
ஜியார்ஜி டிமிட்ரோவ் : பாசிச எதிர்ப்பு வழிகாட்டி
ஜூலை 2, 1949 : ஜியார்ஜி டிமிட்ரோவ் நினைவு நாள்
அபிநவ் சூர்யா
பல்கேரியா கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிச சர்வதேசத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றிய தோழர் ஜியார்ஜி டிமிட்ரோவ் அவர்கள், ஜூலை 2, 1949 அன்று மாஸ்கோவில் காலமானார். கம்யூனிஸ்ட் தலைவர்களை இயக்கமே உருவாக்குகிறது என்றாலும், ஒரு தலைவர் சர்வதேச கம்யூனிச இயக்கத்தை வளர்த்தெடுப்பதில் ஆற்றிய பங்கைக் கண்டு அனைவரும் வியப்புடன் பெருமை கொள்ளும் ஆளுமைகளில் ஒருவர் தான் டிமிட்ரோவ். பல்கேரியாவில் சாதாரண கைவினைத் தொழிலாளி குடும்பத்தில் பிறந்த டிமிட்ரோவ், அச்சுப் பணி தொழிலாளியாக தொழிலாளர் இயக்கத்தில் இணைந்து, பின்னர் 1919ல் பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றுவாய் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார்.
டிமிட்ரோவின் முக்கியமான பங்களிப்பானது, அவர் பாசிசத்தை தோலுரித்து காட்டியது தான். நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, இனவெறி மிக்க, ஏகாதிபத்திய கூறுகளின் வெளிப்படையான சர்வாதிகாரம் தான் பாசிசம் என்ற டிமிட்ரோவின் விளக்கம் தான் இன்று வரை நமக்கு பாசிச எதிர்ப்பில் வழிகாட்டி வருகிறது. இந்த புரிதல் அவருக்கு திடீரென உதித்ததல்ல. 1923ல் பல்கேரியாவில் பாசிச சக்திகளுக்கு எதிராக கம்யூனிச புரட்சியை வழி நடத்திய டிமிட்ரோவ், அது வீழ்த்தப்பட்ட பின், நாட்டை விட்டு வெளியேறினார். பின் ஜெர்மனியில் கம்யூனிச சர்வதேசத்தில் பணியாற்றிய போது, 1933ல் நாஜிக்கள் ஜெர்மன் பாராளுமன்ற தீ விபத்துக்கு கம்யூனிஸ்ட்கள் மீது பழி போட்டு, சோசலிஸ்ட்-கம்யூனிஸ்ட்களை வேட்டையாடினர். இதில் டிமிட்ரோவும் கைதானார். அந்த வழக்கில் தாமே வாதாடி, பாசிஸ்டுகளின் நீதிமன்றத்தை கம்யூனிச சித்தாந்தத்தை பரப்பும் கருவியாக பயன்படுத்தி, அனைவரும் வியக்கும் வண்ணம், நிரபராதி என நிறுவி, விடுதலையானார். இந்த படிப்பினைகளின் விளைவாகவே 1935-ல் கம்யூனிச சர்வதேசத்தின் ஏழாவது மாநாட்டில் பாசிசத்தின் வர்க்கப் பண்பை துல்லியமாக விளக்கினார்.
அதோடு, பாசிசத்தை எதிர்க்க ஒரு பரந்துபட்ட ஐக்கிய தொழிலாளர் முன்னணி, மற்றும் வெகுஜன முன்னணி உத்திகளை வகுக்கவும் வழிகாட்டினார். அதுவரை இடதுசாரி பிரிவினைவாதிகள், சமூக ஜனநாயக தொழிற்சங்கங்கள் எல்லாமே “சமூக பாசிஸ்டுகள்” என தவறாக வரையறுத்ததன. அனைத்து பிற்போக்கு சக்திகளையும் பாசிஸ்டுகள் என வரையறுக்க முடியாது என விளக்கிய டிமிட்ரோவ், சமூக ஜனநாயக சக்திகள், விவசாயிகள், சிறு முதலாளிகள் இயக்கங்கள், ஜனநாயக முதலாளித்துவ கட்சிகளுடன் இணைந்த வெகுஜன முன்னணியே பாசிசத்தை எதிர்த்து வெல்லும் உத்தியென விளக்கினார். அதற்காக கொள்கையை விட்டுக்கொடுப்பதா? எதற்காக வெகுஜன முன்னணி? முதலாளித்துவ, பாசிச தாக்குதல் மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிராக. இந்த கொள்கையில் பிடிப்புடன் இருக்க வேண்டும் என்றும் விளக்கினார்.
டிமிட்ரோவின் வரையறையை தீவிரமாக எதிர்த்தத டிராட்ஸ்க்கி, முதலாளி வர்க்கத்திடம் சரணடையும் உத்தி என சாடினார். உண்மையில் பிரான்சு, ஸ்பெயின் மற்றும் இத்தாலியில், வெகுஜன முன்னணி உத்தியால் தான் கம்யூனிஸ்ட் கட்சிகள் செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்தது. இறுதியில் டிமிட்ரோவின் தலைமை, ஐரோப்பாவில் பாசிசத்தை வீழ்த்தி, பல சோசலிச குடியரசுகள் உருவாவதற்கு வழி வகுத்தது.
நிலவும் சூழலுக்கு ஏற்ப மார்க்சிய-லெனினிய கோட்பாடுகளை துடிப்புடன் கடைபிடித்தது தான் டிமிட்ரோவை ஆகச்சிறந்த தலைவராக உருவாக்கியது.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply