
மாநில அரசாங்கங்கள் குறித்த மார்க்சிஸ்ட் கட்சியின் அணுகுமுறையும், கேரளாவின் இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசாங்கமும்
பிரகாஷ் காரத்
இந்தியாவில் மாநில அரசாங்கங்களில் பங்கேற்று வழிநடத்தியதில் சி.பி.ஐ(எம்) செழுமையான அனுபவங்களை கொண்டுள்ளது. 1957-59 ஆம் ஆண்டுகளில் கேரளாவில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையின் அனுபவத்தின் அடிப்படையில், 1964 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏழாவது மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சி.பி.ஐ(எம்)-இன் கட்சித் திட்டத்தில், மாநில அரசாங்கங்களில் பங்கேற்பது குறித்த ஒரு பத்தி சேர்க்கப்பட்டது. இந்த 112வது பத்தி பின்வருமாறு கூறுகிறது:
“தற்போதைய ஆளும் வர்க்கங்களை அகற்றி, தொழிலாளர் வர்க்கம் மற்றும் விவசாயிகளின் உறுதியான கூட்டணியின் அடிப்படையில் ஒரு புதிய ஜனநாயக அரசையும் அரசாங்கத்தையும் நிறுவும் பணியை மக்களுக்கு முன்னால் வைத்திருக்கும் அதே வேளையில், மக்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் ஒரு மிதமான திட்டத்தை செயல்படுத்த உறுதியளிக்கும் அரசாங்கங்களை உருவாக்குவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் கட்சி பயன்படுத்தும். இத்தகைய அரசாங்கங்களின் உருவாக்கம், உழைக்கும் மக்களின் புரட்சிகர இயக்கத்திற்கு பெரும் உத்வேகத்தை அளிக்கும். இது ஜனநாயக முன்னணியை கட்டியெழுப்பும் செயல்முறைக்கு உதவும். இருப்பினும், இது நாட்டின் அடிப்படையான பொருளாதார, அரசியல் பிரச்சனைகளை எந்த வகையிலும் தீர்க்காது. எனவே, பெரு முதலாளித்துவத்தால் தலைமை தாங்கப்படும் தற்போதைய முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசையும் அரசாங்கத்தையும் மாற்றுவதன் அவசியத்தை கட்சி மக்களுக்கு தொடர்ந்து கற்பிக்கும். அதேவேளையில், மக்களுக்கு உடனடி நிவாரணம் அளித்து, வெகுஜன இயக்கத்தை வலுப்படுத்தும் இத்தகைய இடைக்கால அரசாங்கங்களை அமைப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் கட்சி பயன்படுத்தும்.”
திட்டம் காட்டும் திசை
இந்த திட்டத்தின் அடிப்படையிலான வழிகாட்டுதலின்படிதான் சி.பி.ஐ(எம்) மாநில அரசாங்கங்களை அமைப்பதிலும், அவற்றில் பங்கேற்பதிலும் தனது உக்திகளை அவ்வப்போது வகுத்தது. 1967 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் ஒன்பது மாநிலங்களில் தோல்வியடைந்தபோது, நாட்டில் காங்கிரஸ் அல்லாத பல்வேறு மாநில அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன. அப்போது, கட்சியின் மத்தியக் குழு “தற்போதைய நிலைமை மற்றும் கடமைகள்” என்ற தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. இந்தத் தீர்மானத்தில், கொள்கைகளை வகுப்பதிலும், அவற்றை செயல்படுத்துவதிலும் ஒரு தீர்க்கமான பங்கை வகிக்கக்கூடிய மாநில அரசாங்கங்களில் மட்டுமே சேரும் என்று கட்சி தெளிவாகக் கூறியது.
இந்த புரிதலின் அடிப்படையில், இடதுசாரி, ஜனநாயக சக்திகள் வலுவான நிலையில் இருந்த கேரளாவிலும் மேற்கு வங்காளத்திலும் உருவான ஐக்கிய முன்னணி அரசாங்கங்களில் கட்சி இணைந்தது. இடதுசாரி ஜனநாயக சக்திகளுக்கு தீர்க்கமான செல்வாக்கு இல்லாத பீகார், உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உருவான காங்கிரஸ் அல்லாத மாநில அரசாங்கங்களில் சேரவில்லை. சி.பி.ஐ(எம்) போலல்லாமல், சி.பி.ஐ இந்த மாநில அரசாங்கங்களில் இணைந்து அமைச்சரவையின் ஒரு பகுதியாக இருந்தது.
மேற்கு வங்காளத்திலும் கேரளாவிலும் இரண்டு ஐக்கிய முன்னணி அரசாங்கங்களை நடத்திய அனுபவம், அரசாங்கத்தில் எப்படி இருக்க வேண்டும்; தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள், பிற உழைக்கும் பிரிவினரின் நலன்களுக்காக கொள்கைகளை வகுப்பது, வெகுஜன இயக்கங்களை வலுப்படுத்துவது எப்படி என்பது குறித்த விலைமதிப்பற்ற அனுபவத்தை கட்சிக்கு அளித்தது. கேரளா, மேற்கு வங்காளம் இரண்டிலும், நில சீர்திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. இந்த காலகட்டத்தில், மேற்கு வங்காளத்தில் நிலப் போராட்டங்கள் பெரிய அளவில் வளர்ந்தன. மாநில அரசாங்கங்களின் குறுகிய அதிகார வரம்பிற்குள், முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசாங்கத்திலிருந்து மாறுபட்ட கொள்கை நடவடிக்கைகளை அரசாங்கத்தினால் மேற்கொள்ள முடிந்தது. கேரளா, மேற்கு வங்காளம் இரண்டிலும், அரசாங்கமானது இடதுசாரிகளின் முழுமையாகக் கட்டுப்பாட்டில் இல்லாததாலும், காங்கிரஸ் மத்திய அரசு அவற்றை சீர்குலைக்க செயல்பட்டதாலும், இந்த அரசாங்கங்கள் அதன் ஐந்தாண்டு காலம் முழுவதும் நீடிக்க முடியவில்லை.
இடதுசாரிகள் தலைமையிலான மூன்று அரசுகள்
இடதுசாரிகள் தலைமையிலான மாநில அரசாங்கங்களின் அடுத்த கட்டம் அவசரகாலத்திற்குப் பிந்தைய காலத்தில் வந்தது, அப்போது, மேற்கு வங்காளம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் சி.பி.ஐ(எம்) தலைமையிலான மூன்று மாநில அரசாங்கங்கள் உருவாயின. இந்த அரசாங்கங்கள் நிலச் சீர்திருத்தங்களை செயல்படுத்தவும், பொதுக்கல்வி, பொது சுகாதாரம், பொதுவிநியோக முறை ஆகியவற்றை வலுப்படுத்தவும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரங்களை பரவலாக்கவும் முயன்றன. பொதுத்துறை நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் பொதுத்துறையை கட்டியெழுப்பவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த அரசாங்கங்களை நடத்திய அனுபவத்தின் அடிப்படையில், 2000 ஆம் ஆண்டில் கட்சித் திட்டம் புதுப்பிக்கப்பட்டபோது, மாநில அரசாங்கங்களை நடத்துவது குறித்த உத்தியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. 1964 ஆம் ஆண்டு திட்டம் “மக்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் ஒரு மிதமான திட்டத்தை” செயல்படுத்துவது பற்றி பேசியது. இத்தகைய மாநில அரசாங்கங்கள் நீண்ட காலம் நீடிக்காது, ஏனெனில், ஆளும் வர்க்கங்கள் அதை அனுமதிக்காது என்ற அனுமானத்தின் அடிப்படையில் இது கூறப்பட்டது. இப்போது, மேற்கு வங்காள இடது முன்னணி அரசாங்கம் இரண்டு தசாப்தங்களாக சேவை செய்ததாலும், திரிபுரா மற்றும் கேரளாவில் முழு காலமும் சேவை செய்ததாலும், மிதமான அல்லது உடனடி நிவாரணம் அளிப்பது பற்றி மட்டும் பேசுவது போதுமானதாக இல்லை. எனவே, புதுப்பிக்கப்பட்ட திட்டத்தில், இது பின்வருமாறு திருத்தப்பட்டது: “மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் ஒரு திட்டத்தை செயல்படுத்த உறுதியளிக்கும் அரசாங்கங்களை உருவாக்குவது; தற்போதுள்ள வரம்புகளுக்குள் மாற்றுக் கொள்கைகளை திட்டமிட்டு செயல்படுத்த முயற்சிப்பது”. ஏனெனில், நீண்ட காலம் இயங்கும் அரசாங்கங்கள் உடனடி நிவாரணம் தருவது மட்டுமல்லாமல், வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையும் மேற்கொள்ளும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள்.
நவதாராளமயத்தின் கீழ் புதிய நிலைமை
இருப்பினும், 1991 ஆம் ஆண்டில் தாராளமயமாக்கலின் வருகை மற்றும் அதன் விளைவாக நவதாராளமயக் கொள்கைகளின் தொடக்கத்துடன் தேசிய நிலைமையில் ஒரு மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டது. நவதாராளமயக் கொள்கைகள், அதாவது கட்டுப்பாடுகளை நீக்குதல், தனியார்மயமாக்கல், சந்தை சக்திகள் செயல்படத் தொடங்குதல் மற்றும் அரசு தானே தனியார் மூலதனம் மற்றும் நிறுவனங்களை ஊக்குவித்தல் ஆகியவற்றைக் கொண்ட ஒரு முழுமையான கோட்பாட்டு மாற்றம் ஏற்பட்டது.
முக்கிய பொருளாதார செயல்பாடுகளிலிருந்து அரசு விலகியதால், ஏற்கனவே குறுகிய வளங்களால் முடக்கப்பட்டிருந்த மாநில அரசாங்கங்கள், ஒரு மாற்றுப் பாதையில் செல்லவோ அல்லது நவதாராளமயக் கோட்பாட்டிற்கு முரணான கொள்கைகளைத் தொடரவோ முடியவில்லை. முதலாளித்துவ கட்சிகளால் நடத்தப்பட்ட அனைத்து மாநில அரசாங்கங்களும் நவதாராளமயக் கொள்கைகளின் கட்டமைப்பிற்குள் வந்தன.
மேற்கு வங்காளம், கேரளா மற்றும் திரிபுராவின் இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்களுக்கு, இந்த புதிய நிலைமை பெரிய சவால்களை முன்வைத்தது. 18வது மாநாட்டின் (2005) அரசியல் தீர்மானம் இந்த நிலைமையைக் குறிப்பிட்டு பின்வருமாறு கூறியது:
“மத்திய அரசின் புதிய தாராளமயக் கொள்கைகளை எதிர்கொண்டு, இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்கள் மக்கள் சார்பு மற்றும் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்யும் கொள்கைகளைத் தொடர கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம், இடது முன்னணி அரசாங்கங்கள் முக்கிய பகுதிகளில் பொதுத்துறையைப் பாதுகாக்கின்றன, சமூகத் துறையில் பொதுச் செலவினங்களைப் பாதுகாத்து, முடிந்தால் விரிவாக்குகின்றன, மேலும் மத்திய அரசு பின்பற்றும் கொள்கைகளால் மிக மோசமாகப் பாதிக்கப்படும் ஏழைப் பிரிவினரைப் பாதுகாக்க, மாற்றுக் கொள்கைகளை திட்டமிடுகின்றன”. மேலும், இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கங்கள், அனைத்து நிதி ஆதாரங்களும் மத்திய அரசின் கைகளில் குவிக்கப்பட்டதால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் முடக்கப்பட்ட ஒரு சூழ்நிலையில் செயல்பட வேண்டியிருந்தது.
இந்த பின்னணியில்தான், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இருந்து வரும் இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசாங்கத்தின் அனுபவத்தை நாம் பார்க்க வேண்டும். 2016 முதல் 2026 வரையிலான LDF அரசாங்கத்தின் காலம், 2014 இல் மத்தியில் தொடங்கிய மோடி ஆட்சியின் காலத்துடன் ஒரே சமயத்தில் நடக்கிறது. மோடி அரசாங்கத்தின் வருகையுடன், மையப்படுத்தல் மற்றும் சர்வாதிகார உந்துதல் தீவிரப்படுத்தப்பட்டது. கூட்டாட்சி கொள்கை மற்றும் மாநிலங்களின் உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும், பாஜக-ஆர்.எஸ்.எஸ். அரசாங்கம் பாஜக அல்லாத ஆளும் மாநிலங்களுக்கு எதிராக தீவிரமாக பாகுபாடு காட்டுகிறது. இந்த மாநில அரசாங்கங்களின் செயல்பாட்டை பலவீனப்படுத்தவும் சீர்குலைக்கவும் அரசியல், பொருளாதார மற்றும் நிதி நடவடிக்கைகள் இயக்கப்பட்டுள்ளன. ஆளுநர் பதவி அரசியலமைப்பிற்கு முரணான முறையில் மாநில விவகாரங்களில் தலையிட பயன்படுத்தப்படுகிறது.
கேரளாவில் LDF அரசாங்கத்தின் பத்து ஆண்டுகள்
கேரளாவில் LDF அரசாங்கம், முன்னெப்போதும் இல்லாத விதமாக, 2021 இல் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு சாதனையை படைத்தது. நான்கு தசாப்தங்களாக, கேரளாவில் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் அரசாங்கங்கள் மாறி மாறி வந்துள்ளன. LDF அரசாங்கத்தின் இந்த மறுதேர்வு, கேரளாவின் சமச்சீர் வளர்ச்சியை அதிகரிப்பது மற்றும் மக்களின் அனைத்து பிரிவினரின் சமூக நலனை உறுதி செய்வது தொடர்பான தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை செயல்படுத்துவதில் அதன் சாதனையின் காரணமாகும். மோடி அரசாங்கத்தின் இந்துத்துவ-மதவாத உந்துதலை எதிர்கொண்ட அரசாங்கத்தின் உறுதியான மதச்சார்பற்ற நிலைப்பாட்டையும் இது அங்கீகரித்தது. LDF அரசாங்கத்தின் இந்த 10 ஆண்டு காலத்தில், மாநிலத்தில் மத நல்லிணக்கம் நிலவியது; மத வன்முறை அல்லது கலவரம் ஒருமுறை கூட நிகழவில்லை என்பதன் மூலமும் இது காணப்பட்டது.
LDF அரசாங்கம் ஒரு சமச்சீரான, மக்கள் சார்பு வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டியிருந்தது. பல தசாப்தங்களாக, கேரளா மிக அதிக சதவிகித படிப்பறிவு, மிகக் குறைந்த சிசு மரண விகிதம், சமமான பாலின எண்ணிக்கை விகிதம், விரிவான பொது விநியோக முறை போன்ற சிறந்த சமூக குறியீடுகளை கொண்ட சமூகத்தை உருவாக்கியுள்ளது. இது கேரள வளர்ச்சி மாதிரி என்று முன்வைக்கப்பட்டது. இருப்பினும், இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் சில காலத்திற்கு முன்பு சுட்டிக்காட்டியது போல, இந்த “மாதிரி” பிழையற்றது கிடையாது, மேலும் பொருளாதாரத்தில் உற்பத்தித் துறைகளில் அதிகரிப்பு இல்லாமல் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க முடியாது.
எனவே, கடந்த பத்தாண்டு கால LDF அரசாங்கத்தின் ஒரு முக்கியமான பணி, உள்கட்டமைப்பு மேம்பாட்டை பெரிய அளவில் அதிகரிப்பது; விவசாயத்தில் உற்பத்தித்திறன் அளவை உயர்த்துவது மற்றும் தொழில்துறையை விரிவாக்குவது ஆகும். மாநிலத்திற்கு உரிய நிதி மற்றும் வளங்களை மறுப்பதன் மூலம் பாகுபாடு காட்டிய ஒரு விரோதமான மத்திய அரசை எதிர்கொண்டு இதைச் செய்ய வேண்டியிருந்தது. LDF அரசாங்கம் தனது சொந்த வரி வருவாயை அதிகரிப்பதன் மூலம் நிலைமையை சமாளிக்க முயன்றது – இது 2021-22 மற்றும் 2024-25 க்கு இடையில் 70% அதிகரித்துள்ளது. மத்திய அரசு கடன் வாங்குவதற்கு ஒரு உச்சவரம்பை விதித்ததாலும், 3% க்கும் அதிகமான நிதிப் பற்றாக்குறை இருக்கக்கூடாது என்ற நவதாராளமயக் கட்டளையைப் பின்பற்றியதாலும், LDF அரசாங்கம் பட்ஜெட்டுக்கு அப்பாற்பட்ட வழிகள் மூலம் கடன் வாங்கும் முறையை வகுத்தது. கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு வாரியம் (KIIFB) உருவாக்கப்பட்டது. இது 90,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி திரட்டியுள்ளது. இது சாலைகள், புதிய பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள், விளையாட்டு அரங்கங்கள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களின் கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் விவசாய உற்பத்தி சீரான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, மேலும் 2024-25 ஆம் ஆண்டில், தேசிய சராசரியை விட அதிகமாக, 2.5% வளர்ச்சி இருந்தது. தொழில்துறையில், LDF அரசாங்கம் 2022-23 இல் “தொழில் நிறுவனங்களின் ஆண்டு” திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதுவரை, 4,04,378 தொழில்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை 26,940 கோடி ரூபாய் முதலீட்டில் 8,61,162 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. ஸ்டார்ட்அப் துறையில், 2016இல் 300 ஸ்டார்ட்அப்களில் இருந்து 2026 இல் 7,700 என ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. LDF அரசாங்கத்தின் முயற்சி ஒரு அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவதாகும். மேலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் இப்போது அமைப்பில் உறுதியாகப் பரவலாக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் சமூகநலத் துறையில் முன்னேற்றத்தை நிலைநிறுத்த LDF அரசாங்கம் பாடுபட்டுள்ளது. மக்களின் பல்வேறு பிரிவினருக்கு சமூக நலத் திட்டங்களை விரிவுபடுத்த ஒரு பெரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது, முதியோர் ஓய்வூதியங்கள் மற்றும் நல வாரியங்கள் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியங்கள் உட்பட சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்கள் 62 லட்சம் பயனாளிகளை சென்றடைந்துள்ளன. 2016 இல், LDF அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, முதியோர் ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ. 600 ஆக இருந்தது, இது ரூ.1,600 ஆக அதிகரிக்கப்பட்டது, இப்போது ரூ. 2,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கு மாதத்திற்கு ரூ. 1,000 ஓய்வூதியமாகப் பெற உரிமை உண்டு என்ற புதிய பெண்கள் பாதுகாப்பு ஓய்வூதியம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வீட்டுவசதியைப் பொறுத்தவரை, LIFE மிஷன் இதுவரை 4,82,736 வீடுகளை தகுதியானவர்களுக்குக் கட்டி ஒப்படைத்துள்ளது. LDF அரசாங்கத்தின் தொழிலாளர் சார்பு நிலைப்பாடு மற்றும் ஒரு வலுவான தொழிற்சங்க இயக்கத்தின் இருப்பு காரணமாக கேரளாவில் உழைக்கும் மக்களின் பல்வேறு பிரிவினருக்கு மிக உயர்ந்த ஊதிய விகிதம் உள்ளது. உதாரணமாக, 2024-25 இல் நாட்டின் தினசரி கிராமப்புற விவசாயம் அல்லாத ஊதிய விகிதத்தில் கேரளா முதலிடத்தில் உள்ளது – ரூ. 917. இதேபோல், விவசாயத் தொழிலாளர்களின் ஊதியத்தில் அனைத்து மாநிலங்களிலும் கேரளா முதலிடத்தில் உள்ளது – ஒரு நாளைக்கு ரூ. 871.
சமூகநலத் துறையில், கல்விக்கு அதிகபட்ச கவனம் செலுத்தப்பட்டுள்ளது. புதிய கட்டிடங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளுடன் பள்ளிகளை மேம்படுத்துவது, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் குழந்தைகள் சேர்க்கப்படுவதற்கு வழிவகுத்துள்ளது. இது மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு இடம்பெயரும் போக்கை மாற்றியுள்ளது. 2016 மற்றும் 2021 க்கு இடையில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 6.8 லட்சம் கூடுதல் குழந்தைகள் சேர்க்கப்பட்டனர்.
அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட மற்றொரு முக்கிய நடவடிக்கை பொது சுகாதார அமைப்பை மேம்படுத்துவதாகும். இதன் விளைவாக, கேரளாவின் பொது சுகாதாரத் துறை இப்போது நாட்டின் மிக மேம்பட்ட ஒன்றாக உள்ளது. கேரளாவிற்கான சுகாதார குறியீடுகள் தனித்துவமானவை. உதாரணமாக, சிசு மரண விகிதம் 5 ஆக உள்ளது – தேசிய சராசரி 35 ஆக உள்ளது. அமெரிக்காவில் சிசு மரண விகிதம் 5.6 ஆக இருப்பதால் இது ஒரு உலகளாவிய சாதனையாகும்.
மாநிலத்தில் தீவிர வறுமையை ஒழிப்பது ஒரு பெரிய சாதனையாகும். தீவிர வறுமையில் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட 64 ஆயிரம் குடும்பங்கள், பல்வேறு அணுகுமுறைகளின் மூலம் கடுமையான வறுமையிலிருந்து மீட்கப்பட்டு வாழ்வாதார வழிகள் வழங்கப்பட்டன.
கலாச்சாரத் துறையில் அதிகமான மக்கள் கலாச்சாரப் பொருட்கள் மற்றும் வளங்களை பெற முடியும் என்பதை LDF அரசாங்கம் உறுதி செய்ய முயன்றுள்ளது. எனவே, LDF அரசாங்கத்தின் செயல்திறன் மற்றும் சாதனையை, நாட்டில் நவதாராளமய-இந்துத்துவ கூட்டணிக்கு எதிரான இடைவிடாத போராட்டத்திற்கும், ஒரு ஜனநாயக மாற்றுக்கான முயற்சிக்கும் அழைப்பு விடுக்கும் சி.பி.ஐ(எம்)-இன் அரசியல் பாதையின் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும்.
கேரளாவில் LDF அரசாங்கம், கடுமையான கட்டுப்பாடுகளுக்குள், இந்த மாற்று கொள்கைகளின் சில கூறுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. கேரள LDF அரசாங்கத்தின் இந்த மாற்றுப் பாதை, நாட்டில் ஒரு இடதுசாரி மற்றும் ஜனநாயக மாற்றுக்கான ஒட்டுமொத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டும்.
தமிழில் : அபிநவ் சூர்யா
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply