
தமிழ்நாட்டில் தற்காலத்தில் எதிர்கொள்ளும் நிலம் சம்பந்தமான பிரச்சனைகள் குறித்து
பெ. சண்முகம்
இந்தியாவில் நிலப்பிரச்சனை என்பதுதான் இப்போதும் முதன்மையான பிரச்சனையாக இருந்து வருகிறது. விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நிலம் சொந்தமில்லை. விடுதலைப் போராட்டக் காலத்தில் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும், நில உரிமை கோரியும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டத்தில் எண்ணற்றோர் உயிர்த்தியாகம் செய்தனர். செங்கொடி இயக்கத்தின் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் விளைவாக, பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் நிலப்பிரபுக்களிடமிருந்து பறிக்கப்பட்டு, நிலமற்றவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதன் விளைவாக, விடுதலைக்குப் பிறகு, பெயரளவிலாவது நிலச்சீர்திருத்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது.
முன்னோடியாய் இடதுசாரிகள்
இடதுசாரிகள் மாநில ஆட்சி அதிகாரத்தில் இருந்த மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில்தான் நில விநியோகம் என்பது குறிப்பிடத்தக்க அளவில் நடைபெற்றுள்ளது. உதாரணத்திற்கு, மேற்குவங்கத்தில் ஜூலை 31, 2011 ஆம் ஆண்டு வரை சுமார் 11 லட்சம் ஏக்கர் விவசாயத்திற்கு ஏற்ற நிலத்தை உச்சவரம்பு சட்டம் மூலம் அரசு கையகப்படுத்தி விவசாயிகளுக்கு மறு விநியோகம் செய்துள்ளது. இதில் பயனடைந்தவர்களில் 10,42,446 பேர் தாழ்த்தப்பட்டவர்கள். 5,31,315 பேர் பழங்குடியினர். 40,000 பேர் பெண்கள், கணவன் மனைவி கூட்டாக 4 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். உச்ச வரம்பு சட்டம் மூலம் உபரியாக கணக்கிட்ட 13,06,885 ஏக்கரில் 1,86,761 ஏக்கர் தொடர்பான வழக்குகள் அப்போது நீதிமன்றங்களில் இருந்ததால் அந்த நிலங்களை விநியோகம் செய்ய முடியாமல் போனது.
ஜம்மு-காஷ்மீரிலும் இந்தக் கடமை நிறைவேற்றப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் நில உச்சவரம்பு சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அமலாக்கத்தில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. இந்தியா முழுவதும் இப்போது வரை 54 லட்சம் குடும்பங்களுக்கு 48.9 லட்சம் ஏக்கர் மட்டுமே மறுவிநியோகம் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த சாகுபடி பரப்பில் 2 சதவிகிதம் மட்டுமே. இதில் இடதுசாரி மாநிலங்களில் வழங்கப்பட்டதை கழித்துவிட்டால், நாடு முழுவதும் 1 சதவிகிதம் மட்டுமே நில விநியோகம் என்பதிலிருந்து ஆட்சியாளர்கள் நிலப்பிரச்சனையில் எவ்வளவு அலட்சியமாக இருந்துள்ளனர் என்பது விளங்கும்.
தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு வரை 1,90,708 ஏக்கர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மிக மோசமாக அமல்படுத்தப்பட்டிருந்தாலும் நிலப்பிரபுத்துவத்தை பலவீனப்படுத்தியதில், நிலச்சீர்திருத்தத்திற்கு மிக முக்கிய பங்குண்டு. ஆனால், தற்போது ‘நிலக்குவியல்’ புதிய வடிவம் எடுத்திருக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலம், வீட்டு மனை விற்பனை தொழில், பெரும் பண்ணைகள், விவசாயத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் நிலத்தை வாங்கி குவிப்பது, தொழிற்சாலைகள் என பல விதங்களில் இது நடைபெறுகிறது.
விவசாய நிலங்கள் வேறுபணிகளுக்கு மாற்றப்படுவது அதிக அளவில் நடைபெறுகிறது. இதற்கேற்ப, விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்துவதற்கு ஏதுவாக, மாநில அரசே பல சட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி கொண்டிருக்கிறது. இதனால், 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் குறித்த மத்திய சட்டத்தை அமல்படுத்தாத போக்கு நிலவுகிறது. இதன் விளைவு என்னவெனில், நிலத்தை இழக்கும் விவசாயிகளுக்கும், நிலத்தை சார்ந்து வாழும் விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட மற்றவர்களுக்கும், நியாயமான இழப்பீடு, சட்டப்படியான மறுவாழ்வு ஆகியவை கிடைக்க வாய்ப்பில்லாமல் போகிறது. அதுமட்டுமின்றி, இதனால் விவசாயப் பரப்பளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. விவசாயிகள், விவசாயத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, வேறு வாழ்வாதாரத்தை தேட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். மேலும், விவசாயத்தில் வேலைவாய்ப்பும் குறைந்து விவசாயத் தொழிலாளர்களும் வேறுவேலையை தேடிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இப்படி அடுக்கடுக்கான பாதிப்புகளை ஏற்படுத்துவதிலிருந்து, விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில், அரசின் கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும்.
தற்போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பெரிய திட்டங்களுக்கு, பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை சேர்ந்தாற்போல் கையகப்படுத்த ஏதுவாக தமிழ்நாடு அரசால் “நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023” நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டத்தை பயன்படுத்தி, அரசின் பல்வேறு துறைகளுக்கு சொந்தமான நிலங்களை, நீர்நிலைகளை, மேய்ச்சல் நிலங்களை சம்பந்தப்பட்ட துறைகளின் ஒப்புதல் பெறாமலேயே அரசால் கையகப்படுத்த முடியும்.
தற்போதைய தமிழக நில வகைப்பாடு – 2019-20 கணக்கின்படி – ஹெக்டேரில்
வனநிலம் 21,56,574
தரிசு மற்றும் பயிரிட முடியாத நிலையில் உள்ள நிலம் 4,57,414
விவசாயம் இல்லாத பயன்பாட்டில் உள்ளது 22,03,091
விவசாய சாகுபடிக்கு ஏற்ற, ஆனால் விவசாயம் செய்யப்படாத நிலம் 3,21,968
நிரந்தர மேய்ச்சல் மற்றும் பிற மேய்ச்சல் நிலம் 1,07,673
பல்வேறு மரப்பயிர்கள் உள்ள நிலம் 2,21,477
தற்போதைய தரிசு நிலம் 9,20,379
பிற தரிசு நிலங்கள் 19,06,243
மொத்த சாகுபடி நிலம் 47,38,297
மொத்தம் 1,30,33,116
தமிழ்நாட்டில் 1949ஆம் ஆண்டு முதல் இலவச மனைப்பட்டா வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. குடியிருக்கும் இடம் அவர்களுக்கு சொந்தமில்லை என்ற நிலையில்தான் லட்சக்கணக்கான குடும்பங்கள் எப்போது தாங்கள் வெளியேற்றப்படுவோமோ என்ற அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். நீர்நிலைகளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நீதிமன்றங்கள் ஏழை, எளிய மக்களுக்கு எதிராக கடுமையான உத்தரவுகளை தொடர்ந்து பிறப்பித்துக் கொண்டே உள்ளன. நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவது என்ற பெயரில், மக்களின் குடியிருப்பு உரிமையைப் பற்றி கவலைப்படாமல் மாநில அரசு செயல்படுகிறது.
நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை மறுக்க முடியாது. ஆனால், நீர்நிலைகளை அழித்து வேறு தேவைகளுக்கு அதிகமாக பயன்படுத்தியது அரசுதான் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால், ஏழைகள் தங்களுக்கென்று வேறு இடமே இல்லாத நிலையில், குடியிருக்கும் இடத்திற்கு பட்டா கேட்பது பெரும் குற்றம் என்பதுபோல் ஆட்சியாளர்களாலும், நீதிமன்றங்களாலும் பார்க்கப்படுகிறது. பல்வேறு வகையான ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களை வகைப்பாடு செய்து வீட்டுமனை பட்டா 07.05.2021 முதல் 31.12.2023 வரை 6,52,559 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், மனைப்பட்டா பிரச்சனை என்பது முடிவேயில்லாத ஒரு தொடர்கதையாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
ஆட்சேபணைக்குரிய புறம்போக்குகள் என்று வரையறுக்கப்பட்டுள்ள நிலங்கள் தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுத்து, மறுவரையறை செய்ய வேண்டும். ஆவணங்களில் என்ன வகையாக இருந்தாலும், தற்போது அந்த நிலம் என்னவாக இருக்கிறது என்று வகைப்படுத்துவதன் மூலம்தான் மனைப்பட்டா பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வை நோக்கி நகர முடியும். நீதிமன்ற வழக்குகளில், அரசு வழக்கறிஞர்கள் மக்களின் பக்கம் நின்று விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டின் சொந்த குடிமனை இல்லாத குடும்பங்களே இல்லை என்ற நிலையை இலக்காக கொண்டு தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும். அரசு மற்றும் தனியார் தரிசு 70 லட்சம் ஏக்கர் உள்ள தமிழ்நாட்டில் இந்த இலக்கை நிறைவேற்றுவது சாத்தியமே.
இந்துசமய அறநிலையத்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ், 46,257 இந்து சமய அற நிறுவனங்கள் உள்ளதாக 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் திருக்கோவில்கள் 43,728, சமண திருக்கோவில்கள் 22, மடங்கள் 45, திருமடத்துடன் இணைந்த கோவில்கள் 69, குறிப்பிட்ட அறக்கட்டளைகள் 1,130, அறக்கட்டளைகள் 1,263. இவற்றில் கோவில் பெயரில் உள்ள நஞ்சை நிலம் 1.83 லட்சம் ஏக்கர். புன்செய் நிலம் 2.18 லட்சம் ஏக்கர். மானாவரி 21,000 ஏக்கர். மடங்கள் பெயரில் உள்ள நஞ்சை நிலம் 21,000 ஏக்கர், புன்செய் நிலம் 35,000 ஏக்கர். ஆக மொத்தம் 4,78,000 ஏக்கர் நிலங்கள் உள்ளது. இவை தவிர 23,056 கட்டிடங்களும் 76,470 மனைகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அல்லாமல் இனாம் நிலமும் தற்போது கோவில்நிலம் என்று உரிமை கொண்டாடப்படுகிறது.
பல தலைமுறைகளாக காடுமேடுகளாக இருந்த நிலங்களை சீர்படுத்தி விவசாயம் செய்து வரும் விவசாயிகள், விளைச்சலில் ஒரு பகுதியை குத்தகையாக செலுத்தி வருகின்றனர். தற்போது குத்தகை விவசாயிகளின் உரிமையை பறித்து, 3 ஆண்டுக்கு ஒருமுறை ஏலம் விடுவோம்; யார் ஏலம் கூடுதலாக கேட்கின்றனரோ, அவர்களுக்கு நிலம் சாகுபடிக்கு விடப்படும் என அறநிலையத்துறை அறிவித்து, சாகுபடி நிலங்களை ஏலம் விடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் குத்தகை விவசாயிகளின் உரிமை மறுக்கப்படுகிறது. மேற்கண்ட பிரச்சனையில் மாநில அரசு கொள்கை முடிவு எடுத்து தீர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும்.
தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினருக்கு என்று முழு உரிமை படைத்த நிலமாக பஞ்சமி நிலம், சுமார் 12 லட்சம் ஏக்கர் 1892 முதல் 1933 வரை, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டது. இது மிகவும் போற்றுதலுக்குரிய முற்போக்கான செயல் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு வித்திட்டவர் அப்போது செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த திரு ஜேம்ஸ் ஹென்றி திரமென்ஹீர் ஆவார். பட்டியல் சாதி மக்களின் வறுமை, ஏழ்மை, அடிமை நிலையை உணர்ந்து, அதிலிருந்து அவர்களை விடுவிக்க, ஒரு பாதுகாப்பான நடவடிக்கையாக, நிபந்தனைகளுடன் இந்த நிலம் வழங்கப்பட்டது.
ஆனால், எல்லா சட்டத்தையும் ஏமாற்றும் வல்லமை படைத்த ஆளும் வர்க்கம், இந்தப் பஞ்சமி நிலத்தையும் அவர்களிடமிருந்து பறித்துவிட்டது. வருவாய்த்துறை ஆவணங்களிலும் தேவையான மாற்றங்களை செய்து, பல கைமாறி பஞ்சமி நிலம் மீட்பது பெரும் சிக்கலான ஒன்று என்ற நிலையை இன்று எட்டியுள்ளது. ஆனால், இது தொடர்பான பல வழக்குகள் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்று, எந்த நிலையிலிருந்தாலும் பஞ்சமி நிலம் மீட்கப்பட்டு, பட்டியல் சாதி மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற தெளிவான தீர்ப்புகள் வெளிவந்துள்ளன. இது தொடர்பாக, மாநில அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அதற்குரிய அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. எல்லாம் சாதகமாக இருந்தும், பஞ்சமி நில மீட்பு நடைபெறவில்லை. ஆட்சியாளர்களுக்கு இப்பிரச்சனையில் உள்ள உறுதியற்ற நிலைபாடே இதற்கு காரணமாகும். கடைசியாக 1,26,613.6 ஏக்கர் மட்டுமே பஞ்சமி நிலம் இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது. ஆனால், அந்த நிலமும் மீட்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட மக்களே நிலத்தை மீட்பதற்கான திட்டத்தை நமது இயக்கம் உருவாக்கி செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.
காலங்காலமாக காட்டையே தங்களின் சொந்த வீடாக கருதி வாழ்ந்து வந்த ஆதிவாசி மக்களை, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வனத்தை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் “வனச் சட்டம்’ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி, ஆதிவாசி மக்களை வெளியேற்ற முயற்சித்தனர். காடுகளிலிருந்து வெளியேற்றும் ஆட்சியாளர்களின் கொடூரமான அடக்குமுறைகளை எதிர்த்து, வீரம் செறிந்த போராட்டத்தை அம்மக்கள் நடத்தினர். விடுதலை பெற்ற இந்தியாவிலும் காடு அரசுக்கு சொந்தம் என்ற தவறான கருத்தியலே ஆட்சியாளர்களின் அணுகுமுறையாக இருந்தது. எனவே, ஆதிவாசி மக்களின் காடுகளின் மீதான தங்களின் உரிமைகளை நிலைநாட்ட, தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயம் தொடர்ந்தது.
இத்தகைய தொடர் போராட்டத்தின் விளைவாகவும், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க இடதுசாரிகளின் ஆதரவு தேவை என்ற கட்டாயம், இந்திய அரசியல் வரலாற்றில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட போது, இந்த நல்ல வாய்ப்பை உழைக்கும் மக்கள் நலன் சார்ந்த சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக இடதுசாரிகள் பயன்படுத்திக் கொண்டனர். இதன் விளைவாக நிறைவேற்றப்பட்டதுதான் ‘வன உரிமைச் சட்டம் 2006’ என்பது.
2008ஆம் ஆண்டு இதற்கான விதிகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்த துவங்கினாலும், அமல்படுத்துவதில் ஆட்சியாளர்களுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்பது கண்கூடாக தெரிகிறது. 2025 ஜூலை 31 வரை சுமார் 15,000 ஏக்கர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே, இச்சட்டத்தை அமல்படுத்தவும், சட்டத்தின் பலன் முழுமையாக மக்களுக்கு கிடைக்கச் செய்யவும் திட்டமிட்ட விடாப்பிடியான முயற்சி தேவை. அனுபவ நிலத்திற்கு பட்டா, குத்தகை உரிமை பாதுகாப்பு, அரசு தரிசு, புறம்போக்கு நிலங்களை நிலமற்றவர்களுக்கு விநியோகம் செய்வது; வசதிபடைத்தவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களை கண்டறிந்து மீட்டு, நிலமற்றவர்களுக்கு வழங்குவது; மத நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களை, தவணை முறையில் கிரையத் தொகையைப் பெற்றுக் கொண்டு, சாகுபடியாளர்களுக்கு சொந்தமாக்குவது; ஆதிவாசி மக்களுக்கு வன நிலங்களை சொந்தமாக்குவது; குடிமனை, மனைப்பட்டா என நிலம் தொடர்பான கோரிக்கைகளுக்காக, அனைத்துப் பிரிவு மக்களையும் அணிதிரட்டும் வகையில் பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு தொடர் கவனம் செலுத்தப்பட வேண்டும். நிலத்திற்கான போராட்டம் என்பது, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டம் என்பதை உணர்ந்து இதில் கட்சி வலுவாக தலையிட வேண்டும்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply