
ஜனநாயகம் காக்க ஆர்எஸ்எஸ் – பாஜகவை வீழ்த்துவோம்
உ. வாசுகி
ஒன்றிய பாஜக ஆட்சியின் எதேச்சாதிகார போக்குகளில் முக்கியமான ஒன்று, அதிகரித்து வரும் அதிகாரக் குவிப்பு. ஜனநாயக உரிமைகளைப் பறிப்பது மட்டுமல்ல; ஜனநாயகக் கோட்பாடுகளையே குழி தோண்டிப் புதைக்கும் ஆர் எஸ் எஸ்/பாஜகவின் இந்த அணுமுறை ஆபத்தானது. கடந்த கால ஆட்சிகளிலும் அதிகார குவிப்பு இருந்திருக்கிறது. ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. அவசர கால நிலை, மேற்குவங்க அரை பாசிச அடக்குமுறை போன்றவை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்துள்ளன. இருப்பினும், அவற்றுக்கும் தற்போது நடப்பவைக்கும் முக்கிய வேறுபாடுகள் உள்ளன. பாஜக, பாசிச தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் அங்கம் என்பதும், அது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது என்பதும், நவ பாசிச போக்குகளை வெளிப்படுத்தி வருகிறது என்பதும், இந்திய குடியரசின் குணாம்சத்தை மாற்றி, இந்து ராஷ்டிரத்தைக் கட்டமைக்கும் நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுகிறது என்பதும் அடிப்படை வேறுபாடுகளாகும். அவர்களது அதிகாரக் குவிப்பு மேற்கண்ட நோக்கத்துடன் நடக்கிறது.
மேலும் தீவிரப்படுத்தப்படும் நவதாராளமய கொள்கைகளின் காரணமாக உருவாகும் பொருளாதார நெருக்கடியின் சுமை உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்படும்போது, முன்வரும் எதிர்ப்புகளை ஒடுக்கவும், மாறுபடும் மாநில அரசுகளைப் பணிய வைக்கவும், அதிகாரக் குவிப்பு அவர்களது செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஜனநாயக மறுப்பு அல்லது மீறல் இருந்தது என்றால், பாஜக ஆட்சி காலத்தில் மறுப்பும் மீறலும் சட்ட அங்கீகாரம் பெறுவது அல்லது புதிய சகஜநிலையாவது, மேலும் இந்து ராஷ்டிரத்துக்குப் பாதை போடுவது என்பதாக உள்ளது.
வாடிக்கை அல்ல
எனவே, ஆர் எஸ் எஸ் – பாஜக அரசின் அதிகாரக் குவிப்பையும், எதேச்சாதிகாரப் போக்கையும், முதலாளித்துவ கட்சிகளின் வாடிக்கையான நடவடிக்கைகளாகக் கருத இயலாது. நவ பாசிச போக்குகளின் ஓர் அம்சமாக புரிந்து கொள்ள வேண்டும். இந்து ராஷ்டிரத்தை நோக்கிய நகர்வுகளாகக் கருத வேண்டும்.
அரசியல் சட்ட அடிப்படையில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களில் ஊடுருவி, அவர்களது சுதந்திரமான சுயேச்சையான செயல்பாட்டை முடக்கியது அவர்களது ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று. தேர்தல் ஆணையம், மத்திய முகமைகள், நீதித்துறையின் ஒரு பகுதி தங்களது சுயேச்சை தன்மையை இழந்திருப்பதை உதாரணமாகக் கூற முடியும். SIR மூலம் வாக்குரிமை பறிப்பு, நலத்திட்டங்கள் இழப்பு, குடியுரிமையை சர்ச்சைக்கு உள்ளாக்குவது போன்றவை நடந்து வருகின்றன. பெரும் போராட்டங்கள் நடத்திப் பெற்ற, வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பது மறுக்கப்படுவது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக ஆக்குவதாகும். மேலும், நாடாளுமன்றத்தில் விவாதங்களுக்கு இடம் அளிக்க மறுப்பு, விவாதம் இன்றி பல மசோதாக்கள் நிறைவேற்றம், அவையின் மரபுகளை மதிக்க மறுப்பது அல்லது மீறுவது, பதில் சொல்வதைத் தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகளை ஒன்றிய அரசாங்கம் வாடிக்கையாக செய்து வருகிறது. பதில் சொல்லும் பொறுப்புணர்வு என்கிற ஜனநாயகக் கோட்பாட்டை முற்றாக நிராகரிக்கிறது.
ஆளுநரைப் பயன்படுத்தி, பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களை முடக்குவதற்கான முயற்சி, வரி வருவாயை மாநிலங்களுடன் பகிர்வதில் பாகுபாடு, மாநில அதிகார வரம்புகளுக்குள் தலையீடு, பொதுப்பட்டியலில் உள்ள கல்வி, தொழிலாளர் நலன் உள்ளிட்ட பல அம்சங்களை ஒன்றிய அரசே கட்டுப்படுத்துவது போன்றவற்றை பாஜக அரசு துரிதமாக செய்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை, தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத் தொகுப்பு உள்ளிட்டவற்றை உதாரணமாக சொல்லலாம். இந்த சட்டத் தொகுப்பின் மூலம், ஏற்கனவே பெருமளவு தொழிலாளிகள் சட்டவரம்புக்கு வெளியே தள்ளப்பட்டுள்ளனர். அதுவும் போதாது என சமீபத்திய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு, தொழிற்சாலை என்பதற்கு ஒரு முக்கிய வழக்கில் 1978இல் நீதியரசர் வி. ஆர் கிருஷ்ணய்யர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கொடுத்த விரிவான வரையறையை மாற்றி, மேலும் கணிசமான தொழிலாளிகளை பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே நிறுத்திவிட்டது.
கார்ப்பரேட்டுகளின் லாபத்துக்காக விவசாயிகளின் நலன்களைப் புறம் தள்ளி பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்துதல் நடந்து கொண்டே இருக்கிறது. இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகள் போராட்டக் களத்திற்கு வந்து விடக்கூடாது என்பதற்காக மகாராஷ்டிரா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில், பொது நலனைப் பாதுகாப்பது என்ற பெயரில், அடிப்படை உரிமைகளைக் கூடப் பறிக்கும் விதத்தில் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களின் மீது கட்டுப்பாடு, யு டியூப் சேனல்களை அத்தகைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சி, ஊடக சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடு என நீண்ட பட்டியல் உண்டு. மக்களின் தனி உரிமைகளை மிதித்து, கண்காணிப்பு அரசாக (surveillance state) மோடி அரசு மாறி வருகிறது. ஜந்தர் மந்தர் போராட்டக்காரர்களை, காவல்துறை சட்ட விரோதமாக, முகத்தை வைத்து முழு விவரங்களை சேகரிக்கிற செயற்கை நுண்ணறிவு உபகரணங்களைப் பயன்படுத்தி (digital dragnet) அடையாளங்களைப் பதிவு செய்து கொண்டது. அப்போராட்டத்தின்போது சில காவல்துறை அதிகாரிகள், AI தொழில்நுட்பத்துடன் கூடிய ரேபேன் மேட்டா ஸ்மார்ட் கண்ணாடி அணிந்திருந்தது ஊடகங்களில் வெளிவந்துள்ளது. ஜூலை 20 போராட்ட களத்தில் நடந்த அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறையின் மிருகத்தனமான அடக்குமுறை குறித்து எதிர்க்கட்சிகள் பல கேள்விகள் எழுப்பியும், பதில் சொல்ல கடைசி வரை அமித்ஷா மக்களவைக்கு வரவே இல்லை. கடைசி நாள் மட்டும் வந்து, வந்தே மாதரம் பாடலுக்கு வாயசைத்து விட்டு சென்றது மட்டுமே நடந்தது.
சாதிய, பாலின ஒடுக்குமுறைகளை மனுவாத சித்தாந்தத்தின் அடிப்படையில் நியாயப்படுத்துவதும், இதில் குற்றங்கள் புரிபவர்களைப் பாதுகாப்பதும், பெருமைப்படுத்தி அங்கீகரிப்பதும், அரசியல் சட்டம் அங்கீகரித்துள்ள தலித்துகள் மற்றும் பெண்களின் உரிமைகளை, சுதந்திரத்தைப் பறிப்பதாகும். கார்ப்பரேட்டுகள் இயற்கை வளங்களை சூறையாடுவதற்கு ஏதுவாக, பழங்குடி மக்களை வனங்களிலிருந்தும், நிலங்களில் இருந்தும் அப்புறப்படுத்துவது, மாவோயிஸ்டுகளுடனான மோதலில் பழங்குடி மக்கள் கொல்லப்படுவது போன்ற நடவடிக்கைகள், சட்டங்களைக் கிஞ்சித்தும் இந்த அரசு மதிப்பதில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
குடியுரிமை திருத்தச் சட்டம், வக்பு வாரிய திருத்த சட்டம், அந்நிய செலாவணி ஒழுங்குமுறை திருத்தச் சட்டம், பொது சிவில் சட்டம் போன்றவை சிறுபான்மை மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதற்கான முயற்சிகள் ஆகும். ஒரே நாடு – ஒரே தேர்தல், ஒரே பண்பாடு, ஒரே மொழி, ஒரே மதம் போன்ற முழக்கங்கள் இந்திய ஜனநாயகத்தின் முக்கிய கூறான பன்மைத்துவத்தை மறுப்பதாகும். உணவு, உடை, காதல், திருமணம் போன்ற தனிநபர் சார்ந்த உரிமைகளில் அரசு தலையீடு செய்வது அவர்களது ஜனநாயக உரிமைகளில் குறுக்கிடுவதாகும்.
தற்போது, தொகுதி மறுவரையறை சட்டத்திற்காக மட்டுமல்ல; அரசியல் சட்டத்தையே திருத்துவதற்காக, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கு குதிரை பேரம் செய்து எதிர்க்கட்சிகளை உடைக்கும் ஆபரேஷன் லோட்டஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது
வரலாற்றுப் பின்னணி
ஜனநாயகத்தை வரலாற்று நோக்கில் பார்க்க வேண்டும். அது முதலாளித்துவத்துக்கு முந்தைய வர்க்க சமூகங்களில் நிலவவில்லை. அடிமை சமூகத்தில் அடிமைகள் எசமானரின் உடமை. தனிப்பட்ட உரிமைகள் கிடையாது. நிலவுடைமை சமூகத்தில் நிலப்பிரபுவின் உடமையாக இல்லா விட்டாலும், பண்ணையடிமை ஆண்டையுடனும், ஆண்டையின் நிலத்துடனும் பிணைக்கப்பட்டிருந்தார். அரசியல் உரிமைகள் ஆண்டைக்குத்தான் இருந்தன. சம உரிமை பெற்ற குடிமக்கள் என்பது பெயருக்குக் கூட இல்லை. பொருளாதார அடித்தளம் இவ்வாறு இருக்கும்போது, மேல்கட்டுமானமும் அடிமைத்தன கட்டமைப்பை பிரதிபலிப்பதாகவே இருக்கும். எனவே ஜனநாயகம் என்பதற்கான சூழல் இருந்திருக்க முடியாது என்று புரிந்து கொள்ள முடியும்.
முதலாளித்துவ சமூக அமைப்பில், உற்பத்தி உறவுகள் மாற்றம் பெற்றன. தொழிலாளி, முதலாளியின் உடமை அல்ல. மேலும் முதலாளியின் ஆலையோடு/இடத்தோடு பிணைக்கப்பட்டும் இல்லை. தனது உழைப்பு சக்தியை யாருக்கு வேண்டுமானாலும் விற்கும் ‘உரிமை’ பெற்றவர். கத்தி முனையிலோ சவுக்கின் நுனியிலோ சுரண்டல் வெளிப்படையாக நடக்கவில்லை. முதலாளி தொழிலாளிக்கு இடையே இருந்த வேலை ஒப்பந்தம்/பணி நிலைமை மூலமாக, உபரி மதிப்பை ஏதுவாக்கி, கூலி அடிமைத்தனம் என்ற மறைமுக சுரண்டல் நடந்தது. இதனைப் பாதுகாக்க, தொழிலாளி ‘சுதந்திரமானவர்’ என்பதற்கு ஏற்ற வகையில் அரசியல் அமைப்பு முறை உருவாக வேண்டிய தேவை இருந்தது. ஜனநாயகக் கோட்பாடுகள் படிப்படியாக நிறுவப்பட்டன. அதேசமயம், உழைப்பு சுரண்டல் என்னும் அடித்தளத்தைப் பாதுகாக்கும் மேல்கட்டுமானம் என்கிற வரம்புக்குள் அவை அமைந்தன. இருப்பினும் போராடிப் பல உரிமைகளைப் பெற இந்த ஜனநாயகக் கட்டமைப்பு பயன்பட்டது. இந்தக் கட்டமைப்பின் பல அம்சங்களும் போராட்டங்களால்தான் விளைந்தன.
அரசு எந்திரம்
அரசு (state) என்பது, வர்க்க சமூக அமைப்பில், உடமை வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட அமைப்பு. அது நடுநிலை கொண்டது அல்ல. மாறாக, அது சுரண்டும் வர்க்கத்தின் ஆயுதம். ஒரு வர்க்கத்தை இன்னொரு வர்க்கம் சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்குமான கருவி என மார்க்சியம் விளக்குகிறது. பகைமுரண் கொண்ட எதிரெதிரான வர்க்கங்களுக்கிடையே மோதல்கள் உருவாகும்போது, பொதுநலன் கருதி அல்ல, சுரண்டும் வர்க்கத்துக்கு சாதகமான ‘ஒழுங்கை’யே அது பராமரிக்கிறது. ஆனால், முதலாளித்துவ சமூக அமைப்பில் அரசு நடுநிலையானது; வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டு செயலாற்றுகிறது என்கிற தோற்றம் கூடுதலாக நிறுவப்படுகிறது. ஆனால் அடிப்படையில், மூலதனத்தின் நலன்களைப் பாதுகாப்பதே அதன் பணி. எனவே ஜனநாயக கோட்பாடுகளும் அதற்கு உட்பட்டே அமைய முடியும்.
முதலாளித்துவ ஜனநாயகத்தின் வரம்புகள் குறித்து தோழர் லெனின் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
“முதலாளித்துவ ஜனநாயகம் என்பது ஆடம்பரமான சொற்கள், புனிதமான வாக்குறுதிகள், சுதந்திரம் மற்றும் சமத்துவம் பற்றிய உயர்வான முழக்கங்களின் ஜனநாயகம். ஆனால் உண்மையில், அது பெண்கள், உழைப்பாளிகள், சுரண்டப்படுபவர்களின் சுதந்திரமின்மையையும், தாழ்மையான நிலைமையையும் மறைக்கிறது.”
எனவேதான் புரட்சிக்கு பிறகு உருவாக்கப்படும் சோஷலிச அரசு, பழைய அரசு எந்திரத்தைத் தகர்த்து, அதாவது முதலாளித்துவ சர்வாதிகார அரசு எந்திரத்தை தகர்த்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கான ஒரு புதிய அரசு எந்திரத்தை உருவாக்க வேண்டும் என மார்க்சியம் கூறுகிறது. ஏற்கனவே ஆயத்தமாக இருக்கும் அரசு எந்திரம் முதலாளித்துவ கட்டமைப்பைப் பாதுகாக்க நிறுவப்பட்டது. எனவே பாட்டாளி வர்க்கத்தின் கையில் அரசு அதிகாரம் வந்ததும், பழைய அரசு எந்திரம் நீடிப்பது முரண்பாடுகளையே விளைவிக்கும். இருப்பதை மேம்படுத்த முயற்சிக்கக் கூடாது. பழையதை முற்றாக நொறுக்கி அந்த இடத்தில் அடிப்படையில் வேறுபட்ட புதியதை நிறுவ வேண்டும் என்று மார்க்ஸ் கூறியதற்கு, தோழர் லெனின் அழுத்தம் கொடுத்தார். இதற்கான வரைபடமாக மார்க்ஸ், லெனின் இருவருமே பாரிஸ் கம்யூனின் ஜனநாயகக் கட்டமைப்பைக் குறிப்பிடுகின்றனர்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது ஜனநாயகத்தைக் கைவிடுவது அல்லது ஜனநாயகம் அற்ற ஆட்சி என்று பொருள் அல்ல. தூய்மையான, எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடிய ஒரே மாதிரியான ஜனநாயகம் என்பது இருக்க முடியாது. ஒரு வர்க்கத்தின் நலனுக்கான ஜனநாயகம் இன்னொரு வர்க்கத்தின் மீதான சர்வாதிகாரமாகவே இருக்கும். முதலாளித்துவ ஜனநாயகம் அடிப்படையில் சிறுபான்மையின் ஜனநாயகமே. பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சியில், முதலாளித்துவ ஜனநாயகத்தை விட தரம் உயர்ந்த ஜனநாயகம் செயல்படுத்தப்படும். பெரும்பான்மை மக்களுக்கு அது பலன் தரும். தூக்கி எறியப்பட்ட முதலாளி வர்க்கம், மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முனையும்போது, அந்த முயற்சிகள் ஒடுக்கப்படும். காலப்போக்கில் பகைமுரண்கள் கொண்ட வர்க்கங்கள் இல்லாத சமூகத்தில் அரசு என்பது தேவையற்றதாகி உதிர்ந்து விடும்.
இத்தகைய பின்புலத்தில் இந்தியாவில் நிலவும் ஜனநாயக கட்டமைப்பைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நாடாளுமன்ற ஜனநாயக முறை
நவீன இந்தியாவின் அரசாங்க மற்றும் அரசியல் சட்ட அமைப்பு முறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்மொழிவை, அரசியல் சட்ட வரைவு குழு சார்பாக, டாக்டர் அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் முன் வைத்தார். அவரது வாதங்கள் அனைத்தும், நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்லும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அமைப்பு முறைதான் தேவை என்பதை வலியுறுத்தியே இருந்தது. எனவேதான், பிரதமர் உட்பட அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும், அவையின் நம்பிக்கையை இழந்தால் அரசாங்கம் கலைக்கப்பட வேண்டும் போன்ற பிரிவுகள் இந்திய அரசியல் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டன. நாடாளுமன்ற பெரும்பான்மையை சார்ந்து அரசாங்கம் இருந்தால்தான், நாடாளுமன்றத்திற்கு பதில் சொல்லும் பொறுப்புணர்வு அதிகமாக இருக்கும், எனவே, நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையையே சுதந்திர இந்தியா பின்பற்றும் என்ற ஆலோசனை, விவாதங்களுக்குப் பின் ஏற்கப்பட்டது.
அடுத்து கூட்டாட்சி கோட்பாடு பற்றிய பிரச்னை எழுந்தது. ஒற்றை ஆட்சி முறை (unitary form of government), அதாவது மத்திய அரசுக்கு கிட்டத்தட்ட முழு அதிகாரம், மாநிலங்களுக்கு மிகக் குறைவான அதிகாரம் என்ற முறையை நிராகரித்து, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிட்டு, இந்தியாவுக்கான கூட்டாட்சி முறையை அம்பேத்கர் முன்வைத்தார். இந்திய சூழலில் தேசிய இனங்களின் பன்மைத்தன்மையை அங்கீகரிப்பதுடன் இணைந்ததே மாநில உரிமை. எனவே கூட்டாட்சி கோட்பாடு அல்லது மாநிலங்களுக்கான உரிமை என்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும்.
மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம்
இது ஒருபுறம் இருக்க, இதைக் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் என்ன மதிப்பீடு வைத்திருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பற்றி மார்க்சிஸ்ட் கட்சி திட்டம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது:
“வாக்குரிமையும், சட்டமன்றங்களும் – நாடாளுமன்றமும் ஜனநாயகத்துக்கான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்தும். அவர்களது நலனைப் பாதுகாக்கவும் உதவும். முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் வடிவமாக இருந்தாலும், தற்போதைய நாடாளுமன்ற முறை மக்களுக்கு சில முன்னேற்றங்களைக் கிடைக்க வைக்கிறது.…. நாடாளுமன்ற முறைக்கும் ஜனநாயகத்திற்கும், உழைக்கும் மக்கள் மற்றும் அவர்கள் நலனைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சிகளால் ஆபத்து வராது. மாறாக சுரண்டும் வர்க்கங்களால்தான் வரும். நாடாளுமன்ற அமைப்பு முறையை மக்கள் தங்கள் நலனை முன்னேற்றுவதற்காகத் திறம்பட பயன்படுத்தி, பெருமுதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ சக்திகளிடம் இருந்து விலகத் துவங்கினால், நாடாளுமன்ற முறையைக் காலில் போட்டு மிதிக்க அவர்கள் தயங்க மாட்டார்கள்… நவீன தாராளமய கொள்கைகள் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் அழுத்தத்தின் காரணமாக, நாடாளுமன்ற ஜனநாயகம் சிதைக்கப்பட்டு, எதேச்சாதிகார போக்குகள் வளர்ச்சியடைந்து வருகின்றன. எனவே நாடாளுமன்ற ஜனநாயக முறை பாதுகாக்கப்படுவதும், அதனைக் களப்போராட்டத்துடன் திறமையாக இணைத்து செயல்படுவதும் அவசியம்”.
மக்கள் ஜனநாயக புரட்சிக்குப் பிறகு நிறுவப்படும் மக்கள் ஜனநாயக அரசு முதலாளித்துவ ஜனநாயகத்தின் வரம்புகளைத் தாண்டி, முழுமையான உரிமைகளை மக்களுக்கு அளிக்கும் எனவும் கட்சித் திட்டம் குறிப்பிடுகிறது.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முக்கிய பகுதி தேர்தல் ஜனநாயகம். தேர்தல் ஜனநாயகத்தின் மைய புள்ளி வாக்குரிமை. மார்க்சிய முன்னோடிகள் வாக்குரிமைக்கு முக்கியத்துவம் அளித்தனர். வாக்குரிமையை, பாட்டாளி வர்க்கத்தின் கூர்மையான ஆயுதங்களில் ஒன்று, இதன் மூலம் தொழிலாளி வர்க்கத்தின் பக்குவத்தையும் முதிர்ச்சியையும் கணிக்க முடியும் என்று எங்கல்ஸ் குறிப்பிடுகிறார். வாக்குரிமை மூலமாக உற்பத்தி கருவிகளை சொந்தமாக்க முடியாது, உற்பத்தி உறவுகளை மாற்ற முடியாது. ஆனாலும் முதலாளித்துவத்தின் கீழ் உள்ள இந்த ஜனநாயக வெளியைப் பயன்படுத்தி புரட்சிகர சக்திகள் முன்னேற முடியும். எனவேதான் குறைபாடுகள் இருந்தாலும், நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதும், அதனைக் களப்போராட்டத்துடன் திறமையாக இணைப்பதும் அவசியம் என மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் முன்வைக்கிறது.
அதேபோல் “கூட்டாட்சி என்பது அரசியல் சட்டத்தில் பெயரளவில் இடம்பெற்றுள்ளது. அதிக அதிகாரங்களும் வளங்களும் மத்திய அரசிடம்தான் உள்ளன. துவக்கத்தில் மொழிவழி மாநிலங்கள் என்ற கருத்தியலைப் பெருமுதலாளிகள் எதிர்த்தாலும், மக்களின் இயக்கங்களும் போராட்டங்களும் மொழிவழி மாநிலங்களை சாத்தியமாக்கின” எனக் கட்சி திட்டம் குறிப்பிடுகிறது. அதையும் கூட ஆர்எஸ்எஸ் – பாஜக சிதைத்துக் கொண்டிருக்கிறது. பாஜகவைப் பொறுத்தவரை வலிமையான மாநிலங்கள் என்கிற கோட்பாட்டை ஏற்கவில்லை. நிர்வாக காரணங்களுக்காக சிறிய மாநிலங்களாக வைத்திருப்பது மத்தியில் அதிகாரக் குவிப்புக்கும், கார்ப்பரேட் ஆதரவு மற்றும் வகுப்புவாத கொள்கைகளை அமல்படுத்தவும் அவர்களுக்கு உதவும்.
இடதுசாரிகள் இந்தப் புரிதலுடன் ஜனநாயக வெளியை, மாநில உரிமைகளை, சிவில் உரிமைகளை, உழைக்கும் மக்கள் உரிமைகளை, ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அடக்குமுறை சட்டங்கள், ஆளுநர் தலையீடுகள், அரசியல் சட்டத்தை சிதைக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து மக்களைத் திரட்டி, வலுவான போராட்டம் நடத்தப் படுகிறது. மாநில அரசாங்கம் அமைக்கக் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி, அடிமட்ட அதிகார பரவல் – உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கூடுதல் அதிகாரம், கீழிருந்து திட்டமிடல் போன்ற சிறந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மதச்சார்பின்மை மற்றும் மக்கள் ஒற்றுமை காத்திட கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மொத்தத்தில், முதலாளித்துவ ஜனநாயகக் கட்டமைப்பில் பெயரளவில் உள்ள ஜனநாயகமும், ஜனநாயக உரிமைகளும் கூடப் பறிக்கப்படுகிற நிலையை பாசிசத் தன்மை கொண்ட ஆர் எஸ் எஸ், அதன் வழிகாட்டுதலில் செயல்படும் பாஜக அரசாங்கம் உருவாக்கி வருகின்றன. இவை அனைத்துமே உழைக்கும் வர்க்கம் பல்லாண்டுகள் போராடி ரத்தம் சிந்திப் பெற்ற உரிமைகள்; வர்க்கப் போராட்டங்களால் வடிவம் பெற்ற முன்னேற்றங்கள். எனவே, இருக்கும் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பறிபோக அனுமதிக்கக் கூடாது. வலுவான களப்போராட்டங்கள் நடத்தி அவற்றை மீட்டெடுக்க வேண்டும். சட்டமன்றம், நாடாளுமன்றத்தை, சிறந்த முறையில், தடைகளைத் தாண்டி பயன்படுத்த வேண்டும். நவபாசிசப் போக்குகளைக் கடைப்பிடிக்கும் மத்திய பாஜக அரசாங்கம் நீடிக்கும்வரை ஆபத்துகளும் இழப்புக்களும் நிச்சயம் அதிகரிக்கும். இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதுதான், இருப்பதைப் பாதுகாக்கவும் புதிய உரிமைகளைப் போராடிப் பெறவும் சாதகமான சூழலை ஏற்படுத்தும்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply