
இந்தி சினிமாவும், பிரச்சார நெடியும்!
சுதன்வா தேஷ்பாண்டே
(மார்க்சிஸ்ட் தமிழ் இதழ் ஆசிரியர் குழுவின் வேண்டுகோள் அடிப்படையில் எழுதி வழங்கப்பட்ட கட்டுரை – ஆசிரியர் குழு)
பல பத்தாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். விரக்தியுடனே இருந்தது. சுமார் ஒரு நூற்றாண்டு காலத்திற்கும் மேல், பெரும்பகுதி இந்திய மக்களின் உணர்வின் மொழியாக இருந்த இந்தி சினிமா – ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக இல்லை. இந்தி சினிமா என்பது ‘பொது அறிவு’ அடிப்படையில் மதச்சார்பற்றதாக இருந்தது மட்டுமல்லாமல், அதன் மிகப்பெரிய நட்சத்திரங்களில் பலர் முஸ்லிம்களாகவும் இருந்தனர்.
திலீப் குமார், மதுபாலா, நர்கிஸ், மெஹ்மூத், சாய்ரா பானோ, வஹீதா ரஹ்மான், ஜானி வாக்கர், ஷபானா ஆஸ்மி, நசீருதீன் ஷா மற்றும் பலரைச் சிந்தித்துப் பாருங்கள். இவர்கள் முதல், நம் காலத்தில் இந்தி திரைப்பட ரசிகர்களின் இதயங்களை ஆட்சி செய்யும் மூன்று கான்கள் – ஷாருக் கான், சல்மான், அமீர் – வரை. திரைக்கு முன்னால் இருந்தவர்கள் மட்டுமல்ல; கேமராவின் பின்னால் இருந்த பல சிறந்த பெயர்களும் முஸ்லிம்களாக இருந்தார்கள். இயக்குனர்கள் மெகபூப் கான், கே. ஆசிஃப், இசையமைப்பாளர்கள் நௌஷத், ஏ. ஆர். ரஹ்மான், பாடகர்கள் முகமது ரஃபி, தலத் மஹ்மூத், பாடலாசிரியர்கள் சாஹிர் லுதியான்வி, கைஃபி ஆஸ்மி, திரைக்கதை எழுத்தாளர்கள் சலீம் கான், ஜாவேத் அக்தர் – இப்படி நீண்டுகொண்டே போகும் பட்டியல்.
இந்தி சினிமாவின் மொழி முற்றிலும் ஹிந்தியோ அல்லது முற்றிலும் உருதுவோ அல்ல; அது இந்துஸ்தானி என அழைக்கப்படுவதாகும். உதாரணமாக, திரைப்பட பாடல்களில் காதலைக் குறிப்பிடும்போது ‘இஷ்க்’ மற்றும் ‘மொஹபத்’ என்ற உருது சொற்கள், ‘பிரேம்’ / ‘பியார்’ ஆகிய இந்தி வார்த்தைகளைப் போலவே அடிக்கடியும் அதற்கும் அதிகமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில், நாயகனின் பயணத்தில் நேர்மறையான பங்காற்றும் ஒரு முக்கியமான முஸ்லீம் கதாபாத்திரம் எப்போதும் இருந்து வந்துள்ளார் – சஞ்சீர் என்ற திரைப்படத்தில் பிரான் நடித்த கடினமான பதான் கதாபாத்திரம், தீவார் என்ற படத்தில் கூலி பாத்திரமாக வந்த ரஹீம் சாச்சா, ஷோலேயில் ஏ. கே. ஹங்கல் நடித்த கிராம மௌலவி. கூலி மற்றும் குதா கவா போன்ற சில படங்களில், அமிதாப் பச்சனின் கதாநாயகன் கதாபாத்திரமே முஸ்லீமாக இருக்கும்.
‘நல்ல முஸ்லிம்’ என்பதே ஒரு கற்பிதம் (steriotype) அல்ல என்றோ, அல்லது இந்தி சினிமா வகுப்புவாதக் கருத்துக்களிலிருந்து முற்றிலும் விடுபட்டிருந்தது என்றோ இதன் பொருள் அல்ல. அது எப்படி இருக்க முடியும் – சமூகத்தில் கற்பிதங்களோ, வகுப்புவாதக் கருத்துக்களோ இருந்தால், வெகுஜன சினிமா அவற்றைப் பிரதிபலிப்பது இயற்கைதான். மதச்சார்பற்ற கருத்துகளும், வகுப்புவாத கருத்துக்கள் ஒன்றில் இருந்து மற்றொன்றை பிரித்து இறுக்கமாக கட்டி வைக்கப்பட்ட கொள்கலன்களில் இருப்பதில்லை. மதச்சார்பற்ற ஒருவர், சில சமயங்களில் வகுப்புவாதத்தை ஒட்டிய சில கருத்துக்களைக் கொண்டிருப்பதைப் போலவே, பெரும்பாலும் மதச்சார்பற்றதாக உள்ள திரைப்படமும் ஒரு வகுப்புவாத கற்பிதத்தை ஊக்குவிக்க வாய்ப்புண்டு.
இருப்பினும், பல பத்தாண்டுகளாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கண்ணோட்டம் இந்தி சினிமாவில் நிரந்தரமான, நிலையான இடத்தை பெறவில்லை. பெருமளவில் ஆக்கிரமிக்க முடியவில்லை.
ஆனால் ஆர்.எஸ்.எஸ். அதை அப்படியே விட்டுவிடுவதில்லை. வற்புறுத்தி கதவுகளைத் திறக்க முடியாதபோது, வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி முழுச் சுவர்களையும் தகர்க்கிறது. குறிப்பாக, 2014 ஆம் ஆண்டில் மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின், அவர்களின் சில முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன. நேரடியான / மறைமுகமான தணிக்கை மூலமாகவும், நுட்பமான / அப்பட்டமான மிரட்டல் மூலமாகவும், அரசு இயந்திரத்தின் தீவிர ஆதரவைக் கொண்டும், ஆர்.எஸ்.எஸ். இறுதியில் இந்தி சினிமாவில் பின்கதவு வழியாக நுழைந்திருக்கிறது.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் (2022, இயக்கம் விவேக் அக்னிஹோத்ரி), சாவா (2025, இயக்கம் லக்ஷ்மண் உடேகர்), துரந்தர் (2025 இல் பகுதி 1, 2026 இல் பகுதி 2, இயக்கம் ஆதித்யா தர்) போன்ற படங்கள் வணிக ரீதியில் வெற்றி பெற்றுள்ளன. அவை வரலாற்று உண்மைகளைத் திரித்து, பெரும்பான்மை சமூகத்தின் பாதிப்பு குறித்த கதையம்சத்தை உருவாக்குகின்றன, மதவெறியையும் இஸ்லாமிய வெறுப்பையும் தூண்டிவளர்க்கின்றன. மேலும் பழிவாங்கும் ஆசையைத் தூண்டுகின்றன (சாவா விஷயத்தில், வகுப்புவாத வன்முறைக்கு கூட வழிவகுக்கிறது). இந்தப் படங்கள், ஒரு சமூகம் முழுவதன்மீதும் வெறுப்பைப் பரப்ப, அநீதி உணர்வை – சில சமயங்களில் உண்மையை தழுவி (காஷ்மீரி பண்டிட் மக்களின் விஷயத்தில்), ஆனால் பெரும்பாலும் புனைவுகளை – ஆயுதமாக்குகின்றன.
திரைப்படங்களில் பிரச்சாரம் என்றால் என்ன?
மேற்சொன்ன படங்களின் வெற்றி, சினிமா மூலமான பிரச்சாரம் பற்றிய விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். தரப்பின் வாதம் என்னவென்றால், பல பத்தாண்டுகளாக இந்தி சினிமா ஒரு வகையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளது (முஸ்லீம் சார்பு, மதச்சார்பற்ற, சோஷலிசக் கருத்துக்கள் — இவை அனைத்தும் அவர்களின் சொற்களஞ்சியத்தில் அவதூறுகள் ஆகும்), எனவே, இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருப்பதால் மக்கள் மட்டுமே புகார் செய்கிறார்கள் என்கிறார்கள்.
உண்மை என்னவென்றால், தயாரிப்பாளர்கள் அதை விரும்பிச் செய்கிறார்களோ இல்லையோ — எல்லா சினிமாவும், ஒரு வழியில், அல்லது வேறு வழியில், அரசியல் உள்ளடக்கம் கொண்டதுதான். முந்தைய காலகட்டத்தின் திரைப்படங்கள் — குறிப்பாக பிமல் ராய், ராஜ் கபூர், கே. ஏ. அப்பாஸ், மெகபூப் கான் போன்றவர்களின் 1950களின் திரைப்படங்களை ஆர்.எஸ்.எஸ். வெறுக்கிறது — தேசிய இயக்கத்தின் மதிப்பீடுகளால் கட்டமைக்கப்பட்ட பிரபலமான கற்பனையின் விளைபொருளாக இருந்தன. ஆனால், அவை ‘பிரச்சாரப் படங்கள்’ என்று அர்த்தமல்ல. சமூக அல்லது அரசியல் கண்ணோட்டத்தைக் கொண்ட படங்களுக்கும், பிரச்சாரப் படங்களுக்கும் இடையே வித்தியாசம் உண்டு.
‘பிரச்சாரப் படம்’ என்றால் என்ன, காலப்போக்கில் அது எவ்வாறு மாறியுள்ளது?
‘பிரச்சார திரைப்படம்’ என்ற கருத்தை நாஜிக்கள்தான் முன்னோடியாக உருவாக்கினர் — ஜெர்மனியின் சான்சலராக ஹிட்லர் பதவியேற்று 1933இல் முழு அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், எக்காலத்திலும் மிகவும் பிரபலமான பிரச்சாரப் படங்களில் ஒன்று லேனி ரீஃபென்ஸ்டால் உருவாக்கிய ட்ரையம்ஃப் ஆஃப் தி வில் (1935) ஆகும். இது முந்தைய ஆண்டு நூரெம்பர்க்கில் நடந்த நாஜி கட்சி பேரணியின் பதிவு ஆகும். முன்னாள் நடிகையான ரீஃபென்ஸ்டால், இந்தப் படத்தை உருவாக்க ஹிட்லரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்; இந்தப் படம் இன்று தயாரிக்கப்பட்டிருந்தால், ஹிட்லர் அதன் ‘நிர்வாக தயாரிப்பாளர்’ என்று பெயரிடப்பட்டிருப்பார். நாஜிக்கள் ஜோசப் கோயபெல்ஸ் தலைமையில் ஒரு பிரச்சார அமைச்சகத்தைக் கொண்டிருந்தனர். ட்ரையம்ஃப் ஆஃப் தி வில் அதிகாரப்பூர்வமாக நாஜி கட்சியின் நிதியில் எடுக்கப்பட்டது. ரீஃபென்ஸ்டால் பரவலாக அறியப்பட்ட மற்றொரு படம், ஒலிம்பியா (1938, 1936 பேர்லின் ஒலிம்பிக் பற்றிய திரைப்படம்; அவை பிரச்சாரத்தின் மகத்தான செயல்பாடாக இருந்தன) — இதற்கு முற்றிலும் அரசாங்கமே நிதியளித்தது.
வேறு வார்த்தைகளில் சொன்னால், நாஜிக்களின் ஜெர்மனியில், பிரச்சாரம் பகிரங்கமாகவும் அதிகாரப்பூர்வமாகவும் நடத்தப்பட்டது. நாஜி சினிமாவுக்கு ஆதரவாக நாம் ஏதாவது சொல்ல முடியுமென்றால், அவர்கள் அதை மறைத்துக் கொண்டு செய்யவில்லை எனலாம். ஹிட்லர், கோயபெல்ஸ் உள்ளிட்டு ஆட்சியின் பல நிர்வாகிகள் இந்த படங்களின் சிறப்புகளைப் பற்றி பகிரங்கமாகப் பேசினார்கள்; சில நேரங்களில் அவற்றைப் பற்றி கேலிகளும் நிலவின. உதாரணமாக, நடிகை கிறிஸ்டினா சோடர்பாம் ‘ரீச்சின் மிதக்கும் சடலம்’ என்று அறியப்பட்டார். இந்தப் பெயர் ஏன் வந்தது? ஏனென்றால், ஒவ்வொரு படத்திலும் அவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி, பின்னர் நீரில் மூழ்கிய பெண்ணாக நடித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவரது கதாபாத்திரங்கள், தவறு செய்த அல்லது கலகம் செய்யும் பெண்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கான ஜெர்மானியர்களுக்கான எச்சரிக்கைகளாக இருந்தன. இதுபோன்ற பாத்திரங்களை ‘ஆரிய’ நடிகைகள் நடிக்கக் கூடாது என்று கோயபெல்ஸ் வலியுறுத்தினார். சோடர்பாம், ஸ்வீடிஷ் பெண் என்பதும் உதவியாக இருந்தது; அவர் ஒரு ஜெர்மன் திரைப்படத் தயாரிப்பாளரான வீட் ஹார்லனை மணந்திருந்தபோதிலும், ஹார்லன் ஆட்சியின் மற்றொரு பிடித்தவராக இருந்தார். 1937 மற்றும் 1945க்கு இடையில், சோடர்பாம், ஹார்லன் இருவரும் பத்து நாஜி பிரச்சாரப் படங்களில் இணைந்து பணியாற்றினர்.
சினிமாவில் நாஜிக்களுக்கு இருந்த செல்வாக்கு ஒரு வரம்பை மீற முடியவில்லை என்பதும் வெளிப்படையானது. லேனி ரீஃபென்ஸ்டாலைத் தவிர, ஹிட்லரின் ஆட்சியின் வேறு எந்த பிரச்சாரகரும் உலக சினிமாவில் ஒரு முக்கிய நபராக கருதப்படுவதில்லை. நாஜிக்களும் இதை நன்கு அறிந்திருந்தனர். அந்தக் காலகட்டத்தின் முன்னணி திரைப்படத் தயாரிப்பாளர்களைத் தங்கள் பக்கம் இழுப்பதற்கு அவர்கள் கடுமையாக முயற்சித்தனர். சிறந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஃபிரிட்ஸ் லாங்கை, நாஜிக்களுக்காகப் பணியாற்ற கோயபெல்ஸ் வற்புறுத்தி முயன்றார் என்று ஒரு கதை உண்டு. ஃபிரிட்ஸ் லாங், தான் யூதராகப் பிறந்ததாகவும், பின்னர்தான் கத்தோலிக்க மதத்திற்கு மாறியதாகவும் அவருக்கு நினைவூட்டினர். ‘யார் யூதர் என்பதை நாங்கள் முடிவு செய்கிறோம்’ என்று கோயபெல்ஸ் இடி முழக்கமாகப் பதிலடி கொடுத்தார். நாஜிக்களைப் பொறுத்தவரை, உண்மைகள் ஒரு தேசத்திற்காகவோ அல்லது ஒரு தனிநபருக்காகவோ தயாரிக்கப்பட்ட ஒரு பொருளாகத்தான் இருந்தன.
இந்துத்துவ ‘சூழல் கட்டமைப்பு’
வரலாற்றுத் துல்லியத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் விரும்புவதில்லை. இருப்பினும், சினிமாவில் ஊடுருவுவதைப் பொறுத்தவரை அவர்களின் முறைகள் வேறுபட்டவை. பாஜக அல்லது அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ், திரைப்படங்களுக்கு வெளிப்படையாக நிதியளிப்பதில்லை. மேலும், இந்துத்துவ உலகக் கண்ணோட்டத்தை ஊக்குவிக்கும் திரைப்படங்கள் குறித்து பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ். உயர்மட்ட நிர்வாகிகள் நேரடியாகக் கருத்து தெரிவிக்கவோ அல்லது பாராட்டவோ மாட்டார்கள் — மோடியைத் தவிர. அவர் மட்டும் எப்போதாவது தனது பேரணிப் பேச்சுகளில் ஒன்று அல்லது இரண்டு படங்களைக் குறிப்பிடுகிறார்; அல்லது இன்னும் அரிதாக, தம் அமைச்சர்கள் மற்றும் கட்சி சகாக்களுடன் ஒரு படத்தைப் பார்க்கிறார். ஆர்.எஸ்.எஸ்/பாஜக சினிமாவைப் பற்றிக் கவலைப்படாத அமைப்புகள் அல்ல. மாறாக, அவர்கள் வெகுஜன கலாச்சாரத்தில் ஊடுருவது பற்றி ஆழமாக அக்கறை கொண்டுள்ளனர், அதைக் கட்டுப்படுத்த பெருமுயற்சி எடுக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் அதை வெளிப்படையாகச் செய்வதில்லை.
அந்தப் பணியை இந்துத்துவ சூழல் கட்டமைப்புதான் மேற்கொள்கிறது. ஆர்.எஸ்.எஸ்/பாஜக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகளிடமிருந்து தயாரிப்பாளர்கள், ஸ்டுடியோக்கள், மற்றும் ஓ.டி.டி. தளங்கள் எதிர்கொள்ளக்கூடிய அழுத்தம் குறித்து, சினிமா உலகின் பலரும் தனிப்பட்ட முறையில் பேசுகிறார்கள். ஒரு திரைப்படம் தணிக்கை வாரியத்தை அடைவதற்கு முன்பே, அது ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டுவிடுகிறது — அதாவது, இன்றைய படைப்பாளர்களும் தயாரிப்பாளர்களும் தாங்கள் என்ன சொல்ல முடியும், என்ன சொல்ல முடியாது என்பதை நன்கு அறிவார்கள். படைப்பாளர்கள் தாங்களாகவே தங்கள் மீது திணித்துக் கொள்ளும் தணிக்கையே மிகவும் பயனுள்ளது. ஏனெனில் அது கண்ணுக்குத் தெரியாதது.
அடுத்து இணைய அடியாட்கள் இருக்கிறார்கள். அவர்களில் பணம் பெற்று எழுதுவோர், பணம் பெறாமலேயே அடியாள் வேலை செய்வோர் என இரு தரப்பும் உள்ளனர். இவர்களுக்குள் ஒருங்கிணைப்பு உள்ளது. ஆன்லைனில் சீற்றத்தின் புயலுக்குப் பின் புயலை உருவாக்குகிறார்கள். எந்தவொரு நியாயமான, நிதானமான குரலையும் அந்தப் புயலில் திறம்பட மூழ்கடிக்கிறார்கள் — இதை நம் துரந்தர் திரைப்படத்தின் விஷயத்தில் பார்த்தோம். தொழில்முறை திரைப்பட விமர்சகர்களின் குரல்கள் உட்பட அவை மூழ்கடிக்கப்பட்டன. இணைய அடியாட்கள், திரைப்படப் பிரச்சாரச் சூழல் கட்டமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும்.
‘கோடி மீடியா’ (மோடி ஆதரவு கார்ப்பரேட் செய்தி ஊடகங்கள்), இந்த இணைய அடியாட்களின் குரல்களை மேலும் ஊதிப் பெருக்குகிறார்கள். திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் 2020 ஆம் ஆண்டில் 34 வயதில் தற்கொலை செய்து கொண்டபோது, கோடி அலைவரிசைகள் பல வாரங்களாக மூர்க்கமாகச் செயல்பட்டன, ஒரு அன்புக்குரிய நடிகரின் சோகமான மரணத்தைப் பயன்படுத்தி, பாலிவுட் எதிர்ப்பு கதையாடலை உந்தித் தள்ளின.
திரைப்படத் தயாரிப்பாளர்களும் சாதுர்யமாக நடக்கிறார்கள். அவர்கள் ‘ஆத்திரம்-தூண்டலில்’ ஈடுபடுகிறார்கள் — வேண்டுமென்றே தங்கள் படத்தில் பிளவுபடுத்தும் காட்சிகள் அல்லது வசனங்களைச் செருகுகிறார்கள். கோப வெளிப்பாட்டையோ அல்லது அதன் எதிர்மாறான பெருமையையோ உருவாக்கும் நோக்கத்துடன் அதைச் செய்கிறார்கள்.
பின்னர் அரசு இயந்திரமும் உள்ளது. இந்துத்துவ உலகக் கண்ணோட்டத்தை ஊக்குவிக்கும் திரைப்படங்கள், அதேபோல் நடிகர்கள் மற்றும் இதுபோன்ற படங்களுடன் நெருக்கமாக அடையாளம் காணப்பட்ட மற்றவர்களும் வழக்கமாக அரசு விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களில் சிலரை தேர்தல்களில் பாஜக களமிறக்கியுள்ளது. இந்துத்துவத்தை ஆதரிக்கும் திரைப்படங்களுக்குப் பெரும்பாலும் வரிச்சலுகை வழங்கப்படுகிறது, இதனால் அவற்றின் டிக்கெட்டுகள் மலிவானவையாக இருக்கும். சில சந்தர்ப்பங்களில், அரசு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அலுவலக நேரத்தில் ஒரு திரைப்படத்தைப் பார்க்கச் செல்ல விடுப்பு வழங்குவதாக அறியப்படுகிறது; சில நேரங்களில் அரசு நிதியைக் கொண்டு மொத்த முன்பதிவுகளும் செய்கின்றன. சில திரைப்படங்கள் பள்ளிகள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே விளம்பரப்படுத்தப்படுகின்றன.
இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவிக்காலத்தில், இந்தியப் பெருமுதலாளித்துவம், தனது ஆதரவை காங்கிரஸிலிருந்து பாஜகவிற்கு மாற்ற முடிவு செய்தது. மோடியை ஒரு தீர்க்கமான, சக்திவாய்ந்த தலைவராக, செயல்பாட்டு மனிதராக அவர்கள் கண்டார்கள்; இவரது ஆட்சியில் தங்கள் இலாபங்கள் பெருகும் என்று நம்பினார்கள். மோடியும், ஏழைகளின் செலவில் அவர்களின் நலன்களை முன்னேற்றுவதன் மூலம் தனது வாக்குறுதியைக் காப்பாற்றியுள்ளார். ஆண்மைவாத, வலிமையை முன்னிறுத்தும் தேசியவாதத்தை ஊக்குவிக்கும் திரைப்படங்கள், மோடியைச் சுற்றியுள்ள பெருநிறுவனக் கட்டுக்கதை உருவாக்கத்திற்கு உணவூட்டுகின்றன. துரந்தர் போன்ற படங்கள் அபரிமிதமான இலாபங்களை ஈட்டும்போது, அது பெருநிறுவனத்தின் கஜானாவை நிரப்புகிறது.
இந்திய பெருமுதலாளிகளும், அந்த பெருமுதலாளிகளின் விருப்பமான பாஜகவும், அதன் தலைவரான மோடியும் – எந்தவொரு பிரச்சனையிலும் இந்திய தேசத்தின் நலன்களை பாதுகாத்து, அமெரிக்க வரிகளை எதிர்ப்பதில்லை. காசா/ஈரான் மீதான ஆக்கிரமிப்பு போர்களில் பேசுவதில்லை. ஆனால், அதி தேசியவாத கட்டமைப்பை ஊடகங்களின் மூலம் ஊக்குவிக்கிறர்கள். இதை நாம் முரண்பாடாக பார்க்க முடியாது. பெரும் முதலாளித்துவத்திற்கு இவ்வாறான கட்டுக்கதை தேவைப்படுகிறது. ஏனெனில் அது உண்மையான உலகில் ஏகாதிபத்தியத்திடம் சரணடைகிறது.
சுருங்கச் சொன்னால், இன்று இந்தி சினிமாவில் பிரச்சாரச் சூழல் இதுதான் — இந்துத்துவ கண்ணோட்டத்திற்கு எதிரான கருத்துக்களை முடக்குவது, தடுப்பது; இந்துத்துவத்தை ஊக்குவிக்கும் படங்களைப் பெருமைப்படுத்தும்படியான, அதற்குச் சவால் விடுபவர்களுக்கு ஆத்திரமூட்டும்படியான சமூக ஊடகப் பிரச்சாரங்களை முன்னெடுப்பது; அரசு அமைப்புகளைப் பயன்படுத்தி, பார்வையாளர்களைச் செயற்கையாக உயர்த்துவது; விருதுகள் மற்றும் கௌரவங்கள் மூலம் செல்லுபடியாக்கத்தையும் மதிப்பையும் வழங்குவது — இவை அனைத்தும் இந்துத்துவ சூழல் கட்டமைப்பின் கலவையாகும்.
பிரச்சாரப் படங்கள் அதிகாரத்தின் நலன்களுக்குச் சேவை செய்கின்றன. மேலும், அதிகாரம் அவற்றின் தயாரிப்பாளர்களுக்கும் பலன் கொடுக்கின்றன.
இந்தப் பிரச்சாரச் சூழலை நாம் எதிர்த்து முன்னேறாவிட்டால், காலப்போக்கில் ஒரு குறிப்பிட்ட திரைப்படம் பிரச்சாரமானதா இல்லையா என்பதே முக்கியமற்றதாகிவிடும். உண்மையில், திரைப்படங்கள் தயாரிக்கப்படும் பெரிய சூழல் மிகவும் குறுகியதாகவும், இறுக்கமானதாகவும், கட்டுப்பாடானதாகவும் மாறிவிடும்; ஒரு குறிப்பிட்ட படம் என்ன சொல்கிறது அல்லது சொல்லவில்லை என்பது அரிதாகவே முக்கியத்துவம் பெறும். அடிப்படை அளவுகோல் மாறிவிடும்.
மதச்சார்பற்ற எதிர்ப்பு
நாம் இன்னும் அந்த எல்லைக்குச் சென்றுவிடவில்லை. எதிர்ப்புக் குரல்களுக்கும், போராட்டத்திற்கும் இன்னும் நிறைய இடம் உள்ளது. திரையுலகில் முற்போக்கான, மதச்சார்பற்ற கலைஞர்கள் ஏராளமாக உள்ளனர். உண்மையில், அவர்கள் மதவெறியர்களை விட அதிக எண்ணிக்கையில் இருக்கலாம். சிக்கலான, நுணுக்கமான கதைகளைச் சொல்வதற்கான வழிமுறைகளை அவர்கள் தொடர்ந்து கண்டுபிடிப்பார்கள்; மேலும் பரிவுடனும், சுய விமர்சனத்துடனும் சிந்திக்க நம்மை ஊக்குவிப்பார்கள். தலித்துகள், ஆதிவாசிகள், உழைக்கும் வர்க்கங்கள், பெண்கள், இயல்பு சாரா பாலியல் மக்கள் உள்ளிட்ட பலரின் கதைகளை அவர்கள் சொல்வார்கள். அடக்குமுறை மற்றும் சுரண்டல் பற்றிய கதைகளும், போராட்டம் மற்றும் வெற்றிகள் பற்றிய கதைகளும் அவர்களிடமிருந்து வரும். சுருங்கச் சொன்னால், இந்துத்துவ கதையாடலை நுட்பமாகவோ அல்லது வெளிப்படையாகவோ குறைமதிப்பாக்கும் கதைகள் அவர்களிடமிருந்து வரும்.
அவ்வாறான முயற்சிகளின் மூலம், அவர்கள் பல நூற்றாண்டுக்கால கலாச்சாரத்தின் ஆதரவைப் பெறுவார்கள். பாரம்பரிய இந்திய கதைசொல்லல் மரபுகள் பல நூற்றாண்டுகளாகவே இருமை நிலைப்படுத்தலை எதிர்க்கின்றன. ராமாயணம், மகாபாரதம் போன்ற நமது புராண இதிகாசங்களின் கதாநாயகர்களும் (ஹீரோக்கள்) எதிரிகளும் (வில்லன்கள்) சிக்கலான கதாபாத்திரங்கள் — மனித பலவீனங்களும் நன்மையும் நிறைந்தவை. ஹீரோக்களை விமர்சிப்பதோ அல்லது வில்லன்களின் நடத்தையைப் பாராட்டுவதோ நமது கதை மரபுகளுக்கு அந்நியமானதல்ல. வில்லன்களை ஹீரோக்களாகவும், நேர்மாறாகவும் மாற்றுவதன் மூலம் பாரம்பரிய கதையைத் தலைகீழாக்கும் காவியங்களின் பதிப்புகளும் நம்மிடம் உள்ளன.
திரைப்படம் பார்க்கும் பொதுமக்கள் இந்த மரபுகளின் வாரிசுகளே. வெறுமனே இந்துத்துவ கண்ணோட்டத்தை ஊக்குவிப்பது தானாகவே ஒரு படத்தின் வெற்றிக்கு உத்தரவாதம் அளித்துவிடாது. இன்றும் கூட, ஹிட் ஆகும் ஒவ்வொரு இந்துத்துவப் படத்திற்கும், ஒரு தடயமும் இல்லாமல் மூழ்கும் ஒரு டஜன் தோல்விப்படங்கள் உள்ளன. திரைப்படத் தயாரிப்பாளர்கள் மக்கள் பக்கம் திரும்ப வேண்டும் — அவர்களின் திரைப்படங்களுக்குப் பார்வையாளர்களாக மட்டுமல்ல; மதவெறி மற்றும் வெறுப்புக்கு எதிரான போராட்டத்தில் கூட்டாளிகளாகவும்.
***
கட்டுரையாளர் சுதன்வா தேஷ்பாண்டே — நாடக இயக்குனர், திரைப்பட/நாடக நடிகர் ஆவார். டெல்லியின் ஜன நாட்டிய மஞ்ச் உறுப்பினராக உள்ளார். அவர் லெஃப்ட்வேர்ட் புக்ஸ் நிறுவனத்தின் ஆசிரியராகப் பணிபுரிகிறார். ஹல்லா போல்: தி டெத் அண்ட் லைஃப் ஆஃப் சஃப்தர் ஹஷ்மி என்ற அவருடைய நூல், அ. மங்கை அவர்களின் மொழியாக்கத்தில் ‘ஹல்லா போல்: சஃப்தர் ஹஷ்மியின் வாழ்வும் மரணமும்’ என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயத்தால் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில்: இரா. சிந்தன்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply