிரிவினர் விவசாயமல்லாத வேலைகளைச் செய்யும் புதிய பிரிவுகளில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். விவசாய வேலைகளிலும், விவசாயமல்லாத வேலைகளிலும் ஈடுபடும் கூலித் தொழிலாளர்களே, கிராமப்புற உடலுழைப்புத் தொழிலாளர்களின் பெரிய வர்க்கமாக உள்ளனர். கடனுக்கு ஆளான விவசாயிகள், தங்கள் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். இதனால், இன்று ஒரு விவசாயியாக இருப்பவர் நாளை நிலமற்ற குத்தகை விவசாயியாகவோ, விவசாயத் தொழிலாளியாகவோ மாறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. விரைவில் நகரங்களில் கிராமப்புறத் தொழிலாளியாகவோ, புலம்பெயர்ந்த தொழிலாளியாகவோ, நிரந்தரமற்ற வேலைகளில், பாதுகாப்பற்ற நிலைமைக்குத் தள்ளப்படுவார். கொரோனா பெருந்தொற்றும், அதன் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கும், அக்கறையற்ற அரசின் செயல்பாடுகளும், உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களையும், வாழ்க்கையையும் அழித்தன. நம்முடைய வர்க்க, வெகுஜன முன்னணிகள் மேலும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் செயல்படுவதற்கான சாத்தியத்தையும், அவசியத்தையும் இந்தக் காரணி எடுத்துக் காட்டுகிறது.
2025 ஏப்ரல் மாதத்தில் மதுரையில் நடந்த கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட அரசியல் ஆய்வறிக்கை இந்த நிகழ்வுப் போக்குகளைப் பின்வருமாறு முன்வைக்கிறது: ஆளும் வர்க்கங்களின் ஒரு பகுதியாக உள்ள கிராமப்புறப் பணக்காரர்களுக்கும், ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர்களை உள்ளடக்கிய கிராமப்புற ஏழைகளுக்கும் இடையிலான முரண்பாடு, கிராமப்புறங்களில் நிலவும் முக்கிய முரண்பாடு ஆகும். நவதாராளமய காலத்தில் இந்த முரண்பாடானது ஒருபுறம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான அரசின் கொள்கைகளுக்கும், மறுபுறம் ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் இடையிலான மோதலில் வெளிப்படுகிறது. சில அரசுக் கொள்கைகளுக்கும், கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளுக்கும் எதிராக முதலாளித்துவ விவசாயிகளும், நிலப்பிரபுக்களுக்குமான மோதலும் உள்ளது. இது ஆளும் வர்க்கங்களின் பிரிவுகளுக்குள் நடக்கும் குடும்பப் பூசலின் வெளிப்பாடாகும். இந்த நிலைமைகள், நிலம் கட்டாயப்படுத்திக் கையகப்படுத்துதலுக்கும், அரசு ஆதரவுடன் நிலம் அபகரித்தலுக்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன.
முழக்கங்களை ஆய்வு செய்வோம்
இந்தியாவில் நிலவும் விவசாய உறவுகளைப் பற்றிய திட்டவட்டமான பகுப்பாய்வானது, கிராமப்புறங்களில் முதலாளித்துவ உறவுகள் வளர்ந்து வருவதை நாட்டின் முக்கியப் போக்காக அடையாளம் காட்டுகிறது. இது பிராந்தியங்களுக்கிடையில் நிலவும் பன்முக வேறுபாடுகளையும், பல ஆண்டுகளாகத் தீவிரமடைந்து வரும் முதலாளித்துவ உறவுகளின் சமச்சீரற்ற வளர்ச்சியிலும் வெளிப்படுகிறது. நிலவுடைமைச் சமூகத்தின் எச்சங்கள், பழைய நிறுவனங்கள், சமூக அமைப்புகள் அனைத்தும் இன்றுவரை தொடர்ந்து நிலவுவதுடன் சுரண்டலுக்கான கருவிகளாகவும் செயல்படுகின்றன. நாட்டின் பெரும்பான்மைப் பகுதிகளில் நிலச் சீர்திருத்தப் பணி முடிக்கப்படாத நிலைமை, நிலவுடைமைச் சமூக எச்சங்கள் தொடர்வதற்கும், நிலவுடைமை சீரற்று இருப்பதற்குமான பல்வேறு காரணிகளில் ஒன்றாகும்.
விவசாயத் தொழிலாளர்களையும், ஏழை விவசாயிகளையும் மையமாகக் கொண்ட விவசாயி ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதை வலியுறுத்த வேண்டும். பணக்கார விவசாயிகளின் முக்கியக் கோரிக்கைகளை மட்டும் எழுப்புகிற ஒரு அமைப்பாக அல்லாமல், நிலமற்றவர்கள், ஏழைகள், குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள், நடுத்தர விவசாயிகள் ஆகியோரின் பெருந்திரளான மக்களின் தீவிர முன்னணியாக அது இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு நம்முடைய முழக்கங்களைத் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்துவது தேவையாகும். ஏகாதிபத்திய உலகமயத்திற்கு எதிரான போராட்டத்தில் கைகோர்க்கத் தயாராகவுள்ள பணக்கார விவசாயிகளின் பிரிவுகளை ஈர்க்க முயற்சிகள் மேற்கொள்ளும் அதே சமயத்தில், கிராமப்புற ஏழைகளின் அடிப்படைக் கோரிக்கைகளின் விஷயத்தில் அவர்களின் பாத்திரம் பற்றிய எந்தவொரு பிரமைகளுக்கும் நாம் இரையாகிவிடக் கூடாது.
பணக்கார விவசாயிகள்
பணக்கார விவசாயிகள் பொதுவாகப் பெரிய அளவில் நிலவுடைமை வைத்துள்ளனர். தொழிலாளர்களைக் கூலிக்கு அமர்த்துவதன் மூலமும், நிலத்தைக் குத்தகைக்கு விடுவதன் மூலமும்/ குத்தகை வாங்குவதன் மூலமும் வருமானத்தை ஈட்டுகிறார்கள். கிராமப்புறச் செல்வந்தர்கள் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். அதில் அரை நிலப்பிரபுக்கள், முதலாளித்துவ நிலப்பிரபுக்கள், பணக்கார வர்த்தகர்கள், கந்துவட்டிக்காரர்கள், ஒப்பந்தக்காரர்கள், முதலாளித்துவ நிறுவனங்களின் உரிமையாளர்கள் போன்றோர் அடங்குவர்.
அவர்களில் சில பிரிவுகள் பெரு முதலாளித்துவம் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் விருப்பத்தின் பேரில் நடைமுறைப்படுத்தப்படும் அரசின் கொள்கைகள் மற்றும் ஏகபோகச் சார்பு நடவடிக்கைகளுடன் மோதக் கூடும். வரலாற்றின் சில சமயங்களில், இந்த மோதல் முன்னணிக்கு நெருக்கமாக வருகிறது; அத்தகைய சந்தர்ப்பங்களில், எதிர்ப்பைப் பலப்படுத்துவதற்கும், ஆளும் வர்க்கங்களுக்குள் உள்ள முரண்பாடுகளைப் பயன்படுத்துவதற்கும், சாத்தியமான வகையில் பிரச்சினை அடிப்படையிலான விரிவான ஒற்றுமையைக் கட்டியெழுப்ப நாம் பாடுபட வேண்டும். இந்த ஆளும் வர்க்க மோதல்கள், சில சமயங்களில், உழைக்கும் மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படலாம்.
பணக்காரர்களில் புதிய பிரிவினர்
ஒருபுறம் கிராமப்புறப் பணக்காரக் கூட்டுக்கும், மறுபுறம் முக்கியமாக விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், கிராமப்புறத் தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கும் இடையே ஒரு கூர்மையான பிளவு பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. நிலப்பிரபுக்கள், பெரு முதலாளி விவசாயிகள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பெரு வர்த்தகர்கள் ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்துள்ள கிராமப்புறப் பணக்காரர்கள் ஒரு மேலாதிக்கச் சக்தியாக உள்ளனர். நிலத்தின் மீதான கட்டுப்பாடே அந்த மேலாதிக்க அதிகாரத்தின் அடிப்படையாக உள்ளது. அவர்கள் கந்துவட்டி, அரவை ஆலைகள், பால் பண்ணைகள், உணவுத் தானிய உற்பத்தி – வணிகம், விவசாய இடுபொருள் வர்த்தகம்/ஊக வர்த்தகம், நிலம் வியாபாரம், கட்டடக் கட்டுமானம், திரையரங்குகள், பெட்ரோல் பங்குகள், போக்குவரத்து வசதிகள், விவசாய இயந்திரங்களைக் குத்தகைக்கு விடுதல் மற்றும் கல்வி நிறுவனம் நடத்துதல் போன்ற வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் செல்வாக்கு மிகவும் அதிகமாக உள்ளது.
கிராமங்களில் செயல்படும் ஒவ்வொரு துறையிலும் அரசியல், சமூக மற்றும் கலாச்சாரத் துறைகள் உட்பட அவர்களுடைய இருப்பைக் கொண்டுள்ளது. கிராமப்புறப் பணக்காரக் கூட்டில், முக்கியமாக உயர் சாதியினரே இடம்பெற்றுள்ளனர். அவர்களே பெரும்பாலும் அரசியல் அதிகாரத்தின் மீதும், சமூக வாழ்விலும், பண்பாட்டிலும் பிடிமானம் கொண்டுள்ளனர். அவர்கள் ஆளும் வர்க்கங்களின் தலைமையிலான அரசியல் கட்சிகளின் தலைவர்களாகவும் உள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பி.எம்-கிசான், விவசாயக் கடன் வழங்கல் போன்ற திட்டங்களின் உண்மையான பயனாளிகளை விலக்குவதுடன், அரசாங்கத் திட்டங்களின் பலன்களில் பெரும்பகுதியை இவர்களே கைப்பற்றுகிறார்கள், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும், கிராமப்புறப் பாட்டாளி வர்க்கத்தை உள்ளடக்கிய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பிற மக்கள் கிராமப்புறப் பணக்காரர்களுடன் பல வழிகளில் பிணைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் இன்ன பிறரையும் உள்ளடக்கிய ஊரகப் பாட்டாளி வர்க்கமும் ஊரகப் பணக்காரர்களின் பிடியில் பல்வேறு வகைகளில் பிணைக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கும், ஒடுக்கும் வர்க்கங்களுக்கும் இடையில், சுரண்டப்படுவோருக்கும், சுரண்டுவோருக்கும் பன்முகத் தொடர்பு நிலவுகிறது. கிராம அளவிலான சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையின் அளவும், சுரண்டுவதில் ஊரகப் பணக்காரர்கள் அமைத்துக் கொண்டிருக்கும் கூட்டணியின் இயல்பும் பிராந்தியத்திற்குத் தக்கவாறு பெருமளவில் வேறுபடுகின்றன.
புதிய வட்டிக்காரர்கள்
கிராமப்புறப் பணக்காரர்களிடமிருந்தும், பணக்கார விவசாயிகளின் சில பிரிவினரிடமிருந்தும் புதிய விவசாயக் கந்துவட்டிக்காரர்கள் தோன்றியுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இது கிராமப்புறங்களில் பாரம்பரியமாகக் கந்துவட்டித் தொழிலில் ஈடுபடாத ஒரு மக்கள் பகுதியாகும். இவர்கள் பெரும்பாலும் நிலத்தில் விவசாயத்தில் ஈடுபடாத நிலவுடைமையாளர்களாக உள்ளனர். அவர்கள் தங்களின் நிலத்தைக் குத்தகைக்கு விடுகிறார்கள்; அல்லது விவசாயிகளைத் தம் நிலத்தில் குத்தகைக்கு அமர்த்துகின்றனர். இவர்கள் பி.எம் கிசான், ரிது பந்து, ரிது பரோசா போன்ற அரசுத் திட்டங்களின் பலன்களையும் பெற்றுக் கொள்கிறார்கள்; குறைவான வட்டி விகிதத்தில் பயிர்க்கடன் பெற்றுக் கொள்கின்றனர்.
இவர்களைத் தவிர நுண்நிதி (மைக்ரோ பைனான்ஸ்) நிறுவனங்களும், வங்கி அல்லாத பிற நிதி நிறுவனங்களும் விவசாயிகளை, கிராமப்புற ஏழைகளைச் சுரண்டுகின்றன. பணக்கார விவசாயிகளில் சில பிரிவுகள் கூட கந்துவட்டித் தொழிலில் ஈடுபடுகின்றன. குறிப்பாக, அவர்கள் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியைக் குத்தகைக்கு விடும்போது. இயற்கைப் பேரழிவுகள் மற்றும் பயிர் இழப்புகள் ஏற்பட்டால், புதிய விவசாயக் கந்துவட்டிக்காரர்களுக்கு அதில் எந்தப் பொறுப்பும் இல்லை; முழுச் சுமையும் குத்தகை விவசாயிகள் மீது விழுகிறது. நகரங்களில் சேவைத்துறைகளில் பணியாற்றும் ஒரு பிரிவும், கிராமப்புறங்களில் நிலவுடைமை கொண்டுள்ளது. அவர்கள் பெரும் நிலவுடைமையாளர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்குக் கிராமத்தோடு உள்ள ஒரே தொடர்பு அவர்களுடைய நிலம் மட்டுமே. ஏழைக் குத்தகை விவசாயிகளின் பக்கம் நாம் உறுதியாக இருக்க வேண்டும். நிறுவனக் கடன், மானியங்கள், நில வெளியேற்றங்களிலிருந்து பாதுகாப்பு, வாடகையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பயிர் இழப்பு ஏற்பட்டால் வாடகையைப் பகுதியளவு திருப்பித் தருதல் ஆகியவற்றைப் பெற்றிட உரிமம் பெற்ற சாகுபடியாளர் அட்டைகளுக்கான கோரிக்கை எழுப்பப்பட வேண்டும். இது கிராமப்புறப் பணக்காரர்களின் நலன்களுக்கு எதிராகவும் செயல்படும்; மேலும் ஏழை விவசாயிகளை நம்மை நோக்கி ஈர்க்கும்.
இடது மாற்றை உரக்கச் சொல்வோம்
இந்திய மக்கள் தொகையில் 70 சதவீதத்திற்கும் மேல் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். எனவே, தீவிரமான மாற்றங்களைச் சாதிக்க வேண்டுமானால், விவசாயிகள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது மிகவும் முக்கியம். மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மைய அச்சாக அமைந்தது விவசாயப் புரட்சியே ஆகும். விவசாயிகள் சங்கமும், விவசாயத் தொழிலாளர் சங்கமும் – கிராமப்புறங்களில் வாழும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஒற்றுமையைக் கட்டமைப்பதில் மிக முக்கியமான பங்கை வகிக்க வேண்டும். பற்றியெரியும் உள்ளூர் பிரச்சனைகளாக அமைந்த நில உரிமை, வன உரிமை, வீட்டுமனை, கூலி ஆகிய கோரிக்கைகளில் போராட்டங்களைக் கட்டமைப்பதன் மூலம் இந்த ஒற்றுமையை உருவாக்கிட வேண்டும்.
இந்தப் போராட்டங்களில் ஈர்க்கப்படும் புதிய பிரிவினரைக் கட்சிக்குள் ஈர்ப்பதன் மூலம் புதிய பகுதிகளை நோக்கி விரிவடைந்திட வேண்டும். மக்கள் நலனை மையப்படுத்திய இடதுசாரி மாற்றைக் கட்டமைப்பதற்கு விவசாயி-தொழிலாளி ஒற்றுமையே வலுவான அடித்தளமாக அமைந்திடும். பெருநிறுவனங்களுக்கு ஆதரவான நவதாராளமயக் கொள்கைகள் உட்பட ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளை வலுவாக எதிர்த்து மோதுவதன் மூலமே இந்தப் பணிகளை முடிக்க முடியும்.
சம வாய்ப்புகளை மறுத்து, வளங்களைச் சமநீதியோடு பகிர மறுத்து நிற்கும் சாதி, பாலின அடிப்படையிலான ஒடுக்குமுறைகளையும், ஒதுக்குதல்களையும் எதிர்க்கும் போராட்டம், ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைந்த அங்கமாகும். சாதி, பாலின அடிப்படையிலான ஒடுக்குமுறைகளுக்கு இடதுசாரிகள் முகம் கொடுப்பதில்லை என்ற சித்திரத்தைத் தீட்டுவதற்கு, அடையாள அரசியல் சக்திகள் தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். எனவே, நாம் பாலின ஒடுக்குமுறைக்கும், சாதி ஒடுக்குமுறைக்கும் எதிரான தியாகம் செறிந்த போராட்ட வரலாற்றை இளந்தலைமுறையினருக்குத் தொடர்ந்து நினைவூட்டுவது அவசியமாகும். பிரிவினை விதைக்கும் வகுப்புவாத, சாதியவாத சக்திகளை எதிர்ப்பதும், இடதுசாரி மாற்றினை மையமாக வைத்துச் சாத்தியமான அளவு பரந்த மக்களின் ஒற்றுமையைக் கட்டமைப்பதும் மட்டுமே நம்பிக்கையை உருவாக்கிடும்; நமது முழக்கங்களுக்கு வலுவூட்டிடும்.
தமிழில்: இரா.சிந்தன்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply