
விவசாயிகள் இயக்கத்தின் முன்னேயுள்ள கருத்தியல் சவால்களும் நமது பணிகளும்
பாதல் சரோஜ்
(இணைச்செயலாளர், அகில இந்திய விவசாயிகள் சங்கம்)
(உத்திரப் பிரதேச மாநிலத்தில் விவசாய சங்க செயல்பாட்டாளர் வகுப்புக் குறிப்புகளின் அடிப்படையில், மார்க்சிஸ்ட் ஆசிரியர்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க எழுதியனுப்பிய கட்டுரையின் தமிழ் வடிவத்தின் இரண்டாம் பகுதி)
சாதி
சாதி என்பது முதன்மையாக இந்தியாவிற்கேயுரிய ஒரு தனித்த அம்சமாகும். உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இதே வடிவத்தில் சாதி அமைப்பு காணப்படுவதில்லை. அது வேறு இடங்களில் பரவியிருந்தாலும், அதன் தொடர்பு இந்தியாவுடனேயே இருந்துள்ளது. இந்திய நாகரிகம் சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களைக் கடந்து வந்தபோது சாதி உருவானது.
பொதுவாகப் பார்த்தால், அதன் அடிப்படையானது உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான தொடர்பில், அதாவது உற்பத்தி முறையிலேயே இருந்தது. இந்தச் செயல்முறை குறுகிய காலத்தில் நடந்த ஒன்றல்ல.
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இருந்த புத்தர் காலத்திலிருந்து கி.பி. ஆறாம் நூற்றாண்டில் குப்தர் ஆட்சியின் இறுதிக்காலம் வரை, சுமார் ஆயிரம் முதல் ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் வரை இது தொடர்ந்து வளர்ந்தது.
இந்த காலகட்டத்தில் சாதி அமைப்பு உருவாகி, நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு சமூக அமைப்பாக நிலைபெற்றது. மனுஸ்மிருதி போன்ற நூல்கள் இதனை முறைப்படுத்தி சட்ட வடிவம் கொடுத்தன. மதத்துடன் இணைத்து அதற்கு நியாயப்பூர்வமான அங்கீகாரத்தையும் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆரிய நாகரிகத்தின் பழமையான நூலான ரிக் வேதத்தில் சாதி பற்றிய குறிப்பு இல்லை. அதில் இரண்டு வர்ணங்கள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றன—பிராமணர் மற்றும் விஷ்.
பிராமணர், குடியின் தலைவராகவும் பூசாரியாகவும் இருந்தார். மீதமிருந்த மக்கள் அனைவரும் விஷ் என்ற ஒரே வர்ணத்தில் வைக்கப்பட்டனர். பின்னர் ரிக் வேதத்தில் (இடைச்செருகலாக – மொ-ர்) சேர்க்கப்பட்ட புருஷ சூக்தத்தில், வர்ணங்களின் எண்ணிக்கை நான்காக அதிகரிக்கப்பட்டது.
பிராமணர்கள் பிரம்மாவின் தலையிலிருந்தும், சத்திரியர்கள் அவரது தோள்களிலிருந்தும், வைசியர்கள் தொடைகளிலிருந்தும், சூத்திரர்கள் கால்களிலிருந்தும் தோன்றியவர்கள் என்று கூறப்பட்டது.
அந்தக் காலத்தில் இந்தப் பிரிவுகள், ஒவ்வொரு குழுவினரின் தொழிலையும் சமூக நிலையையும் குறித்தன. அவை பிறப்புடன் இணைக்கப்படவில்லை. வர்ணங்களுக்கு இடையே உறவுகளும் சமூக நகர்வும் சாத்தியமாக இருந்தன.
ஆரம்ப காலத்தில் இந்த அமைப்பு தொழில்களுடன் தொடர்புடையதாக இருந்தது. “கர்மா” என்பதன் பொருள் பொதுவாக வேலை அல்லது செயல் என்பதாகும். முந்தைய பிறவியில் செய்த செயல்களின் விளைவு என்ற கருத்து பின்னர் சேர்க்கப்பட்டது.
ஆனால் சமூகத்தில் வர்க்கங்கள் உருவானதும், இரும்பினைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டதும், விவசாயம் வளர்ந்ததும், அதன் மூலம் உபரி உற்பத்தி குவிந்ததும், இந்த சாதிய அமைப்பு, முறையானதொரு சுரண்டல் கருவியாக மாற்றப்பட வழிவகுத்தது.
சாதி அமைப்பு நீண்ட காலம் நீடித்ததன் ரகசியம்
கிராமப்புற சமூகங்கள் வளர்ந்தபோது, பழங்குடியின சமூகங்களும் பொதுச் சமூகத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டன. அவர்களுக்கென்று தனித்த மொழிகளும் பண்பாடுகளும் இருந்தன; அவர்கள் இயற்கையை வழிபடுபவர்களாக இருந்தனர். வர்ணாசிரம அமைப்பு அவர்களை ஒடுக்கப்பட்ட சாதிகளின் பிரிவுக்குள் தள்ளி, தன்னுள் இணைத்துக் கொண்டது.
வரலாற்றின் பல்வேறு காலங்களில் இந்தியாவிற்கு வந்த சாகர்கள், ஹூணர்கள், குஷாணர்கள், யவனர்கள், குர்ஜர்கள் போன்ற படையெடுப்பாளர்களும் பின்னர் சாதி அமைப்பின் ஒரு பகுதியாக மாறினர்.
வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்த குழுக்கள், படிப்படியாக அந்தத் தொழில்களையே பரம்பரைத் தொழில்களாக மாற்றிக் கொண்டன. அதன் மூலம் அவை சாதிகளின் வடிவத்தைப் பெற்றன.
மக்களைப் பிரித்து அவர்களைத் தங்களுக்குக் கீழ்ப்படிந்த நிலையில் வைத்திருப்பதற்காக, ஆளும் வர்க்கங்களின் கைகளில், சாதி என்பது ஆன்மீக ஆயுதமாகவும் பொருளாதார ஆயுதமாகவும் மாறியது.
இந்த வகையில் பார்த்தால், பழங்குடியின சமூகங்களின் காலத்துக்கும் நிலப்பிரபுத்துவத்தின் தோற்றத்திற்கும் இடைப்பட்ட அடிமைத்தன காலகட்டத்தில் இந்தியாவில் உருவான தனித்துவமான வடிவமே சாதி அமைப்பாகும்.
இந்தியாவில், அடிமைகள், ரோமில் இருந்த அதே வடிவத்தில் இருந்ததில்லை. அதே நேரத்தில், இந்தியாவில் அடிமைகள் இருந்ததே இல்லை என்று கூறுவதும் முழுமையாகச் சரியானதல்ல. பழங்கால இலக்கியங்களில் த்வஜாஹ்ரித, பக்ததாச, கிரஹஜ, க்ரீத, தாத்ரிமோ, பைத்ரிகோ, தாசஸ்ச போன்ற பல்வேறு வகையான அடிமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. “சப்தைததாசயோனயஹ” என்ற வகைப்பாட்டில் அடிமைகளின் ஏழு தோற்றங்கள் குறிப்பிடப்படுகின்றன.
ஆனால் இந்தியாவின் முழு சமூக உற்பத்தி முறையும் இந்த அடிமைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. இந்தியாவில் அடிமைத்தனம் பொதுவாக கால்களில் சங்கிலி போடுவதன் மூலம் நிலைநிறுத்தப்படவில்லை. மாறாக, மனதில் சங்கிலி போடுவதன் மூலம்—அதாவது சாதி அமைப்பின் மூலம்— நிலைநிறுத்தப்பட்டது.
மதம், மறுபிறப்பு, கர்மாவின் பலன் போன்ற கோட்பாடுகள் உருவாக்கப்பட்டு சாதியுடன் இணைக்கப்பட்டன. சாதி அமைப்பு நீண்ட காலம் நிலைத்ததற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
பின்னர் வந்த நிலப்பிரபுத்துவமும் பிற சுரண்டல் அமைப்புகளும் சமூகத்தைப் பிளவுபடுத்துவதில் சாதிக்கு இருந்த திறனை உணர்ந்து, முறையாகச் சட்ட வடிவத்தில் அதை உறுதிப்படுத்தின.
கீழ்சாதியினரின் சுரண்டலுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் வழங்கப்பட்டது. அந்தச் சுரண்டலை மறுப்பதே தண்டனைக்குரிய ஒரு குற்றமாக மாற்றப்பட்டது.
சாதியை ஒரு சுரண்டல் கருவியாக வரையறுத்த தாமோதர் தர்மானந்த் கோசாம்பி கூறினார்: “உற்பத்தி வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் வர்க்கத்திற்குக் கொடுக்கப்பட்ட பெயரே சாதி. குறைந்த அளவு வலிமையைப் பயன்படுத்தி உற்பத்தியாளரின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் சமூக உணர்வை ஒழுங்குபடுத்தும் ஒரு வர்க்க அமைப்பே சாதி.”
இந்திய சமூகத்தில் வர்க்கங்களின் உருவாக்கமும் பெருமளவில் வர்ணாசிரம அமைப்பின் கட்டமைப்புக்குள்ளேயே நடைபெற்றது.
நாட்டின் ஏழு முக்கிய தொழில் குழுமங்களும் வைசிய வர்ணத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதும், மிகப் பெரும்பான்மையான ஏழை நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதும் தற்செயலானது அல்ல.
மொத்தத்தில் பார்த்தால், சாதி என்பது ஒரு மாயை; ஒரு அகந்தை; ஒரு மனரீதியான அடிமைத்தனம்; ஒரு புராணக் கற்பனை; ஒரு மூடநம்பிக்கை; மற்றும் ஒரு கடுமையான வழக்கமும் ஆகும்.
இவை அனைத்தும் இருந்தபோதிலும், சாதி என்பது மனித மனத்தில் வேரூன்றியுள்ள ஒரு சமூக உணர்வாக மாறியுள்ளது. மற்ற சமூக உணர்வுகளைப் போலவே, அது ஒரு பொருளாதார மற்றும் சமூக சக்தியாகவும் மாறியுள்ளது.
வாழும் சமூகத்தைத் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் இற்றுப்போன பழைய சிந்தனை வடிவங்களின் ஒரு “பேயாக” சாதியும் உள்ளது.
சாதிய உணர்வின் மூன்று முக்கிய பண்புகள்
1. தூய்மை மற்றும் தீட்டு பற்றிய தனிப்பட்ட கருத்துகள்.
2. தன்னைச் சுற்றியே சுழலும், பிறரை விலக்கும் மரபுகள்.
3. சுரண்டல் மற்றும் சமத்துவமின்மையின் மீது அதிருப்தி. இந்த அதிருப்தி தன்னைவிட மேலானதாகக் கருதப்படும் சாதிகளுக்கு எதிராகத் திரும்புகிறது; ஆனால் தன்னைவிட கீழானதாகக் கருதப்படும் சாதிகளுக்கு எதிராகத் திரும்புவதில்லை.
வர்ணாசிரம அமைப்பு சாதிக்கு சட்ட மரபின் தோற்றத்தை வழங்கியது.
மனுஸ்மிருதி, கவுதம ஸ்மிருதி போன்ற நூல்கள் சாதி அமைப்பைப் பாதுகாப்பதற்காக கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற வழிமுறைகளை முறைப்படுத்தின.
குறிப்பிட்ட சமூக நிலைமைகள், இந்த நடைமுறைகளை உருவாக்கி, அவை வளர்வதற்கும் உதவின. சாதி சமூக முன்னேற்றத்திற்குத் தடையாகவும், அறிவியல் வளர்ச்சிக்குத் தடையாகவும் மாறியது.
சாதி நீண்ட காலம் நீடித்ததன் ரகசியம்
ஆழமாக வேரூன்றிய படிநிலை உறவுகள், நிலப்பிரபுத்துவ அமைப்பு, சுரண்டலுக்கு உதவிய சமூக உறவுகள் இன்ன பிற காரணங்களால், முதலாளித்துவமும் சாதியை ஒழிக்கவில்லை. மாறாக, தனது சொந்த நலன்களுக்காக அதைப் பயன்படுத்திக் கொண்டது.
சாதி அமைப்பின் கீழ் தானாக உருவான தொழில்பிரிவு, தன்னிறைவு பெற்ற கிராமப்புற சமூகங்கள் உருவாக வழிவகுத்தது. இதன் மூலம் நிலப்பிரபுத்துவ அமைப்பும் நிலைத்திருக்க உதவியது. ஆனால் சமூக முன்னேற்றம் தேக்கமடைந்து தடைப்பட்டது.
பரம்பரை அடிப்படையிலான தொழில்பிரிவும் சாதி அமைப்பு உருவாக முக்கிய பங்களிப்பு செய்தது. தொழில்களுக்கும் திறன்களுக்கும் இடையே மாறிச் செல்லும் வாய்ப்பு கட்டுப்படுத்தப்பட்டது.
இதன் விளைவாக, நிலப்பிரபுத்துவத்தின் ஆரம்ப காலத்தில் உருவான அறிவியல், தொழில்நுட்ப, பண்பாட்டு முன்னேற்ற மரபுகள் தங்களுக்குள்ளேயே அடைக்கப்பட்டு, வளர்ச்சியின்றி புதைந்து போயின.
ஒரு காலத்தில் உலகின் பிற பகுதிகளைவிட முன்னேறியிருந்த இந்தியா பின்னர் ஒப்பீட்டளவில் பின்தங்கியதற்கான முக்கியமான மற்றும் தீர்மானகரமான காரணங்களில் ஒன்று, சாதி அமைப்பு உருவாக்கிய இந்தத் தேக்கநிலையாகும்.
வர்ண அமைப்பின் கடுமைக்கும் அதன் ஒடுக்குமுறை மற்றும் மனிதாபிமானமற்ற தன்மைக்கும் எதிராக, லோகாயத மரபுக்குள் புத்தமும் சமணமும் தோன்றின. அதுகாலம்வரை நிலவிய சாதி அமைப்புக்கு எதிராக எழுந்த மிகப்பெரிய சவால் இதுவாகும். ஆனால் இந்த இயக்கங்கள் சில நூற்றாண்டுகள் மட்டுமே நீடித்தன. பின்னர் ஆளும் வர்க்கங்களின் கட்டுப்பாட்டுக்குள் இவை வந்ததால், அவற்றின் புரட்சிகரமான, மக்கள் சார்ந்த தன்மை படிப்படியாக மங்கியது.
பின்னர் பிராமணிய மதம் அவற்றை கிட்டத்தட்ட முற்றிலும் அழிப்பதற்கான அனைத்து வழிகளையும் பயன்படுத்தியது.
முகலாயர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு, இஸ்லாமின் சமத்துவக் கருத்து முன்வைத்த நெறிமுறைச் சவால், பக்தி மற்றும் சூஃபி மரபுகள் உருவாகக் காரணமாக இருந்தது.
இந்த இயக்கங்கள், மதத்தின் பெயரால் நிலவிய, அறிவை மறுக்கும் போக்கையும், வர்ண அமைப்பின் கொடூரமான மனிதாபிமானமற்ற தன்மையையும் எதிர்த்தன. தலித் பிரிவிலிருந்து புனிதர்கள், கவிஞர்கள் மற்றும் தத்துவஞானிகள் உருவாகினர். சமூகச் சீர்திருத்தத்தின் வலுவான அம்சத்தைக் கொண்ட ஒரு புதிய இயக்கமாக சீக்கியம் உருவானது.
இந்தக் காலகட்டத்தில் பல தலித் சாதிகள் தங்களை விடுவித்துக் கொள்ள முயன்றன. சிலரின் நிலை மேம்பட்டது; சிலர் ஒடுக்கப்பட்டனர். ஆனால் வர்ண அமைப்பின் அடித்தளத்தை அசைக்க முடியவில்லை.
முகலாய ஆட்சியாளர்களே வர்ண அமைப்பில் அரசு தலையிடுவதைத் தடை செய்யும் அரசாணைகளை வெளியிட்டனர். பின்னர், ஒரு வகையில் பார்த்தால், இந்திய இஸ்லாமும் சாதி அமைப்பை ஏற்றுக்கொண்டு தன்னுள் கொண்டுவந்தது.
பிரிட்டிஷார் இந்தியா முழுவதையும் ஒரே சந்தையாக மாற்றுவதற்கும், அனைத்து சாதிகளையும் முதலாளித்துவத்தின் சேவகர்களாக மாற்றுவதற்கும் சாதி அடிப்படையிலான சில பழக்கவழக்கங்களில் மாற்றங்களைச் செய்ய முயன்றனர்.
ஆனால் 1857 கிளர்ச்சிக்குப் பிறகு, இந்தப் பிரிவுகளைத் தங்களது சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.
மிகப் பெரிய அளவில் நடைபெற்ற விடுதலைப் போராட்ட அலை கூட சாதியை ஒழிக்க முடியவில்லை. விடுதலைப் போராட்டத்தில் தலித்துகளும் ஆதிவாசிகளும் மிகச் சிறப்பான பங்காற்றியிருந்தபோதிலும் இது நடந்தது.
தேச விடுதலை இயக்கத்தின் தலைவர்களின் கருத்தியல் வரம்புகள், இந்தக் கேள்வியில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க அவர்களைத் தடுத்தன. அவர்களுடைய வர்க்க நலன்கள், இந்தக் கடுமையான சுரண்டல் முறையை அழிப்பதால் ஏற்படும் விளைவுகளைப் புரிந்துகொள்ளச் செய்தன.
காந்தி மற்றும் திலகர் முதல் பிற முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவத் தலைவர்கள் வரை, பொதுவாக சாதி அமைப்பைப் பாதுகாக்கும் போக்கே இருந்தது.
இந்தி பேசும் பகுதிகளில் சமூகச் சீர்திருத்த இயக்கம் பலவீனமாக இருந்ததும் சாதி அமைப்பு தொடர்ந்து வாழவும் வளரவும் கணிசமான இடத்தை விட்டுக் கொடுத்தது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தலித் சாதிகளிடையே சாதி எதிர்ப்பு இயக்கங்கள் தோன்றின. ஆனால், முதலாவதாக, அவை பெரும்பாலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்துடன் தொடர்பில்லாமல் இருந்தன.
இரண்டாவதாக, தலித்துகளின் ஒடுக்குமுறைக்கான பொருளாதார அடித்தளமான—நிலத்தின் மீதான நிலப்பிரபுத்துவப் பிடியை—உடைக்கும் திசையில் அவை பொதுவாகச் செல்லவில்லை.
ஆனால் ஜோதிராவ் பூலே, சாதி சுரண்டலுக்கும் வர்க்கச் சுரண்டலுக்கும் எதிரான போராட்டங்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
1894-ஆம் ஆண்டு அவரது தோழரான நாராயண் மேகாஜி லோகாண்டே, பம்பாயில் தொழிலாளர்களை அமைப்புசார்பாகத் திரட்டி அவர்களின் கோரிக்கைகளை முன்வைத்தார்.
டாக்டர் பி. ஆர். அம்பேத்கர், 1936-ஆம் ஆண்டு சுதந்திரத் தொழிலாளர் கட்சியை உருவாக்கினார். அதன் கொடி சிவப்பு நிறமாக இருந்தது. அதன் தேர்தல் அறிக்கை, சாதி சுரண்டலுக்கும் வர்க்கச் சுரண்டலுக்கும் எதிராக ஒரே நேரத்தில் போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்தது. ஆனால் இந்த மரபை தொடர்ந்து முன்னெடுக்க முடியவில்லை. சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளின் கீழ், சாதிய உணர்வை முற்றிலும் ஒழிப்பதற்கான வாய்ப்பு நடைமுறையில் உருவாகவில்லை.
சரியாகச் சொல்வதானால், விவசாயத்தில் நில உறவுகளைப் பரவலாக்கி மறுபகிர்வு செய்வதன் மூலம் முதலாளித்துவ வளர்ச்சிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். சாதியை முழுமையாக ஒழிப்பதற்கு அது ஒரு முன் நிபந்தனையாக இருந்திருக்கும். ஆனால் அது நடைபெறவில்லை.
முதலாளித்துவ வளர்ச்சியின்போது, சாதியால் பிளவுபட்ட சமூகத்திற்குள்ளேயே வர்க்கங்கள் உருவாகிக் கொண்டிருந்தன.
முதலாளித்துவம், முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக உறவுகளுடன் சமரசம் செய்துகொண்டே தனது பாதையில் தொடர்ந்தது. பின்னர், மிகுந்த திறமையுடன், இதே நிலைமையையே தனது சொந்த நலன்களுக்குப் பயன்படுத்திக் கொண்டது.
உலகமயமாக்கல் காலத்திலும் கூட, சுரண்டும் வர்க்கங்கள் இந்த முரண்பாட்டைத் தொடர்ந்து பாதுகாப்பதற்காகத் தங்களுடைய முழு வலிமையையும் பயன்படுத்தி வருகின்றன.
அடையாளத்தை ஒருதலைப்பட்சமாகவும் ஒரே பரிமாணத்திலும் மேலும் மேலும் வலியுறுத்தச் செய்வது இதற்கான ஒரு எடுத்துக்காட்டாகும்.
கடந்த பல பத்தாண்டுகளாக, குறிப்பாக உழைக்கும் மக்களின் ஒற்றுமையைப் பாதிக்கும் வகையில், சாதிய உணர்வு இந்திய சமூகத்தின் ஒற்றுமையை எதிர்மறையாகப் பாதிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.
பல சந்தர்ப்பங்களில், தொழிற்சங்கங்கள் போன்ற வர்க்க அடிப்படையிலான அமைப்புகளுக்குப் பதிலாக, அல்லது அவற்றுக்கு மாற்றாக, சாதி அடிப்படையிலான அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அரசுகளும் தங்களுடைய வர்க்க நலன்களை மனதில் கொண்டு, இந்தப் போக்கை அடிக்கடி ஊக்குவித்து ஆதரித்துள்ளன.
சமீப ஆண்டுகளில் சாதிய உணர்வு மிகப் பெரிய அளவில் அதிகரித்திருப்பது, சமூகத்தை எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளை ஆளும் வர்க்கங்கள் முழுமையாகத் தீர்க்கத் தவறியதுடன் தொடர்புடையது.
அதே நேரத்தில், அங்கீகாரம், அடையாளம், சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில் ஒரு பங்கு ஆகியவற்றுக்கான ஆசைகளுடனும், ஒடுக்குமுறைப் போக்குகளுக்கு எதிரான கோபத்துடனும் இது தொடர்புடையதாகும்.
மதமும் வகுப்புவாதமும்
மதத்திற்கும் வகுப்புவாதத்திற்கும் அவசியமான தொடர்போ அல்லது இரண்டையும் ஒன்றாகக் கருத வேண்டிய காரணமோ இல்லை. ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட ஒருவர் கட்டாயமாக வகுப்புவாதியாக இருக்க வேண்டியதில்லை. காந்தி இதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்தக் கொள்கைக்காகவே அவர் வாழ்ந்தார்; அதற்காகவே இறந்தார்.
இந்து மதத்தைச் சேர்ந்த மிகப் பெரிய மக்கள் தலைவராக காந்தி இருந்தார்; இன்றும் அப்படியே இருக்கிறார். மதச்சார்பின்மை குறித்து அவர் ஆயிரக்கணக்கான பொது அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.
அவற்றில் சில:
“நாட்டின் நூறு சதவீத மக்களும் ஒரே மதத்தைப் பின்பற்றினாலும், அரசுக்கு எந்த மதமும் இருக்க முடியாது. மதம் தனிப்பட்ட விஷயம்; அதற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது. அரசியலில் மதம் முற்றிலும் இருக்கக்கூடாது. நான் எப்போதாவது ஒரு சர்வாதிகாரியாக மாறினால், அரசியலில் மதத்தை முழுமையாகத் தடை செய்வேன்.”
அவர் மேலும் கூறினார்: “நான் ‘ராம ராஜ்யம்’ என்று கூறும்போது, ராமனுடைய ஆட்சியையோ அல்லது மதத்தின் ஆட்சியையையோ குறிப்பிடவில்லை. நான் பத்தான்களிடம் செல்லும்போது ‘குதாய் ராஜ்’ என்றும், கிறிஸ்தவர்களிடம் செல்லும்போது ‘இறைவனின் அரசு’ என்றும் கூறுகிறேன். இதன் பொருள், மதத்தின் ஆட்சி அல்ல; சமத்துவமும் சகிப்புத்தன்மையும் கொண்ட, ஒழுக்கமான சமூகத்தின் அடிப்படையிலான ஆட்சி என்பதே அதன் பொருள்.”
மேலும் அவர் கூறினார்: “மதம் தேசியத்தின் அடிப்படையாக இருக்க முடியாது. மதமும் பண்பாடும் வேறுபட்டவை.”
சட்டமன்றங்களிலும், நகராட்சி அமைப்புகளிலும், வேலைகளையும் பதவிகளையும் பெற விரும்பிய இந்து மற்றும் முஸ்லிம் நடுத்தர வர்க்கத்தின் சில பிரிவுகள், அந்த நோக்கங்களை அடைவதற்காக வகுப்புவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தியதன் மூலம் வகுப்புவாதம் உருவாக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டது என்று அவர் கருதினார்.
உலகின் அனைத்து பண்பாடுகளும் மதங்களும் இணைந்து வாழும் ஒரு செழிப்பான தோட்டமே இந்தியா என்று அவர் கூறுவார். மொழியை வகுப்புவாதமாக்குவதற்கும் அவர் எதிராக இருந்தார்.
சாவர்க்கர் மராத்தி மொழியில் இருந்த பாரசீக மற்றும் அரபுச் சொற்களை அகற்றப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த காலத்திலும், இந்தி மேலும் மேலும் சமஸ்கிருதமயமாக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்திலும், மக்களின் பொதுமொழியாக இந்துஸ்தானி இருக்க வேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார்.
தேசிய இயக்கத்தின் இந்தப் போக்கில், வகுப்புவாதம் மற்றும் மதச்சார்பின்மை குறித்து இவ்வளவு தெளிவான புரிதலைக் கொண்ட தலைவர்கள் மிகச் சிலரே இருந்தனர்.
காந்தியின் வாழ்க்கையில் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமை இருந்தது. அவருடைய “குரு”வான கோபால கிருஷ்ண கோகலேவும், அவருக்குப் பிறகு வந்த அவரது “சீடர்” என்று கருதப்பட்ட ஜவஹர்லால் நேருவும் நாத்திகர்களாக இருந்தனர்.
சனாதனியான காந்தியும் கூட காலப்போக்கில் மதம் குறித்த தனது கருத்துகளை தொடர்ந்து வளர்த்தும் ஆழப்படுத்தியும் வந்தார்.
இளம் நாத்திக ஆதரவாளர்கள் இருவருடன் நீண்ட விவாதம் நடத்திய பிறகு, “கடவுளே உண்மை” என்ற கூற்றை “உண்மையே கடவுள்” என்று காந்தி மாற்றினார்.
வேதங்களில் அல்லது மத நூல்களில் எழுதப்பட்டிருப்பது இறுதி அதிகாரம் அல்ல என்றும், பகுத்தறிவும் உண்மையுமே உயர்ந்தவை என்றும் அவர் கூறினார். தனக்குப் பிரியமான பகவத் கீதைக்கும் கூட அவர் இதே கொள்கையைப் பயன்படுத்தினார்.
மத விஷயங்களிலும் கூட மத நூல்களில் எழுதப்பட்டிருப்பதை விட பகுத்தறிவே அடிப்படையாக இருக்க வேண்டும் என்றார். ஏனெனில், “சாத்தானும்கூட மத நூல்களை மேற்கோள் காட்ட முடியும்” என்றார்.
(தொடரும்)
தமிழில்: வீ. பா. கணேசன்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply