
நவபாசிச போக்குகளை எதிர்க்க மகளிர் இயக்கத்தை வலுப்படுத்துவோம்
பேரா. ஆர். சந்திரா
அறிமுகம்
“பாசிசம் என்பது ஒரு தீவிர தேசியவாத, சர்வாதிகார அரசியல் தத்துவம். இந்த வலதுசாரி அரசியல் அமைப்பில் சமூகம், பொருளாதார அமைப்பின் மீது அரசு முழு ஆதிக்கம் செலுத்தும். அரசுக்கு எதிரான எதுவும் அனுமதிக்கப்பட மாட்டாது” [மாக்மில்லன் அகராதி]. வெப்ஸ்டர் அகராதியின் விளக்கம் “பாசிச அரசு ஒரு சர்வாதிகாரியால் ஆளப்படுகிறது. அரசுக்கு எதிராக மக்கள் செயல்பட அனுமதி இல்லை.” 1935ஆம் ஆண்டு நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7வது காங்கிரசில் தோழர் ஜார்ஜ் டிமிட்ரொவ் கூறியது: “பாசிசம் என்பது நிதிமூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இன வெறி கொண்ட, மிக மோசமான ஏகாதிபத்திய சக்திகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்” இந்த விளக்கத்தையே டோக்ளியாட்டியும் பாசிசம் பற்றிய தனது விரிவுரையில் எடுத்துரைக்கிறார். “பாசிசம் என்பது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வடிவம் எடுக்கும். ஒரே நாட்டில்கூட, அந்தந்த காலகட்டத்திற்கேற்ப, அதன் நோக்கங்கள், அணுகுமுறைகள் மாறும். பாசிசம் என்பது கம்யூனிசம், சோஷலிசம், பன்முகத்தன்மை ஆகியவற்றிற்கு எதிரானது. தனிமனித உரிமைகள், சமத்துவம், ஜனநாயகம் ஆகியவற்றிற்கு எதிரானது. பாசிச கட்சி ஆட்சி செய்யும் நாடுகளில், “அரசியல் விவாதங்கள் நடைபெறாது. பாசிச கட்சி கொள்கையில் மாற்றம் கொண்டுவந்தால் கூட, அக்கட்சியின் உறுப்பினர்கள் இதர குடிமக்களை போல செய்தித்தாள்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டி இருக்கும். அதன் கொள்கை உருவாக்கத்தில் கட்சி உறுப்பினர்களுக்கு பங்கு இருக்காது. உட்கட்சி ஜனநாயகம் என்பது இருக்காது.” [டோக்ளியாட்டி].
பொதுவாக, பெண்ணியம் என்பது பாலின சமத்துவத்தின் மீதான நம்பிக்கை கொண்ட கோட்பாடு ஆகும். இது பெண்களின் சமமான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளுக்காகவும், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை களைந்து, கல்வியறிவு, சுதந்திரம் மற்றும் அதிகாரமளித்தலை வலியுறுத்தும் ஒரு கோட்பாடு ஆகும். பெண்களை தாழ்வாக நடத்தும் ஆணாதிக்க சமூக கட்டமைப்புகளை இது எதிர்க்கிறது. இக்கோட்பாடு, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழித்து, பெண்கள் சுயமரியாதையுடன் வாழ வழிவகை செய்யும் சமூக மாற்றம் தேவை என்று வலியுறுத்துகிறது . பெண்ணியம் என்றாலே அது ஆணுக்கு எதிரானது என்ற பரவலான கருத்து நிலவுகிறது. இது தவறு. பெண்ணியம் பொதுவாக ஆணாதிக்கத்தை எதிர்க்கிறதே தவிர, ஆணை எதிர்க்கவில்லை. பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ஆண்கள் இருக்கின்றனர். பெண்விடுதலைக்கான போராட்டம் என்பது பெண்கள் மட்டுமே நடத்தும் போராட்டம் அல்ல. ஆண்களும் அதில் பங்கு பெறுவது அவசியம். பெண்விடுதலை பெறாமல் மானுட விடுதலை சாத்தியம் இல்லை. அதுபோலவே, பெண்விடுதலைக்கான அனைத்து போராட்டங்களிலும் ஆண்களின் ஆதரவு இருக்க வேண்டும்.
வலதுசாரி பெண்ணியமும் மார்க்சீய பெண்ணியமும்
பெண்ணியம் பற்றிய சில அம்சங்களை மேலே கண்டோம். எனினும், தீவிர வலதுசாரி தன்மை கொண்ட பெண்ணிய போக்குகளும் உண்டு. இக்கட்டுரையில் மார்க்சீய அடிப்படையில் நின்று வலதுசாரி பெண்ணிய போக்குகள் பற்றி பார்ப்போம். 1920களிலும், 30களிலும் பெண்கள் இயக்கங்கள் செயல்பாடு பற்றி சர்வதேச தினத்திற்கு வித்திட்டவர்களில் ஒருவரான கிளாரா ஜெட்கின், தோழர் லெனின் அவர்களுடன் நடத்திய உரையாடலில் “முதலாளித்துவம் மற்றும் வர்க்க உறவுகளை பற்றி ஆராயாமல், வலதுசாரி பாலின அரசியலை புரிந்து கொள்ள முடியாது” என்கிறார். பாசிசம் பெண்களை எப்படி கவர்கிறது என்பதை பற்றி அவர் விளக்குகிறார். ஸ்திரத்தன்மை இல்லாத பொருளாதாரத்தினால் மக்களுக்கு ஏற்படும் கோபத்தை திசைதிருப்ப பாசிச அரசு யார் மீது பழி சுமத்தும்? சிறுபான்மையினர், குடிபெயர்ந்தோர், வலதுசாரிகளுக்கு எதிரான அரசியல் சக்திகள்/கட்சிகள் ஆகியோர் மீது மக்கள் கோபத்தை திருப்பும் பிரச்சாரத்தை செய்யும். முதலாளித்துவ சமுதாயத்தில் பொருளாதார நெருக்கடி தோன்றும்பொழுது, சர்வாதிகார இயக்கங்களும், வலதுசாரி அரசியல் சக்திகளும், தேசியவாதத்தை முன்வைத்து, சோஷலிச இயக்கங்களை குறிவைத்து தாக்கும். நாட்டை பாதுகாப்பது [தேசியவாதம்], குடும்பத்தை பாதுகாப்பது முக்கியம் என்று கருதும் வலதுசாரி பெண்ணியம், பாசிசத்துடன் கைகோர்க்கும். ஆணாதிக்க குடும்ப கட்டமைப்பை பற்றி எதுவும் சொல்லாது. முதலாளித்துவ சமுதாயத்தில் நிலவும் பெண் உழைப்பு சுரண்டல்கள் [வீட்டு வேலை, குழந்தைகள்/முதியோர் பராமரிப்பு போன்ற பெண்கள் செய்யும் ஊதியம் இல்லா உழைப்பு] பற்றி எதுவும் சொல்லாது. ஆனால், மார்க்சீய பெண்ணியம் அவற்றை பற்றி எல்லாம் தெளிவாக எடுத்துரைக்கிறது. பெண்களின் உழைப்பு நேரம் அதிகரிக்கிறது. குறைவான கூலி, நிரந்தரமற்ற பணி, தனியார்மயமாகும் சேவை போன்ற பிரச்னைகளை பாசிச வலதுசாரி பெண்ணியம் பேசாது. பெண்ணியம் பற்றிய விவாதத்தில், மார்க்சீயம் பெண்கள் குடும்பத்திற்குள்ளேயும், வெளியேயும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு இயக்கங்களை நடத்துகிறது.
“பெண்ணிய தேசீயவாதம்” [Femo-Nationalism]
வலதுசாரி பாசிச சக்திகள் பெண்களை எப்படி திரட்டுகிறார்கள்? “பெண்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அளிக்கும் வீரர்களை பெற்றுத் தருகிறார்கள். தாய் என்பவள் உன்னதமானவள். குடும்பத்தை பேணிக் காப்பவள். நாட்டின் பண்பாட்டை/கலாச்சாரதத்தை போற்றி காக்கும் முக்கிய பணியை செய்பவள்” போன்ற கருத்துக்களை வலதுசாரி பெண்ணியம் உயர்த்திப் பிடிக்கிறது. தேசியம் என்பதை முன்னிறுத்தி பெண்கள் காலம்காலமாக செய்துவந்த குடும்பம்சார் வேலைகளை பெருமைப்படுத்தி, பெண்களை போற்றுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, பெண்களை கவர்கிறார்கள் வலதுசாரிகள். இனத்தூய்மையை காக்க பெண்களின் பங்கு அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள். வேற்றுநாட்டினர் குடிபெயர்வது மூலம் இனத்தூய்மை, பண்பாடு/கலாச்சாரம் தாக்கப்படும் அபாயம் உள்ளது என பிரச்சாரம் செய்கிறார்கள். பாசிச தத்துவத்தை நியாயப்படுத்த, ஆணாதிக்க குடும்ப கட்டமைப்பை பாதுகாக்க, பெண்களை பாசிச அணிக்கு எப்படி தயார் செய்வது என்பதை பாசிச இயக்கங்கள் நன்கு தெரிந்து வைத்திருந்தன. சமூக ஏற்றத்தாழ்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தும் சிக்கல்கள், கோபங்களை எதிர்கொள்ள, வலதுசாரி கருத்துக்கு எதிரானவர்கள் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். பாசிசம் வளர தொடங்கிய காலம் முதல் இன்று வரை, நாம் இந்த போக்கை காண முடியும்.
பாசிச இயக்கங்களில் பெண்கள்: சில வரலாற்று பதிவுகள்
1930கள் மற்றும் 40களில், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் பாசிச சக்திகள் வலுப்பெற துவங்கியபொழுது, பெண்கள் எப்படி மூளை சலவை செய்யப்பட்டனர்? 1933இல் நாஜிகள் ஆட்சிக்கு வந்தபொழுது அக்கட்சி உறுப்பினர்களில் 6 சதம் பேர் மட்டுமே பெண்கள். ஆனால், கலாச்சார அடையாளம், மக்கட்தொகையில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற விஷயங்களை முன்வைத்து பெண்கள் திரட்டப்பட்டார்கள். இத்தாலியில், பெனிடோ முசோலினி தாய்மையே உலகில் சிறந்தது என்று கூறி, பெண்களை நிறைய குழந்தைகளை பெற்று கொள்ள ஊக்குவித்தார். அதுமட்டுமல்ல. வேலையில் இருந்த பெண்களிடம், ஆண்கள் வேலை இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டி, [வேலையின்மை கடுமையாக இருந்த காலம்] அந்த வேலையை ஆண்களுக்கு விட்டுக் கொடுக்கும்படி வலியுறுத்தினார். “1933இல் ஹிட்லர் வெற்றி பெற்ற பின்னர், நாஜிகளின் பெண்கள் அமைப்பு, பெண்களுக்கு சுதந்திரமான அடையாளம் தேவை இல்லை என கருதியது” என ரிச்சர்டு இவான்ஸ் என்ற ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் பொறுப்பில் இருந்த சில பெண்கள்கூட அரசியல் கரடு முரடானது என்றும், பெண்களின் சுபாவத்திற்கு ஏற்றது இல்லை என்றும் கருதி, அரசியலில் இருந்து விலகி மீண்டும் குடும்பம் என்ற வரையறைக்கு தங்களை உட்படுத்திக் கொண்டனர். இதன் மூலம் ஆணும் பெண்ணும் சமம் இல்லை என்ற வலதுசாரி தத்துவத்தை முன்னெடுத்து சென்றனர்.
பிரிட்டனின் மிகப்பெரிய பாசிச அமைப்பு “பிரிட்டிஷ் யூனியன் ஆப் பாசிஸ்டுகள்” என்பதாகும். 1932இல் ஆஸ்வால்ட் மோசலீ என்பவரால் துவக்கப்பட்ட இந்த கட்சியில், 40 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தார்கள். இதில் கணிசமான எண்ணிக்கையில் பெண்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது, இத்தாலிய பாசிச மாடலில் அமைந்த இந்த கட்சி, பிரிட்டிஷ் தேசியம், சர்வாதிகாரம், கார்ப்பரேட்டிசம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஜனநாயக அரசியலுக்கு எதிரானது. பி. யு. எப் செயல்பாடுகள் பற்றி டானியல் ஜோன்ஸ் மற்றும் மார்ட்டின் டர்ஹாம் [வலதுசாரி அரசியல் பற்றி நிறைய ஆய்வுகளை மேற்கொண்டவர்] 18.2.2025 இல் விரிவான கட்டுரை ஒன்றை எழுதி உள்ளனர் .பி. யு. எப் உறுப்பினர்களில் 20% பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளை பாவாடையும் கருப்பு ஷர்ட்டுகளும் அணிந்து இப்பெண்கள் பாசிச தத்துவத்தை பிரச்சாரம் செய்வதில் முக்கிய பங்கு செலுத்தினர். இந்த அமைப்பு பெண்ணிய கருத்துகளுக்கு எதிரான ஆணாதிக்க அமைப்பு. எனினும், தாய்மைதான் பிரதானமானது என்ற கருத்துடன், மக்கள் ஆதரவைப்பெற குழந்தைகள் நலன், உணவுக்கான உறுதி, ஆண்களுக்கு சமமான ஊதியம் ஆகிய கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. பிரசவத்தில் இறக்கும் தாய்மார்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அந்த பிரச்சனையும் முன்வைக்கப்பட்டது. பெண்கள் வீட்டிற்கு வெளியே உழைப்பு சந்தையில் பங்கு பெறுவது வரவேற்கப்பட்டது என்கிறார் பி. யு. எப். கட்சியின் மகளிர் அமைப்பு தலைவர் ஆன் ப்ராக் க்ரிக்ஸ். இந்த அமைப்பின் மற்றொரு தலைவரான நோரா எலாம், பெண்கள் உழைப்பு சந்தையில் பங்கு பெற திருமணம் தடையாக இருக்கக்கூடாது என வலியுறுத்தினார். ஒருபுறம் இதுபோன்ற கருத்துக்களை முன்வைத்தாலும், மறுபுறம் கருக்கலைப்பு உரிமைக்கு எதிராக வலுவாக குரலெழுப்பினார். பெண்களின் ஆதரவு, வாக்குகளை பெற சில முற்போக்கு கருத்துக்களை ஏற்றுக்கொள்வதாக காட்டிக் கொண்டாலும், அடிப்படையில், பெண்ணை “தாய்” என்ற தன்மையில் மட்டுமே முன்வைப்பது என்பது அவர்கள் பேச்சு, எழுத்துக்களில் தெளிவாக தெரிகிறது. பிரிட்டிஷ் பாசிஸ்டுகள் கருக்கலைப்பு சட்டத்தை கடுமையாக எதிர்த்தனர். ஒரு குடும்பத்திற்குள் நடைபெறும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை எதிர்க்காதது மட்டுமல்ல. பெண்கள் [மனைவி/மகள்] தவறு செய்தால், அடிப்பதில் தவறில்லை என்றும், பெண்களை விட ஆண்கள் உயர்ந்தவர்கள் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், ஆண்-பெண் சமத்துவத்தை எதிர்ப்பது, வேலை நிறுத்தங்களை கண்டிப்பது, கம்யூனிசத்திற்கெதிறாக பிரச்சாரம் செய்வது போன்றவை பி. யு. எப். கட்சியின் அம்சங்களாக இருந்திருக்கின்றன. பாசிசத்தை எதிர்த்த சில பெண்ணிய தேசீயவாதிகள் ஆர்த்தர் மோசலீயின் கருத்துக்கள் ஏழைகளுக்கு நல்ல வாழ்வை கொடுக்கும் என்று நம்பி அவரது தலைமையிலான அமைப்பில் இணைந்தனர். பின்னர், பாசிசம் நடைமுறையில் ஏழைகளுக்கு எதிராக, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான தத்துவம் என்பதை புரிந்து கொண்டனர். அப்படிப்பட்ட பெண்கள் அக்கட்சியில் இருந்து விலகி விட்டனர் என்பதும் பதிவாகி உள்ளது.
சமீபத்திய வளர்ச்சிபோக்குகள்
சமீபகாலமாக, ஐரோப்பாவில் வலதுசாரி பாசிச போக்குகள் அதிகரித்து வருகின்றன. “ப்ரதர்ஸ் ஆப் இத்தாலி” என்ற கட்சி ஒரு பாசிச கட்சி. அதன் தலைவரான ஜியார்ஜிய மேலோனி என்ற பெண் மிகவும் பிற்போக்கு சிந்தனைகளை கொண்டவர். அவர் தாய்மை அனைத்திற்கும் மேலானது என்பவர். இத்தாலியின் முதல் பெண் பிரதமர் ஆவார் என்று கூறி வருகின்றனர். இவரை போலவே, மரீ லா பென் [பிரான்ஸ்], சிவ்ஜெனசென் [நார்வே], பீட்டா ஷைட்டோ [போலந்து] ஆகிய பெண் தலைவர்கள் அரசியலில் முன்னுக்கு வருவது பெண்கள் மத்தியில் வலதுசாரி பாசிச தலைமையை ஏற்பவர்கள் உள்ளனர் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இவர்கள் அனைவரும் பெண்களின் அடிப்படை உரிமைகளுக்கெதிராக, குறிப்பாக கருக்கலைப்பு உரிமைக்கு எதிராக, வலுவாக பிரச்சாரம் செய்பவர்கள். ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் விளைவாக கர்ப்பம் தரித்தால் கூட, கருச்சிதைவு செய்யக்கூடாது என்ற நிலைபாட்டை முன்வைப்பவர்கள் என்பது மிகவும் கவலையளிக்கும் விஷயம். இந்த மூவரும் பெண்களை கவர ஒரே மாதிரியான திட்டத்தை வைத்திருப்பவர்கள் அல்ல. அந்தந்த நாட்டில் நிலவும் பிரதான கருத்து சூழலுக்கு ஏற்ப செயல்படுபவர்கள். இவர்கள் அனைவரும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக, குடிபெயர்ந்தவருக்கு எதிராக, கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக, மூன்றாம் பாலினத்திற்கு எதிராக, தன்பாலீர்ப்பு ஆண், பெண்களுக்கு எதிராக குரல்கொடுக்கும் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாசிச எதிர்ப்பு இயக்கங்களில் பெண்களின் பங்கு
இக்கட்டுரையில் வலதுசாரி பெண்ணீயவாதிகளின் பாசிச ஆதரவு நிலைபாடுகளை நாம் மேலே குறிப்பிட்டோம். அதேநேரத்தில், 1930-40 காலகட்டத்தில் ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் பாசிச அரசை எதிர்த்து பெண்கள் ஆற்றிய பங்கு முக்கியமானது என்பதையும் பதிவிட வேண்டும். பெண்கள் பாசிசத்தை எதிர்த்து ஆயுதம்ஏந்தி போராடியதுடன், தலைமறைவு வாழ்க்கையில் இருந்த முற்போக்குவாதிகளுக்கு உதவுவது, உளவு /தகவல் சேகரிப்பது என்று பல பணிகளை செய்துள்ளனர். கொரில்லா தாக்குதலிலும் பெண்கள் பங்கேற்றுள்ளனர். முசோலினிக்கு எதிராக, இத்தாலியில் பெண்களின் ஸ்கவுட் போராளிகள் அமைப்பு மிக சிறப்பாக பணியாற்றியது என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1936-39இல் ஸ்பெயினில் ,பிரான்சிஸ்கோ பிராங்கோவின் தலிமையிலான பாசிச சக்திகளுக்கு எதிராக, “மிலிஸியானஸ்” [Milicianas] என்று அழைக்கப்பட்ட பெண்கள் படை சிறப்பாக பணியாற்றியது. ரகசியமாக செய்திகளை கொண்டு செல்வது, ஆயுதங்கள், ஆவணங்களை கொண்டு செல்வது, காயமடைந்தவர்கள், சிறையில் இருந்து தப்பிய பாசிச எதிர்ப்பாளர்களுக்கு உதவுவது என தங்கள் பங்களிப்பை செலுத்தி உள்ளனர். சிலர் உளவாளிகளாகவும் ஏஜெண்ட்டுகளாகவும் செயல்பட்டனர். எடுத்துக்காட்டாக, நாஜிகளுக்கெதிராக பிரெஞ்ச் எதிர்ப்பு இயக்கத்தில் பணியாற்றிய நான்சி வேக் பற்றி குறிப்பிடலாம். “வெள்ளை ரோஜா” என்ற மகளிர் குழு ஹிட்லரின் சர்வதிகாரத்திற்கு எதிராக பிரசுரங்கள் தயாரித்து விநியோகம் செய்தது, உணவு, துணிகள் வழங்குவதுடன்,பாசிச எதிர்ப்பாளர்கள் தப்பிக்க வழி/வீடு ஏற்பாடு செய்து கொடுத்தது என்று பல விஷயங்களை சொல்ல முடியும். இப்படி பாசிசத்திற்கு எதிராக போராடிய பெண்களில் குறிப்பிடத்தக்கவர் டொலோரெஸ் இபாரூரி . இவர் மற்றவர்களுக்கு பெரும் ஊக்க சக்தியாக இருந்திருக்கிறார்.
பாசிசத்திற்கெதிறான பெண்கள் போராட்டங்கள் சொல்லும் செய்தி என்ன?
- பாசிச அரசில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது.
- ஆணாதிக்க கட்டமைப்பை தகர்க்க, பாசிசத்திற்கு எதிரான புரட்சி தேவை. ஆணாதிக்கத்திற்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.
- மாற்று பாலினத்தவரை தாக்குவது, குடிபெயர்ந்தவரை தாக்குவது என்பதும் பெண்ணியவாதிகள் எதிர்க்க வேண்டிய பிரச்சனைகள் என பார்க்கப்பட வேண்டும்.
- பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில், ஆண், பெண், இளைஞர் என அனைத்து பிரிவினரும் ஒன்று சேர வேண்டும்.
சி. பி.ஐ [எம்] இன் நிலைபாடு
நமது கட்சியின் 7வது காங்கிரசிலும், அதற்கு பின்னர் நடைபெற்ற காங்கிரஸ் அறிக்கைகள், ஸ்தாபன அறிக்கைகளிலும், பெண்கள் பற்றிய கட்சியின் நிலைபாடு விளக்கப்பட்டுள்ளது. பெண்கள் மத்தியில் பணியாற்றுவது, பெண்களை திரட்டுவதற்கு தேவை என்ன என்பவை முன் வைக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தை பொருத்தவரை, துவக்கம் முதல் இன்று வரை, ஆண் தோழர்களுடன், சமமாக பெண்கள் பங்காற்றி உள்ளனர். அளப்பரிய தியாகங்களை செய்துள்ளனர். இந்திய விடுதலை போரில், பெண் கம்யூனிஸ்டுகள் குறிப்பிடத்தக்க பங்கை செலுத்தி உள்ளனர். தெலுங்கானா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், கேரளம், தமிழ்நாடு, திரிபுரா என பல்வேறு மாநிலங்களில் பெண்கள் வீரத்துடன் செயல்பட்டுள்ளனர். பெண்கள் பெண்களாக, உழைப்பாளிகளாக, குடிமக்களாக மூன்று முக்கிய நிலைகளில் செயல்படுவதை கட்சி ஆவணங்கள் சுட்டிக்காட்டி உள்ளன. பெண்களை அரசியல்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் கட்சி அறிக்கைகள் வலியுறுத்துகின்றன.
நவ பாசிச போக்குகளை வீழ்த்த மகளிர் இயக்கத்தை முன்னெடுப்போம்
கடந்த 11 ஆண்டுகளாக மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஆட்சி செய்யும் பாஜக வின் பெண்கள் பற்றிய பார்வை, பாசிச சக்திகளின் பார்வையே ஆகும். பாசிசத்தன்மை கொண்ட ஆர். எஸ். எஸ். இந்தியா இந்துக்களுக்கு சொந்தமானது என்கிறது. இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் இங்கே இருப்பது, “நமது” கலாச்சாரம், பண்பாடுகளை அழிக்கும் என்று பிரச்சாரம் செய்கிறது. பாசிசம் என்பது எங்கும் எப்பொழுதும் பன்முகத்தன்மையை ஏற்காது. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பதை முன்வைக்கும் பாசிச அமைப்பின் கொள்கைகளை பாஜக அப்படியே பின்பற்றுகிறது. ஒரு தனி நபரின் உணவு, உடை, குடும்ப வாழ்க்கையை கட்டுப்படுத்துகிறது. பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக பிரச்சாரம் செய்து கொண்டே, மறுபுறம், பெண்களை 100 ஆண்டுகளுக்கு பிந்தைய நிலைக்கு தள்ளுகிறது. பெண்களை “மாத்ரு சக்தி” என்று சொல்லி தாய்மை கூண்டுக்குள் அடைக்கப்பார்க்கிறது. பெண்களை அதிகார அமைப்புகளில் பொறுப்பிற்கு கொண்டு வந்தாலும், முடிவெடுக்கும் அதிகாரம் பெண்களிடம் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. கடுமையான பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி, மாற்று மதத்தினரை ஊடுருவியவர்களாக சித்தரிக்கிறது. அவர்களுக்கு எதிராக, பெரும்பான்மையாக உள்ள இந்துக்களிடையே பிரச்சாரம் செய்கிறது. அனைத்து நிறுவனங்களையும், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு, அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை தேச விரோதிகளாக சித்தரித்து விசாரணை இன்றி சிறையில் தள்ளுவது, எதிர் கட்சிகளை ஒடுக்குவது என பா.ஜ.க.வின் செயல்பாடு பற்றி நீண்ட பட்டியல் போடலாம்.
சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில், பாசிச சக்திகளுக்கெதிரான பெண்களின் போராட்டங்கள் நமக்கு பல படிப்பினைகளை கொடுத்துள்ளன. பாசிசம் கம்யூனிஸ்டுகளை, முற்போக்குவாதிகளை ஒடுக்கவே முயற்சி செய்யும். ஆர். எஸ். எஸ்ஸும், பாஜகவும் இந்தியாவை பாசிச நாடாக மாற்ற முயன்றாலும், அவர்களுக்கு எதிரான சக்திகள் களத்தில் உள்ளன. பாசிசம் வெல்ல முடியாத ஒன்று அல்ல. பாஜகவின் கார்ப்பரேட் இந்துத்துவ கொள்கைகளையும், எதேச்சாதிகார முனைவுகளையும் வலுவான வர்க்க வெகுஜன போராட்டங்கள் மூலம் பின்னுக்கு தள்ள முடியும்; முறியடிக்க முடியும். பெண்கள் பங்கேற்காத எந்த போராட்டமும் வென்றதில்லை என்ற வரலாற்று படிப்பினையை ஏற்று இந்த போராட்டங்களில் பெண்களை ஒன்று திரட்டி அவற்றை வெற்றிபெற செய்வோம். இதுவே நமது சூளுரையாக இருக்கட்டும்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply