
ஹரே கிருஷ்ண கோனார்
விவசாயிகளுக்காக வீரச் சமர் புரிந்த விடுதலைப் போராட்ட நாயகர்
பிறந்த தினம்
ஆகஸ்ட் 5
வீ. பா. கணேசன்
ஹரே கிருஷ்ண கோனார் 1915 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காள மாகாணத்தில் உள்ள பர்த்வான் மாவட்டத்தில், தாமோதர் நதிக்கு அப்பால் அமைந்துள்ள காமர்கோரியா என்ற கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை சரத் சந்திர கோனார், பர்த்வானின் நன்கு அறியப்பட்ட வணிகரும் நிலப்பிரபுவும் ஆவார். மேலும் அவர், பர்த்வான் பகுதியின் ராஜாவான பிஜய் சந்த் மஹ்தாப் உடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். கோனார் ஒரு ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்ததால், கூட்டுக் குடும்பத்தில், மூத்த மகனாக, தன் இளைய சகோதர, சகோதரிகளுடன் மிகுந்த சலுகைகளோடு வளர்ந்தார். அவரது குடும்பத்தில் அரசியல் தொடர்புடைய அல்லது அரசுக்கு எதிரான போராளிகள் யாரும் இருக்கவில்லை; மேலும், அவரது தந்தை தமது வணிக நோக்கங்களுக்காக பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் நல்ல தொடர்பு வைத்திருந்தார்.
கோனார், தனது சொந்த கிராமமான காமர்கோரியா ப்ராதமிக் வித்யாலயத்தில் பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். படிப்பிலும் சமூக வாழ்க்கையிலும் எப்போதும் சிறந்த மாணவராகவே இருந்தார். பள்ளி நாட்களில், கோனாருக்கு பல பாடங்களில், குறிப்பாக சமஸ்கிருதம் மற்றும் இயற்பியலில் ஆர்வம் இருந்தது. காமர்கோரியாவில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு, பெற்றோருடன் பல்வேறு இடங்களுக்கும் இடம்பெயர்ந்து, இறுதியில் பர்த்வான் மாவட்டத்திலுள்ள மேமாரியின் தெற்கு ராதாகாந்தபூர் கிராமத்தில் குடியேறினார். அவர் மேமாரி வித்யாசாகர் ஸ்ம்ருதி வித்யாமந்திரில் தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். பின்னர், அதே பள்ளியில் தனது இடைநிலைப் படிப்பையும் முடித்தார்.
புதிய கிராமத்திற்கு இடம்பெயர்ந்த பிறகு, பர்த்வானின் காங்கிரஸ் தலைவரான பிபூதி பூஷண் தத்தா, அவர்களது வீட்டிற்கு தொடர்ந்து வந்து செல்வதுண்டு; ஏனெனில், பிபூதி பாபுவும் அவரது தந்தையும் நல்ல உறவு கொண்டிருந்தனர். கோனார், நாடு முழுவதும் நடந்துகொண்டிருந்த அரசியல் மற்றும் சுதந்திரப் போராட்டங்கள் பற்றிய அவர்களது உரையாடல்களைக் கேட்டு வளர்ந்தார். பிபூதி பாபு மூலமாகவே, இந்திய அரசியலில் சமீபத்தில் பெயர் பெற்ற புதிய தலைவர் காந்தி பற்றி கோனார் கேள்விப்பட்டார்.
அஹிம்சை தத்துவத்தால் ஈர்க்கப்பட்ட கோனார், விரைவிலேயே சத்தியாகிரக இயக்கங்களிலும் பர்த்வான் காங்கிரஸ் அரசியல் நடவடிக்கைகளிலும் பங்கேற்கத் தொடங்கினார். கோனார் பள்ளிக்குச் சென்று, பின்னர் மதிய உணவு நேரத்தில் ரகசியமாக வெளியேறி இப்போராட்டங்களில் இணைவார். அவர் தொடர்ந்து கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்குச் சென்று வந்தார். ஒரு நாள், “புரட்சிகர கலாச்சாரம்” பற்றிய ஒரு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, அதில் கோனாரும் கலந்து கொண்டிருந்தார். கோனாரையும் அவரது தந்தையையும் அறிந்த ஒருவர், பள்ளி சீருடையில் பேரணியில் நின்று கொண்டிருந்த அவரைப் பார்த்துவிட்டு, கோனார் அரசியல் மற்றும் அரசுக்கு எதிரான பேரணிகளில் கலந்து கொள்கிறார் என்று அவரது வீட்டிற்கு ஓடிச் சென்று தந்தையிடம் தெரிவித்தார். பின்னர் அவரது தந்தை வந்து, கையைப் பிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, கோனார் இத்தகைய விடுதலை மற்றும் அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாதபடி அவரது குடும்பம் அவரை முழுவதுமாக தனிமைப்படுத்தியது. அவரது தந்தை கோனாரை மேல்படிப்பிற்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப விரும்பினார். அரசியலில் இறங்கினால் மகனின் வாழ்க்கை அழிந்துவிடும் என்று அஞ்சினார்.
மீண்டும், சில ஆண்டுகளுக்குப் பிறகு, கோனார் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமானார். மேலும் 15 வயதில், ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, பர்த்வான் ராஜ் கல்லூரி முன் மறியல் செய்ததற்காக ஹரே கிருஷ்ண கோனார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, கோனார் மீண்டும் தனது குடும்பத்தினரால் தனிமைப்படுத்தப்பட்டார். ஆனால் அவர் வீட்டைவிட்டு ஓடிச் சென்று ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்து, 1930 ஆம் ஆண்டு ஏப்ரலில் மீண்டும் கைது செய்யப்பட்டு, இம்முறை பர்த்வான் சிறையில் ஆறு மாதங்கள் தண்டனை பெற்றார். சிறையில் இருந்தபோது, அவர் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டிருந்த பினாய் சவுத்ரியை சந்தித்தார். இருவரும் சிறையில் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடினர்.
ஆயுதப் போராட்ட புரட்சியில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மற்ற புரட்சியாளர்களுடனும் கோனார் பேசினார். விரைவிலேயே ஆயுதமேந்திய புரட்சி கோட்பாட்டால் ஈர்க்கப்பட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அஹிம்சை முறையை கைவிட்டு, அவர் ஆயுதப் போராட்டத்தை நோக்கி நகர்ந்தார், மேலும், மேமாரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரகசிய புரட்சிகர குழுக்களை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க திறமையை வெளிப்படுத்தினார். இக்காலத்தில்தான் புபேந்திரநாத் தத்தா (சுவாமி விவேகானந்தரின் இளைய சகோதரர்) மற்றும் பங்கிம் முகர்ஜி ஆகியோர் பர்த்வானின் புரட்சிகர குழுவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டனர்.
தத்தா மற்றும் முகர்ஜியின் தாக்கத்தால், பர்த்வான் புரட்சிகர குழுவிற்கு பல்வேறு மார்க்சிய நூல்கள் கிடைக்கப் பெற்றன. மேலும் மீரட் சதி வழக்கு தொடர்பாக செய்தித்தாள்களில் வெளியான செய்திகளும் அவர்களை சென்றடைந்தன. ஹரே கிருஷ்ண கோனார், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில், யுகாந்தர் புரட்சிகர கட்சியின் தீவிர உறுப்பினராக தனது அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்கினார்.
இன்னும் மாணவராக இருந்தபோதே, கோனார் மேமாரி வித்யாசாகர் ஸ்ம்ருதி வித்யாமந்திரில் அனைத்து பாடங்களிலும் முதல் தரத்துடன் தனது பத்தாம் வகுப்பை முடித்தார். மேலும் சமஸ்கிருதத்தில் ஒரு பாராட்டுச் சான்றிதழையும் பெற்றார். பின்னர் அவர் கல்கத்தா சென்று, கல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிய பங்கபாசி கல்லூரியில் முதலாம் ஆண்டு அறிவியல் மாணவராக சேர்ந்தார். கல்கத்தாவில், அவர் ஸ்காட் லேனில் உள்ள கேனிங் விடுதியில் தங்கியிருந்தார். அங்கு அப்துல் ஹலீமை சந்தித்தார். கல்கத்தா ஆயுதப் புரட்சிக் குழுவில் இணைந்தார். இருப்பினும், பர்த்வான் ஆயுதப் புரட்சிக் குழுவின் பினாய் சவுத்ரி மற்றும் சரோஜ் முகர்ஜி ஆகியோருடனும் தொடர்பில் இருந்தார்.
1931 ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்ட புரட்சி உச்சத்தை எட்டியது. பிப்ரவரியில், அனுசீலன் சமிதியின் கூட்டாளியான, எச்.எஸ்.ஆர்.ஏ தலைவர் பகத் சிங், மரண தண்டனை விதிக்கப்பட்டார். அதே நேரத்தில், லண்டனில் காந்தி–இர்வின் ஒப்பந்தத்தை காந்தி உருவாக்கினார். சுதந்திரப் போராளிகள் மெதுவாக மகாத்மா காந்தியையும் அவரது அஹிம்சைக் கொள்கைகளையும் எதிர்க்கத் தொடங்கினர். இறுதியில், 1931 மார்ச் மாதம், இந்திய ஆயுத எதிர்ப்பு புரட்சியின் முக்கிய நபர்களான பகத் சிங் மற்றும் சந்திர சேகர் ஆசாத் ஆகியோர் தூக்கிலிடப்பட்டும், சுட்டும் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, காந்தி மற்றொரு சத்யாகிரக இயக்கத்தை ஏற்பாடு செய்தார். இது பல மாணவர்களிடமிருந்தும் பல புரட்சிகர கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்பை சந்தித்தது. இதன் விளைவாக, ஆயுதப் போராட்ட புரட்சி விரிவடைந்தது. மேலும் புரட்சிகர குழுக்கள் நாடு முழுவதும் பரவின. அதே நேரத்தில், பஞ்சு கோபால் பாதுரி, காளி கோஷ், பங்கிம் முகர்ஜி, புபேந்திரநாத் தத்தா மற்றும் பிறரால் “இந்திய தொழிலாளர் புரட்சிகர கட்சி” நிறுவப்பட்டது. இந்திய தொழிலாளர் புரட்சிகர கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு கிளையாகவும் அங்கீகரிக்கப்பட்டது. கோனார், பினாய் சவுத்ரியுடன் சேர்ந்து, இக்குழுவில் இணைந்தார். கோனார் விரைவில் குண்டு தயாரிப்பு, கொள்ளை, மற்றும் கட்சி நிதி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு வகையான புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டு, படிப்படியாக அந்த அமைப்பின் தலைவர் பதவிக்கு உயர்ந்தார்.
கோனார் பல மாதங்களாக பிரிட்டிஷ் அதிகாரிகளால் அவரது நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கப்பட்டு வந்திருந்த போதிலும், பேகுட் கொள்ளை வழக்கில்தான் பிடிபட்டு கைது செய்யப்பட்டார். கோனாரின் கைது, அவரது குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் சரத் கோனார், தமது மகனை மேல்படிப்பிற்காக, இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப ஏற்கனவே அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். கோனார் கைது செய்யப்பட்ட பிறகு, தன் காவல் காலம் முழுவதிலும் பிரிட்டிஷ் காவல்துறையால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டார். இருப்பினும், எந்த ஒரு புரட்சியாளரையோ அவர்களது எதிர்கால திட்டங்களையோ ஒருபோதும் அவர் வெளிப்படுத்தவில்லை.
நீதிமன்ற விசாரணையின்போது, பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிரான புரட்சிகர நடவடிக்கைகளுக்காக குற்றவாளியா என்று கோனாரிடம் கேட்கப்பட்டது. கோனார் அதற்கு இவ்வாறு பதிலளித்தார்: “நான் செய்தது வெட்கக்கேடானது அல்ல; அதன் விளைவுகள் எனக்குப் பெருமை சேர்க்கக் கூடியவையாக இருக்கும்.” நீதிமன்றத்தில் அவரது உரைக்குப் பிறகு, நீதிபதி கூறினார்: “எனவே, ஐ.பி.சி பிரிவு 394-ன் கீழ் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக ஐ.பி.சி பிரிவு 398-ன் கீழான குற்றச்சாட்டிலிருந்து குற்றவாளியை விடுவிக்கிறோம். ஒருபுறம் இந்தக் குற்றம் மிகவும் கடுமையானது என்பதையும், மறுபுறம் குற்றவாளியின் இளமைப் பருவம் — சுமார் 17 வயது என்பதையும் கருத்தில் கொண்டு, இரண்டு சூழ்நிலைகளையும் ஒப்பிட்டு, குற்றவாளிக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கிறோம்.”
1933 பிப்ரவரி மாதம், மத்திய அரசு, வங்காள அரசுடன் கலந்தாலோசித்து, ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை பெற்ற அனைத்து கைதிகளையும் அந்தமான் செல்லுலார் சிறைக்கு அனுப்ப முடிவு செய்தது. அரசின் முடிவின் விளைவாக, 18 வயதில், கோனார் 1933 ஏப்ரலில் அந்தமான் தீவிலுள்ள செல்லுலார் சிறைக்கு அனுப்பப்பட்டார். கப்பலில், மேச்சுவாபஜார் குண்டு வழக்கு அல்லது டல்ஹவுசி குண்டு வழக்கில் தண்டனை பெற்ற சதீஷ் பக்ரஷி, நிரஞ்சன் சென்குப்தா, டாக்டர் நாராயண் ராய், டாக்டர் பூபால் பாசு போன்ற புரட்சியாளர்களை அவர் தோழர்களாக பெற்றார்.
செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு விரைவில், அந்தச் சிறையின் மனிதாபிமானமற்ற, கற்பனைக்கெட்டாத சித்திரவதைகளை கோனார் எதிர்கொண்டார்; அங்கு கைதிகள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டனர். வழங்கப்பட்ட உணவு, மனித நுகர்வுக்கு ஏற்றதாக இல்லை, ரொட்டியில் புழுக்களும் அழுகிய காய்கறிகளில் வேகவைத்த காட்டுப் புற்களும் இருந்தன. கைதிகள் மற்றவர்களை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை; காவலர்கள் நடத்தை அவமானகரமாக இருந்தது; நிலைமை தாங்க முடியாததாக மாறியது. எனவே, சிறை நிர்வாகத்திற்கு எதிராக, அமைப்புகளை மேம்படுத்த வேண்டி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்த கைதிகள் முடிவு செய்தனர். விரைவில், 1933 மே 12 அன்று, உண்ணாவிரதம் தொடங்கியது. மகாவீர் சிங் (லாகூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர்), மோகன் கிஷோர் நமதாஸ் (கல்கத்தா ஆயுதச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்), மற்றும் மோஹித் மொய்த்ரா (ஒரு ஆயுதச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்) ஆகியோர் இந்த உண்ணாவிரதத்தின்போது பிரிட்டிஷ் காவலர்களால் வலுக்கட்டாயமாக உணவூட்டப்பட்டபோது மூச்சுத்திணறி இறந்தனர். அவர்களது உடல்கள் அமைதியாக அப்புறப்படுத்தப்பட்டு இந்தியப் பெருங்கடலில் வீசப்பட்டன.
46 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு, பிரிட்டிஷ் அரசு பணிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு, கைதிகளின் உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு கோரிக்கை வைத்தது. மேலும், அவர்கள் கோரிய வசதிகள் அங்கீகரிக்கப்படும் என்று அறிவித்தது; இதனால் செல்லுலார் சிறையின் புரட்சியாளர்கள் அதை ஏற்றுக்கொண்டனர். 1933 ஜூன் 26 அன்று உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. விரைவில் செல்லுலார் சிறையில் வசதிகளும் மேம்பட்டன. உண்ணாவிரதத்திற்குப் பிறகு, சிறையிலிருந்த மேற்பார்வை மற்றும் சோதனை நடைமுறைகள் மிகவும் குறைந்ததால், கைதிகளால் ஏராளமான கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிச இலக்கியங்களை கடத்திக் கொண்டு வர முடிந்தது. கைதிகளிடையே இருந்த மாணவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவரும் ஒன்றாக, அரசியல், பொருளாதாரம், வரலாறு, தத்துவம் ஆகியவை குறித்து விவாதித்தனர்; இதன் விளைவாக, உறுதியான கம்யூனிஸ்ட் அல்லது சோசலிஸ்ட் ஆகாத எவரும் அங்கு அரிதாகவே இருந்தனர்.
1937 ஜூலை 9 அன்று, ஷிவ் வர்மாவும் ஹரே கிருஷ்ண கோனாரும் வைஸ்ராய் மற்றும் கவர்னர் ஜெனரலான, தி மார்க்வெஸ் ஆஃப் லின்லித்கோவிற்கு மனுவை அளித்தனர், அதில் “அனைத்து அரசியல் கைதிகளும் நாட்டின் முக்கிய நிலப்பகுதிக்கு திருப்பி அனுப்பப்பட்டு, விடுவிக்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில், உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டது” என்று கூறினர். அந்தமான் சுதந்திரப் போராளிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, மற்ற சிறைகளில் உள்ள பிற அரசியல் கைதிகளுக்கு அளிக்கப்படும் நடத்தை போலவே இவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று நாடு தழுவிய இயக்கம் ஒன்று தொடங்கியது. உழைக்கும் மக்கள், அறிவுஜீவிகள், மற்றும் மாணவர்களின் பேரணி ஒன்று நடைபெற்றது. இந்த எழுச்சி, நாட்டின் முக்கிய நிலப்பகுதியில் உள்ள மக்கள் அவர்களை மறக்கவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டியது. நான்கு வாரங்களுக்குப் பிறகு, நாட்டின் தலைவர்களான ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், மகாத்மா காந்தி போன்றோரிடமிருந்து தந்திகள் வந்தன. சுதந்திரப் போராளிகளை உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தன. கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், செல்லுலார் சிறை கைதிகளின் கோரிக்கையை ஏற்குமாறு வைஸ்ராய்க்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
நிறைய விவாதங்களுக்கும் ஆலோசனைகளுக்கும் பிறகு, 200 புரட்சிகர சுதந்திரப் போராளிகளின் இந்த வரலாற்று சிறப்புமிக்க 36 நாள் உண்ணாவிரதப் போராட்டம் முடிவடைந்தது. அவர்களை நாட்டிற்குத் திருப்பிக் கொண்டு வரும் நடைமுறை 1937 நவம்பர் 29 அன்று தொடங்கியது. அந்த நேரத்தில் அந்தமான் சிறையில் மொத்தம் 385 சுதந்திரப் போராளிகள் இருந்தனர். வங்காளத்திலிருந்து 339, பீகாரிலிருந்து 19, உத்தரப் பிரதேசத்திலிருந்து 11, அஸ்ஸாமிலிருந்து 5, பஞ்சாபிலிருந்து 3, டெல்லியிலிருந்து 2, மற்றும் மதராஸ் மாநிலத்திலிருந்து 2 பேர் இருந்தனர்; இந்த அமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள், ஹரே கிருஷ்ண கோனார் உள்பட, முன்னர் யுகாந்தர் மற்றும் அனுசீலன் சமிதி அல்லது மார்க்சிய சார்பு குழுக்களின் உறுப்பினர்களாக இருந்தனர்.
1938 ஜனவரி மாதத்தில், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் செல்லுலார் சிறையிலிருந்து கோனார் வங்காளத்திற்கு திரும்பினார். ஆரம்பத்தில், ஹரே கிருஷ்ண கோனார் சிறிது காலம் டம்டம் மத்திய சிறையில் வைக்கப்பட்டு, பின்னர் பர்த்வான் சிறைக்கு மாற்றப்பட்டார், அங்கிருந்து இறுதியில் 1938 மார்ச் 27 அன்று விடுதலை செய்யப்பட்டார்.
1938 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அவர் முசாஃபர் அஹமத், அப்துல் ஹலீம், பங்கிம் முகர்ஜி, மற்றும் புபேந்திரநாத் தத்தா ஆகியோரை சந்தித்தார்; 1932 இல் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன் கோனார் இவர்களுடன் பணியாற்றியிருந்தார். விடுதலைக்குப் பிறகு, அவர் மீண்டும் அவர்களை சந்தித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார். அந்த ஆண்டிலிருந்து, கோனாரின் கம்யூனிச இயக்க வாழ்க்கை, முதலாளித்துவத்திற்கு எதிரான பாதையில், தொழிலாளர்கள், விவசாயிகள், உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தோடு தொடங்கின.
அவர் முதலில் கல்கத்தா மற்றும் ஹவுராவில் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கவாதிகளிடையே பணியாற்றினார். சில மாதங்களுக்குப் பிறகு, தோழர் பினாய் சவுத்ரி அவரை பர்த்வான் மாவட்டத்திற்கு அழைத்துச் சென்றார், அங்கு அவர் விவசாயிகள் இயக்கத்தில் பணியாற்றத் தொடங்கினார். 1939 இல், பர்த்வான் மாவட்டத்தில் நடந்த கால்வாய் வரி எதிர்ப்பில் அவர் பங்கேற்றார். 1940 இல் அவர் அசன்சோல், பர்ன்பூர் பகுதிக்குள் நுழையவும், பின்னர் பர்த்வான் மாவட்டத்திற்குள் நுழையவும் கூடாது என பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டார். எனினும் அவர் பர்த்வானில் தலைமறைவாக இயங்கிக் கொண்டிருந்தார். சில மாதங்களுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.
1944 இல் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார், மேலும் பர்த்வான் நகரத்திலிருந்து வெளியேற அரசால் தடை செய்யப்பட்டார். 1943–1944 ஆம் ஆண்டு அஜய் நதி அணை இயக்கத்திலும், 1946–1947 ஆம் ஆண்டு கால்வாய் வரி எதிர்ப்பின் இரண்டாம் கட்டத்திலும் அவர் முக்கிய பங்காற்றினார். அசன்சோலின் நிலக்கரிச்சுரங்கப் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது, அவர் குண்டர்களால் தாக்கப்பட்டார். கால்கள் முறிக்கப்பட்டன. 1948 மார்ச் மாதம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது, அவர் உடனடியாக 3 மாதங்களுக்கு கைது செய்யப்பட்டார். விடுவிக்கப்பட்ட பிறகு, அவர் தலைமறைவாகச் சென்றார். 1952 வரை அப்படியே இருந்தார். இந்த காலகட்டத்தில் கொல்கத்தா, பர்த்வான், ஹவுரா மற்றும் ஹுக்ளிக்கு இடையேயான கட்சியின் தொடர்பை பேணுவதே அவரது முதன்மைப் பொறுப்பாக இருந்தது. 1953 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தின் உணவு இயக்கத்திலும், 1957 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்திலும் அவர் முக்கிய பங்கு வகித்தார். இரண்டு முறையும் கைது செய்யப்பட்டார்.
1958 முதல் அவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினராக இருந்தார். மேலும் 1964 முதல் தமது மறைவு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்தார். 1954 முதல் தமது மறைவு வரை அவர் மேற்கு வங்காள மாகாண விவசாயிகள் சங்கத்தின் (அகில இந்திய கிசான் சபாவின் ஒரு பகுதி) செயலாளராகவும், அகில இந்திய கிசான் சபா சிபிஐ-ன் மத்திய கவுன்சில் உறுப்பினராகவும் இருந்தார். 1968 முதல் தமது மறைவு வரை அவர் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தார்.
1957 ஆம் ஆண்டு மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில், ஹரே கிருஷ்ண கோனாரும் ஜமாதார் மாஜியும் கல்னா தொகுதியின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர், மேலும் கம்யூனிஸ்ட் கட்சி அதிகரித்த உறுப்பினர்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டு மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில், ஹரே கிருஷ்ண கோனார் மீண்டும் கல்னா தொகுதியின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1967 முதல் அடுத்தடுத்த அமைச்சரவைகளில் மேற்கு வங்காளத்தின் நிலம் மற்றும் நில சீர்திருத்த அமைச்சராக இருந்த ஹரே கிருஷ்ண கோனார், நில உச்சவரம்பு சட்டங்களை மீறி பெரிய நிலவுடமையாளர்கள் வைத்திருந்த உபரி நிலத்தை, ‘பினாமி’ யாக (பொய் பெயர்களில்) வைக்கப்பட்டிருந்த நிலங்களை, அரசு கையகப்படுத்துவதில் முன்னணிப் பங்கு வகித்தார். இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட நிலத்தின் அளவு சுமார் பத்து லட்சம் ஏக்கர் (4,000 சதுர கிலோமீட்டர்) நல்ல விவசாய நிலமாகும். பின்னர், ஹரே கிருஷ்ண கோனார் மற்றும் பினாய் சவுத்ரியின் தலைமையின் கீழ், 24 லட்சம் நிலமற்ற மற்றும் ஏழை விவசாயிகளிடையே இந்த நிலம் விநியோகிக்கப்பட்டது. இந்த நில சீர்திருத்தம், 1978 ஆம் ஆண்டு ஆபரேஷன் பர்காவுடன் சேர்ந்து, அடுத்தடுத்த தேர்தல்களில் இடது முன்னணியின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது என்றும் கருதப்படுகிறது.
மேற்கு வங்காளத்தின் இரு-கட்ட நில சீர்திருத்தத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், அதற்கு வழிகாட்டவும் தலைமை தாங்கவும் ஒரு தலைவர் இருந்தார் என்பது வரலாற்றின் விசித்திரமான திருப்பமாகும். ஒருவர் ஹரே கிருஷ்ண கோனார், மற்றொருவர் பினாய் சவுத்ரி; இருவருமே இந்த நோக்கத்திற்கு தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டனர். இருவருமே அறிவியல் ரீதியான சோசலிசக் கொள்கைகளில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள். அறுபதுகளின் பிற்பகுதியில், நிர்வாகத்தின் இயலாமையை நீக்கவும், மேற்கு வங்காளத்தில் சமூகம் மற்றும் அரசியல் அமைப்பின் மீது நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் பிடியை உடைக்கவும், கோனாரின் அச்சமூட்டும் தீவிரத்தன்மை அவசியமாக இருந்தது. பினாய் சவுத்ரியின் நேசமான காந்திய பாணி இணக்கம், பரந்த மக்கள் தொகையை ‘ஆபரேஷன் பர்கா’வின் வெற்றிக்காக அவருடன் இணைத்துக் கொள்ள வேறு ஒரு சமூக-அரசியல் சூழலில் அதே அளவு முக்கியமானதாக இருந்தது. இருவரும், இரண்டு வெவ்வேறு வரலாற்று சூழல்களில் நில சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தத்தமது தனித்துவமான பங்கை ஆற்றினர் என்றே கூற வேண்டும்.
1974 ஆம் ஆண்டு, கோனாருக்கு கழுத்துப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவரது நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்தது, மேலும் 1974 ஜூன் மாதம், கடுமையான நிலையில், கோனார் கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸில் உள்ள கிம்பர் நர்சிங் ஹோமில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் இருந்த ஒரு மாத காலம் முழுவதும் பல தலைவர்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் ஆய்வாளர்களை சந்தித்து, பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து உரையாடினார். ஜூலை மாதத்தில், முதல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது, மேலும் இரண்டாவது அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. ஆனால், இரண்டாவது அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவர் மெதுவாக வாழ்வின் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து, 1974 ஜூலை 23 அன்று மாலை காலமானார்.
மறைந்த தோழருக்கு சிபிஐ(எம்)-இன் மேற்கு வங்காள மாநிலக் குழு அலுவலகத்தில் ஒரு மாபெரும் அஞ்சலி நிகழ்வுக்குப் பிறகு, அவரது உடல், தர்மதலா வழியாக ஏ.ஜே.சி. போஸ் சாலை வழியாக கியோரடோலா மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது; நகரின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்கள் கடல் போல் வந்து குவிந்ததால், காவல்துறையினரும் தன்னார்வலர்களும் கையறுநிலைக்கு ஆட்பட்டனர். தர்மதலாவிலிருந்து கியோரடோலா வரை சாலையைக் கடக்க கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆனது. இறுதியில், கங்கை நதிக்கரையில் உள்ள கியோரடோலா மயானத்தில் கோனாரின் உடல் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. மேற்கு வங்காள அரசு, அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தியது. பிரதமர் இந்திரா காந்தி, மறைந்த தலைவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த கல்கத்தா வந்தார்.
கருத்தியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்தியாவின் பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான இந்திரா காந்தி, நிலம் தொடர்பான முடிவுகளில் கோனாரிடமிருந்து ஆலோசனை பெறுவதைத் தொடர்ந்தார். இந்திரா காந்தி ஒருமுறை, நில சீர்திருத்த அமலாக்கம் மற்றும் பிற விவசாயச் சிக்கல்கள் குறித்து பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுடன் ஒரு கருத்தரங்கை நடத்துவதற்காக கோனாரை ஐ.ஏ.எஸ். பயிற்சிக் கல்லூரியான லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமிக்கு அனுப்பினார்.
கிராமங்களில் விவசாயப் புரட்சி தொடராவிட்டால், மக்கள் ஜனநாயகப் புரட்சி என்பது வெறும் கனவாக மட்டுமே இருக்கும் என்று கோனார் தமது வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்தார். சமூகத்தை, சமத்துவமும் மனிதாபிமானமும் கொண்டதாக மாற்றும் அந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல நமக்கு நாமே உறுதி எடுத்துக் கொள்வோம். மக்கள் ஜனநாயகப் புரட்சியின் ஒரே இயங்கு சக்தி விவசாயப் புரட்சியே ஆகும்.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply