
தொலைநோக்கு (மூல) உத்தியும் நடைமுறை உத்தியும்
Strategy and Tactics
ச. லெனின்
தொலைநோக்கு (மூல) உத்தியும் நடைமுறை உத்தியும் புரட்சிகரப் பயணத்தின் இரு முக்கிய அம்சங்களாகும். தொலைநோக்கு உத்தி என்பது அடிப்படையானது. இது புரட்சியின் குறிப்பிட்ட கட்டம் முழுமைக்கும் பொருந்தும். அரசின் வர்க்கத் தன்மையைத் தெளிவாக வரையறுக்கும். அரசுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் எதிராக திரட்டப்படவேண்டிய வர்க்கங்களை துல்லியமாக முன்வைக்கும். நடைமுறை உத்தி என்பது ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்கு பொருந்தும். புரட்சியின் குறிப்பிட்ட கட்டத்திலும் நடைமுறை உத்திகளை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படலாம். நடைமுறை உத்தி என்பது, தொலைநோக்கு உத்திக்கு முரண்படாமல் எதார்த்த நிலமைகளுக்கு ஏற்ப புரட்சி கட்டத்தின் இலக்கை நோக்கி பயணிப்பதற்கான வழிமுறைகள் எனலாம்.
நடைமுறை உத்திகள் நெகிழ்வான செயல்பாடுகளை கொண்ட, குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்ற இயலும் தன்மை கொண்டவை. வரலாற்று நிலைமைகளுக்கு ஏற்ப கோட்பாட்டையும் நடைமுறையையும் இணைக்கும் (Praxis) முக்கியமான பகுதியாகும். தேவையை கருத்தில் கொண்டும் பெரும்பான்மை மக்களை உழைக்கும் மக்களின் பக்கம் அணிதிரட்டும் வகையில் பின்வாங்குதல், சமரசம், அணிசேர்க்கைகளை ஏற்றுக்கொள்ளுதலும் அதில் அடங்கும். தொலைநோக்கு உத்திக்கு முரண்பாடாத நடைமுறை உத்திகள் மட்டுமே இலக்கை நோக்கி முன்னேற உதவும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
ஒரு புரட்சிகர கட்சி என்கிற வகையில், புரட்சியின் மூலம் கூலி அடிமை முறையை அடியோடு ஒழிப்பதே இறுதி இலக்கு என்கிறபோதும், தற்போதைய சூழலில் கூலி உயர்வுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதும் அவசியமாகிறது. மக்களின் மன ஓட்டத்தையும் உணர்வுகளையும் கவனத்தில் கொண்டு, இலக்கை நோக்கி அவர்களையும் ஒருங்கிணைப்பதற்கான வேலைகளாக அவை திட்டமிடப்படவேண்டும். போராட்டங்களே மக்களின் மன ஓட்டத்தையும் உணர்வுகளையும் புரட்சிகர நிலை நோக்கி உயர்த்தும் களம். அவையே அவர்களை இலக்கை நோக்கிய வெற்றி பயணத்திற்கு தயார்ப்படுத்தும் உலைக்களம் ஆகும்.
இலக்கை நோக்கி பயணிப்பதற்கு இடைக்காலங்களில் எடுக்கப்படுகிற முடிவுகளும் போராட்டங்களும் துணை புரியும் வகையில் அவற்றை முன்னெடுப்பது அவசியமாகும். இறுதி இலக்கை முழுமையாக புரிந்து செயலாற்றுவதே இடைக்காலங்களில் எழும் சவால்களை எதிர்கொள்வதற்கான நடைமுறை உத்திகளை தீர்மானிக்க வழிகாட்டும். அப்போதுதான் அவை சந்தர்ப்பவாத முடிவுகளாக அல்லாமல், இறுதி இலக்கை நோக்கிய பயணத்திற்கான தேவைகளை உள்ளடக்கியதாக அமையும்.
உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களில் நடைபெற்று வந்துள்ள முக்கிய சித்தாந்தப் போராட்டங்கள் தொலைநோக்கு மற்றும் நடைமுறை உத்திகளை சரியாக வகுப்பதற்கு அவசியமாக இருந்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் இது நடைபெற்றது. ‘இந்தியப் புரட்சியின் கட்டம்; சுதந்திரத்திற்கு பிந்தைய ஆளும் வர்க்கங்களின் பாத்திரம்; அவற்றுக்கு எதிர்நிலையில் இருந்த ஆளும் வர்க்கங்களின் கலவை; தன்மை ஆகியவை குறித்து, தேசத்தில் அன்று நிலவிய திட்டவட்டமான சூழல்களின் ஆய்வுக்கு மாறாக, முன்கூட்டியே உருவாக்கப்பட்ட அனுமானங்களையும் புனைவுகளையும் பற்றி நின்றதே இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் திரிபுகள் உருவாகிட வழிவகுத்தன.’
‘புரட்சியின் இலக்கும், நடைமுறை உத்தியும் என்னவாக அமைய வேண்டும் என்பது உட்கட்சி சித்தாந்தப் போராட்டத்தின் மையக்கருவாக இருந்தது. மார்க்சிய – லெனினியத்தின் புரட்சிகர உள்ளடக்கத்தையும், தொழிலாளி வர்க்க சர்வதேசியத்தையும் உயர்த்திப் பிடிக்க சித்தாந்த திரிபுகளுக்கு எதிராக, உறுதியான, தீவிரமான போராட்டங்களே அதை வழிநடத்தின.’
பழைய சிந்தனைகள், புதிய சிந்தனைகளை கொடுப்பதில்லை. பழைய தத்துவங்களும் புதிய தத்துவங்களை வழங்குவதில்லை. வரலாற்று வளர்ச்சிப்போக்குகளே புதிய சிந்தனைகளையும் தத்துவங்களையும் புனர்நிர்ணயம் செய்கின்றன என்கிறார் கிராம்ஷி. தத்துவ அடித்தளத்தையும் கொள்கை இலக்கையும் விட்டுக்கொடுக்காமல், புதிய சூழல்களில் எழும் சவால்களை எதிர்கொள்ள நடைமுறையையும் தத்துவத்தையும் பொருத்திக் கொண்டுச்செல்வது அவசியமாகிறது. ‘திட்டவட்டமான சூழல்களை குறித்த திட்டவட்டமான ஆய்வுகளை மேற்கொள்வதுதான் இயக்கவியலின் உயிர்நாடி’ என்கிறார் லெனின்.
‘திட்டவட்டமான சூழல் குறித்த திட்டவட்டமான ஆய்வு” எனும் லெனினிய கருத்தாக்கத்தை அமலாக்கிட, ஒரு கறார்த்தன்மையுடைய, அறிவியல் பூர்வமான, மார்க்சிய ஆய்வுமுறை பின்பற்றப்பட வேண்டும். திட்டவட்டமான சூழல் என்ன என்பதை சரியாக அடையாளம் கண்டு, அது வர்க்கப் போராட்டத்தின் மீதும் புரட்சிகர இயக்கத்தின் முன்னேற்றத்தின் மீதும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் முறையாக மதிப்பீடு செய்து அகநிலைவாதத்திற்கு இடம் தராமல் முடிவுகளுக்கு வரவேண்டும். திட்டவட்டமான சூழல் குறித்து ஆய்வு, அந்த ஆய்வின் அடிப்படையில் சரியான மதிப்பீடு என இரண்டுமே ஒன்றிலிருந்து இன்னொன்றை பிரிக்க முடியாத அம்சங்கள் ஆகும். திட்டவட்டமான சூழல் குறித்த மதிப்பீட்டில் தவறுகள் இருக்குமானால் இயல்பாகவே அதன் அடிப்படையிலான ஆய்வும், முடிவுகளும் தவறாகவே அமையும். அகநிலை கருத்துக்களின் தாக்கமோ அல்லது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட கருத்துக்களின் தாக்கமோ இல்லாமல் அந்த பகுப்பாய்வினை மேற்கொள்ள வேண்டும்.’
தொலைநோக்கு உத்தி மற்றும் நடைமுறை உத்திகளை தொழிலாளி வர்க்கத்திற்கான சக்தியாக மாற்றுவதற்கான வழிமுறைகள் கட்சி ஸ்தாபனத்திற்கே உள்ளது என்றும், கட்சி அமைப்பே அதற்கான பள்ளியாகும் என்றும் கூறுகிறார் லெனின். கட்சி அமைப்புகள் அவ்வப்போது இதுகுறித்த ஆய்வுகளையும் அதன் அடிப்படையில் முடிவுகளையும் எடுத்து அமலாக்குகின்றன. மாநாடுகள், இன்னும் விரிவான கண்ணோட்டத்தில் அவற்றை மேற்கொள்கின்றன. கடந்த காலத்தில் அமலாக்கப்பட்ட நடைமுறை உத்திகள், நமது தொலைநோக்கு உத்தியை உள்ளடக்கி எந்த அளவிற்கு முன்னேறி உள்ளது, பின்னடைவுகள் என்ன, அடுத்து வரும் காலத்தில் அவற்றை எவ்வாறாக முன்னெடுப்பது என்பதை அவை முன்மொழிந்து, விவாதித்து, தீர்மானிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட புரட்சி கட்டத்திற்குள் பயணிக்கும்பொழுது, கட்சியின் மாநாடுகளும் மையப்படுத்தப்பட்ட அமர்வுகளும் நடைமுறை உத்தியை தீர்மானிக்க உதவுகின்றன. திட்டவட்டமான காலத்தில் நிலவும் திட்டவட்டமான சூழல்களைப் பற்றிய ஆய்வின் அடிப்படையில் இது நடக்கிறது.
நாட்டில் பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதன் மூலம், சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் ஏற்படுத்துவது என்பதை தனது குறிக்கோளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அறிவித்துள்ளது. புரட்சிகர இயக்கத்தின் இன்றைய காலகட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தொலைநோக்கு திட்டம், புரட்சியின் கட்டத்தை மக்கள் ஜனநாயக புரட்சி என்று நிர்ணயித்துள்ளது. மக்கள் ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றுவதன் மூலம், சோசலிசத்தை நோக்கிய மாற்றத்திற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள வேண்டிய கடமை, உழைக்கும் வர்க்கத்திற்கும் அதன் கட்சிக்கும் உள்ளது என்பதை இது வலியுறுத்துகிறது.
அதேவேளையில், பொருளாதார வளர்ச்சியின் நிலை, தொழிலாளி வர்க்கத்தின் அரசியல், தத்துவார்த்த, ஸ்தாபன முதிர்ச்சி நிலை ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. எனவே, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான, தொழிலாளி – விவசாயி கூட்டில் உறுதியான அடித்தளம் கொண்ட , அனைத்து நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளை உள்ளடக்கிய மக்கள் ஜனநாயகத்தை நிறுவுவதை மக்கள் முன்பு இக்கட்டத்தின் இலக்காக சோசலிச புரட்சியை நோக்கிய பயணத்தில் கட்சி முன்வைக்கிறது. இப்போதைய முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் மக்கள் ஜனநாயக அரசை நிறுவுவதே முதன்மையான, முக்கியமான தேவையாகும். இந்தியப் புரட்சியில் நிறைவேறாத ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலமே, நாட்டை சோசலிசத்திற்கான பாதையை நோக்கி அழைத்துச் செல்ல முடியும். சோசலிசத்திற்கும், சுரண்டலற்ற சமூகத்தை நோக்கி முன்னேறுவதற்கும் மக்கள் ஜனநாயகப் புரட்சியானது வழிவகுக்கும் என்கிறது கட்சி திட்டம். மக்கள் ஜனநாயக புரட்சியை சாத்தியப்படுத்த, மக்கள் ஜனநாயக அணியை கட்டியமைப்பதும் அதை நோக்கி முன்னேறும்போது, தேவைப்படும் நேரங்களில் இடைக்கால நிலைமைகளுக்கு ஏற்ப இடைக்கால முழக்கங்களை உருவாக்கிக்கொள்ளலாம் என்றும் கட்சி திட்டம் விளக்குகிறது.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply