
சமகால அரசியலில் இடதுசாரி எதிர்ப்பும், இடது மாற்றுக்கான வாய்ப்புகளும்
என். குணசேகரன்
இந்திய இடதுசாரி இயக்கம் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய சமூக-அரசியல் அமைப்பில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. நிலச் சீர்திருத்தங்கள், பொதுத்துறை உருவாக்கம், தொழிலாளர் உரிமைச் சட்டங்கள், மதச்சார்பின்மையைப் பாதுகாத்தல், கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்துதல், சமூக நீதி எனப் பல்வேறு தளங்களில் இடதுசாரிகளின் பங்களிப்பு அளப்பரியது.
இருப்பினும், தற்போதைய சூழலில் இந்திய இடதுசாரி இயக்கம் மிகவும் கடுமையான தேர்தல் பின்னடைவை சந்தித்துள்ளது. நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் பிரதிநிதித்துவம் குறைந்துள்ள இந்தச் சூழலை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, முதலாளித்துவக் கார்ப்பரேட் ஊடகங்களும், வலதுசாரி அமைப்புகளும் “இடதுசாரி சித்தாந்தம் முடிவுக்கு வந்துவிட்டது” என்ற பிம்பத்தைக் கட்டமைக்க முயல்கின்றன.
ஆனால், சமகால இந்தியாவில் நிலவும் தீவிரப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் நவபாசிச அச்சுறுத்தல்களுக்கும் ஒரே கொள்கை ரீதியான மாற்று இடதுசாரிகள்தான். இதுவே இன்றைய கள எதார்த்தம் உணர்த்தும் உண்மை.
இடதுசாரி எதிர்ப்புக் கருத்துக்கள்
சமகால அரசியல் விவாதங்களிலும், ஊடக வெளியிலும் இடதுசாரிகளுக்கு எதிராக பல வகையான விமர்சனங்களும் எதிர்ப்புக் கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.
அமெரிக்காவில் 1950-களில் நிலவிய ‘மெக்கார்த்தியிசம்’ (McCarthyism) பாணியிலான கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை இந்தியாவில் வலதுசாரிகள் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். பொதுச் சொத்துக்களின் கூட்டு உடைமை, நிலம், சொத்துக்குவியலை மறுபகிர்வு செய்வது, தொழிலாளர் நலன்கள், உரிமைகள் பாதுகாப்பு போன்ற இடதுசாரிகளின் பார்வைகளை “வளர்ச்சிக்கு எதிரானது”, “அமைதிக்கு ஆபத்தானது” “இந்தியாவிற்குப் பொருத்தமில்லை” எனச் சித்தரிக்கின்றனர். நவதாராளவாதப் பொருளாதாரத்தின் கீழ் கார்ப்பரேட் இலாபவெறியை நியாயப்படுத்தவும், இடதுசாரிகளைச் சுற்றி ஒரு எதிர்மறைப் பிம்பத்தை உருவாக்கவும் இத்தகைய கட்டுக்கதைகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.
2004-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 60 மக்களவை இடங்களைப் பெற்று, மத்திய அரசையே தீர்மானிக்கும் சக்தியாக இருந்த இடதுசாரிகள், இன்று நாடாளுமன்றத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களையே கொண்டுள்ளனர். 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்த மேற்கு வங்கம், 35 ஆண்டுகள் ஆட்சி செய்த திரிபுரா மற்றும் பாரம்பரியக் கோட்டையான கேரளா ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள தேர்தல் பின்னடைவுகள், இடதுசாரிகளின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்குவதாக எதிர்த்தரப்பினர் வாதிடுகின்றனர்.
இந்தியாவின் பெரும்பான்மையான இந்தி பேசும் வட மாநிலங்களில் ஆழமான நிலப்பிரபுத்துவ அமைப்புகளையும் சாதியக் கட்டமைப்புகளையும் உடைத்து ஒரு தேசிய சக்தியாக இடதுசாரிகள் வளரத் தவறிவிட்டனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. மேலும், சமகால அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் சாதி-சமூக அடையாள அரசியல், மத ரீதியாக மக்கள் பிளவுபடுவது, ஆளும் கட்சிகளின் நலத்திட்ட அரசியல் ஆகியவற்றுக்கு ஈடுகொடுக்க இடதுசாரிகளின் பாரம்பரிய வர்க்க அணுகுமுறை போதுமானதாக இல்லை என்றும் வாதிடப்படுகிறது.
இந்த விமர்சனங்கள் அனைத்தும் மேலோட்டமானவை. தேர்தல் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு வாதங்களை முன்வைக்கின்றனர். இந்த விமர்சனங்கள் சமூகத்தின் ஆழமான பொருளாதார எதார்த்தத்தையும் இடதுசாரிகளின் இன்றியமையாத தேவையையும் மறைக்க முயல்கின்றன.
தேர்தல் வெற்றிகளைப் பொறுத்தவரை இடதுசாரி இயக்க செல்வாக்கு குறைந்திருக்கலாம் ;ஆனால் அதிகரித்து வரும் சமத்துவமின்மை, பிளவுபடுத்தும் போக்குகள் மற்றும் கார்ப்பரேட் மூலதனத்தின் ஆதிக்கம் நிறைந்த இந்த சமூக சூழலில் இடதுசாரிகளிடமே சரியான கொள்கைரீதியான தீர்வுகள் உள்ளன. பாட்டாளி வர்க்கப் பார்வையிலிருந்து இடதுசாரிகள் தீர்வுகளை முன்வைப்பதால் அவர்களின் முக்கியத்துவம் எள்ளளவும் குறைய வாய்ப்பில்லை.
ஜனநாயகத்தில் தேர்தல் முடிவுகள் தற்காலிகமானவை. இடதுசாரிகள் வெறும் தேர்தல் அரசியலுக்காக மட்டுமே இயங்கும் கட்சிகள் அல்ல. 2004-2008 UPA-1 ஆட்சிக்காலத்தில் இடதுசாரிகள் அளித்த அழுத்தத்தின் காரணமாகவே ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்’ , ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ மற்றும் ‘வரலாற்றுச் சிறப்புமிக்க வன உரிமைச் சட்டம்’ ஆகியவை சாத்தியமாயின. இச்சட்டங்கள் இன்று கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பாக விளங்குகின்றன.
1990-களின் துவக்கத்தில் கார்ப்பரேட் முதலாளித்துவம் இந்தியாவிற்கு வளமான எதிர்காலத்தைத் தரும் என்று ஒரு சித்திரத்தைக் கட்டமைத்தனர். அந்தக் கூற்று முற்றிலும் பொய்யாகிவிட்டது. நாட்டின் பெரும்பான்மையான செல்வம் 1% கார்ப்பரேட்டுகளின் கைகளில் குவிந்து கிடப்பதும், வேலையில்லாத் திண்டாட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதும் நவ-தாராளவாதக் கொள்கைகளின் தோல்வியையே காட்டுகின்றன. சாம்சங் தொழிலாளர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தொழிற்சங்கப் போராட்டம், டெல்லியை முற்றுகையிட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம், பழங்குடியினரின் நில உரிமை இயக்கங்கள் (PESA), சமீபத்திய நீட்டிற்கு எதிரான மாணவர், வாலிபர் போராட்டங்கள் அனைத்திலும் இடதுசாரிகளே முன்னணியில் நின்று போராடி வெற்றி கண்டுள்ளனர்.
கேரளாவில் ஆட்சியில் இருந்த இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் செயல்பாடுகளே, வலதுசாரிகள் இடதுசாரிகளைப் பற்றிப் பரப்பும் அவதூறுகளுக்கு பதிலடியாக அமைந்துள்ளன. வறுமைஒழிப்பு, உலகத் தரம் வாய்ந்த பொதுக் கல்வி, மேம்பட்ட பொதுச் சுகாதாரம், மனித வள மேம்பாட்டுக் குறியீட்டில் முதலிடம் போன்ற சாதனைகள் இடதுசாரி மாற்று சாத்தியமே என்பதையும், அது ஒன்றுதான் மாற்றுப்பாதை என்பதையும் நிரூபித்துள்ளன.
எனவே, இன்றைய இந்தியாவில் நிலவும் அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடிகளுக்கு இடதுசாரிகளால் மட்டுமே சரியான வழியைக் காட்ட முடியும்.
புதிய அணுகுமுறைகள்
இன்றைய மாறிவரும் சூழலுக்கு ஏற்ப சில புதிய அணுகுமுறைகள் தேவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஃப்ரண்ட்லைன் இதழிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் தோழர் எம்.ஏ பேபி அளித்த பேட்டியில் சிலவற்றை சுட்டிக்காட்டுகிறார்.(“இந்தியாவில் மறுமலர்ச்சி காணும் இடதுசாரி இயக்கம் தேவை”-பேட்டி )
“1977-க்குப் பிறகு எந்தவொரு மாநிலத்திலும் சிபிஐ(எம்) தலைமையிலான அரசு இல்லாத நிலை இப்போதுதான் ஏற்பட்டுள்ளது; இது முன்னெப்போதும் இல்லாத ஒரு சூழலாகும்… எங்கள் அடிப்படை அரசியல் கொள்கைகளை மாற்றாமல் பொருத்தமான நடைமுறைகளை நாங்கள் வகுக்க வேண்டியிருக்கும்”என்றார் தோழர் எம்.ஏ பேபி.
மேலும் அவர் கீழ்க்கண்ட தளங்களில் பொருத்தமான அணுகுமுறை தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார்:
“இளைஞர்கள் மற்றும் ஜென் Z தலைமுறையினருடனான தொடர்பை அதிகரிக்க, பொருத்தமான புதிய அணுகுமுறைகளை உருவாக்க வேண்டும்”.
“எங்கள் வர்க்க அடிப்படையிலான அணுகுமுறையைக் கட்டிக் காப்பதன் மூலமும், அதை சமூக நீதிக்கான போராட்டத்துடன் இணைப்பதன் மூலமும் எங்களால் இதைச் செய்ய முடியும்”.
“பொதுவான மத நம்பிக்கை கொண்ட மக்களுக்கும், வகுப்புவாத நோக்கங்களுக்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்வதும் மிக முக்கியம்”.
“நாடாளுமன்ற அரசியலுக்கு முக்கியத்துவம் இருந்தாலும், நாடாளுமன்றத்திற்கு வெளியிலான போராட்டங்கள் மூலமாகவும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை நாங்கள் முன்னெடுக்கிறோம்”.
“தற்கால அரசியல் களத்தில், ஏறக்குறைய அனைத்து முக்கிய அரசியல் அமைப்புகளும் நவதாராளவாதக் கொள்கைகளைக் கொண்டவை; இடதுசாரிகள் மட்டுமே ஒரு மாற்றை வழங்குகின்றனர். இந்த அரசியல் வெளிதான் இந்தியாவில் இடதுசாரிகளின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது”.
இவை அனைத்தும் கூட்டான விவாதத்தின் வழியாக செயல் வடிவம் பெற்று வருகின்றன. ஆனால் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் இடதுசாரிகளுக்கு முடிவுரை எழுதுவது அபத்தமானது.
வகுப்புவாத சக்திகள் இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜனநாயக நிறுவனங்களையும் சிதைக்க முயலும் வேளையில், எவ்வித மதவாத சக்தியுடனும் சமரசம் செய்துகொள்ளாமல் இந்துத்துவ நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடி வரும் ஒரே இயக்கம் இடதுசாரி இயக்கமே.
கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற அத்தியாவசியத் துறைகளைத் தனியார்மயமாக்கலுக்குக் பலிகொடுக்காமல், பொதுத்துறையைப் பாதுகாத்து ஏழை எளிய மக்களின் வாங்கும் திறனை உயர்த்தும் மாற்றுப் பொருளாதார கொள்கைகள் இடதுசாரிகளிடம் மட்டுமே உள்ளது.
சாதிய ஒடுக்குமுறைகள், பாலினப் பாகுபாடுகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களை வர்க்கப் போராட்டத்துடன் இணைத்துக் கொண்டு செல்லும் அணுகுமுறையுடன் இடதுசாரிகள்தான் செயல்பட்டு வருகின்றனர்.
எட்டு மணி நேர வேலை நேரம், குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம், தொழில் பாதுகாப்பு போன்ற அடிப்படைத் தொழிலாளர் உரிமைகளைப் போராடிப் பெற்றதில் இடதுசாரி தொழிற்சங்கங்களின் (AITUC, CITU போன்றவை) பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. நவ தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராகத் தொழிலாளர்களைத் திரட்டி வேலைநிறுத்தங்கள், போராட்டங்களை இடையறாது இடது தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வருகின்றன.
“உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற முழக்கத்துடன் தெலங்கானாப் போராட்டம், புன்னப்புரா-வயலார் போராட்டம், வெண்மணிப் போராட்டம் என நிலம் மற்றும் விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காகப் போராடிய பாரம்பரியம் கொண்டவை இடதுசாரி விவசாயச் சங்கங்கள் (AIKS போன்றவை). வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்தில் அவர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது.
அனைவருக்குமான தரமான கல்வி, கல்வி தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டம் மற்றும் வேலைவாய்ப்பு உரிமைக்காக இடது மாணவர், வாலிபர் சங்கங்கள் நடத்தி வரும் இயக்கங்களை குறைத்து மதிப்பிட இயலாது. இது போன்று இடது கண்ணோட்டம் கொண்ட பல வெகுமக்கள் அமைப்புக்கள் இடது கருத்தியலுக்கும் இடது அரசியலுக்கும் உள்ள பிரகாசமான எதிர்காலத்தினை பறைசாற்றுகின்றன.
வரலாறு என்பது சீரான நேர்கோட்டுப் பாதையில் தானாகவே முன்னேறுவது அல்ல. வெற்றி தோல்விகளும், பின்னடைவுகளும், எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்ததாகவே வரலாற்றின் இயக்கம் இருக்கும். ஒரு தோல்வி நிகழ்ந்தால் இடதுசாரிகளுக்கு முடிவுரை எழுதுவது வரலாற்று அறியாமை மட்டுமல்ல; திட்டமிட்டு ஆளும் வர்க்கங்களால் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி.
இடதுசாரிகளின் எதிர்காலம் என்பது இந்தியாவின் எதிர்காலத்தோடு பிணைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பின்னடைவுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து சுரண்டப்படும் விளிம்புநிலை மக்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை இடைவிடாது இடதுசாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
வர்க்கங்களை அரசியலாகத் திரட்டி, பரந்த மக்கள் இயக்கங்களை உருவாக்குவதன் மூலம் மட்டுமே பாசிசத்தை வீழ்த்தி, இந்தியாவை ஒரு சமத்துவ, மதச்சார்பற்ற, ஜனநாயகப் பாதையில் வழிநடத்த முடியும். அந்த வரலாற்றுப் பொறுப்பை நிறைவேற்றும் உண்மையான ஒரே மாற்று சக்தி இடதுசாரிகளே!
தொலைநோக்கு இலக்கும் அரசியல் உத்தியும்
இந்திய இடதுசாரி இயக்கத்தின் முக்கிய அங்கமாக உள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. புரட்சிகர மாற்றத்திற்கான தொலைநோக்கு இலக்கையும், அதனை அடைவதற்கான நடைமுறை உத்தியையும் மார்க்சிய அடிப்படையில் வகுத்து செயல்பட்டு வருகிற பாட்டாளி வர்க்கத்தின் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி .
தற்போதைய இந்திய சூழலை பகுப்பாய்வு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மதுரை கட்சிக் காங்கிரஸ் இடது ஜனநாயக அணியை கட்டியமைக்க வலியுறுத்தியது. இது வெறும் தேர்தல் காலக் கூட்டணிக்கான தந்திரம் அல்ல; அது இந்தியாவில் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அமைப்பிற்கு மாற்றாக மக்கள் ஜனநாயகப் புரட்சியை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான அரசியல் நடைமுறை உத்தி.
நிலப்பிரபுத்துவ, ஏகபோக முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான மக்கள் ஜனநாயக அணியை உருவாக்கிப் புரட்சியை வெற்றி பெறச் செய்து, மக்கள் ஜனநாயக அரசு அமைப்பதே கட்சியின் தொலைநோக்கு இலக்கு.
தற்போதைய சூழலில் வர்க்கச் சமன்பாட்டில் தொழிலாளி வர்க்கத்திற்குச் சாதகமான மாற்றத்தை உருவாக்கவும், தொலைநோக்கு இலக்கை அடைவதற்காகவும் பயன்படும் ஒரு இடைக்கால முழக்கமாகவும் அரசியல் நடைமுறை உத்தியாகவும் இடது ஜனநாயக அணி திகழ்கிறது.
முதலாளித்துவக் கட்சிகளில் ஏதேனும் ஒரு அணியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற தற்போதைய சட்டகத்தை உடைத்து, வர்க்கச் சமன்பாட்டை மாற்றுவதே இதன் முதன்மை நோக்கமாகும்
தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் (விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள்) வலுவான கூட்டணியே மக்கள் ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்கும். மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரட்டப்பட வேண்டிய வர்க்கங்களே இடது ஜனநாயக அணியிலும் அங்கம் வகிக்கின்றன
தொழிலாளி, விவசாயப் பிரிவினர், விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள் மற்றும் நகர்ப்புற/கிராமப்புற நடுத்தர வர்க்கத்தினர் (அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், அறிவுஜீவிகள்),பணக்கார விவசாயிகள், பெருமுதலாளிகள் அல்லாத சிறிய/நடுத்தர முதலாளிகள், கைவினைஞர்கள் மற்றும் சிறு வியாபாரிகள், சாதிய, மதவாத மற்றும் பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடும் பட்டியலின, பழங்குடியின மக்கள், பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் ஜனநாயக அமைப்புகள் எனப் பல்வேறு மக்கள் பிரிவினர் இடது ஜனநாயக அணியில் அங்கம் வகிப்பார்கள். அவர்களிடையே நடத்தப்படும் வர்க்கப் போராட்டங்களும், மக்கள் இயக்கங்களும் இடது ஜனநாயக அணி அமையும் சூழலை ஏற்படுத்தும்.
இன்றைய நிலையில் நவதாராளவாதக் கொள்கைகளுக்கு மாற்றான கொள்கைத் திட்டத்தை முன்வைத்து இந்த அணி திரட்டல் முன்னேறும்.
பொதுத்துறையைப் பாதுகாத்தல் மற்றும் உணவு, கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசியத் தேவைகளை உறுதிப்படுத்துவதில் அரசுப் பொறுப்பேற்றல், சமூக நீதி, நிலச்சீர்திருத்தங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாத்து, உண்மையான கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல மாற்று முழக்கங்கள் மக்கள் திரட்டலுக்கு மையமாக அமையும்.
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பங்கேற்பது இந்த அணி திரட்டலின் ஒரு பகுதி மட்டுமே. பிரதான போராட்டக் களம் என்பது தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், வாலிபர், மாணவர் மற்றும் மாதர் அமைப்புகளின் வழியே நடத்தப்படும் அன்றாட மக்கள் இயக்கங்களில்தான் உள்ளது.
வெறும் தேர்தல் வெற்றிகளை விட, உழைக்கும் மக்களின் போர்க்குணத்தையும் மாற்று அரசியலுக்கான அரசியல் விழிப்புணர்வையும் உயர்த்துவதே செயல்பாட்டின் முதன்மை நோக்கமாக இருக்கும்.
இடதுசாரிகள் தங்களது சுயமான அரசியல் மற்றும் அமைப்புக் கட்டமைப்பை வலுப்படுத்தும்போதுதான் பிற மதச்சார்பற்ற, ஜனநாயகக் கட்சிகளை மாற்றுப் பாதைக்கு ஈர்க்க முடியும்.
ஒவ்வொரு மாநிலங்களிலும் நிலவும் சூழலுக்கு ஏற்ப இடது ஜனநாயக சக்திகளின் ஒற்றுமை கட்டிட மார்க்சிஸ்ட் கட்சிக் காங்கிரஸ் வழிகாட்டியுள்ளது.
தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு
தமிழகத்தில் சிபிஐ, சிபிஎம் மற்றும் சிபிஐ (எம்.எல்) ஆகிய இடதுசாரிக் கட்சிகள் உருவாக்கியுள்ள ஒருங்கிணைப்புக் குழு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வு. இது இன்றைய தமிழகத்தின் அரசியல் தேவையாகவும் உள்ளது.
தமிழகத்தில் விடுதலைப் போராட்டக் காலத்திலிருந்து இடதுசாரிகள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகள் பல உண்டு.
1920-ஆம் ஆண்டுகளிலேயே தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள் ஆலைத் தொழிலாளர் போராட்டங்கள் வழியாக 8 மணி நேர வேலை உரிமை மற்றும் சங்கம் அமைக்கும் உரிமைகளைச் சட்டரீதியாக வென்றெடுத்தனர்.நிலமீட்பு, கூலி உயர்வு மற்றும் கீழவெண்மணி தியாகங்களின் பின்னணியிலான போராட்டங்களின் அழுத்தத்தால் தமிழ்நாடு அரசு நில உச்சவரம்புச் சட்டம், குத்தகைதாரர்கள் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் குடியிருப்போர் உரிமைச் சட்டங்களை இயற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்யக்கோரி கம்யூனிஸ்டுகள் மேற்கொண்ட முயற்சிகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை.மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது, தமிழ் மொழி உரிமைகளைப் பாதுகாப்பது, மாநில சுயாட்சிக் குரலை எழுப்பியது ஆகியவற்றில் இடதுசாரிகள் முன்னோடியாகத் திகழ்ந்தனர்.
இடது ஒருங்கிணைப்புக் குழு நவதாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள், தனியார்மயம் மற்றும் மதவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக வலுவான மாற்று அரசியலை முன்வைக்கிறது.
தொழிலாளர்கள், விவசாயிகள், முறைசாராத் தொழிலாளர்கள், பட்டியலின/பழங்குடியின மக்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் வாழ்வாதாரப் போராட்டங்களை ஒன்றிணைத்து கள அளவிலான கூட்டு இயக்கங்களை மேலும் வலுப்படுத்த இடது ஒருங்கிணைப்புக் குழு உறுதிபூண்டுள்ளது .
அது, சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போரிலும், தமிழ் மொழி உரிமைகள், மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதிலும் ஒருங்கிணைந்த குரலாகச் செயல்படும்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலமீட்பு, கூலி உயர்வு என வர்க்கக் கோரிக்கைகளுக்காக வர்க்கப் போராட்டங்களையும் தியாகங்களையும் செய்த தமிழக செங்கொடி இயக்கம், இன்றைய சமகாலச் சவால்களை எதிர்கொள்ள மக்களுக்கான உன்னதமான இடது ஜனநாயக மாற்றுப் பாதையைக் காட்டுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக உலகளவில் முதலாளித்துவம் சந்திக்கும் பொருளாதார நெருக்கடி, இந்தியாவில் நிலவும் சாதியமைப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, தாராளமயமாக்கல் கொள்கைகளின் விளைவுகள் ஆகியவற்றை ஆழமாகப் புரிந்து கொண்டு, அவற்றுக்கு முறையான தீர்வு காணும் தத்துவார்த்தக் கட்டமைப்பு மார்க்சியத்திடம் மட்டுமே உள்ளது . மார்க்சியத் தத்துவப் பின்புலத்தின் காரணமாக இடதுசாரி இயக்கங்கள் மாபெரும் தனித்துவமும் பலமும் கொண்டவையாகத் திகழ்கின்றன. மார்க்சியம் எனும் மகத்தான தத்துவ பலம் கொண்டு, தமிழகத்தை இடது பாதையில் கொண்டு செல்லும் வரலாற்றுக் கடமையை இடதுசாரிகள் வெற்றிகரமாக நிகழ்த்துவார்கள்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply