
தெலங்கானா ஆயுதப் போராட்டத்தின் அழியாத பாரம்பர்யம்
விஜூ கிருஷ்ணன், நிதீஷ் ஜே வில்லட்
தெலங்கானா விவசாயிகளின் போராட்டம் ‘அதன் தன்மை மற்றும் அரசியல் நோக்கங்களில்’, ‘இந்தியாவில் இதுவரை தோன்றியதிலேயே மிகப் புரட்சிகரமான இயக்கம்’ என்று மார்க்சிஸ்ட் எழுத்தாளர் ஹம்சா அலவி அவர்களால் விவரிக்கப்பட்டது. இது இன்றும் உண்மையாகவே இருக்கிறது. நிலப்பிரபுக்கள், ஏதேச்சதிகார நிஜாம் மற்றும் அவரது கொடூரமான படையினரான ரசாக்கர்கள் உள்ளிட்ட நிலப்பிரபுத்துவப் படைகளுக்கு எதிராக, விவசாய வர்க்கம் செங்கொடியின் கீழ் அச்சமின்றி அணிதிரண்ட இந்த நீண்டகால இயக்கம், இந்தியாவின் வர்க்கப் போராட்டத்தின் மிகவும் எழுச்சியூட்டும் அத்தியாயங்களில் ஒன்றாகும். மதப் பாகுபாடுகளைக் கடந்து விவசாயிகளின் வர்க்க ஒற்றுமைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தது. இதன் எண்பதாவது ஆண்டு நிறைவில் இப்போராட்டத்திற்கான காரணங்களையும் அதன் தொலைநோக்கு விளைவுகளையும் நாம் புரிந்து கொள்வது அவசியம். இந்த மகத்தான போராட்டத்தை ஆர்.எஸ்.எஸ் தனது பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலுக்கு பயன்படுத்த தீவிர பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள இன்றைய சூழலில் இது மிகவும் முக்கியமானது.
நிலப்பிரபுத்துவ அடக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சி
தெலங்கானா போராட்டம், ஆசாஃப் ஜாஹி வம்சத்தின் எதேச்சதிகார ஆட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிஜாம் மீர் உஸ்மான் அலி கான், அவருக்குக் கீழ்ப்படிந்த நிலப்பிரபுக்கள் மற்றும் அவரது தனியார் குண்டர் படையான ரசாக்கர்கள் ஆகியோரின் நிலப்பிரபுத்துவ அரசுக்கு எதிராக விவசாயிகளை அணி திரட்டியது. நிலப்பிரபுக்களின் ஒடுக்குமுறை மற்றும் குத்தகைதாரர்களை மிரட்ட நிஜாமின் ஆயுதமேந்திய குண்டர்களை பயன்படுத்துவது போன்ற உடனடிப் பிரச்சினைகளுக்கு எதிரான தெலங்கானா விவசாயிகளின் இணையற்ற போராட்டம், பின்னர் வெட்டி எனப்படும் ஊதியமற்ற கட்டாய உழைப்பு ஒழிப்பு, சட்டவிரோதப் பறிமுதல் ஒழிப்பு மற்றும் இறுதியாக நிஜாமின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகிய கோரிக்கைகளுடன் விரிவடைந்தது. இது காவிய பரிமாணங்களைப் பெற்று, நாட்டின் சமகால விவசாய வரலாற்றில் ஒரு மைல்கல்லாக மாறியது. இப்போராட்டம் சாதிய ஒடுக்குமுறை மற்றும் தீண்டாமை, அதிகப்படியான வாரம் (வாடகை) வசூலிப்பது, சட்டவிரோத வெளியேற்றங்கள், மிகக் கடுமையான வாடகைகள் மற்றும் வரிகள் மற்றும் ஜாகிர்தாரி முறைக்கு எதிராகவும் இருந்தது.. ஜாகிர்தாரி முறை நிலப்பிரபுத்துவத்தின் மிகவும் மோசமான ஒடுக்குமுறையாகும். அதை வீழ்த்துவது விவசாயிகள் அணிதிரட்டப்பட்ட ஒரு முக்கிய புள்ளியாக அமைந்தது.
நிலக்குவியல்
உயர்சாதி நிலப்பிரபுக்கள் பரந்த நிலப்பரப்புகளை சொந்தமாக வைத்திருந்தனர். நல்கொண்டா மாவட்டம் ஜன்காவ் தாலுகாவில் உள்ள விஸ்னூர் தேஷ்முக் 40,000 ஏக்கர் நிலத்தையும், கம்மம் மாவட்டம் மதீரா தாலுகாவில் உள்ள கல்லுரு தேஷ்முக் ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தையும், நல்கொண்டா மாவட்டம் சூர்யாபேட்டை தாலுகாவின் ஜனாரெட்டி பிரதாப் ரெட்டி 1.5 லட்சம் ஏக்கர் நிலத்தையும் வைத்திருந்தனர். ஜாகிர்தாரி முறையின் கீழ் நிலப்பிரபுக்களின் கைகளில் நிலம் குவிந்திருந்தது. இதனால் விவசாயிகள் அடிமை போன்ற கொடூர சூழலை சந்தித்தனர். 1929-இன் பெரும் பொருளாதார மந்தநிலை, மற்ற இடங்களைப் போலவே தெலங்கானா விவசாயிகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மொத்த விலை வீழ்ச்சியால் வசதியான விவசாயிகளும் கூட கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலர் தங்களது நிலங்களை நியாயமற்ற குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். இந்த போக்கு முப்பதுகள் முழுவதும் தொடர்ந்தது, இது சந்தைக்காக உற்பத்தி செய்த விவசாயிகளின் பண வருவாயில் வீழ்ச்சியை உருவாக்கியது. இந்த விலை வீழ்ச்சி ஏற்கெனவே கடன் பட்ட விவசாயிகளின் மீது வட்டி கொள்ளைகாரர்களின் பிடிமானத்தை பல மடங்கு வலுப்படுத்தியது. இத்தகைய சூழ்நிலையில்தான் கிராமப்புற விவசாயிகளை ஒரு வெகுஜன இயக்கமாக பெரிய அளவில் அணிதிரட்டுவது சாத்தியமானது.
ஹைதராபாத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 53 மில்லியன் ஏக்கர் நிலத்தில், சுமார் 60 சதவீதப் பகுதி அரசாங்க நில வருவாய் முறையின் கீழும் (திவானி அல்லது கல்சா பகுதி என அழைக்கப்பட்டது), சுமார் 30 சதவீதம் ஜாகிர்தாரி முறையின் கீழும், சுமார் 10 சதவீதம் சர்ஃப்-ஏ-காஸ் எனப்படும் நிஜாமின் நேரடிச் சொந்த நிலங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. நிசாமின் நேரடி நிலங்களில் இருந்த பகுதிகளின் விவசாயிகள் நிலை கொத்தடிமைகளாக அல்லது முழுமையான பண்ணையடிமைகளாக இருந்தது. மேலும் திவானி பகுதிகளில் இருந்த வரம்புக்குட்பட்ட உரிமைகளும் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. ஜாகீர் பகுதிகளில் நீர்ப்பாசன நிலங்களுக்கான நில வரிகள் திவானி பகுதிகளில் வசூலிக்கப்பட்ட தொகையை விட பத்து மடங்கு அதிகமாக இருந்தது. ஜாகீர் பகுதிகளில் ஒடுக்குமுறை மிக மோசமானதாக இருந்தது. நில ஆவணங்களை பார்க்க வாய்ப்பிருந்த வரி வசூலிப்பாளர்களான தேஷ்முக்குகள் மற்றும் தேஷ்பாண்டேக்கள், சட்டவிரோத வழிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் சிறந்த வளமான சாகுபடி நிலங்களை ஆக்கிரமித்தனர். பின்னர் அந்த நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளை தற்காலிகக் குத்தகைதாரர்களாக மாற்றினர். பொருளாதார நெருக்கடி ஆண்டுகளில் ‘கற்பனை செய்ய முடியாத வட்டி விகிதங்களில்’ வழங்கப்பட்ட விவசாயப் பொருட்களின் கடன்களைத் திருப்பிச் செலுத்தாதது அல்லது அறுவடை மோசமாக பாதிக்கப்பட்ட காலம் அல்லது பயிர்களுக்கு நியாயமற்ற விலையின் காரணமாக வரிகளைச் செலுத்தாததைக் சாக்காகக் கொண்டு பெரும் நிலப்பரப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு இந்த நிலப்பிரபுத்துவப் பிரபுக்களிடம் சட்டப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.
தெலங்கானாவின் அரசியல்-சமூக-பொருளாதார சூழல்
தெலங்கானா பிராந்தியத்தின் சமூக-பொருளாதார வரலாறு ‘கட்டுப்பாடற்ற நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறையைக்’ கண்டது. இது ‘வெட்டி’ எனப்படும் ஊதியமற்ற கட்டாய உழைப்பு மற்றும் அதிகாரம் மூலம் உழைப்பாளிகளின் வருமான பறிப்பு என்பதுடன் சேர்ந்தே வந்தது. இது விவசாயிகளை ‘மோசமான பண்ணையடிமைத்தனம்’ மற்றும் ‘முழுமையான சீரழிவுக்கு’ தள்ளியது. நிலப்பிரபு அல்லது தேஷ்முக் (உள்ளூர் பேச்சுவழக்கில் தொரா என்று அழைக்கப்படுகிறார், அதாவது கிராமத்தின் எஜமான்) வெட்டி முறையின் கீழ் ஏராளமான அதிகாரங்களை வைத்திருந்தார். ‘பணம் அல்லது பொருள் வடிவில் சிலவற்றை கொடுப்பதற்கு ஈடாக உழைப்பாளிகளின் உழைப்பை’ பெறுவது உள்ளிட்ட பல சலுகைகளை அனுபவித்தார். உண்மையில் இவை பெரும்பாலும் எந்தக் கட்டணமும் இன்றி அதிகாரம் பயன்படுத்துவதன் மூலம் பெறப்பட்டன. வழக்கமாக தீண்டத்தகாத மலா மற்றும் மாதிகா சாதியினரைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் மீதே வெட்டி சுரண்டல்களின் சுமைகள் விழுந்தன.
வெட்டி முறை என்பது பல்வேறு வர்க்கங்களை வெவ்வேறு அளவுகளில் பாதித்த ஒரு பரவலான சமூக நிகழ்வாகும். முன்னாள் ‘தீண்டத்தகாத’ சாதியினர் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு நபரை வெட்டி வேலை செய்ய அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது, அவர்கள் விவசாய நோக்கங்களுக்காக தாங்கள் செய்யும் கருவிகளையும் நிலப்பிரபுகளுக்கு இலவசமாக வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இதேபோல் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பிற தொழில் சார்ந்த சாதியினரும் தங்களது பொருட்களான துணி, பானைகள், கள் மற்றும் பிற பொருட்களை உயர்சாதி நிலப்பிரபுகளுக்கு இலவசமாக வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். தேஷ்முக்குகள், மக்தேதார்கள் மற்றும் இதர வருவாய்த்துறை அதிகாரிகள் போன்ற அதிகாரிகளும் நிலப்பிரபுகளுடன் சேர்ந்து பல்வேறு வடிவங்களில் கட்டாய உழைப்பையும் சட்டவிரோதப் பறிமுதல்களையும் பறித்து கொண்டனர். நிஜாம் ஆட்சியின் கீழ் உருவாக்கப்பட்ட சிறப்பு நிபந்தனைகளும் அரசியல்-பொருளாதாரச் சட்டங்களும் அது வரை வரலாற்றில் இல்லாத மோசமான விவசாய சுரண்டல் கட்டமைப்பை உருவாக்கின.
ஹைதராபாத்தின் விவசாய சமூகக் கட்டமைப்பை பல நூற்றாண்டுகளுக்கு முன் நிலவிய ‘மத்தியகால, நிலப்பிரபுத்துவ வரலாற்றின் ஒரு பக்கம்’ என்று விவசாயக் கிளர்ச்சிகள் குறித்த சிறந்த வரலாற்றாசிரியரான டி.என்.தனகாரா ஒப்பிட்டார். ஜாகிர்தாரி முறை ஒரு சில உயர்சாதிப் பிரிவினரிடம் நிலச் சொத்துக்கள் குவிவதற்கும் வழிவகுத்தது. தேஷ்முக்குகள், மக்தேதார்கள் மற்றும் இதர வருவாய்த்துறை அதிகாரிகளில் கிட்டத்தட்ட 90% உயர்சாதி ரெட்டி மற்றும் வெலமா சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். வெட்டி முறையைப் போலவே, பாகேலா முறையும் கீழ் மற்றும் தீண்டத்தகாத சாதியினர் என வகைப்படுத்தப்பட்ட நிலமற்றவர்கள், “எஜமானர்களிடம்” வாங்கிய கடனால் பிணைக்கப்பட்டு, நிலப்பிரபுக்கள் கோரும் அனைத்து சேவைகளையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
ஆந்திர மகாசபா விவசாயிகள் அமைப்பு தொடக்கம்
1928 ஆம் ஆண்டு மாடபாடி ஹனுமந்த ராவ் தலைமையில் தெலங்கானா பகுதியில் உருவான ஆந்திர மகாசபா விவசாயிகளின் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கியது. 1930களில் ஆந்திர மகாசபா நிஜாமின் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராகப் போராடும் தெலுங்கு பேசும் மக்களின் தாராளவாத தேசியவாத சங்கமாக உருவெடுத்தது. 1940களின் முற்பகுதியில், கம்யூனிஸ்டுகள், போராட்ட குணமிக்க இளைஞர்கள் மற்றும் ஜனநாயகம் எண்ணம் கொண்ட பலரும் பெருமளவில் ஆந்திர மகாசபாவில் இணைந்தனர். உள்ளூர் அரசர்கள் ஆளும் பகுதிகளில் காங்கிரஸின் “தலையிடாக் கொள்கையால்” அவர்கள் விரக்தியடைந்தனர். அவர்கள் ஆந்திர மகாசபாவை ஒரு நிஜாம் எதிர்ப்பு, ஒன்றுபட்ட வெகுஜன தீவிரவாத அமைப்பாக – நிஜாமிற்கு எதிரான ஒரு ஐக்கிய முன்னணியாக மாற்றுவதில் வெற்றி பெற்றனர். 1944ஆம் ஆண்டிற்குள், கம்யூனிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் வந்த ஆந்திர மகாசபா தெலங்கானாவின் பல பகுதிகளில் ஜமீன்தார்கள் மற்றும் தேஷ்முக்குகளுக்கு எதிராக தீவிர வர்க்கப் போராட்டங்களை முன்னெடுத்தது. இவை வெட்டி (கட்டாய உழைப்பு) மற்றும் விவசாயிகளை சட்டவிரோதமாக வெளியேற்றுவதற்கு எதிரான மிகப்பெரிய வர்க்க நடவடிக்கைகளாக இருந்தன. இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பிந்தைய உணவு நெருக்கடி இந்த இயக்கத்தை தீவிரப்படுத்துவதில் ஒரு கிரியா ஊக்கியாகச் செயல்பட்டது.
வெட்டி ஒழிப்பு, அதிகப்படியான வாரம் வசூலிப்பதற்குத் தடை, வெளியேற்றங்களுக்குத் தடை, மிகவும் வெறுக்கப்பட்ட ஜாகிர்தாரி முறை ஒழிப்பு, வரிகள் மற்றும் வாடகைக் குறைப்பு மற்றும் கள் மரங்கள் மீது விதிக்கப்பட்ட ஹக்கீ-மாலிகானா வரியை ஒழிப்பது ஆகியவற்றுக்கு எதிராக நேரடி நடவடிக்கை எடுப்பது மற்றும் நிலப்பிரபுத்துவ மற்றும் ஏகாதிபத்திய அடக்குமுறைகளுக்கு எதிராகவும் ஆந்திர மகாசபா விவசாயிகளை அணிதிரட்டியது. தெலங்கானாவின் பல பகுதிகளில் உள்ள விவசாயிகள், “சங்கம் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. இனி வெட்டி இல்லை, சட்டவிரோதப் பறிமுதல் இல்லை, வெளியேற்றம் இல்லை” என்ற முழக்கத்துடன் பொதுக்கூட்டங்களை நடத்தத் தொடங்கினர். நிஜாமின் நிர்வாகமும் நிலப்பிரபுக்களும் தங்களது அடியாட்கள் மூலமாக இந்த இயக்கத்தை வன்முறை மூலம் ஒடுக்க முயன்றனர். பெருமளவிலான கைதுகள் மற்றும் காவல்துறையின் பயங்கரவாதம், கிராமங்களில் போலீஸ் சோதனைகள் வழக்கமான ஒன்றாகின.
ஏன் ஆயுதப்போராட்டம்?
காவல்துறையின் பயங்கரவாதம் மற்றும் அடியாட்களின் அராஜகம் காரணமாக ஆந்திர மகாசபாவும் கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகளுக்கு ஆயுதப் பயிற்சியை வழங்கத் தொடங்கின. ஆரம்பத்தில் லத்திகளைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. நிஜாம் ஆட்சி தனது பயங்கரவாதத்தை தீவிரப்படுத்தியது. ரசாக்கர்களின் அட்டூழியங்கள் கொடூரமாக இருந்தன. நிஜாம் ஆட்சி பாலியல் பலாத்காரத்தை ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தியது; பெண் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். இதன் பின்னணியில் புரட்சிகர இயக்கம் ஆயுதமேந்திய எதிர்ப்பை மேற்கொள்ள முடிவு செய்தது. ஆயுதங்களும் வெடிமருந்துகளும் சேகரிக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போரில் போரிட்ட கம்யூனிச முன்னாள் ராணுவத்தினரின் உதவியுடன் கொரில்லா படைகளுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது. ராணுவத்தில் பணிபுரிந்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் மேஜர் ஜெய்பால் சிங், தெலங்கானா விவசாயப் போராட்டத்தின் போது 300க்கும் மேற்பட்ட பெண் போராளிகளுக்கு பயிற்சி அளிப்பதில் முக்கியப் பங்காற்றினார். இப்போராட்டத்தில் பெண்கள் முன்னணியில் இருந்தனர், அவர்களுள் மிகவும் பிரபலமானவர் கம்யூனிஸ்ட் தலைவர் மல்லு சுவராஜ்யம் ஆவார்.
தெலங்கானா விவசாயக் கிளர்ச்சியை எழுச்சியூட்டிய தீப்பொறி எதுவெனில் ஜன்காவ்ன் எனுமிடத்தில் சங்கத்தின் தொழிலாளியான ஐலம்மா என்ற சலவைத் தொழிலாளியின் அறுவடை மற்றும் நிலத்தைப் ஜன்காவின் வெறுக்கப்பட்ட தேஷ்முக் விஸ்னூர் ராமச்சந்திர ரெட்டியிடமிருந்து பாதுகாப்பதில் சங்கம் பெற்ற வெற்றி ஆகும். இந்த வெற்றி நிலப்பிரபுக்களுக்கு எதிரான போராட்டத்தில் மக்களுக்கு நம்பிக்கையையும் துணிச்சலையும் கொடுத்தது. விஸ்னூர் தேஷ்முக்கின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஊர்வலத்தை வழிநடத்திச் சென்றபோது, ஜமீன்தாரின் ஆட்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜூலை 4, 1946 அன்று கிராம சங்கத் தலைவர் தொட்டி கோமரய்யா தியாக மரணமடைந்தது ‘தெலங்கானா விவசாயிகளின் அடக்கி வைக்கப்பட்டிருந்த கோபத்தை பற்றவைத்தது.மக்கள் நிலப்பிரபுக்களுக்கு எதிராக பெருந்திரளாக போராட்டத்தில் பங்கேற்றனர்.
கிராம சோவியத்துகள்
ஆந்திர மகாசபாவும் கம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகளை ஒருங்கிணைத்து, கிராம ராஜ்யங்களை அமைத்தனர். இவை விடுதலையான கிராம சோவியத்துகள் என்றும் அழைக்கப்பட்டன. இந்த ஜனநாயக அமைப்புகள் வெளியேற்றப்பட்ட குத்தகைதாரர்கள் மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களிடையே நிலத்தை மறுவிநியோகம் செய்யும் திறமையான அமைப்பை உருவாக்கியதுடன், நிஜாம்களின் நீதித்துறை அமைப்பிற்குப் பதிலாக கிராம சமிதிகள் அல்லது கிராமக் குழுக்களை வெற்றிகரமாக மாற்றின. பி.சுந்தரய்யா, ரவி நாராயண ரெட்டி மற்றும் பிற தலைவர்கள் விவசாயிகளுக்கு நம்பிக்கையளித்தனர். ஆயுதமேந்திய விவசாயிகளின் இந்த இயக்கம் நல்கொண்டா, கம்மம் மற்றும் வாரங்கல் மாவட்டங்கள் முழுவதையும் சூழ்ந்தது. அதேநேரத்தில் மேடக், அடிலாபாத், கரீம்நகர், மஹபூப்நகர் மற்றும் ஹைதராபாத் மாவட்டங்களின் பகுதிகளிலும் இந்த செல்வாக்கு தாக்கத்தை உருவாக்கியது. சுமார் 4000 கிராமங்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அது ஒரு இணையான நிர்வாகத்தை நிறுவி, நிலப்பிரபுக்கள் மற்றும் ஜாகிர்தார்களின் கொடுங்கோன்மைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. நிலப்பிரபுக்களின் நிலங்களில் விளைந்த பயிர்களை மக்கள் அறுவடை செய்து உணவு தானியங்களைப் பறிமுதல் செய்தனர். சிவப்புக்கொடிகள் பறந்த பகுதிகள் விடுதலையான மண்டலங்களைக் குறித்தன. இது நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறையாளர்களின் மனதில் பயத்தை ஏற்படுத்தியது.
இரண்டாம் உலகபோரின் முடிவு ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னுக்கு கொண்டு வந்தது. இதனால் ஆத்திரமுற்ற நிஜாம் ஆதரவு மஜ்லிஸ்-இத்தேஹாதுல்-முஸ்லிமீன் அமைப்பு ரசாக்கர்கள் கூலிப்படையை ஏவி கிராமப்புறங்களில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டது. நிஜாமின் ஒடுக்குமுறையிலிருந்து விவசாயிகளைப் பாதுகாத்தது ஆயுதமேந்திய கொரில்லாக்களின் படைகள்தான்.
நேரு அரசாங்கத்தின் அடக்குமுறை
விவசாயக் கிளர்ச்சி தீவீரமான புரட்சிகர ஆற்றலுடன் புதிய பகுதிகளுக்குப் பரவிக் கொண்டிருந்தபோது, நேரு தலைமையிலான மத்திய அரசு செப்டம்பர் 13, 1948 அன்று “போலீஸ் நடவடிக்கையை” தொடங்கியது. ஆரம்பத்தில் இந்திய ஒன்றியத்தில் இணைய மறுத்த நிஜாம், “போலீஸ் நடவடிக்கை” தொடங்கிய ஐந்து நாட்களுக்குள் பணிந்தார். தீவிர விவசாயப் போராளிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிஜாம் ஆட்சி மற்றும் நிலப்பிரபுத்துவ பிரபுக்கள் மீதான தங்களது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தினர். இந்த கட்டத்தில்தான் சுமார் 5,000 விவசாயிகள் ஒன்று கூடி சூர்யாபேட்டையில் மிகவும் வெறுக்கப்பட்ட நிலச்சுவான்தார் ஜன்னாரெட்டி பிரதாப் ரெட்டியின் பிரமாண்டமான மாளிகையை இடித்தனர். விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்தது. இந்த சூழலில் தெலுங்கானா மக்களின் நியாயமான கோரிக்கைகளை உணர்வதற்கு மாறாக நேரு அரசாங்கம் தேஷ்முக்குகள் பக்கம் நின்றது. “கிராமம் கிராமமாக தீ வைத்து நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றதற்குப் பொறுப்பான” தேஷ்முக்குகளையும் ரசாக்கர் தலைவர் காசிம் ரிக்வியையும் மீட்பதற்காக நேரு அரசின் படைகள் வரத் தொடங்கின. நேருவின் ராணுவம் நிஜாமிற்கு எதிராக நின்ற விவசாய மற்றும் உழைக்கும் வர்க்க முஸ்லிம்களையும் இலக்கு வைத்தது.
உயர்ந்த தியாகமும் புகழ்பெற்ற சாதனைகளும்
செப்டம்பர் 1948-இல் நடந்த போலீஸ் நடவடிக்கைக்குப் பிறகு நிஜாம் மற்றும் அவரது ரசாக்கர்கள், நிலப்பிரபுத்துவ கூலிப்படைகள் மற்றும் இந்திய அரசு கூட்டாக கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறை காரணமாக 4000க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகள் மற்றும் விவசாயப் போராளிகள் கொல்லப்பட்டனர். 10,000க்கும் மேற்பட்டோர் தடுப்பு முகாம்களிலும் சிறைகளிலும் அடைக்கப்பட்டனர். அதைவிட அதிகமான எண்ணிக்கையிலான மக்கள் பல்வேறு வழிகளில் சித்திரவதை செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். தடுப்பு முகாம்களில் நோய் மற்றும் சித்திரவதைகளால் 2,000க்கும் மேற்பட்ட கோயா பழங்குடியினர் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் மக்களின் போராட்டத்தின் தாக்கம் எழுச்சியுடன் இருந்தது. எனவே இது இந்தியாவின் அனைத்து விவசாய எழுச்சிகளிலும் மிகவும் புரட்சிகரமானது என்று சரியாகக் குறிப்பிடப்படுகிறது.
தெலங்கானா மக்கள் இந்த எழுச்சியின் மூலம் மகத்தான சாதனைகளையும் உரிமைகளையும் நன்மைகளையும் பெற்றனர். தோழர் பி.சுந்தரய்யா தனது ஆய்வில் நல்கொண்டா, வாரங்கல் மற்றும் கம்மம் மாவட்டங்களில் சுமார் 16,000 சதுர மைல் பரப்பளவில் 30 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட 3000 கிராமங்களில் விவசாயிகள் கிராம பஞ்சாயத்துகளின் அடிப்படையில் கிராம ராஜ்ய குழுக்கள் நிறுவுவதில் வெற்றி பெற்றதாகப் பதிவு செய்துள்ளார்.
தோழர் சுந்தரய்யாவின் வார்த்தைகளில்…
“கிராமப்புறங்களில் நிஜாமின் எதேச்சதிகாரத்தின் தூண்களாக இருந்த வெறுக்கப்பட்ட நிலப்பிரபுக்கள் தங்களது கோட்டை போன்ற வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். அவர்களது நிலங்கள் விவசாயிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. மக்கள் குழுக்களின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு மில்லியன் ஏக்கர் நிலம் விவசாயிகளுக்கு மறுவிநியோகம் செய்யப்பட்டது. விவசாயிகள் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டன. கட்டாய உழைப்பு சேவை ஒழிக்கப்பட்டது. வட்டியின் கொள்ளை மற்றும் அநியாய விகிதங்கள் கடுமையாகக் குறைக்கப்பட்டன அல்லது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டன. விவசாயத் தொழிலாளர்களின் தினசரி ஊதியம் உயர்த்தப்பட்டு குறைந்தபட்ச ஊதியம் அமல்படுத்தப்பட்டது. ஒடுக்குமுறையை கையாண்ட வனத்துறை அதிகாரிகள் ஒட்டுமொத்த வனப்பகுதியையும் விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த காடுகளின் எல்லையோர பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரும் மக்களும் தங்களது உழைப்பின் பலனை அனுபவிக்க முடிந்தது. 12 முதல் 18 மாத காலத்திற்கு இந்த பகுதிகளில் முழு நிர்வாகமும் கிராம விவசாயக் குழுக்களால் நடத்தப்பட்டது. நிஜாமின் எதேச்சதிகாரத்திற்கு எதிரான இந்த போராட்டத்தின் போது, ரசாக்கர்கள் மற்றும் நிஜாம் போலீசாரின் ஆயுதமேந்திய தாக்குதல்களுக்கு எதிராக விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக 10,000 கிராமப் படை உறுப்பினர்களையும் சுமார் 2,000 கொரில்லா படைகளையும் கொண்ட ஒரு சக்திவாய்ந்த உழைக்கும் மக்கள் படையை ஒழுங்கமைத்து உருவாக்க முடிந்தது. லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களது வாழ்க்கையில் முதல்முறையாக, வழக்கமான இருவேளை உணவை உண்ண முடிந்தது. ஒரு வார்த்தையில் சொல்வதானால், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகளின் கிளர்ச்சி ஆசாஃப் ஜாஹி வம்சத்தின் இடைக்கால எதேச்சதிகார ஆட்சியை அதன் வேர்களோடு உலுக்கி, அதற்கு மரண அடியை வழங்கியது.”
தெலங்கானா போராட்டம் எதை சாதித்தது?
நிலப்பிரபுக்கள் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உடன்படவும், நில விநியோகக் கொள்கையை ஏற்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டனர். பணக்கார விவசாயிகள் நடுநிலை வகித்தனர். நிலங்களை வாங்குவதை தவிர்த்தனர். நடுத்தர விவசாயிகள் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலையானதாக உணர்ந்து தங்களது பயத்தை வென்றனர். ஏழை விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் நிலப்பிரபுக்கள் மற்றும் அவர்களது அடியாட்களின் கொடுங்கோன்மையிலிருந்து விடுபட்டனர். மேலும் நில உரிமைகள் தங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து சமூக முன்னேற்றத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் என்ற புதிய நம்பிக்கை அவர்களிடையே உருவானது. இந்த வீரமிக்க விவசாயிகளின் மகத்தான இயக்கம் காரணமாகவே விவசாயப் புரட்சியின் முக்கியத்துவத்தை முன்னிலைக்குக் கொண்டு வந்த பெருமை சேரும்.
இது அப்போதைய காங்கிரஸை அரைகுறை மனதுடன் பல்வேறு விவசாய சீர்திருத்த நடவடிக்கைகளைக் கொண்டுவர கட்டாயப்படுத்தியது. இருப்பினும் அவை நேர்மையற்றவையாகவும் விவசாயிகளின் விருப்பங்களை பூர்த்தி செய்யாதவையாகவும் இருந்தன. மிகவும் கொடூரமான நிகழ்வு என்னவெனில், காங்கிரஸ் அரசாங்கம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக வெறுக்கப்பட்ட நிஜாமை தண்டிப்பதற்குப் பதிலாக, அதற்குப் பிறகு உடனடியாக அவரை தெலங்கானா பகுதியின் ராஜ் பிரமுகராக நியமித்தது. எவ்வாறாயினும், விவசாயிகளால் இயக்கப்படும் இயக்கங்கள் மற்றும் வெகுஜன எழுச்சிகள் மற்றும் விவசாயிகள் அணிதிரட்டலின் பயம், ஆளும் வர்க்கத்தின் நிகழ்ச்சி நிரல்களில் விவசாயச் சீர்திருத்தங்கள் பெரிதாக இடம்பெறுவதை உறுதி செய்தது.
இந்துத்துவா பாசிஸ்டுகளின் பிளவுபடுத்தும் கருத்தாக்கம்
ஹைதராபாத் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது குறித்து இந்துத்துவா பாசிஸ்டுகள் ஒரு பெரிய பிரச்சாரத்தைத் தொடங்கினர் — இது ‘ரசாக்கர்: ஹைதராபாதின் அமைதியான இனப்படுகொலை ‘ என்ற தீவிர வகுப்புவாத வண்ணம் பூசப்பட்ட திரைப்படத்தின் விளம்பரத்தின் மூலம் வெளிப்படையானது. எனவே தெலங்கானா கிளர்ச்சியின் வர்க்க மற்றும் மதச்சார்பற்ற தன்மையை மீண்டும் வலியுறுத்துவது முக்கியம். கிளர்ச்சியின் போது, நிஜாமின் ஹைதராபாத் மாநிலம் பிரிட்டிஷாருக்கு அடிபணிந்த ஒரு துணை நிலப்பிரபுத்துவ நாடாக இருந்தது. இது எட்டு தெலுங்கு பேசும் மாவட்டங்கள் (ஹைதராபாத் நகரம் உட்பட), மராத்வாடா பிராந்தியத்தில் ஐந்து மராத்தி பேசும் மாவட்டங்கள் மற்றும் மூன்று கன்னடம் பேசும் மாவட்டங்களைக் கொண்டிருந்தது. தெலங்கானா பகுதி மொத்த பரப்பளவில் 50% ஆக இருந்தது, மேலும் தெலுங்கு பேசும் மக்கள் மொத்த மக்கள் தொகையில் 50% ஆக இருந்தனர். ஹைதராபாத் மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள் ஆவர்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிமையாக இருந்த நிஜாமும் அவரது உயரடுக்கு முல்லாக்களும், பிரித்தாளும் தெளிவான நோக்கத்துடன் “முஸ்லிம்களே ஆளும் வர்க்கம்” என்ற கோட்பாட்டைப் பரப்பினர். மாநிலத்தின் மராத்தி மற்றும் கன்னடம் பேசும் பகுதிகளில் இந்து வகுப்புவாத குழுக்கள் ஓரளவு செல்வாக்கு பெற்று வந்தன., உழைக்கும் மக்களைச் சுரண்டும் விஷயத்தில் நிஜாம் மத அடிப்படையில் வேறுபாடு காட்டவில்லை என்பதே வரலாற்று உண்மை. நிஜாமிற்கு விசுவாசமாக இருந்த நிலப்பிரபுக்கள் மற்றும் வரி வசூலிப்பவர்களில் கணிசமான பகுதியினர் சாதி இந்துக்களாக இருந்தனர். நிஜாம் மற்றும் அவரது கூலிப்படைக்கு எதிராகப் போராடிய முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பல தீவிரப் புரட்சியாளர்கள் இருந்தனர். முக்கிய பத்திரிகையாளர் சோயபுல்லாகான், புகழ்பெற்ற கவிஞரும் கம்யூனிஸ்ட் தலைவருமான மக்தூம் மொஹியுதீன் ஆகியோர் போராட்டத்தை உருவாக்க உதவிய முக்கியமான இஸ்லாமியர்கள் ஆவர்.
இந்து மற்றும் முஸ்லிம் விவசாயிகளின் ஒற்றுமைக்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன; நிலப்பிரபுக்களும் நிஜாமின் ரசாக்கர்கள் மற்றும் அவர்களின் பயங்கரவாத ஆட்சிக்கு எதிரான தெலங்கானா போராட்டத்தின் முக்கிய மையமாக மல்லாரெட்டிகூடம் உள்ளது. இந்த பகுதியில் இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றிணைந்து போராடினர். இன்று, பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் வரலாற்றைத் திரிக்க முயல்கிறது., தெலங்கானா போராட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள முயன்று, இந்துக்களை விடுதலை செய்வதற்காக முஸ்லிம்களுக்கும் அவர்களது மன்னன் நிஜாமிற்கும் எதிராக நடந்த போராட்டமாக அதை சித்தரிக்க முயல்கின்றனர். அவர்களின் இழிவான பிளவுபடுத்தும் அரசியலை நாம் அம்பலப்படுத்த வேண்டும்.
கிட்டத்தட்ட அனைத்து பெரிய ஜமீன்தார்களும் இந்துக்களாகவே இருந்தனர். அவர்கள் நிஜாமின் விசுவாசமான ஊழியர்களாக இருந்தனர். அவர்களின் கூட்டு ஒடுக்குமுறைக்கு எதிராகத்தான் செங்கொடி மக்களை அணிதிரட்டியது. அவர்கள் இந்துக்களாக இருந்தாலும் சரி, முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, நிலமற்றவர்கள் நில உரிமைகளுக்காகவும், ஒடுக்குமுறை மற்றும் வெட்டி எனும் முறையிலிருந்து விடுதலை பெறவும் கைகோர்த்தனர். இந்த கிராமத்தில் இந்து விவசாயிகள் சிறையில் அடைப்பதற்காக லாரிகளில் ஏற்றப்பட்ட போது, முஸ்லிம் விவசாயிகள் அந்த லாரிகளை நிறுத்தி அவர்கள் கைது செய்யப்படுவதை தடுத்தனர். இன்றுவரை அவர்கள் நல்லிணக்கத்துடன் வாழ்கிறார்கள். இந்த ஒற்றுமைதான் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-விற்கும், அமித் ஷா மற்றும் நரேந்திர மோடிக்கும் கண்ணில் குத்தும் முள்ளாக இருக்கிறது. அவர்களின் பிளவுபடுத்தும் அரசியல் வெற்றி பெற மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
தமிழில்: அன்வர் உசேன்
1. அரசியல் தலைமை குழு உறுப்பினர் விஜு கிருஷ்ணன் அவர்கள் தனது முனைவர் பட்டத்துக்காக எழுதிய ஆய்வு கட்டுரை இதற்கு அடிப்படை. தமிழ் மார்க்சிஸ்ட் இதழுக்காக தேவையான மாற்றங்களை அவரும் நிதிஷ் ஜே வில்லட் அவர்களும் செய்துள்ளனர்.
2. பெரும்பாலான துணை தலைப்புகள் மொழி பெயர்ப்பாளருடையது.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply